விழி வழி காதல் நுழைந்ததடி 32

 

விழி 32


அந்த நொடிவரை சிரித்துக் கொண்டிருந்த ஆதர்ஷனின் முகம் சிரிப்பைத் தொலைத்து, வறண்ட பாலை நிலம் போல் மாறிவிட்டதைக் கவனித்தவள், திரும்பி தன்னவனை கேள்வியாகப் பார்த்தாள்.


அவன் ஏதோ சொல்ல வரும் முன், "அவன் என்னை வேணாம்னு சொல்லிட்டுப் போயிட்டான் தன்வி" என்றவன் குரலில் அத்தனை வலி… அது காதல் தோற்றதால் வந்த வலி அல்ல, நண்பன் என்று நினைத்தவன் அந்த நம்பிக்கையை உடைத்ததால் வந்த வலி.


அதைக் கேட்ட பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்த தன்வி, "என்..என்னாச்சு?" என்று கேட்டாள் மெல்லிய குரலில்.


"அவன் அப்பாவுக்கு ஆஸ்திரேலியால பெரிய பிஸினஸ் இருக்கு… அதை இவனுக்குக் கொடுக்கணும்னா அவன் ஆதர்ஷனை விட்டுடனும்னு அவன் ஃபேமிலில சொல்லிட்டாங்க… முதல்ல முடியாதுன்னு ரொம்ப ஸ்ட்ராங்கா தான் இருந்தான். ஆனால், போகப்போக உன் வீட்லயும் ப்ராப்ளம், என் ஃபேமிலிலயும் ப்ராப்ளம்… நம்ம ரிலேசன்ஷிப்க்கு எதிர்காலம் இல்ல, நம்ம ரெண்டு பேருக்குமே நம்ம ஃபேமிலி தான் ஃபர்ஸ்ட் பிரையாரிட்டி… சோ, அவங்களுக்காக வாழ்வோம்னு சொல்லிட்டு ஆஸ்திரேலியா போயிட்டான்…" என்ற அதீஷனை அதிர்ந்து பார்த்தவள், "இதெல்லாம் எப்ப நடந்துச்சு" என்று கேட்டாள் நம்ப முடியாத திகைப்பில்.


"நம்ம ரெண்டு பேரும் ஒரு மீட்டிங் கம் கெட் டூ கெதர்காக பீச் ரிஸார்ட் போயிருந்தோமே, நினைவு இருக்கா?" என்று கேட்ட கணவனைத் தீப்பார்வை பார்த்தாள் பெண்ணவள்.


'அப்புறம் என்ன? மறக்கக் கூடிய நாளா அது? அவளுக்கே தெரியாமல் அவளை முழுதாகக் கொள்ளையிட்டு, அதற்கு சாட்சியாகத் தன்னுயிரை அவளுள் விதைத்து, அந்த உயிர் இப்போது அவளுள் சூல் கொண்டு உருவம் பெற்றிருக்க, அந்த இரவை நினைவு இருக்கிறதா? என்று கேட்டால் பின் முறைக்காமல் கொஞ்சவா செய்வாள்?' என்று மனதில் நினைத்த அதீஷன், ஒரு குறுஞ்சிரிப்போடு, "அன்னைக்கு ஈவினிங் ஆலன் எனக்கு கால் பண்ணான். அவன் ஏதோ சொல்ல வந்தான், அப்பதான் நீ…" என்றவன் முகத்தில் லேசாக சிரிப்பு மலர, தன்விக்குப் புரிந்துவிட்டது. அன்று அவள் குடித்துவிட்டு கலாட்டா செய்ததை அவன் சொல்ல வருகிறான் என்று… உடனே தொண்டையைச் செருமிக் கொண்டவள், "புரியுது, மேல சொல்லுங்க" என்றாள் ஒருவித அவஸ்தையோடு.


அவள் அவஸ்தையை ரசித்தபடி, "அப்ப என்னால ஆலன்கிட்டப் பேச முடியல, அதுக்கு அப்புறம் பேசுற நிலையில் நானும் இல்ல" என்று குறும்பாகச் சொன்னவனை அவள் கண்களால் எரிக்கும் பார்வை பார்க்க, அவளைப் பார்த்துக் கண்ணடித்தவன் தொடர்ந்து, "மறுநாள் காலையில் எழுந்ததும் நடந்த எல்லாத்தையும் உன்கிட்டச் சொல்ல வெயிட் பண்ணிட்டு இருக்கும்போது தான் தர்ஷன் கால் பண்ணி ஆலன் பத்திச் சொன்னான். அவன் சொன்னதை முதல்ல நான் நம்பவே இல்ல… ஆலன் இவனைவிட்டுப் போக மாட்டான்னு தான் எனக்குத் தோணுச்சு. உடனே நான் ஆலன்க்கு கால் பண்ணேன். அவனும் தர்ஷன் சொன்னது உண்மைதான்னு சொல்ல, எனக்குத் தலையே சுத்திடுச்சு… சத்தியமா நான் ஆலன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலடி. உடனே அவன்கிட்ட, உங்க ரிலேசன்ஷிப் ஆரம்பிக்கும் போதே இதை எல்லாம் பத்தி நீங்க பேசித் தானே முடிவெடுத்தீங்க, இன்ஃபேக்ட், தர்ஷனுக்கு உன்மேல அப்படி ஒரு எண்ணமே இல்ல… நீதான் அவனைப் புடிச்சிருக்குன்னு சொன்ன, வேணாம் இது சரிவராதுன்னு விலகிப் போனவனை நீதானே தேடித் தேடி வந்த..‌. இப்ப இப்படிப் பண்ணா என்ன அர்த்தம்னு கேட்டேன்.


அதுக்கு அவன், இப்பவும் சொல்றேன். எனக்கு ஆஷ் மேல அப்ப இருந்த ஃபீலிங்ஸ் தான் இப்பவும் இருக்கு… இன்ஃபேக்ட் நான் தான் போர்ஸ் பண்ணி அவனை இந்த ரிலேசன்ஷிப்குள்ள கொண்டு வந்தேன். இப்ப நானே சொல்றேன். இது வேணாம், இது சரியா வராது. உங்க தாத்தா எப்படி எங்க ரிலேசன்ஷிப் பத்திப் புரிஞ்சிக்கலியோ? அதேமாதிரி, என்னோட ஃபேமிலிலயும் ப்ராப்ளம் தான். சோ, இதை இப்படியே விடுறதுதான் எங்க ரெண்டு ஃபேமிலி ஸ்டேட்டஸ்க்கும் நல்லது… இந்த பிசினஸ் என்னோட கனவு, அதை எதுக்காகவும் விட்டுக் கொடுக்க நான் ரெடியா இல்ல, இதுபத்தி நான் இனிமே பேச விரும்பலைன்னு சொல்லிட்டுக் காலை கட் பண்ணிட்டான்" என்று சொல்ல, தன்விக்கு ஆலன்மீது கட்டுக் கடங்காத கோபம் வந்தது.


"அந்த வெள்ளைப் பன்னிக்கு எவ்ளோ ஏத்தம் இருந்தா என் ஆதுவை ஏமாத்திட்டுப் போயிருப்பான். நான் இதைச் சும்மா விடமாட்டேன்." என்றவள் தன் ஃபோன் எடுத்து ஆலனுக்கு அழைத்தாள்.


"ஏய் குட்டிப்பாப்பா, வேணாம்…" என்றவன், தன்வி கையில் இருந்து கைப்பேசியை பிடுங்கிக் கொண்டு,


"எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு..‌. நான் அதுல இருந்து வெளிய வந்துட்டேன். இன்ஃபேக்ட், எனக்கு இப்ப தான் புரியுது..‌. எனக்கு ஆலனைப் புடிக்கும் அவ்ளோதான். மத்தபடி அவன் மேல எனக்கு லவ் இல்லை" என்றவனைத் தன்வி ஒரு அழுத்தப் பார்வை பார்த்தாள். 


அவன் ஒருவரை விரும்பினால், அது அவனுக்குப் புரியும் முன் அவளுக்குப் புரிந்து விடுமே, அப்படிபட்டவளுக்கு ஆலன் மீது ஆதர்ஷனுக்கு இருப்பது வெறும் பிடித்தம் மட்டும் தான், காதல் இல்லை என்பது புரியாமல் போகுமா என்ன?' 


அதை கவனிக்காத ஆதர்ஷ், "ஹீ இஸ் ஏ நைஸ் பர்சன். இங்க வந்த அப்புறம் அதீக்கு அடுத்து, எனக்குக் கிடைச்ச நல்ல ஃப்ரண்ட் அவன். தீடிர்னு ஒரு நாள் வந்து அவன் என்னை லவ் பண்றேன்னு சொன்னான். இட்ஸ் ஏ பிக் ஷாக் டூ மீ… நான் எனக்கு அப்படி ஒரு தாட் இல்லைன்னு சொல்லிட்டேன். அதுக்கு அப்புறமும் அவன் என்னை விடல, அடிக்கடி அவன் எண்ணத்தை என்கிட்ட வெளிப்படுத்திகிட்டே இருந்தான். ஒரு ஸ்டேஜ்ல எங்க அவன் ஃப்ரெண்ட்ஷிப்பை இழந்திடுவமோன்னு பயந்துதான் அவனுக்கு நான் ஓகே சொன்னேன். ஆனால், இப்ப யோசிச்சுப் பார்த்தால் ‌எனக்கு அவன்மேல இருந்தது லவ் இல்லைன்னு தான் தோணுது. பிகாஸ், அதீ ஒருமுறை சொன்னான். தன்வி என் வாழ்க்கையில் இல்லாமல் போனா நான் இருந்தும் இறந்ததுக்குச் சமம்னு… இப்ப ஆலன் என் லைஃப்ல இல்ல. பட், நான் நார்மலாதான் இருக்கேன். உங்க காதல் அளவுக்கு எங்களுக்குள்ள லவ் இல்ல. அவன் போனது எனக்கு வலிக்குது தான்… ஆனா இது காதலால் வந்த வலி இல்ல. ஒரு நல்ல ஃப்ரண்ட் என் முதுகில் குத்தின வலி… அவன் என்னைவிட்டுப் போனதுகூட என்னைப் பெருசா பாதிக்கவே இல்ல… சோ, நீ எதுவும் அவன்கிட்டப் பேச வேணாம். எனக்கு ஆலன் வேணாம்னு நான் முடிவு பண்ணிட்டேன். எனக்கு என் குடும்பமும், உங்க ரெண்டு பேருக்கும் பிறக்கும் குட்டிப் பாப்பாவும் மட்டும் போதும்… நான் சந்தோஷமா தான் இருக்கேன். எனக்கு எந்த வருத்தமும் இல்ல மா" என்றான் ஆதர்ஷன். 


"இல்ல ஆது… என்னால உங்கள மாதிரி இருக்க முடியாது… அந்தப் பன்னியை நல்லா நாலு வார்த்தை கேட்டால் தான் என் மனசு ஆறும். என் ஆதுவை, நீ என்ன விட்டுப் போறது? என் பாஸ்க்கு முதல்ல நீ வேணாம்… அவருக்கு உன்னைவிட பெஸ்ட்டான லைஃப் பாட்னர் கிடைக்கும்… நீதான் காலம் பூராவும் அவரை மிஸ் பண்ணதை நினைச்சு அழப் போறேன்னு அவன்கிட்டச் சொல்லனும்" என்று கோவத்தில் கொதிக்க அவளைச் சலிப்பாகப் பார்த்த ஆதர்ஷ், 


"அதெல்லாம் ஒரு மண்ணும் வேணாம்… வயித்துல குழந்தையை வச்சிட்டு ஏன் தன்வி இப்படி டென்ஷன் ஆகிட்டு இருக்க? நீ கொஞ்சம் அமைதியா இரு" என்றவன் கவனிக்கவில்லை, அவள் பேச்சில் அவளின் அடுத்த திட்டம் ஒளிந்திருந்ததை. அவன் கவனிக்காததை அவளவன் சரியாகக் கவனித்துவிட, "சைக்கிள் கேப்ல இவனுக்கு ஒரு லைஃப் பாட்னர் வரணும்னு பிட்டுப் போட்டா பாரு…" என்று நினைத்தவனுக்கு அப்படி நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது.


அதுவரை அவர்கள் இருவரும் தன்வியிடம் மறைத்த உண்மைகள் அனைத்தையும் சொல்லிய பிறகு, அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று, அமைதியாக எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்த தன்வி முகத்தையே பார்த்திருந்தனர் சகோதரர்கள் இருவரும்.


"ப்ளீஸ் தன்வி… இப்படி அமைதியா இருக்காத, எனக்கு ஒரு மாதிரி இருக்கு… நீ எங்களை எவ்வளவு திட்டனுமோ திட்டிக்கோ, இல்ல அடிக்கணுமா அடிச்சிக்கோ… ஆனா, இப்படி அமைதியா இருக்காத…" என்று ஆதர்ஷன் கெஞ்ச,


"நாங்க செஞ்சது ஏமாத்து வேலைதான் ஒத்துக்குறோம். ஆனா, இதெல்லாம் நாங்க உனக்காக தான்டி செஞ்சோம்." என்ற கணவனைத் தன்வி முறைத்துப் பார்க்க, "சரிரிரி… இவன் நீ நல்லா இருக்கணும்னு செஞ்சான். நான் என் காதலுக்காகச் செஞ்சேன்… ஆல் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார் யூ நோ" என்ற கணவன் மீது அங்கிருந்து புத்தகத்தை அவள் தூக்கியடிக்க, அதை அழகாகக் கேட்ச் பிடித்தவன், "இதோ பாருடி, பேச்சு பேச்சாதான் இருக்கணும்… இப்படி வன்முறை எல்லாம் கையில எடுக்கக் கூடாது" என்றவனை மேலும் மேலும் முறைத்தாள் அவன் மனையாள்.


பொறுத்துப் பார்த்த ஆதர்ஷன், "ஓகே தன்வி, நாங்க செஞ்சது தப்புதான்… இப்ப நாங்க என்ன பண்ணனும்னு சொல்லு? நாங்க என்ன செஞ்சா உன் கோவம் போகும்" என்று கேட்டான்.


"நான் என்ன கேட்டாலும் செய்வீங்களா?" என்று கேட்டாள் அழுத்தமான குரலில்.


அந்தக் குரலே சொன்னது அவள் ஏதோ பெரிய ஆப்பை ஆதர்ஷனுக்காக யோசித்து வைத்திருக்கிறாள் என்பதை. இருந்தாலும் தன் தன்விக்காக எதையும் செய்யும் ஆதர்ஷ் இப்போது அவள் என்ன கேட்டாலும் செய்வதென்று முடிவெடுத்தவன், "என்ன வேணும் கேளு" என்றான் உறுதியாக.


"ம்ஹும்…" என்று தலையை இடவலமாக ஆட்டியவள், "இப்ப வேணாம். தேவை வரும்போது கேக்குறேன். அப்ப நிச்சயம் நான் சொல்றதை நீங்க செய்வீங்கன்னு நம்புறேன்" என்றாள் அழுத்தமான குரலில்.


"ம்ம்ம்… தசரதன்கிட்ட கைகேயி கேட்ட மாதிரி கேக்குற… அவங்க செஞ்ச மாதிரி என்னைக் காட்டுக்கு அனுப்பாம இருந்தால் சரி" என்று அவன் கிண்டலாகச் சொன்னாலும், அவள் மனதில் ஏதோ திட்டம் வைத்திருக்கிறாள் என்று அவளைச் சிறுவயதில் இருந்து வளர்த்த அவனுக்குத் தெரியாமல் போகுமா என்ன? இருந்தாலும் அவள் கேட்பதைக் கொடுப்பதாகச் சொன்னான், அவள் விருப்பத்தைக் கேக்கும்போது அவன் நிலைகுலைந்து போவான் என்று அறியாமல்.


ஆதர்ஷனிடம் பேசிய தன்வி, திரும்பித் தன்னவனை அழுத்தமாகப் பார்த்தபடி, "எனக்கு உங்க மேல இருந்தது வருத்தம்… அது இப்பப் போய்டுச்சு, ஆனா, அதோ அந்த ஆள் மேல இருக்குறது கோவம்…" என்று அதீஷனைச் சுட்டிக் காட்டியவள், "என் கோவம் இப்போதைக்குப் போகாது… அது போகும் வரை நான் அந்த ஆள் கூடப் பேச மாட்டேன்" என்று சொல்ல, அதீஷனுக்கு தூக்கி வாரிப் போட்டது.


"ஏய்! ஏய்! இதெல்லாம் நியாயமே இல்ல… இந்த ஸ்கிரிப்டுல மெயின் கல்ப்ரிட்டே அவன் தான்டி… நீ என்னடான்னா அவனைவிட்டு எனக்கு பனிஷ்மென்ட் தர்ற… இதெல்லாம் ரொம்ப மோசம். வேணும்னா என்னை நாலு இல்ல எட்டடி கூட அடிச்சிக்கோ… ஆனால், பேசாம எல்லாம் இருக்காதடி… எனக்குப் பைத்தியமே புடிச்சிடும்" என்று சொல்ல அவளோ, "ம்க்கும்,... இனிமேதான் புடிக்கணுமாக்கும்…" என்று சலித்துக் கொள்ள, ஆதர்ஷனும், அமிர்தாவும் வந்த சிரிப்பை அடக்கப் படாதபாடு பட்டனர்.


"ஆமாடி, நான் பைத்தியம் தான்… உன் மேல பைத்தியம். அதை நினைச்சு எனக்கு எந்த வருத்தமும் இல்ல. அதைவிடு, நீ இப்ப என்ன தான் சொல்ற?” என்றான் பாவமாக.


"அதான் சொல்லியாச்சே. என் கோவம் போற வரை பேச மாட்டேன்." என்றாள் உறுதியாக.


"சரி… உன் கோவம் எப்பப் போகும்? ஒரு டைம் சொல்லு" என்றான் அப்பாவியாக‌.


"தெரியல… ஒரு வாரம் ஆகலாம், ஒரு மாசம். இல்ல, வருஷம் கூட ஆகலாம்… இல்ல சமாதானம் ஆகாமல் கூடப் போகலாம்" என்றாள் எங்கோ வெறித்தபடி. 


அதுவரை விளையாட்டுத் தனமாக அவளுடன் சரிக்கு சரி பேசியவன் புருவங்கள் சட்டென யோசனையில் சுருங்கி விரிய, யாரும் பார்க்கும் முன் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு, "ப்ளீஸ்டி, எதுவும் தப்பா யோசிக்காத" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னவன், அவளை ஒரு தவிப்போடு பார்த்தான்.


அதைக் கேட்டு கண்களை இறுக மூடித் திறந்தவள் திரும்பி அமிர்தாவைப் பார்த்து, "அம்மா… ரொம்ப நேரம் உக்காந்திருந்தது, இடுப்பெல்லாம் வலிக்குது… பசி வேற எடுக்குதுமா, சாப்பிட எதாவது வேணும்…" என்றவள், "அப்புறம் அம்மா ஆதுவுக்கும், இந்த பிராடு பையனுக்கும் சாப்பாடு எதுவும் தராதீங்க… என்னை ஏமாத்தினதுக்கு பட்டினி கிடக்கட்டும் ரெண்டும்" என்றவள், "வாங்கம்மா" என்றபடி முன்னே செல்ல, அமிர்தாவுக்குச் சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டுச் சிரித்து விட்டார்.


ஊரையே தன் ஆளுமையால கட்டி ஆளும் தன் இரு மகன்களையும் இந்தக் குட்டிப்பெண் ஆட்டிப் படைப்பதை நினைத்து ஒருபக்கம் சிரிப்பு வந்தாலும் ஒரு பக்கம் வியப்பாகவும் இருந்தது. அதுவும் அதீஷன்? யாருக்கும் அடங்காமல் காட்டாறு போல் ஓடித் திரிந்தவன், அவனையே தன் அன்பு என்ற ஒன்றை வைத்து முழுதாக அவனைத் தன் வசப்படுத்தி இருக்கும் மருமகளைப் பார்த்தவருக்கு உள்ளுக்குள் அத்தனை நிறைவாக இருந்தது. 


விளையாட்டு போல் ஒரு வாரம் ஓடிவிட்டது. இந்த ஒரு வாரத்தில் அதீஷன் தன்னவள் பின்னாலேயே குட்டி போட்ட பூனை போல் சுற்றிச் சுற்றி வர, அவளோ ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவனை அலைய விட்டாள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அதீஷன், கையில் இருந்த புகைப்படங்களைக் கோவமாகப் பார்த்தவன், அவைகளை எடுத்துக்கொண்டு நேராக அவள் அறைக்குச் சொல்ல, அங்கு அவளோ ஃபோனில் யாருடனோ எதையோ தீவிரமாகப் பேசிக் கொண்டு இருந்தாள்.


இவனைப் பார்த்ததும் சட்டென அழைப்பைத் துண்டித்து விட்டு, பதட்டமாகக் கைகளைப் பிசைந்தபடி எழுந்து நிற்க, அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்த அதீஷன், "என்ன மேடம்? ஃபுல் ஸ்டாப் வச்ச பழைய காதலுக்கு மறுபடியும் கமா போட்டுட்டு இருக்கீங்க போல" என்று கேட்டதும்தான் தன்வி, 


"வாட் நான்சென்ஸ்… என்ன உளறிட்டு இருக்கீங்க?" என்று கத்தியவள், அவன் காட்டிய புகைப்படங்களைப் பார்த்ததும், அப்படியே நெஞ்சில் கைவைத்து அமர்ந்து விட்டாள்.