விழி வழி காதல் நுழைந்ததடி 15

விழி 15


தன்வியிடம் பேசிவிட்டுத் திரும்பிய வீரராகவனின் பார்வை இப்போது ஆதர்ஷன் மேல் அழுத்தமாகப் படிந்தது.


"நீ சொல்லு ஆதர்ஷ்… நீ ஜனார்த்தன் கிட்டச் சொன்னதுக்கு என்ன அர்த்தம்? அந்தப் பையனுக்குத் தன்வியைக் கொடுக்க விருப்பம் இல்லாமல் நீ அப்படிச் சொன்னியா? இல்ல, உண்மையில் நீ தன்வியைக் கல்யாணம் செஞ்சுக்க முடிவு பண்ணிட்டியா?" என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டார் அவர்.


அவர் கேட்ட கேள்விக்கு ஆதர்ஷன் சில நொடிகள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் குழம்பியபடியே திரும்பி தன்வியின் முகத்தைப் பார்த்தான்.


அவள் முகத்தில் எந்தவித அதிர்ச்சியோ‍, கேள்விகளோ, குழப்பமோ எதுவுமே இல்லை. அவள் முகம் நிர்மலமாக இருந்தது.


'இவளால் மட்டும் எப்படி எல்லா சிட்டுவேஷன்லயும் இப்படி நிதானமாவும், அமைதியாவும் இருக்க முடியுது. ஓ காட்! சைலன்ஸ் இஸ் எ வெரி வெரி டேஞ்சரஸ் வெப்பன்! மத்த விஷயத்தில் சாதுவா இருக்கறவ நான்னு வந்தா மட்டும் அடவுகட்டி ஆடுறாளே… ம்ம்ம், எல்லாம் என் தலையெழுத்து' என்று மனதில் புலம்பியவன், கண்களை அழுத்தமாக மூடி மூச்சை இழுத்து வெளியே ஊதியபடி திரும்பித் தாத்தாவைப் பார்த்து, "எனக்கு தன்வியை மேரேஜ் பண்ணிக்கச் சம்மதம் தாத்தா." என்று உறுதியாகச் சொல்ல, வீரராகவன் அவனை ஏறிட்டு அழுத்தமாக இல்லை என்று தலையாட்டியவர்‍,


"நான் சொன்னது உனக்கு சரியாப் புரியலன்னு நினைக்குறேன்… இப்பவும் சொல்றேன், எனக்கு உங்க ரெண்டு பேரோட சம்மதம் தேவை இல்ல ஆதர்ஷ்… எனக்கு வேண்டியது உங்களோட விருப்பம். உன் மனசல தன்வியைப் புடிச்சு, நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இருந்தால் மட்டும் தான் இந்தக் கல்யாணம் நடக்கும். அப்படி இல்லாமல் எனக்காக நீ இந்த முடிவை எடுத்திருந்தால், இதுக்கு என்னோட பதில் நோ மட்டும் தான்… தன்விக்குச் சொன்னது தான் உனக்கும், கல்யாணம் முடிஞ்ச பிறகு நீங்க நல்லா வாழணும். எனக்காக மட்டுமே யோசிச்சு இந்தக் கல்யாணத்தை பண்ணிக்க நீங்க சம்மதிச்சால் அந்த வாழ்க்கை உங்க ரெண்டு பேருக்குமே நிம்மதியைக் கொடுக்காது. சோ ரெண்டு பேரும் யோசிச்சுக் கலந்து பேசி நாளைக்குள்ள எனக்கு ஒரு முடிவைச் சொல்லுங்க… உங்க முடிவு என்னவா இருந்தாலும் எனக்குச் சம்மதம் தான்." என்றவர் திரும்பித் தன்வியைப் பார்த்து, 


"தன்வி, நீ கோயிலுக்குப் போகனும்னு சொன்ன இல்ல." என்றவர், "ஆதர்ஷ், நீயே அவளைக் கூட்டிட்டுப் போ. ரெண்டு பேரும் பேசுங்க, அப்புறம் உங்க முடிவை என்கிட்ட வந்து சொல்லுங்க" என்றவர் அங்கிருந்து சென்றுவிட, ஆதர்ஷனும் தன்வியை அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் புறப்பட்டான்.


கோவில் போய்ச் சேரும் வரையில் இருவரும் எதுவும் பேசவில்லை. 


அவளின் அசாத்திய அமைதி அவனுக்கு உள்ளுக்குள் சற்று பயத்தைக் கொடுத்தது. எங்கு இனிமேல் காலம் முழுவதும் பழைய தன்வியைப் பார்க்க முடியாதோ என்ற பயம் அவன் மூளைக்குள் புகுந்து குறுகுறுக்கச் செய்ய, 'ச்சீ, அப்படி எல்லாம் எதுவும் நடக்காது. அவ ஏதோ கோவத்தில் இப்படிப் பண்ணிட்டு இருக்கா, கோவம் போயிட்டா பழைய மாதிரி வாயடிக்க ஆரம்பிச்சிருவா… அப்ப நான் என் காதோட நிலையை நினைச்சு இதைவிட அதிகமா பயப்படப் போறேன்' என்று மனதில் நினைத்தவன், தன்னையும் மீறிச் சிறிது சத்தமாகச் சிரிக்க, சட்டென்று திரும்பிய தன்வி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.


அவள் கண்களில் குத்தி நின்ற கேள்வியைப் புரிந்து கொண்டவன், "ஒண்ணும் இல்ல, ஜஸ்ட் லைக் தட்… சும்மா தான் சிரிச்சேன்" என்று சொல்ல, அவள் அவனை ஒரு மாதிரிப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டவள், மீண்டும் சாலையை வெறித்தாள்.


தன்வி கோவிலுக்குள் செல்ல ஆதர்ஷனோ, "நீ போய் சாமியைக் கும்பிட்டு வா, நான் அங்க மண்டபத்தில் வெயிட் பண்றேன்" என்றவனை அவள் எப்போதும் போல் வற்புறுத்தி அழைப்பாள் என்று அவன் எதிர்பார்க்க, அவளோ சரி என்று தலையாட்டிவிட்டு, "பூஜைப் பொருட்களுடன் கருவறைக்குள் சென்றாள்.


ஒரு உஷ்ணப் பெருமூச்சோடு போகும் அவளை அனல் தெறிக்கப் பார்த்தவன், "வர வர ரொம்பப் பிடிவாதம்." என்று வாய்க்குள் முனங்கிக்கொண்டே அவள் பின்னாலேயே சென்றவன் அவள் அருகில் நின்று கொண்டான்.


அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பி மீண்டும் கடவுளை நோக்கிக் கைகூப்பி நின்றவள் மனது முழுவதும் வெறுமையாக இருந்தது.


பார்க்கும் மனிதருக்கு அவளின் அமைதி மௌனமாகத் தெரியலாம். ஆனால், அவள் எதிரில் இருக்கும் அந்த இறைவனுக்கு மட்டும் தான் அவள் அமைதியின் காரணம் அவள் மனதின் வெறுமை என்ற உண்மை தெரியும். அவள் கண்களில் துளிக் கண்ணீர் இல்லை… ஆனால், அவள் உள்மனம் சத்தம் வராமல் கதறி அழுது கொண்டு இருந்தது. 


அந்த உள்மனதின் அழுகையின் ஓசை அவள் அருகில் இருப்பவனுக்குக் கேட்குமா? அவள் மன வெறுமையை நீக்கி, அவள் நெஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைவானா அவன்? அவன் அவளவனாக மாறுவானா? அது அந்த இறைவனுக்கு மட்டும் தான் தெரியும்.


அவள் அழுகைக்குக் காரணம் அவள் அன்பு ஆது தான். அவனின் ஒதுக்கத்தின் விளைவு. எங்கு அவன் தன்னை முழுதாக வெறுத்து விட்டானோ என்ற பயத்தில் வந்த அழுகை அது. அவள் உள்மனதுக்குத் தெரியும், ஆது அவள் மேல் வைத்திருக்கும் அன்பின் அளவு. ஆனால், அந்த அன்பை அவனின் கோவம் ஜெயித்து விட்டதே என்ற மனவருத்தம் தான் அவளைப் புரட்டிப் போட்டுவிட்டது. என்ன ஆனாலும் தன் பாஸ் தன்னிடம் பேசாமல் இருக்க மாட்டார் என்ற கர்வத்தை, வெளிநாடு சென்றவனின் புறக்கணிப்பு அடித்து நொறுக்கி விட்டது. மீண்டும் அப்படி ஒரு நிலை வந்து, ஆதர்ஷ் தன்னை ஒதுக்கி வைத்தால், அதைத் தாங்கும் மனவலிமை தன்னிடம் இல்லை என்ற காரணத்திற்காகவே அவனை விட்டுத் தள்ளியே இருந்தாள். ஆனால், விதியோ அவளின் உயிரோடும் உணர்வோடும் அவனைப் பிரிக்க முடியாதபடி பிணைக்க கல்யாணம் என்ற கால்கட்டோடு அல்லவா காத்திருக்கிறது. 


கற்பூரத் தட்டோடு வந்த அர்ச்சகர் ஆதர்ஷனைப் பார்த்து, "எப்படிப்பா இருக்க ஆதர்ஷ்? என்று கேட்க, 


ஆதர்ஷ் நிமிர்ந்து அவரைப் பார்த்தவன், "ம்ம்ம் நல்லா இருக்கேன்" என்றான் சிறு புன்னகையோடு.


"இந்தாம்மா தன்வி" என்று பூஜைப் பொருட்களை அவள் கையில் கொடுக்க, பயபக்தியோடு அதை வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கொண்டவளைப் பார்த்தவர், "நீ சொன்ன மாதிரி ஆதர்ஷ் பேர்ல பூஜையும், பரிகாரமும் சிறப்பாச் செஞ்சிட்டேன்மா. இனித் தம்பிக்கு ஒரு பிரச்சனையும் இல்லை" என்று சொல்ல தன்வியும், "ம்ம்ம் சரிங்க" என்றாள்.


அவர் சொன்னதைக் கேட்ட ஆதர்ஷ், "என் பேர்ல பரிகாரமா… எதுக்கு?" என்று கேட்டான்.


"அது ஒண்ணும் இல்லப்பா, இப்ப நடந்த ராகு கேது பெயர்ச்சி உனக்கு அவ்வளவா சரியில்ல, அதுக்காக தான் தன்வி ஒரு வாரம் விரதம் இருந்தா… இன்னைக்கு அந்த விரதம் முடியுது. அதான் உன் பேர்ல பூஜையும் உனக்கு எந்தப் பிரச்சனையும் வரக் கூடாதுன்னு பரிகாரமும் பண்ணச் சொல்லி இருந்துச்சு. நல்லவேளை, நீ ஊர்ல இல்லைன்னு நினைச்சேன். கடவுள் செயல், நீயும் இன்னைக்கு வந்திட்டா" என்றவர் கடவுள் பாதத்தில் வைத்த கயிற்றை அவனிடம் கொடுத்து விட்டுச் சென்றுவிட, ஆதர்ஷ் தன் கையில் இருந்த கயிற்றையே பார்த்தபடி இருந்தவன் நிமிர்ந்து தன்வியைப் பார்க்க, அவளின் முகம் வழக்கம் போல் வெறுமையாக எந்த உணர்வும் இன்றி இருந்தது.


அவள் முகம் பார்த்தவன் மனதில், 'ஏன்டி? ஏன் உனக்கு இவ்ளோ அன்பு. உன் மனசைக் காயப்படுத்தின ஒருத்தனுக்காக நீ ஏன்டி இவ்ளோ செய்யற? எப்படி உன்னால் இப்படி இருக்க முடியுது' என்ற கேள்வி தான் ஓடியது.


அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவளின், "போலாம் சார்" என்ற குரலில் சுய உணர்வு பெற்றவன் அவளோடு வெளியே வந்தான்.


வெளியே வந்த இருவரும் அங்கிருந்து கோவில் நந்தவனத்தில் வந்து உட்கார்ந்தனர்.


வெகு நேரமாக இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்க, "உங்க கண்டிஷன்ஸ் என்னன்னு சொல்லுங்க சார்?” என்று அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு வந்தது தன்வியின் குரல்.


சட்டென அவள் கேட்ட கேள்வியின் அர்த்தம் என்னவென்று புரியாமல் அவன் திரும்பி தன்வியின் முகத்தைப் பார்க்க,


அவள் அவனைப் பார்க்காமல் எங்கோ வெறித்தபடி இருந்தாள்.


"நீ என்ன கேக்குறேன்னு எனக்குப் புரியல தன்வி" என்றான் ஆதர்ஷ்.


தன்வி கண்களை மூடி இழுத்து மூச்செடுத்தவள், "நீங்க தாத்தா கிட்ட சொன்னதைப் பத்தி தான் கேக்குறேன்." என்றாள் பொறுமையாக.


அவள் அவன் சொன்னதை நம்பாமல் இப்படிக் கேட்கிறாளோ என்று நினைத்தவன், "நான் தாத்தாகிட்டப் பொய் சொல்லி இருப்பேன்னு உனக்குத் தோணுதா? ஐ மீன் நான் உன்னை மேரேஜ் பண்ணிக்கச் சம்மதம்னு சொன்னது பொய்னு நினைக்கறியா?" என்று கேட்டான்‌.


அதைக்கேட்டு விரக்தியாகச் சிரித்தவள், "நீங்க சொன்னது பொய் இல்லைன்னு எனக்கு நல்லாத் தெரியும். நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்கன்னும் எனக்குத் தெரியும்… அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல, நான் கேட்க வந்தது இப்ப நடக்கப்போற இந்தக் கல்யாணத்துக்கு உங்க டேர்ம்ஸ் அண்டு கண்டிஷன் என்னங்குறதைத் தான்" என்றாள் விரக்தியாக.


அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று ஆதர்ஷனுக்குப் புரிந்துவிட, "நீதான் உன்னோட அருமை பாஸை அக்கு வேரு ஆணி வேராப் புரிஞ்சு வச்சிருக்கிறவளாச்சே… நீயே அந்தக் கண்டிஷன் என்னவா இருக்கும்னு சொல்லேன், பார்ப்போம். எந்தளவுக்கு உன்னோட புரிதல் இருக்குன்றதை" என்றவனை விருட்டெனத் திரும்பி அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த தன்வி‌ பின் குரலைச் செருமிக்கொண்டு, 


"உங்க கண்டிஷன் பத்தி இல்ல, நான் இந்தக் கல்யாணத்தைப் பொறுத்தவரை என்னோட முடிவை உங்களுக்குச் சொல்லிடுறேன்." என்றவள் மீண்டும் அவன் முகம் பார்க்காமல் திரும்பி எங்கோ வெறித்தபடியே பேச ஆரம்பித்தாள்.


"ஃபர்ஸ்ட் இந்தக் கல்யாணம் ஜஸ்ட் ஒரு மேரேஜ் ஆப் கன்வினியன்ஸ் தான்… அதுவும் தாத்தாவுக்காக, மத்தபடி உங்க கிட்ட நான் பொண்டாட்டிங்கற எந்த உரிமையையும் எடுத்துக்க மாட்டேன். நெக்ஸ்ட் எக்காரணம் கொண்டும் உங்க பர்சனல் விஷயத்தில் தலையிட மாட்டேன், ஆலன் அண்ணா விஷயம் உட்பட… தென், எக்காரணம் கொண்டும் உங்களை நான் லவ் பண்ண மாட்டேன்." என்றவளின் வார்த்தையில் அவன் இதழ்கள் குறும்பாக வளைய, அடுத்து அவள் சொன்ன வார்த்தையிலும் அதை அவள் சொன்ன தோரணையிலும் மொத்தமாக உடைந்து விட்டான் அவன்.


எக்காரணம் கொண்டும் உங்களை விரும்ப மாட்டேன் என்றவள் தொடர்ந்து, "நீங்க எப்பச் சொல்றீங்களோ அப்ப டிவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணிக் கொடுத்திட்டு எங்கேயாவது போய்டுவேன்" என்று விரக்தியாகச் சொல்ல, அதைக் கேட்டவன் நெஞ்சம் அடியோடு பதறியது.


"ஏய்…" என்று அவளை அதட்டியவன், "லூசு மாதிரி ஏதேதோ பேசிட்டு இருக்க, வாயை மூடுடி" என்று அதட்ட, இப்போது அவனைத் திரும்பி உயிரற்ற பார்வை பார்த்தவள்,


"நான் இப்ப சொன்ன இந்தக் கண்டிஷன்ஸ் எல்லாம் தானே உங்க மனசுல இருக்கு... இதுக்கு எல்லாம் நான் சம்மதிச்சா என்னைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சு தான் நீங்க இந்தியாவுக்குத் திரும்பி வந்திருப்பீங்க… பிகாஸ், உங்களுக்கு நல்லாத் தெரியும், நான் எடுத்த முடிவில் இருந்து என்னைக்கும் மாற மாட்டேன்னு, சோ நான் வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்‌. உங்களால் உங்க நிலையை தாத்தாகிட்டச் சொல்ல முடியாது. அதே சமயம் என்னைத் தாண்டி இன்னொரு பொண்ணை நீங்க கல்யாணம் செய்ய மாட்டீங்க. உங்ககிட்ட நான் சத்தியம் வாங்கி இருக்கேன். சோ அதை உங்களால் செய்ய முடியாது. இன்னும் கொஞ்ச நாள் போனா மறுபடியும் தாத்தா கல்யாணப் பேச்சை எடுப்பார். மறுபடி பிரச்சனை முதல்ல இருந்து ஆரம்பிக்கும், சோ இதுக்கெல்லாம் ஒரே தீர்வு. நீங்க என்னைக் கல்யாணம் பண்றது தான். அந்த முடிவில் தான் நீங்க இங்க திரும்பி வந்திருப்பீங்க‌. தாத்தா கிட்டயும் உங்க சம்மதத்தைச் சொன்னீங்க, ஆம் ஐ கரெக்ட்" என்றவனை அவன் விழி விரிய அதிர்ச்சியாகப் பார்த்துக்கொண்டு இருந்தான்.


இங்கு வரும்போது அவன் மனதில் இருந்த எண்ணத்தை அப்படியே ஒரு வார்த்தை கூட மாறாமல் அவள் சொல்லி விட்டாளே என்ற அதிர்வில் இருந்தவன் மனதில், 'நான் இங்க வரும்போது இருந்த மைண்ட் செட்டே வேறடி… ஆனா, இப்ப என்னோட மனசுல…' என்று கையால் நெஞ்சைத் தொட்டவன் பார்வை தன்வி மேல் பதிய, 'என் மனசும் எண்ணமும் எப்படி மாறுச்சின்னு எனக்குத் தெரியல. ஆனா, அது ரெண்டும் மாறக் காரணம் நீதான்டி… இது சரியா? தப்பா? நான் உனக்குத் துரோகம் பண்றேனான்னு கூட எனக்குத் தெரியல. ஆனா, உன்னை வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க என்னால முடியலடி. எனக்குத் தெரியும், பிரசன்னா நல்ல பையன். நல்ல குடும்பம், அவனை நீ கல்யாணம் பண்ணா உன்னை நல்லாப் பார்த்துப்பான்னு… அது என் புத்திக்கு நல்லாவே புரிஞ்சது. ஆனா, இந்த பாழாப்போன மனசுக்கு அது புரியவே இல்லடி.‌.. அவனுக்கு உன்னைக் கட்டிக் கொடுத்தால், அப்புறம் நீ என்னோட இருக்க முடியாதேன்னு மனசு பதற ஆரம்பிச்சிடுச்சுடி.‌.. உன் லைஃப்ல என்னோட இடத்துக்கு அவன் வந்திடுவானோன்ற எண்ணம் வந்து என்னை மொத்தமாக நிலைகுலைய வச்சிடுச்சுடி‌.‌.. உன்கிட்ட எனக்கு மட்டும் தான் எல்லா உரிமையும் இருக்கனும்னு தோணுது...‌ இது ஏன்? எதுக்காக? நான் ஏன் இப்படி எல்லாம் பண்றேன்னு சத்தியமா எனக்குப் புரியல. இந்த கொஞ்ச நாளா எனக்குள்ள என்ன நடக்குதுன்னு நிஜமா எனக்குப் புரியல… ஆனா, உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாதுன்னு மட்டும் எனக்கு நல்லாப் புரியுது… அதான் என்னையும் மீறி, நான் எடுத்த முடிவையும் தாண்டி காலையில் தாத்தாகிட்டக் கல்யாணத்துக்குச் சம்மதம்னு சொல்லிட்டேன்‌' என்று மனதில் புலம்பியவன், நிமிர்ந்து அவளைப் பார்த்து "தன்வி" என்று அழைத்தான்.


அவள் திரும்பி அவனைப் பார்த்தாள்.


"தாத்தாகிட்ட நம்ம ரெண்டு பேருக்கும் இந்தக் கல்யாணத்தில் சம்மதம்னு சொல்லிடுறேன். நீ சொன்ன கண்டிஷன் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதைப் பத்தி இப்பப் பேச வேணாம். கல்யாணம் முடிஞ்ச பிறகு அதைப் பார்த்துக்கலாம், உனக்கு ஓகே தான?" என்று கேட்டவனுக்கு, "ம்ம்ம்" என்று ஒரு சத்தத்தை மட்டும் பதிலாகக் கொடுத்தாள் தன்வி.


"அப்ப சரி, கிளம்பு வீட்டுக்குப் போகலாம்" என்று அவன் எழுந்து கொள்ள, புடவை கட்டி இருந்ததால் அவளுக்கு எழுந்து கொள்ளக் கஷ்டமாக இருக்க, அதைப் பார்த்த ஆதர்ஷ், அவள் முன் தன் கையை நீட்டினான்.


அவன் கையையும் அவனையும் மாறிமாறிப் பார்த்தவள், "பரவாயில்ல சார், ஐ வில் மேனேஜ்" என்றபடியே அவள் எழப் பார்க்க, புடவை அவள் கால் கொலுசில் சிக்கி இருந்ததால் அவளால் எழுந்து கொள்ள முடியவில்லை. 


ஒரு நிமிடம் அவளைப் பார்த்து இழுத்து பெருமூச்சு விட்டவன், குனிந்து அவள் வெற்றிடையில் கை கொடுத்து அணைத்தபடியே அவளை எழுப்பி நிற்க வைத்து விட்டு, குனிந்து அவள் கால் கொலுசில் சிக்கி இருந்த புடவையை எடுத்து விட்டான்.


அவன் செயலில் ஒரு நிமிடம் விதிர்த்து நின்றவள், சட்டென அவனை விட்டு விலகி நின்று கொண்டாள். 


திடீரென்று அவன் இப்படி இடையைத் தொட்டுத் தூக்குவான் என்று எதிர் பார்க்காதவள் சற்று அதிர்ந்து தான் போனாள். சிறுவயதில் இருந்து அவனுடன் நெருங்கிப் பழகியவள் தான். அன்பாக, அக்கறையாக, ஆதரவாக பலமுறை ஆதர்ஷ் அவளை அணைத்திருக்கிறான். அவனின் தொடுதல் அவளுக்கு ஒன்றும் புதிது இல்லை தான். ஆனால், ஏனென்று தெரியவில்லை. இன்று அவனின் ஸ்பரிசம் அவளைத் தன்னிலை இழக்கச் செய்திருந்தது‌. அவன் கைபட்ட இடத்தில் ஒருவிதக் குறுகுறுப்பு தோன்றியது. ஏனோ இதயம் அதிவேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது அவளுக்கு. மெதுவாக அவள் தன் நெஞ்சை நீவி விட்டுக் கொள்ள, அவளின் அந்தத் தடுமாற்றத்தைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்தவன், 'லவ் பண்ண மாட்டேன்னு சொல்ற மூஞ்சியப் பாரு மூஞ்சிய, சும்மா லேசா இடுப்பைத் தொட்டதுக்கே இப்படி பிளாங்க் ஆகிட்டா.‌‌.. இதுல மேரேஜ் அப்புறம் என்னை லவ் பண்ண மாட்டாளாம், லூசு… அதையும் தான் பார்த்துடுவோம்…' என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே, "போலாமா?" என்று கேட்க, அப்போதுதான் தன்னிலை அடைந்தவள், "ஆஹான்… போலாம்" என்று வேகமாக வெளியே நடக்கத் தொடங்கினாள்.