கன்னத்தில் காதல் முத்தம் 21


 காதல் 21


அன்று முழுவதும் வேலை ஆராவை வைத்து செய்ய, "இதுக்கு மேல முடியாதுடா சாமி" என்று மாலை நான்கு மணிக்கே வீட்டிற்கு செல்ல அவள் கிளம்ப, அந்த நேரம் அவள் கைப்பேசி அவளை அழைத்தது.


புது எண்ணில் இருந்து அழைப்பு வந்திருக்க, 'யார் இது?' என்று யோசித்தபடி அழைப்பை ஏற்று காதில் வைத்தவள், "ஹலோ ஹூஸ் திஸ்?" என்று கேட்க,


"ஹாய் மிஸ். ஆராத்யா எப்டி இருக்கீங்க?" என்று ஒரு ஆணின் குரல் கேட்க, "யார் நீங்க? என்று கேட்டாள் ஆராத்யா.


"என்ன மேடம்… அதுக்குள்ள என்னை மறந்துட்டீங்களா…? சோ சேட் ஆராத்யா மேடம். நன்றி மறப்பது நன்றன்று…" என்று அவளை வம்பிழுக்கும் முடிவோடு எதிர்பக்கம் பதில் வர, "ஹலோ யார் நீ? நான் என்ன உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்?" என்றாள் கடுப்பாக.


"அய்யோ என்ன இது மேடம் அதுக்குள்ள என்னை மறந்துட்டீங்களா? நேத்து நைட் அவ்ளோ பெரிய ஆபத்தில் இருந்து உங்கள காப்பத்தி, வீட்டுக்கு கையிலேயே தூக்கிட்டு வந்து, டிரஸ் எல்லாம் மாத்திவிட்ட என்னை மாறந்துட்டீங்களா?" என்று கேட்ட பிறகு தான் பேசுவது யாரென்று அவளுக்கு புரிந்தது‌.


"ஏய் நீங்களா? உங்களுக்கு என் நம்பர் எப்டி கிடைச்சிது? ஏன் கால் பண்ணிங்க?" என்று கடுப்பாக கேட்க,


"ஹலோ மேடம் நேத்து நைட் நீங்க என் வீட்ல, என் ரூம்ல, என்னோட" என்று ஆரம்பிக்கும் போதே…"போதும் போதும் போதும்… இதென்ன தலைப்பு செய்தியா? திருப்பி திருப்பி சொல்லிட்டு இருக்கீங்க… இப்ப எதுக்கு ஃபோன் பண்ணீங்க? அத சொல்லுங்க முதல்ல" என்றாள் எரிச்சலாக.


"அது ஒன்னு இல்ல மேடம், என்னமோ தெரியல… நேத்து உங்களைப் பார்த்ததில் இருந்து உங்க ஞாபகமாவே இருக்கு… உங்களைப் பாக்கனும் போல இருந்துது, அதான் உங்களை வீட்டுக்கு வாங்கன்னு சொல்ல ஃபோன் பண்ணேன்." என்றவனின் குழைந்த குரலில் கொதித்துபோன ஆரா,


"யூ ராஸ்கல்… எவ்ளோ திமிருடா உனக்கு? என்ன தைரியம் இருந்த என்கிட்ட இப்டி பேசுவா? ஏதோ நேத்து எனக்கு ஹெல்ப் பண்ணேன்ற ஒரு காரணத்தை வச்சி என்கிட்ட அட்வான்டேஜ் எடுக்கப் பாக்குறீயா? மவனே வந்தேன்னு வை தூக்கிப்போட்டு மிதிச்சிடுவேன்… வைடா ஃபோனை" என்று கத்தியவள் அழைப்பை துண்டித்தாள்.


அவள் கத்திய சத்தத்தில் காதை விரல் கொண்டு குடைந்த அக்னி, "ப்ப்பா… என்னம்மா கத்துற இவ… ம்ம்ம் சும்மா சொல்லக்கூடாது சரியான சண்டகாரி தான் இவ…" என்றவன், "நீ வருவ தியா… என்னைத் தேடி நீ வருவ. வர வைக்குறேன்." என்றவன் அவளை வெறுப்பேற்றும் பொருட்டு ஆராக்கு சில புகைப்படங்களை அனுப்பி வைத்தான்.


குறுஞ்செய்தி வந்த ஒலி கேட்டு கைப்பேசியை எடுத்து பார்த்த ஆராவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்துகொள்ள, உடனே அக்னி வீட்டுக்கு ஓடினாள்.


அவள் வரவை எதிர்நோக்கி இருந்த அக்னி, சிசிடிவி கேமராவில் அவள் உள்ளே வருவதைப் பார்த்தவன், "அப்டி வாடி என் வழிக்கு" என்றவன் இதழில் வெற்றிப் புன்னகை.


ஆராவை பார்த்து அக்னி எழுந்து நிற்க, வேகமாக உள்ளே வந்தவள், 'ப்ளார்' என்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.


"மனுஷானாடா நீ? ச்சீ… பொம்பள பொறுக்கி ராஸ்கல், ஏன்டா இப்டி பண்ண? நேத்து என்னமோ பெரிய ஹீரோ மாதிரி டைலாக் எல்லாம் பேசினா… இப்ப என்னடா செஞ்சிருக்க நீ? நேத்து அந்த பொறுக்கிங்க செஞ்சதுக்கும், நீ இப்ப பண்ணதுக்கும் என்னடா வித்தியாசம் இருக்கு?" என்றவள் கண்ணீர் வழியும் கண்களை துடைத்தபடியே,


"நீ என்னைப் ஃபோட்டோ எடுத்து வச்சிருந்தா, நான் பயந்து நீ சொல்றதை எல்லாம் கேப்பேன்னு நினைச்சியா? ஒரு வேளை நீ நேத்து என்கிட்ட தப்பாவே நடந்து அதையே ஃபோட்டோ எடுத்து வச்சிருந்தாலும் எனக்கு பயம் இல்லடா… மிஞ்சி போன என்ன பண்ணவா? அந்த ஃபோட்டோவ நெட்ல போடுவீயா? போட்டுக்கோ எனக்கு ஒன்னும் பயம் இல்ல… என்னோட கற்பு என் உடம்பு சம்பந்தப்பட்டது இல்லடா…." என்றவள் தன் நெஞ்சைத் தொட்டுகாட்டி,


"அது என் மனசுல இருக்கு… உன்னால என்ன செய்ய முடியுமோ செய்டா… அதுக்கு என்ன பதிலடி கொடுக்கணும்னு எனக்கும் தெரியும்." என்றவள் மீண்டும் அவன் கன்னத்தில் அடிக்க வர, அவள் கையை மறித்து பிடித்திருந்த அக்னியின் முகத்தில் அத்தனை வலி.


நேற்று இரவு தூக்கத்தில் இருந்த ஆரா, முகத்தை சுழித்து, இதழ் வளைத்து, கண்ணைச் சுருக்கி முகத்தை அஷ்டகோணலாக்கி பலவித சேட்டைகள் செய்தபடி கண்டதையும் உளறிக்கொண்டிருக்க, ஒரு புன்சிரிப்புடன் அவள் சேட்டைகளை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த அக்னி, ஏதோ தோன்ற அவள் உளறுவதை தன் கைபேசியில் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தான்.


அப்போது ஆரா எதிர்ச்சியாக திரும்பி படுக்க, அவன் அணிந்த பனியன் சற்று விலகி லேசாக அவள் மார்பு பகுதி தெரிய அதுவும் கேமராவில் பதிவாகி விட்டது. சட்டென கேமராவை நிறுத்திய அக்னி, போர்வையை எடுத்து அவளுக்கு கழுத்து வரை முழுதாக போர்த்திவிட்டான்.


அந்த வீடியோவை அவன் எடுத்தது கூட, பின் எப்போதாவது இதை அவளுக்கு போட்டு காட்டி அவளை வம்பிழுக்கலாம் என்ற எண்ணத்தில் தான், அவனும் அதை பதிவு செய்தான். அவளை தன் வீட்டுக்கு வரவைக்க அவளின் ஆடை லேசாக விலகி இருந்த புகைப்படத்தை அவன் ஆராவை பயமுறுத்தி இங்கு வரவைக்க இப்போது அனுப்பி இருக்க, அதைப் பார்த்து அதிர்ந்த ஆரா, 'தூக்கத்தில் இருந்த தன்னிடம் அக்னி ஒருவேளை தவறாக நடந்திருப்பனோ?' என்ற கோவத்தில் அவனை அறைந்திருந்தாள். அவள் அடித்ததை விட அவள் பேசியைதை கேட்ட அக்னியின் மனம் தான் உடைந்து நொறுக்கிப் போனது.


"என்னை அவ்ளோ கேவலமா நினைச்சிட்டயா தியா?" என்று உடைந்த குரலில் கேட்க, அவனைத் தீப்பார்வை பார்த்தவள், அவன் முன் தன் சுட்டுவிரலை நீட்டி, "அப்டி கூப்டதாடா… அந்த பேர் சொல்லி என்னை கூப்பிடம் தகுதியோ, உரிமையோ உனக்கில்லை… இந்த உலகத்தில் என்னை அப்டி கூப்பிட, ஒரே… ஒருத்தனுக்கு தான் உரிமை இருக்கு." என்று ஆக்ரோஷமாக சொன்னவள் திரும்பி நடக்க, அக்னிக்கு இன்னும் அவள் தன்னை மறக்கவில்லை என்பது ஒருவித நிம்மதியை கொடுக்க, கலங்கிய விழிகளுடன் அவளைப் பார்த்தவன்,


"உன்னை தியான்னு கூப்பிடும் உரிமை, எனக்கு மட்டும் தான்டி இருக்கு. இந்த உலகத்தில் உன்னை இந்த தேவ் மட்டும் தான் அப்டி கூப்பிட முடியும்" என்று வலியோடு சொல்ல, அவள் வெளியே செல்ல எடுத்து வைத்த கால் அந்தரத்தில் அப்படியே நிற்க, அதிர்ந்த விழிகளோடு அவனை திரும்பிப் பார்த்தாள் ஆராத்யா… இல்லை இல்லை தேவ்வின் தியா.


"தே… தேவ்… நீ… நீயா?" என்றவள் வார்த்தையில் கிணற்றில் இருந்து கேட்பது போல நலிந்து இருக்க, விழியில் கண்ணீரும் இதழில் புன்னகையுமாக, 'ஆமாம்' என்று தலையாட்டிய அக்னி, "நான் அழுகுறேனே ஏன் அழறேன்னு கேக்கமாட்டியா தியா?" என்றவன் மேலும்,


"எப்ப பசிக்கிதுன்னாலும் என்னை கேளுன்னு சொன்னீயே தியா… இப்ப எனக்கு பசிக்குது." என்று சொல்ல, "தேவ்" என்று


கதறியபடி அவனை நோக்கி ஓடிவந்தவள் காற்றுக்கூட நுழைய முடியாதபடி அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டு, "நீ இன்னும் உயிரோட தான் இருக்கீயா தேவ்? நானும் அம்மாவும் உன்னை தேடினோம் தெரியுமா? நா… நான் நீ செத்துபோய்டேன்னு நினச்சிட்டு இருந்தேன்டா..‌." என்றவள் அவனுக்கு எதுவும் ஆகவில்லை என்ற நிம்மதியில் தேம்பி தேம்பி அழ, அந்த கண்ணீர் அவன் சட்டையை தாண்டி மார்பை நனைக்க, அவள் முதுகை ஆதரவாக வருடிய தேவ்,


"எனக்கு ஒன்னும் இல்லடா… நான் நல்லாத்தான் இருக்கேன்" என்றதும் மேலும் அவனை மேலும் இறுக்கிய ஆரா அதீத அதிர்ச்சியில் அப்படியே அவன் தோளில் மயங்கிப் போனாள்.


அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தவளின் மூடியிருந்த விழியில் கண்மணிகள் அங்கும் இங்கும் ஓட, "தேவ் உனக்கு ஒன்னும் இல்ல..‌. என் தேவ் நல்லா இருக்கான், அவனுக்கு ஒன்னும் இல்ல" என்று தூக்கத்தில் அவள் உளறத் தொடங்க, "தியா… தியா, இங்க பாருடா எனக்கு ஒன்னும் இல்ல… ஐம் ஆல் ரைட்… கண்ணைத் திறந்து பாரும்மா" என்று அவள் கன்னத்தை தட்ட, சட்டென்று படுக்கையில் இருந்து எழுந்தவள், "தேவ்… தேவ்" என்று அழுதபடி மீண்டும் அவனைக் கட்டிக்கொண்டாள்.


"ஓகே ஓகே ரிலாக்ஸ் தியா" என்றவன், "இந்த இதை குடி" என்று ஜூஸை அவள் முன் நீட்ட, அப்போது அது அவளுக்கு தேவையாக இருக்க, உடனே வாங்கிக் கொண்டவள், ஒரே மூச்சில் அதை குடித்து முடித்திருந்தாள்.


"ம்ம்ம் இப்ப சொல்லு தியா, ஏன் என்னைப் பார்த்து நீ இன்னும் உயிரோட தான் இருக்கீயானு கேட்ட, நான் செத்துப்போய்ட்டாத உனக்கு யார் சொன்னது?" என்று கேட்டான்.


அவனை நிமிர்ந்து பார்க்காமல் தலை குனிந்திருந்த ஆராவின் விழிகள் அங்கும் இங்கும் தவிப்போடு அலைபாய, "பதில் சொல்லு தியா.." என்ற அக்னியின் சத்தத்தில், அவனை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தவள்,


"நா… நாங்க அந்த ஊரைவிட்டு வந்த அப்றம் ஒரு நாள் உங்க பாட்டியை பாத்தோம், அப்ப அவங்க நீ உங்க அப்பா கூட வெளியூர் போய்ட்டாதா சொன்னாங்க. அதுக்கு பிறகு உன்னை எப்படி கண்டுப் பிடிக்கிறதுன்னு தெரியாம, நான் உன்னை பேஸ்புக், இன்ஸ்டாகிராம்னு எல்லாத்துலையும் தேடினேன் தெரியுமா? ஆனா, கண்டுபுடிக்க முடியல, அங்க இருந்த வீடு நிலம் எல்லாத்தையும் அப்பா வித்துட்டாரு.


சோ அதுக்கு அப்பறம் என்னால அந்த ஊருக்கு வரவும் முடியல. ஒரு தரம் ஆதிமாமா உங்க ஊருக்கு ஒரு வேலையா போகனும்னு கிளம்பும் போது, அம்மா உன்னைப் பத்தி உங்க பாட்டிக்கிட்ட விசாரிச்சிட்டு வர சொன்னாங்க, நானும் மாமாகிட்ட எனக்கு தேவ்வை பாக்கனும் போல இருக்கு மாமா, அவனை என்னைப் பாக்க வரச் சொல்லுங்கன்னு சொன்னேன். மாமா ஊருக்கு போய்ட்டு திரும்பி வந்து, என்று தயங்கியவள், "நீ… நீ…" என்று அடுத்த வார்த்தை பேசமுடியாது மீண்டும் தவிக்க, "நான் செத்துப்போய்ட்டேன்னு உன் மாமா சொல்லிட்டான் அப்டி தானா?" என்று கேட்டவன் முகம் இறுக ஆரம்பிக்க, ஆராவின் தலை மேலும் கீழும், "ஆமாம்" என்று ஆடியது.


"ஒரு ஆக்சிடென்ட்ல நீ செத்து போய்ட்டாதா உன் பாட்டி சொன்னதா, மாமா சொன்னாரு தேவ்… அன்னைக்கு நான் எவ்ளோ அழுதேன்னு தெரியுமா? அதுக்கு பிறகு நான் ஒரு வாரம் யார் கூடவும் பேசவே இல்ல. உன் நினைப்புல அழுதிட்டே இருந்தேன். அம்மா கூட ரொம்ப அழுதாங்க தேவ்.


அவங்களுக்கு உன்னை ரொம்ப புடிக்கும்… எனக்கு மட்டும் இன்னொரு பொண்ணு பொறந்திருந்தா அதை தேவ்க்கு தான் கட்டிக்கொடுப்பேன்னு எத்தனை முறை சொல்லியிருக்காங்க தெரியுமா? உன்னை அவங்களுக்கு அவ்ளோ பிடிக்கும்." என்று சொல்ல, அக்னி முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.


"எனக்கு அம்மைவை பாக்கனும் போல இருக்கு தியா… எத்தனை வருஷம் ஆச்சு அவங்களைப் பாத்து… நீ அவங்களுக்கு வீடியோ கால் பண்ணேன். நான் பேசணும்." என்று சின்ன குழந்தை போல் கேட்க, ஆரா 'இல்லை' என்று தலையாட்ட,


"ஏன் தியா நேர்ல போய் அவங்களை சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நினைக்கிறீயா? அதுவும் நல்ல ஐடியா தான், வா உடனே சென்னை கிளம்பலாம்" என்று ஆர்வமாக அவள் கையைப் பிடித்து இழுக்க, அவள் அசையாமல் இருந்தாள்.


"என்னாச்சு தியா, வா போலாம்" என்றவனை பார்த்து தலை இருபக்கமும் இல்லை என்று ஆட்டியவள், "அவங்களை நீ பார்க்கமுடியாது தேவ்… அம்மா இல்ல, அம்மா போ… போய்ட்டாங்க தேவ்" என்றவள் தாயின் நினைவில் கதறி அழ, அவள் சொன்னதை கேட்ட தேவ் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.


"தியா நீ என்ன சொல்ற? பவி… பவிம்மா…" என்றவன் துக்கம் தாங்காமல் அப்படியே மண்டியிட்டு அமர்ந்தவன் கண்கள் கலங்கி இருந்தது.


"கடைசியா உங்க முகத்தை பாக்க கூட எனக்கு குடுத்துவைக்கலயே ம்மா" என்று வெதும்பியவன் அருகில் வந்து அவன் தலையைக் கோதிய தியா, "அம்மா எங்கயும் போகல தேவ்… அவங்க மேல இருந்து நம்மை பாத்துட்டு தான் இருப்பாங்க." என்றவளை கட்டிக்கொண்டு அவள் வயிற்றில் முகத்தைப் புதைத்துக் கொள்ள,


"நீ இப்டி அழறதை பாத்தா அவங்களுக்கு கஷ்டமா இருக்கும் தேவ். ப்ளீஸ் அழதடா" என்றவளை நிமிர்ந்து பார்த்தவன், "கடைசி வரை அவங்களை பாக்க முடியாம போச்சே தியா…" என்றான் கவங்கிய குரலில்.


நாட்கள் அழகாக நகர, அதன் பின் தேவ், தியா அவர்கள் சிறுவயது நட்பு மீண்டும் துளிர் விட்டு விருட்சமென வளரந்திருந்தது. தினமும் மாலை வேலையில் அவளை அழைத்துச் செல்ல அவள் அலுவலகம் வந்துவிடுவான் தேவ். இருவரும் கொஞ்ச நேரம் அங்கிருக்கும் 'காபி ஷாப்பில்' உட்கார்ந்து அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு செல்வார்கள்.


சில நேரங்களில் தேவ் வீட்டுக்கு செல்லும் ஆரா, உரிமையோடு அவனை எதாவது சமைத்து தரச் சொல்லி கேட்டுவிட்டு, சமையலறை மேடையில் ஏறி உட்கார்ந்து கொள்ள, அவனும் யூடியூப் பார்த்து எதனையாவது சமைத்துக் கொடுப்பான்.


சிலநேரம் அது அவனே வாயில் வைக்க முடியாதபடி கண்றவியாக இருந்தாலும், அதை ஆசையாக சாப்பிட்டுபவளை வாஞ்சையாக பார்த்த தேவ்,


"இது ரொம்ப கேவலமா இருக்கு தியா… விட்டுடு கஷ்டப்பட்டு சாப்டாதடா" என்று சொல்ல, அவனை அன்பாக பார்ப்பவள், "அம்மா போன பிறகு எனக்கு சாப்பாட்டு மேல ஆசையே போய்டுச்சு தேவ். அம்மாக்கு அடுத்து எனக்கு புடிச்சதை சமைச்சி கொடுத்த ஒரே ஆள் நீதான்டா… இதுதான் எனக்கு பெஸ்ட் புட்." என்றவளை பார்க்க பார்க்க அவனுக்கு மனது வலித்தது.


"ஏன் தியா? உங்க அப்பா உனக்கு சமைச்சி கொடுத்தது இல்லயா?" என்று கேட்க, "நீ வேற தேவ்… சும்மா அவரு கிட்சன்குள்ள வந்தாளே, எங்க அத்தை ஆம்பளைக்கு அடுப்படில என்ன வேலைன்னு கேட்டு கத்த ஆரம்பிச்சிடுவாங்க…


இதுல எங்க இருந்து அப்பா எனக்கு சமைச்சி தர்றது? எப்பவாது அத்தை இல்லாத நேரம் அம்மாக்கு சின்ன சின்ன ஹெல்ப் பண்ணுவாரு… ஆனா, இந்த ஆதிமாமா இருக்காரே… சுத்தம்… அவருக்கு கிட்சன் எங்க இருக்குன்னு கூட தெரியாது" என்று சிரித்தவள், தேவ் முகம் பார்க்க அவன் முகம் இறுகி இருந்தது.


அதற்கான காரணம் அவளுக்கு புரிந்தது. ஆதி பற்றிக் கேட்டதும் தான் அவன் முகம் மாறிவிட்டது என்று உணர்ந்தவளுக்கும், ஆதி சொன்ன பொய் மனதை உறுத்திக் கொண்டுதான் இருந்தது. அதனாலேயே அவள் தேவ்வை சந்தித்த விஷயத்தை ஆதியிடம் மறைத்திருந்தாள்.


அவளுக்கு விவரம் தெரிந்து ஆதியிடம் அவள் மறைத்த ஒரே விஷயம்தேவ் பற்றியது தான். அதுதான் பின்னாளில் அவர்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த போகிறது, என்று அவளுக்கு அப்போது தெரியவில்லை.