விழி இறுதி அத்தியாயம்

 

விழி 34



தன் கணவனின் அதிர்ந்த முகத்தைப் பார்த்துச் சிரித்த தன்வி, "நான் அடிப்பாவின்னா? நீங்க ரெண்டு பேர் மட்டும் என்னவாம்? கூட்டுக் களவாணிங்க தானே? ம்க்கும்" என்று முறுக்கிக் கொள்ள, அவள் கையைப் பிடித்து இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டவன்,


"சரி சரி, ரொம்ப டேமேஜ் பண்ணாத… அவர் ஃபேமிலி டோட்டலி டேமேஜ்" என்றவன், “நீ தர்ஷினி கதையை மேல சொல்லு…" என்றான்.


"மேல சொல்ல என்ன இருக்கு? தர்ஷினி அங்க வேலைக்குச் சேர்ந்த நாள்ல இருந்து ஆதுவை சைட் அடிச்சிட்டுதான் இருந்தாங்க… நாளாக நாளாக ஆதுவோட அழகைத் தாண்டி அவரோட நல்ல குணம், பொறுப்பு, என்கிட்ட அவர் அன்பா நடந்துக்குற விதம்னு எல்லாத்தையும் பார்த்து லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க… அதை அவங்க என்கிட்டயும் சொன்னாங்க‌… எனக்கும் அவங்களை ரொம்பப் புடிக்கும் தஷ். ரொம்ப நல்ல பொண்ணு, அப்படியே நம்ம அமிர்தா அம்மா மாதிரி தான். ஆனால் என்ன செய்ய? இந்த ஆதுக்குதான் கொடுத்து வைக்கல… அவங்க அவரைப் பார்க்கும் விதத்தை வச்சே அவங்க இவரை லவ் பண்றாங்கன்னு புரிஞ்சுகிட்டு, அவங்களை பெங்களூர் பிரான்ஞ்சுக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாரு…" என்றாள் சோகமாக.


"ஹூம்… அப்ப ஆலன், தர்ஷன் லைஃப்ல இருந்தான். சோ, தர்ஷினி இவனை நினைச்சிட்டு இருக்க வேணாம்னு அவங்களை வேலையில் இருந்து மாத்திட்டான் போல..‌." என்றான் அதீஷன்.


"மே பீ… மே பீ நாட்" என்றாள் தன்வி.


"புரியலடி?"


"மை டியர் மக்குப் புருஷா… அவங்களை ஒதுக்கி வைக்க நினைச்சிருந்தால் அவங்களை வேலையை விட்டுத் தூக்கி இருக்கலாமே..‌. ஏன் அவங்களுக்கு பிரமோஷன் கொடுத்து, பெங்களூர்ல ஒரு ஃபிளாட்டும் கொடுத்து, அவங்களுக்கான எல்லா பாதுகாப்பையும் செஞ்சு வைக்கணும்?" என்று கேட்டாள் தன்வி.


"ம்ம்ம் பாய்ண்ட்… நீ சொல்றதும் சரிதான்" என்ற அதீஷன், "ஒருவேளை, நீ சொன்னியே… அவங்க பார்க்க எங்க அம்மா மாதிரி இருப்பாங்கன்னு… பய அதுல விழுந்திருப்பானோ?" என்றான்.


"எக்ஸாக்ட்லி.‌‌.. ஆதுக்கு அவங்க அம்மா மேல உயிரு… தர்ஷினியும் பார்க்க மட்டும் இல்ல குணமும், பழகும் விதமும் கூட அப்படியே நம்ம அம்மா மாதிரி தான்‌. எவ்ளோக்கு எவ்ளோ டவுன் டூ எர்த் பெர்சனோ, அதே அளவுக்கு செல்ஃப் ரெஸ்பெக்ட் உள்ள ஆளு… அதான் ஆது அவங்களை அவாய்ட் பண்றாருன்னு தெரிஞ்ச பிறகு, கொஞ்ச நாள் பெங்களூர்ல வேலை பார்த்தவங்க, அங்க இருந்து அவருக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு வேலையை விட்டுப் போயிட்டாங்க..‌. இப்ப நம்ம கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு எனக்கு வாழ்த்துச் சொல்லி மெயிலும், ஒரு அழகான குங்குமச்சிமிழும் அனுப்பி இருந்தாங்க. அப்பதான் அவங்க லண்டன்ல இருக்கற மேட்டரே எனக்குத் தெரிஞ்சது" என்று நடந்த அனைத்தையும் சொல்லி முடித்திருந்தாள்.


"ம்ம்ம், சும்மா சொல்லக் கூடாதுடி… செம்ம கேரக்டர் அவங்க… அதோட இவனையும் சும்மா சொல்லக் கூடாது, அவங்க சொல்லாமலே அவங்க மனசை இவரு எவ்ளோ நல்லாப் புரிஞ்சி வச்சிருக்காருன்னு பாருடி… இவனுக்கு அவங்கதான் சரியான ஜோடி. நான் முடிவு பண்ணிட்டேன் இவங்கதான் எனக்கு அண்ணியா வேணும். நீ எனக்குக் கிடைச்சு நான் சந்தோஷமா இருக்கற மாதிரி, தர்ஷனும் அவங்களைக் கல்யாணம் பண்ணிட்டு ஹாப்பியா இருக்கணும்." என்று மனதில் இருந்து சொல்ல, அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டவள், 


"என்னோட ஆசையும் அதுதான் தஷ். தாத்தா, ஆது கல்யாணத்தைப் பத்திப் பேசும்போது எனக்கு முதல்ல நினைவுக்கு வந்தது தர்ஷினி தான். ஆனா என்னென்னமோ நடந்து போயிடுச்சு… இனியாவது ஆது வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் இதெல்லாம் பண்றேன்." 


"எனக்குப் புரியுதுடி… எனக்கும் அவன் வாழ்க்கையில் அடுத்த ஸ்டேஜ்க்குப் போகணும்னு ஆசை இல்லாமல் இருக்குமா என்ன? இந்த விஷயத்தில் என்னோட முழு சப்போர்ட்டும் உனக்குதான். நீ அவன் கை, காலைக் கட்டி இழுத்துட்டு வந்து தர்ஷினி கழுத்துல தாலி கட்ட வைன்னு ஒரு வார்த்தை சொல்லு. அவனை அப்படியே தூக்கித் தோள்ல போட்டு வந்திடுவேன்" என்றவன் கன்னத்தைப் பிடித்து ஆட்டி, "என் செல்ல தஷ்…" என்று கொஞ்ச, அவனோ அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்து வைத்தான்.


"ஹலோ… என்ன? பார்வை எல்லாம் ஒரு தினுசா மாறுது!" என்று முறைக்க அவளை ரசனையாகப் பார்த்தவன், "முன்னையும் நீ அழகுதான். ஆனால் என்னமோ தெரியல, நீ பிரெக்னன்ட் ஆனதில் இருந்து இன்னும் அழகாய் தெரியுறடி…" என்று சொல்ல தன்விக்குக் கன்னங்கள் சிவந்து விட்டது.


"ம்ம்ம்… போதும் போதும், பொண்டாட்டிய சைட் அடிச்சது. நாளைக்கு தர்ஷினியை மீட் பண்ணிப் பேசப் போறேன். நீங்களும் கூட வாங்க. ஆனா, வீட்ல இருந்து நம்ம ரெண்டு பேரும் ஒண்ணாப் போக வேணாம். நான் முதல்ல அம்மா கூடப் போயிடுறேன். நீங்க கொஞ்ச நேரம் கழிச்சு வாங்க… அப்பதான் நான் உங்க மேல இன்னும் கோவமாதான் இருக்கேன்னு ஆது நம்புவாரு" என்று சொல்ல அவனோ, "ம்ம்ம், ரொம்ப வெவரம் தான்" என்றவன், "ஏய் ஏய் இரு… என்ன சொன்ன? அம்மாகூடப் போறியா? அப்ப அவங்களும்…" என்று அவன் இழுக்க விஷமமாகச் சிரித்த தன்வி,


"எனக்கும் துணைக்கு ஆள் வேணும் இல்ல..‌. உங்க பையனுக்கு உங்களை மாதிரியே சூப்பர் பொண்ணு பார்த்துருக்கேன்னு சொன்னேன். உடனே என் கட்சில சேர்ந்துட்டாங்க" என்று சொல்லிக் கண்ணடிக்க, அதீஷன் மீண்டும் அதிர்ச்சியில் விழி விரித்து நின்றான். 


மறுநாள் காலையில் தன்வி சொன்னது போல் அவளும் அமிர்தாவும் வெளியே சென்றுவிட, அவர் சென்ற கொஞ்ச நேரம் கழித்து அதீஷனும் தன்வி சொன்ன இடத்திற்கு வந்திருந்தான்.


இனி அமெரிக்காவில் தான் இருக்க வேண்டும் என்பதால், ஆதர்ஷன் இங்கிருந்தபடியே இந்தியாவில் இருக்கும் வேலைகளைப் பார்த்துக் கொண்டே, இங்கிருக்கும் அதீஷனின் தொழில் நிறுவனத்தைத் தலைமை இடமாக்கி அவனது இந்திய நிறுவனங்களை இதனுடன் இணைத்துவிட்டு, தேவை ஏற்படும் போது மட்டும் இந்தியா செல்லத் திட்டமிட்டு அதற்கான பணிகளையும் செய்து கொண்டிருந்தான். 


அதீஷன், தன்வி சொல்லியிருந்த காபி ஷாப்பில் நுழைய, அங்கு அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர் தன்வியும் அமிர்தாவும்.


"என்ன தன்வி, அவங்க இன்னும் வரலியா?" என்று கேட்டபடியே அமிர்தா அருகில் அமர்ந்தான் அதீஷன். 


"ஆன் தீ வேன்னு, இப்பதான் மெசேஜ் வந்தது" என்றவள் வாசலைப் பார்க்க அங்கு தர்ஷினி வருவது தெரிந்தது.


"இதோ வந்துட்டாங்க" என்று எழுந்து நின்ற தன்வி, "ஹாய் வினிக்கா" என்றபடி அவளை நோக்கிச் செல்ல, "தன்வி" என்று முகம் முழுவதும் புன்னகையோடு ஓடிவந்த தர்ஷினி, சின்னவளை அன்பாக அணைத்துக் கொண்டாள்.


"எத்தனை வரும் ஆகிடுச்சு தன்வி உன்னைப் பார்த்து? அப்பவிடப் பார்க்க இப்ப ரொம்ப அழகாய் மாறிட்ட" என்று அவள் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ள தன்வி வெட்கத்தில் மின்னிய விழிகளைச் சிமிட்டி, "ம்ம்ம்… என் புருஷன் கூட இதையே தான் சொன்னாரு… என்னோட பியூட்டி சீக்ரெட் என்னோட வயித்துல வளர்ந்துட்டு இருக்கு" என்று வெட்கத்தோடு சொன்னாள்.


அவள் சொன்னதைக் கேட்டு, 

அதிர்ந்த தர்ஷினி தன்வியை ஒரு வினாடி நேரம் ஆழ்ந்து பார்த்தவள் சட்டென்று தன் முகபாவனையை மாற்றிக் கொண்டு, மீண்டும் அவளை அணைத்து நெற்றில் முத்தமிட, "எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தன்வி… ஐ ஆம் சோ ஹாப்பி பார் யூ, நீயும் பாப்பாவும் எப்பவும் ஹாப்பியா, சேஃபா இருக்கணும்னு நான் கடவுள்கிட்ட வேண்டிக்குறேன்" என்று உள்ளத்தில் இருந்து சொல்ல, நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அமிர்தாவுக்கு தர்ஷினியை மிகவும் பிடித்து விட்டது. தன் மகனுக்கு ஏற்ற பெண் இவள்தான் என்று முடிவே செய்து விட்டார் அவர்.


"வாங்கக்கா" என்று தர்ஷினியை அழைத்துச் சென்றவள், வேறு டேபிளில் அமர்ந்து கொண்டு தன் அருகில் அவளை அமர்த்திக் கொண்டாள்.


"எப்படி இருக்கீங்க க்கா?" என்று கேட்டாள் சின்னவள்.


"ம்ம்ம் நல்லா இருக்கேன் தன்வி, நீ எப்படி இருக்க? மேரேஜ் லைஃப் எல்லாம் எப்படிப் போகுது? உங்க… சாரி சாரி, நம்ம பாஸ் எப்படி இருக்காரு?" என்றாள்‌ இயல்பான தோரணையில்.


"ம்ம்ம் நல்லா இருக்கோம்" என்றவளை யோசனையாகப் பார்த்த தர்ஷினி, "வாட் ஹேப்பன்ட் தன்வி, உனக்கு என்கிட்ட ஏதாவது சொல்லனுமா?" என்று கேட்டாள்.


"ம்ம்ம்" என்று தலையாட்டிய தன்வி, ஒரு விஷயம் சொல்லணும். ஒரு விஷயம் கேக்கணும்" என்றாள் ஒரு எதிர்பார்ப்போடு.


"என்ன பீடிகை எல்லாம் ரொம்ப பலமா இருக்கு" என்றவள், "ம்ம்ம் என்ன சொல்லணும்? என்ன கேக்கணும்?" என்றாள் தர்ஷினி.


தன்வி உடனே தன் டேபிளுக்கு அருகில் இருந்த டேபிளில் அமர்ந்திருந்த அதீஷன், அமிர்தாவை அழைத்தவள்,


அதீஷனைக் காட்டி, 


"இது என்னோட ஹஸ்பெண்ட், இது என்னோட அமிர்தா அம்மா" என்று சொல்ல அதீஷனைப் பார்த்த தர்ஷினி, அவனை ஆதர்ஷன் என்று நினைத்து ஒரு நிமிடம் தடுமாறியவள் தன்னைச் சமாளித்துக் கொண்டு, "ஹாய் ஆதர்ஷ் சார்" என்று சொல்ல, "ஹாய் தர்ஷினி" என்று அவள் முன் தன் வலது கையை நீட்டினான் அதீஷன். 


நீட்டிய அவன் கையைப் புருவம் சுருக்கிப் பார்த்தவள், நிமிர்ந்து அவன் கண்களை ஒரு நிமிட நேரம் ஆழ்ந்து பார்த்துவிட்டு அடுத்த நொடி, "நோ நீங்க ஆதர்ஷ் சார் இல்ல…" என்று சொல்ல, மூன்று பேரும் இன்பமாக அதிர்ந்தனர்.


"எப்…எப்படிக்கா கண்டு புடிச்சிங்க?" என்று தன்வி வியப்பாகக் கேட்க, தன்வியைத் திரும்பிப் பார்த்தவள், "உனக்குத் தெரியாதா? நம்ம பாஸ் லேடிஸ்கிட்ட ஹேண்ட் ஷேக் பண்ண மாட்டாரு… அதோட இந்தக் கண்ணு…" என்றவள் இல்லை என்பது போல் தலையை ஆட்டி, “இது ஆதர்ஷ் சார் கண்ணு இல்ல" என்றாள் உறுதியாக.


"சரி அதை விடு… இவரு யாரு? இவரு தர்ஷன் சார் இல்ல, ஆனால், இவரு உன் புருஷன்… அப்ப தர்ஷன் சார்?" என்று கேட்டாள் என்ன நடந்தது என்று தெரியாமல்.


"இவன் ஆதர்ஷனோட டுவின் ப்ரதர் அதீஷன்… நான் ஆதர்ஷன், அதீஷனோட அம்மா அமிர்தா" என்று சொல்ல, அதைக் கேட்டவளுக்கு அடுத்து என்ன பேசுவதென்று புரியாமல் அமிர்தாவைப் பார்த்து மென்மையாகச் சிரித்தவள், "வணக்கம் மா" என்று சொல்ல, அவளது திகைத்த முகத்தைப் பார்த்த அமிர்தா, "முதல்ல உக்காருமா… பேசலாம்" என்றாள்‌ அன்பாக.


அவர் பேச்சைக் கேட்டு அமர்ந்த தர்ஷினி, "என்னாச்சு தன்வி? உனக்கும் சாருக்கும் தானே கல்யாணம்னு சொன்ன? இது எப்படி நடந்துச்சு?" என்று கலங்கிய குரலில் கேட்டாள் ஆதர்ஷனுக்கு இதனால் எதாவது மனவேதனை வந்திருக்குமோ என்ற எண்ணத்தில். 


நடந்தவற்றை எல்லாம் சுருக்கமாகச் சொல்லி முடித்தாள் தன்வி."


நடந்ததைக் கேட்டு தர்ஷினி அதிர்ச்சி அடைவாள் என்று மூவரும் எதிர்பார்க்க அவளோ, "அவர் நிலைமை தெரிஞ்சு, எப்படி அவருக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மனசு வரும் தன்வி… நீ அவரு வளர்த்த பொண்ணாச்சே… உன் வாழ்க்கையை வீணாக்க அவர் எப்படி விடுவாரு? நீ உன் மேரேஜ் பத்திச் சொல்லும் போதே, எப்படி ஆதர்ஷ் சார் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாருன்னு எனக்குத் தோணிட்டே இருந்துச்சு… அப்புறம்தான், கண்டிப்பா இந்தக் கல்யாணத்துக்கு அவரைப்பத்தித் தெரிஞ்ச பிறகு, நீ பிடிவாதம் பிடிச்சு தான் அவரைச் சம்மதிக்க வச்சிருக்கணும்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனால், லாஸ்ட்ல அவர் ஆசைப்படி எல்லாம் நல்லபடியா நடந்திருக்கு" என்று சொல்ல இப்போது அதிர்ந்து விழிப்பது மூவரின் முறையானது.


"என்… என்ன சொல்றம்மா நீ! அப்ப உனக்கு தர்ஷன் பத்தி முன்னையே தெரியுமா?" என்று நம்ப முடியாமல் கேட்டார் அமிர்தா.


தர்ஷினி தலை குனிந்தபடியே, "ம்ம்ம்… தெரியும்மா" என்றாள் தாழ்ந்த குரலில்.


"எப்படிக்கா தெரியும்?" என்று கேட்டாள் தன்வி.


"நான் பெங்களூரில் வேலை செய்யும் சமயம், ஆதர்ஷ் சார் என்கிட்டப் பேசணும்னு சொன்னாரு. அவருக்கு நான் அவரை லவ் பண்றேன்னு தெரிஞ்சிருக்கும் போல… அவருக்கு என்மேல அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லைன்னு சொன்னவர், அப்பதான் ஆலன் பத்திச் சொன்னாரு" என்றவள் குரலே சொன்னது அவளின் உள்ளத்தின் வலியை.


"வேற எதாவது காரணம் சொல்லி இருந்தால்கூட நான் அவரை மறந்து போயிருப்பேனோ என்னமோ? அவரு, நீ என்னை விரும்புறேன்னு எனக்குத் தெரியும். என்னைப் பாத்துட்டே இருந்தால் உன்னோட நினைப்பு இன்னும் ஆழமாகிட்டே போகும், அப்புறம் என்னைப்பத்திய உண்மை தெரிஞ்ச உனக்கு ரொம்ப வலிக்கும்னு தான், உன்னை இங்க டிரான்ஸ்ஃபர் பண்ணேன். பட் இங்க வந்தும் நீ கொஞ்சம் கூட மாறினதாய் எனக்குத் தெரியல. நான் இங்க வரும் போதெல்லாம் நீ என்னைப் பார்க்கும் பார்வையே சொல்லுது, உன்னோட மனசு துளிக் கூட மாறலன்னு… அதனால்தான் இன்னைக்கு உன்கிட்ட என்னைப்பத்திச் சொல்லி இதுக்கு ஒரு முடிவுகட்ட நினைச்சு உன்னை வரச் சொன்னேன். இனியாவது என்னை மறந்துட்டு உன் மனசுக்குப் புடிச்ச பையனைப் பார்த்து மேரேஜ் பண்ணிட்டு ஹாப்பியா இருன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு" என்று விரக்தியாகச் சிரித்தவள்,


"அவரு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி இருந்தால்கூட அவருக்காக அவர் சொன்ன வார்த்தைக்காக நான் யாரையாவது கல்யாணம் பண்ணி இருப்பேன். ஆனால், மனசுக்குப் புடிச்சவனைக் கல்யாணம் பண்ணுன்னு சொல்லிட்டாரே… நான் எப்படி அவர்கிட்டச் சொல்லுவேன், இந்த ஜென்மத்தில் உங்களைத் தவிர வேற யாரையும் என் மனசு விரும்பாதுன்னு" என்றவளுக்குக் கண்கள் கலங்கிவிட டிஸ்யூ எடுத்துக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.


அவளின் காதலை நினைத்து மூவருக்குமே பிரம்மிப்பாக இருந்தது. 


தன்வி, ஆதர்ஷனைத் திருமணம் செய்ய நினைத்ததுகூட அவனுக்காவும், அவள் வளர்ந்த குடும்பத்திற்கு எந்தவித அவமானமும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்திலும் தான். அவளுக்கு அந்த கடமை இருந்தது. ஆனால், தர்ஷினி… அவள் காதலை நினைக்கவே மூவருக்கும் வியப்பாக இருந்தது.


ஆதர்ஷன் பற்றி விவரங்களை அவன் மூலமே கேட்டறிந்த பிறகும் கூட, துளியும் அவன் மேலிருக்கும் காதல் குறையாமல் இன்று வரை எப்படி இவளால் ஒரு தவ வாழ்க்கையை வாழ முடிகிறது… அழகு, படிப்பு, பணம் என்று அனைத்தும் இருந்தும் அவளைச் சுற்றி அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆயிரம் பேர் தவமிருந்தும் தன்னவனின் மேல் கொண்ட ஒருதலைக் காதலுக்காகக் காலம் முழுமைக்கும் கன்னியாக, கண்ணனுக்காகக் காத்திருக்கும் மீராவைப்போல் எப்படி இவளால் இருக்க முடிகிறது? இதுதான் காதலா? இல்லை, இதுதான் காதல்… அவனுக்கும் சேர்த்து அவளே காதலிக்கிறாள். போதும் அவள் ஆயுள் முழுமைக்கும் அவன் நினைவுகள் மட்டுமே தனக்குப் போதும் என்று… 


இவளின் காதல் அவள் கை சேருமா?


ஆதர்ஷனின் தர்ஷினி ஆவாளா இவள்?


இவர்கள் இருவரின் காதல் போராட்டத்தை, 'இணை சேருமோ இதயம்’ என்ற கதையில் பார்ப்போம்…



-------------------------சுபம்--------------------------