இதயம் இறுதி அத்தியாயம்

 இறுதி அத்தியாயம் 


அவன் கண்களோ அந்த இடத்தில் நின்றவளை கூர்ந்து பார்க்க, அவன் மனமோ ‘அவள் உண்மையாக அவன் கண்முன் தான் நிற்கிறாளா? இல்லை அது வெறும் காட்சிப் பிழையா? தன் கண்கள் காண்பது உண்மை தானா?’ என்று அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருக்க, அவனையும் அறியாமல் அவன் கால்கள் அவளை நோக்கிச் சென்றது.


அதற்குள் அவள் அங்கிருந்து நகர, அவனும் அவளைத் பின் தொடர்ந்தான். 


அந்த நேரம் அதீஷன் அங்கு வர, “அதீ… தன்வி உள்ள இருக்கா, நீ அவளைப் பார்த்துக்க” என்றவன், “டேய் தர்ஷா… நீ எங்க போற?” என்று கேட்டதைக் கூடக் காதில் வாங்காமல் அங்கிருந்து வேகமாக ஓடிச் சென்றான்.


வேகமாக அவளின் பின்னால் தன் வாகனத்தை விரட்டிச் சென்ற ஆதர்ஷ், அவள் ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்திற்குள் செல்வதைப் பார்த்து அவளைப் பின்தொடர்ந்து சென்றான்.


அவள் ஒரு வீட்டின் உள் செல்வதைப் பார்த்தவன், அவள் உள்ளே சென்று கதவை அடைக்கும் முன் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல, திடீரென நடந்த நிகழ்வில் கண்கள் விரிய அதிர்ந்து நின்றாள் தர்ஷினி.


ஆதர்ஷனைப் பார்த்து தர்ஷினி அதிர்ந்து நிற்க, ஆதர்ஷனோ அவளைத் தன் பார்வையால் எரித்துக் கொண்டிருந்தான்.


“நீங்க.‌‌..” என்று அவள் ஏதோ சொல்ல வர, அவள் தோளைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல, தர்ஷினி தன் பின்னால் இருந்த சுவற்றில் மோதி நின்றாள்.


“தர்ஷன், என்ன பண்றீங்க?” என்றவள் முன் தன் இதழ்களில் ஒற்றை விரலை வைத்து “உஷ்ஷ்” என்றவனின் மூச்சுக் காற்றில் தெறித்த அனலே அவளுக்கு உணர்த்தியது அவன் கோபத்தின் அளவை.


அவளை அனல் தெறிக்கும் பார்வை பார்த்தவன், “ஏன்டி? ஏன் இப்படிப் பண்ண? வேணாம்னு ஒதுங்கிப்போன என்னை துரத்தித் துரத்தி வந்தது, இப்படி மொத்தமா என்னை நரகத்தில் தூக்கி வீசிட்டுப் போகத் தானா?” என்றவன் அவன் பிடியில் இருந்த அவள் தோள்களை அழுத்த, அவள் முகம் வலியில் சுருங்கியது.


அதைப் பார்த்து அவன் பிடியைத் தளர்த்தியவன், “ஏன்டி என்னை விட்டுப் போன?” என்றவனின் குரலில் அத்தனை வேதனை.


அவன் முகத்தில் தெரிந்த வலியை தன்னுள் உணர்ந்த தர்ஷினி, மெல்ல அவன் பிடியில் இருந்து விலகி வந்தவள், “நீங்க ஆசைப்பட்டது இதுதானே… நான் உங்களைவிட்டு விலகிப் போகணும்னு தானே நீங்க சொன்னீங்க” என்றாள் அவளும் வீம்பாக.


“அது அப்போ… இப்ப நான் அப்படி இல்ல..‌. உன்னை என் உயிருக்கும் மேல நான் விரும்புறேன் வினி.” என்றவன், “நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்டி” என்னவனைத் திரும்பி அழுத்தமாகப் பார்த்து விரக்தியாகச் சிரித்தவள், “எப்ப இருந்து இந்த முடிவு?” என்று கேட்டவள், “ஓஓஓ… அன்னைக்கு நமக்குள்ள நடந்ததே… அதுக்கு அப்புறம் எடுத்த முடிவா இது? சோ உங்களால் என்னோட பிசிகல் ரிலேசன்ஷிப் வச்சிக்க முடியும்னு தெரிஞ்ச பிறகு, இப்ப என்னை மேரேஜ் பண்ணிக்க நினைக்குறீங்களா?” என்று கேட்டவளின் குரலில் தெரிந்த வலி ஆதர்ஷனுக்கு நன்கு புரிந்தது. அவள் கேட்ட கேள்வி அவனை வதைத்தாலும், அவள் ஏன் அப்படி கேட்டாள் என்ற காரணம் அவனுக்குத் தெளிவாக விளங்கியது.


மெல்ல அவள் அருகில் வந்து தன் இரு கரங்களில் அவள் அழுது சிவந்த முகத்தைத் தாங்கியபடி, அவள் மென் இதழ்களை வருடியவன், “உன்னை நான் எப்ப முதல் முதல்ல கிஸ் பண்ணேனோ, அப்பவே முடிவு பண்ணிட்டேன்டி, இந்த ஜென்மத்தில் நீ எனக்கு தான்னு… அந்த முடிவை நான் எடுத்த நிமிஷம் என் மனசுல எந்தவிதத் தயக்கமோ, என்னை நினைச்சு எந்த பயமோ எனக்கு வரல… அது ஏன்னு தெரியுமா?” என்று அவள் கண்ணைப் பார்த்துக் கேட்க, அதற்கு அவள் இல்லை என்று தலையாட்டினாள்.


“அதுக்குக் காரணம் நீதான்டி… நீ என்மேல வச்ச உண்மையான காதல் தான் அதுக்குக் காரணம். என் வினி நான் எப்படி இருந்தாலும் என்னை ஏத்துக்குவா… என்னால அவளுக்கு எந்தச் சந்தோஷமும் இல்லாமல் போனாலும் எப்பவும் என்னை வெறுக்க மாட்டா, எந்தச் சூழ்நிலையிலும் என்னை அவ நேசிப்பான்ற நம்பிக்கை தான்டி நான் உன்னைக் காதலிக்கவும், கல்யாணம் செய்ய முடிவெடுக்கவும் காரணம்‌. உன்னோட காதல் ஒன்னு தான்டி என்னோட பலம், நம்பிக்கை, சந்தோஷம், வாழ்க்கை எல்லாம்… அந்த முடிவுக்கு நான் வந்த பிறகு தான், நான் உரிமையோட உன்னைத் தொட்டேன். அன்னைக்கு நமக்குள்ள நடந்தது எதிர்பார்க்காத ஒன்னு தான். ஆனா அதுல எந்தத் தப்பும் எனக்குத் தெரியல… பிகாஸ் யூ ஆர் மைன்” என்றவன், “பட், என் மேலயும் தப்பிருக்கு… அன்னைக்கே என் மனசை உன்கிட்ட தெளிவாச் சொல்லி இருக்கணும். அதைச் செய்யாம உன்னை எடுத்துகிட்டது நான் பண்ண தப்பு தான். என்னை மன்னிச்சிடு வினி…“ என்றவனைக் கண்ணீர் கோர்த்த விழிகளுடன் ஏறிட்டுப் பார்த்தவள், 


“இந்த வார்த்தைக்காகத் தான் இத்தனை நாள் ஏங்கிட்டு இருந்தேன் தர்ஷன். இந்த ஒரு வார்த்தைக்காகத் தான் உங்களைவிட்டு விலகி வந்தேன்.” என்றவள் கண்களில் கண்ணீர் கோடுகளாக இறங்கிவர அதைத் தன் விரல் கொண்டு துடைத்தான் ஆதர்ஷ்.


தன் கண்ணீரைத் துடைத்தவன் கையைப் பிடித்து, அதில் அழுத்தமாக முத்தம் பதித்தவள், “இப்பச் சொன்னீங்களே, உன்னை நான் கல்யாணம் பண்ணிக்குறேன்… இந்த வார்த்தையை மட்டும் நீங்க அன்னைக்குச் சொல்லியிருந்தா சத்தியமா அதை என்னால தாங்கி இருக்க முடியாது தர்ஷன். பிகாஸ் அன்னைக்கு நீங்க இதைச் சொல்லி இருந்தால், அதுக்குக் காரணம் நமக்குள்ள நடந்ததும், உங்க… உங்களால… அதனால் தான் என்னைக் கல்யாணம்” என்றவள் கோர்வையாக எதையும் பேச முடியாது தவிக்க, “எனக்குப் புரியுது வினி” என்றான் ஆதர்ஷன்.


“அன்னைக்கு நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லி இருந்தால் அது எனக்கு உங்க மேல இருக்கற காதலை அசிங்கப்படுத்தின மாதிரி ஆகி இருக்கும். அதைத் தாங்கும் தெம்பு எனக்கில்ல தர்ஷன். அதான் அங்… அங்க இருந்து ஓடி வந்துட்டேன்.” என்றவளை அவன் இழுத்து அணைத்துக் கொண்டான்.


தன்னுள் புதைந்திருந்தவளின் முதுகை வருடியபடி, “எனக்குத் தெரியும்டி..‌. இதுதான் காரணமா இருக்கும்னு எனக்குத் தெரியும். என்னைக்கும் என் வினி என்னை வெறுக்க மாட்டான்னு எனக்குத் தெரியும்.” என்றவன், “ஆனாலும் நீ என்கிட்ட பேசி இருக்கணும் வினி, நான் நம்ம காதலை அந்த அளவுக்குக் கீழா நினைப்பேன்னு நீ எப்படி நினைச்ச…” என்று அவளைக் கடிந்து கொண்டவன், “இந்தப் பதினஞ்சு நாளா, நான் நானாவே இல்லடி… பைத்தியம் புடிச்ச மாதிரி இருந்தேன். எங்க நான் உன்னை நிரந்தரமா இழந்துட்டேனோன்னு நினைச்சு நினைச்சு ஒவ்வொரு நாளும் அழுது இருக்கேன். வீட்டுக்கு வந்து நீ வளர்த்த பறவைகளைக் கேளு… நான் நீ இல்லாம எப்படி உயிர் தொலச்ச உடம்பு மாதிரி சுத்திட்டு இருந்தேன்னு கதை கதையாய் சொல்லும்” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள், “அதுங்க ஒன்னும் சொல்ல வேண்டியது இல்ல, நீங்க பட்ட கஷ்டமெல்லாம் எனக்கு நல்லாத் தெரியும். அதனால் தான் நான் இப்ப உங்க முன்னாடி நிக்குறேன்.” என்றவளை அவன் புரியாமல் பார்த்தான்.


இந்தப் பதினைந்து நாட்களில் இருந்து இன்று காலை வரை நடந்த அத்தனையும் ஆதர்ஷனிடம் சொல்லிக் கொண்டிருந்தவள் முகம் சட்டெனச் சிவந்துவிட, வெட்கத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள், மெல்ல ஆதர்ஷ் கையை எடுத்துத் தன் அடிவயிற்றில் வைத்தவள், “காலையில் இருந்து நானும் பாப்பாவும் உங்களுக்காக வெயிட்டிங்” என்று சொல்ல ஆதர்ஷனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின் அவளின் முகத்தில் தெளிந்த வெட்கமும், தன் கைகள் உணர்ந்த ஸ்பரிசமும் அவனுக்கு விசயத்தை உணர்த்த, கலங்கிய கண்களுடன் அவளை ஏறிட்டுப் பார்த்தவன், “நி… நிஜமாவா?” என்று கேட்டான் தழுதுழுத்த குரலில்.


அவளும், “ம்ம்ம்” என்று தலையை ஆட்டியவள், “டூ வீக்ஸ்” ஆகுதுன்னு டாக்டர் சொன்னாங்க” என்றாள் நாணத்தில் தலை குனிந்தபடி.


அவள் சொன்னதைக் கேட்டு அப்படியே அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், அவன் உயிரைச் சுமந்து கொண்டு இருக்கும் அவளின் மணி வயிற்றில் ஆழமான முத்தத்தைப் பதித்தவனுக்கு அந்த நொடி இந்த உலகத்தையே வெற்றி கொண்டது போல் ஒரு கர்வம் பிறந்தது.


தன் வயிற்றில் முகம் புதைந்திருந்தவனின் முடியை மென்மையாக வருடிவிட்ட தர்ஷினியின் கையைப்பிடித்து அதில் ஆழ்ந்து முத்தம் பதித்தவன், “என் வாழ்க்கை முழுயாகிடுச்சு வினி, ஏனோதானோன்னு போயிட்டு இந்த வாழ்க்கையை நீ வந்து அர்த்தமுள்ள தான் மாத்திட்ட, தேங்க்ஸ்டி… ரொம்ப தேங்க்ஸ்” என்றவன் அவள் உள்ளங்கையில் முகத்தைப் புதைத்துக்கொண்டான்.


இங்கு மருத்துவமனையில் தன்வியிடம் வந்த அதீஷன், “என்னடி ஆச்சு இந்த தர்ஷனுக்கு… எங்க இப்படி ஓடுறான்?” என்று கேட்க அவளோ சாவகாசமாக, “யாருக்குத் தெரியும்… யாராவது முக்கியமானவங்களைப் பார்த்திருப்பாரு, போயிட்டாரு” என்று அசால்ட்டாக தோள்களைக் குலுக்க, அவளைச் சந்தேகமாகப் பார்த்தான் அதீஷன்.


“இதை என்னை நம்பச் சொல்றீயா? உன்னைக் கூட்டி வந்துட்டு இப்படி யாருக்காகவும் பாதில போகும் ஆள் இல்ல அவன்… இதுல வேற என்னமோ இருக்கு” என்றான் அவளைக் கூர்ந்து பார்த்தபடி.


“அட என்னங்க இது வம்பாப் போச்சு. போன ஆதுவைப் புடிச்சு இந்தக் கேள்வி எல்லாம் கேக்காம, சும்மா இருக்கற என்னை வந்து இப்படி நோண்டிட்டு இருக்கீங்க…” என்றாள் சலிப்பாக.


“இல்ல, நிச்சயமாக இதுல என்னமோ இருக்கு… இல்லாட்டி அவன் உன்னைத் தனியா விட்டுப் போக மாட்டான்.” என்றான் அதீஷன் மறுபடியும்.


“ப்ச்ச்… சும்மா நொய்நொய்னு உயிரை வாங்காதீங்க… கொஞ்ச நேரம் முன்ன நீங்க வரீங்கன்னு மெசேஜ் பண்ணி இருந்தீங்க, அதனால உங்களுக்கு எங்கயாவது முக்கியமான வேலை இருந்தால் பாருங்கன்னு சொன்னேன். அதான் நீங்க வந்ததும் அவர் போயிருப்பாரு… இதுக்குப்போய் தொணதொணன்னு பேசிகிட்டு… வாங்க, ஸ்கேனுக்கு டைம் ஆச்சு” என்றவள் தன் பெருத்த வயிற்றைக் கைகளில் தாங்கிப் பிடித்தபடி நடக்க, அவள் தோள்களைப் பிடித்து அழைத்துச் சென்ற அதீஷனுக்கு உள்ளுக்குள் ஏதோ நெருடியது.


இருவரும் காரில் வரும்போது அதீஷன் தர்ஷனை ஃபோனில் அழைக்க, வீட்டில் தான் வீட்டில் இருப்பதாகச் சொன்னவன், அவர்கள் இருவரையும் உடனே வீட்டுக்கு வரச்சொன்னான்.


“என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல… இவ பேச்சும் புரியல, அவன் பேச்சும் சரியில்ல… வீட்ல ஒரு சம்பவம் காத்திருக்குன்னு மட்டும்‌ புரியுது” என்று புலம்பியவன் தன்வியுடன் வீடுவந்து சேர்ந்தான்.


இருவரும் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க, அங்கு ஹாலில் ஆதர்ஷ், தர்ஷினி, அமிர்தா, வீரராகவன் என்று அனைவரும் அமர்ந்திருக்க, தர்ஷினியைப் பார்த்த அதீஷனுக்குப் பேரதிர்ச்சி.


“தர்ஷினி! நீங்க… இங்க?” என்றவன் வார்த்தைகள் வராமல் தடுமாறி நிற்க தன்வியோ, “வாங்க தஷ், உக்கார்ந்து பேசலாம்.” என்று சாவகாசமாகச் சொன்னவள், அவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.


அவளைப் பார்த்த அதீஷன், “ஏன்டி, உனக்கு தர்ஷினியைப் பார்த்து அதிர்ச்சியா இல்லயா?” என்று கேட்க, அவளோ, “இல்ல” என்றாள் அசால்ட்டாக.


அவள் பதிலிலேயே அதீஷனுக்குப் புரிந்து விட்டது, என்ன நடந்திருக்கும் என்று.


“சோ… தர்ஷன் ஹாஸ்பிடல்ல இருந்து அப்படி ஓடினது தர்ஷினியைப் பார்க்கத்தான். தர்ஷினி இன்னைக்கு ஹாஸ்பிடல் வருவாங்கன்னு உனக்குத் தெரியும். அதனால தான் இன்னைக்குத் தர்ஷனை நீ ஹாஸ்பிடலுக்கு உன்னோட கூட்டிட்டுப் போயிருக்க. ரைட்” என்று அதீஷன் கேட்க, அவளும், “எஸ் அஃப்கோர்ஸ்” என்று தோள்களைக் குலுக்கினாள்.


அப்போது ஆதர்ஷ், “அப்ப வினி எங்க இருக்கான்னு உனக்கு முன்னயே தெரியும் இல்ல?” என்று கேட்க, “யா யா தெரியும். சென்னையில் நாங்க வேலை பார்க்கும்போது எனக்கும் தர்ஷினி அக்காக்கும் ஒரு ப்ரண்ட் இருந்தா, உங்களுக்கு கூட அவளைத் தெரியும் கீர்த்தின்னு நம்ம சென்னை பிராஞ்சுல வொர்க் பண்ணிட்டு இருந்தா. அவ இப்ப யூஎஸ்ல தான் வேலை பார்க்குறா. நீங்க தர்ஷினி அக்காவைப் பார்த்தது அவளோட பிளாட்ல தான். இவங்க போன அடுத்த நாள் ஒருவேளை இவங்க கீர்த்தி வீட்டுக்குப் போயிருப்பாங்களோன்னு ஒரு டவுட் வந்தது, போய் பார்த்தேன். தேங்க் காட், அங்க தான் இருந்தாங்க.” என்றாள் அவளும் சளைக்காமல்.


“அப்பவே அதை ஏன்டி என்கிட்டச் சொல்லல?” என்று பற்களைக் கடித்தான் ஆதர்ஷ்.


“அதுக்கு நான் காரணம் இல்ல பாஸ். உங்க பக்கத்தில் இருக்கும் உங்க வருங்காலம் தான் அவங்க இருக்கற இடத்தை உங்ககிட்டச் சொல்லக் கூடாதுனு சொன்னாங்க… ஒருவேளை நான் அதை உங்ககிட்டச் சொல்லி, அது அவங்களுக்குத் தெரிஞ்சு அவங்க அங்க இருந்தும் போயிட்டாங்கனு வைங்க, அப்புறம் நான் அவங்களை எங்கப் போய் தேடுறது சொல்லுங்க… அதான் நானும் சொல்ல மாட்டேன்னு வாக்குக் கொடுத்துட்டேன். உங்களுக்கு தான் தெரியுமே, நான் கொடுத்த வாக்கை எப்பவும் மீற மாட்டேன்னு” என்று கண்ணடிக்க, ஆதர்ஷனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.


அதைப் பார்த்த தன்வி, “ஹலோ ரொம்பக் கொதிக்காதீங்க பாஸ்… அவங்க எங்க இருக்காங்கன்னு உங்கிட்டச் சொல்லல தான். ஆனா, இந்தப் பதினஞ்சு நாளா நீங்க அவங்க இல்லாமல் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டீங்க, எந்த அளவுக்கு அவங்களைத் தேடுனீங்கன்னு பாயிண்ட்டு பாயிண்டா கமெண்ட்ரி கொடுத்துட்டு இருந்தேன் தெரியுமா? அதைக் கேட்டு மனசு மாறித்தான் அவங்க இன்னைக்கு உங்களைப் பார்க்க வந்தாங்க… தெரிஞ்சிக்கோங்க…” என்றவள் இல்லாத காலரைத் தூக்கிவிட அவள்‌ காதைப் பிடித்துத் திருகிய அதீஷன், 


“தர்ஷன்கிட்டச் சொல்லல சரி. என் கிட்டயாது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்லடி… நானா கேட்டப்பவும் ஒன்னுமே தெரியாத மாதிரி என்னமா ஆக்டிங் பண்ணுன நீ” என்று முறைத்தவனைப் பார்த்து, “அய்யோ… ரொம்ப நல்லா இருக்கு நீங்க சொல்றது. உங்ககிட்டச் சொன்னா என்ன? அவர்கிட்டச் சொன்னா என்ன? எல்லாம் ஒன்னுதானே…” என்றவளைக் கண்கள் சுருக்கி முறைத்தான் ஆதர்ஷ்‌.


“பக்கத்துல இருந்து நான் கஷ்டப்படுறதைப் பார்த்துட்டு நீ சும்மா இருந்திருக்க இல்ல?” என்று கரகரத்த குரலில் பேசியவன் அருகில் வந்து அமர்ந்து அவனது கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டவள், “இதை நான் தர்ஷினி அக்காவுக்காக மட்டும் செய்யல ஆது. உங்களுக்காகவும் தான் செஞ்சேன். கடந்த இந்தக் கொஞ்ச நாள்ல உங்களால தர்ஷினி அக்கா இல்லாம வாழவே முடியாதுன்னு நீங்க நல்லாப் புரிஞ்சுகிட்டீங்க… அதேமாதிரி நீங்க அவங்க மேல எந்தளவுக்குக் காதல் வச்சிருக்கீங்கன்னு தர்ஷினிக்கும் இப்ப நல்லாப் புரிஞ்சிருக்கும். நீங்க ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சுகிட்டீங்க, சோ இனிமே உங்க லைஃப்ல எந்த விதமான ப்ராப்ளமும் வராது” என்றவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் ஆதர்ஷ்.


“தேங்க்ஸ் குட்டிப் பாப்பா… நீ மட்டும் இல்லன்னா, எனக்கு என்னோட வினி கிடைச்சிருக்க மாட்டா… ரொம்ப தேங்க்ஸ்.” என்றவனின் கலங்கி இருந்த கண்களைப் பார்த்தவள், “என் ஆதுவோட கண்ணு சந்தோஷத்தில் கூட கலங்கக் கூடாது.” என்றவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். 


ஆதர்ஷ், தர்ஷினி இருவரையும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வந்தது அமிர்தா மற்றும் வீரராகவனுக்கு.


“என் பேரன் வாழ்க்கை என்ன ஆகுமோன்னு மனசுக்குள்ள தவிச்சிட்டு இருந்தேன். இன்னைக்கு கடவுள் அருளால என் பேரனுக்குத் தங்கமாகப் பொண்ணு அமைஞ்சிருக்கு… தன்வி மாதிரியே ஒரு நல்ல குணமான பொண்ணு எங்க குடும்பத்துக்குக் கிடைச்சிட்டா” என்ற வீரராகவன் அமிர்தாவைப் பார்த்து, “இவங்க கல்யாணத்தை ஊரே மெச்சும்படி செய்யணும். தன்வி வளைகாப்புக்கு நம்ப எல்லாரும் இந்தியா போறோம். அவ டெலிவரி முடிஞ்சதும், இங்க கல்யாணம்.” என்றது தான் ஆதர்ஷனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.


“அதெல்லாம் அவ்ளோ நாள் எல்லாம் தள்ள வேணாம் தாத்தா. இங்கயே சிம்பிளா மேரேஜ் முடிச்சிட்டு, இந்தியா போய் கிராண்டா ரிசப்ஷன் வச்சிக்கலாம்.” என்றான்‌ அவசரமாக.


“ஏன்டா இப்படிச் சொல்ற? இன்னும் ஒரு வாரத்துல நம்ம இந்தியா போறோம். தன்விக்கு எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல குழந்தை பிறந்திடும். அப்புறம் கல்யாணத்தைச் சிறப்பா செஞ்சிடலாம்.” என்றார் அமிர்தா.


“அதெல்லாம் சிறப்பா எல்லாம் வேணாம். உடனே சிம்பிளா இங்கே மேரேஜ் முடிச்சிடலாம்.” என்று பரபரத்தவனைப் பார்த்து தர்ஷினி நெளிந்தபடி நிற்க, இருவரையும் பார்த்து வந்த சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தாள் தன்வி.


“டேய், அப்படி என்னடா அவசரம்?” என்று‌ அமிர்தா கேட்க, 


தன்வி மெல்லமாக எழுந்து நின்றவள், “அவசரம் இல்லம்மா… அவசியம். அவங்க புள்ள பொறுக்குறதுக்கு முன்ன கல்யாணத்தை முடிச்சிடனும்னு பார்க்குறாரு போல உங்க புள்ளை.” என்று விசயத்தை நடுவீட்டில் போட்டு உடைக்க அனைவரும் திகைத்து நின்றனர்.


ஆதர்ஷ் தன்வியை முறைப்படி நிற்க, தர்ஷினியோ அதீஷன் பின்னால் மறைந்து கொண்டாள். 


“டேய் தர்ஷா, என்னடா இது? தன்வி சொல்றது உண்மையா?” என்று வீரராகவன் கேட்க ஆதர்ஷனும், “அதான் உங்க அருமைப் பேத்தி போட்டு ஒடச்சிட்டாளே… அவ சொல்றது உண்மைதான். வீ ஆர் பிரெக்னன்ட். எங்கப் பாப்பாக்கு இப்ப டூ வீக்ஸ் ஆகுது.” என்றவனின் முகத்தில் தெரிந்த வெட்கத்தைப் பார்த்து அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.


அதீஷன், ஆதர்ஷ் அருகில் வந்தவன், “இந்தப் பூனையும் பால் குடிக்குமான்ற மாதிரியே திரிஞ்சியேடா… கல்யாணம் வேணாம், கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு, இப்படி ஃபர்ஸ்ட் நைட்டை முதல்ல முடிச்சிட்டியேடா தகப்பா…” என்று அவன் காதில் முணுமுணுக்க, அவன் வயிற்றில் குத்திய ஆதர்ஷ், “சும்மா இருடா, வினி கேட்டா சங்கடப்படுவா” என்று சொல்ல, “அடேங்கப்பா, இப்பவே பொண்டாட்டிக்குக் குடை புடிக்க ஆரம்பிச்சிட்டியா?” என்று அதீஷன் அவனைக் கலாய்க்க,


அதற்கு ஆதர்ஷனோ, “இந்தக் குடை பிடிக்கும் விஷயத்தில் நீதான்டா எனக்கு சீனியர். நீ தன்விக்குப் பண்ணாதது எதையும் நான் பண்ணிடல” என்று தம்பியின் காலைச் சரியான நேரத்தில் வாரி விட்டான் ஆதர்ஷ்.


அனைத்தும் நல்லபடியாக அமைய தர்ஷினியின் நிலையைக் கருத்தில் கொண்டு, அடுத்து வந்த நல்ல நாளில் ஆதர்ஷன், தர்ஷினியின் திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது.


திருமணம் முடிந்த அடுத்த இரண்டு நாட்களில் அனைவரும் இந்தியாவுக்குப் பறந்தனர்.


வெகு விமரிசையாக ஆதர்ஷ், தர்ஷினி திருமண வரவேற்பு நடக்க, அன்றைய மாலை தன்வியின் வளைக்காப்பும் நடந்து முடிந்தது.


சில நாட்களுக்குப் பிறகு,


நிலவைக் கண்டு வெண்பூக்கள் மலரும் அழகிய வேளையில் தன்வி, அதீஷனின் மகள் இந்தப் பூமியில் தன் பிஞ்சுப் பாதங்களைப் பதித்திருந்தாள். 


தன்விக்குக் குழந்தை பிறந்த அடுத்த ஒன்பதாவது மாதத்தில் தன் அக்காவுக்குத் துணையாக வந்து பிறந்தான் ஆதர்ஷ் தர்ஷினியின் மைந்தன். 


இரு குழந்தைகளின் வரவும் அந்தக் குடும்பத்தை மகிழ்ச்சியில் திளைத்திருக்கச் செய்ய அனைவரும் ஒரு குடும்பமாக இந்தியாவிலேயே இருக்கலாம் என்று உத்தரவு போட்டு விட்டார் வீரராகவன். அமிர்தாவுக்கும் அதில் சம்மதம் இருக்க, ஆதர்ஷனும் அதீஷனும் இங்கிருந்தபடியே அமெரிக்காவில் நடக்கும் தொழிலைப் பார்த்துக் கொள்ளலாம், தேவை இருக்கும்போது நேரில் செல்லலாம் என்று முடிவெடுத்தனர்.


அதீஷன், தன்வி காதல் யுத்தத்தில் ஆரம்பித்த கதை, ஆதர்ஷன், தர்ஷினி என்ற இரு காதல் உள்ளங்களை இணை சேர்த்த பிறகு இனிதே நிறைவுற்றது.

   

இனி இவர்கள் அனைவரும் இதே அன்போடு, காதலோடு வாழ்க்கை முழுவதும் நிம்மதியாக வாழ்வார்கள் என்று நம்பிக்கையுடன் நாமும் செல்வோம்

.


இணை சேருமோ இதயம், இனிதே சேர்ந்தது.


அன்புடன்

ரூபாவதி.


      ………….. சுபம் …………..