கன்னத்தில் காதல் முத்தம் 29
காதல் 29
ஆராத்யா அழுதழுது மயக்க நிலைக்கே சென்றிருந்தாள். பாவம் அவளும் ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சிகளை தான் தாங்குவாள்?
ஷிவானி சோஃபாவில் மயங்கி இருந்த ஆராவை தூக்கிக்கொண்டு போய் அறையில் படுக்க வைக்க சொல்ல, அக்னிக்கு அவளைத் தொடவே கைகள் நடுங்கியது.
"என்னாச்சு அக்னி?" என்று கேட்ட ஷிவானியை அடிபட்ட பார்வை பார்த்தவன், "பயமா இருக்கு ஷிவானி. நான் தொட்டேன்னு சாகப்போனா இவ… இப்ப தூக்குறதுக்காக நான் அவளைத் தொட்டா மறுபடியும் ஏதாவது…" என்று சொல்லும்போதே அக்னிக்கு குரல் கமுறி விட்டது.
"ப்ச்… அதெல்லாம் ஒன்னும் ஆகாது அக்னி. அவ அடிக்கடி சொல்வா, என்னை பொருத்தவரை யாரை நான் கல்யாணம் பண்றேனோ, அவனைத் தான் சாகும்வரை காதலிப்பேன்னு. அவ ஆதிய லவ் பண்ணாம இருந்தாலும் அவனுக்கும் தனக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சு, இனி ஆதிதான் தன்னோட வாழ்க்கைனு நினச்சா, அப்டி இருக்க அவளால உங்களை காதலிச்சதை ஏத்துக்க முடியல அக்னி. அதை அவ ஆதிக்கு பண்ற துரோகம்னு நெனச்சிதான் தற்கொலை பண்ற அளவுக்கு போய்ட்டா… இப்ப தான் எல்லா உண்மைகளையும் தெரிஞ்சிருச்சு இல்ல, இனிமே சரியாகிடுவா… நீங்க அவளை தூக்கிட்டு போய் படுக்க வைங்க" என்று ஷிவானியின் வார்த்தையில் சற்று சமாதானம் ஆனவன், அவளை மெல்ல கைகளில் ஏந்தியபடி அவள் அறைக்கு சென்று படுக்கவைத்து விட்டு ஒரு நிமிடம் அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.
"இப்ப உன் உள்மனசுல என்ன ஓடிட்டு இருக்குன்னு எனக்கு நல்லா புரியுது தியா…" என்று இழுத்து மூச்சு விட்டவன், "நீ நினைக்குறது நாளைக்கு நடக்கும்." என்றபடி அந்த அறையை விட்டு வெளியேறினான்.
மறுநாள் காலை வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆரா, மெல்ல கண்விழிக்க, அவளுக்கு எதிரில் இருந்த சோஃபாவில் உடம்பை சுருக்கி அவளைப் பார்த்த படியே படுத்து தூங்கி இருந்த அக்னி தெரிந்தான்.
மெல்ல எழுந்து வந்து உறங்கும் அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தவள், கண்களில் அழையா விருந்தாளியாக கண்ணீர் வந்துவிட, கண்களை இறுக்க மூடி, தன் உணர்வுகளை கட்டுப்படுத்தியவள், குளியல் அறைக்குள் சென்றாள். அவள் கதவை மூடும் ஓசையில் கண்விழித்த அக்னி, கட்டிலைப் பார்க்க அது வெறுமையாக இருந்தது.
திரும்பி குளியலறையை பார்த்த அக்னி மெல்ல கண்களை மூடி ஒருநிமிடம் ஆழ்ந்து மூச்செடுத்தவன், அங்கிருந்து வெளியே வர அங்கு ஷிவானியும் கௌதமும் ஏற்கனவே தயாராகி நின்றிருந்தனர். அக்னி அவர்களைப் பார்த்து தலையாட்டிவிட்டு, வேறு அறைக்கு சென்று குளித்து முடித்து தயாராகி வரவும், ஆராவும் முழுதாக தயாராகி வரவும் சரியாக இருந்தது.
மெல்ல அக்னி அருகில் வந்த ஆரா, "நான் ஒன்னு கேப்பேன் செய்வியா தேவ்?" என்று கேட்க, அவளைப் பார்த்து மென்மையாக சிரித்தவன், "எல்லாம் ரெடி தியா… சென்னைக்கு கிளம்பலாம்." என்றவனை அவள் விழிவிரிய பார்க்க, "நான் முதல்ல உன் ஃப்ரண்ட் தியா அப்றம் தான் உனக்கு புருஷன். நீ சொல்லித்தான் எனக்கு உன் மனசும், எண்ணமும் தெரியனும்னு அவசியம் இல்லடி. எனக்குத் தெரியும், நீ இப்ப என்ன கேக்கப் போறன்னு… அதான் நேத்து நைட்டே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். கிளம்பு உங்க வீட்டுக்கு போலாம்" என்றவனை பார்த்து அவளுக்கு அழுவதா சிரிப்பதா என்று ஒன்றும் புரியவில்லை.
இப்படி தன் மனதை புரிந்தது, அவள் கேட்கும் முன் அனைத்தையும் செய்பவனை, இத்தனை நாள் வார்த்தையால் வதைத்தை நினைத்தவளுக்கு நெஞ்சமெல்லாம் வலித்தது.
அவள் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்து அவள் கன்னத்தில் கைவைக்க போன அக்னிக்கு நேற்றைய நிகழ்வு நினைவுக்கு வர, கையை கீழே இறக்கியவன், "எத பத்தியும் யோசிக்காத தியா… இங்க உனக்கு பிடிக்காத எதுவும் நடக்காது. நடக்கவும் நான் விடமாட்டேன். தைரியமா உனக்கு தோன்றதை செய்யலாம். இப்ப கிளம்பு." என்றவன் முன்னே செல்ல, ஷிவானி, கௌதமுடன் ஆராவும் சென்றாள்.
விமானத்தில் கூட அக்னி, ஆரா அருகில் அமராமல் ஷிவானியை அவள் அருகில் இருக்க வைத்தவன் கௌதமுடன் அமர்ந்து கொண்டான்.
அடுத்த என்ன நடக்கும்? ஆரா என்ன செய்யப்போகிறாள்? என்று ஷிவானிக்கு புரியவில்லை. அவளிடம் கேட்கலாம் என்றால், அவளாக சொல்லும் வரை அவளிடம் எதையும் கேட்டு அவளை கஷ்டப்படுத்த கூடாது என்று அக்னி உறுதியாக சொல்லிவிட, ஷிவானியும் நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக வந்தவருக்கு இப்போது ஆதியின் நினைவுதான் வந்தது.
கடவுளே எல்லாம் நல்லபடி நடக்கணும் சாமி… ஆதி, ஆரா ரெண்டு பேரும் எனக்கு முக்கியம் தான். நான் அவங்ககூட இருக்க முடியாம போனாலும். அவங்க ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும் அதுதான் என் வேண்டுதல்.
அதோட இனிமே இந்த அறிவுகெட்ட காதல் இந்த உலகத்தில் யாருக்கும் வரவே கூடாது சாமி. எல்லாரும் அம்மா, அப்பா பார்க்குற வரனையே ஒழுங்க கல்யாணம் செய்துக்கணும். அதையும் செஞ்சிடு சாமி" என்று அவள் ஆகாயத்தில் இருந்தபடி ஆண்டவனிடம் வேண்டுதலை வைத்தாள்.
கடவுளோ… இதெல்லாம் நடக்குற காரியமா? உன்கிட்டயே ஒருத்தன் லவ்ல மாட்டப்போறான், இதுல இப்படி ஒரு வேண்டுதல் வேற உனக்கு? என்று அவளின் இரண்டாவது வேண்டுதலை தள்ளுபடி செய்துவிட்டார் கடவுள்.
விமானம் சென்னையில் இறங்கும் நேரம் அவர்களை அழைத்துச் செல்ல கார் தயாராக நின்றது.
காரில் வரும்போது கூட ஆரா எதுவும் பேசவில்லை. அமைதியாக கண்களை மூடியபடி இருந்தாள். அவளைப் பார்த்து ஷிவானிக்கு தான் இரத்த அழுத்தம் ஏறியது. அதுவும் ஆதியின் வீடு நெருங்க நெருங்க ஷிவானிக்கு வாயிற்றில் ஏதோ ஒன்று அங்கும் இங்கும் ஓடுவது போல் இருக்க, "கடவுளே நீதான் துணை" என்று வேண்டியபடி இருக்க, அந்த கார் ஆதி வீட்டின் முன்னால் நின்றது.
அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்டு கதவை திறந்த பல்லவி, அங்கு ஆராத்யாவை பார்த்து அதிர்ந்து நின்றார்.
"ஆரு… ஆரு நீ… நீ வந்துட்டியா? நீ நிஜமா என் கண்ணு முன்ன நிக்குறியா?" என்று அவளைத் தொட்டு தொட்டு பார்க்க, ஆரா முகம் எந்த உணர்ச்சியும் இல்லாமல் வெறுமையாக இருந்தது.
"ஆதி… ஆதி இங்கவாடா… நம்ம ஆரு வந்துட்ட… இங்க வந்து பாருடா" என்று கத்திய பல்லவியின் குரலில் ஆரு என்ற வார்த்தையை கேட்டதும் உடல்விட்டு சென்ற உயிர் மீண்டும் உடலில் நுழைந்தது போல் அடித்துப் பிடித்து ஓடிவந்தான் ஆதி.
"ஆரா… ஆரா" என்று தழுதழுத்தபடி அவள் அருகில் வந்து, அவள் முகத்தையே பார்த்தபடி சில நிமிடங்கள் நின்றவன், "நீ...நீ எங்க போன ஆரா? என்னை விட்டு எங்க போன நீ? நான் உன்னை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா உனக்கு? இந்த ஊர்ல இருக்கு ஒவ்வொரு தெருவிலும் உன்னைத் தேடி தேடி திரிஞ்சேன் ஆரா… உனக்கு என்ன ஆச்சு ஆரா? நீ எங்க போன? போலீஸ் உன்னை யாரும் கடத்தி இருப்பாங்கன்னு சொன்னாங்க ஆரா... அதைகேட்டு எனக்கு உயிரே போய்டுச்சு தெரியுமா? என் சொத்து மொத்தத்தையும் கூட தரேன் என் ஆராவை எப்டியாது தேடித்தாங்கன்னு அந்த போலீஸ்காரங்க கால்லகூட விழுந்தேன் ஆரா. ஆனா, உன்னைப்பத்தி எந்த தகவலும் தெரியல." என்று ஆதங்கமாக சொன்னவன், அவன் முன் அவள் இருப்பது கனவா நிஜமா என்று தெரிந்துகொள்ள, அவளைத் தொட கையை உயர்த்த, தொடாதே என்பது போல் அவன் முன் கையைக் காட்டிய ஆரா ஓரடி பின்னால் சென்றாள்.
அவள் செயலில் அவளை விசித்திரமாக பார்த்த ஆதி, அதுவரை ஆரா வந்த சந்தோஷத்தில் அவள் பின்னால் இருந்த ஷிவானி, மற்றும் தேவ்வை கண்டுகொள்ளாமல் இருந்தனர், இப்போது தான் ஆதி, பல்லவியின் பார்வையில் தெரிந்தனர் அவர்கள் இருவரும்.
"ஷிவானி நீ… நீ ஆரா கூட எப்டி? நீதான் இவளை காப்பத்தி கூட்டி வந்தியா? இவரு யாரு?" என்று தேவ்வைப் பார்த்து கேட்க, ஷிவானி ஆதியை அழுத்தமாக ஒரு பார்வைப் பார்த்தவள், "இது அக்னிதேவ்" என்றவள், ஆரா அருகில் வந்து அவள் ஆடைக்குள் இருந்த தாலியை வெளியே எடுத்து போட்டுவிட்டு, இதை ஆரா கழுத்தில் கட்டியவர், ஆராவோட புருஷன்… தேவ்" என்று அழுத்தமாகச் சொல்ல, ஆதிக்கு தலையில் இடி இறங்கிய உணர்வு, 'தேவ்… தேவ்… அப்ப இவன் அந்த ஆக்சிடென்ட்ல சாகலியா?' என்று நினைத்தவன் சட்டென ஆராவை திரும்பி பார்க்க, அவள் முகத்தில் அத்தனை இறுக்கம்.
'அப்ப எல்லா உண்மையும் ஆராக்கு தெரிஞ்சிடுச்சா?' என்று நினைத்தவனுக்கு, அவளை நேருக்கு நேர் பார்க்கவே உள்ளம் கூசியது. அந்த நொடியே 'தன் உயிர் போய்விடாத?' என்று மறுகியவன் முன் வந்து நின்றாள் ஆராத்யா.
"இன்னும் அந்த ஒன்றரை வருஷம் எனக்கு என்ன ஆச்சுன்னு ஞாபகம் வர்ல…" என்றவள் ஆதியை கூர்மையாக பார்த்து, "நான் ஒரே ஒரு கேள்வி தான் கேக்கப்போறேன். அதுக்கு உங்ககிட்ட இருந்து உண்மை எதிர்பார்க்குறேன்" என்றவள் திரும்பி அக்னியைப் பார்த்து தன் ஆள்காட்டி விரலை அவனை நோக்கி நீட்டியவள், "இவரு யார் எனக்கு?" என்றவள் திரும்பி ஆதியைப் அழுத்தமாக பார்த்து, "நீங்க யார் எனக்கு?" என்று கேட்டவள் முன் நிற்கவே ஆதிக்கு உடலெல்லாம் நடுங்கியது. அப்படியே பூமிக்குள் புதைந்துவிட மாட்டோமா? என்றிருந்தது அவனுக்கு.
அவள் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவன் தலைகுனிந்தபடி அமைதியாக நிற்க, ஆரா முகத்தில் விரக்தி புன்னகை.
"என் கேள்விக்கு எனக்கு பதில் கிடைச்சிருச்சு" என்றவள் திரும்பி அக்னியைப் பார்க்க, அவன் முகம் நிர்மலமாக இருந்தது.
மெல்ல அவன் அருகில் சென்று அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தவள் மெல்லிய குரலில், "அவரை என் புருஷன்னு நினைச்சுட்டு இருந்தேன். அப்டி இருக்க அடுத்தவன் மேல எப்டி எனக்கு காதல் வரலாம்னு ஒவ்வொரு நொடியும் என்னை நானே வெறுத்துட்டு இருந்தேன். அதான் நேத்து அப்டி நடந்ததை தாங்கிக்க முடியாம சாகப்போனேன்..." என்றவள் அழுத்தமாக கண்களை மூடித்திறந்து தன்னை நிதானித்து, "சரியோ தப்போ… இந்த ஆறு மாசம் அவ… அவரை நான்…" என்றவள் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக்கொள்ள, "என்… என்னை உங்க… உங்க பொண்டாட்டியா ஏத்துப்பீங்களா?" என்று கண்ணீர் வடிய கேட்டவள் இதழ்களை தன் கரம் கொண்டு மூடிய அக்னி, இடவலமாக தலையை ஆட்டி,
"நீ அன்னைக்கு சொன்னது உனக்கு ஞாபகம் இல்லாமல் போகலாம் தியா. ஆனா, நான் இன்னும் அதை மறக்கல… உன்னோட கற்பு உன் உடம்புல இல்ல, உன் மனசுல தான் இருக்குன்னு சொன்ன. அது தான் உண்மையும் கூட. பொண்ணுங்க கற்பு அவங்க மனசுல இருக்கு, அவங்க ஒழுக்கத்தில் இருக்கு, அவங்க நேர்மையில் இருக்கு… அப்டி பாத்தா என் தியா மனசில் அப்பவும் இப்பவும் எப்பவும் உன் தேவ்க்கு மட்டும் தானே இடம். அப்டி பாத்த நீ சுத்தமானவ தியா…" என்றவன் மெல்ல அவள் தலையை வருடியபடி, "அப்றம் உன் உடம்பு?" என்று மென்மையாக சிரித்தவன்,
"உன் புத்தி என்னை மறக்கலாம் தியா. ஆனா, உன் உள்மனசு என்னை எப்பவும் மறக்காது. அது என்னைத் தவிர உன்கிட்ட யாரையும் நெருங்கவிடாது" என்றவன் பார்வை ஆதியைத் தொட, "தன்னிலை மறந்திருக்க ஒரு பொண்ணை தொட்டு களங்கப்படுத்தும் அளவு அவனும் தப்பானவன் இல்ல. அவன் காதல் உண்மையானது. அதை வச்சு சொல்றேன் கண்டிப்பா தப்பான எண்ணத்தோட அவன் விரல் நகம் கூட உன்மேல பட்டும் இருக்காது. உன்னோட காதல் அதுக்கு விட்டும் இருக்காது" என்றவனை, "தேவ்" என்று கதறியபடி அவள் அணைத்துக் கொள்ள, ஆதி ஒரு மிரட்சியோடு அக்னியைப் பார்த்தான்.
அக்னி இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் கண்டிப்பா ஆதியின் சாவு நிச்சயம். ஆதி அவனுக்கு செய்த பாவத்துக்கு குறைந்தபட்சம் அவன் எலும்புகள் உடையும் அளவு அடி, உதை, அசிங்கமான வார்த்தைகளை எதிர்பார்த்த ஆதியை, அக்னியின் வார்த்தைகள் கூனிக்குறுகி வைத்தது. இதற்கு அக்னி அவனை கொன்றிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றும் அளவு அக்னியின் செயல் அவனை முழுதாக வெட்டி வீழ்த்தி இருந்தது.
"எனக்கு இனி இவங்க வேணாம் தேவ், நம்ம போலாம். எனக்கு இங்க இருக்க வேணாம். நம்ம போலாம்" என்று தன்னை அணைத்துக் கொண்டிருந்த தன்னவளின் முதுகைத் தடவிக்கொடுத்து அவளை நிதானமாக்கியவன், அவளை அணைத்தபடியே வெளியே அழைத்துச் செல்ல,
இதுவரை அங்க நடந்ததைப் எல்லாம் பார்த்து உறைந்து நின்ற, பல்லவியின் அருகில் வரும்போது ஒரு நிமிடம் நிமிர்ந்து அவர் முகத்தை உற்றுப் பார்த்த ஆராவின் பார்வையே பல்லவியை கூனிக்குறுகி வைத்தது.
அவள் நாலு வார்த்தை கேட்டிருந்தால் கூட பரவாயில்லை. ஆனா, என் வாயால் திட்டு வாங்குவதற்கு கூட உனக்கு தகுதி இல்லை எனும் படி அவள் அமைதியாக சென்றது பல்லவி வதைத்தது.
அக்னியுடன் செல்லும் ஆரா முதுகையே பார்த்திருந்த ஆதி, "முடிஞ்சா என்னை மன்னிச்சிடு ஆரா" என்று தலைகுனிந்தபடி சொல்ல, அப்படியே நின்ற ஆரா அவனை திரும்பி பார்க்காமல், "என்னை பொருத்தவரை என் ஆதிமாமா செத்துபோய்டாரு. இங்க நிக்குறது மிஸ்டர். ஆதிஷ்வரன். அவரை எனக்கு யார்னு கூட தெரியாது. சோ இந்த மன்னிப்புக்கு எந்த அர்த்தமும், அவசியமும் இல்லை" என்றவள் வேகமாக சென்று காரில் ஏறிக்கொண்டாள்.
ஷிவானி, ஆதி அருகில் வந்தவள், "எனக்கு என் ப்ரண்ட்ஸ் பத்தி எல்லாம் தெரியும், நான் அவங்களை சரியா புரிஞ்சு வச்சிருக்கேன்னு திமிர இருந்தேன் ஈஸ்வர். பட் இப்போ…" என்று நிறுத்திவள், "இத நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கல ஈஸ்வர்… ஆரா இன்னொருத்தனை லவ் பண்றேன்னு சொல்லும் போது எனக்கு கடுங்கோவம் தான் வந்துச்சு… ஆனா, நீ செஞ்சதை நினைக்கும் போது" என்றவளுக்கு அதற்கு மேல் பேச பிடிக்காமல் அவளும் ஆராவுடன் சென்றுவிட்டாள்.