விழி வழி காதல் நுழைந்ததடி 6
விழி 6
ஆதர்ஷ் கேட்ட கேள்வியின் அர்த்தம் என்ன என்று புரியாமல் அவனைக் குழப்பமாகப் பார்த்த தன்வி, "நீங்க கேக்குறது எனக்குப் புரியல பாஸ்" என்றாள் அப்பாவியாக.
அழுத்தமாக இழுத்து மூச்சு விட்ட ஆதர்ஷ், "இத்தனை வருஷத்துக்கு நீ எப்பவாவது, எந்த நொடியாவது என்னை நேசிச்சு இருக்கியான்னு கேக்குறேன் தன்வி?" என்றான் தவிப்பாக.
"நீங்க எந்த அர்த்தத்தில் இதைக் கேக்குறீங்கன்னு எனக்குத் தெரியல… ஆனா, நான் உங்களை நேசிக்கிறேன் தான்" என்றவளை அதிர்ந்து பார்த்த ஆதர்ஷ், "த…தன்வி விளையாடாதடி…! இது விளையாடும் நேரம் இல்ல…" என்றவன் உடல் நடுங்கத் தொடங்கியது.
"நீ… நீ என்னை லவ் பண்றியா?" என்று இழுத்துப் பிடித்துக் கேட்டவன் மனது அவள் "இல்லை" என்று சொல்ல வேண்டும் என்று கடவுளிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தது.
"ஏது லவ்வாஆஆஆ…? என்ன சொல்றீங்க நீங்க? அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நான் உங்களை நேசிக்கிறேன்னு சொன்னேன் தான். ஆனா, அதுக்கு அர்த்தம் லவ் ஒண்ணும் இல்ல, எனக்கு என் ஆதுவைப் புடிக்கும். தாத்தாவை நேசிக்கிற மாதிரி நான் என் ஆதுவையும் நேசிக்கிறேன் அவ்ளோதான்... இதுல லவ் எங்க இருந்து வந்துது. முதல்ல எனக்கு லவ் எல்லாம் வரவே வராது. அதுவும் உங்க மேல… வாய்ப்பே இல்ல, என்ன பேசுறீங்க நீங்க" என்றவளை இழுத்து அணைத்தவன் அவள் தோளில் சாய்ந்து கதறி அழுது விட்டான்.
அவன் தீடிரென்று அழவும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற தன்வி, "பாஸ்… என்னாச்சு உங்களுக்கு, ஏன் இப்படி அழறீங்க? ப்ளீஸ் அழாதீங்க பாஸ். எனக்கு ரொம்பப் பயமா இருக்கு" என்று தவிக்கும் குரலில் அவள் சொல்ல, அவளை விட்டு விலகி வந்த ஆதர்ஷ் தன் கண்களைத் துடைத்துக் கொண்டவன் மனதிற்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது.
"தாத்தா சொன்ன மாதிரி எங்கே நீ என்னை விரும்பி இருப்பியோன்னு நினைச்சுப் பயந்தே போயிட்டேன்டி. நல்லவேளை நீ இல்லைனு சொல்லிட்ட" என்று நெஞ்சில் கை வைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஆதர்ஷனையே பார்த்துக் கொண்டிருந்த தன்வி, "பாஸ்… தாத்தா சொன்னதை நினைச்சுத் தான் இப்ப அழறீங்களா? இல்ல, எங்க அவர் சொன்ன மாதிரி என் கூட மேரேஜ் நடந்திடுமோன்னு பயந்து அழறீங்களா?" என்று புரியாமல் கேட்டவள்,
"பயப்படாதீங்க பாஸ், தாத்தா நமக்கு இஷ்டமில்லாத ஒண்ணைச் செய்ய மாட்டாரு. அப்படி அவர் போர்ஸ் பண்ணா, நான் வேற யாரையாவது காதலிக்குறேன்னு அவர்கிட்டப் பொய் சொல்லிடுறேன். அப்புறம் அவரு என்னை உங்களுக்குக் கட்டித் தர மாட்டாரு. அப்படி இல்லாட்டி கொஞ்ச நாள் நான் எங்கயாவது ஓடிப் போய்டுறேன்… நீங்க உங்க லவ்வரைக் கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று குழந்தை போல் சொல்பவளைக் கண்கள் கலங்கப் பார்த்தான் ஆதர்ஷ்.
"உண்மையில் நீ யாரையாவது லவ் பண்ணி இருந்தால் நல்லா இருந்திருக்கும் தன்வி. அவன் கூட உனக்குக் கல்யாணத்தை செஞ்சு வச்சு என் கடமையை முடிச்சிருப்பேன். ஆனா, நீ என்னடான்னா நாங்க பார்க்குற பையனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நிக்குற… இதை நெனச்சு உன்னை ஒழுங்கா வளர்த்திருக்கோம்னு சந்தோஷப் படுறதா? இல்ல, இப்ப இருக்கற நிலையை நினைச்சு வருத்தப் படுறதானு தெரியலடி" என்றவன் அப்படியே தொய்ந்து அமர்ந்துவிட, அவன் அருகில் வந்த தன்வி அவன் தலை முடியை மெதுவாக வருடிவிட, ஆதர்ஷ் மெல்லக் கண்களை மூடிக் கொண்டான்.
சில நிமிடங்கள் இருவரும் அப்படியே இருக்க, "பாஸ், உங்களுக்கு என்ன பிரச்சனை? ஏன் ஒரு மாதிரிப் பேசுறீங்க? எங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டி வந்திடுமோன்னு பயமா இருக்கா உங்களுக்கு?" என்றவள் உடனே, "ஆமா, அது தான் உண்மை. நீங்க யாரு…? நான் யாரு…? தாத்தா இப்படிச் சொல்லி இருக்கக் கூடாது தான். என்ன இருந்தாலும் நான் உங்க வீட்டு டிரைவரோட பொண்ணு தான? என்னைப் போய் உங்களுக்குக் கல்யாணம் செய்ய நினைக்கிறது தப்பு தான். எனக்கு அந்தத் தகுதியும் தராதரமும் இல்ல தான்" என்று ஆரம்பிக்கும் போதே, "ஏய்" என்று கோவமாக வந்தது ஆதர்ஷின் குரல்.
"யாருக்குடி தகுதி இல்ல…? நீ என் தேவதைடி…! உன்னைக் கட்டிக்கக் கொடுத்து வச்சிருக்கனும். இன்னொரு தடவை இப்படிப் பேசினா வாயை உடைச்சிடுவேன்." என்றவன் கோவத்தில் சில நிமிடங்கள் வாயை மூடிக் கொண்டாள் தன்வி.
"நான் உங்க ஏஞ்சல் தானே பாஸ்? அப்ப உங்க பிராப்ளம் என்னன்னு என்கிட்டச் சொல்லுங்க பாஸ்… என்னால அதைச் சரி பண்ண முடியாமப் போனாலும் ஜஸ்ட் உங்க மனசுக்கு ஆறுதலாவது கிடைக்கும் இல்ல… சொல்லுங்க பாஸ், நீங்க யாரையும் தாத்தாவுக்குப் புடிக்காத வீட்டுப் பொண்ணை ஏதும் லவ் பண்றீங்களா என்ன? அதான் தாத்தாகிட்டச் சொல்ல பயந்து கல்யாணம் வேணாம்னு சொல்றீங்களா?" என்று அக்கறையாகக் கேட்டவளை நிமிர்ந்து பார்த்த ஆதர்ஷ் இல்லை என்று தலையாட்ட, "அப்புறம் என்ன பாஸ் பிரச்சினை?" என்றாள் இயலாமையாக.
ஆதர்ஷ் ஒரு நிமிடம் எதையோ யோசித்தவன், "நான் வேற யாரையும் லவ் பண்றேன்னு சொன்னா நீ என்ன செய்வ தன்வி?"
"இதென்ன கேள்வி பாஸ், உடனே தாத்தாகிட்டப் பேசி உங்கக் கல்யாணத்தை முடிச்சிட மாட்டேன்?" என்றாள் ஆர்வமாக.
"தாத்தா என் காதலை மறுத்தால் நீ என்ன செய்வ?"
"அவர் ஏன் அப்படிச் சொல்லப் போறாரு… அதான் சொன்னாரே, உங்க விருப்பம் போலக் கல்யாணம் செய்துக்கலாம்னு" என்றாள்.
"இல்ல தன்வி, சத்தியமா தாத்தா ஒத்துக்க மாட்டார், எனக்குத் தெரியும்…" என்றவன் முகம் வெகுவாக வாடி இருக்க, தன்விக்கு ஏதோ சரியாகப் படவில்லை. பிரச்சனை அவளால் சமாளிக்க முடியாத அளவு பெரிதாக இருக்குமோ என்று உள்ளுக்குள் பயம் தோன்றினாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "பாஸ், நீங்க அப்படி யோசிக்காதீங்க, தாத்தா கண்டிப்பா உங்க விருப்பத்துக்கு எதிரா இருக்க மாட்டாரு. ஒருவேளை, உங்களுக்கு அப்படி ஒரு டிவுட் இருந்தா நீங்க எனக்கு உங்க லவ்வரைக் காட்டுங்க, நான் அவங்கிட்டப் பேசிப் பார்த்து அவங்களைப் பத்தி தெரிஞ்சிட்டு தாத்தாகிட்ட அவங்களைப் பத்தி நல்லபடியா சொல்லிடுறேன். நீங்களும் அவங்களைத் தாத்தாகிட்டக் கூட்டிவந்து காட்டுங்க… நம்ம ரெண்டு பேரும் சொன்னால் தாத்தா கண்டிப்பாக் கேப்பாரு" என்று நம்பிக்கையாகச் சொல்ல, ஆதர்ஷ் கண்களை இறுக மூடித் திறந்தவன், “இன்னும் ரெண்டு நாள் கழிச்சுப் பார்க்கலாம்" என்று சொல்லி விட்டுச் செல்ல, தன்வி தாத்தாவை எப்படிச் சம்மதிக்க வைப்பது? என்று திட்டம் போடத் தொடங்கி விட்டாள். பாவம் அவளிடம் யார் சொல்வது? இரண்டு நாள் கழித்து, ஆதர்ஷின் வார்த்தையையும் மீறி தாத்தாவிடம் ஆதர்ஷைத் திருமண செய்ய அவளே சம்மதம் சொல்லப் போகிறாள் என்றும், அதனால் ஆதர்ஷின் வெறுப்பைப் பெறப் போகிறாள் என்றும்.
அன்று காலையிலேயே பரபரப்பாக சுற்றிக்கொண்டு இருந்தாள் தன்வி. பின் இருக்காதா என்ன? இன்று ஆதர்ஷனின் காதலியைப் பார்க்கப் போகிறாளே…! அந்த நினைப்பே அவளைப் பம்பரமாகச் சுற்றித் திரிய வைத்தது. அவளின் ஆர்வத்தைப் பார்த்த ஆதர்ஷனுக்குத் தான் உள்ளுக்குள் ஏதோ ஒன்று எரிமலையாகக் குமுறிக் கொண்டு இருந்தது. நொடிக்கு ஒரு முறை, 'என் தன்வி என்னைத் தப்பா நினைச்சிடக் கூடாது கடவுளே, என்னை அவ வெறுத்திடக் கூடாது… அவ வெறுப்பைத் தாங்கும் சக்தி எனக்கில்லை கடவுளே!' என்று மனதில் புலம்பியபடியே தன்வியை அழைத்துக் கொண்டு புறப்பட்டான் ஆதர்ஷ்.
அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் முன்பு ஆதர்ஷின் கார் நின்றது. காரின் சாவியை அங்கிருந்த ஹோட்டல் வேலையாளிடம் கொடுத்துக் காரைப் பார்க் செய்யச் சொல்லிவிட்டு அவன் முன்னே செல்ல அவன் பின்னால் வந்த தன்வி, "ஏன் பாஸ் ஹோட்டல் கூட்டிட்டு வந்திருக்கீங்க? அவங்க வீட்டுக்குப் போய் இருக்கலாம் இல்ல" என்று கேட்டவள், "ஓஓஓ அவங்க பேரண்ட்ஸ்க்கு உங்க லவ் மேட்டர் பத்தித் தெரியாதா? அதான், இங்க மீட் பண்ண வரச் சொன்னீங்களா?" என்று கேள்வியும் அவளே கேட்டுவிட்டு பதிலையும் அவளே சொல்லிக் கொண்டு அவன் பின்னோடு சென்றாள்.
"அவங்க பேர் என்ன பாஸ்?" என்று கேட்டாள்.
அவனிடம் மௌனம்.
"என்ன படிச்சிருக்காக பாஸ்? பார்க்க எப்படி இருப்பாங்க?" என்று கேட்டாள்.
அப்போதும் அவனிடம் மௌனம்.
"பாஸ், என்ன கேட்டாலும் இப்படி அமைதியா வந்தா எப்படி? அட்லீஸ்ட் அவங்க எந்த ஊர் அதையாவது சொல்லுங்க" என்று கேட்க, "யூ.எஸ்" என்றபடி மின் தூக்கியில் ஏறிக் கொள்ள, தன்வியும் அவன் அருகில் வந்து நின்றுக் கொண்டாள்.
"ஓஓஓ நீங்க யூ.எஸ் க்கு படிக்கப் போன சமயம் இதெல்லாம் நடந்திடுச்சா? என்கிட்டச் சொல்லவே இல்ல பார்த்தீங்களா? வெரி பேட் பாஸ். அவங்க உங்க கிளாஸ்மேட்டா?" என்று அடுத்தக் கேள்வி கேட்க, "கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு வாடி" என்ற ஆதர்ஷ் அதட்ட கப்பென்று வாய் மூடிக் கொண்டாள் தன்வி.
ஒரு அறையின் வாசலில் நின்று அவன் அழைப்பு மணி அடிக்க, தன்வி ஆர்வமாகக் கதவையே பார்த்தபடி நிற்க, ஆதர்ஷ் முகத்தில் எந்தவித ஆர்வமும், எதிர்பார்ப்பும் இல்லாமல் நிர்மலமாக இருந்தது.
கதவு திறக்கும் ஓசை கேட்டு தன்வி ஆசையாக நிமிர்ந்து பார்க்க,
அங்கு வெள்ளி நிறத்தில் தலை முடியும், சாம்பல் நிறக் கண்களோடும் வெள்ளை வெளேரென்று வெள்ளைக்காரப் பெண்ணொருத்தி நின்றிருந்தாள்.
அதுவரை ஆர்வமாக இருந்த தன்வியின் பார்வை சட்டென அதிர்ச்சிக்குத் தாவி விட, கண்களை விரித்து விரித்துப் பார்த்தவள், திரும்பி ஆதர்ஷனைப் பார்க்க, அவனோ எதிரில் இருந்த பெண்ணைப் பார்த்தபடி நின்றான்.
'அடக்கடவுளே! இதுக்காகத் தான் பாஸ் பயந்திட்டு இருந்தாரா? இவரு வெள்ளக்காரப் பொண்ணை லவ் பண்றாருன்னு தாத்தாக்குத் தெரிஞ்சா என்னாகும்னே தெரியலயே. அவர் ஏற்கனவே பாஸ் படிக்க, யூ.எஸ் போகும்போதே சொல்லி இருந்தாரு, இந்த மாதிரி ஃபாரின் கேர்ள் யாரையும் லவ் பண்றேன், கல்யாணம் பண்றேன்னு வந்து நிக்கக் கூடாதுன்னு. இந்தப் பாஸ் என்னடான்னா இப்படி ஒரு வேலையைச் செஞ்சு வச்சிருக்காரே… கடவுளே! இப்ப என்ன பண்றது' என்று மனதிற்குள் புலம்பியபடியே கண்கள் விரிய வாய் பிளந்து நின்றிருந்தாள் தன்வி.
கதவைத் திறந்த அந்தப் பெண்ணோ, "ஹாய் ஆஷ்" என்றபடி ஆதர்ஷனை அணைத்துக் கொள்ள அவனும், "ஹாய் எமி" என்று அவளை அணைத்து விடுவித்தவன் அந்த அறைக்குள் நுழைய, தன்வி அப்படியே சிலை போல் வாசலிலேயே நின்றிந்தாள்.
ஆதர்ஷ், "தன்வி" என்று அவள் தோளைப் பிடித்து உலுக்க, "ஹான்" என்றபடி இயல்பு நிலைக்கு வந்தவளை, "வா உள்ள போலாம்" என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.
அங்கிருந்த சோஃபாவில் தன்வியை உட்கார வைத்தவன் எமியைப் பார்த்து, "வேர் இஸ் ஆலன்?" என்று கேட்க, "ஹீ இஸ் இன் தி வாஷ் ரூம்" என்றாள் அவள்.
"ம்ம்ம்" என்று திரும்பி தன்வியைப் பார்த்தவன், "இது எமி. என்னோட" என்று ஆரம்பிக்கும் போதே, "புரியுது பாஸ்" என்றாள் தன்வி.
ஆதர்ஷ் கண்களை மூடித் திறந்தவன், "எமி… ஷீ இஸ் தன்வி, மை" என்று ஆரம்பிக்க, "யுவர் பேபி ஏஞ்சல்" என்று பின்னால் இருந்து வந்தது ஒரு ஆண் குரல்.
தன்வி திரும்பிப் பார்க்க அங்கு எமியைப் போலவே வெள்ளை வெளேரென்று, நீல நிறக் கண்களுடன் ஆறடியில் வெள்ளையும் சிவப்பும் கலந்த நிறத்தில், முடி மட்டும் கருகருவென இருக்க, சிரித்த முகமாக நின்றிருந்தான் ஆலன்.
அவனைப் பார்த்ததும் தன்வி சட்டென எழுந்து நிற்க, "ஏய் பேபி ஏஞ்சல், ப்ளீஸ் சிட்" என்று அவள் அருகில் வந்த ஆலன், அவளைத் தலை முதல் கால் வரை பார்த்தவன், "யூ ஆர் ரைட் ஆஷ். ரியலி ஷீ இஸ் வெரி கியூட்… லைக் ஏ கிட்" என்று சொன்னது தான், தன்விக்கு மூக்கு சிவந்துவிட, "எக்ஸ்கியூஸ் மீ… ஐ ஆம் நாட் அ கிட். ஐ அம் ஏ வுமன்" என்று ரோஷமாக ஆங்கிலத்தில் சொன்னவள், "வெள்ளைக் கலர்ல மலமாடு மாதிரி இவன் இருந்திட்டு என்னைக் கிட் னு சொல்றான்… ம்க்கும்" என்று தமிழில் வாய்க்குள் முன்னங்க, அது ஆதர்ஷ் காதில் விழுந்தது.
"தன்வி… என்ன இது…? வாய மூடு.” என்று அவன் அதட்ட, "பாஸ், இந்த மலமாடுக்த்கு தமிழ் தெரியாதில்ல பாஸ், நான் சொன்னது புரிஞ்சிருக்காது. சும்மா ஃப்ரீயா விடுங்க" என்று கண்ணடித்தவளைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்ட ஆதர்ஷ், "சாரி ஆலன்… இவ எப்பவும் இப்படிதான். நீ கண்டுக்காத" என்று தமிழில் சொல்ல, "ஐய்யோ பாஸ்…! என்ன இது நீங்க தமிழ்ல சொல்லிட்டு இருக்கீங்க… அது இந்த வெள்ளை மலமாடுக்கு எப்படிப் புரியும், இங்கிலீஷ்ல சொல்லுங்க பாஸ்" என்று சொல்ல,
"ஆஷ் சொன்னதும் எனக்குப் புரிஞ்சிது… நீ என்னை வெள்ளை மலமாடுன்னு சொன்னதும் எனக்குப் புரிஞ்சிது பேபி ஏஞ்சல்" என்று ஆலன் அழகிய தமிழில் சொல்ல, தன்வி திருட்டு முழி முழித்தபடி வாய் பிளந்து நின்றவள் முகத்தைத் திரும்பி ஆதர்ஷனைப் பார்க்க, அவனோ, 'இது உனக்குத் தேவையா?' என்பது போல் பார்த்தான்.
"பாஸ், இவருக்குத் தமிழ் தெரியும்னு சொல்லி இருக்கலாமில்ல?" என்று பரிதாபமாகக் கேட்க அவளை முறைத்த ஆதர்ஷ், "என்னை எங்கடி பேசவிட்ட?" என்றான் முறைப்பாக.
"இட்ஸ் ஓகே பேபி… ஜ ஆம் ஆலன், எமி'ஸ் பிரதர்" என்று அவள் முன் தன் வலது கையை நீட்ட, அவள் அசடு வழிந்தபடி அவன் கையைக் குலுக்கியவள், ஈயென்று இளித்து வைத்தாள்.
"ஆலன் அப்பா அமெரிக்கன், அம்மா நம்ம தமிழ் நாடு. சோ ஆலன்க்கு தமிழைப் புரிஞ்சிக்க முடியும். ஒரளவு நல்லாத் தமிழ் பேசவும் வரும்" என்ற ஆதர்ஷனைப் பாவமாகப் பார்த்தவள், "இந்த டீடெயில்ஸ் எல்லாம் நான் பல்ப் வாங்கும் முன்னச் சொல்லி இருக்கனும் பாஸ். நவ் இட்ஸ் டூ லேட்" என்றவளைப் பார்த்துத் தன்னை மறந்து சிரித்தான் ஆலன்.