கன்னத்தில் காதல் முத்தம் 20
காதல் 20
ஆராவை வீட்டுக்குள் தூக்கி வந்த அக்னி அவளை தன் படுக்கையில் படுக்க வைக்க, இவள் அவனின் சட்டைக் கலரை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததால், அக்னியும் தடுமாறி அவள் மீது விழுந்தான்.
"ஏய் என்னமா பண்ற நீ? என் ஷர்ட்டை விடும்மா…" என்று அவன் சொல்ல, அவள் போதை மயக்கத்தில், "விடமாட்டேன் டா உங்களை விடமாட்டேன்… உங்க மூஞ்சு எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு… உங்களை விடமாட்டேன். டேய் மண்டைல கலர் அடிச்ச கலர் பன்னி, உன்னையும் விடமாட்டேன். என் ஆதிமாமாகிட்டையும் ஷிவிகிட்டையும் சொல்லி உங்களை என்ன பண்றேன்… பாருங்கடா…" என்று போதையில் உளறியவளை பார்த்த அக்னிக்கு சிரிப்பு தான் வந்தது.
"சரியான சண்டக்காரி போல இவ…" என்று முணுமுணுத்தவன் அவள் பிடியில் இருந்து சட்டையை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து நகரப் பார்க்க, மீண்டும் போதையில் உளறிக் கொண்டே, "டேய் உங்களை விடமாட்டேன்…" என்று கத்தியபடி எழுந்து நடந்தவள் அருகில் இருந்த கதவை திறக்கும் போது கால் தடுமாறி அங்கிருந்த சின்ன அளவிலான குளியல் தொட்டியில் விழுந்துவிட, "ஏய் பாத்துமா" என்று கத்தியபடி அக்னி ஓடி வருவதற்குள் அவள் முழுவதும் நனைந்திருந்தாள்.
தொட்டியில் இருந்து அவளை வெளியே தூக்கிய அக்னி, "கடவுளே இன்னைக்கு யாரு மூஞ்சில முழிச்சேன்னு தெரியல… இவ என்னை வச்சு செய்யுறா" என்று புலம்பியபடியே அவளை தூக்கி வந்து அங்கிருந்த நாற்காலியில் அமரவைத்து விட்டு, தன் வீட்டில் வேவை செய்யும் பெண்ணை அழைத்தான்.
அவரும் அறைக்கு வந்து அக்னியையும் ஆராவையும் மாறிமாறி பார்த்தவர், "யாரு தம்பி இந்த பொண்ணு?" என்று கேட்க, அக்னி நடந்ததை எல்லாம் அவரிடம் சொன்னவன், அலமாரியில் இருந்து தன் பனியன் மற்றும் ஒரு டிரக் பேண்ட் எடுத்து அவர் கையில் கொடுத்து, "அந்த பொண்ணுக்கு இந்த துணியை மாத்தி விடுங்க அக்கா." என்றுவிட்டு அந்த அறையை விட்டு வெளியேற, அந்த பெண்ணும் ஆராவுக்கு துணியை மாற்றிவிட்டு அவளை படுக்கவைத்து விட்டு வெளியே வந்தவர், "தம்பி அந்த பொண்ணுக்கு துணி மாத்திட்டேன். அது நல்லா தூங்குது தம்பி." என்று சொல்ல அக்னி, "அக்கா இன்னைக்கு ஒரு நாள் இங்கயே அந்த பொண்ணு கூட துணையா இருங்க." என்று கேட்டான்.
அந்த பெண் தயங்கியபடி, "தப்பா நினைக்காதீங்க தம்பி. எம் பொண்ணுக்கு இது நெற மாசம் தம்பி, நான் வீட்டுக்கு போகனும்" என்று சொல்ல, "ஓ… ஓ… சாரிக்கா எனக்கு மறந்தே போச்சு. நீங்க கிளம்புங்க, நான் பாத்துக்குறேன்." என்றதும் அந்த பெண் வீட்டுக்கு கிளம்ப அக்னி, ஆரா இருந்த அறைக்குச் சென்றான்.
சின்ன குழந்தைப் போல் சுருண்டு படுத்திருந்தவளை பார்த்து அக்னி லேசாக புன்னகைத்தபடி, "இன்னைக்கு மட்டும் நீ என்னை மூணு தடவை சிரிக்க வச்சிருக்க… யாரும்மா நீ?" என்று தூங்கிக் கொண்டிருந்தவளிடம் பேசியவன் பார்வை, எதேர்ச்சையாக அவள் கழுத்தில் இருந்த சங்கிலியில் படிய, அவன் கண்கள் கூர்மையாகின.
சட்டென அவள் அருகில் சென்று சிறிதும் தயங்காமல், அவள் சங்கு கழுத்தை தடவிக் கொண்டிருந்த சங்கிலியில் தொங்கிய "A" என்ற ஆங்கில எழுத்தில் இருந்த பெண்டன்ட் தடவிப் பார்த்தவன் விழிகளில் ஒரு விதமான எதிர்பார்ப்பு… உடனே ஆராவின் கைப்பையில் இருத்த அவளின் அடையாள அட்டை எடுத்து அவளைப் பெயரை பார்த்தவன் எதிர்பார்ப்பு உண்மையானது.
"ஆராத்யா பிரியதர்ஷினி" என்று உச்சரிக்கும் போதே அவனுக்கு தேனை உண்டது போல் அப்படி இனித்தது! அவன் உள்ளம் மகிழ்ந்ததென்றால் அதற்கு மாறாக அவன் கண்களோ கலங்கி போனது. பின் கலங்காமல் எப்படி இருக்கும்! அவனின் பல வருட தேடல், இன்று எதிர்பார சமயத்தில் அவன் கண்முன்… அவன் வீட்டில், அவன் அறையில் துயில் கொள்ளும் ஓவியமாக படுத்திருப்பதை பார்த்தால், அவனும் தான் என்ன செய்வான்.
"தியா… என்னோட தியா, இவ என்னோட தியா…" என்று அவன் உதடுகள் உச்சரிக்க, அவன் கண்களோ, "எவ்ளோ வருஷம் ஆகிடுச்சுடி உன்னைப் பாத்து! எவ்ளோ வளர்ந்துட்ட நீ? உன்னை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா? சாகுறதுக்குள்ள உன்னை ஒருதரம் பாப்பேனான்னு ஆகிடுச்சுடி எனக்கு…
உன் பேர் வச்சிருக்க ஒரே காரணத்திற்காக எத்தனை பொண்ணுங்களுக்கு நான் வேல போட்டு கொடுத்திருக்கேன்னு உனக்கு தெரியுமா தியா?" என்று உறங்கும் அவளிடம் என்னென்னமோ பேசியவன்,
இறுதியாக, "என்னை மாதிரி தானா தியா நீயும்… நீயும் இன்னும் என்னை மறக்கல தானா? உன் தேவ்வை உனக்கு ஞாபகம் இருக்குல்ல தியா?" என்று கேட்டவன் இதயம், எங்கே அவள் தன்னை மறந்திருப்பாளோ என்று நினைக்கவே பயந்தது.
"ச்சீசீ… என் தியா என்னை மறந்திருக்க மாட்டா… அவ என்னை மறந்திருக்க மாட்டா…" என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருக்க, அந்த நேரம் ஆராவின் கைப்பேசி அலறியது. திரையில் 'ஆதிமாமா' என்று வந்ததை பார்த்தவனுக்கு மனதில் சுருக்கென்று எதோ குத்தியது.
கைப்பேசி ரெண்டு முறை அடித்து ஓய்ந்து போன பின் அதை எடுத்துப் பார்க்க, திரையில் ஆரா பட்டுப்புடவையில் இருக்க, அவள் கன்னத்தில் யாரோ ஒரு பெண் முத்தமிட, ஆரா கூச்சத்தில் இருகண்களையும் மூடியபடி சிரித்துக் கொண்டிருந்த புகைப்படம் முகப்பு படமாக இருந்தது.
அவள் கோலத்தை பார்த்த அக்னிக்கு ஏதோ தோன்ற, அவள் கைப்பேசியின் புகைப்படத் தொகுப்பைத் திறந்தான். அதில் நிறைய படங்களில் முகப்பில் இருந்த பெண்ணுடன் ஆரா இருக்கும் புகைப்படங்கள் தான் அதிகம் இருந்தது. 'யார் இது? இது தியாவோட ப்ரண்டு போல' என்று நினைத்தபடி அப்படியே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்கள் பவித்ராவின் புகைப்படத்தை பார்த்த உடன், "ம்மா" என்று கலங்கிவிட்டது.
தன் தாய்க்கு அடுத்து பசியில் வாடியிருந்த தனக்கு உணவு கொடுத்த அந்த தாயின் முகம் அவன் அடிமனதில் ஆழமாக பதிந்திருந்தது. அப்படியே அடுத்த படங்களைப் பார்த்தவன் பார்வை, ஒரு படத்திலேயே நிலைகுத்தி நின்றது.
அது ஆராவும், ஆதியும் மாலையும் கழுத்துமாக அருகருகில் நிற்கும் படம். அதைப் பார்த்து அப்படியே மண்டியிட்டு அமரந்தவனுக்கு உள்ளுக்குள் சொல்லமுடியாத வலி. தன் கைப்பொருளை யாரோ பறித்தது போல் வலித்தது அவனுக்கு…
எத்தனை ஆண்டு தேடல், படிப்பு முடிந்து இந்தியா வந்ததில் இருந்து ஆராவின் சொந்த ஊர் தொடங்கி, ஒவ்வொரு இடமாக அவன் அவளை தேடி அலைந்தது அவனுக்கு மட்டும் தானே தெரியும்! அப்படி வருடக்கணக்காக தேடிக் கிடைத்தவளை அடுத்தவன் மனைவியாகப் பார்த்தவனுக்கு மனது எப்படி வலித்திருக்கும்!
உறங்கும் ஆரா முன் மண்டியிட்டு அமர்ந்தவன், "எப்பவும் என்னோடவே இருப்பேன்னு சத்தியம் பண்ணியே தியா… அப்றம் ஏன் தியா அவனை கல்யாணம் பண்ண?" என்று வெகு நேரம் புலம்பியவனுக்கு, அப்போது தான் அவள் அடையாள அட்டையில் மிஸ்.ஆராத்யா பிரியதர்ஷினி என்றிருந்தது நினைவுக்கு வர, உடனே கைப்பேசியை எடுத்து அடுத்தடுத்து புகைப்படங்களை பார்த்தவனுக்கு அப்போதுதான் புரிந்தது, அது அவர்கள் இருவரின் நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் என்று.
அப்போது தான் அக்னிக்கு போன உயிர் திரும்பி வந்தது. திரும்பி உறங்கும் ஆராவை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவனுக்கு, ஒருவேளை ஆதியை ஆரா விரும்புகிறளோ? அதனால் நான் திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பாளோ? என்று அடுத்த சிந்தனை தோன்றி அவனை அதிரவைக்க,
"இருக்காது… அப்டி இருக்கவே இருக்காது. அப்டி இவ ஆதியை விரும்பி இருந்தா கண்டிப்பா இவங்க நிச்சய ஃபோட்டோவை தான் டி.பியா வச்சிருப்பா… ஏன் அவ ப்ரண்ன்டு கூட இருக்க ஃபோட்டோவை வைக்கப்போறா?' என்று அவனே கேள்வியும் கேட்டு பதிலையும் அவனே சொல்லிக் கொண்டான்.
தந்தை விட்டுச் சென்ற தொழிலை கையில் எடுத்த ஒரே வருடத்தில் அதை முதலிடத்தில் கொண்டுவந்தவன், தொழிலில் தன்னை எதிர்த்து நிற்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவன், எந்த ஒரு விஷயத்திலும் தெளிவாக தைரியமாக முடிவெடுப்பவன், இன்று ஒரே நாளில் தலைகீழாக மாறிப் போயிருந்தான். அது அவனுக்கே நன்கு புரிந்தது.
இதுவரை தன்னைத் தடுக்க, தடுமாற வைக்கும் சக்தி யாருக்கும் இல்லை என்று எண்ணி இருந்தவனுக்கு இந்த நிமிடம் புரிந்தது, தன் எதிரில் அமைதியாக உறங்கும் இவள்… இவள் ஒருத்தியால் மட்டுமே தன்னிலையை விட்டு தன்னை தடுமாற வைக்க முடியும் என்பது. மெல்ல அவள் அருகில் அமர்ந்து அவள் தலையை கோதியவன், "நீ என்னை மறந்திருக்க மாட்டல்ல தியா?" என்று தூங்குபவளிடம் பேசியபடியே அவனும் உறங்கிப் போனான். காலையில் எட்டு மணிபோல் ஆராவுக்கு விழிப்பு வந்தது.
"என்ன இது கண்ணு மேல தம்புள்ஸ் வச்ச மாதிரி இப்பிடி கனக்குது? கண்ணைத் திறக்கவே முடியவில்லையே…" என்றபடி மெல்ல கண்களை திறந்து பார்த்தவள், "என்ன இது! என் ரூமை யாரு இப்டி மாத்துனது?" என நன்றாக கண்களை கசக்கிக் பார்த்தவளுக்கு தூக்கிவாரிப் போட்டது.
"அய்யோ! இது நம்ம ரூம் இல்லயே? அப்ப நான் இப்ப எங்க இருக்கேன்?" என்றபடி அங்கும் இங்கும் விழியை உருட்டிப் பார்க்க, அங்கு கட்டிலில் அருகில் அவளை உற்று பார்த்தபடி இருந்த அக்னி அவள் கண்ணில் விழுந்தான்.
தூக்கம் கலைந்து ஆரா விழித்து எழுந்த அசைவில் அக்னிக்கும் விழிப்பு வந்தது.
அவனை பயந்த பார்வை பார்த்தவள், சட்டென்று கட்டிலை விட்டு இறங்கி சுவரில் போய் ஒட்டிக்கொண்டு, "யா… யார் நீங்க? என்று எச்சிலை விழுங்கியபடி கேட்க, அக்னிக்கு புரிந்துவிட்டது அவளுக்கு நேற்று இரவு என்ன நடந்ததென்று நினைவு இல்லை என்று…
அதை வைத்து சற்று நேரம் அவளுடன் விளையாட நினைத்த அக்னி, "அதுசரி என் வீட்ல, என் ரூம்ல, என்னோட பெட்ல நல்லா ஹாயா படுத்து தூங்கிட்டு, இப்ப வந்து என்னை யாருன்னு கேக்குறீயா நீ? ம்ம்ம்… இது நல்ல கதையா இருக்கே?" என்று நக்கலாகச் சொல்ல, ஆரா மலங்க மலங்க விழித்தவள், "ப்ளீஸ் சார் நான் எப்டி இங்க வந்தேன்? நீங்க யாரு?" என்று கேட்க, அக்னி நேற்று இரவு நடந்ததை சொன்னான்.
அப்போது தான் ஆராவுக்கும் நேற்று இரவு யாரோ தன் முகத்தில் எதையோ வைத்து அழுத்தியது ஞாபகம் வர, நெஞ்சைப் பிடித்துக் கொண்டவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
"ஏய்! ஏய்… பயப்படாத நேத்து எதுவும் நடக்கல… நீயா எதுவும் கற்பனை பண்ணாத…" என்ற அக்னியின் வார்த்தையை கேட்ட பிறகே அவளுக்கு நிம்மதி பெருமூச்சு வந்த அடுத்த நொடி, நேற்று அவள் உடுத்தியிருந்த உடை அங்கிருந்த சேரில் இருந்ததைப் பார்த்தவளுக்கு மீண்டும் நெஞ்சடைத்து போனது.
"அ… அது என்னோட டிரஸ்…" என்றாள் அதிர்ந்த குரலில்.
"ஆமா உன்னோட டிரஸ் தான். அதுக்கு இப்ப என்ன?" என்றான் அக்னி.
"அது எப்டி அங்க போச்சு?" என்றவள் குனிந்து தன் உடையைப் பார்த்துவிட்டு, "இதை யாரு மாத்தி விட்டது?" என்று கேட்டாள் நடுங்கும் குரலில்.
அவளை கொஞ்சம் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கலாம் என்று நினைத்த அக்னி, "இந்த வீட்ல, இப்ப நம்ம ரெண்டு பேரை தவிர வேறு யாரும் இல்லை மா" என்றான் வெகு சாதாரணமாக.
முதலில் அதன் அர்த்தம் புரியாது விழித்தவள், அதன் அர்த்தம் புரிந்தவுடன் முகத்தை மூடி அழ ஆரம்பிக்க, அவளின் அழுகையை தாங்கமுடியாமல் அக்னி அவள் அருகில் சென்றவன்,
"ஏய்! அழாத… நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். நேத்து நீ தண்ணில விழுந்துட்ட, அதான் இங்க வேலை செய்ற அக்காவை கூப்டு உன் டிரஸை மாத்த சொன்னேன்." என்று சொல்ல, ஆரா அவனை நம்பாத பார்வை பார்த்தாள்.
"ஏய்! நம்புமா… நான் சொல்றது உண்மைதான்."
"அப்ப அந்த அக்காவை கூப்டுங்க, நான் அவங்கிட்ட நீங்க சொன்னது உண்மையானு கேக்கனும்" என்றாள் வீம்பாக.
"அதுசரி… ரொம்ப தெளிவுதான் நீ" என்றவன், "அவங்க வர்ர கொஞ்ச நேரம் ஆகும். நீ போய் ஃப்ரெஷாகிட்டுவா, அதுக்குள்ள அவங்க வந்திடுவாங்க." என்றவன் அங்கிருந்து செல்ல, ஆராவும் முகம் கழுவி, தன்னுடைகளை மாற்றிக்கொண்டு கீழே இறங்கி வந்தாள்.
"ம்ம்ம் வா... வந்து உக்காந்து சாப்டு" என்ற அக்னியை பார்க்காமல் அவள் பார்வை வீடு முழுவதையும் அலச, அக்னிக்கு புரிந்து விட்டது அவள் யாரைத் தேடுகிறாள் என்று.
"நீ தேடும் ஆள் அதோ வர்ராங்க பாரு." என்றதும் அந்த பக்கம் திரும்பிப் பார்த்த ஆரா, வேகமாக அந்த பெண்ணிடம் சென்றவள், "அ… அக்கா நேத்து நீங்க தான் எ… எனக்கு டிரஸ் மாத்திவிட்டீங்களா?" என்றவள் குரலில் அத்தனை பதட்டம்.
"ஆமாம்மா… நேந்து நீங்க தண்ணில விழுந்து உங்க துணியெல்லாம் நனஞ்சு போச்சு, தம்பிதான் என்னைக் கூப்டு உங்களுக்கு துணி மாத்திவிட சொல்லுச்சு." என்றவர் கூடுதலாக,
"நைட் உங்களுக்கு துணையா என்னை இங்க தங்கச் சொல்லிச்சுமா… ஆனா, எம்பொண்ணு புள்ளதாச்சிம்மா… தனியா விடமுடியாது, அதான் உங்களுக்கு துணையா இருக்க முடியல." என்று வருத்தமாக சொல்ல, ஆராத்யாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
'ச்சீ… அந்த பொறுக்கிங்ககிட்ட இருந்து காப்பாத்தி, வீட்டுக்கு கூட்டி வந்து நைட் பூரா நமக்கு பாதுகாப்பா இருந்த மனுஷனைப் போய் தப்ப நினைச்சிட்டோமே?' என்று யோசித்த அடுத்த நொடி, 'நான் நினைச்சதுல என்ன தப்பிருக்கு? இவன் பேசினதுக்கு சந்தேகப்படாம எப்டி இருக்க முடியும்?' என்று தனக்குள் பேசிக் கொண்டிருந்தவளை தீயாக முறைத்துக் கொண்டிருந்தான் அக்னி.
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அக்னிக்கு அவளின் அந்த பதட்டம் எரிச்சலை கொடுக்க, 'நான் அவ்ளோ சொல்லியும் நம்பாம அந்த அக்கா கிட்ட விசாரணை பண்றா பாரு…" என்று அவனுக்கு ஆத்திரமாக வந்தது.
ஆரா வேகமாக அக்னி அருகில் வந்தவள் அவனுக்கு மட்டும் கேட்கும்குரலில், "நீங்க பண்ண ஹெல்ப்க்கு நன்றி… நேத்து நடந்தது நேத்தோட போச்சு. இனி நீங்க யாரோ… நான் யாரோ… நான் உங்களை மறந்திடுறேன், நீங்களும் என் மூஞ்சை மறந்திடுங்க… ஓகேவா…" என்று அவன் கையை இவளே தூக்கி அதில் இவள் கையை குத்தி, "டீல் ஓகே…" என்றவள் விட்டால் போதுமென்று அங்கிருந்து ஓடியிருந்தாள்.
"உன் முகத்தை நான் மறக்குறதா?! அது இந்த ஜென்மத்தில் நடக்காது தியா. நான் செத்தா கூட என் மனசுல உன்னோட நினைப்பு மட்டும் எப்பவும் அழியாது" என்றான் அவள் போன திசையை பார்த்து.