விழி வழி காதல் நுழைந்ததடி 5

விழி 5


அருணும் அவன் அன்னையும் சென்ற அடுத்த நொடி தன்வியைத் தேடி சமையல் அறைக்குள் வேகமாக நுழைந்த ஆதர்ஷ், அவள் காதைப் பிடித்து திருகியபடி அவள் தலையில் நங்கென்று கொட்டி, "ஏன்டி லூசு… உனக்கு அறிவு இருக்கா இல்லையா? தாத்தா கேட்டா அந்தப் பொறுக்கிய எல்லாம் கட்டிக்க முடியாதுன்னு நேராச் சொல்லுவியா… அதை விட்டுட்டுப் பைத்தியம் மாதிரி உங்க இஷ்டம்னு சொல்லிட்டு வர்ற… கிறுக்கு! அப்ப அவர் சரின்னு சொல்லியிருந்தா அந்த அருணைக் கல்யாணம் பண்ணுக்குவியா நீ" என்று திட்டியவனைப் பார்த்துச் சிரித்தாள் தன்வி.


"ஏய் லூசு! நான் இங்க உன்னைத் திட்டுட்டு இருக்கேன், நீ சிரிக்கிற?" என்று எரிச்சலாகக் கேட்க, "ஏன் பாஸ்? உங்களுக்கு என் அப்பா, அம்மா முகம் ஞாபகம் இருக்கா?" என்று சம்பந்தமே இல்லாமல் கேட்டாள் அவள்.


"ஏய்! நான் என்ன பேசிட்டு இருக்கேன், நீ என்ன கேட்டுட்டு இருக்க?"


"பச்ச்… கேள்வி கேட்டா பதில் சொல்லுங்க பாஸ். ஞாபகம் இருக்கா? இல்லையா?" 


"அவங்களை எப்படி தன்வி மறக்க முடியும்? சின்னப் புள்ளையில் இருந்து என்னைத் தூக்கி வளர்த்தது உன் அப்பா, சோறு ஊட்டி வளர்த்தது உன் அம்மா… அவங்க முகம் எனக்கு எப்படிடி மறக்கும்" என்றவனை முகத்தை நிமிர்த்திப் பார்த்தவள், "எனக்கு ஞாபகம் இல்ல பாஸ்" என்றாள் குரல் அடைக்க.


"தன்வி" என்றபடி அவள் கன்னத்தைப் பிடித்துத் தன் புறம் திருப்பி அவள் முகம் பார்த்தான்.


அவள் கண்கள் கலங்கி இருந்தது.


"ஏய் தன்வி குட்டி! எதுக்கு இப்ப உன் கண்ணு கலங்குது?" என்று அவள் கண்களைத் துடைத்து விட்டவன் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்ட தன்வி, "என்னைப் பெத்தவங்க முகம் கூட‌ எனக்கு ஞாபகம் இல்ல ஆது… எனக்கு எல்லாமே நீங்களும், தாத்தாவும் தான். சின்ன வயசில் இருந்து என்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்த உங்களுக்கு, எனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்க்கணும்னு தெரியாதா? அதோட நீங்க சொன்னா நான் என்ன வேணும்னாலும் செய்வேன். ஆஃப்டர் ஆல், கல்யாணம்… அதைப் பண்ணிக்க மாட்டேனா என்ன?" என்றவளை வாஞ்சையாகப் பார்த்தான் ஆதர்ஷ்.


"நீ இந்த வீட்டோட செல்லப் பொண்ணுடி, உனக்குப் புடிச்ச மாதிரி தான் உன் கல்யாணம் நடக்கும். உனக்கு யாரையாவது புடிச்சிருந்தா, எனக்கு இவனைப் புடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னாப் போதும்… அவன் யாரா இருந்தாலும் அவனைத் தூக்கிட்டு வந்து உனக்குக் கட்டி வைப்பேன்…" என்றான் அவள் யாரைக் கல்யாணம் செய்து வை என்று கேட்பாள் என்று அறியாமல்.


"அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல பாஸ். தாத்தா சொல்ற பையனைத் தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்." என்றாள் உறுதியாக.


"அவர் அந்தப் பொறுப்பை என்கிட்ட தான் கொடுக்கப் போறாரு, நீ வேணும்னாப் பாரு… இந்த ஊரே பார்த்து ஆச்சரியப்படும்படி ஒரு பையனைப் பார்த்து உனக்குக் கல்யாணம் பண்ணி வைப்பேன்." என்றவன் வார்த்தையை அவன் காப்பாற்றுவானா இல்லையா என்பது அந்த விதியின் கையில் தான் இருக்கிறது என்று தெரியாமல் அவளுக்கு வாக்குக் கொடுத்து விட்டான்.


வெகு நேரமாகத் தன் முடிவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த வீரராகவன், தன்வி மற்றும் ஆதர்ஷனைத் தன் அறைக்கு அழைத்திருந்தார்.


இருவரும் தாத்தா முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, வீரராகவனும் அமைதியாக இருவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்.


"என்ன தாத்தா? எங்களை வரச் சொல்லிட்டு நீங்க அமைதியா எங்க முகத்தையே பார்த்துட்டு இருக்கீங்க… என்ன விஷயம் தாத்தா?" என்ற தன்வியை அன்பாகப் பார்த்தவர், "நான் எது செய்தாலும் அது உன் நல்லதுக்கு தான்னு நீ நம்புறியா தன்வி" என்று கேட்க, தன்வி அவரைப் புருவம் சுருக்கிப் பார்த்தவள், "என்ன கேள்வி தாத்தா இது… நான் அந்தக் கடவுளைவிட என்னோட தாத்தாவை தான் நம்புறேன். நீங்க எது செஞ்சாலும் அது என் நன்மைக்காக மட்டும் தான் இருக்கும்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு" என்று அழுத்தமாகச் சொன்னவளைத் தன் அருகில் அழைத்தார்.


தாத்தாவின் அருகில் வந்து அமர்ந்த தன்வியின் தலையை மெதுவாக வருடியபடி, "அப்ப நான் சொல்லற‌ பையனைக் கல்யாணம் பண்ணிக்குவியா தன்வி" என்று கேட்டவருக்கு, "கண்ணை மூடிட்டுக் கழுத்தை நீட்டுவேன் தாத்தா." என்று பதில் சொன்னாள் உறுதியாக.


வீரராகவனுக்குக் கண்கள் கலங்கி விட்டது. இதைவிட என்ன சொல்லி அவரை அவள் பெருமைப்படுத்தி விட முடியும்? 


தன்வி சொன்னதைக் கேட்டு கர்வமாக நிமிர்ந்தவர் ஆதர்ஷனைப் பார்க்க, "தாத்தா, அதான் உங்க அருமைப் பேத்தி கிரீன் சிக்னல் குடுத்திட்டாளே… சீக்கிரம் மாப்பிள்ளை யார்னு சொல்லுங்க? அவனைப் பத்தி விசாரிச்சு, என் தன்விக்கு அவன் பெர்பெக்ட் மேட்சா இல்லையான்னு பார்க்குறேன். அப்புறம் தாத்தா இப்பவே சொல்லிட்டேன், எனக்குப் பையனைப் புடிச்சா தான் மேரேஜ்… என்ன குட்டிப் பாப்பா ஓகே தான?" என்று சிரிக்க, "ம்ம்ம் ஓகே தான். பட், அதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்கனும். உங்க கல்யாணத்துக்கு அப்புறம் தான் என்னோட கல்யாணம்." என்றவளை இப்போது நிஜமாகவே முறைத்தான் ஆதர்ஷ்.


'தாத்தா மறந்தாலும் இவ சும்மா இருக்க மாட்டேங்கிறா… பிசாசு, பிசாசு' என்று வாய்க்குள் அவளைத் திட்டியவன், "அதெல்லாம் முடியாது, முதல்ல உன் கல்யாணம் தான் நடக்கணும். மத்தது எல்லாம் அப்புறம் தான்" என்று சொல்ல, தன்வியும் ஆதர்ஷிடம் முடியாது என்று சொல்ல, இருவரும் சண்டையிடத் தொடங்கி விட்டனர்.


வீரராகவன் அவர்கள் இருவரின் சண்டையையும் சில நொடிகள் வேடிக்கைப் பார்த்தவர், "உங்க ரெண்டு பேருக்கும்தான் கல்யாணம்" என்றார் அழுத்தமான குரலில்.


அவர் சொன்னதைக் கேட்டு தங்கள் சண்டையை நிறுத்திய இருவரும் இமைகள் சிமிட்டிப் புரியாமல் அவரைப் பார்த்தவர்கள், "இப்ப என்ன சொன்னீங்க?" என்று இருவரும் ஒன்றாகக் கேட்க அவர் ஆழ்ந்து மூச்செடுத்து, "உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்னு சொன்னேன்" என்றார் அழுத்தமாக‌.


அதைக் கேட்டு ஆதர்ஷ் முகம் அதிர்ச்சியில் உறைந்துவிட தன்வி, "ஐய்யா!" என்று துள்ளிக் குதித்தவள், "சூப்பர் தாத்தா, அப்ப பாஸ்க்கும் எனக்கும் ஒரே நாள்ல கல்யாணமா…? அப்ப, நீங்க ஏற்கனவே பாஸ்க்குப் பொண்ணு பார்த்து வச்சிட்டீங்க அப்படித் தானே? என்கிட்டச் சொல்லவே இல்ல இல்ல" என்று உதட்டைப் பிதுக்கியவள், "இட்ஸ் ஓகே..‌.! பொண்ணு யாரு தாத்தா.? அவங்க பேர் என்ன? அழகா இருப்பாங்களா? ஆதுக்குப் பொருத்தமா இருப்பாங்களா?" என்று குழந்தை போல் ஆர்வமாகக் கேட்க, ஆதர்ஷனுக்குத் தான் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.


'இப்பக் கூட அவளுக்குப் பார்த்திருக்கற பையனைப் பத்திக் கேக்காம ஆதர்ஷ் கல்யாணம் பண்ணிக்கப் போற பெண்ணைப் பத்திக் கேக்குறாளே' என்று நெகிழ்ந்த தாத்தா, "நான் சொன்னது உனக்குப் புரியலயா தன்வி?" என்று கேட்க, "ஏன் புரியாம…? அதெல்லாம் நல்லாப் புரியுது. அதான் கேக்குறேன் பொண்ணு எப்படி இருப்பாங்கன்னு?" என்று ஆர்வமாகக் கேட்டவளை நிமிர்ந்து பார்த்த தாத்தா, "உன்னை விட இந்த உலகத்தில் அவனுக்குப் பொருத்தமான பொண்ணு வேற யாரும் இல்ல தன்வி" என்றவர் ஒரு நிமிடம் நிறுத்தி, "நீதான் தன்வி அந்தப் பொண்ணு, உனக்கும் ஆதர்ஷ்க்கும் தான் கல்யாணம். இந்த வீட்டுக்கு நீதான் மருமகளாக வரணும்" என்று சொன்னவரை விழிகள் விரிந்து, வாய் பிளக்க அதிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள் தன்வி.


"தா…தாத்தா… நீ..நீங்க என்ன சொல்லறீங்க? எனக்கும், ஆதுக்கும் கல்யாணமா" என்று கேட்டவள் குரலில் அத்தனை நடுக்கம்.


"ஆமா தன்வி… உங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம். இது இன்னைக்கு நேத்து இல்ல, மூணு வருஷம் முன்ன‌ எப்ப ஆதர்ஷோட கல்யாணப் பேச்சு தொடங்குச்சோ, அப்பவே நான் எடுத்த முடிவு தான் இது. ஆனா, உங்க மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நானா எதுவும் சொல்ல வேண்டாம்னு தான் அமைதியா இருந்தேன். நீங்களா ஒருத்தரை ஒருத்தர் விரும்பி எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைங்கன்னு வந்து சொல்லுவீங்கன்னு எதிர் பார்த்தேன். ஆனா, அது நடக்கவே இல்ல. அதான் நானே என் ஆசையை, முடிவைச் சொல்லிட்டேன்." என்றவர் முன்னில் வந்து நின்ற ஆதர்ஷ்,


"தாத்தா, என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சு தான் பேசுறீங்களா நீங்க.‌‌.. நான் போய் எப்படித் தன்வியைக் கல்யாணம் பண்ணிக்க முடியும்.‌‌ அவ கொழந்தை தாத்தா, சின்னப் பொண்ணு அவ. நான் தூக்கி வளர்த்த கொழந்தை… அவளைப் போய் நா…நான்…" என்றவனுக்கு ஆதங்கத்தில் வார்த்தைகள் கூட வராமல் போனது. 


"ஏன்? நீ தூக்கி வளர்த்த பொண்ணா இருந்தாக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா என்ன..‌.? எத்தனையோ பேர் சொந்த அக்கா பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறது இல்லையா என்ன? அதோட உங்க ரெண்டு பேருக்கும் வயசு வித்தியாசம் கூட அதிகம் இல்லயே, அப்புறம் என்ன?" என்று பேசுபவருக்கு என்ன சொல்லித் தன் நிலையைப் புரிய வைப்பது என்று தெரியாமல் ஆதர்ஷ் உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருக்க, தன்வியோ இன்னும் தாத்தா சொன்ன செய்தியின் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றிருந்தாள்.


"லிசன்..‌. இது தான் என்னோட விருப்பம். இனிமே எல்லாம் உங்க கையில் தான் இருக்கு. உங்க ரெண்டு பேருக்கும் இன்னும் ரெண்டு மாசம் டைம் தரேன். அதுக்குள்ள உங்க முடிவைச் சொல்லுங்க… இல்ல உங்களுக்கு வேற யார் மேலயாவது விருப்பம் இருந்தா அதையும் சொல்லுங்க, உங்க விருப்பத்துக்கு நான் தடையாக இருக்க மாட்டேன். ஆனா, இன்னும் ரெண்டு மாசத்தில் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தே ஆகணும். அப்படி நடக்காமப் போனால், அதுக்குப் பிறகு நீங்க என்னை உயிரோட பார்க்கவே முடியாது." என்று அலுங்காமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டு தாத்தா சென்றுவிட, ஆதர்ஷனும் தன்வியும் தான் கதி கலங்கி நின்றனர்.


ஆதர்ஷ் தனக்குத் திருமணம் என்று தாத்தா சொன்னபோது பயந்தான் என்றால், அந்தத் திருமணம் தன்வியோடு என்று அவர் சொன்ன நிமிடம் மொத்தமாக உடைந்து நொறுங்கி விட்டான்.


 'எப்படி? எப்படி என்னால் தன்வியைத் திருமணம் செய்ய முடியும்? அவன் பார்த்துப் பார்த்து வளர்த்த அழகிய ரோஜாச் செடி அவள். அதை வேரோடு பிடுங்கி எறிய அவனால் எப்படி முடியும்? அவன் வளர்த்த பெண்ணின் வாழ்க்கையைத் தெரிந்தே அவனால் எப்படி அழிக்க முடியும்? அவனின் நிலையைச் சொல்லவும் முடியாமல், இந்தத் திருமணத்தைத் தடுக்க வழியும் தெரியாமல் தன் கையறு நிலையை எண்ணிக் கலங்கி நின்றான் ஆதர்ஷ்.


ஆதர்ஷன் அருகில் வந்த தன்வி மெல்ல அவன் தோள்ப் பட்டையில் சொறிந்தவள், "பாஸ், தாத்தா இப்ப என்ன சொல்லிட்டுப் போறாரு? என..எனக்கு அவர் சொன்னது புரியல…" என்று தெளிவில்லாத மனநிலையில் கேட்க, அவளைத் திரும்பிப் பார்த்த ஆதர்ஷ் கண்களில் அப்படி ஒரு வலி. 


அவள் கன்னத்தில் தன் கரம் பதித்தவன், "நீ ஒண்ணும் கவலைப்படாத, நீ என் செல்லம்டா… நீ எப்பவும் சந்தோஷமா இருக்கனும், அதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்." என்றவன் அங்கிருந்து செல்ல, தன்வி நடந்தது எதையும் நம்ப முடியாமல் அப்படியே மண்டியிட்டு அமர்ந்து விட்டாள்.


அடுத்த இரண்டு நாட்கள் அமைதியாகச் சென்றது என்று சொன்னால் அது உண்மை இல்லை. தாத்தாவும், தன்வியும் ஒரு மனநிலையில் இருக்க, ஆதர்ஷின் மனமோ புயலில் சிக்கிய வனம் போல் சிதறிப் போயிருந்தது.


இப்படியே ஒரு வாரம் செல்ல பொறுத்துப் பார்த்த தன்வி, ஆதர்ஷனைத் தேடி வந்தாள்.


அவள் முகம் கோவத்தில் சிவந்திருக்க, அதற்கு மாறாக அவள் கண்களோ கலங்கி இருந்தது.


"நான் என்ன தப்புப் பண்ணேன்னு என்னை அவாய்ட் பண்றீங்க? தாத்தா ஏதோ அவர் ஆசையைச் சொன்னாரு..‌. ஒரு வார்த்தை எனக்கு இஷ்டம் இல்லைனு சொன்னா விட்டுறப் போறாரு, அதைவிட்டு ஏன் இப்படிப் பண்றீங்க? நான் என்ன செஞ்சேன்னு என்கிட்டப் பேசாம இருக்கீங்க?" என்றவள் தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட, ஆதர்ஷ் வேகமாக அவள் அருகில் வந்தவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். 


"ஏய்! குட்டி பாப்பா, ப்ளீஸ் அழதாடா… எனக்கு உன்மேல ஒரு கோவமும் இல்ல..‌. நான் கொஞ்சம் அப்சட்டா இருக்கேன். அதான் உன்கிட்டச் சரியாப் பேசல…" என்றவன் மார்பில் சாய்ந்திருந்தவள், சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்துச் "சரியாப் பேசல இல்ல, சுத்தமாப் பேசவே இல்ல" என்றுச் சொல்ல, அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.


"சாரிடா… ரொம்ப சாரி" என்றவனை விட்டு விலகி வந்த தன்வி, "தாத்தா ஒண்ணும் நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிதான் ஆகணும்னு சொல்லலியே… அவருக்கு நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகணும், அதுதான் வேணும். அதுக்காகத் தான் இப்படிச் சொல்லியிருக்காரு..‌‌. அவர் தான் சொன்னாரே வேற யாரையும் விரும்பினாக் கூட எனக்கு ஒகே தான்னு." என்றவளை ஒரு வெற்றுப் பார்வைப் பார்த்தான் ஆதர்ஷ்.


"பாஸ், நான் ஒண்ணு கேப்பேன். உண்மையைச் சொல்லனும்" என்றவள், "நீங்க யாரையோ லவ் பண்றீங்க தான? அதைத் தாத்தாகிட்டச் சொல்லப் பயந்துட்டு தானக் கல்யாணம் வேணாம்னு இவ்ளோ நாளாச் சொல்லிட்டு இருக்கீங்க" என்றவளைப் பார்த்து இழுத்து மூச்சு விட்ட ஆதர்ஷ் எதுவும் பேசவில்லை.


"ம்ம்ம், எனக்குத் தெரியும். யாரோ இருக்காங்க… இப்பதான் தாத்தா ஓகே சொல்லிட்டாரே… உடனே அந்தப் பொண்ணைத் தாத்தாகிட்டக் கூட்டி வந்து காட்டி இந்தப் பொண்ணுதான் என் வருங்காலப் பொண்டாட்டின்னு சொல்லுங்க, அடுத்து உடனே உங்க கல்யாணம்" என்று ஆசையாகக் கேட்டவள் முகத்தை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்த ஆதர்ஷ், "நான் ஒண்ணு கேட்பேன், அதுக்கு மறைக்காமல் உண்மையைச் சொல்லுவியா?" என்று கேட்டான்.


"ப்ச்ச்! என்ன கேள்வி இது. நான் எப்ப உங்ககிட்டப் பொய் சொல்லி இருக்கேன், இல்ல எதையும் மறச்சு வச்சிருக்கேன். என்னைப் பத்தி என்னைவிட உங்களுக்குத் தான தெரியும்" 


"அதெல்லாம் எனக்கும் தெரியும் தன்வி...‌ ஆனா, இப்ப நான் கேட்கப் போறது முக்கியமான கேள்வி" என்று ஒருவிதத் தவிப்போடு கேட்டவனைப் புரியாமல் பார்த்த தன்வி, "கேளுங்க பாஸ்" என்றாள்.


"நீ..நீ… என்னை…! நீ என்னை…" என்று இழுத்தவன், "இத்தனை வருஷப் பழக்கத்தில் நீ… என்னை எப்பவாவது காதலிச்சு இருக்கியா?" என்று கேட்டவன் குரலில் அவள் சொல்லப் போகும் பதிலை நினைத்து அப்படி ஒரு பயம். அது அவன் கண்களிலேயே தெரிய, தன்வி அவனைப் புருவம் சுருக்கிப் புரியாமல் பார்த்தாள்.