விழி வழி காதல் நுழைந்ததடி 27
விழி 27
தன்விக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் பேச்சே வராமல் போக, கண்களில் கண்ணீர் கரைகட்டி நிற்க, இருவரையும் மாறி மாறிப் பார்த்தவள், ஆதர்ஷனைப் பாவமான பார்வை பார்த்தபடி, "என் பாஸ்க்கு எப்பவும் கொடுத்த வாக்கை மீறும் பழக்கமோ, நம்பினவங்களுக்கு துரோகம் செய்யும் பழக்கமோ இல்லையே…" என்றாள் தழுதழுத்த குரலில்.
"உன் ஆதுவுக்கு இப்பவும் அந்தப் பழக்கம் இல்ல தான் தன்வி" என்றான் ஆதர்ஷன் அமைதியாக.
கண்ணீர் துளிர்த்த விழிகளால் அருகில் நின்ற அவள் கணவனைச் சுட்டிக்காட்டி, "அப்ப இதுக்கு என்ன பேரு? நீங்க சொன்னீங்க இல்ல, நீ தான் இந்த வீட்டு மருமக, நம்ம கல்யாணம் நடக்கும்னு" என்றாள் அழுத்தமாக.
"நோ தன்வி, நல்லா யோசிச்சுப் பாரு… நான் நீதான் நம்ம வீட்டு மருமகன்னு தான் சத்தியம் பண்ணனே தவிர, எந்த இடத்திலும் நான் உன்னை மேரேஜ் பண்ணிப்பேன்னு சொல்லவே இல்ல" என்றவனைக் கண்கள் சுருக்கி முறைத்தவள், அதே கோபத்தோடு திரும்பி தஷ்ஷைப் பார்த்தாள்.
"இப்பவாவது நீங்க சொன்னீங்களே, நான் உண்மையைத் தெரிஞ்சிக்கும் நேரம் வரும் வரும்னு… ஐ திங்க், அந்த டைம் இப்ப வந்திடுச்சின்னு நினைக்குறேன் தஷ்" என்றவள் நிறுத்தி, கண்களை மூடித் திறந்து ஆழ்ந்த மூச்செடுத்து, "உங்க பேர் என்ன?" என்று கேட்டாள் வேதனை நிறைந்த குரலில்.
அவளின் அந்த ஒரு கேள்வி அவளவனை மொத்தமாக வதைக்கப் போதுமானதாக இருக்க, அவனுக்கும் கண்கள் கலங்கி விட்டது. அவன் கைத்தாலியை வாங்கி, ஊனும் உயிருமாய் அவனோடு இணைந்து வாழ்ந்து, உயிருக்கு உயிராய்க் காதலித்து, இப்போது அவன் உயிரைத் தன்னுள் சுமப்பவளை இந்த நிலையில் நிறுத்தி விட்டேனே என்ற நினைப்பே அவளவனைக் கொல்லாமல் கொல்ல அமைதியாக அவள் முகம் பார்த்தபடியே தவித்து நின்றான் தன்வியின் கணவன்.
அமிர்தாவுக்குக் கூட தன் மருமகளின் நிலையை நினைத்து நெஞ்சம் கசிந்தது.
"சொல்லுங்க, உங்க நேம் என்ன?" என்று அவள் மீண்டும் அவனைப் பார்த்துக் கேட்க கலங்கிய கண்களுடன், "எல்லாத்துக்கும் சாரி, மிஸஸ். தன்வி அதீஷன்" என்றான் தழுதழுத்த குரலில் அவள் மீதான தன் உரிமையை அழுத்தமாக உறுதிப் படுத்தியபடி.
அதைக் கேட்டவள் மனமோ, 'இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல' என்று முணுமுணுத்தவள், 'அதீஷன்…' என்று தன்னவன் பெயரை மென்மையாக உச்சரித்துப் பார்த்தாள்.
இருவரின் நிலையைப் பார்த்து ஆழ்ந்து மூச்செடுத்த ஆதர்ஷன், "ஓகே தன்வி, நடந்த எல்லாத்தையும் சொல்றேன், அப்புறம் உன் முடிவைச் சொல்லு" என்றவனை இடைமறித்தான் அதீஷன்.
"டேய், அவ ரொம்ப நேரமா நின்னுட்டு இருக்கா, அவளுக்கு கால் வலிக்கும். அவளை உள்ள கூட்டி வந்து உக்கார வச்சிப் பேசு" என்று சொன்னவனைத் தன்வி கண்கள் சுருக்கித் தீயாக முறைக்க, இருவரையும் ஒரு குறுஞ் சிரிப்போடு பார்த்த ஆதர்ஷனுக்கு, தான் எடுத்த முடிவு சரிதான் என்ற நம்பிக்கை வந்தது.
"டேய்… ரொம்பப் பண்ணாத… அவ இங்க வந்து அஞ்சு நிமிஷம் கூட ஆகல. அதுக்குள்ள கால் வலிச்சிடுமா?" என்று கேட்க, அதீஷன் முகத்தில் சட்டென்று ஆயிரம் வாட்ஸ் பல்பு மின்ன, ஆதர்ஷனை நிமிர்ந்து பார்த்தவன், "அவ இப்ப தனி ஆள் இல்லடா" என்றான் மென் குரலில்.
அதீஷன் சொன்னதன் அர்த்தம் அமிர்தாவுக்குப் புரிந்துவிட, பாட்டியானதில் அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. ஆனால், ஆதர்ஷனுக்கு அவன் சொல்ல வருவது என்ன என்று புரியாமல், "ஏன் ஊர்ல இருந்து யாரையும் கூட்டிட்டு வந்திருக்காளா என்ன?" என்று நக்கலாகக் கேட்க, அதீஷன் தலையில் அடித்துக் கொண்டவன், "டேய் லூசு… அவ தனி ஆள் இல்லைன்னா அதுக்கு அர்த்தம்" என்றவன் குரல் சட்டென மென்மையாகி விட, "ஷீ இஸ் ப்ரெக்னன்ட், நான் அப்பா ஆகப் போறேன். உன் குட்டிப் பாப்பாக்கு ஒரு பாப்பா வரப் போகுது" என்று வெட்கம் கலந்த குரலில் சொல்ல, ஆதர்ஷ் பார்வை சட்டென்று தன்வி மேல் ஒரு எதிர்பார்ப்போடு படிந்தது.
அவன், 'ஆமாவா?' என்று கண்களாலேயே கேட்க, அதுவரை கோவத்தில் சிவந்திருந்தவள் முகம் சட்டென வெட்கத்தில் சிவந்து மின்னத் தொடங்க, ஆதர்ஷ் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
"என் தன்வி குட்டிக்கு ஒரு குட்டிப் பாப்பா வரப் போகுது" என்றவனை நிமிர்ந்து பார்த்த தன்வி, "பாஸ்" என்ற கேவியபடி ஓடிச் சென்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
அவள் தலையை மெல்லமாக வருடி விட்டவன், "எனக்கு இப்ப எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா தன்வி, என் மனசு அவ்ளோ நெறஞ்சு போயிருக்கு, என் தன்வி அம்மா ஆகப் போறா…" என்றவன் குரலில் அப்படி ஒரு நிறைவு.
அவர்கள் இருவரையும் பார்த்த அதீஷனுக்கு அவர்கள் இருவரின் இடையில் இருக்கும் அன்பையும் பிணைப்பையும் நினைத்து உள்ளுக்குள் லேசாகப் பொறாமையாக தான் இருந்தது, தன்னவளுக்குத் தன்னை விட அவளின் ஆதுவை நிறையப் பிடிக்கும் என்ற உண்மையில்.
அவன் சட்டையைத் தன் கண்ணீரில் நனைத்தபடி, "இப்பவாச்சும் சொல்லுங்க, என்ன ஆச்சு? ரெண்டு பேரும் சேர்ந்து என்னென்ன பண்ணி வச்சிருக்கீங்க?" என்று கேட்க அவள் கண்ணீரைத் துடைத்த ஆதர்ஷன், "சொல்றேன் தன்வி, எல்லாத்தையும் சொல்றேன், அதுக்கு முன்ன நம்ம உள்ள போயிடலாம். இல்லாட்டி உன் புருஷன் என்னைக் கண்ணுல பார்த்தே எரிச்சிடுவான் போல. வா உள்ள போயிடலாம்" என்றவன் அவளை உள்ளே அழைத்துச் செல்ல மூவரும் அமர்ந்து கொண்டனர்.
தன்விக்கு அருகில் வந்து அமர்ந்துக் கொண்ட அமிர்தா தன்வியின் கையை ஆதரவாகப் பற்றிக் கொள்ள, அவரின் ஸ்பரிசத்தில் தன்விக்குள் புது தைரியம் பிறந்தது.
"ம்ம்ம் சொல்லுங்க… என்ன ஆச்சு? எப்ப இருந்து இந்த நாடகம்? அதுக்கு முன்ன" என்றபடி தன் அத்தையைப் பார்த்தவள், "அத்தையும் என் புருஷனும் ஏன் இங்க தனியா இருக்காங்க? இவங்களைப் பத்தி ஏன் என்கிட்ட எதுவும் சொல்லல?" என்று கேட்டாள்.
அவளின் கேள்வியில் அதுவரை அங்கிருந்த சூழ்நிலை மாறி, அனைவர் மனதிலும் சிறு இறுக்கம் தோன்றியது.
தன்வியைப் பார்த்து ஆழ்ந்து மூச்செடுத்த ஆதர்ஷன் நடந்ததை சொல்லத் தொடங்கினான்.
"அம்மாவும் அப்பாவும் லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க தன்வி. அம்மா இந்தியன் தான். பட், அவங்க தாத்தா காலத்திலேயே இங்க வந்து செட்டில் ஆகிட்டாங்க. இங்க படிக்க வந்த அப்பா, அம்மாவைப் புடிச்சு அதை வீட்ல சொல்ல, ரெண்டு வீட்டுக்காரங்களும் பேசி இவங்க கல்யாணம் நடந்தது. கல்யாணம் முடிஞ்சு அப்பா, அம்மா இந்தியா வந்திட்டாங்க. நாங்களும் பிறந்தோம்." என்றவன் அதீஷைப் பார்த்தபடி, "வீ ஆர் ட்வின்ஸ்." என்றவன் தொடந்து, "உனக்கு தான் தெரியுமே, உங்கப்பாவும் எங்கப்பாவும் பிரண்ட்ஸ். அதே மாதிரி எங்கம்மாவும் உங்கம்மாவும் நல்ல ப்ரண்ட்ஸ், நீ பிறக்கும்போது உங்கம்மா கூட இருந்தது எங்கம்மா தான் தெரியுமா? உன்னோட அஞ்சு வயசு வரை உன்னை வளர்த்தது இவங்க தான். நாங்க ரெண்டு பேரும் பையனாப் போயிட்டதனால உன்மேல எங்கம்மாக்கு அவ்ளோ அஃபெக்ஷன். உன்னை உங்கம்மாகிட்ட கூட கொடுக்க மாட்டாங்க. அவங்கதான் உனக்கு எல்லாம் செய்வாங்க" எனும்போதே தன்வி மெல்ல தன் அத்தையின் தோளில் சாய்ந்தவள், அவரின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள, மருமகளின் தலையை மெல்ல வருடி விட்டார் அவளின் அன்பு மாமியார்.
இருவரையும் பார்த்து இதழ் பிரித்து சிரித்த ஆதர்ஷன், மீதியை சொல்லத் தொடங்கினான்.
"எல்லாம் நல்லா தான் போய்ட்டு இருந்தது" என்றவன் ஆழ்ந்த மூச்செடுத்தபடி, "எங்கப்பா சாகும் வரை" என்றான் அமைதியாக.
அந்த நேரம் இதுவரை தன் கையை பரிவோடு பிடித்த தன் அத்தையின் கைகளை இப்போது சின்னவள் ஆதரவாகப் பற்றிக் கொண்டாள்.
"அப்பா சாகும்போது எங்க ரெண்டு பேருக்கும் பத்து வயசு தன்வி. அப்பா இறந்ததும் அம்மா ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க. ரொம்ப மாசம் வீட்டைவிட்டு கூட வெளிய வராமல் ரூம்லயே அடைஞ்சு கிடந்தாங்க. அதுக்குப் பிறகு இப்படியே இருந்தா எங்க ரெண்டு பேர் எதிர்காலம் என்ன ஆகுமோன்னு நினைச்சு, தன்னைத் தானே தேத்திட்டு கொஞ்ச கொஞ்சமா அதில் இருந்து வெளிய வந்தாங்க. அந்த டைம் தான் அம்மாவோட அப்பாக்கு உடம்பு ரொம்ப முடியாமல் போய் வீட்டையும் பிஸினஸையும் பார்க்க முடியாத நிலையில், அவரு உதவிக்கு அம்மாவை யூ.எஸ் வரச் சொல்லிக் கேட்டாரு. அம்மாக்கும் கொஞ்சம் இடம் மாறி இருந்தால் நல்லா இருக்கும்னு தோணவே, நம்ம தாத்தா கிட்டக் கேட்டாங்க" என்றவன் குரல் தாழ்ந்துவிட, தன்விக்குப் புரிந்துவிட்டது, தாத்தா ஏதோ அத்தையின் மனம் வருந்தும்படி பேசி இருக்கிறார் என்றும், அதைச் சொல்ல ஆதர்ஷன் தயங்குகிறான் என்றும்.
"தாத்தா என்ன சொன்னாரு பாஸ்" என்று தன்வி கேட்க, "என்ன சொன்னாரு? வாய்க்கு வந்ததை எல்லாம் சொன்னாரு அந்தப் பெரிய மனுஷன்" என்று அதீஷன் கொதிக்க, "அதி" என்ற தாயின் அதட்டலில் அமைதியானவன் முகம் மட்டும் கோவத்தில் சிவந்து இருந்தது.
அவன் கோவத்தில் இருந்தே தாத்தா ஏதோ தவறாகப் பேசி இருக்கிறார் என்று புரிந்து கொண்ட தன்வி, "ரொம்பத் தப்பாப் பேசிட்டாரா?" என்றாள் மாமியாரைப் பார்த்து தவிப்போடு.
அவரும் பதில் ஏதும் சொல்லாமல் தலையை மட்டும் "ஆம்" என்பது போல் ஆட்டி வைத்தார்.
"ஆமா தன்வி, தப்பா தான் பேசிட்டாரு, ரொம்பத் தப்பா… அம்மா யூ.எஸ் போகணும் சொன்னதும் அவர் உடனே முடியாதுன்னு சொல்லிட்டாரு. ஆனா, அம்மா அவங்க அப்பா ஹெல்த் பத்தி எடுத்துச் சொல்லி, இப்ப அவருக்கு அம்மாவோட துணை கண்டிப்பாத் தேவைன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க, ஆனா, தாத்தா கேக்கவே இல்ல… கடைசில" என்ற ஆதர்ஷ் திரும்பித் தாயைப் பார்க்க, அமிர்தா கண்கள் கலங்கி இருந்தது.
"நீ, யூ.எஸ் உங்கப்பாவுக்காகப் போக நினைக்கிறயா? இல்ல நம்ம புருஷன் தான் போயிட்டானே, நமக்கும் சின்ன வயசு தானே, அங்கன்போய் வேற யாரையும் கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா வாழலாம்னு பாக்குறயான்னு கேட்டிருக்காரு தன்வி" என்றான் ஆதர்ஷ் வலி நிறைந்த குரலில்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட, தன்விக்கோ மொத்த உடலும் பதறி விட்டது. தன் தாத்தாவா இப்படி ஒரு வார்த்தையைப் பேசியது என்று அவளால் ஜீரணிக்க முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றவளை ஆதரவாகப் பற்றிக் கொண்டான் ஆதர்ஷன்.
நடந்ததை நினைத்துத் தன் தாய் கண் கலங்குவதைப் பார்த்த அதீஷன், எழுந்து வந்து அவர் அருகில் அமர்ந்தவன், அவரைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.
தன்விக்கு என்ன சொல்வதென்று புரியாமல், அமிர்தாவின் கையைப் பிடித்துக் கொண்டவள், "தா… தாத்தாவா இப்…இப்படி எல்லாம்?" என்றவளுக்கு அதற்கு மேல் பேச்சு வராமல் போக, வாய்விட்டே அழத் தொடங்கி விட்டாள்.
அவள் கதறுவதைப் பார்த்து பதறிய அதீஷன் எழுந்து அவள் அருகில் சென்றவன், "ஏய்… ஏய், அழாதடி… அழாத" என்று அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொள்ள அமிர்தாவும், "தன்வி… தன்விமா, இங்க பாரு… அதெல்லாம் நடந்து ரொம்ப வருஷம் ஆச்சுடா… நான் எல்லாத்தையும் மறந்துட்டேன். பாரு நான் நல்லாத்தான் இருக்கேன்" என்று அமிர்தா அவளைச் சமாதானம் செய்ய, வழியும் கண்ணீரைத் துடைத்தபடியே, "என்ன இருந்தாலும் அந்தப் பெருசு பேசினது தப்பு தான். அப்ப உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?" என்றவள் தொடர்ந்து,
"இருங்க… இதை நான் சும்மா விடப்போறது இல்ல… அவரை நல்லா நாலு வார்த்தை கேட்டு வரேன். எங்க அவரு?" என்று எழுந்தவள், "எங்க அந்தப் பெருசு?" என்று சண்டைக்குத் தயாராக நிற்க, அமிர்தாவுக்கு அவள் நின்ற தோரணையைப் பார்த்துச் சிரிப்பு வந்துவிட்டது.
"தன்வி, என்ன இது சட்டுன்னு உன் தாத்தாவைப் பெருசுன்னு சொல்லிட்ட, பத்தாக் குறைக்கு அவர் கூட சண்டை போட வேற கிளம்பிட்ட" என்று சிரிப்பினூடே கேட்க, அவரை விறைப்பாகப் பார்த்த தன்வி, "பெருசு இல்லாம அவரு என்ன சின்னப் பையனா? இந்த மாதிரி ஒரு வார்த்தை சொன்னதுக்கு அவர் கூட சண்டை போடாம கொஞ்ச சொல்றீங்களா?" என்று சிலிர்த்துக் கொண்டு நின்றவளைப் பார்த்து மூவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது.
"அடியேய்… கொஞ்சம் அடங்குடி… தாத்தா எப்பவோ அம்மாகிட்ட மன்னிப்புக் கேட்டுட்டாரு. அம்மாவும் அவரை மன்னிச்சிட்டாங்க. நீ சும்மா முடிஞ்சு போன கல்யாணத்துக்கு மேளம் வாசிக்காதடி… வயித்துல புள்ளையை வச்சிட்டு என்ன குதிகுதிக்கிற நீ, பேசாம உக்காருடி" என்ற கணவனை முறைத்தவள்,
"நீ பேசாதடா பிராடு, நீ பேசவே கூடாது" என்க, அதீஷனோ, "எது டாவாஆஆஆ?" என்றபடி திரும்பி ஆதர்ஷனைப் பார்க்க, அவனோ நக்கலாகச் சிரித்தபடி, "சரி சரி தன்வி, அவன் பேச மாட்டான். நீ உக்காரு" என்று சொல்ல ஆதர்ஷனையும் முறைத்தவள், "ஓஓஓ… நீங்க மட்டும் ரொம்ப ஒழுங்காக்கும். நீங்களும் பிராடு தான். கூட்டுக் களவாணிங்க... மூஞ்சப் பாரு மூஞ்ச… தாத்தா பேரன் எல்லாரும் மோசம். நானும் அத்தையும் தான் பாவம்" என்றாள் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு.
"தன்விமா ப்ளீஸ்… அதெல்லாம் நடந்து ரொம்ப நாள் ஆகிடுச்சு விடு" என்ற அமிர்தாவின் வார்த்தையில் அமைதியாகி மீண்டும் அமர்ந்தவள் ஆதர்ஷனைப் பார்த்து, "ம்ம்ம் அப்புறம் என்னாச்சு?" என்று கேட்டாள்.
"என்ன ஆகும்? தாத்தா வார்த்தையை விட, அம்மாவும் கோவத்தில் எதிர்த்துப் பேச, அம்மா எங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வீட்டை விட்டுப் போறேன்னு சொல்லிட்டாங்க… தாத்தாவும் இவங்க ரெண்டு பேரும் என் வீட்டு வாரிசுன்னு சண்டை போட, கடைசில நான் தாத்தா கிட்டயும், உன் புருஷன் அம்மா கிட்டையும் வளர்ந்தோம்" என்றான்.
"சரி… ஆனா, இதை எல்லாம் ஏன் என்கிட்ட சொல்லல?"
"அம்மாவும், அதீயும் வீட்டைவிட்டுப் போன சமயம் நீ குட்டிப் பொண்ணு தன்வி. அடிக்கடி அம்மாவையும், இவனையும் கேட்டுக் கேட்டு ரொம்ப அழுவ, அப்புறம் கொஞ்ச நான் ஆனதும் உனக்கு இவங்க ஞாபகம் இல்லாமப் போச்சு… நீ கொஞ்சம் வளர்ந்த பிறகு அம்மா பத்திக் கேக்கும் போது தாத்தா திட்டி உன்னை அடக்கிட்டாரு, என் கிட்டயும் எதுவும் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாரு." என்றான்.
"ம்ம்ம், இவரு அத்தையை இப்படித் தப்பு தப்பாப் பேசினது எனக்குத் தெரிஞ்சா கண்டிப்பா நான் அவரைத் திட்டி சண்டை போட்டிருப்பேன். அதுக்கு பயந்து தான் அவர் இதெல்லாம் எனக்குத் தெரிய விடல" என்று தாத்தாவை சரியாக கணித்து சொல்ல, ஆதர்ஷ் ஆமாம் என்று தலையாட்டினான்.
"சரி, அதுக்கு அப்புறம் என்னாச்சு? நீங்க அத்தையை எப்பப் பார்த்தீங்க, அத்தை இங்க இருக்காங்கன்னு தெரிஞ்சு தாத்தா எப்படி உங்களை இங்க படிக்க அனுப்பி வச்சாரு?"
"அவருக்கு என்னை இங்க படிக்க அனுப்பவே இஷ்டம் இல்ல தன்வி, நான் தான் அடம்புடிச்சு இங்க வந்தேன். அதோட அம்மா வீட்டைவிட்டுப் போன கொஞ்ச வருஷம் தான் தாத்தாக்கு அம்மா மேல கோவம் இருந்துச்சு, அதுக்குப் பிறகு தான் பேசினது எவ்ளோ பெரிய தப்புன்னு அவர் உணர்ந்துட்டாரு. ஆனா, அவர் வயசுக்கு இறங்கி வந்து அம்மாகிட்ட மன்னிப்புக் கேக்க அவர் ஈகோ இடம் கொடுக்கல... அதே சமயம் என்னையும் அம்மாகிட்ட இருந்து பிரிச்சிட்டாருன்ற குற்றவுணர்வு வேற அவருக்கு இருந்தது. சோ, என்னை இங்க அனுப்பி வச்சாரு. அவருக்குத் தெரியும், நான் யூ.எஸ் வந்தால் கண்டிப்பா அம்மாவையும் அதீயையும் மீட் பண்ணுவேன். அதேமாதிரி நான் இங்க வந்தேன். அம்மா கூடவும் அதீ கூடவும் இருந்து என் படிப்பை முடிச்சேன். தாத்தா அம்மாகிட்ட நேரடியாப் பேச தயங்கித் தயங்கி நாளும் ஓடிப் போக, அம்மாக்கு அவர் மேல எந்தக் கோவமும் இல்லைனு தெரிஞ்சு மன்னிப்புக் கேட்டு எல்லாம் சரியான அப்புறம் தான் உங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு நானும் அம்மாவும் வந்தோம்" என்று பாதிக் கதையைச் சொல்லி முடிக்க தன்வியின் வழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.
"என்ன? அத்தை எங்க கல்யாணத்துக்கு வந்தாங்களா!?" என்று ஆச்சரியமாகக் கேட்க ஆதர்ஷன் சிரித்தபடியே, "உனக்கும் உன் புருஷனுக்கும் மணமேடையில் முந்தானை முடிச்சு போட்டதே அம்மா தான் தன்வி" என்றவன் தொடந்து, "மேடம், எங்க அன்னைக்கு சுத்தி இருந்தவங்களைக் கவனிச்சீங்க? உங்க பார்வை முழுசும் உங்க இந்த அவர் மேல தானே இருந்துது" என்று கிண்டலாகச் சொல்ல, தன்விக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. தன் வெட்கத்தை மறைக்க தலையைக் குனிந்து கொண்டாள். அவள் வெட்கத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அதீஷன்.
அவன் பார்வை தன்னை ஊடுருவுவதை உணர்ந்த தன்விக்கு மேலும் மேலும் வெட்கம் கூட தலையை உலுக்கிக் கொண்டவள், "சரி சரி, நீங்க ரெண்டு பேரும் பண்ண பிராடுத் தனத்தைச் சொல்லுங்க" என்றாள் மிடுக்காக.
"சரி, தன்வி சொல்றேன், அதுக்கு முன் எனக்கு ஒரு கேள்வி இருக்கு, அதுக்கு நீ முதல்ல பதில் சொல்லணும்" என்றான் ஆதர்ஷன்.
தன்வி 'என்ன' என்பது போல் அவனைப் பார்க்க, அவனோ தன் இரட்டைச் சகோதரன் மீது பார்வையைப் பதித்தபடி, "டூ யூ ஹேவ் எனி ரெக்ரெட்ஸ்…" என்று கேட்க, தன்விக்கு அவன் கேட்டதன் அர்த்தம் தெளிவாகப் புரிந்தது.