நிஜம் 15
பகுதி 15
விக்ரம், லயாவின் பழக்கம் காதலாக மலரும் தருணத்தை நெருங்கிக் கொண்டிருக்க, காலமும் அதற்குத் துணை போவதுபோல் த்வனி கொஞ்ச நாள் லயாவை விட்டு விலக இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தது.
"த்வனி எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியா?" என்று கேட்டபடியே வந்த லயாவின் தாய் பிரியா கையில் இருந்த பெரிய டிபன் பாக்ஸை பார்த்த த்வனி,
"ம்மா என்னம்மா இது? நா என்ன வேற நாட்டுக்கப் போறேன், இங்க இருக்கச் சென்னைக்குத் தானா போறேன். அதுக்கு எதுக்கு இவ்ளோ பேக் பண்ணி இருக்கீங்க?"
"என்னடி இங்க இருக்க சென்னை... மொத்தம் பத்துமணி நேரம் டிராவல் பண்ணும். வழியில உனக்குப் பசிக்குமில்ல. நீ நடுவுல எங்கயும் இறங்கி வெளிய ஹோட்டல்ல சாப்ட வேணாம்னு தான் கொஞ்சமா பேக் பண்ணி இருக்கேன். ஒழுங்கா எல்லாத்தையும் சாப்டு, வழியில எங்கயும் இறங்க கூடாது புரியுத" என்ற பிரியா டிபன் பாக்ஸை த்வனி பேக்கில் வைக்க, சங்கர் அவர் பங்கிற்குப் பிஸ்கட், குகீஸ், சாக்லேட் என்று வாங்கி வந்திருந்தார்.
த்வனி சென்னைக்குக் கிளம்பி தயாராக நிற்க, லயா அவளைக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள்.
"ஏய் லயா குட்டி, என்ன இது? நீ இப்டி அழுதுட்டு இருந்த நா எப்டி நிம்மதியா ஊருக்குப் போறது. ப்ளீஸ்டா அழத"
"எனக்கு அழுக வருது நா அழுகுறேன். உனக்கென்ன நீதான் என்ன விட்டு போறீயே…" என்று கண்ணைக் கசக்கிய லயாவை பரிவோடு பார்த்தாள் த்வனி.
"என்னடி இது… நா என்ன ஊர் சுத்தவா போறேன். ஜெகனுக்கு உடம்பு சரியில்ல, அங்க அவனைப் பாத்துக்க யாருமில்லமா, அதான் நா போறேன். என்ன தான் எங்க ரெண்டு பேருக்குள்ளயும் அண்ணா, தங்கச்சின்ற பாசம் இல்லாட்டியும், கூடப்பிறந்த உறவும், கடமையும் இருக்கே… என்ன பண்றது. ஒருவேளை நா இப்ப போகாட்டி, மேல இருந்து எங்களைப் பாக்குற அம்மா, அப்பா ஆத்மா ரொம்பக் கஷ்டப்படும், அதுக்காச்சும் நா ஜெகன் கூட இப்ப இருந்தே ஆகணும். நா போய்ட்டு அவனுக்கு ஹெல்த் சரியானது உடனே என் லயா குட்டிய பாக்க ஓடி வந்துடுவேன்" என்று ஊருக்கு கிளம்பியவளுக்கு அப்போது தெரிந்திருக்காது, தான் திரும்பி வரும்போது பல விஷயங்கள் மாறி, அவள் கையைவிட்டுப் போயிருக்கும் என்று.
ஜெகன் உடம்பு குணமாகி அவன் இயல்புக்கு வர ஒரு மாதங்களுக்கு மேலாகிவிட்டது.
முழுதாக ஒன்றரை மாதம் கழித்து த்வனி திரும்பி கல்லூரி வர ஆரம்பித்து ஒரு வாரம் ஆகியிருந்தது.
அன்று மாலை ஒரு வகுப்பு இல்லாததால் த்வனி சீக்கிரமே கல்லூரியை விட்டு வீட்டுக்கு கிளம்பி கொண்டிருக்க, லயா த்வனி பைக் அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து அவளுக்காகக் காத்திருந்தாள்.
த்வனி பைக் பார்க்கிங் நோக்கி வருவதைப் பார்த்த லயா எழுந்து நிற்க, த்வனி லயாவை பார்த்தும் பார்க்கதாது போல் வண்டியை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து நகர்ந்தாள்.
"ஏய் இங்க ஒருத்தி மேக்கப் கலைய மதியத்துல இருந்து வெயில்ல வதங்கி நிக்குறேன், வந்தவ என்ன ஏதுன்னு கேக்காம, நீ பாட்டுதுக்குப் போற…? என்னடி?" என்று லயா கண்ணைக் கசக்க, த்வனி அவளைப் புருவம் உயர்த்திப் பார்த்தாள்.
"என்ன சன்ஸ்கிரீன், இல்ல குடை எதும் வேணுமா?" என்றவள் சற்று பொறுத்து, "ஆமா நா ஏன் உங்களுக்கு வாங்கித் தரணும் மேடம். அதான் உங்களுக்கு உன் தேவ் இருக்கானே, அவன் கிட்ட சொன்ன போதுமே… என்கிட்ட எதுக்குக் கேக்கப்போறிங்க, இனிமே நா யாரோ தானா உங்களுக்கு" என்றவள் பைக்கை ஸ்டார்ட் செய்து கொஞ்ச தூரம் போய் திரும்பி பார்க்க, லயா அந்தப் பெஞ்சில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருப்பதைப் பார்த்தவள், பைக்கை திரும்பிக்கொண்டு வந்து நிறுத்தி விட்டு, லயா அருகில் அமர்ந்தாள்.
"இப்ப எதுக்கு நீ அழுதுட்டு இருக்க?" என்று த்வனி கோவமாக கத்த,
லயா இன்னும் சத்தம்போட்டு அழுக ஆரம்பிக்க, த்வனிக்கு ஐயோ என்றாகி விட்டது. அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டவள், "ப்ளீஸ்டா அழத, நீ அழுத உனக்கு வீசிங் வரும், மூச்சு தெனறுமில்ல, என் செல்லமில்ல… அழதடா அழத" என்றவள் லயா கண்களைத் துடைத்து விட்டாள்.
"நீ ஏன்டி என்கூடப் பேசல? ரெண்டு நாள் ஆச்சு தெரியுமா நீ என்கிட்ட பேசி… வீட்டுக்கு கூட வர்ல, ஃபோன் கூடப் பண்ணல இல்ல" என்று விசும்பியவளை பார்த்து த்வனிக்கு மனது பிசைந்தாலும், எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.
"எனக்குப் புரியுது த்வனி. நா தேவ் கூடப் பழகுறது உனக்குப் புடிக்கல இல்ல? நீ அவரை நெனைக்கவே கூடாதுன்னு சொல்லி இருந்த... ஆன, நான்… நான்... என்னால முடியல" என்று த்வனி மடியில் முகம் புதைத்து அழுக, த்வனி மெதுவாக அவள் தலையைக் கோதிக் கொண்டிருந்தாள்.
"இதுவரை நீ சொல்லி நா எதையும் கேக்காம இருந்ததில்ல த்வனி. ஆன, தேவ் விஷயத்தில் என் மனசு என்னோட கண்ட்ரோல்ல இல்ல. அது ஏன்னும் தெரியல. ஆன, எனக்குத் தேவ் வேணும். அதுக்காக நீ வேணாம்னு அர்த்தம் இல்ல. எனக்கு நீங்க ரெண்டு பேரும் வேணும்" என்று சின்னப் பிள்ளை போல் தேம்பி அழுதவளை பார்க்கவே த்வனிக்கு மனது வலித்தது.
லயாவின் கண்ணீரே சொன்னது அவள் அவளின் தேவ்வை எந்த அளவுக்கு விரும்புகிறாள் என்பதை. லயாவை நன்கு புரிந்த த்வனிக்கு அவளின் காதல் புரியாமல் இருக்குமா என்ன? ஆனால், அதை ஏற்றுக்கொள்ளத் தான் அவளால் இயலவில்லை. முதல் சந்திப்பிலேயே அவளுக்கு விக்ரமை பிடிக்காமல் போனது ஒரு காரணமாக இருந்தாலும், அதைவிட இன்னொரு பெரிய காரணம் கதிர்.
லயாவின் அப்பா சங்கருக்கு லயாவை அமெரிக்காவில் இருக்கும் அவர் அக்கா மகன் கதிருக்குத் திருமணம் செய்து கொடுக்க ஆசை. அது த்வனிக்கும் தெரியும், லயாவுக்கும் தெரியும் அப்படி இருந்தும் லயா இப்படிச் செய்திருப்பது த்வனிக்கு சற்று வருத்தம். கதிருக்கு சின்ன வயதில் இருந்து லயா என்றால் விருப்பம். அது காதல் இல்லை. ஆனால், அவனுக்கு லயா என்றால் உயிர்.
கதிர் அமெரிக்காவில் டாக்டர் படிப்பை முடித்து விட்டு அங்கேயே வேலை பார்க்கிறான். நல்லவன், தன்னைப்போல் லயாவை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்வான் என்று த்வனிக்கும் தெரியும். அதோட இது சங்கர், பிரியாவின் கனவு என்பதை உணர்ந்தவள், இதை லயாவுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று புரியாமல் தவித்தாள்.
"நீ லவ் பண்றது தப்புன்னு நா சொல்லல லயா. ஆனா, கதிர்" என்று த்வனி ஆரம்பிக்கும் போதே, அவள் வாயை மூடினாள் லயா.
"ப்ளீஸ்டா... ப்ளீஸ் கதிர் மாமா பத்தி எதும் பேசாத… நா ஏற்கனவே நீ சொல்லி கேக்காம, தேவ்வை லவ் பண்ணிட்டேன்னு கில்ட்ல இருக்கேன். இப்ப நீ மாமா பத்தி பேசி இன்னும் என்ன அழவைக்காதடி" என்று அழுதவள், மீண்டும் த்வனி மடியில் முகம் புதைத்து, "நா ரொம்பப் பேட் கேர்ள் த்வனி, உன்ன ஏமாத்திட்டேன், அப்பா, அம்மா, கதிர் மாமா எல்லாரையும் ஏமாத்திட்டேன். நா ரொம்ப கெட்ட பொண்ணு" என்றவளின் பார்த்த த்வனிக்கும் கண்கள் கலங்கி விட்டது.
"இங்க பாரு லயா, நீ யாருக்கும் எந்தத் தப்பும் பண்ணல, நீ ஒன்னு கெட்ட பொண்ணு இல்ல, எல்லாம் சரியாகிடும். ஓகே… நீ அழத, எல்லாத்தையும் நா பாத்துக்கிறேன். உனக்கு உன் த்வனி மேல நம்பிக்கை இருக்கு தானா?" என்று கேட்ட, லயா வேக வேகமாக 'ஆமாம்' என்று தலையாட்டினாள்.
"ம்ம்ம் அப்றம் என்ன. யு டோண்ட் வாரி." என்று அவள் கண்ணைத் துடைத்தவள், "சரி வா வீட்டுக்குப் போலாம்" என்றவள் வண்டியை எடுக்க, லயா த்வனி பின்னால் உட்கார்ந்தவள், கைகளால் த்வனி வயிற்றை இறுக்கி கட்டிக்கொண்டு, அவள் முதுகில் முகம் சாய்த்துக் கொள்ள, த்வனி சின்னதாகச் சிரித்தவள். மெதுவாக வண்டியை ஓட்டிச் சென்றாள்.
பிரியா எவ்வளவு சொல்லியும் கேட்காமல், இரவு ஒன்பதுக்கு வீட்டில் முக்கிய வேலை இருக்கிறது என்று சொல்லி லயா வீட்டில் தங்காமல் தன் வீட்டுக்கு வந்துவிட்டாள் த்வனி.
லயாவை பற்றி யோசிக்க அவளுக்குத் தனிமை தேவைப்பட்டது, அதோட த்வனி முகத்தை வைத்தே அவள் மனதில் இருப்பதைக் கண்டுபிடிக்கும் பிரியாவிடமிருந்து தப்பிக்க த்வனி அன்று அங்குத் தங்கவில்லை. அங்கிருந்தால் எங்கு லயாவை பற்றி உலறி விடுவாளோ என்ற பயம் அவளுக்கு.
வெகு நேரம் லயாவை பற்றி யோசித்தவளுக்கு விக்ரமிடம் இருந்து லயாவை எப்படி மீட்பது என்று ஒன்றும் புரியவில்லை. பலவிதமான யோசித்தவள், கடைசியாகக் கதிர் ஃபோனுக்கு அழைத்துவிட்டாள்.
த்வனி பாதி நாள் லயா வீட்டில் தான் இருப்பாள் என்பதால் சின்ன வயதில் இருந்து கதிருக்கு த்வனியை நன்றாகத் தெரியும். லயாவை தன்னிடத்தில் இருந்து த்வனி நன்றாகப் பார்த்துக் கொள்வாள் என்ற தைரியத்தில் தான் கதிரி அமெரிக்கா சென்று படிக்கவே சம்மதித்தான். வாய்மொழியாக அவள் கதிரை அண்ணா என்று அழைக்காமல் இருந்தாலும், கதிரை அவள் தன் உடன்பிறந்த அண்ணனுக்கு ஒரு படி மேல் வைத்து தான் பார்த்தாள். கதிரும் த்வனியை தன் சொந்த தங்கையாகத் தான் நேசித்தான்.
"ஏய் த்வனி…! வாட் ஏ சர்ப்ரைஸ்! எவ்ளோ நாள் ஆச்சு நீ கால் பண்ணி? எப்டி இருக்க? லயா குட்டி எப்டி இருக்க? மாமா, அத்தை எல்லாம் எப்டி இருக்காங்க? என்று கேள்வி மேல் கேட்டுக்கொண்டே போக,
"நீ கேள்வி கேக்குறத கொஞ்சம் ஸ்டாப் பண்ண, நடுவுல நானும் கொஞ்சம் பேசுவேன்" என்று சொல்ல, அந்தப் பக்கம் சத்தமாகச் சிரித்தான் கதிர்.
"சரி சொல்லு… உன்னால கூட சரி பண்ண முடியாம எனக்குக் கால் பண்ற அளவு, அப்டி என்ன புதுப் பிராப்ளம் செஞ்சு வச்சிருக்க லயா" என்றவன் வேள்வியில் சற்று திகைத்த த்வனி,
"எப்டி கதிர்? எப்டி கரெக்ட்டா கண்டுபுடிச்ச?"
"ஏய்… இது கூடத் தெரியாட்டி நம்ம இத்தனை வருஷ பழக்கத்துக்கு அர்த்தமே இல்ல… சொல்லு என்ன பிராப்ளம்" என்றவனிடம் த்வனி அனைத்தையும் சொல்லி முடிக்க, அனைத்தையும் அமைதியாகக் கேட்ட கதிர்,
"இது அத்த, மாமாக்கு தெரியுமா த்வனி" என்று கேட்டான்.
"இல்ல கதிர் இன்னும் தெரியாது, எனக்கே நாலு நாள் முன்ன தான் விஷயம் தெரிஞ்சிது. ஜெகன் ஹெல்த் ஷ்யூவால நான் கொஞ்ச நாள் இங்க இல்ல, அதுக்குள்ள இப்டி" என்றவள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தவித்திருந்தாள்.
"புரியுது த்வனி. லயா பாத்தி நம்ம ரெண்டு பேருக்குமே நல்லா தெரியும். அவ தைரியமான பொண்ணு. அவ இப்டி ஒரு முடிவெடுத்து இருக்கான்னா, நம்மளும் கொஞ்சம் யோசிக்கணும் இல்ல." என்றவன், "சரி அந்தப் பையன் விக்ரம் எப்டி?" என்று கதிர் கேட்க,
த்வனி அவள் விக்ரமை பார்த்தது முதல் அனைத்தையும் சொன்னவள், "நீ சொன்னது சரிதான் கதிர். லயா ரொம்பப் பிரேவ் கேர்ள் தான். பட், அட் தி சேம் டைம், அவ ரொம்பச் சென்சிட்டிவ் அண்ட் செண்டிமெண்டல், அது தான் எனக்குப் பயமா இருக்கு, அந்த ராஸ்கல் விக்ரம் என்ன சொல்லி இவள கன்வின்ஸ் பண்ணன்னு தெரியல" என்று பல்லை கடித்தாள்.
"நீ சொல்றது புரியுது த்வனி, ஆனா, இதுல நம்ம அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. இதை பாத்துப் பத்திரமா தான் ஹாண்டில் பண்ணணும். அதுவரை இந்த விஷயம் அத்த, மாமாக்கு தெரிய வேணாம். அப்றம் பிரச்சனை வேற மாதிரி போய்டும். உனக்குப் புரியும்னு நெனைக்கிறேன்"
"புரியுது கதிர். நா சொல்லல, ஏற்கனவே லயா ரொம்ப கில்ட்டிய ஃபீல் பண்ணிட்டு இருக்கா… இப்ப அப்பா, அம்மாக்கு இந்த விஷயம் தெரிஞ்ச ரொம்பக் கஷ்டமாகிடும்."
"அது தான் த்வனி கரெக்ட், இந்த விஷயத்தைக் கொஞ்சம் விட்டு தான் புடிக்கணும். சோ ஹேண்டில் வித் கேர். எதுவ இருந்தாலும் எனக்கு ஃபோன் பண்ணு. நா எப்பவும் லயாவுக்காக இருப்பேன், என் த்வனி கூடவே நிப்பேன். புரியுதா" என்று கதிர் சொல்ல, த்வனிக்கு அந்த வார்த்தைகளே போதுமானதாக இருந்தது.
