விழி வழி காதல் நுழைந்ததடி 25

 விழி 25


அன்றைய நாளுக்குப் பிறகு ஆதர்ஷனும் தன்வியும் பேசிக் கொள்ளவில்லை. 

ஆதர்ஷ் ஏதேனும் கேட்டால் அதற்கு, "ம்ம்ம்" என்ற சத்தம் மட்டுமே அவளிடம் இருந்து பதிலாக வரும். தான் கருவுற்றிருக்கும் தகவலைக் கூட தாத்தாவிடம் சொல்லும் மனநிலை இல்லை தன்விக்கு. ஆதர்ஷனுக்கு அந்த நற்செய்தியை முதலில் தெரிந்து கொள்ளும் உரிமை தன்வியை உயிராக நேசிக்கும் வேறு ஒரு ஜீவனுக்குத் தான் உண்டு என்று நினைத்து வீரராகவனிடம் அவனும் எதுவும் சொல்லவில்லை. அதேநேரம் தன்வி தாத்தாவிடம் எதுவும் சொல்லாமல் இருந்ததை வைத்தே ஆதர்ஷனுக்குப் புரிந்துவிட்டது அவளின் மனநிலை என்னவென்று. அதனாலேயே அவனுக்கு அவளுடன் எதுவும் பேசப் பயமாக இருந்தது. 


அப்படியே இரண்டு நாட்கள் அமைதியாக நகர, வீரராகவன் மற்றும் தன்வியுடன் ஆதர்ஷன் அமெரிக்காவுக்குப் பயணமானான். பயணத்தின் போது கூட தன்வி எதுவும் பேசாமல் அமைதியாக வர, ஆதர்ஷனுக்கு உள்ளுக்குள் பயம் பற்றிக் கொண்டது. 


விமானத்தில் தன்னருகில் அமர்ந்திருந்தவளின் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன், அவள் கண்களை ஒரு தவிப்போடு பார்த்தபடி, "என்ன ஆனாலும் நீ… நீ என்னை விட்டுப் போக மாட்ட இல்ல தன்வி? எ… எனக்கு உன்னைவிட்டு இருக்க முடியாதுடி… ப்ளீஸ் தன்வி, கூட இருந்து நீ எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு, பட்… என்னை விட்டு மட்டும் போயிடாதடி. ப்ளீஸ், நீ இல்லாம என்னால வாழ முடியாதுடி. உயிர் போன வெறும் உடம்பு போல ஆகிடுவேன்டி…" என்று கெஞ்சியவனின் கண்கள் கலங்கி இருக்க தொடர்ந்து, "எனக்கு மட்டும் இல்ல… உன்னாலயும் என்னைவிட்டு இருக்க முடியாது தான?" என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டவனை, சில நொடிகள் விழிகளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த தன்வி ஆழ்ந்து மூச்செடுத்துவிட்டு, அவன் தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டவள் மெல்ல கண்களை மூடிக் கொண்டாள்.


அந்த ஒரு சின்ன செயலே ஆதர்ஷனுக்கு அவள் தன்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாள் என்ற நம்பிக்கையைக் கொடுக்க, தன் கையில் இருந்த அவளின் கையில் அழுத்தமாக ஒரு முத்தத்தைப் பதித்தவன், அவளின் கையை அப்படியே தன் நெஞ்சோடு வைத்து அழுத்திக் கொண்டான். 


இரவு வேலையிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த விமானம் நிலையம். 


ஆதர்ஷன் அவர்களின் உடமைகள் அனைத்தையும் சரிபார்த்து எடுத்துக்கொண்டு வீரராகவன், தன்வியுடன் வெளியே வந்தவன் வீரராகவனிடம், "லேட் நைட் ஆகிடுச்சு தாத்தா… இந்த டைம், டிராவல் பண்ண வேணாம். இங்கேயே பக்கத்தில் இருக்கும் ஹோட்டல்ல, நமக்கு ரூம் புக் பண்ணி இருக்கேன். நைட் அங்க ஸ்டே பண்ணிட்டு மார்னிங் வீட்டுக்குப் போகலாம்" என்க, வீரராகவன் சரி என்று தலையாட்ட, தன்வியோ புருவம் சுருக்கி, "நம்ம வீட்டுக்காஆஆ!!" என்று முனங்கியபடி ஆதர்ஷனைக் கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


ஆதர்ஷன் அப்போது தான் தன்வியைத் திரும்பிப் பார்த்தவன், "நம்ம மிட்நைட் தான் லேண்ட் ஆவோம், இந்த டைம்ல நைட் டிராவல் பண்றது உனக்குக் கஷ்டமா இருக்கும்னு தான், ரூம் புக் பண்ணேன், உனக்கு ஓகே தான தன்வி?" என்று கேட்க, அவளோ அதுவரை வேறு யோசனையில் இருந்தவள், சட்டெனத் தலையை குலுக்கி நிகழ்வுக்கு வந்து, "ம்ம்ம்" என்று மட்டும் சொல்ல, மூவரும் அவர்களுக்காகக் காத்திருந்த காரில் ஏறிக் கொண்டனர்.


கருவுற்றிருக்கும் தன்விக்கு ஏற்கனவே வெகுதூர விமானப் பயணம் களைப்பை உண்டாக்கி இருக்க, ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் ஆதர்ஷ் தோளில் சோர்வாக சாய்ந்து கொண்டாள். 


அவளின் கன்னத்தில் கை வைத்துத் தன் தோளோடு அழுத்திக்கொண்ட ஆதர்ஷன், "ஃபைவ் மினிட்ஸ் தான், ஹோட்டலுக்குப் போயிடலாம்" என்றபடி அவள் தலையை மென்மையாக வருடிக் கொடுக்க, அவளும் அமைதியாக அவனின் அரவணைப்பில் கண்களை மூடிக்கொண்டாள். அவர்கள் இருவரையும் நிறைவோடு பார்த்த வீரராகவன் மெல்ல சிரித்தபடி பார்வையைத் திருப்பிக் கொண்டார்.


அடுத்த ஐந்து நிமிடத்தில் கார் ஒரு ஹோட்டல் வாசலில் வந்து நிற்க, ஆதர்ஷ் முதலில் கீழே இறங்கியவன், தன்வியை வெகு கவனமாகக் கையைப் பிடித்து கீழே இறக்கி விட்டான்.


ஆதர்ஷன் அந்த கார் டிரைவரிடம், "நீ காரை எடுத்திட்டு உன் வீட்டுக்குப் போ டேவிட். மார்னிங் நான் கால் பண்ணதும் வந்தாப் போதும்" என்க அந்த டிரைவரும், "ஓகே பாஸ்" என்று பணிவாகச் சொன்னவன் காரை எடுத்துக்கொண்டு செல்ல, தன்விக்கு எல்லாமே ஒரே குழப்பமாக இருந்தது. அந்தக் குழப்பத்துடனே அவளவனைப் பார்த்தவளின் கண்களிலேயே அவளின் மனதைப் படித்தவன், "உன்னோட எல்லாக் கேள்விகளுக்கும் நாளைக்கு பதில் கிடைச்சிடும் தன்வி. அதுவரை எதைப் பத்தியும் யோசிக்காம அமைதியா இரு… இப்ப நம்ம ரெண்டு பேரோட ஒரே வேலை உன்னை மனநிம்மதியோட வைச்சிக்கிறது மட்டும் தான்" என்றவனின் பார்வை ஓவர் கோட் மறைத்திருந்த அவனின் உயிரைச் சுமந்துகொண்டு இருக்கும் அவளின் மணிவயிற்றில் பதிய, அவன் சொல்ல வருவதன் அர்த்தத்தை உணர்ந்து கொண்ட தன்வியும், கோட்டின் மேற்புறமாக மெல்ல தன் வயிற்றை வருடியபடி, "ம்ம்ம்" என்றாள்.


தாத்தாவை அவரின் அறையில் விட்டுவிட்டு, சோர்வாக இருந்த தன்வியைத் தன் தோளோடு அணைத்தபடியே அழைத்து வந்தவன், அடுத்த அறைக்குள் நுழைந்தான்‌.


தன்வியைக் கட்டிலில் அமர வைத்துவிட்டு குளியலறைக்குள் சென்றவன், வெளியே வரும்போது அவனின் கைகளில் ஒரு அகலமான பாத்திரம் இருந்தது.


அவளோ அது என்னவென்று யோசனையோடு பார்க்க, ஆதர்ஷன் தன்வியின் காலடியில் அந்த பாத்திரத்தை வைத்தவன், "கொஞ்ச நேரம் இந்த ஹாட் வாட்டர்ல காலை வச்சிட்டு இரு தன்வி, உனக்கு கொஞ்சம் பெட்டரா ஃபீல் ஆகும்" என்றவனே அவளின் கால்களை எடுத்து வென்னீரில் வைக்க, சோர்ந்து போயிருந்த தன்விக்கு அந்த வென்னீரின் கதகதப்பும் தன்னவனின் கவனிப்பும் புதுத் தெம்பைக் கொடுத்தது. 


தன்னவனையே அவள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, "சூடு போதுமா தன்வி?" என்று கேட்டபடி அவளை நிமிர்ந்து பார்த்த ஆதர்ஷனுக்கு அவளின் அந்த ஆளை வீழ்த்தும் பார்வை உள்ளுக்குள் பரவசத்தோடு ஒரு சின்ன நிம்மதியையும் கொடுத்தது. 


அவனோ கொஞ்ச நேரம் பொறுத்து, "இரு தன்வி, வாட்டர் ஹீட் கொறஞ்சு போச்சு, நான் மறுபடி எடுத்திட்டு வரேன்" என்று எழுந்தவன் கையைப் பிடித்துக் கொண்டாள் தன்வி.


அவன் என்ன என்பது போல் பார்க்க, "போதும்… தூக்கம் வருது" என்றாள் மெல்லிய குரலில்.


இரண்டு நாட்கள் கழித்து அவள் தன்னுடன் பேசியதில் உள்ளம் நிறைந்த ஆதர்ஷன், "சரிடி" என்றவன், அந்த தண்ணீரைக் கொண்டு போய் குளியலறையில் கொட்டிவிட்டு கைகளை நன்கு சுத்தம் செய்து கொண்டு வந்தவன், "ஒன் செகன்ட் தன்வி" என்றபடி அங்கிருந்த சிறிய டேபிளின் அருகில் சென்றவன், அங்கிருந்த பிளாஸ்க்கில் இருந்து பாலைக் கண்ணாடி டம்ளரில் ஊற்றி எடுத்து வந்தவன், அதை அவனே அவளுக்குப் புகட்டிவிட்டு, அவளின் இதழ்களைத் துடைத்து விட்டவன், அவளைப் படுக்கையில் படுக்க வைத்து கனமான போர்வையை அவளுக்குப் போர்த்தி விட்டவன், அறையின் விளக்குகளையும் அணைத்துவிட்டு, இரவு விளக்கை ஒளிர விட்டு வந்தான்.


அவன் தன்னருகில் வந்து படுப்பான் என்று தன்வி பார்த்திருக்க, அவனோ அவள் காலருகில் அமர்ந்தவன் மெல்ல அவள் கால்களைப் பிடித்துவிடத் தொடங்க, தன்வி சட்டென்று எழுந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டவள், விரிந்த விழிகளில் கலக்கம் வழிய இடவலமாக, "வேண்டாம்" என்பது போல் தலையாட்டினாள்.


அதைப்பார்த்து மெல்லச் சிரித்தபடி அவளின் கையை விலக்கிய ஆதர்ஷன், "என்னால உன்னை மாதிரி நம்ம குழந்தையைச் சுமக்க முடியாது தன்வி… ஆனா, என்னுயிரைச் சுமக்கும் உன்னை என்னால என் உயிரைவிட மேலாப் பார்த்துக்க முடியும். எனக்கு பிரக்னன்சி பத்தி ஒன்னும் தெரியாது தான். பட், நீ இப்படி சோர்ந்து போய் இருக்குறதைப்‌ பார்க்கும்போது புரியுது. உனக்கு இந்த டைம் எவ்ளோ கஷ்டமா இருக்குன்றது. இதெல்லாம் நேச்சுரல், அதுக்கு என்னால ஒன்னும் பண்ண முடியாது தான். பட்… இந்த கஷ்டமான டைம்ல உன்னோட, உனக்குத் துணையா எப்பவும் என்னால கூடவே இருக்க முடியும் தன்வி. எந்த டஃப் சிட்டுவேஷன்லயும் நீ தனியா இருக்க மாட்ட, இதோ" என்று அவன் பிடித்திருந்த அவளின் கையை உயர்த்திக் காட்டியவன், "இந்தக் கையை இப்படியே இறுக்கிப் புடிச்சிட்டு உன்னோட நானும் இருப்பேன்" என்றபடி அவள் கையை இறுக்கமாகப் பிடித்திருந்தவனைப் பார்க்கப் பார்க்க அவளுக்குள் அவன் மீதான காதல் எல்லை கடந்து போய்க் கொண்டிருந்தது. 


எப்போது எந்த நொடி ஒருவர் மேல் ஒருவருக்கு காதல் மலர்ந்ததென்று அவளுக்கும் சரி அவனுக்கும் சரி தெரியாமல் போனாலும், ஒருவரின்றி ஒருவர் இல்லை என்ற அளவுக்கு இருவரும் ஒருவருக்குள் ஒருவர் உயிரோடு உணர்வாகக் கலந்திருந்தனர். இவர்களில் இந்தக் காதலும் அன்பும் ‍நாளை அவளுக்கு உண்மை தெரிந்த பிறகும் தொடருமா என்பது இப்போது அந்த ஆண்டவன் கையில் இல்லை, அவனவள் முடிவில் தான் இருக்கிறது. 


கணவனின் கவனிப்பில் சற்று நேரத்திற்கு எல்லாம் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றிருந்தாள் தன்வி. அவள் நன்கு உறங்கி விட்டாள் என்பதை உணர்ந்து கொண்ட ஆதர்ஷன், அவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு அவளின் அருகில் படுத்துக் கொண்டவன் கைகள் அவள் வயிற்றைச் சுற்றிக் கட்டிக் கொண்டது. 


காலை ஒன்பது மணியளவில் கண் விழித்த தன்விக்கு முதலில் தான் எங்கிருக்கிறேன் என்று புரியாமல், தான் இருந்த அறையைக் கருவிழிகளைச் சுழற்றிப் பார்க்கும்போதே, முகம் முழுவதும் புன்னகையோடு, "குட் மார்னிங் பொண்டாட்டி" என்றபடி வந்த ஆதர்ஷன் கையில் அவளுக்கான காலை உணவு இருந்தது.


அவளோ திரும்பி அங்கிருந்த டிஜிட்டல் கிளாக்கில் மணியைப் பார்த்தவள், விழிகளை உருட்டி அவனைப் பார்த்து முறைக்க, அவனோ, "நல்லா அசந்து தூங்கிட்டு இருந்தடி... நீ தூங்கும் போது பார்க்க அவ்ளோ கீயூட்டா அப்படியே குழந்தை போல இருந்த தெரியமா? அதான் எழுப்ப மனசே வரல, தூங்கட்டும்னு விட்டுட்டேன்." என்றவன் தொடர்ந்து, "அதோட அப்படி ஒன்னும் லேட் ஆகிடல. நீ போய் ப்ஃரஷ் அப் பண்ணிட்டு வா, பிரேக்ஃபாஸ்ட் ரெடியா இருக்கு" என்று உணவுத் தட்டைக் காட்டியவன், "சாப்பிட்டுட்டு பொறுமையாக் கிளம்பலாம்" என்றவன் அவளுடன் இருக்கும் நிமிடங்களை நீட்டிக் கொண்டே போனான்.


 எப்படியும் உண்மை தெரிந்த பிறகு அவள் தன்னைவிட்டுச் செல்ல மாட்டாள் என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. ஆனால், கண்டிப்பாகக் கொஞ்ச நாட்களுக்கு இப்போது இருப்பது போல் அவனுடன் சகஜமாக இருப்பாளா என்பது சந்தேகம் தான். அதற்காகவே அவளுடன் இருக்கும் நேரத்தை அதிகரிக்க முயன்றான்‌.


தன்வி குளித்து முடித்து தலையைத் துவட்டியபடி வெளியே வந்தவளைப் பார்த்து பதறி எழுந்தவன், "ஏன்டி உனக்கு அறிவே இல்லயா?" என்று திட்டியபடியே அவள் அருகில் வந்த ஆதர்ஷ், "இப்ப எதுக்குடி தலைக்குக் குளிச்ச நீ? ஜஸ்ட் பாடி வாஷ் எடுத்துட்டு வரவேண்டியது தானே" என்றவன் அவளிடம் இருந்து துண்டை வாங்கிக் கொண்டு அவளை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தவன், அவனே அவள் தலையை நன்கு துவட்டி விட்டவன், "இந்தக் கிளைமேட்ல அதுவும் புது இடத்திற்கு வந்து எதுக்குடி தலைக்குக் குளிச்ச… இப்ப கோல்ட், ஃபீவர் எதுவும் வந்தா என்னடி பண்றது?" என்று அவளைக் கடிந்தவன், அங்கிருந்த ஹேர்டிரையரில் அவளின் நீண்ட கூந்தலை நன்கு காயவைத்த பிறகு, உணவுத் தட்டை எடுத்து அவளிடம் கொடுத்தான். 


அதுவரை அவனை முறைத்துக் கொண்டு இருந்தவள், நல்ல பசியில் இருந்ததால், அவன் நீட்டிய உணவுத் தட்டை வாங்கிக் கொண்டவள், "தாத்தா" என்று கேட்க, "அவருக்கு வேண்டியது எல்லாம் நான் எப்பவோ ஆர்டர் பண்ணிட்டேன். இன்னேரம் அவர் சாப்பிட்டு முடிச்சிட்டு‌, ஹோட்டல் கார்டன்ல நடந்திட்டு இருப்பாரு" என்றவன், "நீ சாப்பிடு" என்றான்.


அவளும் அமைதியாக உண்ணத் தொடங்கியவள், பாதி உணவை உண்டு முடித்த நிலையில், அவள் சாப்பிடுவதையே ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்த ஆதர்ஷனைத் திருப்பிப் பார்த்தவள், அவனின் வாயருகே உணவை நீட்டினாள்.


அவளையும் நீட்டி இருந்த அவளின் கையையும் மாறிமாறிப் பார்த்த ஆதர்ஷ், "நான் சாப்பிட்டேன் தன்வி, நீ சாப்பிடு" என்று சொல்ல, அதைக் கேட்ட தன்வியோ அவனைப் புருவம் உயர்த்திப் பார்த்து முறைத்தாள்.


திருமணம் முடிந்த நாளில் இருந்து எந்த வேலை எப்படி இருந்தாலும் காலை உணவை மட்டும் இருவரும் எப்போதும் சேர்ந்து தான் உண்பார்கள். அந்தச் சமயத்தில் கூட தன்விக்குப் பரிமாறி விட்டு அவள் உண்ணத் தொடங்கிய பிறகு தான் அவன் உண்பான்.


அப்படி இருக்க, இப்போது அவன் சொல்வது பொய் என்று அவனவளுக்குத் தெரியாதா என்ன? 


அவளின் கோபத்தில் சிவந்த விழிகளைப் பார்த்து இதழ் பிரித்துச் சிரித்தவன், "ஓகே ஓகே… நான் இன்னும் சாப்பிடல தான்." என்று சரண்டர் ஆனவன் வாயைத் திறக்க, அவன் வாயில் உணவை வைத்துத் திணித்தாள் அவன் மனைவி.


"ஏய்… ஏய் பார்த்துடி‍… மூச்சு முட்டுது. உன் கோவத்தை இதுல காட்டாத" என்று சிரித்தவன், வாய் அவள் கொடுத்த உணவை மறுக்காமல் வாங்கிக் கொண்டது‌.


வயிறும் மனதும் நிறைய உண்டு முடித்தனர் இருவரும். 


சில நொடிகள் ஒரு மாதிரி இறுக்கமாகக் கழிய, இழுத்து மூச்செடுத்த ஆதர்ஷ், தன்வியைப் பார்த்துக் கொண்டே டிரைவர் டேவிட்டுக்கு அழைத்தான்‌.


அழைப்பை ஏற்ற டேவிட்டும், "நான் கிளம்பிட்டேன் பாஸ். வித் இன் டென் மினிட்ஸ் அங்க இருப்பேன்" என்றான்.


"ம்ம்ம்" என்று பதில் சொன்ன ஆதர்ஷன் அழைப்பைத் துண்டித்து விட்டு தன்வியைப் பார்த்து, "கிளம்பலாம் தன்வி" என்றபடி எழுந்து கொண்டவன், அவர்களின் உடமைகள் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, வீரராகவனின் எண்ணுக்கு அழைத்தவன், "டேவிட் இன்னும் டென் மினிட்ஸ்ல வந்திடுவான் தாத்தா, நீங்க ரெடியா இருங்க" என்று விட்டு அழைப்பைத் துண்டித்தவன் திரும்பி தன்வியைப் பார்த்து, "போலாமா?" என்று கேட்க, அவளும் சரி என்று தலையாட்டியபடி எழுந்து கொண்டவள், தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வர, ஆதர்ஷன் முன்னே செல்ல அவனைத் தொடந்து நடந்தாள் தன்வி‌.


அறையின் வாசல் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆதர்ஷ் திடீரென்று நின்றவன், திரும்பி தன் பின்னால் வந்து கொண்டிருந்த தன்வியை ஆழமாகப் பார்த்தான்.


அவளோ சென்று கொண்டு இருந்தவன், திடீரென்று நின்றதைப் பார்த்து இமைகளைத் தூக்கி இறக்கி, "என்ன" என்பது போல் பார்க்க, சட்டென அவளை நெருங்கி வந்தவன், இரு கைகளால் அவளின் கன்னங்களை அழுத்திப் பிடித்தபடி தன்னை நோக்கி இழுத்தவன், அவள் என்ன ஏதென்று யோசிக்கும் முன் அவள் மென் இதழ்களில் தன் இதழ்களை அழுத்தமாகப் பொருத்தி இருந்தான். 


இன்றோடு உலகம் முடிந்துவிடும், இனி இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என்று நினைத்தானோ என்னவோ, தொடங்கிய முத்தக் கவிதைக்கு முற்றுப்புள்ளி வைக்க மனமின்றி வரிகளை நீட்டிக் கொண்டே போனான். 


அவளோ, அவனின் அதிரடி முத்தத்தில் முதலில் திகைத்து விழித்தவளின் கண்கள் பின் மெல்ல மூடிக்கொள்ள, அவனின் முத்தம் முடிவில்லாமல் நீண்ட சமயம் அவனின் அலைபேசி அடித்து அந்த முத்த யுத்தத்தை முடித்து வைத்தது.


மோக உணர்வில் கட்டுண்டு இருந்த இருவரும் மெல்லக் கண் விழிக்க, அவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தன்வி வெட்கத்தில் தலையைக் குனிந்து கொள்ள, அவளின் கன்னத்தைப் பிடித்து அவளின் முகத்தை உயர்த்திய ஆதர்ஷ், அவள் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தத்தைப் பதித்தவன், "லெட்ஸ் கோ" என்றபடி செல்ல, அவளும் ஒரு இதமான மனநிலையோடு அவன் பின்னால் சென்றாள்.


இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளின் இந்த இதமான மனநிலை அடியோடு மாறி புயலடித்துச் சென்ற சோலையாக மாறப் போகிறது என்று நினைக்கவே அவள் கணவனின் மனம் ஊமையாகக் கண்ணீர் விட்டது.