விழி வழி காதல் நுழைந்ததடி 18
விழி 18
தன் அறைக்குள் ஓடி வந்த தன்வி, ஜன்னல் கம்பியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நிற்க, மனம் ரணமாக வலித்தது. கண்ணீரைத் தவிர தனக்குத் துணை ஏதும் இல்லை என்று நினைத்தவள், எங்குச் சத்தம் வெளியே கேட்டு விடுமோ என்ற பயத்தில் வாயை மூடிக் கதறி அழுது கொண்டு இருந்தாள்.
அந்த நேரம் "படார்" என்று கதவு திறக்கும் ஓசை கேட்டுச் சட்டெனத் திரும்பிப் பார்க்க, அங்கு கதவின் பிடியைக் கையில் பிடித்தபடி பதட்டமாக நின்று கொண்டு இருந்தான் ஆதர்ஷ்.
ஆதர்ஷனைப் பார்த்த அடுத்த நொடி, எதைப் பற்றியும் யோசிக்காமல் தாயைக் கண்ட கன்றாக, "ஆது" என்று கத்தியபடி ஓடிச் சென்றவள் அவனை இறுகக் கட்டிக் கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டு கதறி அழ, அவன் அவள் முதுகை ஆதரவாக வருடியபடி நின்றான்.
"கீ..கீழ… அ..அவங்க சொன்னது… நான் பணத்துக்காக தான் உங்…உங்களைக் கல்யாணம் பண்றேன்னு" என்று விசும்பியவள், "நீ…நீங்களும் என்னை அப்படி தான் நினைக்குறீங்களா? உ…உங்கப் ப…பணத்துக்கு தான்" என்றவள் அந்த வார்த்தைகளை முழுவதும் முடிக்க முடியாமல் தவித்து நிற்க, அவள் நின்ற கோலம் கண்டு ஆதர்ஷனுக்குக் கண்கள் கலங்கி விட்டது.
தன் மார்பில் முகம் புதைத்திருந்தவள் கன்னம் தொட்டு, மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "உன் ஆதர்ஷ் உன்னை அப்படித் தப்பா நினைப்பான்னு உனக்குத் தோணுதா தன்வி?" என்று கலங்கிய குரலில் கேட்க, அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தவள், "இல்லை" என்று தலையாட்டினாள்.
"யார் வேணும்னா என்ன வேணும்னாலும் சொல்லட்டும்டி… ஆனா, உன் ஆதர்ஷனுக்கும், உன்னைச் சேர்ந்தவங்களுக்கும் தெரியும் நீ யாருன்னு. அது போதும் உனக்கு... மத்த யாரைப் பத்தியும் நீ கேர் பண்ண வேண்டிய அவசியம் இல்ல." என்று அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் தன் விரல் கொண்டு சுண்டி விட்டவன், "அவங்களுக்கு என்னடி தெரியும் என் தன்வி பத்தி… எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, இந்தக் கல்யாணம் நடந்தா தன் வாழ்க்கையே போயிடும்னு தெரிஞ்சும் தாத்தாவுக்காக, உன் ஆதர்ஷ்க்காக, நீ வளர்ந்த இந்த குடும்பத்துக்காக எதுக்கும் துணிஞ்சு இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னியேடி... யாருக்கு வரும் இந்த மனசு? நீ பணத்துக்கு ஆசைப்படும் பொண்ணா இருந்திருந்தா அந்தப் பிரசன்னா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டதும் நீ சரின்னு சொல்லி இருக்கணுமே? ஆனா, நீ அப்படிப் பண்ணலியே, என் தன்விக்கு இந்தப் பணம், சொத்து, லக்ஸரி லைஃப் பத்தி எல்லாம் யோசிக்க கூடத் தெரியாதுன்னு எனக்கு நல்லாத் தெரியும என் தன்வி ஏஞ்சல்! பூமியில விழாத மழைத்துளி மாதிரி பரிசுத்தமானவ என் தன்வி." என்றவன் வார்த்தைகள் அவள் மனதில் இருந்த அச்சத்தை அடியோடு அழித்துவிட, கண்கள் கலங்க அவனைப் பார்த்தவள், மீண்டும் அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.
இந்த முறை அவனும் அவளை அணைத்துக் கொண்டவன், அவள் முகத்தை தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டான்.
அந்த கணம் அவளின் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் அவன் சட்டையிலும், அவள் அழகு முகம் அவன் இதயத்திலும் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டது. இதுவரை தன்வி மேல் சில நாட்களாகத் தனக்கு ஏற்படும் உணர்வுக்கு என்ன பெயர் என்று புரியாமல் தவித்தவனுக்கு இந்த நொடி அதற்கான விடையும் கிடைத்துவிட்டது.
அந்த நொடி அவன் மனது வேறு யாரைப் பற்றியும் யோசிக்கத் தயாராக இல்லை. அந்தக் கணம் அவன் மனத்தோடு சேர்த்து அவன் எண்ணம் முழுவதிலும் நிறைந்திருந்தவள் தன்வி… தன்வி… தன்வி ஒருத்தி மட்டுமே.
இந்த உணர்வு இந்த உலகில் இவள் ஒருத்தியைத் தவிர வேறு யாரிடமும் தனக்கு ஏற்படாது என்று உணர்ந்து கொண்டான் அவன். இவள் ஒருத்தியால் மட்டுமே தன்னை உள்ளும் புறமும் கட்டியாள முடியும். இவள் ஒருத்தியிடம் மட்டுமே தன்னுடைய மெல்லிய உணர்வுகள் வெளிப்படும். இவள் என்னவள்! எனக்கு மட்டுமே சொந்தம்! என்ற உண்மை அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. மனம் தெளிவு பெற அந்தத் தெளிவு ஆதர்ஷன் முகத்தில் ஒரு நிறைவான புன்னகையைக் கொடுக்க, அவளை இன்னும் இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
சில நொடிகள் அவள் மனவலி தீர அவளைக் கொஞ்சம் அழ விட்டவன், "போதும் தன்வி, இன்னைக்கு நீ அழுதது தான் லாஸ்ட். இனி ஒருமுறை கண்டவங்க பேச்சைக் கேட்டு ஒரு சொட்டுக் கண்ணீர் கூட உன் கண்ணுல இருந்து வரக்கூடாது. யாரும் எதுவும் பேசினா, என்னைப்பத்தி என் குணம் பத்தி என் புருஷனுக்கும் குடும்பத்துக்கும் தெரியும்… அதுபோதும் எனக்கு, என் கேரக்டரை அசாஸிநேட் பண்ற தகுதி உங்களுக்கு இல்லைன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி பதில் சொல்லனும், ஓகே" என்று அழுத்தமாகக் கேட்க, அவன் நெஞ்சில் சாய்ந்தபடியே அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், கலங்கிய விழிகளோடு "ம்ம்ம்" என்றவளுக்கு அப்போது தான் அவன் "புருஷன்" என்று சொன்னது மண்டையில் உரைத்தது.
அவள் நிலை தெரியாத ஆதர்ஷ், அவனை அதிர்ந்து பார்த்தவள் நெற்றியில், "குட் கேர்ள்" என்றபடி அவள் உச்சந்தலையில் மென்மையாகத் தன் இதழ்களைப் பதிக்க, அவளின் அதிர்ந்திருந்த விழிகள் அவன் முத்தத்தில் மேலும் பெரிதாக விரிந்து கொண்டது.
அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்தாள் அவனின் தேவதை.
அதைப் பார்த்து இதழ்களுக்குள் சிரித்தவன், 'ஆப்டர் ஆல், நெத்தியில கிஸ் பண்ணதுக்கே இந்த முழி முழிக்கிறா… இன்கேஸ் நான் லிப்லாக் பண்ணி இருந்தால் அவ்ளோதான் போலயே. கண்ணு முழி ரெண்டும் வெளிய வந்து விழுந்திருக்கும்' என்று தனக்குள் நினைத்தவனுக்கு அவன் எண்ணம் செல்லும் பாதையை நினைத்து உள்ளம் இனிமையாக அதிர்ந்தது.
"காட்… டேய் என்ன திங்க் பண்ணிட்டு இருக்க நீ? உன் தாட்ஸ் எல்லாம் கண்டபடி ஓடிட்டு இருக்கு,கண்ட்ரோல் கண்ட்ரோல்" என்று சற்றுச் சத்தமாக அவன் புலம்ப, "என்னாச்சு?" என்று கேட்ட தன்வியின் குரலில் தான் அவள் இன்னும் தன் நெஞ்சில் சாய்ந்திருப்பதை உணர்ந்தவன்,
"ஒண்ணும் இல்ல, ஜஸ்ட் ஏதோ தாட்ஸ்… லீவ் இட்" என்றவன், "சரி, நீ போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுக் கீழ வா, நான் கீழ போய் பார்ட்டியைக் கவனிக்குறேன்" என்று நகர்ந்தவனின் அழகாய் டக்கின் பண்ணி இருந்த சட்டையைப் பிடித்து இழுத்தாள் தன்வி.
ஆதர்ஷ் திரும்பி அவளையும் தன் சட்டையை நுனி விரலில் பிடித்துக் கொண்டிருந்த அவள் கை விரல்களையும் பார்த்தவனுக்கு, தந்தை தன்னை விட்டு விலகும் போது அவர் சட்டையைப் பிடித்து இழுத்து, போகாதே என்பது போல் பார்க்கும் குழந்தையின் நினைவு தான் வந்தது. அப்படியே அவளை அள்ளி அணைத்துக் கொள்ளத் துடித்த கைகளைக் கஷடப்பட்டு அடக்கிக் கொண்டவன்,
"என்னடா?" என்றான் மென்மையாக.
"கீழ… கீழ அவங்க எல்லாம் இருப்பாங்க, எனக்கு ஒரு மாதிரி இருக்கு" என்று தவிப்பாகச் சொன்னவள் கன்னத்தை தன் இரு கைகளாலும் தாங்கிப் பிடித்து, அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலக்க விட்டவன், "அவங்க யாரும் இப்ப இங்க இல்ல… என் தன்விய தப்பாப் பேச்சிட்டு, அவ வீட்லயே அவங்க இருக்க முடியுமா? அவங்களை எல்லாம் அப்பவே வெளிய அனுப்பிட்டேன்." என்றவன் சற்று நிறுத்தி, "இப்ப அவங்களை நான் அனுப்பிட்டேன் தன்வி. பட் இந்த இன்சிடென்ட் லாஸ்ட் இல்ல, இனி நீ உன் லைஃப்ல இந்த மாதிரி பலரை மீட் பண்ணித்தான் ஆகணும். அந்த மாதிரி நேரம் அவங்க பேசினதைப் பத்திக் கேர் பண்ணாம, அந்த மாதிரி ஆளுங்களை இக்னோர் பண்ணிட்டு முன்ன போகனும். இட்ஸ் யுவர் லைஃப் அன்ட் யுவர் ரூல்ஸ் ஓகே?" என்றவன் கண்களை ஆழ்ந்து பார்த்தவள் மனதில் முதல் சலனம்.
இத்தனை நாட்கள் இல்லாமல் முதல் முறையாய் ஆதர்ஷன் பார்வையிலும் அவனின் தொடுகையிலும் அவள் உள்ளம் தடுமாறத் தொடங்கியது. ஏன் இந்த மாற்றம் என்று யோசிக்கக் கூட அவளுக்குப் பயமாக இருந்தது. ஆலன் பற்றி நன்கு தெரிந்த பிறகு தனக்குள் இப்படி ஒரு தடுமாற்றம் வருவது முற்றிலும் தவறு என்று அவள் மனசாட்சி எச்சரிக்க, மெல்ல ஆதர்ஷனை விட்டு விலகி வந்தவள் தலையைக் குனிந்தபடி,
"நீங்க போங்க சார், நான் கொஞ்ச நேரத்தில் கீழ வரேன்" என்றவளின், "சார்" என்ற அழைப்பே அவளின் மனதின் தடுமாற்றத்தை அவனுக்கு உணர்த்த, அழுத்தமாகத் தன் தலை முடியைக் கோதிக் கொண்டவன், 'இதுபத்திப் பேச இது சரியான டைம் இல்ல, இப்ப இவளுக்கு எதுவும் தெரியக்கூடாது. முதல்ல மேரேஜ் நடக்கட்டும், மத்ததை எல்லாம் அப்புறம் பாப்போம்.' என்று தனக்குள் நினைத்தவன், "சரிடி… சீக்கிரம் வா" என்று விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.
கீழே வந்த ஆதர்ஷின் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்று உணர்ந்த வீரராகவன் பேரனிடம் விசாரிக்க, அவரிடம் நடந்ததைச் சொன்ன ஆதர்ஷின் கை முஷ்டிகள் இறுகியது.
"வாட் நான்சென்ஸ்? எவ்ளோ தைரியம் இருந்தா என் வீட்டுக்கே வந்து என் பேத்தியைப் பத்தித் தப்பாப் பேசி இருப்பாங்க" என்று பல்லைக் கடித்த தாத்தா, "இப்ப தன்வி எப்படி இருக்கா ஆதர்ஷ்?" என்று கேட்டார்.
"இப்ப அவ ஓகே தாத்தா. ரொம்ப அழுதுட்டே இருந்தா, அதான் கொஞ்சம் ரூம்ல ரிலாக்ஸ் பண்ணிட்டு வான்னு சொல்லிட்டு வந்தேன். இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்திடுவா… அதுக்கு முன்ன நான் உங்ககிட்டக் கொஞ்சம் பேசணும் தாத்தா, கொஞ்சம் தனியா வாங்க…” என்றவன், அவரைக் கொஞ்சம் தள்ளி அழைத்துச் சென்றான்.
"சொல்லு ஆதர்ஷ், என்ன விஷயம்?" என்றார் தாத்தா.
"உங்களுக்கே தெரியும் ஏற்கனவே நான் யு.எஸ் ல இருந்த டைம் இங்க சிலர் தன்வியைப் பத்தித் தப்பாப் பேசி, அதுல தன்வி மனசு வருத்தப்பட்டு தான் நீங்க அவளுக்குக் கொடுத்த 25% ஷேரை நம்ம கிட்டயே திருப்பிக் கொடுத்துட்டா… இப்ப இன்னைக்கு மறுபடியும் நம்ம இருக்கும் போதே சிலர் அவளைத் தப்பாப் பேசி இருக்காங்க. நம்ம இருக்கும் போதே இப்படின்னா, மத்த நேரம் யார் யார் என்னென்ன பேசி அவ மனசைக் காயப்படுத்துவாங்கன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க" என்ற ஆதர்ஷன் வார்த்தையில் இருந்த உண்மை வீரராகவனுக்கு நன்றாகப் புரிந்தது.
"ஆமா ஆதர்ஷ்… அப்ப யாரோ பேசினதுக்கு ஷேர்ஸ் வேணாம்னு சொன்ன மாதிரி, இனி எவனாவது ஏதாவது சொல்லி, இந்தக் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டா என்னடா பண்றது? கல்யாணம் வேணாம்னு சொன்னாக் கூடப் பரவாயில்ல, ஆனா, நம்மைவிட்டு தூரமா எங்கயாவது போயிட்டா என்னடா பண்றது…? எனக்கு நல்லாத் தெரியும், தன்விக்கு உன்னை ரொம்பப் புடிச்சிருக்குன்னு. அதான் இந்தக் கல்யாணத்துக்கு ஓகே சொன்னா… அவளுக்கு நீ எவ்ளோ முக்கியமோ அதே அளவு அவளோட தன்மானமும், சுய கௌரவமும் அவளுக்கு ரொம்ப முக்கியம். இதே மாதிரி இன்னொரு முறை நடந்தால் அவ இந்த வீட்டை விட்டுப் போகக்கூடத் தயங்க மாட்டா" என்றவருக்கு எங்கு தன் பேத்தி தன்னைவிட்டு எங்கும் போய் விடுவாளோ என்று உள்ளம் பதைபதைத்து.
"எஸ் தாத்தா, நீங்க சொல்றது நூறு சதவீதம் உண்மை. அவளுக்கு செல்ஃப் ரெஸ்பெக்ட் அதிகம். கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி நடக்க சான்ஸ் இருக்கு… சோ இனி இப்படி நடக்காம இருக்க நம்ம ஏதாவது செஞ்சாகணும்." என்றான் ஆதர்ஷ்.
"கரெக்ட் ஆதர்ஷ்… என் பேத்தி மனசு வருத்தப்படக் கூடாது, அதுக்கு நீ என்ன சொன்னாலும் எனக்கு ஓகே" என்றார் தாத்தா.
"குட் தாத்தா. அதுக்கு ஒரே வழிதான் இருக்கு, மார்னிங் நீங்க என்கிட்ட மேரேஜ் டேட் பத்திச் சொன்னீங்க தானே… அதுல நெக்ஸ்ட் மந்த் ஒரு டேட் இருக்குன்னு சொன்னீங்க இல்ல, அன்னைக்கே எங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ்னு இப்பவே அனௌன்ஸ் பண்ணிடுங்க... கல்யாணத்தை ரொம்ப கிராண்டா எல்லாம் பண்ண வேணாம். முடிஞ்ச வரை சிம்பிளாப் பண்ணுவோம். நமக்கும் தன்விக்கும் பொதுவான நெருங்கின ஆளுங்களை மட்டும் கூப்பிடுவோம். தென் அப்புறம் ஒரு நாள் எல்லாரையும் இன்வைட் பண்ணி கிராண்டா ரிசப்ஷன் வச்சிக்கலாம். அப்ப தான் நம்ம இந்த தேவையில்லாத பிராப்ளம்ஸ் எல்லாத்தையும் அவாய்ட் பண்ண முடியும். அதுதான் தன்விக்கும் நல்லது" என்று சொல்ல அது வீரராகவனுக்கும் சரியென்று பட்டது.
"ஆமா ஆதர்ஷ்… நீ சொல்றது தான் கரெக்ட். ஆளுங்க கூடக்கூட பிராப்ளம் தான் அதிகம் ஆகும். சோ, நமக்கு முக்கியமான ஆளுங்களை மட்டும் கூப்பிட்டாப் போதும்" என்றவர் ஒருகணம் நிறுத்தி ஆதர்ஷன் முகத்தைத் தவிப்பாகப் பார்த்தார்.
அவர் பார்வையின் அர்த்தத்தை நன்கு புரிந்து கொண்ட ஆதர்ஷ், "நீங்க ஆசைப்படற மாதிரி நமக்கு வேண்டிய எல்லாரும் வருவாங்க தாத்தா" என்றவனை நிமிர்ந்து பார்த்தவர், "தன்விகிட்ட இது பத்தி" என்று இழுக்க, இடவலமாக இல்லை என்று தலையாட்டிய ஆதர்ஷன்,
"இல்ல தாத்தா, அவளுக்கு இப்ப எதுவும் தெரிய வேணாம். நேரம் வரும் போது நானே அவகிட்டச் சொல்லிக்கிறேன். அதுவரை நீங்களும் எதுவும் சொல்ல வேணாம்" என்றவனைப் புரியாமல் பார்த்தவர்,
"எதுக்காக இப்படிச் சொல்ற ஆதர்ஷன். அவளும் இந்த வீட்டுப் பொண்ணு தான, தெரிஞ்சுகிட்டா என்ன தப்பு? இன்பேக்ட் இதுவே ரொம்ப லேட், நம்ம அவகிட்ட எப்பவோ இதெல்லாம் சொல்லி இருக்கணும்" என்றவரைச் சலிப்பாகப் பார்த்த ஆதர்ஷ், 'ம்க்கும்… இவ்ளோ நாள் எதுவும் அவளுக்குத் தெரியாம இருக்கறதுனாலதான் இந்தக் கல்யாணமே நடக்குது. அவளுக்கு மட்டும் உண்மை தெரிஞ்சுது, எனக்கும் அவளுக்கும் இந்த ஜென்மத்தில் கல்யாணம் நடக்காது தாத்தா. அப்புறம் எங்க பிளான் மொத்தமும் ஊத்திக்கும்' என்று மனதுக்குள் நினைத்தவன்,
"ப்ளீஸ் தாத்தா… நான் சொல்றதைக் கேளுங்க, இப்போதைக்கு அவளுக்கு எதுவுமே தெரிய வேணாம். அவளுக்கு எப்ப சொல்லணும்னு எனக்குத் தெரியும். அதை என்கிட்ட விட்டுடுங்க. இப்ப உள்ள வந்து எங்க மேரேஜ் டேட்டை எல்லாருக்கும் சொல்லுங்க" என்றவன் வீரராகவனை உள்ளே அழைத்துச் சென்றான்.
சிறிது நேரம் ரூமில் அமர்ந்திருந்தவள் மனம் ஒரளவு சமநிலை அடைந்திருக்க, முகத்தைக் கழுவி, வாடி இருந்த முகத்தில் லேசாக மேக்கப் போட்டவள், தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்தாள்.
கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தின் நெற்றியைப் பார்த்தவளுக்குச் சற்று முன் ஆதர்ஷ் கொடுத்த முத்தம் நினைவு வர, அவள் உடலில் லேசான அதிர்வலைகள். அதன் விளைவு அவள் கன்னத்தில் தெரிய, சிவந்திருந்த கன்னத்தை வருடியவள் மனக்கண்ணில் ஒரு நொடி ஆலன் முகம் வந்து போகச் சட்டென்று அவள் மொத்த உணர்வுகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.
’ஸ்டாப் திஸ் தன்வி… இது சரியில்ல, எல்லாம் தெரிஞ்சும் நீ இந்த மாதிரி உன் மனசை அலைய விடுறது தப்பு. அன்னைக்குக் கோயில்ல பெரிய இவ மாதிரி உங்களை லவ் பண்ண மாட்டேன்னு உறுதியாச் சொன்னியே… இப்ப எங்கப் போச்சு அந்த உறுதி? இந்தக் கல்யாணம் தாத்தாவுக்காக, ஆதர்ஷ் மரியாதைக்காக மட்டும் தான். அதைத் தாண்டி எதுவும் இல்ல, ஆது லைஃப்ல எப்பவும் நீ வரமுடியாது. அதுக்கு ஊசி முனை அளவு கூட வாய்ப்பில்லைன்னு உனக்குத் தெரியும் இல்ல, கண்டதையும் யோசிக்காம மனசைக் கண்ட்ரோல்ல வை" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள், தலையை உலுக்கித் தன்னை சமன் செய்து கொண்டு கீழே வந்தாள்.