கன்னத்தில் காதல் முத்தம் 9

 காதல் 9


விடிந்தும் விடியாத அந்த காலைப்பொழுதில் ஆராத்யாவுக்கு நலங்கு வைக்க பல்லவி அந்த அறைக்குள் வர, அங்கு ஆராவின் படுக்கை வெறுமையாக இருந்தது.


ஒருவேளை சீக்கிரம் எழுந்து விட்டாளோ? என்று நினைத்த பல்லவி, "ஆரா பாத்ரூம்ல இருக்கீயா?" என்று கேட்டபடி குளியலறை கதவில் கைவைக்க அது திறந்துகொண்டது. பல்லவி உடனே அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை எழுப்பி கேட்க, அவளுக்கும் ஒன்றும் தெரியவில்லை.


பல்லவிக்கு சட்டென பதட்டம் தொற்றிக்கொள்ள, மண்டபம் முழுவதிலும் ஆராவை தேடிப் பார்த்தார் அவர். எங்கேயும் அவள் இல்லாமல் போக, அவரின் பதட்டத்தை பார்த்து மண்டபத்தில் இருந்த அனைவருக்கும் ஆரா காணமல் போன செய்தி தீப்போல் பரவத் தொடங்கி, அது தன்னவள் தனக்காக தேர்ந்தெடுத்த தன் பட்டுவேட்டி சட்டையை ஆசையோடு வருடிக் கொண்டிருந்த ஆதிஷ்வரன் காதிலும் வந்து விழுந்தது.


அடுத்த அரைமணி நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்துவிட, அந்த மண்டபமே கலவரமானது.


அந்த இடமே வந்திருந்த விருந்தாளிகளின் சலசலப்பில் அதிர்ந்து கொண்டிருக்க, பல்லவி அடுத்து என்ன என்று தெரியாமல் கையை பிசைந்தபடி தவித்துக் கொண்டிருக்க, ஆதிஷ்வரன் தன்னிலை மறந்து சிலைபோல் உணர்வுகள் தொலைத்து ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தான்.


பல்லவி அருகில் வந்த அந்த காவல்துறை அதிகாரி, "இங்க பாருங்கம்மா… நீங்க தெளிவா ஏதாவது சொன்னா தான் நாங்க அடுத்து என்ன செய்றதுன்னு யோசிக்க முடியும். இப்டி உங்க மகன் அமைதியா உக்காந்துட்டு இருந்தா, நாங்க மட்டும் என்னம்மா செய்யமுடியும்? நடந்தது என்னன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க… அப்ப தான் உங்க மருமகளை கண்டுபிடிக்க முடியும்." என்றார்.


"எனக்கு ஒன்னுமே புரியல சார்… எல்லாம் நல்லபடி தான் நடந்துச்சு, நைட் பங்க்ஷன் முடியவே மணி பத்தாகிடுச்சு, அதுக்கு பிறகு ஆரு தூங்கப்போய்ட்டா, அவ கூட எங்க சொந்தக்கார பொண்ணு ஒருத்தி துணைக்கு இருந்தா சார். காலையில நலங்கு வைக்க ஆருவை எழுப்பவிட போய் பாத்தா அவளை…" என்றவர் முந்தானையால் வாயை பொத்திக்கொண்டு அழ, அந்த காவல்துறை அதிகாரி ஆராவுடன் துணைக்கு இருந்த பெண்ணிடம் சென்றார்.


"நீ சொல்லுமா, நைட் என்னாச்சு? அந்த பொண்ணு எங்க தான் போச்சு?" என்று கேட்க அந்த பெண்ணோ, "எனக்கு எதுவும் தெரியல சார். நைட் ரெண்டு பேரும் பாலைக் குடிச்சிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். என்னன்னு தெரியல அந்த பாலைக் குடிச்சதும் எனக்கு பயங்கரமா தூக்கம் வந்திடுச்சு, நானும் ஆராகிட்ட எனக்கு தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு படுத்திட்டேன். அப்றம் காலையில பல்லவி ஆன்ட்டி வந்து எழுப்பும் போது தான், நான் கண்ணே முழிச்சேன்" என்று சொல்ல, ஷிவானி முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகை.


அந்த அதிகாரிக்கு புரிந்துவிட்டது அந்த பெண் குடித்த பாலில் யாரோ தூக்க மாத்திரையை கலந்திருக்கிறார்கள் என்று. இதை நிச்சயம் யாரோ தெரிந்த நபர் தான் செய்திருக்க வேண்டும் என்று அவருக்கு புரிய, அங்கிருந்த ஒவ்வொருவரையும் விசாரித்தவர் அடுத்து ஷிவானியை அழைத்தார்.


"நீங்க கல்யாண பொண்ணோட பெஸ்ட் ப்ரண்ன்ட்னு சொல்றாங்க, அப்டி இருக்க ஏன் நீங்க நைட் உங்க ப்ரண்டு கூட தாங்கல?" என்று கேட்க, ஷிவானி திரும்பி பல்லவியை பார்த்து கைகாட்டி, "இந்த கேள்வியை நீங்க அவங்ககிட்ட தான் இன்ஸ்பெக்டர் கேக்கணும். அவங்க தான் ஆரா எவ்ளோ கெஞ்சி கேட்டும், என்னை அவகூட இருக்க விடல. நான் அவகூட இருந்தா நைட் பூர தூங்காம அரட்டை அடிச்சிட்டு இருப்போம்னு சொல்லி என்னை அனுப்பிட்டாங்க…" என்று கலங்கிய குரலில் சொல்ல பல்லவிக்கு அப்போது தான், தான் செய்த தவறு புரிந்தது.


ஒருவேளை ஆராவுடன் ஷிவானி இருந்திருந்தால் இந்த விபரிதம் நடந்திருக்காதோ? என்று அவர் யோசிக்க, தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்று தான் பல்லவி சொன்னதையே பயன்படுத்திக் கொண்டு ஷிவானி மண்டபத்தில் இருந்து கிளம்பியது என்பது பாவம் பல்லவிக்கு தெரியவில்லை.


அனைவரையும் விசாரித்த இன்ஸ்பெக்டர், "இது யாரோ ப்ளான் பண்ணி தான் செஞ்சிருக்காங்க. பணம், நகை எதுவும் திருடு போகல, மண்டபத்திலும் ஒரு எவிடன்ஸும் கிடைக்கல, சிசிடிவி எல்லாம் கரெக்ட்டா குறிப்பிட்ட அந்த கொஞ்சம் நேரம் மட்டும் வேலை செய்யல… இதையெல்லாம் யாரோ பக்காவா பிளான் பண்ணி தான் செஞ்சிருக்காங்க. நீங்க கவலைப்படாதீங்க, சீக்கிரம் உங்க வீட்டு பொண்ணை கண்டுபிடிச்சிடுவோம்" என்று சொல்லிவிட்டு செல்ல, அவரோடு கல்யாணதிற்கு வந்திருந்த விருந்தினர்களும் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்றனர்.


அனைவரும் சென்றபிறகு ஆதி அருகில் வந்தாள் ஷிவானி.


அவனைப் பார்க்கவே அவளுக்கு நெஞ்சமெல்லாம் வலித்தது. ஆரா காணவில்லை என்று கேட்ட அடுத்த நொடியே உயிரற்ற உடல் போல் தொய்ந்து அமர்ந்துவிட்டவன் முகத்தில் ஜீவனே இல்லை. ஷிவானிக்கு நன்கு தெரியும் ஆரா தான் ஆதியின் உயிர் துடிப்பென்று‌. சிறுவயது முதல் அவளும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறாள். ஆரா மீது அவன் வைத்திருக்கும் பாசத்தை. விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு ஆரா மீதான ஆதியின் பாசம் காதலாக மாற, அவளை உயிராக நேசித்தான் ஆதி. ஆரா தான் அவன் சுவாசம், அவள் இல்லையென்றால் அவன் வெறும் கூடு மட்டுமே என்று நன்கு உணரந்தவள். மெல்ல அவன் தோளில் கைவைத்து‍, "ஈஸ்வர்" என்றழைக்க, அவனிடம் எந்த அசைவும் இல்லை.


"ஈஸ்வர்" என்று அவள் மீண்டும் கொஞ்சம் சத்தமாக அழைத்தபடி அவன் தோள்களை உலுக்க, அதில் சுயவுணர்வு பெற்ற ஆதி மெல்ல நிமிர்ந்து ஷிவானியை பார்த்தான்.


"ஆ… ஆரா எங்க ஷிவானி? அவ உனக்கிட்ட சொல்லாம எங்கயும் போக மாட்ட தானா… சொல்லு ஷிவானி, என்னோட ஆரா எங்க? என்னை விட்டு எங்க போனா அவ? சொல்லு ஷிவானி… சொல்லு" என்றவன் அவள் வயிற்றை கட்டிக்கொண்டு கதறி அழ, ஷிவானி கண்களில் இருந்தும் கண்ணீர் வழிய ஆதி தலையை மெதுவாக வருடியபடி, "ஆரா வந்துடுவா ஈஸ்வர், நீ… நீ அழாத, நம்ம எப்டியாது அவளை தேடிப் கண்டு புடிச்சிடலாம்… நீ அழதடா" என்றவளுக்கும் கட்டுபடுத்த முடியாத அளவுக்கு அழுகை வந்தது.


ஆதி, பல்லவி இருவரையும் தன் காரிலேயே அழைத்து வந்து அவர்கள் வீட்டில் விட்ட ஷிவானி, "நான் போலீஸ் ஸ்டேஷன் போய் ஆரா பத்தி எதாவது இன்ஃபர்மேஷன் கிடைச்சிதான்னு பாத்துட்டு வரேன்" என்றவள் ஆதியை பார்க்க, அவன் முகமோ மழை நின்ற வானம் போல வெளுத்து வெறுமையாக இருந்தது. ஷிவானி ஒரு நிமிடம் இழுத்து மூச்சு விட்டவள், "ஆரா கண்டிப்பா திரும்பி வருவா ஈஸ்வர்" என்று நம்பிக்கையாக சொல்ல, ஆதி ஒரு நிமிடம் நிமிர்ந்து அவள் முகம் பாரத்தவன், மீண்டும் தலையை குனிந்த கொள்ள, 'ஆனா, அவ இங்க வரும் போது இன்னொருத்தன் பொண்டாட்டியா தான் ஈஸ்வர் வருவா… நீ அதை தாக்கித் தான் ஆகணும்.


இதுதான் உங்க ரெண்டு பேரோட டெஸ்டினி, உன் பேர் பக்கத்தில் அந்த கடவுள் ஆரா பேர எழுதல ஈஸ்வர். அதை நீ புரிஞ்சிக்கும் நாள் கூடிய சீக்கிரம் வரும்.' என்று நினைத்த படியே அங்கிருந்து நகர்ந்தவள், பல்லவியின் முகம் பார்க்க, அவர் உணர்வின்றி உறைந்திருக்கும், தன் மகனையே வேதனையோடு பார்த்துக் கொண்டு இருந்தார்.


"கர்மா இஸ் ஏ பூமராங்" என்று மெல்ல முணுமுணுத்தவள், காவல் நிலையம் நோக்கி புறப்பட்டாள்.


முழுவதும் திரைச்சீலைகள் கொண்டு மூடியிருந்த அந்த அறையில் காற்று வந்து தன் கைவரிசையைக் காட்ட, மெல்ல ஜன்னலின் திரைச்சீலைகள் லேசாக விலகி அந்த அறையில் மெல்லிய வெளிச்சத்தை பரப்பியது. தன் முகத்தில் விழுந்த சூரியனின் மெல்லிய வெளிச்சத்தில் மயக்கம் கலைந்து மெல்ல கண்விழித்தாள் ஆராத்யா.


மெல்ல அவள் கருவிழிகள் உருண்டு அந்த அறையைச் சுற்றி சுழ, அது அவளுக்கு பழக்கம் இல்லாத இடம் என்று சட்டென உணர்ந்து கொண்டாள். மெல்ல மெத்தையில் கையை ஊன்றி எழுந்த ஆராவுக்கு பின்னந்தலையில் பத்து கிலோ இரும்பை வைத்து கட்டியது போல் அப்படி பாரமாக இருக்க, "ம்மா…" என்று மெல்ல முணங்கியபடி தன் பின்னந்தலையில் கையை வைத்து அழுத்திப் பிடித்துக்கொள்ள,


"மருந்து கொஞ்சம் ஹெவி டோஸ், அதான் உனக்கு தலை பாரமா இருக்கு. கொஞ்ச நேரத்தில் சரியாகிடும்" என்ற குரலில் திடுக்கிட்டு அவள் திரும்பிப் பார்க்க, அங்கு கையில் ஆவி பறக்கும் காஃபியுடன் நின்றிருந்தான் அக்னிதேவ்.


அந்த நேரம் அக்னியை அங்கு எதிர்பார்க்காத ஆராத்யா, அதிர்ச்சியில் கண்களை விரித்தபடி அவனை பார்த்திருக்க, முதல் பார்வையிலே தன்னை முழுதாக தன்னுள் இழுத்துக் கொண்ட அவள் கண்களில் விரும்பியே தொலைந்த அக்னி அவளை நோக்கி அடியெடுத்து வைக்க, பதறியடித்து மெத்தையில் இருந்து கீழே தாவி இறங்கிய ஆரா, "நீ… நீ இங்க என்ன பண்ற? ந… நான் இப்ப எங்க இருக்கேன்? ஆ… ஆதிமாமா எங்க?" என்று வார்த்தைகளை மென்று தின்றபடி திக்கித் திக்கி பேசியவளின் அருகில் வந்து அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தான் அக்னி.


"ஏய்… நான் உன்கிட்ட தான்டா கேட்டுட்டு இருக்கேன். நா… நான் இப்ப எங்க இருக்கேன்? நீ இங்க என்னடா பண்ற?" என்றவள் சற்று பொறுத்து, குனிந்து தான் போட்டிருந்த உடையை பார்க்க, அது புதிதாக இருந்தது.


வெடுக்கென்று நிமிர்ந்து அக்னியை பார்த்து, "ஏய் நான் இங்க எப்ப வந்தேன்? இன்னைக்கு என்ன டேட்? என்னோட கல்… கல்யாணம்?" என்று கோர்வையாக பேச முடியாது விட்டுவிட்டு ஒருவழியாக கேட்க வந்ததை கேட்டு முடித்தவள், அக்னியை பார்க்க அவனோ, "சூடு ஆறிடும் முன்ன இந்த காஃபியை குடிடி" என்று நிதானமாக சொல்ல கொதித்துவிட்டாள் பெண்.


"டேய் லூசுபயலே… நான் என்ன கேட்டுட்டு இருக்கேன், நீ பாட்டுக்கு காஃபியை நீட்டிட்டு இருக்க… அறிவில்ல உனக்கு? இப்ப ஒழுங்கா நான் கேட்டதுக்கெல்லாம் பதில் சொல்லப் போறியா? இல்லையா?" என்று அவன் சட்டை காலரைப் பிடித்து உலுக்க அவனோ, "உனக்கு பதில் வேணும்னா இந்த காஃபியை குடி." என்று அழுத்தமாக சொல்ல, அவனை முடிந்த அளவு முறைத்தவள்,


அவன் கையில் இருந்த காஃபியை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு, "இப்ப நான் இதை குடிக்கணும்… அவ்ளோ தானே" என்றவள், அதை எடுத்து தன் இதழ்களில் வைத்து ஒரு வாய் குடித்தவள் கண்கள், மீண்டும் சூரியன் கண்ட தாமரை போல் விரித்துக் கொள்ள, அவள் மெதுவாக திரும்பி அக்னியை பார்த்தாள்.


அக்னி சுவரில் சாய்ந்து கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டபடி அவளையே பார்த்திருந்தவன், "என்ன ஆராத்யா பிரியதர்ஷினி மேடம் காஃபி எப்டி இருக்கு? அப்டியே உங்க அந்த மாமன் போடுற, காஃபி மாதிரியே இருக்கா?" என்று ஒற்றை புருவத்தை உயர்த்தியபடி கேட்க, ஆராவுக்கு நெஞ்சுக்குள் அபாய மணி அடித்தது.


"நீ… நீ யாரு? ஆதி மாமாவ உனக்கு முன்னயே தெரியுமா? அவருக்கும் உனக்கும் சண்டையா, அதான் இப்டி எல்லாம் பண்றீய?" என்றவளுக்கு பயத்தில் இதயம் அதிவேகமாக துடித்தது.


அக்னி மெல்ல அவள் அருகில் வந்து அவள் கையில் இருந்த காஃபி கப்பை வாங்கிப் பார்த்தவன், "ம்ம்ம் குட்… நான் சொன்ன மாதிரி நீ காஃபியை குடிச்சிட்ட, சோ இப்ப நான் சொன்ன மாதிரி நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன்." என்றவன் கைகளைக் கட்டிக்கொண்டவன், "இன்னைக்கு டேட் 20, நீ இங்க வந்து ஒரு நாள் முடிஞ்சு போச்சு, உன் சோ கால்ட் ஆதிமாமா இங்க இல்ல… வரவும் முடியாது" என்றவன் குரலில் அத்தனை வன்மம். "ம்ம்ம் அப்றம் என்ன கேட்ட?" என்று ஒரு நிமிடம் யோசிப்பது போல் நடித்தவன், "ஆஹான்… உன் கல்யாணம்…" என்றபடி அவள் அருகில் வந்து அவள் கண்ணைப் பார்த்து, "அது நின்னு போச்சு" என்று சொல்ல ஆராத்யாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய தொடங்கிவிட்டது.


"ம்ம்ம் அப்றம் என்ன கேட்ட, நீ எங்க இருக்க? நான் இங்க எப்டி வந்தேன்னு தானா" என்றவன் அந்த அறையின் திரைச்சீலைகளை விலக, ஆராத்யாவின் கண்கள் மீண்டும் ஒருமுறை அதிர்ச்சியில் விரிந்துகொண்டது.


"நீ இப்ப ஒரு ஐலண்ட்ல (தீவு) இருக்க, இது என்னோட ஐலண்ட். சோ நானும் இங்க இருக்கேன்" என்று வெகு சாதாரணமாக சொல்ல, ஆராத்யாவுக்கு உயிரே போய்விட்டது.


அந்த ஜன்னல் வழியே எங்கு பார்த்தாலும் வெறும் மரங்களும், அதைத்தாண்டி கடல் மட்டுமே தெரிய அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அவனையே அதிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள் ஆராத்யா.


"நீ கேட்ட லாஸ்ட் கொஸ்டின்… அந்த ஆதிஷ்வரனை எனக்கும் தெரியுமா? அவனுக்கும் எனக்கும் சண்டையா? அதுக்கு பழிவாங்க உன்னை தூக்கினேனான்னு…" என்றவன் அவளைப் பார்த்து ஆழந்த மூச்செடுத்து, "நீ சொன்னதில் பாதி உண்மை இருக்கு." என்றவன் அந்த அறையின் வாசல் நோக்கி செல்ல,


"என்னை என்ன செய்யப்போற? நீ என்னை கடத்திட்டு வந்தது மட்டும் ஆதிமாமாக்கு தெரிஞ்சுது…" என்றவள் சொல்ல வந்த வார்த்தைகள் முடியும் முன், அவன் பார்த்த பார்வையில் கப்பென்று இதழ்களை இறுக்கி மூடிக்கொள்ள, அவளை தீப்பார்வை பார்த்தவன், "இனி ஒரு அடி அந்த ஆதி உன்னை நோக்கி எடுத்து வச்சாலும், அடுத்த செகண்ட் அவனை உயிரோட புதைச்சிடுவேன்." என்று கர்ஜித்தவன் குரலின் தொனியே சொன்னது அவன் சொன்னதை கண்டிப்பாக செய்வான் என்று.