கன்னத்தில் காதல் முத்தம் 13

 காதல் 13


அக்னியையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஆராத்யா, 'எவ்ளோ பெருசா வளர்ந்திட்டான்' என்று நினைத்த மறு நொடி, அவனை நெருங்கி வந்தவள், கண்ட இடத்தில் அவனை சரமாரியாக அடித்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் அவள் கைகளைத் தன் கை கொண்டு இறுக்கிப் பிடித்திருந்தான் அக்னி.


"ஏன்டி இப்ப என்னை அடிக்கிற?" என்று கோவமாக கேட்க, அவள் புசு புசு என்று அனல் மூச்சு விட்டபடி, "உன்னை அடிக்காம வேற என்னடா செய்யமுடியும்? எப்பவோ சொன்னதை மனசுல வச்சிட்டு, பைத்தியம் மாதிரி இப்ப என்னை கடத்திட்டு வந்திருக்கீயே? உன்னை அடிக்காம பின்ன கற்பூர ஆரத்தி காட்டுவாங்களா?" என்றவள் கண்கள் கோவத்தில் சிவந்தது.


"எப்ப சொன்னா என்னடி? நீ சொன்னது உண்மை தானே? அதான் உன்னை கல்யாணம் பண்ணேன்" என்றவன் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைத்தாள் அவள்.


"லூசு பயலே… அப்ப எனக்கு வெறும் பத்து வயசு டா… நான் சொன்ன வார்த்தையோட அர்த்தம் என்னனு புரியாம, அம்மா இல்லயேன்னு அழுதிட்டு இருந்த உன்னை சமாதானம் பண்ண, எப்பவும் உன் கூட இருக்கேன்னு சொன்னேன்.


அதுக்கு என்னை கடத்துவியா? அதுவும் எனக்கு கல்யாணம் ஆகாம இருந்த கூட பரவாயில்ல, கல்யாணம் ஆகி புருஷன் இருக்க பொண்ண போய் இப்டி கட்த்திட்டு வந்து தாலி கட்டி இருக்கீயே? உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லயா? யோசிக்கவே மாட்டியாடா?"


என்றவள் கால்மடக்கி கீழே உட்கார்ந்து உடைந்து வாய்விட்டு அழ, அவள் கண்ணீரை பார்த்த அக்னிக்கு உள்ளுக்குள் இதயத்தில் சுருக்கென்று வலித்தது. அவளை கொஞ்ச நேரம் தனியாக விட்டால் நல்லது என்று நினைத்தவன் அங்கிருந்து செல்ல, அவளின் நினைவுகள் ஆராத்யா அவனுக்கு தியாவாகவும் அக்னி அவளுக்கு தேவ்வாகாவும் மாறிய நாளைக்கு பயணித்தது.


அப்போது ஆராத்யா அவளின் தந்தையின் சொந்த ஊரில் தாய் தந்தையுடன் வசித்து வந்தாள். அது கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் நடுத்தரமாக இருந்த ஊர்.


ஆராத்யா பத்து வயதை நெருங்கி இருந்த சமயம், ஒரு நாள் தன் வீட்டின் பின்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தவள் காதில் யாரோ அழும் சத்தம் கேட்க, 'என்ன சத்தம் இது?' என்று யோசித்தபடி ஆரா சுற்றி தேட, அங்கிருந்த ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து கலங்கிய கண்களுடன் வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான் அக்னி.


மெல்ல அவன் அருகில் வந்து அவனை இமைகள் சிமிட்டி பார்த்த ஆரா, "யாரு நீ? நான் இதுக்கு முன்ன இங்க உன்னை பாத்ததே இல்லயே? ஏன் அழுதுட்டு இருக்க? அம்மா திட்னாங்களா? அதான் அழுகுறீயா?" என்று இடைவெளியே இல்லாமல் கேள்வி மேல் கேள்வியாக கேட்டவளை, கலங்கிய விழிகளை துடைத்தபடியே நிமிந்து பார்த்தவன், "இல்லை" என்றான் வெறுமையான குரலில்.


"அம்மா தான் திட்டலீயே அப்றம் எதுக்கு அழுகுற?" என்று கேட்க, தலையை குனிந்து கொண்டவன், "எனக்கு பசிக்கிது" என்றான் மெல்லிய குரலில்.


"அய்யோ! பசிச்சா சாப்டனும், இதுக்கு போய் யாராச்சும் இப்பிடி அழுவாங்களா?" என்று பெரிய மனுஷி போல் தன் தலையில் அடித்துக் கொண்டவள், அவன் கையைப் பிடித்து, "வா என்னோட" என்று தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்.


"ம்மா… ம்மா" என்று கத்திக்கொண்டே வீட்டுக்குள் வந்தாள் ஆராத்யா.


"ஹான் இதோ வரேன் ஆரு" என்றபடியே வெளியே வந்தார் பவித்ரா.


"யாரு ஆரும்மா இந்த பையன்?" என்று ஆராவின் அருகில் இருந்தவனை பார்த்துக் கேட்க, "ம்மா இந்த பையனை பின்னாடி வீட்ல ஒரு மரம் இருக்கில்ல… அதுக்கு கீழ தான் பாத்தேன். அங்கு உக்காந்து அழுதுட்டு இருந்தான், "ஏன் அழுகுறேன்னு கேட்டேன், பசிக்கிதுன்னு சொல்றான்… ம்மா நீயே சொல்லு பசிச்சா யாராச்சும் அழுவாங்களா? அம்மாகிட்ட சொன்ன சாப்பாடு தரப்போறாங்க… அதுக்கு போய் சின்ன பாப்பா மாதிரி அழுதுட்டு இருக்கான்." என்று சிரிக்க, வாடி இருந்த அவன் முகத்தைப் பார்த்து அருகில் வந்த பவித்ரா, அவன் தலையை வருடி, "வா…" என்று அழைத்துச் சென்றவர் முதலில் அவனுக்கு உணவை பரிமாறினார்.


அவன் அவசர அவசரமாக உண்பதை பார்த்த பவித்ரா, 'பாவம் ரொம்ப பசி போல, சாப்டு எத்தனை நாள் ஆச்சோ' என்று மனதில் நினைத்தவர், இன்னும் ரெண்டு இட்லியை எடுத்து வைக்க, அவன் வேக வேகமாக உண்டு கொண்டிருந்தான்.


"ம்ம்ம்… அவ்ளோதான் சரியா போச்சு. இனிமே பசிச்சா உங்க அம்மாகிட்ட சொல்லு, இப்டி அழாத" என்ற ஆராவை நிமிர்ந்து பார்த்த அக்னி, "அம்மா இல்ல, நேத்து காலையில ஒரு ஆக்சிடென்ட்ல செத்துப் போய்ட்டாங்களாம், பாட்டி சொன்னாங்க" என்று மெதுவாக சொன்னவன் மீண்டும் உண்ண ஆரம்பிக்க, பவித்ராவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.


ஆரா அவனையே இமைக்காமல் பார்த்தவள் என்ன நினைத்தாளோ, "இனிமே உனக்கு பசிச்சா என்கிட்ட சொல்லு, நான் உனக்கு சாப்பாடு தரேன்" என்று சொல்ல, சரி என்று தலையாட்டினான் அக்னி.


ஆராவின் வீட்டின் பின்னால இருக்கும் பங்களா தான் அக்னியின் பாட்டி வீடு. ரெண்டு நாட்களுக்கு முன் பாட்டி வீட்டுக்கு தன் தாயோடு வந்திருந்தான் அக்னி… அங்கு வந்த மறுநாள் ஒரு வேளையாக வெளியே சென்ற அக்னியின் தாய் ஒரு விபத்தில் இறந்துவிட, அக்னியின் உலகமே நின்று விட்டது போல் ஆகியது.


விஷயம் தெரிந்து ஓடி வந்த அக்னியின் தந்தை ஹாஸ்பிடல் நோக்கி ஓட, மகள் இறந்த செய்தி கேட்ட அக்னியின் பாட்டி மயங்கிச் சரிய, மொத்த வீடும் பரபரப்பானது.


ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிந்தனையில் இருக்க, அக்னியை பற்றிய சிந்தனை யாருக்கும் வரவில்லை. தாய் இருந்தால் பசியென்று வாய்திறந்து கேட்கும் முன் உணவோடு முன் நிற்பாள். இப்போது அவள் இல்லாமல் போக‍, அவன் பசியோடு நின்றான்.


தாய் இல்லாத வலி ஒரு பக்கம், பசி ஒரு பக்கம். முந்தய நாள் இரவு தாயின் கையால் சாப்பிட்டது. அதன் பின் அவனை சாப்பிட கேட்கவும் யாரும் இல்லை , சாப்பிட கொடுக்கவும் யாருமில்லை. அந்த வலியோடு மரத்தின் கீழ் உட்கார்ந்து வானத்தை பார்த்து அங்கு தன் தாய் இருப்பதாக நினைத்து அழுதுக் கொண்டிருந்த அக்னியிடம், "ஏன் அழற?" என்று அக்கறையுடன் கேட்ட ஆராவை பதினைந்து வயதில் இருந்த அவனுக்கு பிடித்துத்தான் போனது.


அடுத்து வந்த சில நாட்கள் அக்னியின் தினத்தின் பாதி நேரம் ஆரா வீட்டில் தான் இருந்தான்.


அந்த நேரத்தில் சரியாக அங்கு வந்து சேர்ந்தான் ஆதிஷ்வரன்.


இதுவரை தன்னோடு மட்டுமே நெருங்கிப் பழகிய தன்னுடைய ஆரா, அக்னியுடன் தோழமையாக பழகுவது அவனுக்கு ஏனோ எரிச்சலை கொடுத்தது. ஆராவும் அக்னியும் விளையாடும் சமயங்களில் அத்தை அழைப்பதாக பொய் சொல்லி வலுக்கட்டாயமாக ஆராவை கூட்டிச் செல்பவன் அக்னியை முறைக்கவும் தவறுவது இல்லை.


இவர்கள் நாட்கள் இப்படியே சொல்ல ஒரு நாள் ஏதோ விஷயத்தில் அக்னி, ஆதி இருவரும் அடித்துக்கொள்ள பவித்ரா தான் இடையில் வந்து இருவரையும் பிரித்துவிட்டார். தவறு ஆதி மேல் இருக்க, பவித்ரா அவனை கண்டிக்க, ஆதி அக்னியை வெறுப்பாக ஒரு பார்வை பார்க்க, அக்னியோ அவனை எரித்து விடுவது போல் முறைத்தான்.


ஏனோ இருவருக்கும் அந்த இளம் வயதிலேயே ஒருவரை ஒருவருக்கு பிடிக்காமல் போனது தான் பின்னாளில் ஆராத்யா வாழ்க்கையை புரட்டிப் போட்டது.


அன்றைய நாள் அக்னியை பார்க்க வந்த ஆரா, "சாரிடா… மாமா உன்னை அடிச்சிதுக்கு" என்று அடிபட்ட இடத்தை தடவியபடி சொல்ல, "பரவாயில்ல தியா… நீ ஃபீல் பண்ணாத." என்றான் பெரிய மனிதன் போல்.


"மாமா ஏன் இப்டி செஞ்சாங்கன்னு எனக்கு புரியவே மாட்டேங்குது டா, உன்னை அடிச்சது மட்டும் இல்லாம, என்கிட்ட வந்து உன்னோட இனி பேசவே கூடாதுன்னு வேற சொல்லுச்சு தெரியாம?" என்றதும் அக்னிக்கு தூக்கிவாரிப் போட்டது.


"அப்ப இனிமே என்னோட பேச மாட்டீயா தியா?" என்று அழும் குரலில் கேட்டவன் தலையில் கொட்டியவள், "அதெப்படி நான் உன்னோட பேசாம இருப்பேன்? அம்மா கூட சொன்னாங்க பாவம் அக்னிக்கு அம்மா இல்ல, நீ அவனோட ஃப்ரெண்ட்டா இருன்னு… தெரியுமா?" என்று துள்ளலாக சொல்ல, "அப்ப எப்பவும் நீ என்னோட இருப்பியா தியா?" என்றான் ஆர்வமாக,


"ம்ம்ம் கண்டிப்பா இருப்பேன்" என்றாள். இவளுக்கு பின்னாளில் இவள் சொல்லும் வார்த்தையால் வரப்போகும் சோதனைகளை பற்றி அறியாமல்.


"அப்ப எனக்கு ப்ராமிஸ் பண்ணு தியா… எப்பவும் என்னை விட்டு போகமாட்டேன்னு, என்னோடவே இருப்பேன்னு ப்ராமிஸ் பண்ணு" என்று அவன் கையை நிட்ட, அவன் கையில் தன் பிஞ்சு கையை வைத்தவள், "ப்ராமிஸ்… நான் எப்பவும் என்னோட தேவ் கூட தான் இருப்பேன்… இட்ஸ் ஏ ப்ராமிஸ்" என்று சொல்ல, அக்னி முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.


"தேங்க்ஸ் தியா." என்றவன், "இனிமே நீ மட்டும் தான் என்னை தேவ்னு கூப்பிடலாம், வேற யாரும் என்னை அப்டி கூப்பிட நான் அலோ பண்ண மாட்டேன்.


அதே மாதிரி நான் மட்டும் தான் உன்னை தியானு கூப்பிடுவேன். வேற யாரும் உன்னை அப்டி கூப்டக்கூடாது அந்த பேர் சொல்லி கூப்பிட எனக்கு மட்டும் தான் ரைட்ஸ் இருக்கு ஓகே" என்று ஒப்பந்தம் வேறு நடந்தது இருவருக்குள்ளும்.


இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த சமயம் இருவருக்கும் இடையே சீனப் பெருஞ்சுவராக வந்தது ஆதிஷ்வரன் தந்தையின் மரணச் செய்தி.


தன் தங்கை பல்லவி கணவனை இழந்து தனிமரமாக ஒற்றைப் பிள்ளையுடன் நிற்பதை பார்க்க சகிக்காமல், தன் சொந்த ஊரை விட்டு தன் தங்கை வசிக்கும் சென்னைக்கே, தன் தொழிலை மாற்றிக் கொண்டு வந்துவிட்டார் ஆராவின் தந்தை.


அந்த நேரம் அக்னி தன் தந்தையுடன் படிப்பு விஷயமாக வெளியூர் சென்றிக்க, ஆரா தன் குடும்பத்தோடு ஊரை விட்டு சென்றது அவனுக்கு தெரியாமல் போனது.


இருவருக்குள்ளும் எந்த தொடர்பும் இல்லாமல் போனாலும் ஆரா, அக்னியை மறக்கவில்லை தான். பள்ளி கல்லூரியில் யாராவது அவளை தியா என்று அழைத்தால், என்னை அந்த பேர் சொல்லி அழைக்காதீர்கள் என்று சொல்லிவிடுவாள். ஏனோ அக்னியை தவிர அவளை தியா என்று வேறு யாரும் அழைப்பதை அவள் விரும்பவில்லை.


அக்னியும் அப்படியே. யாரும் அவனை தேவ் என்று அழைத்தால், "கால் மீ அக்னி" எனும் அவனின் கர்ஜனைக் குரலில், பயந்தே யாரும் அவனை அப்படி அழைப்பது இல்லை. அவன் தாய், பாட்டிக்கு அடுத்து அவனை தேவ் என்று அழைக்கும் உரிமை ஆராத்யா ஒருத்திக்கு மட்டுமே உண்டு என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.


"கடவுளே விவரம் தெரியாத வயசில் நான் சொன்னதை வச்சி இப்ப என்னை தூக்கிட்டு வந்திருக்கானே இந்த அறிவுகெட்ட தேவ்… இவனுக்கு என்ன சொல்லி என்னை புரிய வைப்பேன். எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுடா எருமைனு அவன் தலையில் கொட்டி சொல்லனும்னு போல இருக்கு… ஆனா, அதை புரிஞ்சிக்கும் நிலையில் அவன் இல்லயே, இனிமே நான் என்ன செய்வேன்" என்று புலம்பியவளுக்கு அக்னியை நினைத்து பயம் இருந்தாலும், தன் நண்பன் தேவ்‌வை நினைக்கும் போது உள்ளுக்குள் ஒரு சின்ன நம்பிக்கை.


அவனால் தனக்கும் தன் பெண்மைக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்று. ஆனால், அவள் நினைப்பு பொய்யானால்… அவள் நம்பிக்கை வைத்தவர்கள் தான் அவளின் வேதனைகளுக்கு காரணம் என்று தெரிந்தால் இந்த நம்பிக்கை நிலைக்குமா?