விழி வழி காதல் நுழைந்ததடி 17
விழி 17
அன்றைய மறுநாள் காலை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆதர்ஷனை அவன் அலைபேசி ஓசை தட்டி எழுப்பியது. பாதித் தூக்கத்தில் அலைபேசியை எடுத்து அரை விழிகளில் யார் அழைத்தது என்று பார்த்தவன் கண்கள் திரையில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் எண்ணெயில் போட்ட அப்பளமாக முழுதாக விரிந்து கொண்டது.
ஒரு கணம் ஆழ்ந்து மூச்செடுத்து தன்னை நிதானித்தவன், "செத்தேன் இன்னைக்கு… என்னை வச்சு செய்யப் போறான்" என்று வாய்விட்டுப் புலம்பியவன், அழைப்பை ஏற்றுக் காதில் வைக்க எதிர் முனையில், "அட் லாஸ்ட் நான் சொன்னது நடந்திடுச்சு இல்ல?" என்ற ஆலனின் குரலில், அழுத்தி இமைகளை மூடித் திறந்தவன், "ஐ வில் எக்ஸ்பிளைன்" என்று தணிந்த குரலில் சொல்ல, "வீ ஆர் வெயிட்டிங்" என்றான் ஆலன்.
"இப்ப எங்க இருக்கீங்க?" என்று கேட்டான்.
"எர்லி மார்னிங் பிளைட்ல தான் வந்தோம். ஹோட்டல்ல ஸ்டே பண்ணி இருக்கோம்" என்று அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் பெயரைச் சொல்ல, "இன்னும் ஹாஃப் அன் ஹவர்ல நான் அங்க இருப்பேன்" என்றான்.
"நீங்க மட்டும் தான் வருவீங்களா, இல்ல, உங்களோட வருங்கால மனைவியும் உங்க கூட வருவாங்களா?" என்று வந்த குரலில் அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது.
"நீ… நீயும் இங்க தான் இருக்கியா?" என்று கேட்க,
அந்தக் குரல், "பதில் தெரிஞ்சிட்டே கேள்வி கேட்காத! இப்ப நான் கேட்டதுக்கு பதில் சொல்லு?"
"இல்ல, இப்ப இருக்கற சூழ்நிலையில் என்னால தன்வியை அங்க கூட்டிட்டு வர முடியாது. அவ உங்க எல்லாரையும் பார்த்தா நம்ம பிளான்ல தேவையில்லாத பிரச்சனை எல்லாம் வரும்." என்றான் ஆதர்ஷ்.
"பிளான்ல பிரச்சனை வரும்னு யோசிக்கிறியா? இல்ல உங்க ரெண்டு பேர் கல்யாணத்தில் பிரச்சனை வரும்னு பயப்படுறியா" என்று நக்கலாகக் கேட்க, அதில் கடுப்பானவன் பல்லைக் கடித்துக்கொண்டே,
"அதெல்லாம் ஒரு மண்ணு பயமும் இல்ல, நான் அங்க வரேன்… மிச்சத்தை அங்க வச்சிப் பேசிக்கலாம்." என்றவன் அழைப்பைத் துண்டித்த அடுத்த நொடி, "டேமிட்" என்றபடி ஃபோனைத் தூக்கி மெத்தை மேல் வீசியவன் தலையில் கை வைத்துக் கொண்டான்.
"ஆலன் ஒருத்தனைச் சமாளிக்கிறதே கஷ்டம். இதுல எல்லாரும் மொத்தமா வந்து இறங்கிட்டாங்க, இப்ப என்ன பண்றது?" என்று தலையைப் பிடித்துக் கொண்டே, "ஆஆஆஆ" என்று கத்தவும் கதவு தட்டும் ஓசை கேட்கவும் சரியாக இருந்தது.
கதவு தட்டும் ஓசையை வைத்தே, வந்திருப்பது யார் என்று அறிந்து கொண்டவன் இதழ்களில் தானாகக் குறுநகை வந்து இணைந்து கொள்ள, "மொத்த டென்ஷனையும் உன் ஒருத்தி நினைப்பு இல்லாமப் பண்ணிடுச்சுடி" என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே, "வரேன்" என்றபடி எழுந்து சென்று கதவைத் திறந்தான்.
அழகிய பிஸ்தா வண்ணக் காட்டன் சுடிதாரில், அழகு பொம்மை போல் கண்முன் நின்றவளைப் பார்த்தவன், கவலை எல்லாம் அவள் முகத்தைப் பார்த்த அடுத்த கணம் கடலில் கலந்த மழைத் துளியாகக் காணாமல் போயிருந்தது.
"காபி" என்று அவள் கத்தும் வரை அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன், "தேங்க்ஸ்" என்றபடி காபிக் கப்பை வாங்கிக் கொண்டான்.
அவள் அங்கிருந்து நகரப் போக, "தன்வி" என்று அழைத்தான்.
"ம்ம்ம்" என்று அவள் திரும்பிப் பார்க்க, "நான் கொஞ்சம் வெளிய போறேன், வர லேட் ஆகும். இன்னைக்கு வீட்டை டெக்கரேட் பண்ண ஆளுங்களை வரச்சொல்லி இருக்கேன், கொஞ்சம் கூட இருந்துப் பார்த்துக்க" என்றவன், சற்றுப் பொறுத்து, "ஈவ்னிங் நான் வந்ததும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போய் எங்கேஜ்மென்ட் டிரஸ் எல்லாம் செலக்ட் பண்ணலாம். நான் செலக்ட் பண்ற டிரஸ் தான் நீ எங்கேஜ்மென்ட்ல போடனும். அதேமாதிரி நீ செலக்ட் பண்ற டிரஸ்ஸை தான் நான் போடுவேன். டீல் ஓகே வா?" என்று கண்ணடித்தவனைப் பார்த்து திகைத்தவள், "சரி" என்று தலையை ஆட்டியபடி அங்கிருந்து ஓடி விட, ஒரு குறும்புச் சிரிப்போடு அவளைப் பார்த்துக் கொண்டே காபியைக் குடிக்க, அவள் நினைவில் கசப்பான காபி கூட அவனுக்குத் தேனாய் தித்தித்தது.
அவள் நினைவிலேயே இருந்தவனுக்கு சட்டென ஆலன் நினைவு வர, வேக வேகமாகக் குளித்துவிட்டு தன் காரை எடுத்துக்கொண்டு புயல் வேகத்தில் அந்த ஐந்து நட்சத்திர விடுதியை அடைந்து, ஆலன் சொன்ன அறைக்கு முன் வந்து நின்றவன், ஒரு நிமிடம் மூச்சை இழுத்து வாய் வழியே ஊஃப் என்று ஊதியவன், ‘ரிலாக்ஸ்டா, ரிலாக்ஸ்… ஒண்ணும் பிரச்சனை இல்ல, எல்லாம் ஓகே ஆகிடும்’ என்று தனக்குத் தானே சமாதானம் சொன்னவன், அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தான்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டுக் கண்களை அழுத்தி மூடித் திறந்தவன், எதிரில் நின்றான் ஆலன்.
அந்த அறையே அமைதியாக இருந்தது. ஒருவரை ஒருவர் குறுகுறுவெனப் பார்த்தபடியே எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஆலன், "சோ, ஃபைனலி நான் சொன்னது நடந்திடுச்சு" என்று நக்கலாகச் சொல்ல அதில் கடுப்பானவன்,
"லிசன் ஆலன்… நான் எதுவும் புதுசாப் பண்ணல, ஆஸ் பர் தி பிளான் நம்ம என்ன டிஸைட் பண்ணமோ அதைத் தான் நான் இப்ப செஞ்சிருக்கேன்." என்றான் ஆங்கிலத்தில், என் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல்.
"ஓஓஓ ஐ சீ…" என்று நக்கலாகச் சொன்ன ஆலன், "ஓகே, நம்ம தான் பிளான் போட்டோம். ஐ அக்ரி… பட் என்னன்னு? ஏஞ்சல்க்கு ஒரு நல்ல பையனைப் பார்த்து மேரேஜ் செஞ்சு வைச்சிட்டு நீ திரும்பி யூ.எஸ் வரணும்னு தானே…" என்றதும் அவன் ஏதோ சொல்ல வர, "வெய்ட் வெய்ட்" என்ற ஆலன், "நீ என்ன சொல்ல வரேன்னு எனக்குத் தெரியும், ஏஞ்சல் அந்தப் பையன் கூட மேரேஜ்க்கு ஒத்துக்காட்டி நீயே மேரேஜ் பண்ணிக்கணும்னு நம்ம டிஸைட் பண்ணோம் தான். தென் யூ.எஸ் வந்ததும் ஏஞ்சலுக்கு ஒரு நல்ல லைஃப் கொடுக்கலாம்னு தான் டிஸைட் பண்ணி இருந்தோம். பட்…" என்று அழுத்தமாக எதிரில் இருந்தவனை முறைத்த ஆலன், "பட், நீ என்ன பண்ணி இருக்க மேன்? அந்தப் பையன்? அவன் பேர் என்ன?" என்று யோசிக்க, "பிரசன்னா" என்று எடுத்துக் கொடுத்தான் அதுவரை அமைதியாக அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மூன்றாமவன் ஒருவன்.
"யா யா… பிரசன்னா! அந்தப் பையன் அவனே ஏஞ்சலை விரும்பி மேரேஜ் பண்ணக் கேட்டிருக்கான். பட் நீ... உனக்கும் அவளுக்கும் தான் மேரேஜ்னு சொல்லி அவனை வெரட்டி விட்டிருக்க… இதுக்கு என்ன மேன் அர்த்தம்?" என்றான் முறைப்பாக.
"ஏய் கமான் ஆலன், தன்வி தான் அவனைப் புடிக்கலன்னு சொல்லிட்டாளே! அப்புறம் நான் என்ன பண்றது?"
"அவ வேணாம்னு சொன்னா நீ அப்படியே விட்டிருவயா? அவளை கன்வின்ஸ் பண்ண டிரை பண்ணனும்… அதை விட்டுட்டு நீயே அவளை மேரேஜ் பண்ணிக்க ரெடியாகிட்ட இல்ல?" என்று அவன் முகத்தை நேராகப் பார்த்துக் கேட்க, அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
"இங்க பார் ஆலன், தன்வி தெளிவாச் சொல்லிட்டா, நான் வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்னு… அதான் வேற வழி இல்லாம நம்ம பிளான்படி அவளை மேரேஜ் பண்ணச் சம்மதிச்சேன். அதோட அவளும் இந்த மேரேஜ் தாத்தாவுக்காகன்னு தெளிவா இருக்கா" என்றவன், அவள் கோயிலில் வைத்து அவனிடம் சொன்ன அனைத்தையும் சொன்னவன், "சோ நம்ம பிளான்ல எந்த சேஞ்சும் வராது" என்றவன் பார்வை ஆலன் மீது இருந்தாலும் அவன் சொன்ன பதில் என்னவோ, ஆலன் அருகில் இருந்த அந்த மூன்றாமவனுக்குத் தான்.
"அவ சொன்னதெல்லாம் ஓகே. அவ உன்னை லவ் பண்ண மாட்டேன்னு சொன்ன மாதிரி, நீயும் அவளை லவ் பண்ண மாட்டேன்னு உன்னால உறுதியாச் சொல்ல முடியுமா?" என்று ஆலன் கேட்க, அதைக் கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்தவன் அதை வெளியில் காட்டாமல், "வாட் ரப்பிஷ்? நான் போய் லவ் எல்லாம்… யூ நோ அபௌட் மீ ரைட்? அப்புறம் எப்படி உன்னால இப்படிக் கேக்க முடியுது?" என்றவனைக் கூர்மையாகப் பார்த்த அந்த மூன்றாமவன், "லெட்ஸ் சீ… நீ உன் ஸ்டாண்ட்ல லாஸ்ட் வரை நிக்குறயான்னு" என்றவனுக்குத் தெரியும், இவன் நிச்சயம் தன்வியிடம் தலை குப்புற விழுவான் என்று.
"ஓகே! இது பத்தி இனிப் பேச ஒண்ணும் இல்ல… நான் கிளம்புறேன்" என்றபடி எழுந்தவன் அங்கிருந்தவரைப் பார்த்ததும், "டார்லிங்" என்றபடி ஓடிச்சென்று அவரைக் கட்டிக் கொள்ள, அவரின் கைகளும் அவனை அன்போடு அணைத்துக் கொண்டது.
"நீ வர்றதை இவனுங்க என்கிட்டச் சொல்லவே இல்ல…" என்று திரும்பிப் பார்த்து அங்கிருந்தவர்களை முறைக்க, "உனக்கு சர்ப்ரைஸ்ஸா இருக்கணும்னு நான் தான் சொல்ல வேணாம்னு சொன்னேன்." என்றவரை மீண்டும் அணைத்துக் கொண்டவன், "ஐ மிஸ் யூ வெரி பேட்லீ" என்று கொஞ்ச, "மீ டூ" என்றார் அவரும்.
"தாத்தா எப்படி இருக்காரு?" என்றவருக்கு, "அவருக்கு என்ன, சூப்பரா இருக்காரு… இன்னும் கொஞ்ச நாள் தான், எப்படியும் அவரையும் தன்வியையும் கன்வின்ஸ் பண்ணி யூ.எஸ் க்கு கூட்டிட்டு வந்திடுறேன்" என்றான் உறுதியாக.
அவரும் "ம்ம்ம்" என்றவர், "தன்வி எப்படி இருக்கா?" என்று கேட்க, அவள் பெயரைக் கேட்டதும் அவன் முகம் மலர்ந்து விட்டது. அதை மூவரும் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர்.
"ம்ம்ம், ஷீ இஸ் பைன்…" என்றவன் இதழ்களில் அழகிய குறுநகை.
கொஞ்ச நேரம் அவர்கள் மூவருடனும் பேசிக்கொண்டு இருந்தவன், "ஓகே, டைம் ஆச்சு நான் கிளம்புறேன், முக்கியமான வேல இருக்கு" என்றவனைப் பார்த்து, "எஸ்… எஸ்… எங்கேஜ்மென்ட் டிரஸ் எடுக்குறது முக்கியமான வேல தான்" என்ற ஆலனைப் பார்த்து முறைத்தவன், "ஐம் லீவிங்" என்று கடுப்பாகச் சொன்னவன் விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடி இருக்க, அவன் ஓடுவதைப் பார்த்த ஆலன் கண்களோடு அங்கிருந்த இருவர் கண்களும் கலங்கி இருந்தது.
'ஐ வாண்ட் மை ஆஷ் இன் மை லைஃப்… பட் அதுக்காக ஏஞ்சல் லைஃப்பை ரிஸ்க் பண்றனோன்னு எனக்குப் பயமா இருக்கு' என்று உள்ளுக்குள் புழுங்கிய ஆலனின் மனக்கண்ணில் தன்வியின் குழந்தை முகம் தோன்றி அவனை மேலும் இம்சித்தது.
அன்று வீரராகவனின் பிறந்தநாள்.
ஆதர்ஷனின் வீடே அலங்காரத்தில் ஜொலித்தது. வந்தவர்கள் அனைவரின் பார்வையும் வீட்டின் செல்வச் செழிப்பில் அழுத்தமாகப் படிந்தது. அதோடு அங்கு வந்திருந்த சிலரின் பார்வை, கம்பீரமாக வருபவர்களை வரவேற்ற ஆதர்ஷன் மீது படிய, எப்படியாவது தங்கள் வீட்டுப் பெண்னை அவனுக்கு மணமுடித்து வைத்துவிட வேண்டும் என்று பெண்பிள்ளை வைத்திருப்பவர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால், அந்த எண்ணம் எல்லாம் இன்னும் சில நிமிடங்களில் தவிடு பொடி ஆகப் போகின்றது என்று பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை.
கிட்டத்தட்ட வேண்டியவர்கள் அனைவரும் அங்கு வந்திருக்க, விழா ஆரம்பம் ஆனது.
ஆதர்ஷ் வீட்டிற்கு வந்தவர்களை கவனிப்பதில் கருத்தாய் இருந்தாலும் அவன் பார்வை முழுவதும் அழகிய இளம் சிவப்பு நிற டிஸைனர் புடவையில் தேவதையாக வலம் வந்த தன்வியின் மேலேயே தான் படிந்திருந்தது.
பார்த்துப் பார்த்து கடையையே புரட்டிப் போட்டு தன்விக்காக ஆதர்ஷன் தேர்ந்தெடுத்த புடவை அது. விலை அதிகம் என்று தன்வி மறுக்க அவன் பார்த்த கண்டனப் பார்வையில் வாயை கப்பென்று மூடிக் கொண்டாள் அவள். அவளுக்கு அவன் உடையைத் தேர்வு செய்ய, ஆதர்ஷனுக்குத் தன்வி அவனுக்குப் பிடித்த பிளாக் அண்ட் வொய்ட் சூட்டையே தேர்வு செய்தாள். அதைப் பார்த்த ஆதர்ஷ் இதழ்களில் புன்முறுவல் பூத்தது.
தான் தேர்வு செய்த உடையில் அழகுச் சிலை போல் வலம் வருபவளின் மேல் ஆதர்ஷின் பார்வை அடிக்கடி படிய, அவனுக்கோ அதற்கான காரணம் புரியவில்லை.
'ஏன்டா, அவளையே இப்படிப் பார்த்துட்டு இருக்க?' என்று மனசாட்சி கேட்ட கேள்விக்குப் பாவம் அவனிடம் பதில் இல்லை. அந்த நேரம் பார்த்து ஆலன் கேட்ட, "உண்மையா நீ நம்ம பிளான்க்காக தான் இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கறியா?" என்ற கேள்வி அவன் காதில் கேட்க, 'ஆமா… நான் ஒண்ணும் விரும்பி அவளைக் கல்யாணம் பண்ணல, வேற வழி இல்லாம தான் இந்த முடிவை எடுத்தேன். அவதான் சொன்னாளே, என்னைத் தவிர யாரையும் கட்டிக்க மாட்டேன்னு' என்று அவன் மனசாட்சியுடன் மல்லுக்கு நிற்க அது திருப்பிக் கேட்ட, ‘நிஜமா அது மட்டும் தான் காரணமா?’ என்ற கேள்வியில் ஆதர்ஷ் சற்று ஆடித்தான் போனான்.
அந்தக் கேள்விக்குத் தன்னிடம் பதில் இல்லாத போது அவனும் என்னதான் செய்வான். அதனால் அமைதியாக இருந்தவனுக்கு இன்னும் சற்று நேரத்தில் அவன் கேள்விக்கான விடை கிடைக்கப் போவது தெரிந்தால்?
அந்த நேரம் வீரராகவன், "என் பிறந்தாளுக்கு வந்த எல்லாருக்கும் என்னோட நன்றி, இந்த நல்ல நாளில் நான் உங்ககிட்ட ஒரு நல்ல விஷயம் சொல்லப் போறேன்" என்றவர் ஆதர்ஷ், தன்வி இருவரையும் தன் அருகில் அழைத்தார்.
அனைவரின் கண்களும் வீரராகவன் மற்றும் ஆதர்ஷ், தன்வியையே பார்த்தபடி இருந்தது.
வீரராகவன் அனைவரையும் பார்த்தபடி, "இன்னைக்கு உங்க எல்லாரையும் என் பிறந்த நாளுக்காக மட்டும் இங்க வரச் சொல்லல, இன்னைக்கு என்னோட பேரன் ஆதர்ஷோட கல்யாணத்தைப் பத்தி சொல்லத் தான் உங்க எல்லாரையும் இங்க கூப்பிட்டிருக்கேன்…” என்று சொல்ல, அந்த இடமே பரபரப்பானது.
"இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு என் பேரனுக்கு கல்யாணம் நடக்கப் போகுது. இன்னைக்கு இங்க உங்க முன்னால அவன் கல்யாணத்தை நிச்சயம் செய்யப் போறேன், என்றவர் தன்வியை அருகில் அழைத்து ஆதர்ஷ் பக்கத்தில் நிற்க வைத்தவர், ஆதர்ஷனுக்கும், என் பேத்தி தன்விக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம்" என்று சொல்ல அந்த இடத்தில் சலசலப்பு. எப்படியாவது தங்கள் வீட்டுப் பெண்ணிற்கு ஆதர்ஷை மணமுடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தவர் எண்ணத்தில் ஒரு வண்டி மண்ணை அள்ளிக் கொட்டியிருந்தார் வீரராகவன்.
ஆதர்ஷ், தன்வியின் குணம் தெரிந்த நல்ல உள்ளங்கள் மனதார அவர்கள் இருவரையும் வாழ்த்தி விட்டுச் சொல்ல, தன்வியுடன் வேலை செய்யும் சிலர் அவளுக்குக் கிடைத்த இந்த வசதியான வாழ்க்கையை நினைத்து அவளை வாய்க்கு வந்தபடி கரித்துக் கொட்டிக் கொண்டு இருந்தனர். அது எதேர்ச்சையாக அந்தப் பக்கம் சென்ற தன்வியின் காதில் அவர்கள் பேசியது தெளிவாக விழுந்தது.
"ம்ம்ம் பார்த்தியாடி… நான் சொன்ன மாதிரியே நடந்துபோச்சு… அப்பாவி மாதிரி முகத்தை வச்சிட்டு எப்படியோ தாத்தா, பேரன் ரெண்டு பேரையும் கைக்குள்ளப் போட்டுகிட்டு இப்பக் கல்யாணம் வரை வந்துட்டா" என்று ஒருத்தி சொல்ல,
"ஆமாடி… ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு ஆதர்ஷ் சார் மேல தான் கண்ணு. அதான், வீட்ல அவர் கூட இருக்குறது பத்தாதுன்னு, அவரை எப்படியாவது மயக்கிடனும்னு தான் அவர் ஆபீஸ்லயே வேலைக்குச் சேர்ந்திருக்கா…" என்றாள் அடுத்தவள்.
"ம்ம்ம் எப்படியோ நெனச்ச மாதிரி அவரை மயக்கிக் கல்யாணமும் பண்ணிக்கப் போறா… இனி இந்த வீடு, ஆஃபிஸ், சொத்து, சுகம் எல்லாம் அவளுக்கு தான். பிளான் போட்டு அழகா ஆதர்ஷ் சாரைக் கவுத்துட்டா" என்று நாக்கில் நரம்பில்லாமல் சிலர் பேசுவதைக் கேட்ட தன்விக்கு இந்த உலகமே ஒரு கணம் வெறுத்து விட்டது. ச்சீ, இவ்வளவு தானா மனிதர்கள்? என்று தோன்றியது அவளுக்கு. ஒருவரைப் பற்றி எதுவும் தெரியாமல் எப்படி இப்படி எல்லாம் தவறாகப் பேச முடிகிறது என்று மனம் கசந்தவளுக்கு அந்த நொடி, ஒருவேளை ஆதர்ஷனும் தான் பணத்திற்காகத் தான் அவனைத் திருமணம் செய்யப் பிடிவாதம் பிடித்ததாக நினைத்திருப்பானோ என்று நினைக்கும்போதே அவள் நெஞ்சம் பதறியது.
அவன் அப்படி எல்லாம் தவறாகத் தன்னை நினைக்க மாட்டான் என்று அவள் உள்மனதுக்குத் தெரிந்தாலும், கொஞ்ச நாட்களாக ஆதர்ஷ் காட்டிய ஒதுக்கத்தில் ஏற்கனவே மனம் துவண்டு இருந்தவளுக்கு எங்கு ஆதர்ஷனும் தன்னை இப்படி தான் நினைத்திருப்பானோ? என்று நினைத்த கணம் அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, கதறத் துடித்த தன் வாயை கையால் இறுக்கி மூடிக் கொண்டவள் அப்படியே தன் அறையை நோக்கி ஓடினாள்.
அவர்கள் பேசியதைத் தன்வி மட்டும் அல்ல, ஆதர்ஷனும் கேட்டுவிட, அடுத்த நொடி தன்வியைத் தவறாக பேசியவர்களை ஆட்களை வைத்து வீட்டை விட்டு வெளியே துரத்தியவன், உடனே தன்வி அறையை நோக்கி விரைந்தான்.