கன்னத்தில் காதல் முத்தம் 28

 காதல் 28


மறுநாள் காலை குளித்து முடித்து கோயிலுக்கு செல்ல தயாரான புதுமண தம்பதிகள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. இருவரும் கிளம்பி வெளியே வரும் நேரம் ஆராவின் கைப்பேசி அலறியது.


ஆராவின் கைப்பேசி ஆதியிடம் இருந்ததால், அக்னி அவளுக்கு ஒரு புது கைப்பேசி வாங்கிக் கொடுத்தவன், ஒரு புது நம்பரையும் எடுத்துக் கொடுத்திருந்தான். அந்த எண் ஆராவின் தந்தை, ஷிவானி, அவளின் தாய், தந்தைக்கு மட்டுமே தெரியும் என்பதால் தந்தை தான் அழைத்தாரோ என்று ஆவலாக கைப்பேசியை எடுத்துப் பார்க்க, அவளை அழைத்திருந்தது ஷிவானியின் தந்தை.


"ஷிவிப்பா கால் பண்றாரு" என்றபடி அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் கையில் இருந்த பூஜை தட்டு கீழே விழ அதில் இருந்த பொருட்கள் எல்லாம் மூளைக்கு ஒன்றாக சிதறியது.


கல்யாணத்திற்கு வந்துவிட்டு அன்று மாலைப் போல் வீட்டுக்கு திரும்பி இருந்த ஆராவின் தந்தைக்கு மரடைப்பு வந்திருக்க, அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக சொன்னார் ஷிவானியின் தந்தை. உடனே அக்னி, ஆரா இருவரையும் கிளம்பி போய் அவரை பார்க்குமாறு சொன்னார்.


காரில் போகும் வழியெங்கும் ஆரா அழுதுகொண்டே வர அக்னிக்கு அவளைப் பார்க்கவே கஷ்டமா இருந்தது. எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவள் அழுகை நிற்காமல் தொடர, அவள் அழுகையை தாங்க முடியாத அக்னி அவளை இழுத்து தன் தோள் மீது சாய்த்துக்கொள்ள, அந்த நேரம் சரியாக ஒரு 'மினி பஸ்' தன் கட்டுப்பாட்டை இழந்து அக்னி, ஆரா வந்த கார் மீது மோதுவது போல் வர, ஒரு நொடியில் சுதாரித்த அக்னி, கதவை திறந்து ஆராவை வெளியே தள்ளிவிட்டவன், தானும் கீழே குதித்திருக்க, அவர்களின் கெட்ட நேரம் அது ஒரு மலைப்பாதையாக இருக்க, இருவரும் பள்ளத்தில் வேறு வேறு இடத்தில் விழுந்து பலத்த காயமடைந்து, மயக்கமடைந்து இருந்தனர்.


அவர்கள் வந்த கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இவர்களை இடித்த அந்த பேருந்தும் அதில் வந்த பயணிகளும் கூட பலத்த காயமடைந்தனர்.


விபத்து நடந்த சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த மக்கள் மருத்துவ அவசர ஊர்தி மற்றும் காவல்துறைக்கு அழைத்து சொல்லிவிட்டு தங்களால் முடிந்தவரை அடிப்பட்டு கிடந்த மக்களை மருத்துவ அவசர ஊர்தியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஆரா மக்களின் பார்வைபடும்படி இருந்த இடத்தில் விழுந்திருந்ததால் உடனே அவளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அக்னி சற்று மரங்கள் அடர்ந்த பகுதியில் விழுந்திருந்ததால் அவன் யார் கண்ணுக்கும் படவில்லை. கிட்டத்தட்ட விபத்து நடந்து ஒர் இரவு கடந்த நிலையில், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கபட்ட அக்னிக்கு தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் கோமாவுக்கு சென்றிருந்தான்.


அந்த நேரம் வேறு மருத்துவமனையில் இருந்த ஆராவை யார் என்று தெரிந்த ஒரு சொந்தக்காரர் ஆதியை அழைத்து ஆராவுக்கு விபத்து நடந்த தகவலைச் சொல்லியிருக்க, உயிர் பதற மருத்துவமனைக்கு ஓடி வந்திருந்தனர் ஆதியும் பல்லவியும். என்னதான் அவள் மீது கோவம் இருந்தாலும் சின்ன வயதில் இருந்து தான் தூக்கி வளர்த்த பெண் என்ற பாசத்தில் ஓடி வந்திருந்தார் பல்லவி.


ஒரு பக்கம் அண்ணன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, இப்போது மகளும் எமனின் வாசலில் நிற்பதை பார்த்து கலங்கிதான் போயினர் தாய், மகன் இருவரும்.


விபத்து பற்றி விசாரித்த ஆதிக்கு தெரிந்து ஆரா வந்த கார் முழுவதும் தீக்கிரையாகி இருந்தது தான்.


உடல் முழுவதும் பலபல கருவிகள் பொருத்தியிருக்க, வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிய ஆராவை பார்த்த ஆதிக்கு ரத்த கண்ணீர் வந்தது. "கடவுளே என் ஆராவை காப்பாத்துப்பா" என்று நொடிக்கு ஒரு கடவுளை வேண்டியபடி இருந்தவனுக்கு அடுத்த அதிர்ச்சியாக வந்து சேர்ந்தது, ஆராவின் தந்தை இறந்த தகவல். அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சிகளில் சோர்ந்து போனான் ஆதி.


தன்னை மகன் போல் வளர்ந்த மாமாவுக்கு மகனாக இருந்து அனைத்து காரியங்களையும் செய்து முடித்தான் ஆதி.


ஆரா பற்றியோ, அவள் தந்தை இறந்தது பற்றியோ வெளிநாட்டு பயணத்தில் இருந்த ஷிவானியின் தாய், தந்தைக்கு எதுவும் தெரியாமல் போனது. ஷிவானியும் ஆரா எண்ணிற்கும், அக்னி எண்ணிற்கும் அழைத்து அழைத்து சோர்ந்து போனவளுக்கு உடனே அவர்களை வந்து பார்க்க முடியாத நிலை.


ஆரா நிலை கொஞ்ச கொஞ்சமாக முன்னேறி வந்தது. அதே நேரம் அக்னி இன்னும் கோமாவில் இருந்தான்.


கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் கழித்து கண்விழித்தாள் ஆராத்யா. அவள் கண்விழித்த செய்தி கேட்டதும் ஓடிவந்து அவள் முன் நின்றனர் ஆதியும் பல்லவியும்.


"இப்ப எப்டி இருக்கு ஆரா?" என்று ஒரு பரிதவிப்போடு கேட்ட ஆதியை கேள்வியாக பார்த்தவள், "எனக்கு என்னாச்சு மாமா… நான் ஹாஸ்பிடல்ல தான இருக்கேன்? எனக்கு எதுவும் ஆக்சிடென்ட் ஆகிடுச்சா மாமா?" என்று குழந்தைப் போல் கேட்டவள் தலையை வருடிய ஆதியின் கண்கள் கலங்கி இருக்க, "உனக்கு ஒன்னும் இல்லடா… சீக்கிரம் சரியாகிடும்" என்றான்.


ஆரா மெல்ல இல்லை என்று தலையாட்டி, "இல்ல மாமா நீங்க பொய் சொல்றீங்க. எனக்கு உடம்பெல்லாம் பயங்கரமா வலிக்குது மாமா. தலைமேல எதோ பெரிய கல்லை வச்ச மாதிரி பாரமா இருக்கு" என்றவள் வலி தாங்க முடியாமல் அழ, "நோ ஆரா… நோ அழாதடா..‌. அழாத. அழுதா வலி இன்னும் அதிகமாகும்" என்றவனுக்கு உள்ளுக்குள் அவளுக்கு வலித்தை விட அதிகமாக வலித்தது.


மெல்ல அந்த அறையை சுற்றி பார்த்தாள், "மாமா" என்றழைக்க, "என்ன ஆரா?" என்றான் ஆதி.


"அப்… அப்பா எங்க? என்று கேட்க, இந்த நிலையில் இருப்பவளிடம் 'எப்படி சொல்வான்? அவள் ஆருயிர் தந்தை உயிரோட இல்லை' என்பதை‌.


"அது… அது வந்து ஆரும்மா…" என்று ஆதி இழுக்க, ஆரா திரும்பி பல்லவியை பார்த்து, "அத்தை சொல்லுங்க, அம்மாவும் அப்பாவும் எங்க?" என்று அவள் கேட்டதில் தூக்கிவாரிப் போட்டது பல்லவி, ஆதி இருவருக்கும்.


இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியோடு பார்த்துக்கொள்ள, அவளுக்கு எதாவது பதில் சொல்லிதான் ஆகவேண்டும் என்பதால், "அவங்க ஊர்ல இல்ல ஆரா. உனக்கு ஆக்சிடென்ட் ஆன விஷயம் அவங்களுக்கு இன்னும் தெரியாது. நான் அவங்களை வரச்சொல்றேன்" என்றதும் தான் ஆரா அமைதியானாள்.


மருந்து மயக்கத்தில் ஆரா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, மருத்துவரைக் காணச் சென்றனர் பல்லவி ஆதியும்.


நடந்ததை மருத்துவரிடம் சொன்ன ஆதி, "ஆரா அம்மா இறந்து ஒரு வருஷம் மேல ஆகுது டாக்டர்." என்று சொன்னான்.


மருத்துவர் ஒரு நிமிடம் யோசித்தவர், "அவங்களுக்கு உங்க ரெண்டு பேரையும் நல்லா தெரியுது. அவங்க அப்பா அம்மாவை பத்தியும் தெரியுது. ஒன் இயர் முன்னாடி அவங்க அம்மா இறந்தது மட்டும் அவங்களுக்கு ஞாபகம் இல்லை‌." என்றவர்,


"ஐ திங்க் அவங்களுக்கு டெம்ப்ரவரி மெமரி லாஸ் ஆகி இருக்கலாம் ஆதி. மேபி அவங்க ஏற்கனவே ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்திருக்கணும், அதோட நடந்த விபத்து சேர்ந்து அவங்களை பாதிச்சு இருக்கு. ஆனா, அவங்களுக்கு முழுசா எதுவும் மறக்கல… கடந்த ஒன்றரை வருடத்தில் நடந்தது மட்டும் அவங்களுக்கு இப்ப ஞாபகம் இல்ல போல. அதான் அவங்க அம்மா எங்கன்னு கேக்குறாங்க" என்றவர்


"இப்ப அவங்க அப்பாவும் ஹஸ்பண்டும் எங்க?" என்று டாக்டர் கேட்க, ஆதி இழுத்து மூச்சுவிட்டவன், "மாமா… ஐ மீன் அவ அப்பா இப்ப உயிரோட இல்ல டாக்டர்." என்றவன், ஒரு நிமிடம் நிறுத்தி, "அவ ஹஸ்பெண்ட் நான் தான் டாக்டர்" என்றான் மனசாட்சியே இல்லாமல். அவனின் பதிலில் பல்லவியும் அதிர்ந்து தான் போனார்.


"ம்ம்ம் ஒகே மிஸ்டர். ஆதி. சீக்கிரம் க்யூர் ஆகிடும்." என்றார்.


"அவளுக்கு அந்த ஞாபகம் திரும்பி வராது இல்ல டாக்டர்" என்றான் ஒரு எதிர்பார்ப்போடு‌,


"நூறு சதவீதம் உறுதியா சொல்ல முடியாது. பட் அந்த டைம்ல அவங்க மீட் பண்ண ஆளுங்க, அவங்க பாத்த இடங்களைத் திரும்பிப் பார்த்த, மேபி ஞாபகம் திரும்பலாம். பட், அதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி. ஏன்னா அவங்க ஹெல்த் கண்டிஷன் கொஞ்சம் வீக்கா இருக்கு. ஓவர் ஸ்ட்ரெஸ் ஆகுறது அவங்களுக்கு நல்லதில்ல. சோ டேக் கேர்" என்றதும் அந்த அறையை விட்டு வெளியே வந்த ஆதியின் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு தனியே சென்றார் பல்லவி.


"என்ன பண்ணிட்டு இருக்க ஆதி நீ? நீ போய் அவ புருஷன்னு சொல்லிட்டு இருக்க! அவளுக்கு கல்யாணம் ஆச்சின்னு உனக்கு தெரியுமா?" என்று கேட்க, தாயை விரக்தியாக பார்த்த ஆதி, "தெரியும்மா… தெரியும். ஆக்சிடென்ட் ஆச்சுன்னு தகவல் வந்து, நான் அவளை பாக்க வந்தப்போ பாத்தேன்‌. அவ கழுத்துல தாலி இருந்தது. அதுவும் பவித்ரா மாமி அவளுக்காக செஞ்சி வச்சிருந்த தாலி" என்றவனுக்கு தொண்டை அடைத்தது.


"அந்த தாலி அவ கழுத்தில் இருந்துன்னா அதுக்கு அர்த்தம்?" என்று கண்களை விரித்த பல்லவிக்கு புரிந்தது, அன்று அந்த தாலியை கொடுத்து ஆராவை வீட்டில் இருந்து அனுப்பி வைத்தது தன் அண்ணன் தான் என்று.


"கடைசில என் அண்ணா என்னை ஏமாத்திட்டார் இல்ல ஆதி?" என்று வருத்தமாக சொல்ல, "நம்மளும் அவருக்கு அதையே தானா செஞ்சோம்?" என்றான் உணர்ச்சி துடைத்த குரலில்.


"சரி அதெல்லாம் விடு ஆதி… இப்ப நீ ஆரா புருஷன்னு சொல்றீயே, அதுக்கு என்ன அர்த்தம்?"


"என்ன அர்த்தம் ஒருதடவை கடவுள் அவளை என்கிட்ட இருந்து பிரிச்சு வச்சு, எனக்கு பண்ண பாவத்துக்கு மறுபடியும் அவளை என்னோட சேர்த்து வச்சிருக்காரு அதுதான் அர்த்தம்." என்றான் அழுத்தமாக.


"என்னடா உளறிட்டு இருக்க? நீ சொல்ற மாதிரி அவளுக்கு கல்யாணம் ஆகி இருந்தா அவ புருஷன் அந்த தேவ் கண்டிப்பா அவளை தேடி வருவான் தான? அப்டி வரும்போது ஆரா அவனோட போய்டுவாளேடா…" என்றவரை பார்த்து இடவலமாக தலையாட்டிய ஆதி,


"அவளுக்கு கடந்த ஒன்றரை வருஷம் என்ன நடந்ததுன்னு ஞாபகம் இல்லை‌. சோ கண்டிப்பா அந்த தேவ், அவனோட காதல், அவன் கூட நடந்த கல்யாணம் இதெல்லாம் கண்டிப்பா அவளுக்கு ஞாபகம் இருக்காது. அவங்களை பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் மாமா தான். அவரும் இப்ப உயிரோட இல்ல. ஷிவானிக்கு ஆரா லவ் பத்தி தெரியாது.


சோ இனிமே இந்த ஒன்றரை வருஷம் அவ வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னு நம்ம சொல்றது தான். அதோட நான் விசாரித்த வரை அன்னைக்கு ஆரா வந்த கார் முழுசா எரிஞ்சு போச்சு. சோ ஆரா கூட வந்த தேவ் உயிரோட இருக்க வாய்ப்பே இல்ல." என்றான் முடிவாக.


"நீ சொன்னா போதுமா? டாக்டர் அவளுக்கு ஞாபகம் வர வாய்ப்பிருக்குனு சொல்லி இருக்காரேடா. அப்டி எதுவும் நடந்திட்டா?


"அப்டி நடக்காது… நான் நடக்கவும் விடமாட்டேன். அப்டி ஒருவேளை அவளுக்கு ஞாபகம் வந்தாலும், அப்ப அவ மிஸஸ் ஆராத்யா ஆதிஷ்வரனா இருப்பா" என்றவனுக்கு யார் சொல்வது? அப்படி எதுவும் நடந்தால் அவள் உயிரோடு இருக்க மாட்டாள் என்று.


மருந்து மயக்கத்தில் உறங்கி இருந்த ஆரா அப்போது தான் கண்விழித்தாள். அவளை பரிசோதிக்க வந்த செவிலி அவளிடம் ஒரு வெள்ளைப் பையைக் கொடுத்து, இதுல ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு நீங்க போட்டு இருந்த ஜுவல்ஸ் எல்லாம் இருக்கு, சரியா இருக்கான்னு பாத்துக்குங்க" என்று அவள் கையில் கொடுக்க, அதைப் பிரித்தவள் அதிர்ந்து போனாள் அதில் இருந்த தாலியை பார்த்து.


"சிஸ்டர் இது...‌ இந்த தாலி எப்டி இதுல?" என்று அவள் கேட்க,


"ஆக்சிடென்ட் நடந்து நீங்க இங்க வந்த சமயம், இது உங்க கழுத்துல இருந்தது மேடம். இன்ஃபாக்ட் ஆப்ரேஷனுக்காக உங்களை ரெடி பண்ணும் போது தாலியை உங்க கழுத்துல இருந்து கழட்ட பார்த்தேன். அதை கழட்டவே முடியல தெரியுமா? அவ்ளோ இறுக்கமா தாலியை கையில் கெட்டியா பிடிச்சிட்டு இருந்தீங்க மேடம் நீங்க. உங்க புருஷன் மேல அவ்ளோ லவ் போல உங்களுக்கு…" என்று அந்த நர்ஸ் சிரிக்க, ஆராவுக்கு ஒன்றும் புரியவில்லை.


'தாலி என்னோட கழுத்தில் இருந்ததா? என்ன சொல்றாங்க இவங்க! அப்ப எனக்கு கல்யாணம் ஆகிடுச்சா? எப்ப எனக்கு கல்யாணம் ஆச்சு? எனக்கு எதுவும் ஞாபகம் இல்லயே!' என்று யோசித்தபடி தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு புலம்ப, அந்த நேரம் அறைக்குள் நுழைந்தனர் ஆதியும், பல்லவியும்.


"மாமா அந்த நர்ஸ் என்னென்னவோ சொல்றாங்க மாமா. எனக்கு ஒன்னும் புரியல… இந்த தாலி என் கழுத்தில் இருந்ததா சொல்றாங்க… நமக்கு எப்ப மாமா கல்யாணம் ஆச்சு? வெறும் எங்கேஜ்மென்ட் மட்டும் தான நடந்தது? இவங்க ஏன் இப்டி சொல்றாங்க… அப்பாவும் அம்மாவும் எங்க மாமா? " என்று எதுவும் புரியாமல் பதறினாள்.


"ஆ… ஆரா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..‌. உனக்கு நடந்த ஆக்சிடென்ட்ல லாஸ்ட் ஒன் அண்ட் ஆப் இயர்ர நடந்துது எல்லாம் உனக்கு மறந்து போச்சு…" என்றவன் தயங்கித் தயங்கி அவள் தாய் இறந்த செய்தியைச் சொல்ல, மறுபடியும் ஒருமுறை, இறந்த தாயை நினைத்து நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கதறி அழுத ஆராத்யா, "அப்… அப்பா? அப்பா எங்க மாமா?" என்று பயந்து பயந்து கேட்க, ஆதி இடவலமாக தலையாட்டி,


"உனக்கு ஆக்சிடென்ட் நடக்கும் ஒரு வாரம் முன் அவருக்கு சிவியர் ஹார்ட் அட்டாக் வந்துது ஆரா… டாக்டர்ஸ் எல்லாரும் அவர் பிழைக்க மாட்டார்னு சொல்லிட்டாங்க… அதனால அவர் கடைசி ஆசையா நம்ம கல்யாணத்தை பாக்கணும்னு சொன்னாரு.


அப்ப வேற வழி இல்லாதனால அவர் கண்ணு முன்னாடியே நான் உனக்கு தாலி கட்டிட்டேன். அதை பார்த்துட்டு மாமா நிம்மதி கண்ணை மூடிட்டார்" என்று அப்பட்டமாக பொய் சொல்ல, ஒரே நேரத்தில் இரு அதிர்ச்சிகளை தாங்க முடியாத ஆரா அப்படியே மயங்கிச் சரிந்தாள்.


இன்று


அக்னி அமைதியாக அமர்ந்திருக்க, ஆராவின் கவனம் முழுவதும் அவளுக்கு முன்னால் பரப்பி வைக்கப்படிருந்த அவள் திருமணப் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் இருவரின் திருமண பதிவு பத்திரத்தில் இருந்த அவள் தந்தையின் கையெழுத்து மேலேயே இருந்தது.


"உனக்கு ஆக்சிடென்ட் நடந்த நேரம்… ஷீட்" என்று தரையில் ஓங்கி உதைத்தவள், "நான் இங்க இல்லாம போய்ட்டேன்டி. உங்க ரெண்டு பேர் ஃபோனும் சுவிட்ச் ஆஃப்லயே இருந்தது. என்னால உடனே கிளம்பி வரமுடியாத சூழ்நிலை. அது ஆதிக்கு சாதகமா அமஞ்சு போச்சு.


எல்லாம் தெரிஞ்சு நான் இங்க வந்தப்போ, அழகா ஒரு கதையை சொல்லி உன்னை நம்ப வச்சி, நீயே உனக்கும் ஆதிக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு நம்புறபடி உன்னை மாத்தி இருந்தாங்க ஆதியும் உன் அத்தையும். அந்த நேரம் நான் உன்மையை சொன்னா அத நீ நம்ப மாட்டடேன்னு எனக்கு தெரியும்.


பிகாஸ் அந்த அளவுக்கு நீ ஆதி மேலயும் உன் அத்தை மேலயும் நம்பிக்கை வச்சிருந்த… சோ, இதுக்கு ஒரு வழி அக்னிய கூட்டி வந்து சாட்சியோட நீ தேவ் வைஃப்னு நிரூபிக்கிறது தான். சோ நான் அக்னிய தேடி போனேன்‌. அப்பதான் நடந்த ஆக்சிடன்ட்ல நாலு மாசமா அவர் கோமாவில் இருந்து ரெக்கவர் ஆகி வந்தது எனக்கு தெரிஞ்சது.


உடனே அவரை பாக்கப் போனேன். என்னை பாத்த உடனே அந்த மனுஷன் கண்ணுல அப்டி ஒரு எதிர்பார்ப்புடி… உனக்கு என்னாச்சு ஏதாச்சுன்னு தவிச்சிட்டு இருந்த மனுஷனுக்கு என்னைப் பார்த்தும் அப்டி ஒரு நிம்மதி.


என்னைப் பாத்த செண்ட் அவர் கேட்ட ஒரே கேள்ளி, என் தியாக்கு ஒன்னு இல்ல இல்ல. அவ நல்லாதானே இருக்கா, ஆக்சிடென்ட்ல அவளுக்கு ஒன்னும் ஆகல இல்லன்ற கேள்விதான். நான் நீ நல்லா இருக்கேன்னு சொன்ன பிறகு தான் அவருக்கு ஒழுங்க மூச்சே வந்துது.


அதுக்கு பிறகு நடந்ததை எல்லாம் அவர்கிட்ட சொன்னேன். அதைக் கேட்டு அந்த மனுஷன் துடிச்சு போய்டாருடி..‌. நான் உடனே கிளம்புங்க ஆராகிட்ட போய் நடந்தை சொல்லுவோம்னு சொன்னேன்.


ஆனா, அப்ப கூட அவர் என்ன சொன்னாரு தெரியுமா? தியா இப்ப இருக்க ஹெல்த் கண்டிஷன்ல நம்ம‌ போய் உண்மையைச் சொல்லி அவளுக்கு எதாவது ஆகிடுச்சுன்னா என்ன பண்றதுன்னு தான் கேட்டாரு.


தன் பொண்டாட்டி இன்னொருத்தனை புருஷன்னு சொல்லிட்டு இருந்தா எந்த புருஷனுக்கும் அடங்காத கோவம் தான் வரும். ஆனா, அந்த சிட்டுவேஷன்லயும் இவர் உன்னைப் பத்தி மட்டும் தான் ஆரா யோசிச்சாரு." என்று இழுத்து மூச்சு விட்டவள்,


"அன்னைக்கு சொன்னேன்ல. ஆதிய மிஸ் பண்ற நீ அன்லக்கின்னு" என்றவள் தலையை இடவலமாக ஆட்டி, "அக்னி மாதிரி ஒரு புருஷன் கிடைச்ச நீதான் லக்கியஸ்ட் பர்சன் இன் த வேர்ல்ட்." என்றாள்.


"அக்னி சொன்னதைக் கேட்ட அப்றம் தான் எனக்கும் அந்த பயம் வந்தது. உடனே உனக்கு ட்ரீட்மென்ட் பண்ண டாக்டரை போய் பார்த்தோம். அவர் சொன்னதை கேட்ட பிறகு எந்த வகையிலும் உனக்கு ஸ்ட்ரெஸ் குடுக்ககூடாதுன்னு முடிவு பண்ணோம். அந்த டாக்டர் சொன்னாரு உனக்கு மறந்து போன டைம்ல பாத்த இடம், பழகின மனுஷங்களை பாத்தா உனக்கு மறந்தது ஞாபகம் வர வாய்ப்பிருக்குன்னு சொன்னாரு… ஆனா, உன்னோட ஹெல்த் இப்ப கொஞ்சம் சரியில்ல, ஒரு மாசத்தில் நீ முழுசா சரியாகிடுவன்னு சொன்னாரு. அந்த ஒரு மாசமும், எல்லா உரிமையும் இருந்ததும் யாரோ போல தள்ளி இருந்தே உன்னை பாத்துட்டு இருந்தாருடி." என்க, ஆராத்யா கண்களை அழுத்தி மூடிக்கொண்டாள்.


ஷிவானி தொடர்ந்து, "ஒரு மாசம் அப்றம் உன் ஹெல்த் கண்டிஷன் நல்லா இருக்குன்னு தெரிஞ்ச பிறகு, அக்னி சொன்ன ப்ளான் தான் மறுபடியும் உன்னை அவர காதலிக்க வைக்கிறது.


அதுக்காக தான் நம்ம போற இடத்துக்கு எல்லாம் அவர் வந்தாரு‌. ஆதிக்கு எனக்கு உன்னைப் பத்திய எந்த விஷயம் எதுவும் தெரியாதுன்னு நெனச்சு நான் உன்னைப் பாக்குறதை அவனும் தடுக்கல..‌. நீ அக்னியை மீட் பண்ணி அவரை நேர்ல பாத்தா கொஞ்ச கொஞ்சமா உனக்கு எல்லாம் ஞாபகம் வந்திடும்னு நாங்க நெனச்சோம். பட், நீ திரும்ப திரும்ப உனக்கும் ஆதிக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லிட்டே இருந்த, ஒரு டைம்ல அத கேட்டு எனக்கே செம்ம கோவம் வந்திடுச்சு ஆரா. ஆனா, அவரு கொஞ்சம் கூட கோவப்படவோ உன்னை வெறுக்கவோ இல்லடி… அவ தெரிஞ்சா இதெல்லாம் செய்றா, ஆதி மேல அவ வைச்சிருக்க நம்பிக்கையில் தான் அவ அப்டி பேசுறான்னு சொல்வாரு. அப்டி பட்ட மனுஷனை வெறுப்பேத்த நீ உச்சி வகுட்டுல குங்குமம் வச்சிட்டு போன இல்ல" என்று ஆத்திரத்துடன் சொன்னவள், "உன் நெஞ்ச தொட்டு சொல்லுடி, அன்னைக்கு நீ குங்குமம் வைக்கும் போது ஆதியை நினச்சியா, இல்ல அக்னியை நினச்சியா?" என்று கேட்க ஆரா அதிர்ந்துதான் போனாள்.


'ஆமாம், அன்று குங்குமம் வைக்கும்போது அவள் மனதில் அக்னியை தான் நினைத்தாள். இதைப்பார்த்த பிறகாவது தன் பின்னால அவன் வரமாட்டான் என்று அவனை நினைத்தபடி தான் அன்று வகிட்டில் குங்குமத்தை வைத்தாள்.' அது இப்போது புரிய குற்றவுணர்வில் இதழ்களை கடித்துக்கொண்டபடி கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.


"அக்னி உன் கண்ணு முன்ன வந்தும் உனக்கு எதுவும் ஞாபகம் வரமா போனது எங்களுக்கு சந்தேகமா இருந்தது. ஏதோ தப்பா இருக்குன்னு தோன, உன்னோட மெடிசன்ஸ் எல்லாத்தையும் எடுத்து செக் பண்ணோம். அப்ப தான் தெரிஞ்சது அது உன் ஞாபகத்தை திருப்பி கொண்டு வர மருந்து இல்ல, உனக்கு ஞாபகமே திரும்ப வரக்கூடாதுன்னு உனக்கு கொடுக்கும் மருந்துன்னு. இத நாங்க கண்டுபிடிக்கும் போது ரொம்ப நாள் கழிஞ்சு போய்டுச்சு, ரொம்ப பக்கத்துல உன்னோட கல்யாணம் வந்திட வேறு வழி இல்லாம உன்னை கடத்திட்டு வரவேண்டியதா போய்டுச்சு" என்றவள் ஆரா முன் வந்து அமர்ந்தாள்.


"இங்க வந்த பிறகு அவர்கிட்ட ஒவ்வொரு தடவையும் நான் இன்னொருத்தன் பொண்டாட்டி, இன்னொருத்தன் பொண்டாட்டின்னு சொல்லிட்டே இருந்தியே அவருக்கு அந்த வார்த்தையை கேட்கும் போது எவ்ளோ வலிச்சிருக்கும்னு யோசிச்சு பாரு ஆரா. இதே அவர் இடத்தில் வேற யாரும் இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்னு கொஞ்சம் திங்க் பண்ணி பாரு… கொஞ்சம் முன்ன அவர் தொட்டதும் நான் உருகி நின்னேனே அந்த தப்புக்கு சாகப்போறேன்னு சொன்னீயே…


ஒரு நிமிஷம்… நீ ஏன் அப்டி பண்ணேன்னு யோசிச்சியா… பிகாஸ் ஹீ இஸ் யுவர் ஹஸ்பண்ட். லவ் ஆப் யுவர் லைஃப், அவர் ஒருத்தர்கிட்ட மட்டும் தான் உன்னோட உண்மையான உணர்வுகள் வெளிப்படும். அவர் ஒருத்தரால் மட்டும் தான் உன்னையும், உன் மனசையும் நெருங்கவும், தொடவும் முடியும். அதை உன் மூளை மறந்திருக்கலாம். பட், உனக்குள்ள இருக்க அவர் பொண்டாட்டி தியாவோட மனசு மறக்கலடி. அதான் அவர் தொட்டதும் நீ மயங்கி நின்ன… அதை புரிஞ்சிக்க முதல்ல. நீ எந்த வகையிலும் தப்பான பொண்ணு இல்ல ஆரா… நீ யாருக்கும் துரோகம் பண்ணல… யூ ஆர் ஏ பியூர் சோல்" என்றவளை கட்டிகொண்ட ஆரா கதறி அழ, அவள் அழுகையை பார்க்கவும் முடியாமல், அவளை தொட்டு சமாதானம் செய்யவும் வழியின்றி, பல்லைக் கடித்துக்கொண்டு, கைகளை இறுக்கி மூடியபடி நின்றான் அவள் கண்வன்.