அர்ஜூன்‌ & ஆத்யா‌ 1





                                                             அர்ஜூன் & ஆத்யா 1





மெய் 1


வெண்ணிலவு இரவெல்லாம் அலைந்து திரிந்து ஓய்ந்து போய் ஓய்வெடுக்க மேகங்களுக்குள் மறைய, பூமித்தாய் இருளில் தவிப்பாளே என்று தன் அக்னி சிறகை விரித்துப் பகலவன் பறந்து வந்த காலைப்பொழுது கண்விழித்தான் அர்ஜூன்.


அர்ஜூனின் இரவுவேளைகள் தூக்கம் தொலைந்த பொழுதுகளாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஒரு காலத்தில் அவன் வாழ்க்கையை‌ வண்ணங்களால் நிறைந்து மகிழ்ச்சியை மட்டும் அவன் வாழ்க்கையில் விதைத்தவள், இன்று துக்கத்தையே அவன் வாழ்வாக்கி, அவனின் மொத்த சந்தோஷத்தையும் துடைத்து எடுத்து சென்றுவிட்டாள்.


அர்ஜூன்…!!! பெரிய பணக்கார குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசு. காந்த கண்கள், அதில் தீர்க்கமான பார்வை, செதுக்கிய கூர் நாசி, சிரிப்பை மறந்த சிகரெட் புகை படியாத  தடித்த இளம் ரோஸ் நிற உதடுகள், அதற்கு மேல் ஆண்மைக்கு இலக்கணமான கருத்த மீசை, அதை ஒட்டி அழகாக ட்ரிம் செய்யப்பட்ட நாலு நாள் தாடி என்று பார்ப்பவரை ஒரு நிமிடம் நின்று திரும்பி பார்க்க வைக்கும் அளவு கம்பீரமான ஆணழகன்.


இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய தொழில் அதிபர்களில் முக்கியமானவன் அர்ஜூன். பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்திருந்தாலும், குடும்பத்தின் பணம், பேர், புகழ் என்று எதையும் பயன்படுத்தாமல், தன் சொந்த முயற்சியில் தொழில் தொடங்கி அதில் வெற்றி பெற்று இன்று உலகம் முழுவதும் தன் தொழிலை விரிவுபடுத்தி இருக்கும் இளம் தொழிலதிபர்.


அனைத்து செல்வங்களையும் அளவுக்கு அதிகமாக அள்ளிக்கொடுத்த கடவுள், அவன் ஆசையாக விரும்பிய இரண்டு செல்வத்தில் ஒன்றை கொடுக்க மறுத்தார். இன்னொன்றை கொடுத்து, பாதியில் பறித்துக்கொண்டார்.


சிறு வயதிலேயே தந்தையை இழந்த அர்ஜூன், தாயின் அன்பிற்கு ஏங்கி தவிக்க, அவன் தாய் மகனை மறந்து தன்னை முழுவதும் தன் கணவர் மற்றும் தன் குடும்பத்தின் பரம்பரை தொழிலில் புகுத்திக் கொண்டார். பணம் மட்டுமே கௌரவம் என்று நினைக்கும் பெரும் பணக்கார குடும்பத்தில் பிறந்த அர்ஜூன் தாய் 'அருந்ததி' எதிலும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதனால் தான்  அவர் எடுத்துக் கொண்ட அனைத்து தொழிலிலும் முதல் இடத்தை கைப்பற்றினார். ஆனால், தொழிலை கவனித்தவர், தன் மகனுக்குத் தன் நேரத்தை ஒதுக்க மறந்து பணத்தின் பின் ஓட... அர்ஜூன் சிறுவயதிலேயே தனிமை என்னும் வலியை அனுபவித்தான். வளர வளர அவன் தன் அம்மாவின் அன்பிற்கு ஏங்கி கிடக்க, அது அவனுக்கு  கிடைக்காமல் போக நாளுக்கு நாள் அதை நினைத்து அவன் மனது கலங்கியது. அதனாலேயே அதிகமாக யாரிடமும் நெருங்கி பழகாமல், நத்தை போல் தனக்குள்ளேயே ஒடுங்கிக் கொண்டான். ஒரு கட்டத்தில் தனிமை அவனைக் கலங்கடிக்க, அதிலிருந்து தப்பிக்க நண்பர்கள் துணையை நாடினான். தன்னை எப்போதும் கலகலப்பாக வைத்துக் கொண்டான். சேட்டை, கூத்து, கும்மாளம் என்று தனிமையில் இருந்து தப்பிக்க, ஒரு playboy என்ற இமேஜை உருவாக்கிக் கொண்டான் அர்ஜூன். 



பர்ஸ் நிறைய பணம், கார், கேர்ள் ப்ரண்ட்ஸ் என்று சுற்றினாலும், சில சமயங்களில் தாயை நினைத்து அவன் மனம் தவிக்கும் போதெல்லாம், அவனுக்கு இருந்த ஒரே ஆறுதல் அவன் அம்மாவின் தங்கையும், அவன் தந்தை சேகரின் தம்பி சிவாவின் மனைவியுமான அபிராமி மட்டுமே. விடுமுறைக்கு அர்ஜூன் வீட்டிற்கு வரும் அபிராமி தான் அர்ஜூன் ஓரளவு சந்தோஷத்தோடு இருக்கக் காரணம். 


அவனுக்கு  தனிமையுடன்  இருந்த உறவை முறித்து, அவன் மனதின் துயரம் போக்க அன்பு துணையாக வந்தாள் அவனவள். அவனின் அவள் "ஆத்யா"


மெய்யெழுத்தாக அர்த்தமில்லாமல் இருந்த அர்ஜூன் வாழ்வில் உயிரெழுத்தாக வந்து உயிர்மெய் எழுத்தாக மாறினார் இருவரும், ஆனால், இன்று காலம் இருவரையும் விலக்கி வைத்து, அவன் வாழ்க்கையை அர்த்தமற்ற வார்த்தையாய் மாற்றி விட்டது. அவள் இல்லாமல் அவன் நிலை விடையில்லா கேள்வியாகி போனது.


தன் கடந்த காலத்தை நினைத்து கரைந்து கொண்டிருந்த அர்ஜூனை கலைத்தது அவன் கைபேசி. அர்ஜூனின் செக்ரட்டரி பிரபு தான் அழைத்திருந்தான்.


"என்ன பிரபு? எல்லாம் ஓகே தானா?"


"எஸ் சார். நீங்க அங்க தங்குறதுக்கு வீடு, வேலைக்கு ஆள், ஹாஸ்பிடல் அரேன்ஜ்மென்ஸ்,‌ கார் எல்லாம் பக்கவா ரெடி சார்" என்ற பிரபுவுக்கு,


"ம்ம்ம் குட் பிரபு" என்று பதில் தந்தவன் ஃபோனை வைத்தான்.


அர்ஜூன் சித்தி அபிராமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக அவருக்கு உடனே இதயத்தில் மேஜர் சர்ஜரி ஒன்று செய்ய வேண்டிய நிலை. அபிராமி தான் ஒரே மகனை இழந்து உடைந்து நின்றபோது அர்ஜூன் தான், தன் சித்தியையும், சித்தப்பா சிவாவையும் சொந்த மகனாக தாங்கிப் பிடித்தான். ஆனால், அதற்காக அவன் கொடுத்த விலை அவன் உயிருக்கு நிகரான அவன் ஆத்யா.


அர்ஜூன் அவன் வேலையாக லண்டன் செல்ல வேண்டி இருக்க , பேசாமல் அபிராமியையும் உடன் அழைத்துச் சென்று அங்கேயே அபிராமிக்கு டிரீட்மென்டை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவன், தன் செக்கரட்டரி பிரபுவிடம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி இருந்தான்.


பிரபு அனைத்து ஏற்பாடுகளையும் முடித்து , லண்டனில் உள்ள ஒரு பெரிய ஹாஸ்பிடலில் ஆபரேஷனுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்திருந்தான். 


இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் லண்டன் கிளம்ப வேண்டும். அபிராமிக்கு இந்த சர்ஜரியில் துளியும் விருப்பமில்லை என்றாலும், அர்ஜூனுக்காக  சம்மதித்தார். தெரிந்தே தன் சுயநலத்திற்காக அர்ஜூன் இப்படி ஒரு வெறுமையான வாழ்க்கையை வாழ தானும் ஒரு காரணமாகி விட்டோம் என்ற குற்றவுணர்வு அவரை வாட்டி வதைக்க, எப்படியாவது அவன் வாழ்க்கை சரி செய்ய வேண்டும் என்று அவர் நினைத்தாலும், அதற்கான வழி தான் அவருக்குத் தெரியவில்லை. அபிராமிக்கு நன்கு தெரியும் "ஆத்யா" ஒருத்தி தான் அர்ஜூனின் சந்தோஷம் என்று. ஆனால், அவள் அர்ஜூனுக்கு கிடைக்காமல் போகத் தான் காரணமாக இருப்போம் என்று அபிராமி கனவிலும் நினைத்திருக்க மாட்டார். விதியின் சதி உயிராய் இருந்த ரெண்டு அன்பு உள்ளங்களை உருக்குலைந்து விட்டது.


ஒரு வாரம் வேகமாகச் செல்ல, அர்ஜூன், அபிராமி லண்டன் பயணப்பட்டார்.


அர்ஜூன் லண்டனில் உள்ள தன் தொழிலை விரிவு படுத்தி விட்டு, அங்கேயே செட்டில் ஆக விரும்பினான், அதற்காகவும், வேறு ஒரு முக்கியமான விஷயத்திற்காகவும் தான், அவன் லண்டன் வந்திருந்தான். அவன் தேவைக்காக லண்டனிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு பெரிய வீடு, கார் , வேலைக்கு ஆட்கள் என்று எல்லாவற்றையும் ஏற்பாடு செய்திருந்தான்.


லண்டன் வந்த மறுநாளே அர்ஜூன், அபிராமியை ஹாஸ்பிடலில் அனுமதிக்க, அவரை முழுவதும் பரிசோதித்த டாக்டர், இன்னும் பத்து நாளில் ஆபரேஷனை வைத்துக்கொள்ளலாம் என்றவர், அதுவரை ஹாஸ்பிடலில் இருக்கத் தேவையில்லை. தினமும் செக்-ஆப் செய்ய மட்டும் அழைத்து வந்தால் போதும் என்று சொல்லி விட அபிராமிக்கு சற்று நிம்மதி. அர்ஜூன் இந்தியாவிற்கு ஃபோன் செய்து தான் தன் சித்தப்பா சிவாவுக்கு டாக்டர் சொன்னதைச் சொல்லி, அவரை உடனே லண்டனுக்கு வர சொன்னான்.


அர்ஜூன் டாக்டரிடம் அபிராமியை லண்டனை சுற்றி பார்க்க அழைத்துச் செல்ல அனுமதி கேட்க, டாக்டர் அதற்கு அனுமதிக்கவும், அபிராமிக்கு அன்று முழுவதும் லண்டனை சுற்றி காட்டிவிட்டு, இரவே வீட்டிற்குச் சென்றான். 


தன்னைக் குழந்தை போல் பார்த்துக்கொள்ளும் அர்ஜூன் வாழ்விலும் ஒரு விடிவு காலம் வரவேண்டும் என்ற வேண்டுதலோடு தூங்க சென்றார் அபிராமி. அப்போது அவருக்கு தெரிந்திருக்காது. கடவுளுக்கு அவர் வேண்டுதல் கேட்டு விட்டதென்று.  ஆனால், வேண்டுதலை கேட்ட கடவுள் அதை நிறைவேற்றுவாரா?? என்பது அவருக்குத் தான் வெளிச்சம். (காட் மஸ்ட் பி கிரேசி)


மறுநாள் அர்ஜூன் அபிராமியை செக்-ஆப்புக்கு ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றான்.


அபிராமியை செக்-ஆப் செய்த டாக்டர்,‌


"ஷீ இஸ் ஆல் ரைட் மிஸ்டர். அர்ஜூன். ரிப்போர்ட்ஸ் ஆர் நார்மல். இனிமே என்னோட அசிஸ்டன்ட் சர்ஜன், இவங்க மெடிக்கல் ஹிஸ்டரிய ஃபாலோ பண்ணிக்குவாங்க" என்றவர் அந்த டாக்டரை தன் ரூமுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுக்க. அர்ஜூனும், அபிராமியும் அந்த டாக்டருக்காகக் காத்திருந்தனர்.


கொஞ்ச நேரம் கழித்து ஒரு இனிமையான பெண்குரல், "மே ஐ கம் இன் டாக்டர்?" என்று கேட்டுக்கொண்டு கதவை மெதுவாக திறக்க, அந்தப் பெண்ணின் குரலை கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்த அர்ஜூன் திரும்பி குரல் வந்த திசையை பார்த்தவனுக்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வு. அது அதிர்ச்சிய? ஆனந்தமா? கையில் இருந்ததை தொலைத்துவிட்டு தேடித்திரிந்தவனுக்கு, தேடியது கையில் கிடைத்த சந்தோஷமா?? என்று பிரித்துப் பார்க்க முடியாத நிலை. 


மொத்தத்தில் அர்ஜூன் அந்த நிமிடத்தில் தன்னை முழுவதும் இழந்து ஒரு மோன நிலையில் மிதக்க, அடுத்து அந்த சீனியர் டாக்டர் சொன்ன வார்த்தையில் வானில் சிறகில்லாமல் பறந்து கொண்டிருந்த அர்ஜூன் பொத்தென்று தரையில் வந்து விழுந்து நொறுங்கினான்.


அந்தச் சீனியர் டாக்டர் அர்ஜூனை நோக்கி, 


"திஸ் இஸ் மிஸஸ். ஆத்யா, மை அசிஸ்டன்ட். ஒன் ஆப் தி பெஸ்ட் சர்ஜன் இன் அவர் டீம். ஷி வில் டேக் கேர் ஆஃப் யுவர் மாம்" என்றவர், ஆத்யாவிடம் "டேக்  கேர் ஆத்யா" என்று அபிராமியை கவனித்துக் கொள்ளச் சொல்லி விட்டு சென்றார். 


ஆத்யா இதுவரை டாக்டரையே பார்த்துக் கொண்டிருந்தவள், அர்ஜூனையோ, அபிராமியையோ பார்க்கவில்லை. இப்போது டாக்டர் சொன்னதைக் கேட்டு திரும்பி அர்ஜூனை பார்த்தவளுக்கும் இதயத்தில் இடி இறங்கியது போல் பேரதிர்ச்சி.


அர்ஜூனுக்கு டாக்டர் அவளை "மிஸஸ். ஆத்யா" என்று அறிமுகப்படுத்தியதில் இதயம் சுக்கு நூறாய் உடைந்து சிதறி விட, வலியோடு ஆதித்யாவை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.


ஆத்யா... மாநிறத்திற்கு சற்று கூடிய நிறம். கொழு கொழு கன்னம், பார்த்த முதல் நாளிலேயே அவனை அவளிடம் சாய்த்த, துள்ளி விளையாடும் மீன் விழிகள் இளம் தாமரை மலர்போல் அழகிய பிங்க் நிறத்தில் ஓயாமல் பேசு குட்டி குட்டி அதரங்கள் என்று அழகின் மொத்த உருவம் அவள். 


அழகிய சிகப்பு வண்ண குர்தி, அதன் மேல் வெள்ளை நிற டாக்டர் கோட், அதற்கு ஏற்றார்போல் கருப்பு நிற ஜீன்ஸ், உயர்த்திப் போட்டிருந்த போனி டெய்ல், நெற்றி உச்சி வகிட்டில் சிறிதாகக் குங்குமம், கழுத்தில் மெல்லிய செயின். 


'ஒருவேளை தாலியை செயினில் போட்டிருக்க போல??' என்று நினைத்தவன், கடைசியாக அவளைப் பிரிந்த போது எப்படி இருந்தாளோ, பல வருடங்கள் கழித்து, இப்போதும்  அன்று பார்த்தது போல் கொள்ளை அழகுடன், அவனை கொல்லும் அழகுடன்  இருக்கிறாள். ஆனால், அன்று அர்ஜூனின் ஆத்யாவாக இருந்தவள், இன்று மிஸஸ். ஆத்யாவாக இருக்கிறாள் என்று நினைக்கும் போதே அர்ஜூனுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.


அவன் அப்படி என்றால் இங்கு ஆத்மாவிற்கும் அதே நிலை தான். எத்தனை வருடங்கள் கழித்து அர்ஜூனை பார்க்கிறாள். அதே கம்பீரம், காண்போரை கட்டி இழுக்கும் கண்கள். அவள் ஆசையாக கலைத்து விளையாடும் அவன்   தலைமுடியென, இன்றும் கண்ணுக்கு அழகாக இருந்தவனை பார்த்தவள் நெஞ்சிலும் போர்க்களம் தான் நடந்து கொண்டிருந்தது. இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் தலையை உலுக்கி, 


"ச்சே என்ன நினைப்பிது?? இது தப்பு, இப்ப அவனும், நானும் வேற வேற. இது தான் நிஜம், எதுவும் மாறாது. கண்ட்ரோல் ஆத்யா " என்றவள்,கலங்கிய விழிகளுடன் மெதுவாக அபிராமி அருகில் வந்தாள். 


"எப்படி இருக்கீங்க அத்த…?" என்று தொடங்கியவள், "எப்படி இருக்கீங்க ஆன்ட்டி?" என்று முடிக்க. அபிராமிக்கு யாரோ தன் இதயத்தை சவுக்கால் அடித்தது போல் இருந்தது. வாய் ஓயாமல் "அத்தை.. அத்தை…" என்று தன் முந்தானையை பிடித்துக் கொண்டு சுத்தியவள், இன்று ஆன்ட்டி என்றழைத்தை  நினைக்கவே அவர் மனம் வருந்தியது.


"நா…"


"நா…."


"நல்லா இருக்கேன் அத்து மா…"


"நீ.. "


"இங்க..?? "


"இங்க யா?? லண்டன்லயா இருக்க??" என்று தட்டு தடுமாறி கேட்டார்.


"ஆமா ஆன்ட்டி. இனிமே  எனக்கு இந்தியால ஒன்னு இல்லைன்னு ஆயிட்ட பிறகு, நா வேற என்ன செய்ய முடியும். அதான் இங்க வேலை கிடைச்சதும் உடனே கிளம்பி வந்துட்டேன்." என்றவள் குரலில் எந்த உணர்ச்சியும் இல்லை.


"உனக்குக் கல்… கல்யாணம்… ஆகிடுச்சா அத்தும்மா?" என்று ஆரம்பித்த அபிராமிக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் தொண்டைக்குள் சிக்கிக் கொள்ள, அவர் திரும்பி அர்ஜூனை பார்க்க அவன் முகம் முழுவதும் வேதனையில் வெதும்பி இருந்தது.


ஆத்யாவும் திரும்பி அர்ஜூன் முகத்தைப் பார்த்தவள்,  "ம்ம்ம்” என்று தலையாட்டியபடி, “ஒரு பொண்ணும் இருக்கு ஆன்ட்டி" என்றவள் வேறு எதுவும் பேசாமல் அபிராமியின் மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்க்க தொடங்கி விட்டிருந்தாள். 


வாழ்க்கையில் இணைந்து வசந்தத்தை பார்க்க வேண்டியவர்கள்.

இன்று… 


ம்ம்ம்...!! காலம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது. ஒன்றாக ஒட்டி இருந்த இதயங்கள், இன்று இணைய முடியாத இருவேறு துருவங்களாக மாறி, ஒன்றை ஒன்று வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது.