விழி வழி காதல் நுழைந்ததடி 16
விழி 16
கோவிலில் இருந்து வெளியே வந்த ஆதர்ஷ், தன்வி இருவரும் காரில் ஏறிக் கொண்டனர்.
தன்வி திடீரென்று தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தில் தடுமாறி இருந்தவள், ஆதர்ஷனின் முகத்தைப் பார்க்கத் தயங்கி சாலையை வெறித்தபடியே இருக்க, அவள் திரும்பி தன்னைப் பார்க்கப் போவது இல்லை என்று புரிந்து கொண்ட ஆதர்ஷ், "தன்வி" என்று ஆசைக் குரலில் அழைத்தான்.
பல வருடங்களாகக் கேட்டுப் பழகிய குரல் தான். ஆனால் இன்று ஏனோ அவன் வாய் மொழியில் தன் பெயரைக் கேட்டவள் காதில் அவன் குரல் தேனாய் தித்தித்தது. தனக்குள் ஏன் இந்த திடீர் மாற்றம் என்று அவளுக்கே தெரியவில்லை. சில மாதங்களாக அவனைப் பிரிந்திருந்ததால் ஒரு வேளை இப்படி எல்லாம் விசித்திரமாக உணர்வுகள் தோன்றுகிறதோ என்று எண்ணிக் கொண்டவள் அவனைத் திரும்பிப் பார்க்காமல், "ம்ம்ம்" என்று மட்டும் சொன்னாள்.
அதைப் பார்த்து, "ப்ச்ச்" என்று சலிப்பாக இரு பக்கமும் தலையாட்டியவன், "திரும்பி என்னைப் பாருடி" என்றான் கட்டாயக் குரலில்.
அவன் குரல் மாற்றத்தை உணர்ந்த தன்வி மெல்லத் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள்.
"ஒரு வாரமா விரதம் இருந்தியா?" என்று அவள் கண்ணைப் பார்த்துக் கேட்டான்.
அவன் கண்களை நேருக்கு நேர் பார்க்கத் தயங்கியவள், தலையைக் குனிந்தபடியே, "ம்ம்ம்" என்றாள்.
"எதுக்கு?" என்றான் அவன்.
"கோயில்ல தான் அர்ச்சகர் சொன்னாரே… உங்களுக்கு நேரம் சரில்லன்னு."
"சரி… நேரம் சரி இல்லாதது எனக்கு தானே? உனக்கு இல்லயே, அப்புறம் எதுக்குடி நீ விரதம் இருந்த?" என்று கேட்க அவளுக்கு அதற்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை.
எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி, "அர்ச்சகர் பரிகாரம் பண்ணனும்னு தான் சொன்னாரு, நீங்க பண்ணனும்னு சொல்லல… உங்களுக்கு தான் இதுல எல்லாம் நம்பிக்கை இல்லயே, அதான் நானே செஞ்சேன்" என்றவளைப் பார்க்கப் பார்க்க, அவன் இதயம் அதன் பாதையை விட்டு நழுவுவது போல் இருந்தது அவனுக்கு.
அவள் முகத்தைப் பார்த்தபடி மூச்சை இழுத்து மேலே பார்த்து ஊதியவன், "சரி, எனக்காகப் பரிகாரம் பண்ணது நீ தான? அப்ப இந்தக் கயிறைக் கட்ட வேண்டியவளும் நீதான். இந்தா, கையில் கட்டிவிடு" என்று கொஞ்ச நேரம் முன் கோயில் அர்ச்சகர் கொடுத்த கயிரை அவள் முன் நீட்ட, அவனை அதிசயமாகப் பார்த்தாள் தன்வி.
"ஓய்! என்ன என் முகத்தையே பார்த்துட்டு இருக்க? நான் சொன்னது காதுல கேக்கல? இதைக் கையில கட்டி விடுன்னு சொன்னேன்." என்றான் சிரித்துக் கொண்டே.
அதைக் கேட்டவள் கண்கள் அகலமாக விரிந்து கொள்ள, "நிஜமாவா!" என்று நம்ப முடியாமல் கேட்டாள் தன்வி.
"நிஜமா தான்டி சொல்றேன். கட்டி விடு" என்றான் அவன் அதே புன்னகையுடன்.
"உங்களுக்கு தான் இதுல எல்லாம் நம்பிக்கையே இல்லயே? இதுவரை நீங்க ஒரு தரம் கூட இந்த மாதிரிக் கயிறு எல்லாம் கட்டுனதே இல்லயே? இன்னைக்கு மட்டும் என்ன ஆச்சு உங்களுக்கு?" என்று மூச்சு விடாமல் பேசியவளை சிறு புன்னகையோடு பார்த்த ஆதர்ஷின் மனது வெகு நாள் கழித்து இன்று தன்னிடம் இவ்வளவு இயல்பாக அவள் பேசியதை நினைத்து நிறைந்து போனது. அந்த மன நிறைவுடனேயே அவள் முகம் பார்த்தவன்,
"இப்பவும் இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல தான். பட் உனக்காக இதை நான் செய்யறேன்." என்றவன் வார்த்தையில் ஒரு கணம் மனம் நெகிழ்ந்தவள், அடுத்த கணமே தன்னைச் சுதாரித்துக் கொண்டு, அவன் கையில் இருந்த கயிற்றை வாங்கி அவன் கை மணிக்கட்டில் கட்டி மூன்று முடிச்சுப் போட்டு விட்டாள்.
அதைப் பார்த்தவன், "நான் தான்டி உனக்குத் தாலி கட்டி மூணு முடிச்சுப் போடனும். ஆனா, இங்க நீ எனக்கு மூணு முடிச்சுப் போட்டிருக்க… ம்ம்ம், உன்னை நம்பிக் கையைக் கொடுத்திருக்கேன். இனிமே நீதான் காலம் பூரா என்னைக் கண் கலங்காம வச்சுப் பார்த்துக்கனும், என்ன ஓகேவா?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் குறுஞ்சிரிப்போடு கேட்க, முதலில் அவன் சொன்னதின் அர்த்தம் விளங்காமல் மலங்க மலங்க முழித்தவள், பின் அவன் சொன்னது புரிந்ததும் அவளது கன்னங்கள் சிவந்துவிட, "டைம் ஆச்சு, வீட்டுக்குப் போகலாம். தாத்தா காத்திருப்பார்." என்றவள் கவனிக்கவில்லை. காலம் முழுதும் என் வாழ்க்கை உன்னோட தான் என்று மனதில் இருந்து அவன் சொன்னதை.
இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு அன்பு, பாசம் அளவு கடந்த நம்பிக்கை எல்லாம் இருந்தது. ஆனால், காதல் என்ற ஒன்று மட்டும் வார்த்தை அளவில் கூட இருவருக்கும் இடையில் வந்தது இல்லை. இனி இல்லறம் என்னும் பயணத்தில் அடியெடுத்து வைக்கும் இவர்கள் இருவருக்குள் காதல் வருமா?
இங்கு வீட்டில் ஆதர்ஷ், தன்வி இருவரையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார் வீரராகவன்.
வீட்டு வாசலில் கார் சத்தம் கேட்டது, அவருக்கு உள்ளுக்குள் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.
மனதில், 'கடவுளே தன்வியும் ஆதர்ஷனும் விரும்பி இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லணும் கடவுளே! நீதான் அவங்களுக்கு ஒருத்தர் மேல ஒருத்தர் பிடித்தம் வர வைக்கனும். கல்யாணத்துக்குப் பிறகு ரெண்டு பேரும் சந்தோஷமா வாழணும்' என்று மனதார வேண்டிக் கொள்ள, அவரின் வேண்டுதலை அந்தக் கடவுள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்.
வீட்டுக்குள் வந்த ஆதர்ஷ், தன்வியை வீரராகவன் ஆர்வமாகப் பார்க்க, அவரைப் பார்த்து மென்மையாகச் சிரித்த ஆதர்ஷ், "தாத்தா, சீக்கிரம் ஒரு பார்ட்டி மாதிரி ஏற்பாடு செஞ்சு, நமக்குத் தெரிஞ்ச எல்லாரையும் இன்வைட் பண்ணுங்க… அதுல எனக்கும் தன்விக்கும் கூடிய சீக்கிரம் மேரேஜ்னு அனவுன்ஸ் பண்ணிடுங்க… மேரேஜ் டேட் அப்புறம் நம்ம பேசி முடிவு பண்ணிக்கலாம்" என்றவன் திரும்பி தன்வியைப் பார்த்து, "என்னடி, உனக்கு ஓகே தான?" என்று குறும்பாகக் கேட்க, அவளும் தலை குனிந்தபடி சரி என்பதைப் போல் தலையை மட்டும் ஆட்டினாள்.
"ம்ம்ம்… அவளுக்கும் ஓகேவாம் தாத்தா. சோ, சீக்கிரம் எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸும் செய்யனும்." என்றவன் ஒரு கணம் நிறுத்தி, "தாத்தா இப்ப தான் நினைவு வருது, வர்ற ஃபிரைடே உங்க பர்த்டே வருது இல்ல. பேசாம அதைச் சொல்லி எல்லாரையும் இன்வைட் பண்ணிட்டு, அன்னைக்கே மேரேஜ் அனவுன்ஸ்மென்ட் பண்ணிட்டா என்ன?" என்று கேட்டான்.
"என்ன ஆதர்ஷ் இது… உனக்கு தான் தெரியும் இல்ல, நான் பர்த்டே எல்லாம் செலபரேட் பண்றது இல்லைன்னு… அதெல்லாம் ஒண்ணும் வேணாம், பேசாம உனக்கும் தன்விக்கும் எங்கேஜ்மென்ட்னு சொல்லி எல்லாரையும் இன்வைட் பண்ணு" என்றார் வீரராகவன்.
"நோ தாத்தா… இதுவரை நீங்க பர்த்டே செலபரேட் பண்ணது இல்ல தான். அதுக்காகப் பண்ணவே கூடாதுன்னு ஒண்ணும் இல்லயே? அதோட இந்த பர்த்டேவோட உங்களுக்கு எண்பது வயசு ஆகுது. அதை செலபரேட் பண்ணியே ஆகனும்." என்று உறுதியாகச் சொல்ல, வீரராகவன் ஏதோ சொல்ல வாயெடுக்க அவரைப் பார்த்துக் கைகாட்டித் தடுத்தவன்,
"பேசாதீங்க… நான் சொன்னா சொன்னது தான். உங்க பர்த்டே அன்னைக்கு நீங்க சொன்ன மாதிரி எங்க ரெண்டு பேருக்கும் எங்கேஜ்மென்ட் நடக்கும். இது ஃபைனல்." என்றவன் சிரித்தபடியே அங்கிருந்து சென்றுவிட்டான்.
"பாரு தன்வி இவன் பண்றதை? நீயாவது அவனுக்குக் கொஞ்சம் சொல்லிப் புரிய வை" என்று பேத்தியிடம் உதவி கேட்க, அவளுக்கோ ஆதர்ஷன் முடிவில் அத்தனை சந்தோஷம். அதை எப்படி அவள் வேண்டாம் என்று சொல்வாள்.
"சாரி தாத்தா… இதுல என்னால ஒண்ணும் செய்ய முடியாது. பிகாஸ், பாஸ் எடுத்த முடிவு எனக்குப் புடிச்சிருக்கு. சோ, நோ காம்ப்ரமைஸ். உங்க பர்த்டேவை செமையா செலபரேட் பண்றோம்" என்றபடி அவளும் சென்றுவிட, இப்போது வீரராகவன் தான் முழித்துக் கொண்டு இருந்தார்.
அன்றைய நாள் திருமணம் முடிவான சந்தோஷத்தில் வேகமாக நகர இரவும் வந்துவிட்டது.
தன்வி இரவு உணவைத் தயார் செய்து விட்டு, ஆதர்ஷனைச் சாப்பிட அழைக்க சமையலறையில் இருந்து ஆதர்ஷன் அறைக்குச் செல்ல, அந்த அறையோ வெறுமையாக இருந்தது.
"எங்க போனாரு இவரு?" என்று தனக்குள் பேசியபடியே அந்த அறையை விட்டு வெளியே வந்தவள், அங்கு தன்வியின் உடமைகளை எடுத்துக் கொண்டு படியேறி வந்து கொண்டிருந்த ஆதர்ஷன், வேலையாள் கமலாவைப் பார்த்து அதிர்ந்தாள்.
"என்ன பண்றிங்க சார்? எதுக்கு என்னோட திங்ஸ் எல்லாத்தையும் இங்க எடுத்துட்டு வரிங்க…?" என்று இமை கொட்டிப் பதட்டமாகக் கேட்டவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்தவன், "ம்ம்ம் வேண்டுதல்" என்றவன், "தள்ளுடி" என்று அவள் தோளைப் பிடித்து தள்ளி விட்டவன், பொருட்களோடு மேலே ஏற பின்னால் வந்த கமலாவோ, தன்வி மீண்டும் இந்த வீட்டிற்கு வந்து விட்டாள் என்ற மகிழ்ச்சியோடு அவள் பொருட்களை எடுத்துக்கொண்டு தன்வியைப் பார்த்துச் சிரித்தபடி ஆதர்ஷின் பின்னால் சென்றார்.
அவர்கள் பின்னாலேயே சென்ற தன்விக்கு அடுத்த அதிர்ச்சி… அவளின் பொருட்கள் அனைத்தும் ஆதர்ஷன் அறைக்கு அடுத்த அறையில் வைப்பதைப் பார்த்து.
"என்ன பண்றீங்க நீங்க?" என்று கோவமாகக் கத்தியவளைத் திரும்பி ஏற இறங்கப் பார்த்த ஆதர்ஷ், "கமலா நீங்க கீழ போங்க… இங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்" என்றதும் கமலா அந்த அறையை விட்டு வெளியேறி விட்டார்.
"ம்ம்ம் இப்பச் சொல்லு… ஏதோ சொல்லிட்டு இருந்தியே?" என்று காதைக் குடைந்தபடி கேட்ட ஆதர்ஷனைப் பார்த்து முடிந்தவரை முறைத்தவள், "இப்ப எதுக்கு என்னோட திங்ஸ் எல்லாத்தையும் இந்த ரூம்ல கொண்டு வந்து வச்சிருக்கீங்க?" என்றவளின் குரலில் அனல் அலையாகப் பெருக்கெடுக்க, இழுத்து மூச்சு விட்டபடி, அவளை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்த ஆதர்ஷ்,
"உன் திங்ஸ் எல்லாம் கெஸ்ட் ரூம்ல வைக்க நீ ஒண்ணும் இந்த வீட்டு கெஸ்ட் இல்லயே? இந்த வீட்டோட வருங்கால மருமகளாச்சே! அதான் இங்க வச்சேன். அதோட கெஸ்ட் ரூம் கீழ இருக்கறதுனால நீ ஈசியா உன் திங்ஸ் எடுத்திட்டு அவுட் ஹவுஸ்க்கு ஓடிப் போயிடுற… அதான் உன் ரூமை மேல மாத்திட்டேன். இனிமே நீ என் பக்கத்தில் தான் இருக்கணும்" என்றான் அலட்சியமாக.
"யாரைக் கேட்டு இப்படி எல்லாம் செய்யறீங்க… என்னால எல்லாம் இங்க இருக்க முடியாது, நான் இருக்க மாட்டேன்" என்று பிடிவாதமாகச் சொன்னவளை ஒற்றைப் புருவம் உயர்த்தி அழுத்தமாகப் பார்த்தவன், "நீ இங்க இருக்கியான்னு நான் உன்கிட்ட பர்மிஷன் கேக்கல… நீ இனி இங்க தான் இருக்கப் போறேன்னு இன்ஃபர்மேஷன் கொடுக்குறேன்" என்று அவள் அருகில் வந்து அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து, "அண்டர்ஸ்டாண்ட்" என்று அழுத்தமாகக் கேட்க அவனின் அந்தப் பார்வையில் சற்று பயந்தவள், "ம்ம்ம்… பு…புரிஞ்சிது" என்றாள் உள்ளே சென்ற குரலில்.
"குட்" என்று அவள் கன்னத்தில் தட்டியவன், "மேரேஜ் வரைக்கும் நீ இங்க தான் இருக்கணும்" என்றதும் அவள் உடனே, "அப்ப மேரேஜ்க்கு அப்புறம் நான் அவுட் ஹவுஸ் போயிடலாம் இல்ல" என்று சட்டெனக் கேட்டுவிட, வெடுக்கென்று அவளைத் திரும்பிப் பார்த்த ஆதர்ஷனுக்கு அவள் முகபாவனையைப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட, சத்தம் போட்டுச் சிரிக்கத் தொடங்கி விட்டான்.
நிறுத்தாமல் சிரிக்கும் ஆதர்ஷனைப் பார்த்து ஒரு கட்டத்தில் அவளுக்குக் கோபம் வந்துவிட, "இப்ப எதுக்கு லூசு மாதிரி இப்படி கெக்கபெக்கன்னு சிரிச்சுகிட்டு இருக்கீங்க.?" என்று இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு தன்னை முறைப்பவளைப் பார்த்தவனுக்கு, அவள் சொன்னதின் அர்த்தம் இன்னும் கூட அவளுக்குப் புரியவில்லையே என்று நினைத்தவனுக்கு மேலும் சிரிப்பு தான் வந்தது.
"யாரு? நான் லூசு…" என்று அவளைப் பார்த்து நக்கலாகக் கேட்க அவள் ஆமாம் என்று தலையாட்டியவள், "பின்ன? காரணம் இல்லாமல் இப்படிச் சிரிச்சிட்டு இருந்தா வேற என்ன சொல்லுவாங்கலாம். நான்னு இல்ல, இதைப் பார்க்குற எல்லாரும் உங்களை லூசுன்னு தான் சொல்லுவாங்க" என்றாள் வீம்பாக.
"அடியேய்! நீ சொன்னதை யாராச்சும் கேட்டிருந்தால் என்னை இல்லடி, உன்னைத் தான் லூசுன்னு நினைச்சு… இல்ல இல்ல, லூசுன்னு கன்பார்மே பண்ணி இருப்பாங்க" என்று அவன் மேலும் சிரிக்க அதில் இன்னும் கடுப்பானவள், "இப்ப என்ன லூசுத் தனமா கேட்டுட்டேன்? மேரேஜ் முடிஞ்ச உடனே நான் அவுட் ஹவுஸ் போயிடலாமான்னு தான கேட்டேன்." என்றவள் அந்த வாக்கியத்தை முடிக்கும் முன்னரே அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்துவிட, "இஸ்ஸ்" என்று நுனி நாக்கைக் கடித்துக் கொண்டவள், கண்கள் சுருங்கும்படி இறுக்கி மூடிக் கொண்டாள்.
அதைப் பார்த்து இதழ்களுக்குள் சிரித்த ஆதர்ஷ்,
"ம்ம்ம், இப்பச் சொல்லுடி… நம்ம ரெண்டு பேர்ல யாருடி லூசு" என்று அவளை வம்பிழுத்தான்.
ஒரு கணம் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தடுமாறிய தன்வி, "இப்ப நான் என்ன தப்பாக் கேட்டேன். நீங்க என்ன? என்னை விரும்பியா கல்யாணம் பண்றீங்க…? உங்க மனசுல தான் வேற ஆள் இருக்கே! இந்தக் கல்யாணம் ஜஸ்ட் தாத்தாவுக்காகத் தான… அதோட நம்ம ரெண்டு பேர் சேர்ந்திருக்கிறதும் தனித் தனியா இருக்குறதும் ஒண்ணு தான். அதான் அப்படிக் கேட்டுட்டேன், அதுக்கு இப்ப என்னவாம்" என்று அவள் முறுக்கிக் கொள்ள,
ஆதர்ஷ் இமைக்காமல் அவள் முகத்தையே பார்த்தவன் அவளை நோக்கி மெதுவாக நடந்து வர, தன்வி அவன் பார்வையின் வீரியத்தைத் தாங்க முடியாமல் தலையைக் குனிந்தபடி, பின் பக்கமாக அடிமேல் அடியெடுத்து வைத்து நகர்ந்தவள், ஒரு கட்டத்தில் சுவற்றில் மோதி நின்றாள்.
அவள் அருகில் வந்த ஆதர்ஷ், அவள் மேல் தன் மூச்சுக் காற்றுப் படும்படி அவளை நெருங்கி நின்றவன், அவளின் இருபக்கமும் சுவற்றில் கைவைத்து அவளைச் தன் கைச் சிறைக்குள் அடைத்துக் கொண்டு, அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே,
"யூ ஆர் ரைட் தன்வி. இந்தக் கல்யாணம் நார்மல் கல்யாணம் இல்ல தான். தாத்தாக்காகத் தான் இந்தக் கல்யாணம். அதே தாத்தாவுக்காகத் தான் நானும் சொல்றேன். விரும்பாமல் இந்த மேரேஜ் நடந்தாலும், என் மனசுல வேற ஆள் இருக்குன்னு நீ சொன்னாலும், நமக்குள் ஒண்ணும் நடக்க வாய்ப்பில்லன்னு நீ நினைச்சாலும்" என்றபடியே அவள் கண்ணைப் பார்த்தவன், "மேரேஜ் முடிஞ்ச பிறகு நீ என்னோட, என் ரூம்ல, என் கூட தான் இருக்கனும். இருந்தே ஆகணும், பிகாஸ் உனக்கு வேற வழி இல்ல" என்றான் அழுத்தமாக.
அவன் நெருக்கத்தில் அங்கம் நடுங்க அதிர்ந்து நின்றவள் முகத்தின் முன் விரலால் சொடுக்குப் போட்டவன், "ம்ம்ம், அப்புறம் ஏதோ சொன்னியே… என்ன?" என்று யோசித்தவன், "ஹான்… நீங்க என்ன என்னை விரும்பியா கல்யாணம் பண்றீங்கன்னு, என்னை மட்டும் கேக்குற? அப்ப நீ என்ன? என்னை விரும்பி தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறியா?" என்று கண்களைச் சிமிட்டிக் குறும்பாக கேட்க, தன்விக்குத் தூக்கிவாரிப் போட்டது.
"என்ன…?" என்று அவள் அதிர்ச்சியாகக் கேட்க, "ம்ம்ம், நான் கேட்டது உனக்கு நல்லாக் கேட்டுச்சின்னு எனக்குத் தெரியும். மறுபடி மறுபடி ஒரே விஷயத்தை என்னாலச் சொல்லிட்டு இருக்க முடியாது. பசிக்கிது, சீக்கிரம் வந்து சாப்பாடு போடு" என்றபடி அவன் சென்றுவிட, அவனின் இந்தப் புதுவிதமான நடத்தையில் பாவம் தன்வி தான் தவித்துப் போனாள்.
வீரராகவனுக்குப் பிறந்தநாள் விழா என்று அவர்களுக்கு நெருங்கிய உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.
தன்வியின் கொஞ்ச நஞ்ச நிம்மதியைப் பறிக்கும் அந்த நாளும் வந்தது.