விழி வழி காதல் நுழைந்ததடி 30

 

விழி 30


இந்தியா கிளம்புவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டிருந்தான் அதீஷன்.


அன்றைய மறுநாள் அவர்களுக்குப் பயணம்.


அதீஷன் நொடிக்கொரு முறை தன் காதில் ரத்தம் வழிகிறதா என்று தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.


"டேய், அங்க என்னடா பண்ணிட்டு இருக்க? நான் இங்க பேசிட்டு இருக்கேன் இல்ல" என்று கத்திய ஆதர்ஷனை சலிப்பாகப் பார்த்த அதீஷன், 


"டேய், ஒரே விஷயத்தை எத்தனை தடவைதான்டா சொல்லிட்டே இருப்ப… ப்ளீஸ்டா முடியல" என்றான். 


"இப்ப என்ன? எந்தக் காரணம் கொண்டும் தன்விய கல்யாணத்துக்கு ஃபோர்ஸ் பண்ணக்கூடாது, அவளை எப்பவும் ஹார்ஷாப் பேசக்கூடாது. அவ மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் செய்யக்கூடாது. அவளுக்கு சாக்லேட் எதுவும் வாங்கித்தரக் கூடாது… அவளுக்கு சாக்லேட் அலர்ஜி, சில சாக்லேட் தான் அவ சாப்பிடலாம், சோ அதைக் கவனத்தில் வச்சிக்கணும், லாஸ்ட்டா  தாத்தாகிட்ட மரியாதையா நடந்துக்கனும், அவளோதானே…" என்று வேகமாகச் சொன்னவன், "இதை நீ இதுவரைக்கும் ஒரு நூறு முறையாவது சொல்லி இருப்படா" என்றான் பாவமாக.


"ம்ம்ம் நூறு இல்ல… நான் ஆயிரம் முறை சொன்னாலும் நீ கேட்டுதான் ஆகணும். பிகாஸ், நான் என்னோட தன்வி லைஃப்போட முக்கியமான பொறுப்பை உன்கிட்டக் கொடுத்திருக்கேன். அவளை நீ ஒழுங்காப் பார்த்துக்கணும். அதை நீ சரியாப் பண்ற வரை நான் உன்னை ஃபாலோ பண்ணிட்டு தான் இருப்பேன்" என்றான் அழுத்தமாக.


அதைக்கேட்டு அவனை முறைத்த அதீஷன், "டேய், நான் உன்னோட ட்வின் ப்ரோடா, என்னை நீ நம்ப மாட்டியா?" என்றவன் தொடர்ந்து, "அது கூடப் பரவாயில்ல… அவளைப் பத்தியே பேசிட்டு இருக்கியே… எனக்காக ஒரு வார்த்தையாச்சும் பேசினியாடா நீ… அப்ப என்னைவிடத் தன்வி தான் உனக்கு முக்கியம் இல்ல" என்று கேட்டவனுக்கு, தன்வி மேல் கொஞ்சம் அல்ல நிறையவே பொறாமை எழுந்தது.


அவனின் முகத்திலேயே அவனது உணர்வுகளைப் புரிந்து கொண்ட ஆதர்ஷன், "எனக்கு நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு தான்டா… இல்லாட்டி அவளை உனக்கு மேரேஜ் பண்ணி வைக்க நினைப்பேனா?" என்றவன் நிறுத்தி, "பட், அவ கொஞ்சம் ஸ்பெஷல் தான்…" என்று சத்தமாகச் சொன்னவன், "உனக்கும் அவ அப்படிதான்னு எனக்குத் தெரியும்" என்றான் மெல்லிய குரலில்.


"என்ன? ‌என்ன சொன்ன?" என்ற அதீஷனை நிமிர்ந்து பார்க்க, "ஒண்ணும் இல்லடா… எனக்கு நீங்க ரெண்டு பேரும் ரெண்டு கண்ணு மாதிரின்னு சொன்னேன்" என்றான் கிண்டலாக.


"ஓஓஓ! அப்படியா? இருடா, அந்த என்னோட பங்குக் கண்ணை நோண்டுறேன்" என்றபடி அங்கிருந்த முள் கரண்டியை எடுத்துக்கொண்டு வர, 


"டேய் டேய், ஒரு பேச்சுக்குச் சொன்னேன்டா… அதுக்குன்னு இப்படி கண்ணைக் குத்த வரியே" என்று அங்கிருந்து தப்பித்து அங்கும் இங்கும் ஓட, அதீஷன் அவனை விரட்டி வர, அவர்களின் சிறுபிள்ளை விளையாட்டைச் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் ஆலன்.


"யேய் யேய்! கைஸ், போதும் உங்கவிளையாட்டு… சீரியஸ் மேட்டர் பேசும் போதுகூட எப்படி உங்களால இப்படிக் காமெடி பண்ண முடியுதோ?" என்று தலையில் அடித்துக் கொண்ட ஆலன் அருகில் வந்து அமர்ந்தனர் இருவரும்.


அந்த நேரம், "ஏய் ஆஷ்… எனக்கு ஒரு டவுட்" என்றான் ஆலன்.


"என்ன டவுட்?" 


"இல்ல… நீயும் ஏஞ்சலும் ரொம்பக் குளோஸ்… உன்னை அவளும் அவளை நீயும் இன் அன்ட் அவுட் புரிஞ்சி வச்சிருக்கவங்களாச்சே… இன்கேஸ் தன்விக்கு நம்ம அதீ மேல டவுட் வந்துட்டா?" என்று கேட்டான்.


"இன்கேஸ் எல்லாம் இல்ல, அவ மூளைக்கு இவனைப் பார்த்தவுடனேயே டவுட் வந்திடும். அவ எந்த அளவு பாசமானவளோ, அந்த அளவு புத்திசாலியும் கூட, இப்ப வரை நான் பிஸினஸ்ல டாப்ல இருக்க, முக்கியக் காரணமே அவதான். அவளை ஏமாத்துறது… இட்ஸ்‌ நாட் ஈஸி ப்ரோ" என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டான்.


"வாட்?" என்று ஒரே நேரத்தில் அதிர்ந்தனர் அதீஷன், ஆலன் இருவரும்.


"ஆமாடா" என்றான் ஆதர்ஷ் கூலாக.


"எதுதுது? ஆமாவா? என்ன விளையாடுறியா‌ நீ? தன்விக்கு என்மேல சந்தேகம் வந்தா, அப்புறம் நம்ம ப்ளான் எல்லாம் அவ்ளோ தான்டா…" என்றான் அதீஷன் கடுப்பாக.


"டேய்… நான் அவ மூளைக்குச் சந்தேகம் வரும்னு தான் சொன்னேன்… அப்படி அவளுக்கு வர்ற சந்தேகம், உன் முகத்தைப் பார்த்த அடுத்த  நிமிஷமே வந்த இடம் தெரியாமக் காணாமல் போயிடும். பிகாஸ், உன்னோட முகம் என்னோடது. ஐ மீன், அங்க அவ கண்ணுக்கு நீ நானா தான் தெரிவேன். என் முகத்தைப் பார்த்தா அவ மனசு உன்னை நம்பிடும். அவளை ஏமாத்த, உன்னோட‌ என் முகம் ஒண்ணு போதும்" என்றான் கர்வமும் நம்பிக்கையுமாக.


ஆதர்ஷ் சொன்னது சரி என்று தெரிந்து அதீஷன் மனம் சமாதானம் ஆனாலும், உள்ளுக்குள் ஆதர்ஷனுக்கும் தன்விக்கு இடையே இருக்கும் இந்த மன நெருக்கத்தை நினைத்துச் சற்றுப் பொறாமையாகவும் தான் இருந்தது. ஆதர்ஷ் இருக்கும் இடத்தில் தான் இல்லையே என்று நினைத்து. அந்தப் பொறாமை அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, ஓரக்கண்ணால் தன் உடன்பிறப்பின் முகத்தைப் பார்த்து ஆதர்ஷனுக்கு உள்ளுக்குள் தான் செய்வது சரி என்ற எண்ணம் தோன்றியது. இருந்தாலும் தன் தம்பிக்குத் தான் செய்வது நியாயமாக இருந்தாலும் இதில் தன்வியின் மனமும், வாழ்க்கையும் இணைந்துள்ளது என்று நினைத்தவன் மனது ஒரு கணம் அவளை நினைத்து வாடினாலும் இதுதான் அவளின் எதிர்காலத்திற்கு நல்லது என்று எண்ணி அடுத்தடுத்து நடக்க வேண்டியதைத் திட்டம் போட்டு வைத்தான்.


அதீஷன் இந்தியா செல்லும் முன் முடிக்க வேண்டிய சில வேலைகள் இருக்க, வெளியே சென்றிருந்தான். அந்த நேரம் ஆலன், "ஆஷ், நீ பண்றது எல்லாம் கரெக்ட்னு உனக்குத் தோணுதா? நமக்காக ஏஞ்சல், அதீ ரெண்டு பேர் லைஃப் அன்ட் ஃபியூச்சர்ல நீ ரிஸ்க் எடுக்குற மாதிரி எனக்கு ஃபீல் ஆகுது." என்று ஒருவித குற்றவுணர்வோடு கேட்டான்.


"ஏன் உனக்கு அப்படித் தோணுது?" என்று பதில் கேள்வி கேட்டான் ஆதர்ஷன்.


"இதென்ன கேள்ளி ஆஷ்… தன்வி உன்னை மேரேஜ் பண்ண நினைக்கிறா, இங்க அதீக்கு மேரேஜ்ல இன்ட்ரெஸ்ட்டே இல்லன்னு சொல்றான். இப்படி இருக்கும்போது இவங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் பண்ணி வச்சா, அது சரியா வருமா? நாளைக்கு எதுவும் ப்ராப்ளம் வந்தா என்ன‌ பண்றது? ஏஞ்சல் கூட ஓகே… நீ சொன்னா கண்ணை மூடிட்டு அதைக் கேட்டுப்பா… ஆனா, அதீ? அவனோட லைஃப்… அவனுக்குத் தன்னோட ஃபியூச்சர் ஒயிஃப் பத்திச் சில எக்ஸ்பெக்டேஷன் இருக்கும் தானே?" என்றான் தன்வி, அதீஷனின் நலனைப் பற்றிய கவலையோடு. 


சில நொடிகள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த ஆதர்ஷ், "கம் வித் மீ" என்றபடியே ஆலனை அழைத்துக் கொண்டு வீட்டின் முதல் தளத்தில் இருக்கும் அறைக்குச் சென்றான்.


"இங்க ஏன் கூட்டி வந்த ஆஷ்? இது அதீயோட பர்சனல் ரூம், உங்க அம்மா கூட இந்த ரூம்க்குள்ள வரமாட்டாங்க இல்ல" என்று கேட்டான்.


"ம்ம்ம்… ஆமா. இது அவனோட ரொம்பப் பர்சனல் ரூம் தான்" என்று ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தவன், "டோரை ஓபன் பண்ணு" என்றான் ஆலனைப் பார்த்து.


"நோ ஆஷ், இது தப்பு. அதீ இல்லாத டைம் நம்ம இப்படிப் பண்ணக் கூடாது" என்றான் உறுதியாக.


"ஏய்! இது அதீயோட வீடு மட்டும் இல்ல என்னோட வீடும் தான். நான் சொல்றேன் இல்ல, ஓபன் பண்ணு" என்றான்.


அவனை முறைத்த ஆலன், "அப்ப நீயே ஓபன் பண்ணு… ஒய் மீ?" என்றான் கடுப்பாக.


"பச்ச்… சும்மா பேசிட்டு இருக்காம சீக்கிரம் கதவைத் திற" 


"ஓகே" என்று கடுப்பாகச் சொன்ன ஆலன், கதவில் கை வைக்க அந்தக் கதவோ நான் திறக்க கடவுச்சொல் வேண்டும் என்று கேட்டது


"ஆஷ், இந்த டோர் பாஸ்வேர்ட் லாக்ல இருக்கு, டு யூ நோ தி பாஸ்வேர்ட்" என்றான்.


"இல்லை" என்ற ஆதர்ஷ், "ம்ம்ம் ஓகே, அம்மா நேம் போட்டுப் பாரு" என்றான்.


ஆலனும் அதை முயற்சி செய்ய, கதவு திறக்கவில்லை. 


"சரி என்னோட நேம் போடு" என்றான் இதழ்களில் ஒரு குறுஞ்சிரிப்போடு.


ஆலனும் கடுப்போடு ஆதர்ஷ் பெயரை முயற்சி செய்ய, அப்போதும் கதவு திறக்கவில்லை.


"இட்ஸ் நாட் ஓபனிங் மேன்" என்று சலிப்பாகச் சொன்ன ஆலனைப் பார்த்துச் சிரித்த ஆதர்ஷன், "இப்ப உன்னோட ஏஞ்சல் நேம் போட்டுப்பாரு ஓபன் ஆகும்” என்றான் உறுதியாக.


அதைக்கேட்டு அவனை முறைத்த ஆலன், "டோண்ட் பீ கிரேசி மேன். அதீ ஏன் ஏஞ்சல் நேமை பாஸ்வேர்ட்ல வைக்கப் போறான்" என்றான் ஆதர்ஷ் வார்த்தையை நம்ப முடியாமல்.


"ப்ச்ச்… போட்டுத்தான் பாரேன்" என்றான் ஆதர்ஷ் மிகுந்த நம்பிக்கையோடு.


அதைக் கேட்ட ஆலனும் சலிப்பாகத் தன்வி பெயரை உள்ளிட, அடுத்த நொடி கதவு திறந்து கொள்ள, திகைத்து விரிந்த விழிகளோடு ஆதர்ஷனைப் பார்த்தான் ஆலன்.


ஆலனை ஒரு அர்த்தப் பார்வை பார்த்தவன், "இப்ப உன்னோட எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைச்சிருக்குமே!" என்றவன், "வா… உள்ள போலாம்" என்று அவனை அறைக்குள் அழைத்துச் செல்ல, அந்த அறையைப் பார்த்து மீண்டும் ஒரு முறை திகைத்துப் போய் நின்றான் ஆலன்.


அந்த அறை முழுவதும் ஆதர்ஷ், அதீஷன், தன்வி மூவரின் சிறுவயதுப் புகைப்படங்கள் தொடங்கி தன்வியின் தற்போதைய புகைப்படங்கள் வரை இருந்தது. கூடவே நிறைய வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்களும் இருந்தது.


அதையெல்லாம் பார்த்தபடியே ஆதர்ஷனைப் பார்த்த ஆலன், "இந்த கார்ட்ஸ், கிஃப்ட் எல்லாம்?" என்று கேட்டான்.


"இதெல்லாம் நான் படிக்க யூ.எஸ் வந்த அப்புறம் ஒவ்வொரு பண்டிகைக்கும், என்னோட பிறந்த நாளுக்கும் அவளே கைப்பட செஞ்சு அனுப்பின கார்ட்ஸ் அன்ட் கிஃப்ட்" என்றான்.


"ஓகே… ஆனா, அதெல்லாம் ஏன் அதீகிட்ட இருக்கு? அதுவும் அவனோட  பர்சனல் ரூம்ல?" 


"இதெல்லாம் தன்வி எனக்கு அனுப்பினது தான்..‌. அது என் கைக்கு வந்த அடுத்த நிமிஷம் இவன் அதை என்கிட்ட இருந்து வாங்கிக்குவான். டேய், அது தன்வி எனக்கு அனுப்பினதுன்னு சொன்னா, அதுக்கு என்ன சொல்வான் தெரியுமா? அவளுக்கு நான் ஒருத்தன் இருக்குறதே தெரியாது… அதான் உனக்கு மட்டும் அனுப்பி இருக்கா. தெரிஞ்சிருந்தா எனக்கும் சேர்த்து அனுப்பி இருப்பா. நீங்கதான் என்னைப்பத்தி சொல்லவே இல்லயே… சோ, அதுக்கு  பனிஷ்மென்ட் தான் இது… இதெல்லாம் எனக்கு தான்னு சொல்லி எல்லாத்தையும் அவன் எடுத்துக்குவான். முதல்ல நான் கூட ஏதோ விளையாட்டாப் பண்றான்னு தான் நினைச்சேன். ஆனா, வயசு ஆக ஆக, நாங்க வளர்ந்த பிறகும் கூட அதீ இந்தப் பழக்கத்தை விடல தெரியுமா?" அவ சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் அவன் தான் வச்சிக்கணும்னு நினைக்கிறான்." என்ற ஆதர்ஷன் தொடர்ந்து, 


"அம்மா வீட்டை விட்டு அதீயக் கூட்டிட்டு வரும்போது அவன் என்னைவிட்டுப் பிரியணும்னு அழுததைவிட தன்வியை விட்டு வர முடியாதுன்னு தான்டா அதிகமா அழுதான். எல்லாரும் சொல்வாங்க, தன்வி பிறந்ததும் நான் தான் முதல்ல என் கையில் வாங்கினேன்னு… பட், உண்மை என்ன தெரியுமா ஆலன், நான் அவளை என் கையில வாங்கினேன். ஆனா, அதீ அவளை அவன் மனசுல ஏத்தி வச்சிருக்கான்டா… சின்ன வயசில் தன்வி கூட என்னைவிட அவன் கூடத்தான் ரொம்பக் குளோஸ் தெரியுமா? ஒரு நிமிஷம் அவன் பக்கத்தில் இல்லாட்டி அழுது ஊரையே கூட்டிடுவா… இவனும் அவளைக் கையில வச்சிட்டே சுத்துவான். அதீ வீட்டைவிட்டு வந்த அப்புறம் அவன் இல்லாம ஏங்கி அழுது அழுது தன்விக்கு ஜூரமே வந்திருக்கு தெரியுமா?" என்றவனை வியப்பாகப் பார்த்த ஆலன்,


"சோ, சின்ன வயசில் உன்னைவிட அதீ தான் தன்விக்கு குளோஸ், ரைட்?" என்று கேட்டான்.


"ஆமாடா… அவ மட்டும் இல்ல இவனுக்கும் அவளை ரொம்பப் பிடிக்கும். எப்ப ஃபோன் பண்ணாலும் தன்வி பத்திதான் கேட்டுட்டே இருப்பான். அவ‌ எப்படி இருக்கா? இன்னைக்கு என்ன பண்ணா, என்னைப் பத்திக் கேட்டாளான்னு… இப்படி தன்வி பத்தியே பேசிட்டு இருப்பான். அவளோட டே‌ டூ டே ஆக்டிவிட்டிஸ் அவனுக்குத் தெரிஞ்சாகணும்‌. நான் யூ.எஸ் இருக்கும் சமயம் அவ வீடியோ கால் பண்ண, அவளுக்குத் தெரியாத மாதிரி மறஞ்சு உக்கார்ந்து அவளைப் பார்த்துட்டே இருப்பான். இவ்ளோ ஏன்? நான் தன்விக்கு வாங்கித் தரும் சாக்லேட்ல இருந்து மத்த கிப்ட்ஸ் எல்லாம் இவன் வாங்கித் தர்றதுதான். அவளுக்காக ஒவ்வொன்னும் பார்த்துப் பார்த்து வாங்குவான். அதோட எனக்கே தெரியாம மூணு முறை இந்தியா போனவன்‍, அவளைத் தள்ளி நின்னே ஃபோட்டோஸ் எடுத்துட்டு வந்திருக்கான். அங்க இருக்குறது எல்லாம் அந்த ஃபோட்டோஸ் தான்" என்றான் ஆதர்ஷன் புன்னகை முகமாக.


அந்தப் புகைப்படங்களைப் பார்த்தாலே சொல்லி விடலாம், அவன் கண்கள் அவளை எந்த அளவுக்கு ரசித்துப் படம் பிடித்திருக்கிறது என்று.


அதையெல்லாம் பார்த்த ஆலன், "சோ" என்று இழுக்க, "எஸ் ஆலன், நீ நினைக்கிறது சரிதான். அதீ தன்வியை லவ் பண்றான். பட், அதை அவனே இன்னும் உணரல, அதான் பிரச்சனையே…" என்றான் கவலையாக.


"அவன் மேரேஜ் வேணாம்னு சொல்றது மேரேஜ் புடிக்காம இல்ல ஆலன், தன்வியைதான் அவனுக்குப் புடிச்சிருக்குன்னு தெரியாதனால தான். அம்மா அவனுக்குப் பார்க்கும் பொண்ணுங்ககிட்ட எல்லாம் அவன் தன்வியைத்தான் தேடுறான். அது அவனுக்கே தெரியல… அன்னைக்கு வீடியோ கால்ல தன்வி என்னை மேரேஜ் பண்ணிக்கச் சொல்றான்னு சொல்லும்போது அவன் முகத்தைப் பாக்கணுமே… ஏதோ அவனோட பொருளைத் திருடப் பார்க்கும் திருடனைப் பார்க்குற மாதிரி என்னைப் பார்த்தான்டா… அப்பதான் எனக்கே புரிஞ்சிது. அதீக்கு தன்வி மேல இருக்கற பொசசிவ்னஸ் பத்தி. அப்பவே முடிவு பண்ணிட்டேன். தன்வியை அதீக்கு தான் மேரேஜ் பண்ணித் தரணும்னு" என்றவன் தொடர்ந்து, 


"இதெல்லாம் நடக்க ஒரே வழி இவன் தன்வியை நேர்ல பார்க்கணும், பழகணும். அப்படி இவன் அவளைப் பார்த்துட்டாப் போதும்… சார் தலைகுப்புற அவமேல காதல்ல விழுந்துடுவாரு… அப்புறம் பாரு, நான் என்ன? தன்வியே வேணாம்னு சொன்னாலும் அவளைத் தூக்கிட்டுப் போய்க் கல்யாணம் பண்ணிப்பான்" என்றான் தன்னோடு ஒட்டிப் பிறந்தவனின் உள்ளத்தைச் சரியாகக் கணித்து.


இதை எல்லாம் கேட்ட ஆலனுக்கும் அதீ, தன்வி வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை வர, முழு மனதோடு அங்கிருந்து சென்றான்.


அவர்களின் இந்தியாப் பயணம் இனிதே தொடங்கியது‌. அமிர்தாவிடம் முழு விவரம் எதுவும் சொல்லாமல், வேலை விஷயமாகச் செல்கிறோம் என்று சொல்லிவிட்டான் ஆதர்ஷன். இவர்களுடன் இந்தியா வருவதாகச் சொன்ன ஆலன், கடைசி நேரத்தில் ஏதேதோ காரணங்களைச் சொல்லி வராமல் போக, அதீஷன், ஆதர்ஷன் இருவரும் இந்தியாவுக்குப் பறந்தனர்.