விழி வழி காதல் நுழைந்ததடி 29
விழி 29
வெகு நாட்கள் கழித்து ஆதர்ஷனைப் பார்த்த அமிர்தா மகனை ஆரத்தழுவிக் கொள்ள, அவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
"எப்படி மா இருக்கீங்க?" என்ற மகனின் கன்னத்தை வழித்து முத்தமிட்டவர், "எனக்கென்னடா… நான் நல்லா இருக்கேன். பிஸினஸ் எல்லாம் அதீயும், நீயும் பார்த்துக்குறீங்க… நான் ஜாலியா என்னோட ரிட்டயர்மென்ட் பீரியடை என்னோட பேரன், பேத்தி கூட என்ஜாய் பண்ண முடியாம, தனியா தனிமையில் இனிமை கண்டுட்டு இருக்கேன்." என்றார் மறைமுகமாக, மகன்களிடம் தன் ஆசையைக் கோடிட்டு காட்டியபடி.
"ம்மா… ஆரம்பிச்சிட்டீங்களா உங்க புராணத்தை? அவன் இப்ப தான் வந்திருக்கான்மா… ப்ளீஸ், போய் முதல்ல அவனுக்கும் ஆலன்கும் குடிக்க ஏதாவது கொண்டு வாங்க" என்ற அதீயை முறைத்தபடியே அங்கிருந்து சென்றார்.
அவர் சென்றதும், "ஏன்டா, அம்மாவை இப்படி ஹார்ஷாப் பேசற? அவங்க ஏஜ்ல பேரன், பேத்தி வேணும்னு நினைக்குறது காமன் தானடா…" என்றான் ஆதர்ஷன் தாய்க்கு ஆதரவாக.
"ஓஓஓ! அம்மாக்கு சார் சப்போர்ட்டு… சரிப்பா, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல… நீ கல்யாணம் பண்ணிட்டு பேரன் நாலு, பேத்தி நாலு பெத்துக்குடு, நான் வேணாம்னு சொல்லல" என்றவனை ஆதர்ஷ் தீயாக முறைக்க,
"ம்ம்ம் எரியுது இல்ல… எங்களுக்கும் அப்படி தான் இருக்கும். நான் தான் கல்யாணத்தில் இன்ட்ரெஸ்ட் இல்லன்னு சொல்றேன் இல்ல… சும்மா அதையே பேசிக் கடுப்பேத்திட்டு…" என்றவன் அருகில் இருந்த சோஃபாவில் கால்நீட்டி அமர்ந்து கொண்டு, "ம்ம்ம், இப்ப சொல்லுங்க. உங்க ரெண்டு பேருக்கும் என்ன ப்ராப்ளம்?" என்று நேரடியாகக் கேட்டுவிட, அவனிடம் மறைத்துப் பேச ஒன்றும் இல்லை என்று அறிந்த ஆதர்ஷன், இருவருக்கும் இடையில் நடந்த வாக்குவாதம் பற்றிச் சொன்னான்.
அதைக்கேட்டு சில நிமிடங்கள் மௌனம் காத்த அதீஷன், "ஆலன் கேட்டதில் என்ன தப்பிருக்கு தர்ஷா… அவன் மனசில் இருந்ததை அவன் கேட்டிருக்கான். வாட்ஸ் ராங்க் இன் திஸ்? நீ தன்வியை மேரேஜ் பண்ணா என்ன தப்பு?" என்றவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் ஆதர்ஷன்.
"ஆஷ்... வாட் ஆர் யூ டூயிங்?" என்றபடி ஆலன் பதற, அவனைக் கைகாட்டித் தடுத்த அதீஷன்,
"இது எங்களுக்குள்ள காமன் தான் ஆலன்… யூ டோண்ட் வொர்ரி" என்றவன், "இப்ப எதுக்கு நீ இவ்ளோ ஹைப்பர் ஆகுற? நான் என்ன இப்ப தப்பாச் சொல்லிட்டேன்" என்றவனை மீண்டும் அடிக்கக் கை ஓங்கிய ஆதர்ஷன்,
"ஷிட்" என்று கை முஷ்டியை இறுக்கி மூடித் தன் கோவத்தை அடக்கியவன், "ஆலன் இந்த வார்த்தையைச் சொல்லும் போது எனக்கு கோவம் மட்டும் தான்டா வந்துச்சு... ஆனா, அதையே நீ சொல்லும் போது எனக்கு வலிக்குதுடா… ரொம்ப வலிக்குது. உன்னால எப்படிடா இப்படி நடிக்க முடியுது? அதுவும் எங்க ரெண்டு பேரையும் பத்தித் தெரிஞ்சும் எப்படிடா? அவ என்னைக் கல்யாணம் பண்ண நினைக்குறது என்னோட சேர்ந்து வாழ இல்லடா… என்னையும், தாத்தா கௌரவத்தையும் காப்பாத்த தான். அப்பவும் சரி, இப்ப என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கும் போது சரி, அவ மனசுல என்மேல துளி ஆசையோ, காதலோ… ஏன்? சின்ன ஈர்ப்பு கூட அவளுக்கு என்மேல இல்லடா… என்மேல மட்டும் இல்ல, வேற யார் மேலயும் அவளும் அப்படி ஒரு தாட் வந்தது இல்ல… வரவும் வராது. அது ஏன்னு தெரியுமாடா உனக்கு" என்று விரக்தியாகச் சிரித்தவன்,
"எனக்கானவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இந்த உலகத்தில் என் ஆதுவுக்கு மட்டும் தான் இருக்கு, என் ஆது யாரைச் சொல்றாரோ அவரை நான் கண் மூடிட்டு கட்டிக்குவேன், அவனைத் தவிர இந்தத் தன்வியோட கண்ணும், மனசும் யாரையும் பார்க்காது, ரசிக்காதுன்னு சொன்னவடா அவ… இப்பப் புரியுதா? அவ என்னை அவ வாழ்க்கையில் எந்த இடத்தில் வச்சிருக்கான்னு உங்க மரமண்டைக்கு இப்பவாவது புரியுதா?" என்றவன் கலங்கிய குரலில்,
"அந்த வார்த்தையைக் கேக்கும் வரை அவளை நான் என்னோட நல்ல தோழியா தான்டா நினைச்சிருந்தேன். அதுக்கு அப்புறம் அவ மேலான என்னோட பார்வை மாறிடுச்சு அதீ… அவ என் குழந்தைடா… நீ சொன்னியே கல்யாணம் பண்ணி புள்ளை பெத்துக்கோன்னு… அவ நான் பெறாமல் பெத்த என்னோட புள்ளைடா, அவ என் மக டா…" என்றவன் கண்கள் சிவந்துவிட,
"நான் அவளைக் கல்யாணம் பண்ணா அது பெத்த அப்பன் அவன் பொண்ணைக் கல்யாணம் பண்ற மாதிரிடா... இப்ப சொல்லுடா, நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கவா? சொல்லுடா." என்று அடிவயிற்றில் இருந்து கதறியபடி அதீஷனின் சட்டைக் காலரைப் பிடித்து உலுக்க, அவனின் கலங்கிய விழிகளைப் பார்த்துக் கண்களை மூடிக்கொண்ட அதீஷன், "சாரி டா அண்ணா" என்றான் மென் குரலில்.
அந்த அண்ணா என்ற வார்த்தையில் அடங்கிய ஆதர்ஷன், அவன் சட்டையில் இருந்து கையை எடுத்தவன், அங்கிருந்த சோஃபாவில் பொத்தென்று அமர்ந்தான்.
அந்த நேரம் அங்கு வந்த அமிர்தா, "தர்ஷா" என்று தழுதழுக்கும் குரலில் அழைக்க, அவர் குரலே சொல்லியது அவர் அனைத்தையும் கேட்டு விட்டார் என்பதை.
"ம்மா" என்று கண்ணீரோடு மகன் அழைக்க, ஓடிவந்து அவனை அணைத்துக் கொண்டார் அமிர்தா.
நடந்த அனைத்தையும் கேட்டவர் திரும்பி அதீஷனைப் பார்த்து முறைத்தபடி, "ஏன்டா இப்படி மத்தவங்க ஃபீலிங்ஸ் பத்திக் கவலைப்படாம சட்டுன்னு உன் மனசுக்குத் தோன்றதைப் பேசி வைக்கிற… உனக்குத் தெரியாது? தர்ஷனுக்கும் தன்விக்கும் இடையே இருக்க ரிலேஷன்ஷிப் பத்தி! அது தெரிஞ்சும் ஏன்டா இப்படி உயிரை வாங்குற?" என்று மகனை வசைபாடித் தீர்க்க, அதீஷனுக்கும் தான் பேசியதை நினைத்து வருத்தமாக தான் இருந்தது. கூடவே தன்வி ஆதர்ஷ் இடையில் அன்பு என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று நினைக்க ஏனோ அவனையும் அறியாமல் அவன் மனம் நிம்மதி கொண்டது.
இரண்டு நாட்கள் அமைதியாகக் கழிய, அன்று அமிர்தாவுக்கு முக்கிய வேலை இருந்தது. அவர் வரத் தாமதமாகும் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்க, ஆலனை வீட்டுக்கு வரச் சொன்ன அதீஷன், ஆதர்ஷின் அறை நோக்கிச் சென்றான்.
"சோ… உன்னால தன்வியை மேரேஜ் பண்ண முடியாது." என்ற அதீஷன் சில நொடிகள் கழித்து, "ம்ம்ம் ஓகே… அப்ப அடுத்து என்ன பண்றதா இருக்க தர்ஷா?" என்று கேட்ட உடன்பிறப்புக்கு இடவலமாகத் தலையாட்டி இதழ்களைப் பிதுக்கினான் ஆதர்ஷன்.
"அடுத்த என்ன செய்யறதுன்னு எந்த ஐடியாவும் என்கிட்ட இல்ல அதீ. டூ பி ஹானஸ்ட்… நான் இங்க தப்பிச்சு ஓடி வந்திருக்கேன்னு சொல்லலாம். பட், அதுவும் கொஞ்ச நாளைக்குத் தான்… எப்படியும் நான் திரும்பிப்போய் தான் ஆகணும். பட், அதுக்குள்ள இந்தப் பிரச்சனைக்கு எதாவது சொல்யூஷன் கிடைக்கணும்." என்றான் விரக்தியாக.
"இந்தப் பிராப்ளம் தீர ரெண்டு வழி இருக்கு, ஒன்னு தாத்தாகிட்ட உண்மையைச் சொல்றது" என்ற அதீயைப் பாவமாகப் பார்த்த ஆதர்ஷ், "வாய்ப்பில்ல, நெக்ஸ்ட்" என்றான்.
"தன்வி வேற யாரையாவது மேரேஜ் பண்ணிக்கணும்" என்ற அதீயைப் பார்த்து இல்லை என்று தலையாட்டிய ஆதர்ஷ், "வாய்ப்பே இல்ல ராஜா… நெக்ஸ்ட்" என்றான்.
"டேய்! நான் ரெண்டு வழிதான் இருக்குன்னு சொன்னேன். நீ நெக்ஸ்ட்னு கேக்குற" என்றான் அதீஷன் கடுப்பாக.
"நீ சொன்ன ரெண்டும் நடக்காதுடா" என்ற ஆதர்ஷனைப் புருவம் சுருக்கி முறைத்த அதீஷன், "ஓகே! தாத்தாகிட்ட உண்மையைச் சொல்ல முடியாது… பட், தன்விக்கும் வேற ஆளை மேரேஜ் பண்ணி வைக்க ஏன் முடியாதுன்ற?"
"நான் எங்கடா முடியாதுன்னு சொன்னேன். எனக்கு டபுள் ஓகே தான். ஆனா, இதுக்கு அவ ஒத்துக்கணுமே" என்றான் விரக்தியாக.
"ஏன் ஒத்துக்க மாட்டா?" என்றான் கடுப்பாக.
"டேய் நீ எவன்டா… விடிய விடியக் கதை கேட்டு சீதைக்கு ராமன் பாய் பெஸ்ட்டின்னு சொல்ற… அவ என்னைத் தான் கட்டுவேன்னு ஒத்தக் கால்ல நிக்குறாளே, அப்புறம் என்ன பண்றது?"
"சரி அவ சொன்னா, அதுக்கு நீ என்ன பண்ண? அப்படியே இங்க ஓடி வந்துட்டா எல்லாம் சரியாகிடுமா?"
"வேற என்னை என்ன அதீ செய்யச் சொல்ற நீ? அவதான் எம் பேச்சைக் கேக்க மாட்றாளே…"
"டேய்! அவ ஏதோ எமோஷன்ல சொல்லி இருப்பா… நீ அதை நம்பிட்டு அப்படியே சும்மா இருந்திட்டா எப்படிடா? அவ அப்படிச் சொன்னதும் நீ என்ன செஞ்சிருக்கணும், உன்னை மாதிரியே ஒரு பையனை, இல்ல இல்ல… உன்னைவிட அழகா, படிச்ச, வசதியான மாப்பிள்ளை பார்த்து அவ முன்னாடி கொண்டு நிறுத்தி இருக்கணும். உன்னைவிட பெஸ்ட்டா ஒரு ஆள் கிடைக்கும் போது கண்டிப்பா அவ மேரேஜ்க்கு சம்மதம் சொல்லி இருப்பா" என்றவன் ஆதர்ஷ் முகம் பார்க்க, அவன் முகம் கோபத்தில் இறுகி இருந்தது.
"ஏய் தர்ஷா… வாட் ஹேப்பன்ட்?" என்று நெருங்கிய தம்பியைக் கைகாட்டி நிறுத்தியவன், "இப்ப நீ என்ன சொன்ன அதீ? என்னைவிட அழகு, வசதி இருக்க பையனைப் காட்டினா அவ கல்யாணம் பண்ணிப்பாளா?" என்றவன் இடவலமாகத் தலையை ஆட்டி, "அவ காலேஜ்ல படிக்கிற டைம்ல இருந்து இப்ப வரை, அவளுக்கு எத்தனை ப்ரபோசல் வந்திருக்குன்னு உனக்கு நல்லாவே தெரியும் இல்ல… அத்தனைப் பேரும் என்னைவிட அழகு, வசதி, படிப்புன்னு பல மடங்கு மேல இருக்கவங்கடா… ஆனா, என் தன்வி யாரையும் திரும்பிக் கூடப் பார்த்தது இல்ல, என்னை உட்பட… இப்பக் கூட அவ என்னை விரும்பிக் கல்யாணம் பண்ணல, எனக்காகத் தான் கல்யாணம் பண்ண நினைக்கிறா… அதை முதல்ல நீ புரிஞ்சிக்க" என்றவன் வார்த்தைகள், தீயின் தகிப்பில் வந்து விழ, ஆழ்ந்து மூச்செடுத்த அதீஷன், "நான் அப்படி மீன் பண்ணல தர்ஷா… நீ அந்த வழில ட்ரை பண்ணலைன்னு சொல்ல வந்தேன்…" என்றான் நிதானமாக.
"அவ என்னைக் கல்யாணம் பண்றதா முடிவு பண்ணிட்டா… அதில் இருந்து அவ ஒரு பர்சன்ட் கூட மாற மாட்டா" என்றவன் நிறுத்தி ஒரு முழு நிமிடம் அதீஷன் முகத்தை உற்றுப் பார்த்தபடியே, "நீ சொன்னதும் உண்மை தான்… என்னைவிட பெஸ்ட்டா யாரையும் கல்யாணம் பண்ணச் சொன்னால் அவ சம்மதிக்க மாட்டா, பட்…?" என்று இழுத்தவன், "என்னை மாதிரி ஒருத்தனை அவ முன்னாடி நிறுத்தினால் அவ கண்டிப்பா கல்யாணம் பண்ணச் சம்மதிப்பா" என்று சொல்ல, அவன் சொன்னதன் அர்த்தம் புரியவே அதீஷனுக்குச் சில நிமிடங்கள் பிடித்தது.
"வாட்?" என்று அதிர்வோடு வார்த்தையை இழுத்த அதீஷனுக்கு உண்மையில் உள்ளுக்குள் பரவசத்தோடு கூடிய ஒரு அதிர்வு ஏற்பட்டு உடல் சிலிர்த்து அடங்கியது.
"ஆமா அதீ… நீயே ஏன் தன்வியை மேரேஜ் பண்ணிக்கக் கூடாது?" என்ற தர்ஷனை அதீஷன் முறைக்க, ஆலன் முகத்திலோ மகிழ்வும் சிறு உறுத்தலும் சேர்ந்து தோன்றியது. தன்னால் தன்வியோடு சேர்த்து அதீஷனுக்கும் கஷ்டம் என்று நினைத்தவனுக்கு உள்ளுக்குள் குற்றவுணர்ச்சியாக இருந்தது.
"ஏஞ்சல் நம்ம அதீய மேரேஜ் பண்ண ஓகே சொல்வாளா ஆஷ்?" என்றான் ஒரு எதிர்பார்ப்போடு.
ஆலனைப் பார்த்து ஆதர்ஷன், "நோ வே" என்றவன், "இவன் அதீஷனாப் போனால் அவ சத்தியமா கல்யாணத்துக்குச் சம்மதிக்க மாட்டா" என்றவனைப் புரியாமல் பார்த்த ஆலன், "அப்புறம் எப்படி?" என்றான்.
"அவளைக் கல்யாணம் பண்ண, இவன் அங்க நானாப் போகணும். ஐ மீன் இவன் ஆதர்ஷனா அங்குப் போகணும்." என்றான் அதீஷனை அழுத்தமாகப் பார்த்தபடி.
"நோ வே தர்ஷா" என்று கத்தியபடியே எழுந்த அதீஷன், "தீ இஸ் நாட் ஏ ஜோக், இது லைஃப்… என்னோட, தன்வியோட லைஃப் தர்ஷா. சும்மா சினிமால வர்ற மாதிரி நினைச்சியா?" என்றவன் தலையை அழுத்திக் கோதியவாறு, "எனக்கு மேரேஜ்ல இன்ட்ரெஸ்ட் இல்லன்னு உனக்குத்தான் தெரியும் இல்ல. அப்புறம் எப்படி இப்படி ஒரு ஐடியா சொல்ற நீ? சரி, என்னை விடு வார்த்தைக்கு வார்த்தை என்னோட தன்வி, என்னோட தன்வின்னு சொல்றியே… அவளைப்பத்தி ஒரு செகண்ட் யோசிச்சிப் பார்த்தியா நீ… நாளைக்கு உண்மை தெரிஞ்சா அவ வாழ்க்கை என்ன ஆகும்? ஏமாத்தின என்னை அவ வெறுத்திட மாட்டா. அதுக்கு அப்புறம் வாழ்க்கை டைவர்ஸ்ல தான் போய் முடியும்." என்று கத்தியவனைப் பார்த்து இதழ் வளைத்துச் சிரித்த ஆதர்ஷன், "அப்ப உனக்கு தன்வியைக் கல்யாணம் பண்றது பிரச்சனை இல்ல. உண்மை தெரிஞ்ச அப்புறம் அவ உன்னை வெறுத்திடுவாளோன்னு தான் உனக்கு பயம்" என்று அவன் எண்ண ஓட்டைத்தைச் சரியாகப் புரிந்து சொல்ல, அதைக் கேட்டு அதீஷனுக்கே அதிர்ச்சி தான்.
'வாட்? நான் தன்வி என்னை வெறுத்திடுவாளோன்னு பயப்படுறேனா' என்று யோசித்தவன், 'ச்சீ… அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. அவ நல்ல பொண்ணு, அதான் அவ லைஃப் நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன். மத்தபடி இவன் சொல்ற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல. இவன் நம்மளை மனசை மாத்த ஏதோ மைண்ட் கேம் ப்ளே பண்றான்' என்று நினைத்தவன், "லுக் தர்ஷா… எனக்குக் கல்யாணம் பண்ண விருப்பம் இல்ல. அவளோதான்… மத்தபடி எனக்கு நீ சொல்ற மாதிரி எந்த பயமும் இல்ல. நீ உன்னால அவளைக் கன்வின்ஸ் பண்ண முடியாதுன்றனால இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க, நீ கொஞ்சம் ட்ரை பண்ணா அவளை மேரேஜ்க்கு சம்மதிக்க வைக்க முடியும்" என்றான் மிடுக்காக.
"ஓஓஓ!" என்று ராகம் இழுத்த ஆதர்ஷன், "ஓகேடா… அப்ப அதை நீ செஞ்சு காட்டு" என்றான் ஆதர்ஷன் சாதாரணமாக.
"செஞ்சு காட்டுன்னா புரியல?" என்றான் அதீஷன் புருவம் சுருக்கி.
"நீ சொன்ன இல்ல, கொஞ்சம் ட்ரை பண்ணா தன்வியை மேரேஜ்க்கு சம்மதிக்க வைக்க முடியும்னு… அப்ப அதை நீ செஞ்சு காட்டு. உனக்கு தான் சேலஞ்ஜஸ் புடிக்கும் இல்ல. யாரும் பண்ண முடியாத விஷயத்தைப் பண்ணிக் காட்டுறது ஒரு கிக்னு சொல்லுவியே… தன்வியை வேற பையனைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைக்கிறது முடியாத காரியம் மட்டும் இல்ல, நடக்கவே நடக்காத விஷயம். சோ, இதை நீ சேலஞ்சா எடுத்து முடிச்சுக் காட்டு." என்றவன் தொடர்ந்து, "நீ ஒன்னும் அவளுக்காக மாப்பிள்ளை தேடி அலைய வேண்டி இருக்காது. அவ குணத்துக்கு லட்சம் பேர் வருவாங்க அவளைக் கட்டிக்க… அதுல இருந்து ஒருத்தனை செலக்ட் பண்ணி அவளுக்குக் கல்யாணம் பண்ணி வை." என்றவனை மேலிருந்து கீழாக ஒரு மாதிரிப் பார்த்தான் அதீஷன்.
"நீ என்ன? எனக்கு வேற வேலை இல்லன்னு நினைச்சியா? அவளுக்கு மேட்ரிமோனி சர்வீஸ் பண்ண நான் தான் உனக்குக் கிடைச்சேனா? அதுக்கெல்லாம் வேற ஆளைப் பாரு" என்றவன் அங்கிருந்து செல்ல ஆதர்ஷ்,
"இட்ஸ் நாட் ஏ ஜோக் அதீ… இட்ஸ் ஏ ஓபன் சேலஞ்ச்… உன்னால அவளைக் கன்வின்ஸ் பண்ணவே முடியாது..." என்றவன் தொடர்ந்து, "அண்ட்" என்றபடியே தொடையில் கைகளை ஊன்றி எழுந்து வந்து அதீஷன் முன் நின்றவன், "நீ மட்டும் அவளை நேர்ல பார்த்துட்டீனா, நீ கண்டிப்பா அவளுக்கு வேற கல்யாணம் செஞ்சு வைக்க நினைக்க மாட்ட… நீயே அவளைக் கல்யாணம் பண்ணிப்ப" என்று ஒருவிதக் கிண்டல் தொனியில் சொல்ல, அதீஷன் தன் அண்ணனை ஒற்றைப் புருவம் உயர்த்திப் பார்த்தான்.
"வாட் யூ மீன் தர்ஷா?" என்றான் அவன் சொன்னதின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டே.
"ஐ மீன் வாட் ஐ சே அதீ… நீ மட்டும் தன்வி கூட ஜஸ்ட் ஒன் வீக் பழகிட்ட… அப்புறம் அவளை வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க உன்னால முடியாது. பிகாஸ் மை தன்வி இஸ் அன் ஏஞ்சல்" என்றான் திமிராக.
அதே திமிரோடு ஆதர்ஷனைக் குத்தும் பார்வை பார்த்த அதீ, "யூ மீன் உன்னோட ஏஞ்சலை நான் நேர்ல பார்த்துட்டா… நான் அவமேல லவ்ல விழுந்துடுவேன், நானே அவளை மேரேஜ் பண்ணிப்பேன்னு நீ சொல்ற ரைட்?" என்று திமிராகக் கேட்டான் அதீஷன்.
"அஃப்கோர்ஸ் அதீ… நீ அவளைப் பார்த்து பழகிட்டீனா… அதுக்குப் பிறகு நிச்சயம் அவளை நீ வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க நினைக்க மாட்ட" என்றவன் ஒரு நிமிடம் பொறுத்து, "இன்க்ளூடிங் மீ" என்றான் உறுதியாக.
ஆதர்ஷனின் ஒவ்வொரு வார்த்தையும் அதீஷனின் ஈகோவைத் தூண்டிவிட, "ஐ டேக் திஸ் அஸ் ஏ சேலஞ்..." என்று கணீர் குரலில் சொன்னவன், "நீ சொன்ன மாதிரி நான் நீயா இந்தியா போறேன். போய் தன்வியை கன்வின்ஸ் பண்ணி, அவளுக்குப் புடிச்ச மாதிரி ஒரு பையனைப் பார்த்து மேரேஜ் முடிச்சிட்டு தான் நான் திரும்ப இந்த வீட்ல அடியெடுத்து வைப்பேன். இட்ஸ் ஏ சேலஞ்" என்றவன் அவனை அறியாமலேயே ஆதர்ஷனின் வலையில் சிக்கியவன், இந்தியா சென்று தன்வியிடம் காதலை உணர்ந்து அவளைத் தன் காதல் வலையில் வீழ்த்தக் கிளம்பி விட்டான் தன் தாயகம் நோக்கி.