விழி வழி காதல் நுழைந்ததடி 31

 விழி 31


ஆதர்ஷன் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தன்வியின் பார்வையோ, அவள் கணவன் மீதே நங்கூரமிட்டது போல் நிலைத்திருந்தது.


அவளின் பார்வையின் பொருளை உணர்ந்த அதீஷன், தலையை மெதுவாக மேலும் கீழும் ஆட்டி, அவனுக்கு அவளின் மேல் இருக்கும் காதலை உறுதிப்படுத்தினான்.


"அ…அப்ப, நீங்க என்னை மேரேஜ்க்கு முன்ன இருந்தே லவ் பண்றீங்களா?" என்று கேட்டாள் கண்கள் மின்ன.


"எனக்குத் தெரியலடி… எனக்கு உன்னைச் சின்ன வயசில் இருந்தே ரொம்பப் பிடிக்கும். நீயும் அப்படிதான் இருந்த‌. என்னை உனக்கு ரொம்பப் பிடிக்கும். எப்பவும் என்னோட தான் இருப்ப, நாங்க வீட்டைவிட்டு வரும்போது என் கையிலிருந்த உன்னைத் தாத்தா வாங்கும்போது எனக்கு அவ்ளோ கோவம் வந்துச்சு… இவ என்னோட தன்வி பாப்பா, இவ என் கூடத்தான் இருப்பான்னு தாத்தாகிட்டச் சண்டை கூடப் போட்டேன் தெரியுமா? ஆனா, கடைசில உன்னை என்னோட கூட்டிட்டு வரமுடியல… நான் கிளம்பும்போது நீ கத்திக் கத்தி அழுதது இன்னும் என் கண்ணு முன்னாடி நிக்குதுடி…" என்றவனின் குரலில் அன்றைய நாளின் வலி அப்பட்டமாகத் தெரிந்தது.


"உன்னைவிட்டு வந்த நாளிலிருந்து எனக்கு எப்பவும் உன்னோட நினைப்புதான்… நீ என்னை நினைச்சு அழுதுட்டு இருப்ப, என்னைத் தேடுவேன்னு நினைச்சு நினைச்சு நானும் அழுதுட்டே இருந்தேன். ஒரு வாரம் கழிச்சு அம்மா தர்ஷன்கிட்ட ஃபோன்ல பேசும்போது உனக்கு அழுதழுது ஜூரம் வந்திடுச்சுன்னு சொன்னான். அப்ப எனக்கே என்மேல கோவம் கோவமா வந்துச்சுடி? என்னால தானே என் தன்விக்கு ஜூரம் வந்துச்சின்னு அப்படி அழுதேன். அப்புறம் நாளாக நாளா நீ என்னை மறந்து நார்மல் ஆகிட்ட… உனக்கு விவரம் புரிஞ்சு தாத்தாகிட்ட, நீ அம்மா பத்திக் கேக்கும்போது அவர் எதுவும் சொல்லல, கொஞ்சம் வருஷம் கழிச்சு தர்ஷன் என்னைப்பத்தி உன்கிட்டச் சொல்றேன்னு சொல்லும் போது நான் வேணாம்னு தடுத்திட்டேன்" என்றவனை, 'ஏன் அப்படி செஞ்சிங்க? ஏன் உங்களைப்பத்தி என்கிட்ட மறைச்சீங்க?' என்பது போல் பார்த்தாள் அவனவள்.


"சரியோ தப்போ, உனக்கு உடம்பு முடியாமப் போக நான் தான் காரணம். மறுபடியும் என்னோட தன்விக்கு என்னால மனசாலயும் உடம்பாலயும் எந்த ஒரு சின்னக் கஷ்டமும் வரக் கூடாதுன்னு நினைச்சேன்…" என்றவன் ஒரு கணம் நிறுத்தி, "ஆனா, அப்போல இருந்து இப்ப வரை என்னால உனக்கு எப்பவும் கஷ்டம் மட்டும் தான்டி" என்றவன் குரல் கரகரத்தது‌.


அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு தன்னவனின் தன்மேல் உள்ள அன்பை நினைத்து நெஞ்சம் விம்மியது. 


"அப்போல இருந்து இப்ப வரை என்னை நேசிக்கவும் செய்யறீங்க இல்ல?" என்று கேட்டாள்.


அவளின் கேள்வியில் நிமிர்ந்து அவளின் முகம் பார்த்தவன், "சாகுற வரைக்கும் இல்லடி… செத்த அப்புறமும் கூட என்னோட தன்வியை நான் நேசிச்சிட்டுதான் இருப்பேன்." என்று அடிமனதிலிருந்து சொல்ல, அவனை ஆழமான பார்வை பார்த்தவள், "நான் சாகுற வரை என் தஷ்ஷோட இந்த நேசம் ஒண்ணு போதும் எனக்கு" என்றாள் நெஞ்சை நிமிர்த்தி.


இருவரையும் ஒரு நிறைவான சிரிப்போடு பார்த்த ஆதர்ஷ், "உனக்கு நாங்க உன்னை ஏமாத்திட்டோம்னு வருத்தமா தன்வி?" என்று கேட்டான்.


அவ்வளவு நேரம் தன்னவன் மேல் பார்வையைப் பதித்திருந்தவள், திரும்பி ஆதர்ஷனைப் பார்த்து இல்லை என்று தலையாட்டியவள், "எனக்குக் கோவம் இருக்கு பாஸ். அதுவும் என்னை ஏமாத்தினது நீங்கன்ற கோவம் மட்டும் தான். ஆனா, துளி வருத்தம் கூட இல்ல பாஸ். இன்ஃபேக்ட் ரொம்ப நாளா என் மனசுல உறுத்திட்டு இருந்த ஒரு விஷயத்துக்கு இன்னைக்குப் பதில் கிடைச்சிடுச்சு" என்றாள் நிம்மதி நிறைந்த குரலில்.


அவள் எதை நினைத்து இப்படிச் சொல்கிறாள் என்று ஆதர்ஷனுக்குப் புரிந்ததோ இல்லயோ, அவளை இந்தக் கொஞ்ச நாட்களில் உள்ளும், புறமும் நன்கு புரிந்து வைத்திருந்த அதீஷனுக்கு அவள் சொன்னதின் உள்ளர்த்தம் நன்கு புரிந்தது. ஏனென்றால் அதே உறுத்தல் அவனுக்குள்ளும் அடித்துக்கொண்டு தானே இருந்துது. இப்போது அதற்கான பதில் கிடைத்துவிட, அதுநாள் வரை அவன் மனதில் இருந்த பெரிய சுமை ஒன்று இறங்கி இதயம் லேசானது போல் உணர்ந்தான் அதீஷன். 


"உனக்கு என்ன உறுத்தல் தன்விமா?" என்று புரியாமல் கேட்டார் அமிர்தா.


"இல்லம்மா… அன்னைக்கு இவரை ஏர்போர்ட்ல பார்க்கும் போதே எனக்கு ஏதோ வித்தியாசமாகப் பட்டுது. ஆனா, இவர்கிட்ட ஒரு சின்ன அன்னியத்தன்மை கூட எனக்குத் தோணவே இல்ல… உங்களை முதல் தடவை பார்க்கும்போது எப்படி ஃபீல் ஆச்சோ, அப்படி ஒரு நெருக்கமான ஃபீல் தான் வந்துச்சு… அதனால் எனக்கு வந்த சந்தேகத்தை அப்பவே மறந்துட்டேன். அந்த நெருக்கமான உணர்வுக்கு என்ன காரணம்னு எனக்கு இப்பப் புரியுது, " என்றவள் தொடர்ந்து,


 "நாள் போகப் போக நம்ம பாஸ் ஊருக்கு போயிட்டு வந்த பிறகு நிறைய மாறிட்டாருன்னு தான் தோணுச்சே தவிர வேற எதுவும் நான் யோசிக்கல... அதோட அந்த நேரம் நான் பாஸ் மேல கோவமா இருந்தேன். சோ, எதையும் பெருசா கவனிக்கும் மனநிலையில் நான் இல்ல, இவரோட ஆக்டிவிட்டிஸ் எனக்கு புதுசாத் தெரிஞ்சது..‌. இவர் ஸ்பரிசம் எனக்கு ஒருவித புது உணர்வைக் குடுத்தது. அப்ப அதைப்பத்தி பெருசா நான் எதுவும் யோசிக்கல, ஆனா…" என்றவள் நிறுத்தி,


 "எங்களுக்கு மேரேஜ் முடியும் வரை எனக்கு இவர் மேல எந்த ஃபீலிங்கும் இல்லமா, இவர் என்னோட ஆது, இது என்னோட குடும்பம், இதோட கௌரவத்துக்கும் தாத்தாக்கும் எந்த பாதிப்பும் வரக் கூடாதுன்னு தான் நான் இவரை மேரேஜ் பண்ணிக்கிட்டேன்" என்றவள் தலையைக் குனிந்து கொண்டு, "ஆனா, எப்படின்னு தெரியல, கல்யாணமான அப்புறம் நான் கொஞ்ச கொஞ்சமா மாறிட்டேன். இவரோட அருகாமை என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு, இவரு எனக்குத் தான்ற உரிமை உணர்வு எனக்குள்ள வந்திடுச்சு, என்னோட புருஷனை நான் யாருக்கும் விட்டுத் தரமாட்டேன், இவர் என்னோட தஷ்னு மனசு கிடந்து அடிச்சிக்கும், அப்ப அந்த உணர்வுக்கு என்ன அர்த்தம்னு எனக்குப் புரியல, அது புரியும்போது" என்று ஆரம்பித்தவள் மெல்லிய குரலில், "இவரை நான் விரும்ப ஆரம்பிச்சிட்டேன்" என்றவள் கன்னங்கள் சிவந்திருக்க, அதற்கு நேர்மாறாக அவள் கண்கள் கலங்கி இருந்தது.


"ஏன் தன்விமா எதுக்கு இப்ப அழற?" என்றபடியே அவள் கண்களை துடைத்து விட்டார் அமிர்தா.


"இல்லம்மா… அப்ப எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு… பெருசா ஊருக்காகதான் இந்தக் கல்யாணம், மத்தபடி உங்ககிட்ட எந்த உரிமையும் எடுத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு இப்படி அவர் மேல காதலை வளர்த்துகிட்டேன்னு என் மேலயே எனக்குக் கோவம் வந்துச்சு, அதைவிட அதிக வலியைக் கொடுத்தது…" என்றவள் நிமிர்ந்து ஆதர்ஷ் முகத்தை அழுத்தமாகப் பார்த்தபடி, "என் ஆது மேல எப்படி எனக்குக் காதல் வரும்? வரலாம்னு தான் எனக்கு அதிகமா கோவம் வந்துச்சு… எனக்கு என் மேல, என் காதல் மேல அவ்ளோ வெறுப்பு வந்துச்சுமா… அப்ப நான் இத்தனை நாள் அவர் மேல வச்சிருந்த எதிர்பார்ப்பு இல்லாத அன்புக்கு என்ன அர்த்தம்? அப்ப உனக்கு அடி மனசுல அவர் மேல அந்த மாதிரி ஒரு எண்ணம் முன்னமே இருந்துதான்னு என்னை நானே கேட்டுக் கேட்டு அழுதிருக்கேன்… ஆனா?" என்றவள் பார்வையைத் திருப்பி தன்னவனை ஆதுரமாகப் பார்த்தாள்.


"என் கண்ணு என்னை ஏமாத்திடுச்சு… ஆனா, என்னோட மனசுக்கு என் புருஷனைப் புரிஞ்சிருக்கு… நான் என்னோட ஆது மாதிரி முகம் இருந்தவரைக் காதலிக்கல, என்னை உயிராக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட என்னோட புருஷன் மனசைத்தான் காதலிச்சு இருக்கேன். நான் அவரை என் கண்ணால பார்க்கல, மனசாலதான் பாத்தேன். சோ நான் ஏமாறல, என தஷ் என்னை ஏமாத்தல… எப்பவும் என்னோட ஆது மேல எனக்கு அன்பும், மரியாதையும் மட்டும் தான் இருக்கும். என்னோட காதலும், வாழ்க்கையும், எல்லாமும் என்னோட தஷ் தான்… தஷ் மட்டும் தான். காதலைப் பொறுத்தவரை நான் ஏமாறல, என் தஷ் என்னை ஏமாத்தல, ஏன்னா நான் ஆது முகத்தை விரும்பல, தஷ் மனசைத்தான் விரும்பினேன்." என்றவளின் வார்தையில் அவளவன் நெஞ்சில் அமுதத்தை வார்த்தாள் பெண்ணவள்.


அதீஷன் கண்கள் கலங்கி இருக்க, ஆதர்ஷன் திரும்பி தம்பியின் முகம் பாத்து, 'நீ கேக்க ஆசைப்பட்ட எல்லாத்தையும் உன் பொண்டாட்டி வாயில் இருந்தே கேட்டுட்ட, போதுமா?' என்று வினவ, அதீஷன் கண்களை மூடித் திறந்தவன், 'இந்த ஜென்மத்துக்கு அவ சொன்ன இந்த வார்த்தைகள் போதும்டா' என்று அவன் விழி நீரால் பதில் தந்தான்.


"இவன் என்னோட வரும்வரை கூட உன் மனசை மாத்தி உனக்கு நல்லபடியா கல்யாணத்தை முடிச்சி வைக்கணும்னுதான் சொல்லிட்டே இருந்தான். அப்ப நான் சொன்னது ஒண்ணே ஒண்ணுதான், நீ அவ முகத்தைப் பார்த்த பிறகு, ஜஸ்ட் ஒரு வாரம் அவ கூடப் பழகின பிறகு, இதைச் சொல்ல மாட்டேன்னு தான். ஏன்னா அவனுக்கே தெரியாமல் அந்த அளவுக்கு உன்னை அவன் லவ் பண்ணிட்டு இருக்கான்." என்றவன் தொடர்ந்து, "அன்னைக்கு ஏர்போர்ட்ல உன்னோட வாடிப் போன முகத்தைப் பார்த்துட்டு அன்னைக்கு நைட் எனக்கு கால் பண்ணி என்னை எப்படித் திட்டினான் தெரியுமா தன்வி? சாருக்கு உன்மேல அவ்ளோ அக்கறை" என்றான் குறும்பாக.


நீங்க எப்படி என் ஆதுவைத் திட்டலாம் என்பதுபோல் தன்வி முறைக்க, அவள் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவன், ஒரு சின்னச் சிரிப்போடு, "அன்னைக்கு உன்னோட முகத்தை என்னால பார்க்கவே முடியலடி… உயிர்ப்பு இல்லாம, சோகமா இருந்த உன்னோட முகத்தைப் பார்த்ததும் எனக்கு உள்ளுக்குள் ஒரு மாதிரி பதறிடுச்சுடி… பல வருஷம் கழிச்சு என்னோட தன்வியை இப்படியா பார்க்கணும்னு அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு.‌‌.. அதான் ஃபோன் போட்டு இவனை ஒரு வழி பண்ணிட்டேன்." என்றான் தவறு செய்து தாயிடம் மாட்டிக் கொண்ட குழந்தை போல்.


"ம்ம்ம்" என்று அவனை முறைத்தவள், அப்புறம் என்னாச்சு?" என்று கேட்டாள்.


"ஏர்போர்ட்ல இருந்து வீட்டுக்கு வந்த அப்புறம் தான், தர்ஷன் சொன்ன மாதிரி நீ அவுட்ஹவுஸ் போயிட்டேன்னு தெரிஞ்சிது. முதல்ல மறுபடியும் உன்னை எப்படியாவது வீட்டுக்குக் கூட்டி வரணும்னு நினைச்சேன். ஆனா, நீ ரொம்பப் பிடிவாதமா இருந்துட்ட… சரி கொஞ்ச நாள் வெய்ட் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா, அந்தக் கொஞ்ச நாளல நீ கொஞ்ச கொஞ்சமா எனக்குள்ள முழுசா நிறைய ஆரம்பிச்சிட்ட, உன்னைப்பத்தி நினைக்கும் போதெல்லாம் எனக்குள்ள அப்படி ஒரு சந்தோஷம் வரும். அவ்ளோ நிறைவா இருக்கும். அது தர்ஷனுக்கும் புரிஞ்சிடுச்சு… அப்ப தான் ஒரு நாள், நாங்க கான்ஃபரன்ஸ் கால்ல பேசும்போது ஆலன் கேட்டான், ஆஷ் சொன்ன மாதிரி நீ ஏஞ்சலை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டியான்னு… ஆனா, நான் அப்படி ஒண்ணும் இல்லைனுதான் சொல்லிட்டே இருந்தேன். அப்புறம் யோசிச்சுப் பார்த்தால், நான் உன்னைப் பார்த்த அன்னைக்கே உன்னை விரும்ப ஆரம்பிச்சிட்டேன்னுதான் தோணுச்சு. ஆனா, என்னோட ஈகோ அதை ஒத்துக்க விடாம என்னை இழுத்துப் புடிச்சு வச்சிருந்தது. அதெல்லாம் அந்த பிரசன்னா உன்னைப் பொண்ணு கேட்டு வர்ற வரைக்கும் தான். அவன் உன்னைப் புடிச்சிருக்குன்னு சொன்ன சமயம் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா தன்வி‍…? என் தன்வியை எவன்டா பொண்ணு கேட்டு வர்றது… அவ என்னோட தன்வி, எனக்கு மட்டும் தான்னு சத்தம் போட்டுக் கத்தணும் போல இருந்துச்சு…" என்றவனைப் பார்த்து ஆதர்ஷன் சிரிக்க, இருவரையும் தீயாக முறைத்தாள் தன்வி.


மனைவியின் பார்வையில் திருதிருவென விழித்தவன், "இல்லடி… எனக்கு அப்ப அவ்ளோ கோவம் வந்துச்சு… அந்த நேரம் பார்த்து நீ வேற தாத்தா என்ன சொன்னாலும் சரின்னு சொல்லிட்ட, தாத்தா வேற நான் கல்யாணத்துக்கு சம்மதிக்காத கோவத்தில் எங்க உன்னை அவனுக்கு கட்டித் தரேன்னு சொல்லிடுவாரோன்னு பயந்து, சட்டுன்னு குறுக்க புகுந்து நான் தான் உன்னைக் கட்டிக்கப் போறேன்னு சொல்லிட்டேன்." என்றவன், "அதுக்குப் பிறகு இவனும் ஆலனும் சேர்ந்து என்னைக் கிண்டல் பண்ணியே ஒரு வழி பண்ணிட்டானுங்க தெரியுமா? அதுலயும் இவன் நான் சொன்ன மாதிரி நீ தன்விகிட்ட தலை குப்புற விழுந்துட்டேன்னு சொல்லிச் சொல்லி என்னை ஓட்டுவான்." என்றவனுக்கு அநியாயத்துக்கு வெட்கம் வந்து தொலைத்தது. 


தன்னவனின் வெட்கத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் மனையாள்.


அப்போது ஆதர்ஷ், "உங்க கல்யாணம் முடிவான பிறகு அதீ உன்கிட்ட உண்மையைச் சொல்லலாம்னு தான் சொன்னான். நான் தான் உண்மை தெரிஞ்சா நீ கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லி அவனை அடக்கி வச்சேன். உங்க கல்யாணம்னு அம்மாவை இந்தியா வரவழைச்சேன். வந்தவங்க நாங்க பண்ணது தெரிஞ்சு ரெண்டு பேரையும் வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க… ஒழுங்கா அவகிட்ட உண்மையைச் சொல்லிட்டு, அவ சம்மதிச்சா, அப்புறம் அவ கழுத்துல இவன் தாலி கட்டட்டும்னு சொல்லிட்டாங்க. உண்மை தெரிஞ்சா நீ மேரேஜ்க்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லி அவங்க கால்ல விழுந்து கெஞ்சிக் கூத்தாடி அவங்களைக் கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்தோம்" என்று தொடங்கி அனைத்தையும் சொல்லி முடித்தான் ஆதர்ஷன். 


அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த தன்விக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. நடந்தது எல்லாம் அவளுக்காக, அவளின் நலனுக்காக மட்டுமே நடத்தப்பட்டது. அதுவும் அவள் அதிகம் நேசிக்கும் அவளின் ஆதுவும், அவள் கணவனும் சேர்ந்து நடத்திய நாடகம்..‌. அவர்கள் ஏமாற்றியது வலித்தாலும், நடந்த நிகழ்வுகளில் அவளுக்குத் துளிகூட வருத்தமோ, வெறுப்போ இல்லை. மாறாக தஷ் அவள் வாழ்க்கையில் வந்ததை நினைத்து உயிரும், உள்ளமும் நிறைந்துதான் இருந்தது. அப்படி இருக்க என்ன பேசுவது என்று தெரியாமல் சில கணம் அமைதியாக இருந்தவள், அப்போதுதான் தான் வந்ததில் இருந்து ஆலனைப் பார்க்கவே இல்லை என்று நினைவு வந்தது.


மெல்ல நிமிர்ந்து ஆதர்ஷனைப் பார்த்து, "ஆலன் அண்ணா எங்க?" என்று கேட்க, அதுவரை சிரித்த முகத்துடன் இருந்த ஆதர்ஷின் வதனம் சடுதியில் இருண்டு விட்டது.