விழி வழி காதல் நுழைந்ததடி 26

விழி 26


வீரராகவன் காரில் முன்புறம் அமர்ந்து கொள்ள, தன்வியைப் பின்புற இருக்கையில் பத்திரமாக அமர வைத்துவிட்டு, சீட் பெல்ட்டை அவளின் வயிற்றில் அழுத்தம் கொடுக்காதபடி பதமாகப் போட்டு விட்டவன், அவள் அருகில் அமர்ந்து கொண்டான். 


கார் புறப்பட்டு சீரான வேகத்தில் சென்று கொண்டு இருக்க, இங்கு நொடிக்கு நொடி ஆதர்ஷனின் முகத்தில் இறுக்கமும், பயமும் கூடிக் கொண்டே போனது. தன்வியும் அதை கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். அவன் முகமே அவளுக்கு அவன் தனக்கு வைத்திருக்கும் அதிர்ச்சியின் அளவை‌ச் சொல்லாமல் சொன்னது. 


அவனுக்குள்ளேயே இவ்வளவு பதட்டம் பயம் என்றால் அதைக் கேட்கப் போகும் தன்னிலை என்ன என்று யோசிக்கவே அவளுக்கு நடுக்கமாக இருந்தது. அந்த நடுக்கத்திற்கு ஆறுதலாகக் கணவனின் கை வளைவில் தன் கையைக் கோர்த்துக் கொண்டவள், அப்படியே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.


அதுவரை வெளியே பார்வையைப் பதித்திருந்த ஆதர்ஷன் திரும்பி தன்வியைப் பார்த்தான். அவள் தன் கையை இறுக்கமாகப் பிடித்திருந்த விதமே அவளின் மனநிலையை அவனுக்கு உணர்த்த, மென்மையாக அவள் தலையை வருடியபடி அவளின் உச்சந்தலையில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தவன், அவளைத் தன் தோளோடு வளைத்து கைகளால் காற்றுக்கூட நுழைய முடியாதபடி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். 


அவனின் நெஞ்சில் சாய்ந்திருந்தவளுக்கு அவனது வேகமான இதயத்துடிப்பு தெளிவாகக் கேட்டது. அவன் நெஞ்சில் சாய்ந்தபடியே முகத்தை நிமிர்த்தித் தன்னவன் முகத்தைப் பார்த்தவள், பார்வையைத் திருப்பி முன்னிருக்கையில் இருந்த வீரராகவனைப் பார்த்தாள். 


அவர் காரின் ஐன்னல் வழியே வெளியே பார்வையைப் பதிந்திருந்ததை உறுதிப்படுத்தியவள், சட்டென எம்பி அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.


அவளின் திடீர் முத்தத்தில் அதிர்ந்த ஆதர்ஷன், குனிந்து அவள் முகம் பார்க்க, தன் கண்கள் வழியே அவனை ஊடுருவும் பார்வை பார்த்தவள், தன் கையை எடுத்து ஆதர்ஷன் நெஞ்சின் மேல் வைத்து அழுத்தியபடி, "என்ன ஆனாலும், எவ்ளோ பெரிய பிரச்சனை வந்தாலும், எல்லாப் பிரச்சனைகளுக்கும் நீங்களே காரணமா இருந்தாலும், நீங்க என்னை ஏமாத்தியே இருந்தாலும் கூட…" என்று நிறுத்தியவள் அவன் கன்னத்தில் தன் கையை வைத்து அழுத்திக் கொண்டு, அவன் விழிகளைப் பார்த்துக் கொண்டே, "நான் என் தஷ்ஷை விட்டுப் போக மாட்டேன். இந்த ஜென்மத்தில் உங்களை விட்டு எங்கயும் போக மாட்டேன்." என்று மெல்லிய குரலில், அதே சமயம் உறுதியாகச் சொல்ல, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களில் இருந்து அவனையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது.


ஆறடி ஆண்மகன் அவனை, அவளின் ஒரு ஆறுதல் வார்த்தை மொத்தமாகச் சாய்த்திருந்தது. 


அவனின் கலங்கிய கண்களைத் துடைத்துவிட்ட தன்வி, "எதைப் பத்தியும் யோசிக்காம வாங்க." என்றவள் ஒரு நிமிடம் நிறுத்தி, "எம் புருஷன் அழுதா எனக்குப் புடிக்காது." என்று முறைப்புடன் சொல்லியபடி, அவனின் கண்களைத் துடைத்துவிட, அவன் இதழ்கள் மெல்ல விரிந்து கொண்டது.


அரைமணி நேரப் பயணத்தின் முடிவில் கார் ஒரு அழகிய வீட்டின் முன் நின்றது. 


ஆதர்ஷ் முதலில் இறங்கியவன், சுற்றி வந்து தன்வி பக்கமிருந்த கதவைத் திறந்து அவளின் கையைப் பிடித்து மெதுவாகக் கீழே இறக்கி விட்டான். வீரராகவன் தன் பேரனின் ஒவ்வொரு செயலையும் மனநிறைவோடு பார்த்துக் கொண்டிருந்தார்.


தன்வி காரில் இருந்து இறங்கியவள், விழிகளைச் சுழல விட்டபடி அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டு நின்றாள். 


அழகிய வெள்ளை நிறத்தில் பெரிதும் இல்லாமல் சிறிதும் இல்லாமல், சுற்றியும் மலர்ச் செடிகள் சூழ்ந்திருக்க, கேட்டில் இருந்து வீட்டு வாசல் வரை வெள்ளை நிறக் கூழாங்கற்கள் கொண்டு பாதை அமைந்திருந்தது. அந்தப் பாதையின் இருபுறமும் பச்சைப் போர்வை விரித்தது போல் இருந்த புல்வெளி நடுவில் அழகிய ஒவியம் போல் காட்சியளித்தது அந்த வீடு. அந்த வீட்டின் அழகில் தன்வி தன்னை மறந்து நின்றிருக்க, "வெல்கம் யுவர் ஹோம் பாப்பா" என்று கேட்ட பெண் குரலில் தன்வி திரும்பிப் பார்க்க அங்கு அவளைப் பாசம் பொங்கப் பார்த்தபடி நின்றார் ஒரு நடுத்தர வயதுப் பெண். 


அவரைப் பார்த்ததும் தன்வியின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது. அடுத்த கணமே அவள் நினைவடுக்கில் அந்தப் பெண்மணியின் அடையாளத்தை வேகமாகப் புரட்டிப் பார்த்த நேரம், ஆரத்தித் தட்டுடன் அவளின் முன் வந்து நின்றவர், மெல்லத் தன்வியின் கன்னத்தை வருடியபடி, "எத்தனை வருஷம் ஆச்சு உன்னைப் பாத்து? எவ்ளோ பெருசா வளர்ந்துட்ட பாப்பா நீ!" என்றவர் கண்கள் லேசாகக் கலங்கிவிட, தன்விக்கு ஏனோ அவர் கண்கள் கலங்குவதைப் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. அவளுக்கு ஏனோ அந்தப் பெண்மணியின் ஸ்பரிசம் அன்னியமாகத் தோன்றவே இல்லை. எப்போதோ பார்த்துப் பழகியது போன்ற ஒரு உணர்வு அவளுக்குத் தோன்றியது. ஆனால், அந்த உணர்வு எதனால் என்று அவளுக்குப் புரியவில்லை. 


தன்வியின் முகத்தில் அவளின் மனதைப் படித்த அந்தப் பெண், "நீ என்ன யோசிக்குறன்னு எனக்குப் புரியுது தன்வி, இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்கு எல்லாம் தெரிய வரும். சோ அதுவரை பொறுமையா இரு" என்றவர் திரும்பி வீரராகவனைப் பார்த்தார்.


அவரால் அந்தப் பெண்ணை ஏறிட்டுப் பார்க்க கூட முடியவில்லை. குற்றவுணர்வில் அவர் கண்கள் கலங்கிப்போக, அவரைப் பார்த்து இடவலமாக தலையாட்டிய அந்தப் பெண் எல்லாம் சரியாகிவிடும் என்பது போல் 

ஆறுதலாகக் கண்களை மூடித் திறக்க வீரராகவன் தன் கண்களைத் துடைத்துக் கொள்ள, அந்தப் பெண்மணி திரும்பி தன்வியைப் பார்த்தார்.


"நீ இப்படி நில்லுமா" என்றவர், "டேய் அதி… நீயும் வந்து உன் பொண்டாட்டி பக்கத்தில் நில்லு" என்று சொல்ல, அவனும் மறுபேச்சு பேசாமல் தன்வி அருகில் வந்து நின்றான்.


இருவருக்கும் ஆரத்தி சுற்றி முடித்தவர், "ம்ம்ம்… இப்ப தன்வியைக் கூட்டிட்டு உள்ள போ" என்று சொல்ல, கணவனுடன் தன்னுடைய இன்னொரு புகுந்த வீட்டிற்குள் தன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றாள் தன்வி.


வீட்டின் உள்ளே வந்த தன்விக்கு எல்லாம் புதிராகவே இருந்தது. இழுத்துப் பெருமூச்சு விட்டுத் தன்னை சமன்படுத்தியவள், அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். மிகவும் நேர்த்தியாக அழகாக இருந்தது அந்த வீடு. அப்படியே சுற்றிப் பார்த்தவள் கண்கள் ஒர் இடத்தைப் பார்த்து மலைத்துப் போய் விரிந்து கொண்டது. 


அங்கு ஒரு பக்கச் சுவர் முழுவதும் அவர்களின் திருமண புகைப்படம் பெரிதாக அலங்கரித்து இருந்ததைப் பார்த்தவளுக்கு ஆனந்த அதிர்ச்சி தான். 


'இந்த வீட்ல எதுக்கு நம்ம மேரேஜ் ஃபோட்டோ இருக்கு' என்று யோசித்தபடி தன்வி அந்தப் படத்தைப் பார்த்தபடி இருக்க, ஆதர்ஷ் அவள் அருகில் வந்தவன், "தன்வி" என்றழைத்தான்‌.


அவளும் திரும்பிப் பார்க்க, "இவங்களை உனக்கு ஞாபகம் இருக்கா?" என்று கேட்டான் அந்தப் பெண்மணியைக் காட்டி.


தன்வி மெதுவாக இல்லை என்று தலையாட்டியவள், "யார்னு தெரியல… ஆனா, இவங்களை எப்பவோ நான் பாத்துருக்கேன்னு மனசுக்குத் தோணுது. இவங்க என்னைத் தொடும்போது, அவங்க ஸ்பரிசம் எனக்கு அன்னியமாத் தெரியல" என்று அந்தப் பெண்ணைப் பார்த்தபடி சொல்ல, அதைக் கேட்ட அந்தப் பெண்ணின் முகம் புன்னகையில் விரிந்து கொண்டது.


"ஆமா தன்வி, இவங்க உனக்கு அன்னியம் இல்ல… நீ பிறந்ததில் இருந்து அவங்களுக்கு உன்னைத் தெரியும்." என்றவன் தன்வியை அழைத்து வந்து அவர் முன் நிறுத்தி, "இவங்க தான் உங்க அம்மாக்கு டெலிவரி ஆகும்போது கூடவே இருந்தது‌. நீ பிறந்ததும் உன்னை முதல் முதல்ல கையில் வாங்கி உன் அருமை ஆது கையில் கொடுத்தது இவங்க தான்" என்றவன் ஒரு நிமிடம் நிறுத்தி தன்வியைப் பார்த்து, "இவங்க என்னோட அம்மா, உன்னோட தாத்தா வீரராகவனோட மருமகள்‌. மிஸஸ்‌.அமிர்தா விஜயராகவன்." என்று அவன் சாதாரணமாகச் சொல்ல, அதைக் கேட்ட தன்வியின் கண்கள் தான் அதிர்ச்சியில் விரிந்து கொள்ள, தன் கையை எடுத்து நெஞ்சில் வைத்துக் கொண்டாள்.


"என்..என்ன சொல்றீங்க? இவங்க உங்..உங்க அம்மாவா?" என்று நம்ப முடியாமல் கேட்டவள், திரும்பி வீரராகவனைப் பார்க்க அவர் தலையைக் குனிந்து கொண்டார். 


இதுவரை தன்விக்கு ஆதர்ஷனின் தாய் பற்றிப் பெரிதாக எதுவும் தெரியாது. வீரராகவனும் சரி, ஆதர்ஷனும் சரி அவளிடம் அமிர்தாவைப் பற்றி எதுவும் சொன்னதில்லை. சிறுவயதில் அவள் ஆதர்ஷனின் தாய் பற்றிக் கேட்டபோது வீரராகவன் அவளைத் திட்டிவிட, அதன் பிறகு தாத்தாவைக் கோவப்படுத்தக் கூடாது என்பதற்காக அவள் அமிர்தா பற்றிப் பேசவே இல்லை. 


அப்படி இருக்க, இப்போது இங்கு தன் கண்முன் நிற்கும் தன்னவனின் தாயைப் பார்த்துக் குழம்பி நின்றாள் தன்வி.


"இ..இவங்க" என்றவளுக்குப் பேச்சு வராமல் போக ஒரு தவிப்போடு ஆதர்ஷனைப் பார்த்தாள். 


"ரிலாக்ஸ் தன்வி… டென்ஷன் ஆகாத, இன்னும் இதைவிடப் பெரிய பெரிய விஷயம் எல்லாம் உனக்காகக் காத்திருக்கு" என்றவன் தொடர்ந்து, "மேல போய், ரைட் சைட்ல இருக்க ரூம்ல ப்ரஷ் அப் பண்ணிட்டு ஒரு டென் மினிட்ஸ் ரிலாக்ஸ் பண்ணிட்டு வா… அப்புறம் பேசலாம்" என்றதும், தன்விக்கும் அந்த நேரம் தன்னைச் சமன்படுத்த கொஞ்ச அவகாசம் தேவைப்பட்டது. உடனே திரும்பி அமிர்தாவைப் பார்த்தாள்.


மருமகளைப் பார்த்து மென்மையாகச் சிரித்த அமிர்தா, "போடா… போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு" என்று சொல்ல, சரி என்று தலையாட்டியபடியே படி ஏறி மேலே சென்றவள், அங்கிருந்து ஆதர்ஷன் சொன்ன அறைக்குள் நுழைந்து கொண்டாள். 


அறைக்குள் நுழைந்து அங்கிருந்த கட்டிலில் பொத்தென்று அமர்ந்த தன்வியின் மனது ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. 'தஷ் அம்மா இன்னும் உயிரோட தான் இருக்காங்க…' என்று யோசித்தவளுக்கு, அப்போது தான், ‘ஆமா, அவங்க இறந்துட்டதாவும் யாரும் இதுவரை சொன்னது இல்லையே’ என்று ஞாபகம் வர, ‘அப்ப ஏன் தாத்தாவும் தஷ்ஷும் இவங்களைப் பத்தி என்கிட்ட எதுவும் சொல்லல? இவங்க ஏன் நம்ம வீட்ல இல்லாம இங்க இருக்காங்க? தாத்தா இவங்களைப் பாத்ததும் ஒருமாதிரி ஆகிட்டாரு. அவர் கண்ணு, அவங்களுக்குத் தப்பு பண்ணிட்டு, மன்னிப்புக் கேக்குற மாதிரி கெஞ்சிட்டு இருந்துச்சே… அப்ப தாத்தா தான் அவங்களை வீட்டைவிட்டு அனுப்பிட்டாரா?’ என்று பலவாறு யோசிக்க யோசிக்க அவளுக்குத் தலையே சுற்றியது. 


ஒரு கட்டத்தில் தலையை உலுக்கித் தன்னை சீர் படுத்தியவள், 'இவ்ளோ நாள் வெய்ட் பண்ணியாச்சு… இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லா உண்மைகளும் தெரியத்தான போகுது, அதுவரை பொறுமையா இருப்போம்' என்று நினைத்தவள், எழுந்து சென்று முகத்தைக் கழுவி விட்டு வந்து மீண்டும் கட்டிலில் சாய்ந்தபடி அமர்ந்தவள், கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போயிருந்தாள். 


அந்த சமயம் கீழே, வீரராகவனுக்கு நடந்த அனைத்தையும் சொல்லி முடித்திருந்தாள் அமிர்தா. பேரன் பற்றிய உண்மையைக் கேட்டவருக்குத் தலையில் இடி விழுந்த உணர்வு. இப்படி ஒரு அதிர்ச்சியை அவர் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. 


"ஏன்… ஏன் என் குடும்பத்தில் இப்படி நடக்கணும். இவனுக்கு ஏன் புத்தி இப்படிப் போச்சு" என்று தலையில் அடித்துக் கொண்டு அழுத வீரராகவனைப் பார்க்க ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் மறுபக்கம் பிரச்சனை இவ்வளவு தீவிரமாக இவரின் இந்த மனநிலை தான் காரணம் என்று நினைத்த அமிர்தாவுக்குச் சற்றுக் கோவம் தான்.


"ப்ளீஸ் மாமா… இதுல என் பையன் மேல எந்தத் தப்பும் இல்ல. அவனோட தாத்தா உங்களுக்கே இந்த உண்மை இவ்ளோ வலிக்கும் போது, ஒரு தாயா இந்த உண்மை எனக்குத் தெரிஞ்ச போதும், ஆலன் பத்தித் தெரியும் போதும் எனக்கு எப்படி வலிச்சிருக்கும்னு யோசிச்சுப் பாருங்க." என்றவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, இமைகளை மூடித் திறந்து கண்ணீரை விரட்டியடித்தவர், "எனக்குத் தெரியும் மாமா, இது இயற்கைக்குப் புறம்பான ஒன்னு தான். சமுதாயம் இதை ஏத்துக்காது தான். ஆனா, இதுல ஆது மேல எந்தத் தப்பும் இல்லயே மாமா. இது நோய் இல்ல, எத்தனை லட்சம் இல்ல கோடி செலவானாலும் பரவாயில்லன்னு ட்ரீட்மென்ட் பண்றதுக்கு, இது மனசும் உணர்வும் சம்பந்தப்பட்ட விஷயம். இதுல அவனாலேயே ஒன்னும் பண்ண முடியாத போது, நம்மால என்ன பண்ணிட முடியும்… இதை அவன் உங்ககிட்ட சொன்னா கண்டிப்பா நீங்க புரிஞ்சிக்க மாட்டீங்க. அதான் அவன் உங்ககிட்ட எதுவும் சொல்லல… ஆனா, எப்ப நீங்க தன்வியை அவனைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னீங்களோ அப்ப தான் அவன் ரொம்ப பயந்துட்டான். அந்த டைம் அவனுக்கு இருந்த ஒரு ஆறுதல் தன்விக்கு அவன் மேல லவ் எதுவும் இல்லைன்றதும், நீங்க அவங்க ரெண்டு பேர் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு போர்ஸ் பண்ணாம இருந்ததும் தான்‌. அந்த டைம் தான் தன்விக்கு ஆதர்ஷ், ஆலன் பத்திய உண்மை தெரிஞ்சுது. ஆனா, உண்மை தெரிஞ்சு அவ விலகிப் போவான்னு அவன் நினைச்சா, உண்மை தெரிஞ்ச அப்புறம் அவ எடுத்த முடிவு…" என்றவர் பெருமூச்சு விட்டபடி, "அவ சொன்னதைக் கேட்டு ஆதுக்குப் பைத்தியமே புடிச்சிடுச்சு மாமா. எவ்ளோ சொல்லியும் அவ மாறல… அதுதான் ஆதுவை இப்படி ஒரு காரியத்தைச் செய்ய வச்சிடுச்சு. அவனைப் பொறுத்தவரை இன்னமும் தன்வி அவனுக்குக் குழந்தை தான். அவன் தூக்கி வளர்த்த குழந்தை. அவ லைஃப் லாங் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவன் அவன். ஆனா, அவனாலேயே அவ வாழ்க்கை பாழாகிடுமோன்னு நினைச்சு அவன் எப்படித் துடிச்சான் தெரியுமா மாமா உங்களுக்கு. தன்விக்கு எவ்வளவோ சொல்லிப் புரிய வைக்கப் பார்த்தான். ஆனா, அவ கடைசி வரை அவ முடிவில் உறுதியா இருந்தா… வேற வழி இல்லாம ஆது பணம் கொடுத்து யாரையும் பொண்டாட்டியாக் கூட்டி வருவேன்னு கூடச் சொல்லிப் பாத்துட்டான்‌.‌.. ஆனா, அவ கேக்கல. கடைசியா அவ செத்துடுவேன்னு மிரட்டினதும் தான், இவனுக்கு அவ அந்தக் கல்யாண முடிவில் இருந்து இனி மாற மாட்டான்னு புரிஞ்சிது. அதுக்குப் பிறகு என்ன பண்றதுன்னு புரியாம தான் அவன் இங்க வந்தான். அதுக்குப் பிறகு நடந்தது எதுவும் யாரும் எதிர்பார்க்காது தான். ஆனா, நடந்த எல்லாம் நல்லது தான். நீங்க ஆசைப்பட்ட படி" என்றவர் ஒரு நிமிடம் நிறுத்தி, "நான் ஆசைப்பட்டபடி நான் தூக்கி வளர்த்த என்னோட தன்வி பாப்பா எனக்கு மருமகளா வந்துட்டா" என்று மனநிறைவோடு சொல்ல, அதற்கு மேல் வீரராகவனுக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. அமைதியாக அங்கிருந்து எழுந்து சென்றுவிட, அமிர்தா அருகில் வந்து அமர்ந்தான் அவரின் செல்லமகன்.


மகனின் தலையை மென்மையாகக் கோதிவிட்ட அமிர்தா, "எல்லாம் சரியாகிடும் டா… தாத்தா கண்டிப்பா புரிஞ்சிக்குவாரு… என்ன, கொஞ்சம் டைம் ஆகும் அவ்ளோதான்." என்க, அவரின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டவன், "த… தன்விக்கு இதெல்லாம் தெரிஞ்சா அவ இதை எப்படி எடுத்துப்பான்னு தெரியலயே மா? அவ… அவ என்னை மன்னிச்சிடுவா தானே?" என்று பாவமாகக் கேட்க, அவனை அதிசயமாகப் பார்த்தார் அமிர்தா.


இதுவரை அவன் இப்படி உடைந்து போய் அவர் பார்த்தது இல்லயே… எதிலும் வெற்றியை மட்டுமே பார்த்துப் பழகியவன் அவன். தைரியத்தின் மறு உருவம் தன் மகன் என்று நினைத்திருந்தவருக்கு, இன்று சின்னப் பிள்ளை போல் தன் மடியில் படுத்துக் கொண்டு பயத்தில் கலங்கும் தன் மகனைப் பார்க்க வியப்பாக இருந்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லயே… 


"மை காட்" என்று வாயில் கை வைத்தவர், "என் மகனை என்ன பண்ணி வச்சிருக்க தன்வி நீ" என்று கிண்டலாகச் சொல்ல, அதைக் கேட்டு அவர் மடியில் இருந்து எழுந்து கொண்டவன் முகம் வெட்கத்தில் மின்ன, ஆச்சரியத்தில் கண்களை விரித்த அமிர்தா, "டேய் என்னடா இது!" என்று கன்னத்தை தொட்டுப் பார்த்தவர், "அதி… நீ வெட்கப்படுற டா மகனே" என்று சொல்ல அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.


"போங்கம்மா… உங்களுக்கு வேற வேல இல்ல. நான் ஒன்னும் வெட்கப்படல" என்றவன் அங்கிருந்து வேகமாகச் சென்று விட, அமிர்தா வாய் விட்டே சிரித்து விட்டார்.


மெதுவாக உடலை அசைத்துத் தூக்கத்தில் இருந்து எழுந்த தன்வி அங்கிருந்த கடிகாரத்தைப் பார்க்க, அது காலை மணி பனிரெண்டு என்று சொல்லியது. அதைப் பார்த்து அடித்துப் பிடித்து எழுந்தவள், ‘என்ன தன்வி நீ? இப்படியா வந்த இடத்தில் தூங்குறது.’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டவள், ‘சும்மா கண்ணை மூடிப் படுத்தேன்‌. எப்படி டூ அவர்ஸ் போச்சின்னே தெரியல’ என்றவளுக்குக் கதவு தட்டும் ஓசை கேட்டது. 


மெல்ல எழுந்து சென்று கதவைத் திறந்து பார்க்க, அங்கு சிரித்த முகத்துடன் கைகளில் உணவுத் தட்டுடன் நின்றிருந்தார் அவளின் மாமியார்.


"நல்லாத் தூங்குனியா தன்வி?" என்று கேட்டபடி அவர் உள்ளே வர, ஒருவிதக் கூச்சத்தோடு அவரைப் பார்த்தவள், "சாரி, சும்மா தான் உக்கார்ந்துட்டு இருந்தேன், எப்படித் தூங்கினேன்னே தெரியல, ப்ளீஸ் கோச்சிக்காதீங்க" என்று பாவம் போல் சொல்ல அவளின் குழந்தை முகத்தைப் பார்த்த அமிர்தா, "உன் முகத்தைப் பார்த்த அப்புறம் கோவம் கூட வருமா என்ன?" என்றவர், "உனக்கு ஜெட் லாக் இருக்கும்னு எனக்குத் தெரியும்டா. சோ, நான் தப்பா நினைப்பேன்னு நீ ஒன்னும் யோசிக்க வேணாம் புரியுதா… அதோட நானும் உனக்கு அம்மா தான். சோ, என்கிட்ட உனக்கு எந்தத் தயக்கமும் தேவையில்லை." என்று அன்பாகச் சொல்ல, அதைக்கேட்ட சின்னவள் கண்கள் கலங்கி விட்டது. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தவளுக்கு மாமியார் உருவத்தில் தன் தாய் திரும்பிக் கிடைத்திருப்பதை நினைத்து நெஞ்சம் எல்லாம் மகிழ்ச்சி நிறைந்து வழிந்தது.


அறையிலேயே மாமியார் கொடுத்த உணவை உண்டு முடித்தவள், "அவரு, நீங்க, தாத்தா எல்லாம் சாப்பிட்டீங்களா?" என்று கேட்டாள் அக்கறையாக. 


அமிர்தா அவள் தலை முடியை வருடியபடி, "நாங்க எல்லாம் சாப்பிட்டோம்டா" என்றதும், தயங்கித் தயங்கி, "அ..அவரு எங்கம்மா?" என்று கேட்டாள் மெல்லிய குரலில்.


அதைக் கேட்டு, "எவருமா எங்க?" என்று அவளைக் கேலி செய்ய, அவர் கேலியில் கன்னம் சிவந்தவள், "அம்மா ப்ளீஸ்" என்று கொஞ்சும் குரலில் பேச, சத்தம் போட்டுச் சிரித்த அமிர்தா, "இது ஒன்னும் அவ்ளோ பெரிய வீடெல்லாம் இல்ல, சோ நீயே போய் உன்னோட அவரைத் தேடிப் பாரு… அப்படியே வீட்டையும் சுத்திப் பார்த்த மாதிரி இருக்கும்" என்றவர் அங்கிருந்து செல்ல, தன்வியும் தன்னவனைத் தேடிச் சென்றாள்.


வீட்டைச் சுற்றி வந்தவள், அங்கு ஒருபுறம் இருந்த அழகிய குட்டி சிட் அவுட் பகுதியில் ஆதர்ஷன் நின்றிருப்பதைப் பார்த்தவள், மெதுவாகச் சென்று அவன் அருகில் நின்றவள், "இங்க தான் இருக்கீங்களா, நான் வீடு முழுக்கத் தேடினேன் உங்களை த…" என்று பேசியபடியே அவனின் தோளில் கை வைத்தவளின் "தஷ்" என்ற அழைப்பு பாதியில் நின்றது.


சட்டென அவளின் கையை அவன் தோளில் இருந்து வெடுக்கென்று எடுத்து விட்டவள், அவனை அதிர்ந்து பார்த்தாள்.


மெதுவாகத் திரும்பி அதிர்ச்சியில் உறைந்து நின்றவளை சிறு புன்னகையுடன் பார்த்த ஆதர்ஷன், "எப்படி இருக்க குட்டிப் பாப்பா " என்று அன்பாகக் கேட்க, அவனையே விழி விரித்து அதிர்ந்து பார்த்தவள் இதழ்கள் மெல்ல, "ஆது" என்று முணுமுணுக்க, "ம்ம்ம்… கண்டு புடிச்சிட்டியே! நாட் பேட்" என்றவனை அழுத்தமாகப் பார்த்தவள், "தஷ்?" என்றாள் குரலே வெளி வராத நிலையில்.


ஆதர்ஷன் கண்களால் பின்னால் பார் என்று புருவம் உயர்த்திச் சைகை செய்ய, சட்டெனத் திரும்பிப் பார்த்தவள் பின்னால் நின்றிருந்தான் ஒருவன். 


ஆதர்ஷனை அச்சு அசலாக உறித்து வைத்தது போல் இருந்தான் தன்வியின் கணவன்‌.