அர்ஜூன் & ஆத்யா 2
மெய் 2
ஆத்யா அபிராமியின் மெடிக்கல் ரிப்போர்ட்டை முழுவதும் பார்த்து விட்டு,
"உங்களுக்கு ஒன்னு இல்ல ஆன்ட்டி, எல்லாம் நார்மல் தான். சர்ஜரி செஞ்ச எல்லாம் சரியாகிடும். ஆபரேஷன் முடிஞ்சதும் நீங்க ஹாப்பியா வேகமாக ஓடியே இந்தியா போய்டுவீங்க பாருங்க…" என்று ஆறுதல் சொல்ல சின்னவளை ஏக்கமாகப் பார்த்தார் அபிராமி.
"சந்தோஷம், நிம்மதி, சிரிப்பெல்லாம் என்னோட…" என்று தொடங்கியவர் சற்று நிறுத்தி திரும்பி அர்ஜூனை பார்த்துவிட்டு, "எங்க வாழ்க்கையை விட்டு போய் ரொம்ப வருஷம் ஆகுது அத்தும்மா" என்று விரக்தியாக சொல்ல, ஆத்யா கண்களைச் சுருக்கி கேள்வியாய் அபிராமியை பார்க்க, அபிராமி உடனே தன்னைச் சுதாரித்துக் கொண்டு,
"நான் சந்தோஷமா, ஹாப்பியா இருக்கணும்னு நீ நெனச்ச எனக்காக ரெண்டு விஷயம் செய்விய அத்து?" என்று கேட்க,
ஆத்யா மறுபேச்சு பேசாது 'சரி' என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
அதில் மகிழ்ந்த அபிராமி, "முதல்ல நீ என்னைப் பழைய மாதிரி அத்தைன்னு வாய் நெறைய கூப்பிடனும்" என்றதும், ஆத்யா அதற்குச் சம்மதம் என்று சொல்ல, அடுத்து அபிராமி கேட்டதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்து நின்றாள்.
ஆப்ரேஷன் முடிந்து திரும்பி இந்தியா செல்லும் வரை ஆத்யாவை தன்னோடு இருக்கச் சொல்லி அபிராமி கேட்க, ஆத்யாவுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. அபிராமியுடன் இருப்பது பிரச்சனை இல்லை தான். ஆனால், அர்ஜூன்… அவனை அடிக்கடி பார்க்க வேண்டி வருமே என்ற எண்ணம் அவளை பயமுறுத்த, கலங்கி நின்றாள்.
"இல்ல ஆன்ட்டி…" என்று இழுத்தவள், "இல்ல அத்த… அது முடியாது. என் பொண்ணு நா இல்லாம இருக்க மாட்டா. அதோட எனக்கு ஹாஸ்பிடல்ல நிறைய வேலை இருக்கும். ஆன, முடிஞ்ச வரை டைம் கிடைக்கும் போதெல்லாம் உங்களை கவனிச்சுக்கிறேன் அத்த" என்றவள் அர்ஜூனை திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு செல்ல, அர்ஜூனுக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆத்யாவை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்ற நினைப்பே நிம்மதியை கொடுத்தது.
அபிராமியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்த அர்ஜூன், அவருக்குத் தேவையான உணவையும், மருந்தை கொடுத்து தூங்க வைத்தவன், இன்று பல வருடம் கழித்து ஆத்யாவை பார்த்த மகிழ்ச்சியில் இரவு உணவு கூட சாப்பிடாமல் அப்படியே மெத்தையில் விழுந்தவன் விழிகளை உறக்கம் தழுவ மறுக்க, அவன் கடந்த காலம் அவனை ஆரத் தழுவி கொண்டது.
அர்ஜூன் காலேஜ் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்த சமயம் அது. எப்போதும் காலேஜ் லீவ் சமயத்தில் அபிராமி தான் சென்னை வந்து அர்ஜூனை பார்ப்பது வழக்கம். ஆனால், இந்த வருடம் அபிராமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவரைப் பார்க்க கிளம்பி இருந்தான் அர்ஜூன். இனி அவன் வாழ்க்கையில் வரப்போகும் சந்தோஷம், துக்கம் என்று அனைத்திற்கும் காரணமாக இருக்கப்போகும் ஒருத்தியை பார்க்கப் போகிறோம் என்று தெரியாமல் தன் பயணத்தை தொடங்கினான் அர்ஜூன்.
ஊட்டி...
அழகிய மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் இடம். அபிராமியின் கணவர் சிவாவிற்கு இங்கு பெரிய டீ எஸ்டேட் இருக்கிறது. ஒரு பெரிய வீட்டில் சிவா, அபிராமி, அவர்களின் ஒரே மகன் அபிமன்யு என்று அமைதியாக வாழ்ந்து வந்தனர். அர்ஜூன் பல வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் ஊட்டி வருகிறான். வெகு நாள் கழித்து வந்த அர்ஜூனுக்கு ஏக வரவேற்பு.
சிவாவும், அபிராமியும் அவனை அன்பால் குளிப்பாட்ட, அபிமன்யு நல்ல அண்ணாகவும், நெருங்கிய தோழனாகவும் இருந்து அவன் பாசத்தில் தம்பியை திக்குமுக்காட வைத்தான்.
அர்ஜூன் மனது வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்த அந்த அன்பில் றெக்கை கட்டி பறந்தது. சித்தி கையால் இரவு சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தவிட்டு ரொம்ப நாள் கழித்து ஆழ்ந்து உறங்கினான்.
பனி சூழ்ந்த இளம் காலை பொழுதில் கண்விழித்த அர்ஜூன். ரூமின் ஜன்னல் வழியே வெளியே பார்க்க, ரம்மியமான அந்தக் காலைப் பொழுதில் தன்னைத் மறந்து, அருகில் சென்று அந்த அழகை ரசிக்க நினைத்து தன் ஜர்க்கினை எடுத்துப் போட்டுக்கொண்டு அப்படியே இயற்கையை ரசித்தபடி தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.
இயற்கையின் அழகில் தன் மனதை தொலைத்தவனுக்கு எவ்வளவு தூரம் நடந்து வந்தோம் என்று கூடத் தெரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்தே வீட்டை வீட்டு வெகு தூரம் வந்திருப்பது தெரிந்து வந்த வழி திரும்பி நடக்க, திடீரென அவன் மீது ஒரு சைக்கிள் வந்து மோதி நிலை தடுமாறி கீழே விழுந்த அர்ஜூன் மீது பஞ்சு மூட்டை போல் மெத்தென ஏதோ ஒன்று வந்து விழ, அர்ஜூன் ஒரு நிமிடம் தடுமாறியவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு தரையில் படுத்திருந்தபடி நிமிர்ந்து பார்க்க... அவன் ஜர்க்கின் கலரை டைட்டாக பிடித்தபடி, "முருகா… முருகா…" என்று அலறியபடி அவன் மார்பில் முகத்தை இறுக்கிப் புதைத்து நடுங்கிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.
பூக்குவியல் போல் தன் மேல் கிடந்தவள் உடல் நடுக்கம் அவள் பயந்திருக்கிறாள் என்று அர்ஜூனுக்கு உணர்த்த, ஆறுதலாக அவள் தலை தடவிக்கொடுத்தான்.
"ஏய்...!! பயப்படாத, உனக்கு ஒன்னும் ஆகல... நீ நல்லா தான் இருக்க" என்று அக்கறையாக சொல்ல, அதில் பயம் தெளிந்து மெதுவாக தன் தலையை மட்டும் உயர்த்தி அவள் அர்ஜூனை பார்த்தாள்.
இரு நிலவுகள் அருகருகில் இருப்பது போல் குளிர்ச்சியாக இருந்த அந்த அழகு கெண்டை விழிகளிள் தடுக்கி விழுந்தான் அர்ஜூன். மெதுவாக அர்ஜூனை விட்டு நகர்ந்து எழுந்து நின்றவள் மலங்க மலங்க விழித்து நிற்க, அவளைப் பார்த்து அவன் மயங்கி நின்றான்.
அர்ஜூனை சுற்றி அழகிய பெண்களுக்குப் பஞ்சமில்லை தான். ஆனால், ஏனோ இந்தச் சின்னஞ்சிறு பெண் அவன் சிந்தையை வெகுவாக கவர்ந்தாள்.
அர்ஜூனுக்கு அவள் அழகு குழந்தை முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்க, அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
"சாரிங்க, ரொம்பச் சாரி, பெரிய பெரிய சாரி. சைக்கிள்ல ப்ரேக் புடிக்கல ங்க…"
"அத…"
"அதா…"
"அதான் உங்க மேல மோதிட்டேன் சாரிங்க" என்று, அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டிருக்க. அவளையே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன் சிந்தனையை அவள் குயில் குரல் கலைத்தது.
"இட் ஓகே... பரவாயில்ல விடு, சரி… உன் பேர் என்ன?" என்று கேட்க, பயம் குறைந்து சின்னதாய் சிரித்தவள், "என் பேரு ஆத்யா" என்றாள்.
தன் பெயரை சொன்னபடி அவள், அவன் கையைப் பார்க்க, அவன் கையில் அடிபட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
"அய்யோ!!! என்னங்க இது கையில ரத்தம் வருது" என்று கத்தியபடி, தன் கர்ச்சீப் எடுத்து அவன் காயத்தைத் துடைத்தாள்.
மெதுவாக அவன் காயத்தின் மீது தன் குட்டி இதழ்களைக் குவித்து ஊஃப்... ஊஃப்... என்று ஊதியபடி, "ரொம்ப வலிக்குதா?" என்று பயம் கலந்த, கலங்கிய விழிகளில் நீர் கோர்க்க வாஞ்சையாக கேட்டவளை பார்க்க அர்ஜூனுக்கு உள்ளுக்குள் ஏதோ போல் ஆனது.
தனக்குக் காயம் பட்டதும் பதறிதுடித்து, அந்தக் காயத்தைத் துடைத்த அந்தச் சின்னப் பெண்ணின் அன்பு அர்ஜூனை வெகுவாகத் தாக்கியது. மனதில் திடீரென எழுந்த இனம்புரியாத உணர்வோடு அவன் அவளைப் பார்த்திருந்தான்.
"என் வீடு இங்க பக்கத்துல தான் இருக்கு, என் கூட வாங்க நான் உங்க காயத்துக்கு மருந்து போட்டு விடுறேன்" என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவன் கையைப் பிடித்து இழுத்தவள் பின், எந்தக் கேள்வியும் கேட்காது சென்றான் அர்ஜூன்.
அர்ஜூனை வீட்டிற்கு அழைத்து வந்த ஆத்யா, வீட்டிற்குள் நுழையும் போதே, " அம்மா, மம்மி, மாதாஜி, தாயே" என்று கத்திக்கொண்டே வீட்டிற்குள் செல்ல, அர்ஜூனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
"அடியேய் அறுந்த வாலு... இப்ப நா அங்க வந்தேன்னு வையேன், அந்த இத்துணுண்டு வாயை இழுத்து சேர்த்து வைச்சு தச்சுடுவேன் பாத்துக்க. காலையில அஞ்சு மணி ஊர் பெருக்கப் போன எரும, இப்ப தான் வீட்டுக்கு வர்ர. ஏன்டி எரும ஊருக்குள்ள என்ன அவ்ளோ குப்பையாடி இருந்தது" என்று ஆத்யாவின் அம்மா சமையல் அறையில் இருந்து கொண்டு குரலை மட்டும் வெளியே அனுப்பினர்.
"அய்யோ அம்மா... நீ வேற டென்ஷனை கிளப்பாம, அந்த ஃபர்ஸ்ட் எய்ட் கிட் எடுத்துட்டு வாம்மா" என்று சொன்னது தான் தாமதம், சமையல் அறையில் இருந்து பதறி ஓடி வந்த பிரியா,
"என்னாச்சு அத்துக்குட்டி? எதுக்கு மருந்து, உனக்கு ஏதும் அடி பட்டுடுச்ச?" என்று மகள் முகத்தையும், கை, காலையும் தடவி பார்த்தவர், "சொல்லு அத்தும்மா?? உனக்கு எங்கயும் அடிப்பட்டிருக்க?" என்று தவிப்பாகக் கேட்டார்.
"எனக்கு ஒன்னும் இல்லம்மா, இதோ இவருக்குத் தான் கையில நல்லா அடி பட்டிருக்கு, ரத்தம் கூட வருது பாரேன்." என்க…
அப்போது தான் பிரியாவுக்கு அங்கு ஒருத்தன் இருப்பதே தெரிந்தது. பிரியா அர்ஜூன் கையைப் பார்த்தவர், "அச்சோ என்ன இது? இவ்ளோ ரத்தம் வருது?" என்று திரும்பி ஆத்யாவை பார்த்து, "ஏய் எரும நீ போய்ச் சுடுதண்ணி கொண்டு வா" என்று ஆத்யா விரட்டி விட்டு, ஃபர்ஸ்ட் எய்ட் கிட் டை எடுத்து வந்தார்.
அர்ஜூன் காயத்தைச் சுடு தண்ணீரில் சுத்தம் செய்து, "மருந்து கொஞ்சம் எரியும்பா, கொஞ்சம் பொறுத்துக்க" என்றபடி, அவனுக்கு மருந்து வைத்து கட்டு கட்டி விட்ட, அர்ஜூன் மனது பிரியாவையும், தன் அம்மாவையும் ஒப்பிட்டுப் பார்த்தது.
இது நாள் வரை ஒரு நாள் கூட அருந்ததி அர்ஜூன் உடம்பு சரியில்லாமல் இருந்தபோது அவனை அருகில் இருந்து கவனித்தது இல்லை. டாக்டரை வரச்சொல்லி அவனைப் பார்க்க சொல்லிவிட்டு சென்று விடுவார். ப்ரியா போல் இப்படி யாரும் அவனை அனுசரணையாக நடத்தியதே இல்லையென்பது அவன் நினைவுக்கு வர பிரியாவை கண்கள் விரிய பார்த்திருந்தான்.
"இருப்பா நான் உனக்குச் சாப்பிட எதாவது எடுத்து வரேன்" என்று பிரியா எழுந்து கொள்ள,
"இல்ல... இல்ல ஆன்ட்டி... எனக்கு ஒன்னும் வேணாம். நான் கிளம்புறேன்" என்றவனை நிறுத்திய பிரியா,
"அதெல்லாம் முடியாது. காயம்பட்டு ரத்தம் போயிருக்கு, கொஞ்சமாவது சாப்பிடனும், இல்லன்னா மயக்கம் வரும், இரு நான் உனக்கு டிபன் எடுத்து வரேன்" என்று எழுந்த பிரியா,
"அப்டியோ எனக்கு ஒரு ஆப்பிள் ஜூஸ்" என்று கத்தி ஆத்யா மேல் டேபிள் மேல் இருந்த டிவி ரிமோட்டை எடுத்து தூக்கி அடித்து, "வெளக்கமாறு பிஞ்சிடும் ராஸ்கல். ஆப்பிள் ஜூஸ் வேணுமாம்மில்ல ஆப்பிள் ஜூஸ். ஒழுங்கு மரியாதையா வாய மூடிட்டு இருந்த இட்லியாது கிடைக்கும். வாயைத்தொறந்த மகளே இன்னைக்கு நீ பட்டினி தான்."
"மம்மி திஸ் இஸ் எ கிரேட் இன்சல்ட் பார் மீ... ஒரு கெஸ்ட் முன்னாடி நீ என்ன ரொம்ப இன்சல்ட் பண்ணிட்ட. எனக்கு டிபன் வேணாம் போ, நான் கோவமா இருக்கேன்" என்று ஆத்யா முகத்தை கோவமாக வைத்துக் கொள்ள,
"அவ்ளோ தானே... சோறு மிச்சம் போடி" என்ற பிரியா அர்ஜூனுக்கு உணவு எடுத்துவர செல்ல, ஆத்யா போகும் அம்மாவையே புருவத்தை சுருக்கி முறைத்து பார்க்க, பாவம் அர்ஜூனுக்கு தான் சிரிப்பை அடக்குவது பெரும்பாடாய் போனது.
அர்ஜூனுக்கு வலது கையில் அடிபட்டிருந்தால், பிரியாவே அவனுக்கு ஊட்டி விட, பிரியாவையும், தன் அம்மாவையும் நினைத்த அர்ஜூன் கண்கள் அவனையும் அறியாமல் கலங்கியது.
"அய்யோ என்னப்பா? சாப்பாடு காரமா" இருக்க என்று பிரியா பதறினார்.
இல்லை என்று தலை ஆட்டிய அர்ஜூன் கண்கள், அவர்கள் இருவரையும் முறைத்துக் கொண்டிருந்த ஆத்யாவை பார்க்க, பிரியா அதைக் கவனித்தவர்,
"அவளை ஏன் தம்பி நீ பாக்குற, நீ நல்லா சாப்பிடு, அவ கிருஷ்ணர் பரம்பரை. அவரு வெண்ணெய திருடி தின்ன மாதிரி இவ சமையல் கட்டுல இருக்க எல்லாத்தையும் முங்காம் போட்டுடுவ, நீ சாப்பிடு" என்ற தன் தாய்க்கு, ஆத்யா இதழை சுழித்து ஒழுங்கு காட்டி விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
பிரியா, ஆத்யா இடையே இருந்த அன்பையும், தோழமையையும் பார்த்த அர்ஜூனுக்கு, தனக்கு இப்படி ஒரு அம்மா கிடைத்திருக்கக் கூடாத என்ற ஏக்கமும், ஆத்யா மேல் சிறு பொறாமையும் எட்டிப்பார்த்தது.
"அது சரி தம்பி, உனக்கு எப்படி அடிபட்டிச்ச?" என்று பிரியா கேட்டதும், ஆத்யாவுக்குத் திக்கென்று ஆனது.
"அய்யோ மாட்னேன்டா சாமி" என்று மனதிற்குள் புலம்பியபடி, பிரியா பார்க்காத போது அர்ஜூனுக்கு எதுவும் சொல்ல வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு, முகத்தை அழுவது போல் வைத்துக் கொண்டு சைகை செய்ய, அர்ஜூனுக்கு சிரிப்பு வந்து விட்டது.
"என்னப்பா நான் உனக்கு எப்படி அடிப்பட்டுச்சுன்னு கேட்டுட்டு இருக்கேன், நீ சிரிக்கிறியே?" என்றவர் திரும்பி ஆத்யாவை பார்க்க, அவள் உடனே முகத்தை நார்மலாக வைத்துக் கொண்டாள்.
அதைப் பார்த்த பிரியாவுக்கு புரிந்துவிட்டது. இந்த அறுந்த வாலு தான் எதோ சேட்டை செஞ்சிருக்கு என்று.
"ஏய் எரும மாடு..?? மரியாதையா சொல்லு, இந்தத் தம்பிக்கு எப்டி அடிபட்டிச்சு?" என்று முறைக்க, ஆத்யா திருட்டு முழி முழித்தாள்.
"அது…"
"அது வந்தும்மா…!!! ஹான்..!!! நான் சைக்கிள்ல வேகமாக வந்தனா... இவரு தூரமா வந்துட்டு இருந்தாரா… அப்படியே வந்துடு இருந்தவரு, எங்க நான் அவர் மேல மோதிடுவேனேன்னு பயந்து பின்னாடி போனாரா… அப்ப அங்க கல் தடுக்கி கீழ விழுந்துட்டாரு… நான் கிட்ட போய் பார்த்தனா... அவருக்குக் காயம்பட்டு ரத்தம் வந்துட்டு இருந்துச்ச, அதான் வீட்டுக்கு கூட்டி வந்தேன்." என்று அண்ட புழுகு புழுக, அர்ஜூனுக்கு அவளின் குறும்பு தனம் ரொம்பவும் பிடிக்க,
சிரித்துக்கொண்டே தன்னை மறந்து ஆத்யாவை ரசித்துக் கொண்டிருந்தான்.
பிரியா ஆத்யாவின் காதைப் பிடித்துத் திருகி,
"ஏய்…?? மரியாதையா உண்மையைச் சொல்லு டி, நீ எதும் வால்தனம் பண்ணி தான் அந்தப் பையனுக்கு அடிபட்டிச்ச?" என்று காதை பிடித்து இன்னும் வலிக்கும்படி திருக,
"ஸ்… ஆஆஆஆ... அம்மா வலிக்குதும்மா... நான் உன் பொண்ணும்மா... நீயே என்ன நம்பலனா எப்படி..?? நான் என்னைக்காது என் வாயால பொய் சொல்லி இருக்கனா??" என்று வலி தாங்காமல் குதிக்க... அர்ஜூனுக்கு ஆத்யாவை பார்க்க பாவமாக இருந்தது.
"ஆன்ட்டி உங்க பொண்ணு உண்மையா தான் சொல்ற, நான் தான் கல் தடுக்கி விழுந்துட்டேன். ஆத்யா ஒன்னும் செய்யல" என்று ஆத்யாவுக்கு சப்போர்ட் பண்ண, பிரியா சந்தேகமாக ஆத்யாவை பார்த்தார்.
"அம்மா அவர் தான் சொல்றர் இல்ல. இப்பவாது நம்பும்மா... காதை விடும்மா, கையோட வந்துட போகுது" என்று ஆத்யா கத்தும் போதே வாசலில்,
"யாரது என் அத்துக்குட்டிய மிரட்டுறது?" என்ற குரல் சத்தமாக வர, ஆத்யா பிரியாவின் கையை நறுக்கென்று கடித்துவிட்டு கதவை நோக்கி ஓடி அங்கு நின்ற பெண்ணின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
"பாருங்க அத்த, இந்த அம்மாவ, சும்மா சும்மா என்ன அடிச்சிட்டு இருக்காங்க" என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு உதட்டை சுழித்து கொண்டு புகார் சொன்னாள்.
"என்ன பிரியா இது.?? எவ்வளவு தைரியம் இருந்த, நீ என் அத்துகுட்டிய அடிப்ப??" என்று அந்த பெண் பொய்யாக மிரட்ட,
"அப்படிக் கேளுங்க அத்த... வர வர இந்தப் பிரியா ரொம்ப ஓவரா தான் போகுது" என்று ஆத்யா எடுத்துக் கொடுக்க,
"அடிங்கு எரும..!! பேர் சொல்லிய கூப்புடுற…?" என்று பிரியா அவளை அடிக்க போக,
"அத்த..!! பாருங்க அத்த நீங்க இருக்கும் போதே என்னை அடிக்க வராங்க" என்று ஆத்யா மீண்டும் முஞ்சை பாவமாக வைத்துக்கொள்ள, அந்தப் புதியவள் பிரியாவை முனைந்தார்.
"அய்யோ அண்ணி, அவ நடிக்கிற அண்ணி, அவளைப் போய் நீங்க நம்புறீங்க! கொடுமை!!" என்று பிரியா தலையில் அடித்துக் கொள்ள, ஆத்யா தன் தாயை பார்த்து இதழை சுழித்து ஒழுங்கு காட்டியவள் "எப்புடி" என்று கண்ணடித்தாள்.
"ஒழுங்க காட்டுற... இருடி இரு திங்குறதுக்கு வருவ இல்ல? அப்ப கவனிக்கிறேன், அப்படியே உன்னைத் தூக்கி அடுப்பு மேல உக்கார வச்சு, பத்த வச்சு விடுறேன் இரு"
"நா வந்த தானே!!! நா எங்க அத்த வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டிருப்பேன், உன்னோட வெந்தும் வேகாத கல்லு இட்லி யாருக்கு வேணும்" என்று தன் அத்தையை கட்டிக்கொண்டாள்.