கன்னத்தில் காதல் முத்தம் 26
காதல் 26
ஆதியின் அறையில் இருந்த அனைத்துப் பொருட்களும் அலங்கோலமாக சிதறி கிடக்க, வெறிபிடித்தவன் போல் அவன் கையில் கிடைத்த அனைத்து பொருட்களையும் தூக்கிப் போட்டு உடைத்து நொறுக்கிக் கொண்டிருக்க, மகனின் நடவடிக்கையில் அவனை எப்டி சமாதானம் செய்வது? என்று தெரியாமல் உடல் நடுங்க நின்றிருந்தார் பல்லவி.
"ஆதி கொஞ்சம் அமைதியா இருடா…" என்று பல்லவி கதற, அவர் தோளை இறுக்கிப் பிடித்தவன், "அவளுக்கு எப்டி இன்னொருத்தனை பிடிக்கலாம்? சின்ன வயசில் இருந்து அவ எனக்கு தான்… எனக்கு மட்டும் தான்ற எண்ணத்தில் தான் அவளுக்கு ஒவ்வொன்னையும் பாத்து பாத்து செஞ்சேன்.
என்னைத் தவிர அவ யார் கூடவும் நெருங்க கூடாதுன்னு தான் அவ ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரை அவளை என் கண்பார்வையிலேயே வச்சிருந்தேன்.
ஏன் அந்த தேவ் பத்தி விசாரிக்க சொல்லும் போது கூட அவ மனசுல இனிமே அவன் எண்ணமே வரக்கூடாதுனு தான் அவன் செத்துப் போய்ட்டதா பொய் சொன்னேன்… ஆனா, இப்ப என்னடான்னா அவனையே லவ் பண்றேன்னு வந்து நிக்கிறா… எவ்ளோ தைரியம் இருக்கும் அவளுக்கு…
வேற ஒருத்தனை லவ் பண்றேன்னு என்கிட்டயே வந்த சொல்ல… என் தப்பு தான், எல்லாமே என் தப்பு தான்… நிச்சயம் முடிஞ்ச உடனே அவளை கல்யாணம் பண்ணி என் கண்ணு முன்னாடியே வச்சிருக்கணும்… என்னை மீறி எங்க போய்ட போறான்ற தைரியத்தில் அவளை படிக்க அனுப்பினது என் தப்பு தான். அதான் எவனையே லவ் பண்றேன்னு தைரியமா என்கிட்டயே வந்து சொல்றா…
விடமாட்டேன் அவனை உயிரோட விடமாட்டேன்… என்னோட ஆரா எனக்கு மட்டும் தான் சொந்தம். அவளை யாருக்கும் விட்டு தர மாட்டேன். அவன் உயிரோட இருந்த தான இவ அவனை லவ் பண்ணுவா? அவனை கொன்னு புதச்சிட்டு இவ கழுத்துல தாலிகட்றேன்" என்று வெறிபிடித்தவன் போல் அவன் கத்த,
"அப்டி எதுவும் செஞ்சிடாத ஆதி… அப்டி எதுவும் நடந்தா கடைசி வரை ஆரு உனக்கு கிடைக்கவே மாட்டா… ஆரு பத்தி உனக்கே நல்லா தெரியும்… ஒருவேளை நீ அந்த பையனை கொன்னுட்டா, அடுத்த நிமிஷமே இவளும் உயிரை விட்டுடுவா… அத புரிஞ்சிக்க முதல்ல…" என்று ஆதியை சமாதானம் செய்ய பார்க்க,
"அப்ப என்ன செய்ய சொல்றீங்க? அவனுக்கே அவளை கட்டி வைக்க சொல்றீங்களா? அப்டி மட்டும் எதாவது நடந்துது… அவளையும் கொன்னுட்டு, அவளை என்கிட்ட இருந்து பிரிச்ச அவனையும் கொன்னுட்டு, நானும் செத்திடுவேன். "
"டேய் ஆதி என்ன பேசுற நீ… அப்டி எதுவும் நடக்காது. நான் இருக்க வரை அப்டி எதையும் நடக்கவும் விடமாட்டேன்." என்றவரை திரும்பிப் பார்த்த ஆதி, "என்ன செய்வீங்க? உங்களால என்ன செய்யமுடியும்?" என்று கத்தினான்.
"முடியும் ஆதி… உன் ஆராவை உனக்கு கல்யாணம் செய்து வைக்க என்னால முடியும். எனக்கு என் புள்ள சந்தோஷம் தான் முக்கியம். வேற எதபத்தியும், யாரைப்பத்தியும் எனக்கு கவலையில்லை. உனக்கு ஆரா தான வேணும். அப்ப நான் சொல்ற மாதிரி செய்." என்றவரை அழுத்தமாக பார்த்த ஆதியின் கண்கள் பளிச்சிட்டது.
மறுநாள் காலை ஆரா அறைக்குச் சென்ற ஆதி, "உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ஆரா" என்றான்.
"ம்ம்ம் சொல்லுங்க மாமா…" என்றவள் அவன் முகத்தை பார்க்கும் தைரியம் இல்லாமல் தலை குனிந்து இருக்க, "என்னை பாரு ஆரா." என்றான்.
மெல்ல நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவள் கண்களில் கண்ணீர் நிறைந்திருக்க, "ப்ச் என்ன ஆரா இது… எனக்கு அழுதா பிடிக்காதுன்னு தெரியுமில்ல… அழாத" என்று அவள் கண்ணீரை துடைத்தவன், "நேத்து அம்மா பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் ஆரா. அவங்க ஏதோ கோவத்தில் வாய்க்கு வந்ததை பேசிட்டாங்க…" என்று வருந்தியவனை பார்த்து கண்களை துடைத்த ஆரா, "பரவயில்லை மாமா… அவங்க கோவம் ஒருவகையில் நியாயம் தான?" என்றாள் அமைதியாக.
"ம்ம்ம்" என்றவன், "நான் அம்மாகிட்ட பேசினேன். ஆனா, அவங்க…" என்று இழுத்தவன், "உனக்கே தெரியும் ஆரா… ரொம்ப வருஷமா என் அம்மாவும் உன்னோட அப்பாவும், இறந்துபோன பவி மாமியும் ரொம்ப எதிர்பார்த்த கல்யாணம் இது. அது இப்டி ஆகிடுச்சேன்னு அவங்களுக்கு கொஞ்சம் வருத்தம்." என்று சரியான நேரத்தில் பவித்ரா பேரை எடுக்க, ஆரா கூனிக்குறுகி போனாள். அது அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
அதை உணர்ந்து கொண்ட ஆதி, "நீ ஒன்னும் கவலைப்படாத ஆரா… இதை நான் பாத்துக்குறேன். அம்மா, மாமாவை நான் சம்மதிக்க வைக்கிறேன். உன்னோட கல்யாணம் என் பொறுப்பு" என்று அவன் அழுத்தமாக சொல்ல, அதை வேறு மாதிரி புரிந்துகொண்ட ஆரா, "தேங்க்ஸ் மாமா ரொம்ப தேங்க்ஸ்… எனக்கு தெரியும் நிச்சயம் நீங்க என் மனசை புரிஞ்சிக்குவீங்கன்னு… தேங்க்ஸ் மாமா" என்றவள் சட்டென அவன் காலில் விழ, ஆதியின் கை முஷ்டி இறுகியது.
"என்ன ஆரா இதெல்லாம்? எழுந்திரி…" என்று அவளை பிடித்து தூக்கிவிட்டவன், "இன்னொரு விஷயம் ஆரா, இந்த பிரச்சினை முடியும் வரை நீ அந்த" என்றவனுக்கு உள்ளுக்குள் காந்த, இதழை அழுத்தி கடித்தபடி, "அந்த தேவ்கிட்ட பேசுறதை முடிஞ்ச வரை கொறச்சிக்கோ… முடிஞ்சா ஒரு ரெண்டு மூணு நாள் பேசாம இரு..." என்றதும் ஆரா அவனை குழப்பமாக பார்க்க,
"அது ஒன்னும் இல்ல ஆரா, சப்போஸ் நீ தேவ் கூட பேசி இங்க நடந்தை சொல்லி, அவன் உடனே இங்க கெளம்பி வந்துட்டா இருக்கப் பிரச்சனை இன்னும் பெருசாகிடும். அதான் சொல்றேன்."
"அதுக்கு ஏன் மாமா பேசவே கூடாதுன்னு சொல்றீங்க... நான் இங்க நடக்கும் எதையும் அவன்கிட்ட சொல்ல மாட்டேன் மாமா… இதெல்லாம் தெரிஞ்சா தேவ்க்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கும்." என்றவளை மனதில் கறுவியவன், "கொஞ்சம் புரிஞ்சிக்க ஆரா, நீ அவன் கிட்ட பேசுறதை அம்மாவோ இல்ல மாமாவோ பாத்தா கண்டிப்பா பிரச்சினை வரும். சோ, ஒரு ரெண்டு மூணு நாள் பேசாம இரேன். அதான் நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன்னு சொல்றேனே" என்றதும் அவளும் அவன் பேச்சுக்கு கட்டுப்பட்டு 'சரி' என்று தலையாட்டினாள்.
"ம்ம்ம் குட்" என்று வாசல் நோக்கி நடந்தவன், "உண்மையாவே நீ லவ் பண்ற விஷயம் ஷிவானிக்கு தெரியாதா ஆரா?" என்று கேட்க, ஒரு நிமிடம் தடுமாறி ஆரா, "இல்ல மாமா தெரியாது… சொன்னா திட்டுவான்னு நான் இன்னும் சொல்லல… இனிமே தான் சொல்லும்" என்று சொல்ல, "இப்ப சொல்லாத ஆரா… நான் சொல்லும் போது அவகிட்ட சொன்னா போதும்... இந்த விஷயம் தெரிஞ்சா அவ ரொம்ப வருத்தப்படுவா… நானே சரியான டைம் பாத்து அவகிட்ட சொல்றேன்" என்றுவிட்டு சென்றான்.
அன்று பகல் நேரம் போல் ஆராவின் தந்தையின் அறைக்கு வந்த பல்லவி, "நீ என்ன முடிவெடுத்து இருக்க அண்ணா? என்று கேட்க… தங்கையை திரும்பி பார்த்தவர், "எனக்கு என்ன சொல்றதுன்னு புரியல பல்லவி… எனக்கு ஆராவும் ஆதியும் வேற வேற இல்ல… ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும். அதுதான் எனக்கு வேணும்" என்றார் விரக்தியாக.
"ம்ம்ம்… எனக்கு எம் புள்ள சந்தோஷம் தான் முக்கியம்" என்று சொல்ல வந்தவர், "எனக்கும் நம்ம புள்ளைங்க சந்தோஷம் தான் முக்கியம்… ஆனா, இது எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடுக்கும் விஷயம் இல்ல. கொஞ்சம் யோசிச்சு தான் செய்யணும்…" என்றவர்,
"நம்ம குடும்பத்தோட குலதெய்வம் கோயிலுக்கு போய் ரொம்ப நாள் ஆகுதுல்ல… எனக்கு என்னமோ அதுனால தான் இப்டி எல்லாம் பிரச்சினை வருதோன்னு தோணுது. அதோட ஆரா லவ் பண்றேன்னு சொல்றா. ஆனா, அந்த பையன் நல்லவனா? கெட்டவனா? அவன் குடும்பம் எப்டின்னு நமக்கு ஒன்னும் தெரியாது…
எனக்கு ஒன்னு தோனுது அண்ணா… பேசாம இன்னைக்கு சாயந்திரமே நாம் எல்லோரும் கிளம்பி நம்ம கிராமத்துக்கு போய் ஒரு நாள் தங்கி இருந்து குலதெய்வத்துக்கு பூஜை எல்லாம் பண்ணிட்டு, அப்டியே அங்க நம்ம சாமிகிட்ட ஆரா விஷயமா பூ போட்டு பாத்திடுவோம் அண்ணா… என்ன சொல்றீங்க?" என்று கேட்க அவர் ஒரு நிமிடம் யோசித்தவர், "சரிம்மா போலாம்" என்று சொல்ல பல்லவி முகத்தில் குரூர புன்னகை.
"என்னம்மா என்னாச்சு?" என்று ஆர்வமாக கேட்ட ஆதிக்கு கட்டைவிரலை உயர்த்தி காட்டிய பல்லவி, "உங்க மாமா ஊருக்கு போக சரின்னு சொல்லிட்டாரு… அவர் வந்தா ஆராவும் கண்டிப்பா வருவா… அங்க போய் நம்ம நெனச்சதை செய்வோம்" என்றார் பல்லவி.
"ம்ம்ம்" என்ற ஆதி, "நம்ம ஏன் இந்த விஷயத்தை மாமாகிட்ட சொல்லக்கூடாது? அவருக்கும் ஆராவை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க விருப்பம் தானா… இத சொன்னா அவர் கண்டிப்பா சம்மதிப்பார் இல்ல?" என்று கேட்டவனுக்கு இடவலமாக 'இல்லை' என்று தலையாட்டி பல்லவி, "எனக்கு என் அண்ணாவை பத்தி நல்லா தெரியும் ஆதி… அவருக்கு எப்பவும் ஆரா விருப்பம் தான் முக்கியம். சொல்லப்போன அவ சம்மதம் சொன்னதால் தான் அவர் எங்கேஜ்மென்ட் பண்ணவே சம்மதிச்சாரு… அவ மட்டும் வேணாம்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா கண்டிப்பா அந்த எங்கேஜ்மென்ட் நடந்தே இருக்காது. ஒருவேளை கடைசி நேரத்தில் அவர் ஆரா பக்கம் சாஞ்சிட்ட…
அவ விரும்பிய பையனை கல்யாணம் செய்துக்கட்டும்னு சொல்லிட்டா என்ன பண்றது. சோ நம்ம ப்ளான் எதுவும் அவருக்கு தெரிய கூடாது. ஊருக்கு போய் சொல்லிக்கலாம். அவருக்கும் உங்க கல்யாணம் நடந்தா சந்தோஷம் தான். சோ முதல்ல நம்ம கிராமத்துக்கு போற வழிய பாப்போம். அங்கு போய் மீதிய பேசிக்கலாம்.
கண்டிப்பா நம்ம ப்ளானுக்கு அண்ணா சம்மதிப்பார். இதுல நம்ம நல்லா நேரத்துக்கு இவ லவ் பத்தி அந்த ஷிவானிக்கு எதுவும் தெரியாது. ஒருவேளை இதெல்லாம் அவளுக்கு தெரிஞ்சிருந்தது... ஆராவை கடத்திட்டு போயாது அவ லவ்வர் கூட சேர்த்து வச்சிடுவா… அப்டி எதுவும் நடக்கும் முன்ன நீ ஆரா கழுத்துல தாலி கட்டி இருக்கணும்.
முதல்ல ஆரா ஃபோனை அவளுக்கு தெரியாம எடுத்து எங்கயாவது போட்டுடு... அது அவ கையில் இருந்தா கண்டிப்பா அந்த பையனையோ இல்ல ஷிவானியையோ காண்டாக்ட் பண்ணுவா… அப்டி எதுவும் நடக்கக்கூடாது." என்று அடுத்தடுத்த திட்டத்தை போட்டவர் அறியவில்லை ஷிவானிக்கு ஏற்கனவே, இவர்களின் திட்டம் தெரிந்திருக்க, பறந்து வந்து கொண்டிருக்கிறாள் என்று. ஆனால், அவள் சரியான நேரத்தில் வருவாளா?
"நான் எங்க கல்யாணம் எப்படியெல்லாம் செய்யணும்னு ஆசபட்டேன் தெரியுமா அம்மா? பெரிய மண்டபம் பாத்து, ஊரைக்கூட்டி, இதுவரை இந்த மாதிரி கல்யாணம் நடந்ததே இல்லைன்னு எல்லாரும் ஆச்சரியப்படும்படி நடத்தணும். ஆரா புடிச்ச மாதிரி நகை, புடவைன்னு தலையில் வைக்கும் பூவில் இருந்து கால்ல போடும் செருப்பு வரை எல்லாத்தையும் பாத்து பாத்து வாங்கி வச்சிருந்தேனே… அவளுக்கு புடிச்ச ஒவ்வொரு நாட்டுக்கும் அவளை கூட்டிட்டு ஒரு வருஷம் ஹனிமூன் போகனும்னு எல்லாம் கனவு கண்டேனே... கடைசியா இப்டி ஒரு கல்யாணத்தை பண்ற மாதிரி வச்சிட்டாளேம்மா அவ…" என்று புலம்பிய ஆதிக்கு கண்ணீர் தான் வந்தது. தன் பலவருட ஆசை, கனவு எல்லாம் கானல் நீராய் மறைந்ததை நினைத்து.
ஆரா மற்றும் அவள் தந்தையுடன் குலதெய்வ கோயில் இருக்கும் அவர்கள் கிராமத்துக்கு கிளம்பி சென்றனர் பல்லவியும், ஆதியும்.
அங்கு அவர்கள் வருவது முன்பே தெரிவித்து இருந்ததால் அவர்களின் வீடு சுத்தப்படுத்தபட்டு தூய்மையாக இருக்க, இரவு உணவை சீக்கிரமே முடித்துவிட்டு கூடத்தில் கொஞ்ச நேரம் அமர்ந்தனர் நால்வரும்.
"அண்ணா நாளைக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யணும். நானும் ஆதியும் போய் பூசாரி வீட்ல பேசிட்டு, காலையில் எல்லா ஏற்பாட்டையும் செஞ்சு வைக்க சொல்லிட்டு, அப்டியே நாளைக்கு தேவையான எல்லா பொருளையும் வாங்கிட்டு வந்திடுறோம்" என்றார் பல்லவி.
"அதுக்கு எதுக்கு பல்லவி இந்த நேரத்தில் போகணும். பூசாரி வீட்டுக்கு போய்ட்டு வரவே ரெண்டு மணிநேரம் மேல ஆகுமே. நாளைக்கு காலையில் போய் பேசிட்டு நாளை மறுநாள் பூஜைக்கு ஏற்பாடு செய்யலாம் இல்ல?" என்று கேட்டார்.
"இல்ல அண்ணா… நாளைக்கு ரொம்ப நல்ல நாள்… நாளைக்கே எல்லாத்தையும் முடிச்சிடுவோம். இத்தனை நாள் தள்ளிப்போட்டதே பெரிய தப்பு. கார்ல தானா போறோம் ஒன்னும் பிரச்சினை இல்ல." என்றவர் ஆதியுடன் கிளம்ப, ஆராவும் அவள் தந்தையும் மட்டும் அந்த வீட்டில் இருந்தனர்.
நாளைக்கு கோயிலில் பூ போட்டு பார்த்து அதில் அவள் விரும்பும் பூ வந்தால் அவளுக்கும், தேவ்வுக்கும் நல்லபடி திருமணம் நடக்கும், அத்தையும் அவள் தந்தையும் அந்த முடிவை ஏற்றுக் கொள்வர் என்று ஆதி சொன்னதை நம்பி மறுநாள் விடியலை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆராவுக்கு தெரியாது, நாளை அங்கு நடக்கப்போவது பூ போட்டு பார்க்கும் பூஜை அல்ல. அவளுக்கும் ஆதிக்கும் கல்யாணம் என்று.
இதற்கிடையில் ஆராவுக்கு தெரியாமல் ஆதி அவள் கைப்பேசியை எடுத்து மறைத்து வைத்திருக்க, "மாமா என் ஃபோனை காணோம்" என்று தேடியவளுடன் அவனும் அவள் ஃபோனை வீடு முழுவதும் தேடுவது போல் நடித்துவிட்டு, நீ சென்னையில் விட்டு வந்திருப்பேன்னு தோனுது ஆரா… விடு நான் உனக்கு புது ஃபோன் வாங்கித்தரேன்." என்றவன் அவளுக்கு தெரியாமல் வீட்டில் அவளை கண்கணிக்க இரண்டு ஆட்களையும் காவலுக்கு வைத்துவிட்டு சென்றான்.
ஆதியும் பல்லவியும் சென்ற கொஞ்ச நேரத்தில் பின் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டு, திரும்பி தன் தந்தை முகத்தை பார்த்த ஆரா, "யாருப்பா இந்த நேரத்தில் கதவை தட்றது? அதுவும் பின் வாசல் கதவை." என்று யோசனையோடு கேட்க, "யாருன்னு போய் பாத்தா தானா தெரியும். வா பாக்கலாம்" என்று ஆராவை அழைத்துக் கொண்டு சென்றவர் கதவை திறக்க, அங்கே நின்றிருந்த ஆளைக் கண்டு அதிர்ந்த ஆரா,
"நீ இங்க என்ன பண்ற? நான் இங்க இருக்கேன்னு உனக்கு எப்டி தெரியும்? அதுசரி முன்வாசல் வழியா வரவேண்டியது தானா? ஏன் இந்த பக்கம் வந்த?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டவள், வாயை சட்டென தன் கைக்கொண்டு மூடியபடி வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள் ஷிவானி.