கன்னத்தில் காதல் முத்தம் 27
காதல் 27
அந்த நேரத்தில் ஷிவானியை அங்கு எதிர்ப்பார்க்காத ஆரா, "ஏய் என்னடி ஆச்சு? நான் இங்க இருக்கேன்னு உனக்கு எப்டி தெரியும். நீ எப்டி இங்க வந்த?" என்று கேட்க, ஷிவானி திரும்பி ஆராவின் தந்தையைப் பார்த்தாள்.
"நான் தான் ஷிவாவை வரச்சொன்னேன் ஆரு." என்றார் அவர். ஆரா புரியாமல் அவரைப் பார்க்க, "நாளைக்கு கோயில்ல நடக்கப்போறது பூஜை இல்ல ஆரு… உனக்கும் ஆதிக்கும் கல்யாணம்" என்று இடியைத் தூக்கி அவள் தலையில் போட, "அப்பா" என்று அலறி விட்டாள் ஆரா.
நேற்று இரவு ஆராவைப் பற்றி பேச ஆதி அறைக்குச் சென்றவர், ஆதியும் பல்லவியும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு அதிர்ந்து தான் போனார். அவர் தூக்கி வளர்ந்த பிள்ளையா இப்படி? என்று அவர் உள்ளம் தவித்து போக அமைதியாக தன்னறைக்கு வந்துவிட்டார்.
"அப்… அப்பா… நீங்க சொல்றது நிஜமா… ஆதிமாமாவா இப்டி செஞ்சாரு. என்னால நம்ப முடியலயேப்பா" என்று நம்பமுடியாமல் இறஞ்சும் குரலில் கேட்க, "என்னாலயும் தான் ஆரு நம்ப முடியல, அதுவும் பல்லவி இப்டி செய்வான்னு என்னால நினச்சுக்கூட பாக்க முடியலடா… ஆதி நேர வந்து எனக்கு என் ஆரா வேணும்னு சொல்லி கட்டாயத்தாலி கட்டி இருந்தா கூட எனக்கு இவ்ளோ வலிச்சிருக்காதுமா. ஆனா, நம்ம ரெண்டு பேரையும் ஏமாத்தி இந்த ஊருக்கு கூட்டிவந்து உனக்கும் தெரியாம எனக்கும் தெரியாம இப்டி ஒரு காரியத்தை செய்ய துணிஞ்சிட்டாங்களேன்னு நினைக்கும் போது தான் வலிக்குதுமா." என்று தங்கை மற்றும் மருமகனின் செயலில் வருந்தியவர்,
"அதான் நான் ஷிவாவை இங்க வரச்சொன்னேன். நீ உடனே இவ கூட கிளம்பு. உனக்கு உனக்கு புடிச்ச பையனை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருடா" என்றவர் ஆராவின் தாய் அவளுக்காக விட்டுச் சென்ற தாலியை அவள் கையில் கொடுத்து,
"நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்பாடா" என்று அவள் தலையில் கைவைத்து ஆசிர்வாதம் செய்தவரை, கண்கலங்க பார்த்த ஆரா, "அப் அப்பா… அப்ப மாமா… அவருக்கு நான்?" என்று அடுத்த வார்த்தை வராமல் தவிக்க.,
"இந்த முடிவு உனக்காக மட்டும் இல்ல ஆரு. இது ஆதிக்காகவும் நான் யோசிச்சு எடுத்த முடிவு தான். அவங்களுக்கு ஒரு விஷயம் தெரியல ஆரு, ஒருவேளை நாளைக்கு ஆதி உன் கழுத்தில் தாலி கட்டினா… அடுத்த நிமிடம் எம்பொண்ணு உயிரோட இருக்கமாட்டான்னு எனக்கு தெரியும். அப்டி உனக்கு எதாவது ஆச்சின்னா அந்த குற்றவுணர்வில் கண்டிப்பா ஆதியும் உயிரை விட்ருவான். நீங்க ரெண்டு பேரும் போன அப்றம் நாங்க இருந்து என்னம்மா பயன்? இப்ப நீ உன் விருப்பப்படி கல்யாணம் செஞ்சிக்கிட்ட ஆதி, கொஞ்ச வருஷம் அதை நினைச்சு வருத்தப்படுவான் தான். ஆனா, காலப்போக்கில் அவனும் மனசு மாறுவான். எதார்த்தத்தை புரிஞ்சு அவனும் அவனுக்கான ஒரு வாழ்க்கையை அமச்சிக்குவான்னு நான் நம்புறேன்." என்றவர்,
"எனக்கு அந்த பையன் ஃபோன் நம்பர் தெரியல, அதான் ஷிவாக்கு கால் பண்ணி வரச்சொன்னேன். இந்த சூழ்நிலையில் என்னால ஷிவாவை மட்டும் தான் நம்பி உன்னை ஒப்படைக்க முடியும்" என்றவர் ஷிவானி கையில் ஆரா கையை வைத்து, "இனி பவித்ரா இடத்தில் இருந்து நீ தாம்மா எம்பொண்ணை பாத்துக்கனும்" என்றதும் ஆரா, ஷிவானி இருவர் கண்களும் கலங்கிவிட்டது.
ஆதியை பற்றிய இந்த விஷயம் ஆராவுக்கு எவ்வளவு அதிர்ச்சியோ, அதே அதிர்ச்சி தான் ஷிவானிக்கும். அவள் ஆதியை அத்தனை உயரத்தில் வைத்திருந்தாள். அவன் எந்த சூழலிலும் தப்பான எந்த காரியத்தையும் செய்ய மாட்டான் என்று ஆணித்தரமாக நம்பி இருந்தவளுக்கு ஆதியின் இந்த நடவடிக்கை அவள் நம்பிக்கைக்கு மரண அடியாக இருந்தது.
"சீக்கிரம் ரெண்டு பேரும் கிளம்புங்க" என்று ஆராவின் தந்தை அவசரப்படுத்த, ஷிவானி துணியால் ஆரா முகத்தை மறைத்தவள், தன் முகமும் வெளியே தெரியாதபடி மறைத்துக் கொண்டு ஆராவுடன் கிளம்பினாள்.
இருவரும் வீட்டில் இருந்து வெளியே வரும் நேரம் ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பார்த்த ஆதியின் ஆட்கள் இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு துரத்தி வர வேகமாக ஓடி அவர்கள் கண்ணில் இருந்து மறைந்த இருவரும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி நிற்க, அப்போது ஆரா தோளைத் தொட்டது ஒரு கை.
திடீரென யாரோ தொட்டதில் பயந்த ஆரா, 'வீல்'லென கத்தியபடி திருப்பிப் பார்த்தவள், விழிகளில் அதுவரை இருந்த பயம் மறைந்து போய் நிம்மதி நிறைய, "தேவ்" என்று கத்தியபடி அவளவனை அணைத்துக் கொண்டாள் ஆராத்யா.
வீட்டுக்கு செல்லும் ஆராவுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது, என்று அவளை நிழலாக தொடர்ந்து வந்த அக்னிக்கு திடீரென்று அவர்கள் கிராமத்துக்கு வந்தது சந்தேகத்தை கொடுக்க, தன் ஆட்களை ஆதியின் பின்னால் அனுப்பி நடப்பதை கவனிக்க சொல்லி இருந்தான்.
அவர்கள் ஆதியை கண்காணித்து நாளை கோயிலில் ஆராவுக்கும், ஆதிக்கும் திருமணம் என்ற தகவலை சொல்ல, அக்னிக்கு புரிந்துவிட்டது. இது ஆராவுக்கு தெரியாமல் நடக்கும் ஏற்பாடு என்று. உடனே ஆராவை அழைத்துச் செல்ல வந்தவன், ஆரா வேகமாக ஓடி வருவதைப் பார்த்து, துரத்தி வந்தவர்களை அடித்து விரட்டிவிட்டு ஆராவிடம் வந்தான்.
"தே…தேவ்… மாமா… மாமா இப்டி செய்வாருன்னு நான் நினைக்கவே இல்ல தேவ். மாமா எவ்ளோ நல்லவர் தெரியுமா? இப்… இப்ப இப்டி மாறிட்டாரு தேவ். என்னால தான்… எல்லாம் என்னால தான்" என்று முகத்தில் அடித்துக்கொண்டு அழுத ஆராவை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் அவளின் தேவ்.
ஆரா, ஷிவானி இருவரையும் கூட்டிக்கொண்டு அன்று இரவே பெங்களூர் சென்ற தேவ், ஆராவின் தந்தைக்கு அழைத்து ஆரா பாதுகாப்பாக இருப்பதை சொன்னவன், "இன்னும் ஒரு வாரத்தில் அவனுக்கும் ஆராவுக்கும் திருமணம் என்ற தகவலையும் சேர்த்துச் சொன்னான்.
அதைக்கேட்டு கண்கலங்கிய ஆராவின் தந்தை, "எம் பொண்ணை நல்லா பாத்துக்கப்பா… இங்க ஆராவை காணோம்னு ஆதி ஊர் பூரா தேடிட்டு இருக்கான். ஷிவா முகத்தை மறைச்சிட்டு இருந்ததால், அவங்க ஆராவை நீதான் வந்து கடத்திட்டு போய்ட்டேன்னு நினைச்சிட்டு இருக்காங்க. நான் தான் ஆராவை அனுப்பி வச்சேன்னு தெரிஞ்சா ஆதி ரொம்ப வருத்தப்படுவான்." என்று இப்போதும் ஆதியை நினைத்து வருந்தியவர்,
"என்னால முடிஞ்ச கல்யாணத்துக்கு வரேன். அப்டி இல்லாம போனாலும் எம் பொண்ணுக்கு என் ஆசிர்வாதம் எப்பவும் இருக்கும்" என்று கைப்பேசியை வைத்தவர், அடுத்து ஆதிக்கு அழைத்து, 'ஆரா பற்றி எதாவது தகவல் கிடைத்ததா?' என்று விசாரித்ததில் ஆராவை தேடி ஆதி பெங்களூர் செல்வதாக சொல்ல, உடனே அந்த தகவல் அக்னிக்கு போக, இந்த நேரத்தில் பிரச்சினை வேண்டாம் என்று நினைத்த அக்னி, ஆராவையும் ஷிவானி கௌதமையும் அழைத்துக் கொண்டு அவன் சொந்த ஊருக்கு புறப்பட்டான்.
தேவ்வின் முழுப்பெயர் கூட தெரியாத நிலையில் ஆதியால் ஒன்றும் செய்யமுடியாது போக, இரண்டு நாட்கள் அவளைத் தேடி அலைந்தவன் உயிரைத் தொலைத்த உடலாக சென்னை வந்து சேர்ந்தான்.
இங்கு அக்னிக்கும் ஆராவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, நடந்ததை நினைத்து ஆரா முகம் வாடியே இருந்தது. வந்ததில் இருந்து, 'எம்மாமா இப்டி பண்ணிட்டாரே… மாமா என்னால தான் இப்டி மாறிட்டாரு…' என்று உள்ளுக்குள் புழுங்கி புழுங்கியே அவளுக்கு மன உளைச்சல் வந்திருக்க, எப்போதும் எங்கோ வெறித்தபடியே உட்கார்ந்து இருந்தாள். அந்த நேரத்தில் ஷிவானி தான் அவள் அருகிலேயே இருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள்.
இதற்கிடையில், "மனசு சரியில்லை கொஞ்ச நாள் நான் எங்கயாவது போய்டு வரேன்" என்று வீட்டைவிட்டு கிளம்பிய ஆராவின் தந்தை மகள் திருமணத்திற்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தார். தந்தையைப் பார்த்த ஆராவுக்கு அதுவரை இருந்த அனைத்து கவலையும் மறந்துபோக, "அப்பா" என்று அவரைக் கட்டிக்கொண்டாள்.
அழகிய மெரூன் வண்ண பட்டுப்புடவையில் அளவான நகை அணிந்து, தலை நிறைய பூவைத்து அழகே உருவாக மெல்ல நடந்து வந்தவள், பட்டுவேட்டி சட்டையில் கம்பீரமாக இருந்த அக்னி அருகில் அமர, ஷிவானி, அவளின் தாய், தந்தை என்று நெருங்கிய ஆட்கள் மட்டும் கூடி இருக்க, ஆராவின் தந்தை தாலியை எடுத்து கொடுக்க, அவள் விரும்பியபடி அவள் அன்னை அவளுக்காக செய்து வைத்த தாலியை, அவன் காதலுக்கு சாட்சியாக அவள் சங்கு கழுத்தில் அணிவித்து அவளை தன் உயிரில் சரிபாதியாக இணைத்துக் கொண்டான் அக்னிதேவ்.
எல்லாம் நல்லபடி முடிய ஆராவின் தந்தை அங்கிருந்து கிளம்புதாக சொல்ல, நிலமையை புரிந்துகொண்ட அக்னியும் சரியென்று சொல்ல, கண்ணீரோடு அவரை வழியனுப்பி வைத்த ஆராவுக்கு தெரியாது இனி அவள் தந்தையை அவள் காணப்போவதில்லை என்று.
திருமணம் முடிந்த அன்று ஆராவுடன் தங்கிய ஷிவானியின் தாய், தந்தை அவசர வேலையாக கிளம்ப, கூடவே ஷிவானியும் கிளம்பினாள்.
"இன்னும் ஒரு ரெண்டு நாள் என்னோட இருந்திட்டு போ ஷிவி." என்று கெஞ்சிய ஆராவின் கன்னத்தை பிடித்து கிள்ளிய ஷிவானி, "இனிமே எதுக்குடி நானு? அதான் உன் புருஷன் வந்துட்டாரு இல்ல? அவரைப் போய் இம்ச பண்ணு. இனியாவது எனக்கு விடுதலை கிடைக்கட்டும்." என்று தோழியை ஆரத் தழுவிக் கொண்ட ஆரா கண் கலங்கி விட,
அவள் கண்ணீரை துடைத்த ஷிவானி.,"இனிமே நீ அழவே கூடாது ஆரா. எல்லாம் சீக்கிரம் சரியாகிடும். ஈஸ்வர் அடிப்படையில் நல்லவன் தான். ஏனோ திடீர்னு அவனுக்கு கிறுக்கு புடிச்சிடுச்சு. உச்சி மண்டையில் நல்லா நாலு லைம் வச்சு வரட்டு வரட்டுன்னு தேச்சா எல்லாம் சரியாகிடும்." என்று சொல்ல ஆரா சிரித்துவிட்டாள்.
"அப்பாடி சிரிச்சிட்ட… எனக்கு அதுபோதும்." என்றவள் அக்னி முன்வந்து நின்று, "அவ எனக்கு உயிரு… அவளை நல்லா பாத்துக்கோங்க. அவ சின்னதாக முகம் வாடினா கூட… நான் என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது… மைன்ட் இட்" என்று எச்சரிக்கும் குரலில் சொன்னவளை பார்த்து சிரித்த அக்னி,
"அவதான் என்னோட எல்லாமே. அவ முகம் வாடினா, அப்ப அவளோட தேவ் உயிரோட இல்லைன்னு அர்த்தம். நீ நிம்மதி போ ஷிவானி" என்று அவர்களை அனுப்பி வைத்தான் அக்னி.
அன்றிரவு வானத்தை பார்த்தபடி நின்றிருந்த ஆராவை பின்னால் வந்த கட்டியணைத்து அவள் கூந்தலில் முகம் புதைத்து வாசம்பிடித்த அக்னி, "புடவையில் நீ ரொம்ப அழகா இருக்க தியா… பாத்துட்டே இருக்கலாம் போல இருந்துச்சு… அப்டியே மணவறை விட்டு எழுந்து வந்து உன்னை கட்டிக்கணும்னு கை பரபரன்னு இருந்துச்சுடி." என்றபடி அவள் புடவையினுள் கையை நுழைக்க, அவளுக்கு உடல் முழுவதும் மின்சாரம் தாக்கிய உணர்வு. மெல்ல கண்களைமூடி அப்டியே பின்னால் தலையை அவன் தோளில் சாய்த்தவள், "தேவ் என்ன பண்ற? எனக்கு கூசுது" என்று முணுமுணுக்க, "ம்ம்ம் புடவையை சரியா கட்டி இடுப்பில் சொறுகி இருக்கியான்னு செக் பண்றேன்" என்றான் அவள் காதுகளை தன் இதழ்களால் உரசியபடி.
"தேவ்" என்று அவள் மேலும் முனங்க, "தியா" என்றான் இவனும் குழைவாக.
அவள் கொஞ்ச கொஞ்சமாக தன்னிலை இழக்கத் தொடங்க, அவளை அப்படியே தன் இரு கைகளில் ஏந்திக் கொண்டு வந்தவன் படுக்கையில் அவளை இறக்கி விட்டு அவள் அருகில் படுத்து, கையை தலைக்கு ஊன்றி நிமிர்ந்து படுத்தபடி அவளை முழுவதும் பார்வையால் அவள் அங்கங்களை மொய்த்தவன், அவனுக்கு பிடித்த அவளின் கொழுகொழு கன்னத்தில் அழுத்தமாக முத்தம் ஒன்றை பதித்தான்.
அதுவரை அவன் பார்வை வீச்சை தாங்க முடியாமல் வெட்கத்தில் கண் மூடிக்கிடந்த ஆரா, அவன் கொடுத்த கன்னத்து முத்தத்தில் கண் திறந்தவள் இதழில் மெல்லிய புன்னகை. மெல்ல திரும்பி தன் மறு கன்னத்தை காட்டி, அவனைப் பார்த்து புருவம் உயர்த்த, அந்த புருவ நெளிப்பின் அர்த்தம் புரிந்தவன், அவள் மறு கன்னத்திலும் முத்தம் பதிக்க அவள் முகத்தில் வெட்கப் புன்னகை.
"தியா ஒரு கிஸ் குடுடி" என்று அவன் ஆசையாக கேட்க, "ம்ஹும் எனக்கு வெக்கமா இருக்கு தேவ்.." என்றவளை முறைத்தவன், "ஏய் இதெல்லாம் அநியாயம்… நான் கொடுக்கும் போது மட்டும் வாங்கி வாங்கி வச்சிக்குற… ஆனா, நான் ஆசையா கேட்டா குடுக்க மாட்டியா?" என்று அவன் செல்லச்சண்டை போட, "நான் தரமாட்டேன்னா தரமாட்டேன் தான். உனக்கு வேணும்னா நீயே எடுத்துக்க" என்றவள் வார்த்தைகளை அவன் முரட்டு இதழ்கள் விழுங்கி கொண்டது.
மெல்ல மெல்ல இருவரும் காதல் என்ற எல்லைவிட்டு காமம் எனும் வாசலில் காலெடுத்து வைக்க, அவள் ஆடைகள் ஒவ்வொன்றுக்கும் விடுதலை கொடுத்தவன், தன் ஆடைகளையும் துறந்துவிட, இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆடையாக மாறிப்போய் ஆனார்.
இரு ஜீவனும் ஒன்றோடு ஒன்று இணைந்து, உயிரை பறிமாறிக் கொண்டு, தங்கள் காதலின் உரிமையை
கலவியில் நிலைநாட்டி, அதன் எல்லைத் தொட்டு இனி ஒரு பிரிவேது என்ற எண்ணத்தில் தங்கள் வாழ்க்கையின் முதலடியில் கால் பதித்து, இன்பத்தில் முழ்கி இருக்க, விதியோ அந்த காலடி தடத்தை அடியோடு அழிக்க நாள் குறித்து காத்திருந்தது.
காலைப்பொழுதில் தன் கணவன் மார்பில் கண்விழித்தாள் ஆரா. அவன் இதயம் துடிக்கும் ஓசை அவளுக்கு தெளிவாக கேட்க, மெல்ல சிரித்தபடி உறங்கும் கணவனை நிமிர்ந்து பார்த்தாள் ஆராத்யா. ஒரு கையால் தன்னவளை அணைத்தபடி, மறு கையை நெற்றியில் வைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன்னவன் முகத்தை ஆசையாக பார்த்தாள்.
அவள் கழுத்தில் உரசிய தாலி அவன் அவளுக்கு சொந்தம் என்ற கர்வத்தை கொடுக்க மெல்ல நிமிர்ந்து அவன் முகத்தை ரசித்துப் பார்த்தவள், "அழகன்டா நீ.." என்றவள், அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்தாள். அவளாக அவனுக்கு தரும் முதல் முத்தம். ஆனால், அதை உணரும் நிலையில் அவன் இல்லை.
ஆரா, அக்னியின் திருமண வாழ்க்கையின் முதல் நாள் இனிதே தொடங்க, இதுவரை தனக்காக சமைத்துக் கொடுத்த தன் ஆசைக் கணவனுக்காக, அவனுக்கு பிடித்த ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சமைத்தவள், அது அனைத்தையும் எடுத்து வந்து சாப்பாட்டு மேஜையில் வைக்க, பின்னால் இருந்து அவளை அணைத்தபடி அவள் தோள் வளைவில் தன் நாடியை வைத்து, அவன் மீசையால் கிச்சுகிச்சு மூட்ட… "டேய்… காலங்காத்தால போடா அப்டி" என்று அவன் காதைபிடித்து இழுக்க,
"ஏய் வலிக்குது விடுடி… கட்ன புருஷனை கொடுமைப்படுத்துறா… இத கேக்க ஆள் இல்லை.." என்று கத்தியவன் இதழில் பட்டென ஒரு அடியைப் போட்டவள், "டேய் கத்தாதடா, யாருக்கும் கேட்டா மானம் போய்டும். ஒழுங்கா உக்காந்து கொட்டிக்க, உனக்காக பாத்து பாத்து ஒவ்வொன்னா செஞ்சிருக்கேன். சாப்ட்டு எப்டி இருக்குன்னு சொல்லு" என்று ஆசை ஆசையாக அவள் அனைத்தையும் பரிமாற, அவன் அமைதியாக அவள் முகத்தை பார்த்தபடி கைகளை கட்டிக்கொண்டு இருந்தான்.
"டேய் தேவ் என்னாடா சாப்ட சொன்னா கையை கட்டிட்டு உக்காந்து இருக்க? சாப்டுடா" என்றவளுக்கு இடவலமாக இல்லை என்று தலையாட்டிவன், "சமைச்ச கையால நீயே ஊட்டிவிட்டா தான் நான் சாப்டுவேன்" என்றவனை பார்த்து செல்லமாக முறைத்தவள், அவன் ஆசைப்படி அவனுக்கு ஊட்டிவிட்டாள்.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட, இருவருக்கும் வயிரோடு சேர்ந்து உள்ளமும் நிறைந்தது.
அந்த நாள் அப்படியே காதலும், கொஞ்சலுமாக நகர, அடுத்த நாள் அவர்களின் கல்யாண வாழ்க்கையின் கடைசி நாளாக்க விடிந்தது காலைப்பொழுது.