கன்னத்தில் காதல் முத்தம் 14

 காதல் 14


ஆராத்யாவை அக்னி கடத்தி வந்து பதினைந்து நாட்கள் வேகமாக ஓடி இருந்தது. அக்னியை அடியோடு வெறுத்த ஆராத்யா, இந்த இரு வாரத்தில் தன் சிறுவயது நண்பன் தேவ்வை வெறுக்க முடியாது தவித்து தான் போனாள்.


அவனின் அவள் மீதான காதலும் அன்பும் அவளை ஆழிப்பேரலை போல் சுழன்று அடித்தது. அவளின் சின்ன சின்ன தேவைகளை கூட அவள் வாய் திறந்து சொல்லும் முன் அவள் முகத்தை பார்த்தே செய்து முடித்திருப்பான் அவன்.


அவனுடன் இருந்த இந்த நாட்களில் அவன் கொடுக்கும் கன்னத்து முத்தத்தை தவிர, அவனிடம் எந்த ஒரு தவறான நடவடிக்கையும் அவள் அவனிடம் இதுவரை கண்டதில்லை.


அந்த முத்தம் கூட தனக்கு பிடித்த குழந்தையை பிடித்து வைத்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுப்பது போல் வெறும் அன்பு மட்டுமே தான் இருக்குமே தவிர எந்த கெட்ட எண்ணமும் இருக்காது.


அவன் செயலில் என்ன… அவன் பார்வையில் கூட காமம் கலக்காது கண்ணியமாக இருக்க, அவனின் இந்த நடவடிக்கைகள் ஆராத்யாவின் மனதை சற்று அசைத்து தான் பார்த்தது. அதுவும் மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு அவளைத் தடுமாற செய்திருந்தது.


அன்று காலை பத்து மணியாகியும் அறையை விட்டு வெளியே வராமல் இருந்தாள் ஆராத்யா. அவள் வருவாள் என்று வேகு நேரம் காத்திருந்த அக்னிக்கு ஒரு வேளை அவளுக்கு உடல்நிலை எதுவும் சரியில்லையோ என்ற எண்ணம் வந்த அடுத்த வினாடி, எதைப் பற்றியும் யோசிக்காமல் அவள் அறைக்குச் செல்ல, அந்த அறை உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.


இரண்டு மூன்று முறை கதவை தட்டிப் பார்த்தவன் அவள் கதவை திறக்காமல் போக, வேகமாக தன் அறைக்கு சென்று தன்னிடம் இருந்த அந்த அறையின் மற்றொரு சாவியை எடுத்து வந்தவன் இதயம் ஹை டெசிமல்ல துடிக்க, பயத்தில் நடுங்கும் அவன் கைகளால் சாவி துவாரத்தின் சாவியை சரியாக பொருத்த கூட முடியாமல் தவித்தவன்,


எப்படியோ கதவை திறந்து உள்ளே செல்ல, அங்கு ஆராத்யா மெத்தையில் சுருண்டு படுத்துக் கிடந்தாள். வெட்டி வெயிலில் போட்ட மலர் கொடி போல் வதங்கி இருந்தவளை பார்த்த அக்னிக்கு உயிரே நின்று விட்டது.


"தியா" என்று கத்தியபடி பதட்டமாக ஓடிவந்து கட்டிலில் அமர்ந்து அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டவன், "தியா… தியா" என்று அவள் கன்னத்தை தட்டியவனுக்கு அவள் உடல் நெருப்பாக கொதிப்பது தெரிந்தது. அவன் தொட்டதில் கஷ்டப்பட்டு மெல்ல கண்விழித்தாள் அவள்.


"எ… என்னடா ஆச்சு உனக்கு? உடம்பு நெருப்பா கொதிக்கிது…" என்று கேட்டவன் குரலில் அத்தனை பதட்டம் என்றால், அதைவிட அதிகமாக அவன் கண்ணில் தெரிந்தது என்ன? அது வலி! தன் உயிரானவளுக்கு எதுவும் ஆகிவிடுமே என்ற உயிர்வலி அது! அவன் கண்களை இமைக்காமல் பார்த்த ஆராத்யாவுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது.


அடுத்த நொடி தான் இருக்கும் நிலை உணர்ந்து, அவன் மார்பில் கைவைத்து அவனை தள்ளிவிட்டு அவள் எழும்ப முயல, "ஏய் என்னடி பண்ற? என்னாச்சுடி உனக்கு?" என்று கேட்டவன் அப்போது தான் அவள் படுக்கையை கவனித்தான். அவள் படுத்திருந்த படுக்கையில் குருதி கறைப்படிந்திருக்க, அவனுக்கு புரிந்துவிட்டது அவளுக்கு என்ன என்று.


ஆரா மீண்டும் அவனை விட்டு விலக பார்க்க, இப்போது முன்பைவிட அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டான் அவளின் தேவ்.


அவள் மெல்லிய குரலில், "என்னை விடு தேவ்." என்று சொல்ல, அவள் தாடையை பிடித்து நிமிர்த்தி அவள் முகம் பார்த்து, "விட முடியாது தியா…" என்றான் அழுத்தமான குரலில்.


"ப்ளீஸ், என்னை தொடத… எனக்கு ஒரு மாதிரி இருக்கு… நீ… நீ வெளிய போ" என்றவள் குரலில் அத்தனை வேதனை. ஒரு ஆடவன் முன் இந்த நிலையில் இருப்பது நினைத்து கூனிக்குறுகி போனது அவன் மனம்.


"ஏன் தியா, ஏன் நான் போகனும்? ஒஒஒ… என்னடா இவன் முன்னாடி இப்டி இருக்கோமேன்னு யோசிக்கிறியா?" என்று கேட்க, அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது.


அவள் கண்ணீரை துடைத்து விட்ட தேவ், "லிசன் தியா இதெல்லாம் நேச்சுரல்..‌. உடலில் நடக்கும் இயல்பான ஒரு விஷயம். இது சரியா நடக்காம இருந்தா தான் வருத்தப்படனும்..‌‌. அதவிட்டு இத பத்தி அசிங்கமோ அவமானமோ பட இதுல எதுவும் இல்ல… புரிஞ்சிதா?" என்றவன் மெல்ல அவளைத் தூக்கிக் கொண்டு போய் குளியல் அறையில் விட்டவன்,


"உனக்கு ஃபீவர் இருக்கு தியா, சோ குளிக்க வேணாம். ஹாட் வாட்டர்ல உடம்பை துடைச்சிக்கோ போதும்." என்றவன், ஹீட்டரை போட்டு விட்டு அவளுக்கு தேவையான மாற்றுடையோடு அவளுக்கு தேவையான சானிட்டரி நாப்கின்களையும் எடுத்து வந்து குளியலறைக்குள் வைத்து செல்ல, ஆராத்யா விழிவிரிய அவன் செயல்களை ஒரு மிரட்சியோடு பார்த்துக் கொண்டு இருந்தாள்.


அவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வருவதற்குள் இரத்த கறை படிந்திருந்த கட்டிலின் மேல் துணி மற்றும் தலையணையின் உறைகளை மாற்றி இருந்தவன், அந்த அறையையும் சுத்தமாக பெருக்கி விட்டு தரையை துடைத்துக் கொண்டிருக்க, அவன் செயலை ஒரு அதிர்வோடு கண் இமைக்காமல், நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டு அப்படியே குளியலறை வாசலில் நின்று கொண்டிருந்தாள் ஆராத்யா.


அக்னி அறையைத் துடைத்து முடித்து திரும்பி பார்த்தவன், "தியா வந்திட்டீயா?" என்றபடி அவள் அருகில் வந்தவன், கைத்தாங்கலாக அவளை அழைத்து வந்து படுக்கையில் படுக்க வைத்துவிட்டு, வெளியே சென்று திரும்பியவன் கையில் அவளுக்காக காலை உணவு இருந்தது.


அவள் இமைக்காமல் அவன் முகத்தையே பார்த்தபடி இருக்க, "தியா" என்று அழைத்த அக்னியின் குரலில் கண் சிமிட்டி உணர்வுக்கு வந்தவள், அவன் கையில் இருந்த உணவு தட்டை வாங்க கையை நீட்ட, பாவம் அவளால் கையை உயர்த்த கூட முடியாத அளவுக்கு அவள் உடல் பலவீனமான இருந்தது.


அதை புரிந்துக் கொண்டவன், "இரு தியா நானே தரேன்" என்றவன் உணவை எடுத்துக் கொண்டு அவள் வாயருகில் செல்ல, ஒரு வினாடி அவனை உற்று பார்த்தவள், எதுவும் சொல்லாமல் வாயை மட்டும் திறக்க, அவன் தன் வேலையை தொடர்ந்தான்.


அவள் மெதுவாக உண்ண, அதற்கு தகுந்தவாறு பொறுமையாக கொஞ்ச கொஞ்சமாக அவளுக்கு முழுவதையும் ஊட்டி முடித்த அக்னி, அவளுக்கான மாத்திரைகளையும் அவள் வாயில் போட்டு தண்ணீரை புகட்டி விட்டு அவளை படுக்கையில் ஒழுங்காக படுக்க வைத்துவிட்டு, "நல்லா தூங்கு… தூங்கி எழுந்தா எல்லாம் சரியாகிடும்" அவள் உச்சந்தலையில் மெதுவாக தன் இதழ்களை பதிக்க ஆராத்யா மெல்ல கண் மூடிக்கொண்டாள்.


மதியம் போல் அவளை எழுப்பிய அக்னி, அவளுக்கு நன்கு குழைந்திருந்த ரசம் சாதத்தை, அவள் மறுத்தும் கேட்காமல் அவனே ஸ்பூனில் அவளுக்கு ஊட்டிவிட்டவன், ஈரத் துணியால் அவள் வாயைத் துடைத்துவிட்டு, மாத்திரையை கொடுத்து மீண்டும் அவளை படுக்க வைத்தான். இரவும் இதேபோல் தொடர்ந்தது.


ஆறுமணி நேரம் நன்றாக தூங்கி எழுந்த ஆராத்யா மெல்ல கண்களை திறந்து பார்க்க, அந்த அறை இருட்டாக இருந்தது. இரவு விளக்கின் வெளிச்சத்தில் மெல்ல திரும்பி அவள் கடிகாரத்தை பார்க்க அது இரவு மணி இரண்டு என்று காட்டியது.


இப்போது காய்ச்சல் வெகுவாக குறைந்திருக்க, உடல் மட்டும் அசதியாக இருந்தது. இழுத்து மூச்சு விட்டபடி மெல்ல திரும்பிப்படுத்தவள் அதிர்ந்து எழுந்து அமர்ந்தாள். கட்டில் அருகில் தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த அக்னியை பார்த்து.


அவள் அசைவில் சட்டென எழுந்த அக்னி, "என்ன தியா? என்ன வேணும்? தண்ணி வேணுமா? எதாவது சாப்டுறீயா?" என்று கேட்டுக்கொண்டு இருந்தவனை விழி விரிய பார்த்துக் கொண்டிருந்த ஆராத்யா, மெல்ல இல்லை என்று தலையாட்ட, அக்னி ஒரு நிமிடம் யோசித்தவன், "ரெஸ்ட் ரூம் போணுமா தியா" என்று கேட்க, அவள் "ம்ம்ம்" என்றாள் மெதுவாக.


"இதுக்கு எதுக்கு தியா இவ்ளோ தயக்கம்?" என்றவன் அடுத்த நொடி அவளை கைகளில் ஏந்தி கொண்டு போய் குளியலறையில் விட்டவன், அவள் வரும் வரை காத்திருந்து மீண்டும் அவளை தூக்கிக்கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்து போர்வையால் போர்த்திவிட்டவன், "நான் இங்க தான் இருப்பேன் தியா. எதாவது வேணும்னா என்னை எழுப்பு, இப்டி தயங்கி உக்காந்துட்டு இருக்காத" என்றவன் அவள் கட்டிலின் அருகில் ஒரு நாற்காலியைப் போட்டு அவளை பார்த்தபடி அமரந்துவிட, ஆராத்யாவுக்கு புரிந்துவிட்டது இனி இவன் தூங்க மாட்டான் என்று. அவனை மிருதுவாக ஒரு பார்வை பார்த்தவள் கண்களை மூடிக்கொண்டாள்.


மறுநாள் காலை கண்விழித்த தியா பார்வையில் முதலில் படிந்தது, அவள் முகத்தை பார்த்தபடி அமர்ந்திருந்த அக்னியின் முகம் தான்.


"தியா இப்ப எப்டி இருக்கு?" என்று கேட்டபடி அவள் நெற்றியில் கைவைத்து பார்க்க, அவளுக்கு காய்ச்சல் முழுதாக விட்டிருந்தது. "தேங்க் காட், தியா உனக்கு ஃபீவர் இல்ல…" என்றவன் முகத்தில் அத்தனை நிம்மதி.


"சரி வா தியா ரெப்ரெஷ் பண்ணிட்டு வந்து டிபன் சாப்பிடு" என்றவன் அவளை கைத்தாங்கலாக குளியலறையில் கொண்டு விட்டான். பத்து நிமிடத்தில் அவள் முகம் கழுவி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வர, அவளை மெல்ல சமையலறைக்குள் அழைத்துச் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தான் அக்னி.


"டூ மினிட்ஸ் தியா" என்றவன் அவளுக்கு சூடான பாலும் இடியாப்பமும் கொடுக்க, தியா முகம் அஷ்டகோணலாக நெளிந்தது, அதைப் பார்த்து லேசாக சிரித்த அக்னி, "உனக்கு இடியாப்பம் புடிக்காதுன்னு தெரியும்டா… ஆனா காய்ச்சல் இருக்கும் போது இப்டி தான் சாப்டனும். அப்ப தான் ஈசியா டைஜஸ்ட் ஆகும்" என்றதும் வேண்டா வெறுப்பாக அதை முழுங்கி வைத்தாள் அவள்.


அவள் சாப்பிட்டு முடித்ததும் அவளுக்கு தேவையான மருந்தை கொடுத்த அக்னி, "நீ நல்லா ரெஸ்ட் எடு தியா… ஈவினிங் போல நம்ம அப்டியே வெளிய ஒரு வாக் போய்ட்டு வரலாம்… உனக்கு கொஞ்சம் பெட்டரா ஃபீல் ஆகும்" என்றவனை விசித்திரமாக பார்த்தாள் ஆராத்யா.


அவள் பார்வையின் அர்த்தம் புரிந்த அக்னி, " என்னாடா என்னமோ இவனோட நம்ம ஹனிமூன் வந்த மாதிரியில்ல இவன் பேசிட்டு இருக்கான். எவனாவது கடத்திட்டு வந்தவளை வெளிய கூட்டி போவானான்னு தானா யோசிக்குற?" என்று அவள் நினைத்ததை சரியாக கணித்த அக்னி,


அவள் கன்னத்தை தட்டி, "போடி… போ. எதையும் யோசிக்காம நல்லா தூங்கு போ" என்றபடி அவளை படுக்க வைத்தவன், அவள் தூங்கிய பின்னரே அந்த அறையை விட்டு சென்றான்.


அவன் அறையை விட்டு சென்றதும் மெல்ல இமைகளை திறந்த ஆராவின் கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் வழிந்து அவள் கன்னத்தில் இறங்கியது. அக்னியின் ஒவ்வொரு செயலும் ஆராவின் மனதை வெகுவாக பாதித்தது.


அவனின் மீது அவளுக்கு கோவம், எரிச்சல், ஆத்திரம் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதையும் முழுதாக அவன் மீது காட்ட முடியாதபடி அவன் அன்பும் அவளை பலவீனப்படுத்தியது.


அவன் தொடுதல் அவளுக்கு பிடிக்கவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை அவன் தொடுதல் அவளுக்கு அருவருக்கவில்லை என்பதும் தான். அது ஏன்? என்று அவளுக்குமே புரியவில்லை. ஒரு வேளை காமம் கலக்காத அவன் ஸ்பரிசம் அவளுக்கு அருவருக்கவில்லை போல!


அன்று மாலை அவன் சொன்னது போல் அவளை வெளியே அழைத்துச் சென்றான் அக்னி. இரண்டு பக்கமும் தென்னைமரம் வரிசை கட்டி நிற்க சற்று தொலைவில் இருந்து வந்த கடல் காற்று அந்த இடத்தை குளுமையாக்க, அந்த சாலையில் அக்னி அருகில் மெதுவாக சுற்றபுறத்தை வேடிக்கை பார்த்தபடி நடந்துக் கொண்டிருந்தாள் அவள்.


"இப்ப உடம்புக்கு எப்டி இருக்கு தியா?" என்று கேட்டவனை திரும்பிப் பார்த்தவள், "ம்ம்ம்" என்று மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் வேடிக்கை பார்க்க தொடங்கிவிட்டாள்.


கொஞ்ச தூரம் நடந்தார்கள், "போதும் தியா, உனக்கு கால் வலிக்கப்போகுது, வா அங்க உக்காரலாம்" என்று அங்கிருந்த கல் மேடையில் இருவரும் அமர்ந்தனர்.


"என்னாச்சு தியா? ஏன் ஒரு மாதிரி இருக்க, உடம்புக்கு முடியலயா டா?" என்று வாஞ்சையாக கேட்வனை வினாடிக்கும் அதிகமாக நேரம் இமைக்காமல் பார்த்தவள், "உனக்கு ஆதி மாமாவை இப்பவும் புடிக்காது இல்ல தேவ்?" என்று கேட்க, அவன் தலை 'ஆமாம்' என்று ஆடியது.


"சின்ன வயசில் நடந்த பிரச்சினைக்கு இப்பவும் நீ அவரை வெறுக்குறீய?"


"எப்ப நடந்தா என்ன தியா? எனக்கு அவனை புடிக்கல அவ்ளோதான்…" என்றவன் குரலில் அத்தனை வெறுப்பு.


அவன் கண்ணைப் பார்த்து, "அப்ப மாமாவை பழிவாங்கி ஊர் முன்னாடி அவரை அவமானப்படுத்த தான், கல்யாணத்தன்னைக்கு என்னை கடத்துனியா தேவ்? அதுக்கு முன்னாடி ரெண்டு மூணு தடவை நம்ம மீட் பண்ணி இருக்கோம் தானா? அப்பவே ஏன் நீ யார்னு சொல்லலை? ஏன் அப்பவே என்னைத் தூக்கிட்டு வரல?" என்று கேட்டவளை ஆழமாக பார்த்த அக்னி, "நான் அவனை பழிவாங்கவோ இல்ல அசிங்கப்படுத்தவோ நினைச்சிருந்தா, அதை என்னால சொடுக்கு போடும் நேரத்தில் செஞ்சிருக்க முடியும் தியா." என்றவன் இழுத்து மூச்சு விட்டு தன்னை அடக்கிக் கொண்டு, "உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கும் யாரையும் தான் சும்மா விடமாட்டேன் தியா… அவன் அப்பவும் அதைதான் செஞ்சான், இப்பவும் கல்யாணம் பண்ணி உன்னை என்கிட்ட இருந்து பிரிக்கப் பாத்தான். அதான் உன்னை தூக்கிட்டேன்" என்றவன் எழுந்து கொள்ள, தியாவும் எழுத்துக் கொண்டாள்.


வீட்டுக்கு திரும்பும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இருவரின் மனநிலையும் வேறு வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது.