காதல் 23

 




காதல் 23


அவர்கள் வாழ்வின் அனைத்து பிரச்சனையும் முடிந்து இவ்வருவரின் பிரிவிற்கும் அழகிய முற்றுப்புள்ளியை வைத்து, இனி வரும் வருங்காலத்திற்கு பிள்ளையார் சுழியை போட்டது காலம்.


இருபது நாட்களில் ஷரவன் உடல் முழுதாக தேறி இருந்தது. மிருதுளா தானே ஷரவனுடன் இருந்து அவரை பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதியாகச் சொல்லிவிட, யாரும் அதை மறுக்கவில்லை. ஷரவனை  குழந்தை போல் கவனித்துக் கொண்டாள் அவன் உயிரானவள்.


மிருதுளா ஷரவனுக்கு காலை உணவை ஊட்டி கொண்டிருந்தவள் முகம் ஏனோ  வெகுவாக வாடி இருந்தது. ஷரவனும் நேற்றில் இருந்து அவளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். நேற்று டாக்டர், ஷரவனை நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகி விடலாம் என்று சொன்னதில் இருந்து தான் அவள் முகம் இப்படி வாடி இருக்கிறது என்றும், அதற்கு என்ன காரணம் என்றும் புரிந்தவன், தன் தந்தையை அழைத்து சில விஷயங்களை சொல்லிவிட்டு அமைதியாக இருந்து விட்டான். 


காலைப்பொழுதே அனைவரும் ஹாஸ்பிடல் வந்துவிட ஷரவனும் வீட்டிற்கு செல்ல தயாராக இருந்தான்.


முக்தா ஷரவன் மடியில் உட்கார்ந்திருந்தவள், "ப்பா.. "ப்பா என்று ஷரவன் மீசையை பிடித்து இழுக்க,


 "என்னடா முக்தா குட்டி? என்ன வேணும்?" 


"அப்பா இனி முக்தா பாப்பா கூட அப்பா, அம்மா ரெண்டு பேரும் இருப்பாங்க இல்லப்பா" என்று ஆர்வமாக கேட்க.ஷரவன் நிமிர்த்து மிருதுளாவை பார்க்க அவள் கண்களில் கண்ணீரோடு ஷரவனை பார்த்து தலையை குனிந்து கொண்டாள். 


"இல்ல குட்டிம்மா, இப்ப அம்மா நம்ம வீட்டுக்கு நம்ம கூட  வரப்போறதில்ல" என்று சொல்ல மிருதுளாவோடு சேர்த்து அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தான் ஷரவன்.


முக்தா வாடிய முகத்தோடு, "ஏம்ப்பா? ஏன் அம்மா நம்ம கூட வரமாட்டாங்க" என்று அழுதுகொண்டே கேட்க குழந்தையின் கண்களை துடைத்த ஷரவன்,


 "ஏன்னா உன்னோட அம்மா நம்ம கூட நம்ம வீட்டுல இருக்கணுன்னா? அவ உனக்கு அம்மாவா  இருந்தா மட்டும் போதாது. உன்னோட அப்பாவை கல்யாணம் செஞ்சிட்டு எனக்கு பொண்டாட்டியாவும் இருக்கணும். சோ அம்மா இப்ப நம்ம வீட்டுக்கு வரமாட்டார்களாம், செல்வா தாத்தா வீட்டுக்கு போவாங்களாம், இன்னும் ரெண்டு நாள்ல அப்பாக்கும், அம்மாக்கும் கோயிலில் கல்யாணம் நடக்கும். 


அதுக்கு அப்புறம் அப்பாவும், முக்தா குட்டியும் எப்பவும் அம்மா கூடவே இருப்போமாம்" என்று மகளோடு, மன வாடி இருந்த தன்னவளுக்கும் சேர்த்து பதில் தந்தான் ஷரவன். 


தன் மனதில் இருந்ததை தன் சொல்லாமலே புரிந்துகொண்ட தன்னவனை நினைத்து கண்கலங்கிய மிருதுளா ஷரவனை காதலோடு பார்க்க, அவன் வசீகர புன்னகை அவள் விழியை வருடிச் சென்றது.


அந்த கோவிலில் நெருங்கிய சொந்தங்களும், உயிர் நண்பர்கள் மட்டும் சூழ்ந்திருக்க, மிருதுளா தன் வீட்டை சேர்ந்த யாரையும் கூப்பிட கூடாது என்று உறுதியாக சொல்லிவிட்டாள். இனி அவள் வாழ்க்கையில் அவர்களுக்கு எந்த இடமும் இல்லை என்பதில் அவள் பிடிவாதமாக இருக்க, யாரும் எதுவும் சொல்லவில்லை. செல்வகுமார், தங்கமணியும் மிருதுளாவின் தாய், தந்தை இடத்தில் இருந்து அனைத்து சடங்குகளும் செய்தனர். 


அழகுச் சிலையாய் தன்னருகில் அமர்ந்திருந்த தன்னவளின் சங்கு கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டி அவள் உயிரில் பாதியாக இணைந்தவன் தன் முழு உயிரையும் அவளுக்குள் கரைத்து விட்டான். 


இரவின் மடியில் நிலவு துயில் கொள்ளும் வேலையில் மரங்கள் சூழ்ந்த ஷரவனின் ஃபார்ம் ஹவுஸில் கணவன் மார்பில் தலைசாய்த்து, அவன் சட்டை பட்டனை திருகிக் கொண்டிருந்தாள் மிருதுளா. 


"ஷரவன்"  என்று மெல்லிய குரலில் அவள் அழைக்க,


"ம்ம்ம் " என்று அவன் பதில் சொன்னான்.


"ஷரவன்" 


"ம்ம்ம்" 


"ஷரவன்"  


"ப்ச்சு"


"ஏய் என்னடி? என்ன  வேணும் உனக்கு எதுக்கு இப்ப என்னை ஏலம் போட்டு இருக்க? ஐஸ்கிரீம், சாக்லேட் எதுவும் வேணுமா?" என்றவனை முறைத்து பார்த்த மிருதுளா அவனை விட்டு தள்ளி சென்றாள்.


 "எனக்கு உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்" என்று முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சொல்ல, அவள் கையை பிடித்து இழுத்து மீண்டும் தன் மார்பில் போட்டுக்கொண்டு, இடையோடு சேர்த்தனைத்தவன்,


 "எது கேக்கணுமன்னாலும் இப்படி இருந்துட்டே கேளுடி" என்றவனை சிரித்துக்கொண்டே அவளும்  அணைத்துக் கொண்டாள்.


 "நீங்க ஏன் என்னை இந்தளவு காதலிக்குறிங்க? அதுவும் அப்ப நான் உங்களை விரும்பலன்னு தெரிஞ்சும், ஏன் என்ன அவ்ளோ லவ் பண்ணீங்க? காதலிக்கிற பொண்ணுகிட்ட இருந்து திரும்ப காதலை கூட எதிர்பார்க்காத காதல். என்ன மாதிரி காதல் இது" என்று கண்கள் நனைய கேட்டவளை இன்னும் தன்னோடு இருக்கி அனைத்தான் ஷரவன்.


 "நீ கேட்டதுக்கு நான் அப்புறம் பதில் சொல்றேன். இப்ப நான் கேக்குற கேள்விக்கு முதல்ல நீ பதில் சொல்லு, "அப்ப உங்களை விரும்பலன்னு சொன்னீயே, அப்ப இப்ப நீ என்ன லவ் பண்றியா" என்று புருவத்தை தூக்கி குறும்பாக கேட்க, மிருதுளா முகம் வெட்கத்தில் சிவக்க பதில் சொல்ல முடியாது தலையை குனிந்து கொண்டு ஆமாம் என்று தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டினாள்.


அவள் செய்கையில் ஷக்ஷ வந்த சிரிப்பை அடக்கிக்கொண்ட ஷரவன், "தலையாட்டுனா என்னடி அர்த்தம் வாய தொறந்து சொல்லு" என்று மேலும் அவளை வம்பிழுக்க. மிருதுளா பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு "ஆமாம்" என்று சொன்னாள்.


 "என்ன ஆமாம்?" என்று அவனும் விடாமல் கேட்க,


 "நீங்க கேட்டதுக்கு தான் ஆமா சொன்னேன்"


 "நான் என்ன கேட்டேன்" என்றவனை இப்போ மூக்கு முட்ட முறைத்து, ஷரவன்  என்று பல்லைக் கடிக்க, ஷரவன் சத்தமாக சிரித்தான்.


 "ஏய் லூசு பொண்டாட்டி நீ இப்ப இல்ல டி. எப்பவோ என்ன காதலிக்க ஆரம்பிச்சிட்ட. ஆனா, உன்னோட சின்ன மூளைக்கு தான் அது எட்டல" என்றவனை மிருதுளா புரியாத பார்க்க, அவளை தன் மடியில் உட்கார வைத்த ஷரவன், 


"அடியேய் நம்ம காலேஜில் படிக்கும் போது உன் கால்ல அடிபட்டுசே அது உனக்கு நியாபகம் இருக்கா" என்றதும் அவள் ஆம் என்று தலையாட்டினாள். 


"அன்னைக்கு நான் உனக்கு கால் வலிக்குதான்னு கேட்டாப்ப நீ வலிக்கலைன்னு சொன்ன இல்ல, உண்மையா சொல்லு அன்னைக்கு உனக்கு கால் நெஜமா வலிக்கலயா?" என்று கேட்க, 


"இல்லங்க, அன்னைக்கு கால் ரொம்ப வலிச்சுது தான். ஆனா, என் காயத்தை பார்த்து நீங்க ரொம்ப பீல் பண்ணிங்க, எனக்கு வாடியிருந்த உங்க முகத்தை பார்க்கவே கஷ்டமா இருந்துச்சு, அதான் அப்படி பொய் சொன்னேன்" என்று சொன்னவள் கன்னத்தை தன் கையில் ஏந்தியவன்,


 "நான் முகம் வாடின உனக்கு ஏன்டி கஷ்டமா இருந்துச்சு" என்றவனை நிமிர்ந்து பார்த்தவள், "தெரியல" என்று மெல்லிய குரலில் சொல்ல, அவள் கன்னத்தை பிடித்து கிள்ளியபடி, "அதுக்கு பேர் தான்டி காதல்... சரி அதை விடு, நம்ம காலேஜ் கல்சுரல்ஸில் எனக்கு பதில் வேற யார் கூடவாவது உன்ன ஆட சொல்லியிருந்த நீ ஆடி இருப்பியா?" என்று கேட்க, அவள் வேகமாக இல்லை என்று தலையாட்டினாள்.


அதை பார்த்து ஷரவன் கர்வமாக சிரித்தவன். "ஏன்டி அப்படி?"


" தெரியல... ஆனா, வேற ஒருத்தர் கூட?? என்னால… ம்க்கும் என்னால முடியாது" என்றவளை அவன் காதலாய் பார்க்க, மிருதுளாவுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.


"எல்லாத்துக்கும் மேல நீ என்ன லவ் பண்றேன்றதுக்கு முக்கியமான சாட்சி உன் கையில் இருக்க நம்ம நிச்சயதார்த்த மோதிரம்" என்று அவள் கையில் தான் போட்ட மோதிரத்தை தடவியவன், "உனக்கு நெஜமாவே என்ன புடிக்காம இருந்திருந்தா, எப்பவோ நீ இத கழட்டி தூக்கி ஏறிஞ்சிருப்ப மித்து" என்று சொல்ல, மிருதுளாவுக்கும் அப்போது தான் அது உறைத்து.


 'அவனை பிரிந்த இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட அந்த மோதிரத்தை அவள் விரலை விட்டு கழட்டியது இல்லை. ஏன் அதுபற்றி அவள் நினைத்து கூட இல்லை' என்று நினைத்தவள், உடனே ஷரவன் கையை பார்க்க அவள் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து போனது. 


அவள் வாடிய முகத்தை கையில் ஏந்திய அவள் கணவன், "என் செல்ல மித்துக்குட்டி. அந்த மோதிரம் நாலு வருஷத்துக்கு முந்தி போட்டதுடி. விரலுக்கு சின்னதா போச்சு, அதான்" என்னும் போதே,


"அதனால கழட்டி வச்சுட்டீங்களா" என்று மிருதுளா கவலையாக கேட்க, அவள் கையை பிடித்து தான் நெஞ்சில் வைத்தவன், "அதெப்படி டி அதை நான் என்ன விட்டு பிரிச்சு வைப்பேன். உன்னோட ஒவ்வொரு பொருளும் எனக்கு பொக்கிஷம் டி. நீ போட்ட மோதிரம் எனக்கு உயிர்.  அதான் அதை என்னோட இதயத்துக்கு பக்கத்தில் வச்சிருக்கேன்" என்று தான் கழுத்தில் இருந்த செயினை வெளியே எடுக்க அதில் மிருதுளா ஷரவனுக்கு போட்ட மோதிரம் அழகாக தொங்கியது.


கண்ணீர் வழிய அந்த மோதிரத்தை தடவியபடி தன் கணவனை பார்த்தவள், "ஏன் மாமா? ஏன் என்னை இவ்ளோ லவ் பண்றீங்க? நான் உங்கள எவ்ளோ கஷ்டப்படுத்தி இருக்கேன். எப்பவும் உங்கள காயப்படுத்தி மட்டும் தான் இருந்திருக்கேன். கடைசிக்கு உங்களையும், ரஷ்மியையும்... ச்சே என்ன நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு மாமா… ஏன் மாமா நான் இவ்ளோ தப்பு பண்ணி இருக்கேன். உங்களுக்கு என் மேல கோபமே வரலயா?" என்று கண்ணீரோடு கணவனை பார்க்க, அவள் கண்ணீரை துடைத்தான் ஷரவன்.


 "எனக்கு எப்பவுமே உன் மேல கோவம் வராது மித்தும்மா. எனக்கு நீயும், முக்தாவும் வேற வேற இல்ல, சொல்லப்போன நீ தான் என் முதல் குழந்தை. குழந்தை கிட்ட போய் கோபப்பட முடியுமா..." என்றவனை காதல் பொங்க பார்த்தவள், அதன் பின் ஒரு நொடியும் வீணாக்காமல் அவன் இதழை சிறை பிடித்தாள்.


 "ஐ லவ் யூ மாமா… ஐ லவ் யூ சோ மச்" என்று அவள் மனதின் மொத்த காதலையும் அந்த மூன்று வார்த்தையில் கொட்டிவிட. முதன் முதலில் அவள் வாய்மொழியாக அவள் காதலை சொல்ல கேட்டவன் மனது சொல்லமுடியாத இன்பத்தில் மூழ்க, அந்த சந்தோஷத்தில் தன் அருமை மனைவியை முழுதாக ஆட்கொண்டான். 


உண்மை காதல் கொண்டு தன்னை வென்ற தன் காதல் கணவனுக்கு தன் பெண்மையையே பரிசாக தந்தாள் பெண்ணவள். இருவரும் இணைந்து மோகம் கலந்த காதல் கடலில் மூழ்க தொடங்கினர்.