கன்னத்தில் காதல் முத்தம் Epilogue

  Epilogue


ஆரா, அக்னியுடன் வந்து தங்கள் வாழ்க்கையை தொடங்கி இத்தனை நாட்களில், "என்னால தான் ஆதிமாமா இப்டி ஆகிட்டாரு. என்னால தான் எல்லாம். மாமா ரொம்ப நல்லவர் தெரியுமா தேவ்? நான் தான் அவரை இப்டி மாத்திட்டேன்… எல்லாம் என்னால தான்…" என்று அடிக்கடி அவள் ஆதியை நினைத்து புலம்ப, அந்த கவலையே அவளை மன அழுத்தத்தில் கொண்டு விட்டது‌.




அந்த நேரத்தில் தேவ்வின் அருகாமையும், ஷிவானியின் அரவணைப்பு, கவுன்சிலிங், யோகா என்று அனைத்தும் தான் அவளை அந்த நோயில் இருந்து மீட்டது.




அதன் பின் ஆரா, அக்னி வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் சென்றாலும் ஆராவுக்கு உள்ளுக்குள் ஒரு நெருடல் இருந்துகொண்டே இருந்தது‌. அதற்காக அவள் ஆதியை மன்னிக்கவோ, அவனுடன் பேசவோ தயாராக இல்லை.




இப்டியே ஒரு‌ மாதம் செல்ல, அன்று காலை அழைப்பு மணி ஒசை கேட்டு கதவைத் திறந்த ஆரா, அங்கு கலங்கிய விழிகளுடன் நின்றிருந்த பல்லவியை தான் பார்த்தாள்.




ஏனோ அவளுக்கு அவள் மாமன் ஆதியை விட பல்லவி மேல்தான் அதிக கோவம் வந்தது. மகள் போல் வளர்த்த தனக்கு எப்படி இப்படி ஒரு துரோகத்தை செய்ய முடிந்தது இவரால்? என்ற கோவம். மகன் தவறான வழியில் செல்லும் போது அதைத் தடுக்காமல், பாசம் என்ற பெயரில் அவன் செய்த தவறுக்கு எல்லாம் துணையாக நின்ற பல்லவியை பார்க்க கூட அவளுக்கு பிடிக்கவில்லை.




அவரை உள்ளே அழைக்காமல் முகம் இறுகி நின்ற ஆரா பின்னால் வந்த அக்னி, "யாரு தியா வந்திருக்கா?" என்று கேட்டபடி எட்டிப்பார்த்தவன், அங்கு நின்றிந்த பல்லவியை பார்த்து முதலில் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றவன், பின், "வாங்க உள்ள வாங்க" என்று அழைத்ததும், ஆராவை பார்த்தபடியே உள்ளே சென்றார் பல்லவி.




"உக்காருங்க" என்ற அக்னி, "தியா அவங்களுக்கு குடிக்க எதாவது கொண்டுவா" என்றதும், "இல்… இல்லப்பா. எனக்கு ஒன்னும் வேணாம்." என்றவர் சில பத்திரங்களை எடுத்து அக்னியிடம் நீட்ட, அவன் யோசனையாக அவரைப் பார்த்து, "என்ன இதெல்லாம்?' என்று கேட்டான்.




"எங்க ஃபேமிலி பிசினஸ் சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட் இது." என்றவரை புரியாமல் பார்த்த அக்னி, "இதை ஏன் என்கிட்ட கொடுக்குறீங்க?" என்று கேட்டான்.




"இது என் புருஷனும், ஆரா அப்பாவும் பாத்து பாத்து வளர்த்த கம்பெனி தம்பி… இப்ப அது கவனிக்க ஆள் இல்லாம கெடக்கு… இதுல ஆதிக்கு எவ்ளோ உரிமை இருக்கோ, அதே உரிமை ஆராக்கும் இருக்கு. அதான் இந்த பொறுப்பை எல்லாம் அவளை எடுத்துக்க சொல்ல வந்தேன். இதை அவளை வாங்கிக்க சொல்லு தம்பி. "என்றவர் பேச்சில் குழம்பிய ஆரா, தேவ்வின் முகம் பார்க்க, "அதை வாங்கிக்க தியா." என்றான் அமைதியாக.




"இதெல்லாம் எனக்கு தேவை இல்லைனு சொல்லு தேவ். அதான் அவங்க புள்ளை இருக்காரே. அவரே பாக்கட்டும். இதை எடுத்திட்டு இவங்களை போக சொல்லு தேவ்." என்றவளை பல்லவி வேதனையோடு பார்க்க,




"ஆதி இப்ப அவங்க கூட இல்ல தியா… அவன் எங்க இருக்கான்னு கூட இவங்களுக்கு தெரியாது." என்ற கணவனின் சொல்லில் அதிர்ந்து அவனைப் பார்த்தவளை பார்த்து கண் மூடித்திறந்தவன், "அதை வாங்கிக்க." என்றான் மறுபடியும்.




இந்த முறை மறுபேச்சு பேசாது அந்த பத்திரங்களை ஆரா வாங்கிக்கொள்ள, "நான் உனக்கு செஞ்ச பாவம் இப்ப பெத்த புள்ளையை இழந்துட்டு தனியா நிக்குறேன். அவன் எங்க இருக்கான்னு கூட தெரியல" என்று அழும் பல்லவியிடம், "ஆதி இப்ப டெல்லில இருக்கான்." என்றான் அக்னி.




அவன் சொன்னதை கேட்டு, "நிஜமாவா எம்புள்ள அங்க தான் இருக்கானா? எப்டி இருக்கான்? நல்லா இருக்கானா?" என்று ஆவலாக கேட்க,




"ம்ம்ம் நல்லா இருக்கான். அதை மட்டும் தான் என்னால இப்ப சொல்ல முடியும். இன்னும் கொஞ்ச நாள்ல அவனே உங்களைப் பாக்க வருவான்." என்றதோடு தன் பேச்சை நிறுத்திக்கொள்ள, 'மகன் எங்கோ நல்லபடி இருக்கிறான்' என்ற நிம்மதியில் அங்கிருந்து கிளம்பினார் பல்லவி.




அவர் சென்ற அடுத்த நொடி அக்னி பக்கத்தில் வந்து உட்கார்ந்த ஆரா, "மாமா டெல்லிலயா இருக்காரு? ஏன் அவங்க அம்மாகிட்ட கூட சொல்லாம போனாரு? அவர் அங்க இருக்காருன்னு உங்களுக்கு எப்டி தெரியும்? அவர் நல்லாதானே இருக்காரு? ஒன்னும் பிரச்சினை இல்லல்ல…" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டவளை பார்த்து மென்மையாக சிரித்த அக்னி, "நான் கேக்கும் கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு. உன் ஆதிமாமாவை நீ எந்த அளவு புரிஞ்சு வச்சிருக்கேன்னு பாக்கலாம்" என்றவன்,




"உன் மாமாக்கு என்னவா ஆகணும்னு ஆசை? ஆதியோட லட்சியம் என்ன?" என்று கேட்க, "பச்ச் இதென்ன பெரிய விஷயம்… மாமாக்கு ஆர்மில சேரணும்னு ரொம்ப ஆசை, ஆனா அத்தை…" என்று சொல்ல வந்தவள் நிறுத்தி,




"அவங்க அம்மாக்கு அதுல சுத்தமா இஷ்டமே இல்ல. முடியவே முடியாதுனு சொல்லிட்டாங்க. அது அவருக்கு ரொம்ப வருத்தம். அப்றம் அப்பா தான், ஆர்மி இல்லையின்ன என்ன நீ ஐ.பி.எஸ் படின்னு சொல்லி, அத்தைக்கிட்ட ஆஸ்திரேலியா போறேன்னு பொய் சொல்லிட்டு, டெல்லி போய் அங்க ஐ.பி.எஸ் ட்ரெய்னிங் எல்லாம் முடிச்சிட்டு வந்தாரு." என்றாள்.




"சரி அதுக்கு அப்றம் என்னாச்சு?" என்று கேட்டான் அக்னி‌.




"அவர் வந்த உடனே தான் நான் நம்ம லவ் மேட்டர் சொன்னேன். அதுக்கு அப்றம் நடந்தது தான் உங்களுக்கு தெரியுமே" என்றாள் ஆதங்கமாக.




"ம்ம்ம் அதுக்கு அப்றம் நடந்ததை நான் சொல்றேன். உனக்கும் ஆதிக்கும் கல்யாண ஏற்பாடு நடந்த சமயம் தான் அவனுக்கு ஐ.பி.எஸ் போஸ்டிங் வந்துது. கல்யாணம் முடிஞ்சுதும் ஜாயின் பண்ணலாம்னு இருந்தான்.




பட், அதுக்குள்ள என்னென்னமோ நடந்து போச்சு. நம்ம ஆதி வீட்டுக்கு போய்ட்டு வந்த அப்றம் ஆதி ஒரு வாரம் பிரம்ம புடிச்ச மாதிரி இருந்து இருக்கான். நான் ஆராவை ஏமாத்திட்டேன்… ஆராவை ஏமாத்திட்டேன் சொல்லிட்டே இருந்திருக்கான்.




அந்த டைம்ல தான் உடனே அவனை வந்து வேலையில் ஜாயின் பண்ண சொல்லி தகவல் வந்தது." என்றவளை குழப்பமாக பார்த்தவள், "இதெல்லாம் உனக்கு எப்டி தெரியும்?" என்று கேட்டவளை பார்த்து அவன் அர்த்தமா சிரிக்க, ஆரா கண்கள் விரிய, "ஷிவியா…" என்று கேட்க, அக்னியின் தலை 'ஆமாம்' என்று ஆடியது.




"உண்மையில் உன்னையும் ஆதியும் நினைக்கும் போது எனக்கு பொறாமையா இருக்கு தியா." என்றவனை அவள் வேள்வியாக பார்க்க, "ஷிவானி மாதிரி ஒரு ப்ரண்ன்டு கிடைச்ச நீங்க ரெண்டு பேருமே லக்கி தான். எந்த சூழ்நிலையிலும் அவ உங்க ரெண்டு பேரையும் விட்டுக்குடுத்தது இல்லை. இன்பேக்ட் நான் ஆதிய எதுவும் செய்யாம விட்டதுக்கு நான் அவனுக்கு செஞ்ச தப்பு ஒரு காரணம்னா ஷிவானியும் ஒரு காரணம் தியா. ஆதியை நான் ஒன்னும் செய்யக்கூடாதுனு என்கிட்ட கேட்டுக்கிட்டா…"




"மாமாக்கு நீ என்ன தப்பு பண்ண தேவ்?"




"அவனுக்கு நிச்சயம் பண்ண பொண்ணை நான் காதலிச்சது தப்பு தானா தியா… ஒரு வேளை நான் உன் வாழ்க்கையில் வராம போயிருந்தா இதெல்லாம் நடந்திருக்காது இல்ல."




"அப்டி எல்லாம் ஒன்னும் இல்ல தேவ். நீ வேணும்னு என் மனச கலைக்கல… நீ உன் இயல்பில் தான் இருந்த, அதுதான் எனக்கு புடிச்சது. அப்டி பாத்தா நீ சின்ன வயசில் முதல் முதல்ல என்னை பார்த்ததில் இருந்து என்னை லவ் பண்றேன்னு சொன்னீயே..‌.




அப்ப நீ லவ் பண்ண பெண்ணைத் தான ஆதிமாமா நிச்சயம் பண்ணிட்டு இருக்காரு. இன்பேக்ட் நீ செத்து போய்ட்டேன்னு ஆதிமாமா சொல்லாம இருந்திருந்தால் கண்டிப்பா நான் உன்னை தேடி கண்டுபிடிச்சு இருப்பேன். நீ சொன்ன மாதிரியான்னு தெரியல ஆனா, அந்த சின்ன வயசுலயே எனக்கு உன்னை அவ்ளோ புடிக்கும். எதாவது செஞ்சு உன்னை சிரிக்க வைக்கும் தோணும். உன் கூடவே இருக்கணும்னு தோணும். உனக்கு புடிச்சதை அம்மாவை தொந்தரவு பண்ணி செஞ்சு கொடுக்கச்சொல்லி உனக்கு எடுத்திட்டு வந்து கொடுப்பேன். சோ எனக்கும் உன்மேல அப்பவே ஒரு சாப்ட் கார்னர் இருந்துச்சு,




அப்படி இருக்க மறுபடியும் உன்னை நான் பாத்திருந்தா கண்டிப்பா உன்னை லவ் பண்ணி இருப்பேன். அப்டி நடந்திருந்தால் அந்த நிச்சயதார்த்தமே நடந்திருக்காது தேவ்… அந்த கடவுள் என் பேர் பக்கத்தில் ஆதிமாமா பேரை எழுதல தேவ்." என்றவளை அவன் காதலாக பார்க்க,




ஆராவோ தொடந்து, "அதான் நம்ம பிரிஞ்சும் மறுபடியும் சேர்ந்துட்டோம். நம்ம போல ஆதிமாமாக்கும் ஒரு நல்ல லைஃப் அமைஞ்சா அதைவிட எனக்கு வேற பெரிய சந்தோஷமே இல்ல தேவ்." என்றவள், "அது சரி ஷிவி பத்தி ஏதோ சொன்னீயே?" என்று கேட்டாள்.




"ம்ம்ம் ஆமா… அன்னைக்கு அவளும் ஆதிய திட்டிடுட்டு தான் நம்ம கூட வந்தா, நான் கூட இனி அவ ஆதி கூட பேச மாட்டான்னு தான் நெனச்சேன். பட், அடுத்த நாளே ஆதி வீட்டுக்கு போய் அவனை பாத்திருக்கா தெரியுமா!" அது மட்டும் இல்ல பிரம்ம புடிச்சவன் மாதிரி இருந்தவன் கிட்ட பேசி பேசி ஒரளவு அவனை கொஞ்சம் இயல்புக்கு கொண்டு வந்தா, அப்ப தான் ஆதிக்கு வேலைகிடச்ச விஷயம் தெரிஞ்சு, இந்த டைம்ல அவன் அந்த வேலைக்கு போன அவனுக்கு ஒரு மாறுதல் கிடைக்கும்னு நெனச்சா ஷிவானி… ஆனா, கண்டிப்பா ஆதி இதுக்கு ஒத்துக்க மாட்டான்னு தெரிஞ்சு எனக்கு கால் பண்ணா" என்றதும் ஆராவுக்கு புரிந்துவிட்டது அடுத்து என்ன நடந்திருக்கும் என்று.




"நீ ஆதிமாமாவை பாத்து பேசினியா தேவ்?" என்று பதில் தெரிந்து கொண்டே கேள்வியை கேட்டாள்.




"ஆமா தியா… பாத்தேன். ஒருவகையில் அவன் நிலைக்கு நானும் தான காரணம். சோ அவனைப் போய் பாத்து பேசினேன். முதல்ல அவன் என்னை பாக்கவே முடியாதுன்னு தயங்கினான். ஷிவானி தான் போராடி என்னை அவனை பாக்க வச்சா… நான் பெருசா ஒன்னும் சொல்லல தியா… நீ இருந்த நிலையை சொல்லி…




உனக்கு துரோகம் பண்ணிட்டதா நெனச்சு நெனச்சு அவ மனநோயாளியா ஆகிட்டு வர்றா, இதுல நீ இப்டி இருக்கன்னு தெரிஞ்சா கண்டிப்பா அவளுக்கு பைத்தியம் பிடிச்சிடும். அவ நல்லாகுறதும் இல்ல.. பைத்தியம் ஆகுறதும் உன் கையில் தான் இருக்கு." என்ற அக்னி அந்த வார்த்தையை முடிக்கும் முன், "ஆரா நல்லா இருக்கணும். அவளுக்கு ஒன்னும் ஆகாது" என்றான் ஆதி அவசரமாக.




அதைக் கேட்டு மென்மையாக சிரித்த அக்னி, "அப்ப நீ நல்லா இருக்கணும். அதை அவ தெரிஞ்சிக்கனும். அப்பதான் அவ நல்லா இருப்பான்னு சொன்னேன். அவ்ளோதான் நான் சொன்னது. அதுக்கு அப்றம் ரெண்டு நாள் கழிச்சு அவங்க அம்மாகிட்ட கூட சொல்லாம டெல்லி கிளம்பிட்டான். எனக்கு ஃபோன் பண்ணி அவன் டியூட்டில ஜாயின் பண்ணதை சொல்லி, நான் நல்லா இருக்கேன்னு ஆராகிட்ட சொல்லிடுங்க… இன்னும் அவளை நேர்ல பாக்கும் தைரியம் எனக்கு வர்ல..‌. அந்த தைரியம் வரும்போது அவளோட, அவளுக்கு பிடிச்ச ஆதிமாமாவா அவ முன்னாடி வந்து நிப்பேன்னு சொன்னான்." என்றவன் தியா முகத்தை பார்க்க அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.




"அவருக்கு என்மேல பாசம் ரொம்ப அதிகம் தேவ். கண்டிப்பா என்னோட பழைய ஆதிமாமா எனக்கு திரும்ப கிடைச்சிடுவாரு" என்றபடி அவளவன் மார்பில் சாய்ந்து கொள்ள, அவளை அன்பாக தழுவிக் கொண்டான் அவள் கண்வன்.




இரண்டு வருடத்திற்கு பிறகு,




நிறைமாத மேடிட்டிருந்த வயிற்றை, வளைகாப்பில் பூட்டிய வண்ண வண்ண கண்ணாடி வளையல் நிறைந்திருந்த கையில் அணைத்துப் பிடித்தபடி ஆரா மெல்ல நடந்து வர, அவள் தோள்களை பற்றிக்கொண்டு அவளுக்கு பாதுகாப்பாக அருகில் வந்து கொண்டிருந்தான் அக்னி‌.




ஆராவுக்கு எட்டாம் மாதம் முடிந்து ஒன்பதாம் மாதம் தொடங்கி இருந்த நிலையில் ஷிவானியின் தாய், தந்தை இருவரும் ஆராவின் பெற்றோர் இடத்தில் இருந்து அவளுக்கு வளைகாப்பை சிறப்பாக நடத்தி இருந்தனர்.




ஆரா பிரசவம் வரை அவர்கள் மூவரும் அவளுடன் இருந்து அவளை கவனிக்கும் பொருட்டும் இந்தியா வந்திருக்க, ஒரு வேலையாக தீடீரென்று வெளியூர் கிளம்பினாள் ஷிவானி.




"ஏய் ஆரா… ஏன்டி இப்டி பண்ற? நான் தான் தனியா போய்க்குறேன்னு சொன்னேன் இல்ல… இந்த வயித்தை தூக்கிட்டு, பத்தா குறைக்கு அக்னியையும் கூட்டிட்டு இப்ப நீ ஏர்போர்ட்டுக்கு சென்ட் ஆப் பண்ண வர்லன்னு யார் அடிச்ச உன்னை?" என்ற ஷிவானியை முறைத்த ஆரா,




"ஏய் நான் ப்ரெக்னென்ட் தான்டி. பேஷண்ட் இல்ல… சும்மா எப்பப்பாரு என்னை திட்டிட்டே இருக்க… பாரு தேவ் இவ எப்பாரு உன் பொண்டாட்டிய திட்டிட்டே இருக்க… என்னன்னு கேளு" என்று கணவனை துணைக்கு அழைத்தாள் ஆரா.




"சும்மா கொஞ்சி கொஞ்சி சீன் போடாதடி… டாக்டர் நெக்ஸ்ட் வீக் உனக்கு டியூ டேட் கொடுத்திருக்கிறாரு… அதுவரை அடக்க ஒடுக்காம வீட்ல இருக்க வேண்டியது தான… எதுக்கு இப்டி அலைஞ்சிட்டு இருக்க… நான் என்ன கல்யாணம் ஆகியா ஊருக்கு போறேன். ஒரு வேலையா வெளியூர் போறேன். உனக்கு பாப்பா பொறக்கும் முன் வந்திடுவேன்‌. அதுக்கு எதுக்குடி இந்த ஆர்பாட்டம்? எல்லாம் இந்த தேவ்வை சொல்லனும்."




"ஏய் என்னம்மா என் தலையா உருட்ற? நான் என்ன செஞ்சேன்?" என்றான் அக்னி.




"பின்ன என்ன… புள்ளைய வளர்க்க சொன்ன தொல்லைய வளர்த்து வச்சிருக்கீங்க. பொண்டாட்டியை ஒழுங்க வளக்குறது இல்ல?" என்று சொன்னதும் ஆரா கண்ணை கசக்கியவள், "நான் உனக்கு தொல்லையா? அப்ப என் மேல பாசம் இல்லயா! "என்று பாவம் போல் கேட்க, அவளை செல்லமாக முறைத்த ஷிவானி, "ம்ம்ம் சலங்கையை கையில எடுத்திட்டா… இனி ஜங்குஜங்குன்னு ஆடப்போறா…" என்ற ஷிவானி தலையில் செல்லமாக கொட்டிய அக்னி, "ஓய்… அவ எவ்ளோ பாசமா உன்னை வழியனுப்ப வந்திருக்கா, அவளைப் போய் திட்றீயே!" என்று மனைவிக்கு துணைக்கு வந்தான் அக்னி.




"ப்ச் அவ நார்மலா வந்தா ஓகே. ஆனா, இன்னும் ஒரு வாரத்தில் டெலிவரி வச்சிட்டு இப்டி ஏன் அலையும்? நீயே சொல்லு அக்னி" என்றவள் திரும்பி ஆராவைப் பார்த்து, "நிஜமா சொல்லு ஆரா… நீ எதுக்கு இப்பயெல்லாம் டே அன்ட் நைட் வாட்ச்மேன் மாதிரி என்னையே பாத்துட்டு இருக்க?" என்று கேட்க,




"நானா… அப்டி ஒன்னும் இல்லயே…" என்று அவள் சமாளிக்க, ஷிவானி இழுத்து ஒரு பெருமூச்சு விட்டவள், "லிசன் ஆரா நீ என்ன நினைக்குறேன்னு எனக்கு புரியுது. பட், எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஓகே வா… நான் நல்லாத்தான் இருக்கேன்." என்றாள்.




"அப்றம் ஏன்டி இப்ப வேற இடத்துக்கு வேலைக்கு ட்ரை பண்ற? தேவ் கூட இல்ல என்கூட வெர்க் பண்லாம் இல்ல. எதுக்கு எங்கயோ போற? அதுவும் எங்க போறேன்னு கூட சொல்லமாட்டேங்கிற?" என்ற ஆரா தலையில் வலிக்காமல் கொட்டிய ஷிவானி, "அது சஸ்பென்ஸ்…" என்றவள் விமானத்திற்கு நேரமாவதால் தன் பேக்கை எடுத்துக் கொண்டவள், "நான் அப்டி போனதும் இப்டிக்கா பாப்பா கிட்ட என்னைப் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணேன்னு தெரிஞ்சது… பிச்சுபுடுவேன் பிச்சு…" என்று சிரித்தபடி அங்கிருந்து செல்ல, அக்னியும் ஆராவும் வீடு திரும்பினார்.




இப்போதெல்லாம் ஆராவுக்கு ஆதி மேல் இருந்த கோவம் குறைந்திருந்தது. ஆனால் முன்போல் அவனுடன் அவளால் சகஜமாக பேசவோ பழகவோ முடியவில்லை. ஆதியும் அப்படித்தான். முடிந்த வரை அவளைப் பார்ப்பதை தவிர்த்தான்.




அக்னியுடனும் அவனால் ஒட்ட முடியவில்லை. அக்னிக்கும் அதே நிலைதான். ஆனால், பல்லவியை மட்டும் அக்னி தன் பொறுப்பில் வைத்து பார்த்துக் கொண்டான். ஆதி அவ்வப்போது ஷிவானிக்கு அழைத்து, ஆரா பற்றி விசாரித்துக் கொள்வான் அவ்வளவு தான்.




ஷிவானி சொன்னபடி ஆரா பிரசவ நேரத்துக்கு சரியாக வந்துவிட்டாள் அவள்.




ஆராவும் வலி எடுத்து கிட்டத்தட்ட ஒருமணி நேரம் வலியில் துடித்தவள், அழகான பெண்குழந்தையை பெற்றெடுத்தாள்.




குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்த அக்னியை கண்களில் நிறைவும் முகத்தில் சிரிப்புமாக பார்த்துக்கொண்டு இருந்தாள் ஆரா. அந்த நேரம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த ஷிவானியை பார்த்து சிரித்த ஆரா, அவள் பின்னால் வந்த பல்லவியை பார்த்தும் சிரிப்பு மறைந்து போனது. பல்லவியை அடுத்து போலீஸ் உடையில் கம்பீரமாக அறைக்குள் வந்த ஆதியை பார்த்தவள் முகத்தில் மகிழ்ச்சியும், கண்களில் லேசாக கண்ணீரும் திரண்டது.




ஆதி, ஆராவை ஒரு நொடி பார்த்துவிட்டு திரும்பியவன் பார்வை முழுவதும் அக்னி கையில் இருந்த குழந்தை மேலேயே இருக்க, அதை புரிந்துகொண்ட அக்னி, ஷிவானியிடம் குழந்தையை கொடுத்து கண் ஜாடை காட்ட, ஷிவானி குழந்தையை ஆதியிடம் கொடுத்தாள்.




அழகிய ரோஜா குவியல் போல் தன் கையில் இருந்த குழந்தையைப் பார்த்தவனுக்கு தன்னையும் மீறி கண்களில் கண்ணீர் வர, கண்களை மூடித்திறந்தவன், குழந்தையை பல்லவியிடம் கொடுக்க, அவருக்கு குழந்தையை பார்த்தும் ஆரா பிறந்த போது தன் கையில் ஏந்திய நினைவு வர, மெல்ல குழந்தை நெற்றியில் முத்தம் பதித்தார்.




ஆதி தன் பையில் இருந்து ஒரு தங்க செயின் எடுத்து குழந்தைக்கு போட வந்தவன் சற்று தயங்கி அக்னி - ஆராவை பார்க்க, அக்னி கண்களை மூடித்திறக்க, ஆதி செயினை குழந்தை கழுத்தில் போட்டு, கண்களால் ஆராவின் நலத்தை உறுதி செய்துகொண்டவன், உடனே அங்கிருந்து கிளம்பி இருந்தான்.




ஒரு வழியாக அக்னி, ஆரா வாழ்க்கை சிறப்பாக செல்ல, இதேபோல் ஆதி மற்றும் ஷிவானி வாழ்க்கையும் வருங்காலத்தில் நல்லபடி அமையும் என்ற நம்பிக்கையில் நாமும் செல்வோம்.




                          ……………. சுபம் ………….