இதயம் 12
இதயம் 12
அன்றைய பார்ட்டி முடிந்து அனைவரும் கிளம்பிச் செல்ல, ஆதர்ஷன், அதீஷனின் கையைப் பிடித்துத் தன்பக்கம் இழுத்தவன், “டேய் அதீ… வினி கிளம்புறா பாரு… அவளை நம்ம கூட வரச்சொல்லு. வீட்டுல டிராப் பண்ணிட்டுப் போலாம். நைட்ல தனியா எல்லாம் போக வேணாம்.” என்றவனைப் புருவம் உயர்த்தி முறைத்தான் அதீஷன்.
“டேய், உனக்கு வேணும்னா நீயே போய் கூப்பிடு… சும்மா என்னைத் தூது போகச் சொல்லாத…” என்று கடுப்பாகச் சொல்ல, ஆதர்ஷ் பதிலுக்கு அவனை முறைத்தவன், “டேய்…” என்று பல்லைக் கடிக்க, “அய்யோ தஷ்… ப்ளீஸ் வந்த இடத்தில் உங்க சண்டையை ஆரம்பிக்காதீங்க…” என்று அவன் தோளைப் பிடித்து இழுத்த தன்வி, “இவருக்காக இல்ல… இந்த டைம்ல தர்ஷினி அக்கா தனியாப் போறது நல்லது இல்ல… அதனால நானே போய் கூப்பிடுறேன்.” என்று ஆதர்ஷனைப் பார்க்காமல் பேசிவிட்டு தர்ஷினியிடம் சென்றாள்.
“அக்கா வாங்க… நாங்க உங்களை ட்ராப் பண்றோம்” என்று சொல்ல தர்ஷினி இடவலமாகத் தலையாட்டியவள், “இட்ஸ் ஓகே தன்வி… நான் கேப் புக் பண்ணிப் போயிடுவேன்.” என்றாள் தர்ஷினி.
“அதெல்லாம் முடியாதுக்கா, லேட் நைட் ஆகிடுச்சாம். நீங்க தனியாப் போக வேண்டாமாம். அவளைக் கூப்பிடு, நம்ம ட்ராப் பண்ணிட்டுப் போலாம்னு சொல்லி அனுப்பிச்சாரு நம்ம பாஸ்சு” என்று ஏற்ற இறக்கமாகச் சொல்ல, தர்ஷினி அவள் பேசியதைக் கேட்டு விரக்தியாகச் சிரித்தவள், “பரவாயில்லை தன்வி… நானே போயிடுவேன், நீங்க கிளம்புங்க…” என்றாள்.
“அக்கா ப்ளீஸ்… தேவையில்லாம எதுவும் யோசிக்காதீங்க… இது ஜஸ்ட் ஒரு ஹெல்ப் அவ்ளோதான். வாங்க…” என்றவள் தர்ஷினியின் பதிலை எதிர்பார்க்காமல் அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள்.
காரில் முன் இருக்கையில் ஆதர்ஷ், அதீஷன் அமர்ந்திருக்க, பின் இருக்கையில் தன்வியோடு அமர்ந்திருந்தாள் தர்ஷினி.
அதீஷன் காரை ஓட்ட, அவன் அருகில் இருந்த ஆதர்ஷின் பார்வை முழுவதும் ரிவ்யூ மிரர் வழியே தெரிந்த தர்ஷினியின் கண்களில் தான் பதிந்திருந்தது.
அவர்கள் புறப்பட்ட நொடி முதல் இந்த நொடி வரை ஒரு முறையாவது அவள் தன்னைப் பார்க்க மாட்டாளா? என்ற எதிர்பார்ப்போடு அமர்ந்திருந்தவனுக்கு அவளின் பாராமுகம் அதிக வலியைக் கொடுத்தது.
‘நிமிர்ந்து பார்க்குறாளா பாரு… ஒரு வாரமா இவ முகத்தைப் பார்க்காம எனக்கு என்னமோ மாதிரி இருக்கு… ஒரு வேலையும் ஒழுங்கா செய்ய முடியாமல் கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். ஆனா, இவ என்னடான்னா என் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்கல’ என்று உள்ளுக்குள் பொரும, அப்போது அவன் மனசாட்சியோ, ‘நீதானடா சொன்ன, அவளை உன்னை விட்டுப் போகச் சொல்லி… இப்ப இப்படி பேசிட்டு இருக்க? அவதான் அன்னைக்கே சொன்னாளே, இனிமே உங்க கண்ணு முன்னாடி வரமாட்டேன்னு… அவ சொன்னதைத்தான் இப்பச் செஞ்சிட்டு இருக்கா’ என்று தர்ஷினிக்காக முட்டுக் கொடுக்க, அதன் தலையில் ஓங்கிக் கொட்டியவன், ‘நீ என்னோட மனசாட்சி… எனக்குத்தான் சப்போர்ட் பண்ணனும். அதைவிட்டு அவளுக்கு குடை பிடிச்சிட்டு இருக்கியே?’ என்று கேட்க, ‘உன்னோட மனசு யாருக்கு சப்போர்ட் பண்ணுதோ, நானும் அவங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன். உன்னோட மானம் கெட்ட மனசு தர்ஷினி பக்கம் தான் நிக்குது. நான் என்ன செய்ய?’ என்று நாக்கைப் பிடுங்கும்படி கேட்க, ஆதர்ஷன் தான் வாயடைத்துப் போனான்.
அவள் மேல் எந்த உணர்வும் இல்லை என்று மற்றவர்களிடம் பொய் சொல்லலாம்… ஆனால், அவனுள் இருக்கும் மனசாட்சியிடம் பொய்யுரைக்க முடியாதே, அதற்கு நன்கு தெரியுமே அவன் மனதில் என்ன இருக்கிறது என்று…
அதற்குமேல் அவன் மனதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்பாமல் ஆழ்ந்து மூச்செடுத்த ஆதர்ஷன் கண்களை மூடிக் கொண்டான்.
தர்ஷினியை அவள் வீட்டின் முன்பு இறக்கிவிட்ட அதீஷன், “குட் நைட்… நாளைக்கு ஆஃபீஸ்ல மீட் பண்ணலாம் தர்ஷினி.” என்று சொல்ல, தர்ஷினி இடவலமாகத் தலையாட்டியவள், “இல்ல அதீ… இதுக்கு அப்புறம் நான் ஆஃபீஸ் வரவேண்டிய அவசியம் இருக்காது. ஆல்மோஸ்ட் எல்லா வேலையும் ஓவர். மீதி வேலையை நான் வீட்டுல இருந்தே பண்ணிக் கொடுத்திடுறேன். எனக்கு வேற கன்ட்ரில ஜாப் கிடைச்சிருக்கு… சீக்கிரம் இந்தப் ப்ராஜெக்ட்டை முடிச்சிட்டு நான் அங்கப் போயிடுவேன்” என்றவளின் கண்கள் என்னவோ அதீஷனைப் பார்த்தாலும், அவள் சொன்ன பதில் என்னவோ ஆதர்ஷனுக்கு தான் என்று அங்கிருந்த நால்வருக்கும் புரிந்தது.
‘என்ன? அதுக்குள்ள வேற ஜாப் பார்த்துட்டாளா? அப்பக் கூடிய சீக்கிரம் இவ இங்க இருந்து போயிடுவாளா?” என்ற நினைப்பே அவனுக்குச் சொல்ல முடியாத வேதனையைக் கொடுக்க, அந்த வேதனையின் விளைவை அனுபவிக்கப்போவது என்னவோ தர்ஷினி தான்.
அவள் போகிறாள் என்ற செய்தியைக் கேட்டவன், அவசரத்தில் தர்ஷினியை உயிரோடு மரிக்கச் செய்யும் ஒரு செயலைத் துணிந்து செய்திருந்தான். அதன் பலனாக ஒரு நாள் அவன் கண்ணீர் விட்டுக் கதறி அழப் போகிறான் என்பதை அறியாமல்.
இரவு முழுவதும் உறங்காமல் தர்ஷினியைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தவனுக்கு, குற்றவுணர்வோ மேலோங்கி இருந்தது.
’என்னாலதான் அவ வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு… நான் மட்டும் அவ வாழ்க்கையில் வராமல் போயிருந்தால், இன்னேரம் யாரையாவது மேரேஜ் பண்ணி அவ சந்தோஷமாய் இருந்திருப்பா… இப்ப என்னால அவ வாழ்க்கை இப்படி தனிமையில் இருக்கு’ என்று புலம்பியவனுக்கு எப்படியாவது அவளின் இந்தத் தனிமை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தோன்ற… அவள் மனதில் அடிமரவேர் போல் அவன் ஊடுருவி இருப்பதை அறியாமல், யோசிக்காமல் ஒரு முடிவை எடுத்து அதற்கான வேலையிலும் இறங்கி விட்டிருந்தான்.
அடுத்த இரண்டு நாட்கள் அமைதியாகக் கழிந்தது.
அன்று இரவு முழுவதும் உறங்காமல் விழித்துக் கிடந்த தர்ஷினி, அவளையும் அறியாமல் விடியும் தருவாயில் தான் உறங்கி இருந்தாள். காலை ஏழு மணி போல் கண் விழித்தவள், அவள் அலைபேசியை எடுத்துப் பார்க்க, அதில் ஆதர்ஷனிடம் இருந்து பல அழைப்புகள் வந்திருந்ததாகக் காட்டியது.
‘இவரு ஏன் கால் பண்ணி இருக்காரு?’ என்று யோசித்தவள், ‘இப்ப என்ன பண்றது? திருப்பிக் கூப்பிடலாமா? வேணாமா?’ என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே, மீண்டும் அவனிடம் இருந்து அழைப்பு வந்தது.
ஒரு கணம் அழைப்பை ஏற்பதா? இல்லயா என்று யோசித்தவள் விரல் அனிச்சையாய் அவன் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தது.
“குட் மார்னிங் வினி” என்ற உற்சாகமாக வந்த ஆதர்ஷனின் குரலில் இவளின் உள்ளத்தின் உறுதி உருக ஆரம்பித்தது.
“வினி…”
“வினி… லைன்ல இருக்கியா?” என்ற அவன் கேள்வியில் சட்டெனத் தெளிந்தவள், “ம்ம்ம்” என்றாள் சத்தமே வெளியில் வராமல்.
“வினி, நான் உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்.” என்றான் அமைதியான குரலில்.
“ம்ம்ம்” என்றாள் அவள் மீண்டும்.
“ப்ளீஸ் வினி… ம்ம்ம் ம்ம்ம் சொல்லி என்னை இம்சை பண்ணாத... வாயைத் திறந்து பேசு” என்றான் கெஞ்சலாக.
அதற்கு மேல் அவளாலும் அவள் உறுதியை இறுக்கிப் பிடிக்க முடியாமல் போக, “சொல்லுங்க சார்” என்றாள் மெல்லிய குரலில்.
ஏனோ அவனின் மனம் அவளின் ‘தர்ஷன்’ என்ற அழைப்புக்காக ஏங்கியது.
“தர்ஷன்னு கூப்பிடு வினி…” என்று தன்னை மறந்து கேட்டே விட்டான் ஆதர்ஷ்.
அவன் சொன்னதைக் கேட்டு ஒரு கணம் திகைத்தாள் என்றால், இங்கு ஆதர்ஷனோ ‘நான் ஏன் அப்படிக் கேட்டேன்’ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.
இருவரும் சில நொடிகள் அமைதியாக இருக்க, “சொல்லுங்க தர்ஷன்” என்று அந்த அமைதிக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் தர்ஷினி.
அவளின் தர்ஷன் என்ற அழைப்பில் மனம் குளிர்ந்தவன், “இல்ல வினி… இது ஃபோன்ல பேசும் விஷயம் இல்ல… நம்ம நேர்ல பார்த்துப் பேசணும்.” என்றான் ஆதர்ஷ்.
“நேர்ல மீட் பண்ற அளவுக்கு என்ன விஷயம், ப்ராஜெக்ட்ல எதுவும் ப்ராப்ளமா?” என்று கேட்டாள் தர்ஷினி.
“இது ப்ராஜெக்ட் பத்தி இல்ல வினி… இது நம்மைப்பத்தி நம்ம வாழ்க்கையைப்பத்தி…” என்றவன் ஒருகணம் நிறுத்தி, “உன் வாழ்க்கை பத்தி, உன் பர்சனல் பத்திப் பேசும் உரிமை எனக்கு இருக்கில்ல வினி?” என்று அவன் தயங்கித் தயங்கி உள்ளே சென்ற குரலில் கேட்க, அவள் தவித்துதான் போனாள்.
“உங்களைத் தவிர அந்த உரிமை வேற யாருக்கும் இல்ல தர்ஷன்” என்றாள் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே.
அவளின் வார்த்தையில் மனம் நிறைந்த ஆதர்ஷ், “ஓகே வினி, ஈவ்னிங் உனக்கு எங்க வரணும்னு மெசேஜ் பண்றேன். டைம்க்கு வந்திடு” என்க தர்ஷினியும், “சரி” என்றாள்.
ஆதர்ஷ் பேசிய கொஞ்ச நேரத்தில் தன்வி, தர்ஷினியை அழைத்திருந்தாள்.
“எப்படி இருக்கீங்க க்கா?” என்று கேட்க தன்வியின் அன்பில் மனம் நெகிழ்ந்தவள், “நான் நல்லாத்தான் தன்வி இருக்கேன். நீதான் என்னை நினைச்சு ரொம்ப ஸ்ட்ரெஸ் (stress) ஆகுற… இந்த மாதிரி நேரத்தில் நீ ரொம்பச் சந்தோஷமா, அமைதியா இருக்கணும். அதைவிட்டு, எப்பவும் என்னைப்பத்தியே யோசிச்சிட்டு இருக்காத” என்று அக்கறையுடன் கோபித்துக் கொண்டாள்.
அதைக்கேட்ட தன்வி, “எப்படி அக்கா, நான் சந்தோஷமா இருக்க முடியும்? சும்மா இருந்த உங்களை இங்க வரவச்சு… தேவையில்லாமல உங்க மனசைக் காயப்படுத்திட்டேன்.” என்று வருந்தியவள், “எல்லாம் இந்த ஆதுவால் வந்தது...” என்று அவனைக் கண்டபடி வார்த்தையால் வறுத்தெடுக்க, அவன் மேல் தீராக் காதல் கொண்ட மங்கை அவளுக்குக் கண்கள் கலங்கி விட்டது.
“ப்ளீஸ்டா, அவரைத் திட்டாத… இதுல அவர் மேல எந்தத் தப்பும் இல்லை. அவர் ஒண்ணும் என்னை லவ் பண்ணி ஏமாத்தலயே… அவர் முதல்ல இருந்தே என்னைப் புடிக்கலன்னு தானே சொன்னாரு… நான் தான் அவர் சொன்னதைக் கேக்காமல் இப்படி” என்றவளுக்குக் காதல் வலியில் நெஞ்சம் விம்மியது.
“அவருக்கு உங்களைப் புடிக்காதுன்னு யார் சொன்னா? அதெல்லாம் அவருக்கு உங்களை ரொம்பப் புடிக்கும். ஆனா, ஏன் அதை வெளிப்படையா சொல்ல மாட்டேன்னு அடம் புடிச்சிக்கிட்டு இருக்காருன்னு தான் புரியல.” என்று இழுத்துப் பெருமூச்சு விட்டவள், “ம்ம்ம், ஒரு நாள் அவர் மனசு அவருக்குப் புரியும். அப்ப எல்லாத் தடையையும் உடைச்சிட்டு உங்ககிட்டப் பேசுவாரு பாருங்க.” என்று தன்வி சொன்ன போதுதான் தர்ஷினிக்கு ஆதர்ஷ் அழைத்தது நினைவுக்கு வந்தது.
“தன்வி, கொஞ்ச நேரம் முன்ன தர்ஷன் எனக்குக் கால் பண்ணி இருந்தாரு…” என்றாள்.
“அப்படியா? என்று புருவம் சுருக்கிய தன்வி, “என்னவாம் அவருக்கு?” என்று கேட்க, தர்ஷினி அவன் சொன்னதை அப்படியே தன்வியிடம் சொன்னாள்.
தர்ஷினி சொன்னதைக் கேட்டு யோசனையில் சுருங்கி விரிந்த தன்வியின் முகத்தில் சட்டென (switch) ஸ்விட்ச் போட்டது போல் பிரகாசமாக, “வினிக்கா, நான் சொன்னது நடந்திடும் போல இருக்கே…” என்றாள் உற்சாகமாக.
“என்ன சொல்ற தன்வி… என்ன நடக்கும்னு சொல்ற?” என்று கேட்டாள் தர்ஷினி புரியாமல்.
“அய்யோ… மக்கு அக்கா, இவளோ நாள் இல்லாமல் இப்ப எதுக்கு ஆது உங்களைப் பார்த்துப் பேசணும்னு சொல்லணும். அதுவும் உங்க வாழ்க்கை பத்திப் பேசணும்னு சொல்லி இருக்காரு… அப்ப என்ன அர்த்தம்? அவரு மனசில் இருக்கிறதை உங்ககிட்டச் சொல்லப் போறாருன்னு தானே அர்த்தம்.” என்றாள் குதூகலமாக.
“என்ன சொல்ற நீ… நிஜமா அப்படி இருக்குமா?” என்று கேட்ட தர்ஷினியின் குரலில் அத்தனை எதிர்பார்ப்பு…
“பின்ன… போன கொஞ்ச நாளா நாங்களும் அவரைப் பார்த்துட்டு தானே இருக்கோம். அவரு அவராவே இல்ல… எப்பப்பாரு எதையோ யோசிச்சிட்டு இருப்பாரு. சரியாச் சாப்பிடுறது இல்ல, தூங்குறது இல்ல… ரொம்ப ஒரு மாதிரி ஆகிட்டாரு. இன்னும் சொல்லப் போனா, நான் இத்தனை நாளா அவர்கிட்டப் பேசாம இருக்கேன்னு உணராத அளவுக்கு அவர் தன்னைத் தொலைச்சிட்டுச் சுத்திட்டு இருக்காரு…” என்ற தன்வியின் குரலிலேயே தெரிந்தது அவளின் வருத்தம்.
“தன்வி அவரு வேணும்னு எல்லாம் உன்னைக் கவனிக்காம இல்ல” என்று அவள் தொடங்கும் போதே, “ப்ளீஸ்கா… எனக்கு விளக்கம் எல்லாம் தேவையில்ல… என்னால ஆதுவைப் புரிஞ்சிக்க முடியுது. நானும் தஷ் வந்த பிறகு ரொம்ப மாறி இருக்கேன். சோ, எனக்கு நீங்க ஆறுதல் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. இன்ஃபேக்ட் எனக்கு இதுல சந்தோஷம் தான். பிகாஸ் அவரையே மறக்கும் அளவுக்கு அவர் மனசுல நீங்க இருக்கீங்க… அதுபோதும் எனக்கு…” என்றவள் தொடந்து, “இன்னைக்குப் போகும் போது அழகா டிரஸ் பண்ணிட்டுப் போங்க… ஆது உங்களைப் பார்த்தவுடனே கவுந்திடனும். ரெண்டு பேரும் பேசி முடிச்சிட்டுச் சொல்லுங்க… பெரியவங்க நாங்க நல்ல நாள் பார்த்து உங்களுக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறோம்.” என்று சொல்லிச் சிரிக்க, தர்ஷினியோ தன்வி சொன்னதுபோல் நடந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்க, அந்த நினைப்பே அவளுக்கு அத்தனை மகிழ்ச்சியைக் கொடுத்தது.
“க்கா…”
“வினிக்கா..” என்று தன்வி கத்திய கத்தில் கற்பனையில் இருந்து வெளியே வந்த தர்ஷினி, “ம்ம்ம் சொல்லு தன்வி” என்றாள் தடுமாறிய குரலில்.
“என்னக்கா, கற்பனை உலகத்துக்குப் போயிட்டீங்க போல?” என்று அவளைக் கிண்டல் செய்தவள், “சரிக்கா… ஈவ்னிங் போயிட்டு வந்த பிறகு எனக்கு என் நடந்ததுன்னு சொல்லுங்க… நான் தஷ் கிட்டயும், அமிர்தா அம்மா கிட்டயும் சொல்லி அடுத்தடுத்து வேலையைப் பார்க்கணும்.” என்று அழைப்பைத் துண்டித்தவள் அறியவில்லை அடுத்து நடக்கப் போவதை.
தர்ஷினி அவளிடம் கேட்கப் போதும் வரத்தால் அவளின் வாழ்க்கையே அடியோடு மாறிவிடும் என்று தெரிந்தும், அவளால் தர்ஷினிக்கு அந்த வரத்தைத் தரமுடியுமா? அதற்கு ஆதர்ஷன் சம்மதிப்பானா? இனி நடக்கப் போகும் அனைத்தும் விதியின் வழிப்படி தான்…
மதியம் போல் தர்ஷினியை அழைத்திருந்த ஆதர்ஷன், ஒரு ஹோட்டலின் பெயரைச் சொல்லி அங்கு அவளை மாலை நான்கு மணிக்கு வரச்சொல்லி இருந்தான்.
தர்ஷினியும் தன்வி சொன்னதுபோல், ஆதர்ஷ் தன் காதலை ஏற்றுக் கொண்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து உள்ளுக்குள் பூரித்துப் போனவள், என்றும் இல்லாத அளவுக்கு பார்த்துப் பார்த்துத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.
ஆதர்ஷ் சொன்ன நேரத்திற்கு அந்த ஹோட்டலுக்கு வந்திறங்கியவளைப் பார்த்த ஆதர்ஷின் கண்கள் அவளைப் பார்த்தது பார்த்தபடி அப்படியே இமைக்காமல் நின்று போனது.
ஆகாய வண்ணப் புடவையில் அளவான ஒப்பனை செய்து, நீண்ட தன் கூந்தலைத் தோள்களில் தவழ விட்டபடி, வானத்து தேவதை பூமியில் இறங்கி வந்தது போல் தன்னை நோக்கி நடந்து வந்தவளின் அழகில் தன்னைத் தொலைத்து நின்றான் ஆதர்ஷ்.
“தர்ஷன்…”
“தர்ஷின்” என்றவள் அவன் தோளைப் பிடித்து உலுக்கி, மீண்டும் “தர்ஷன்” என்று கத்தி அழைத்த கணம், அதுவரை அவனைச் சுற்றியிருந்த அழகிய மாயவலை அறுபட்டு விட, நிகழ் உலகிற்கு வந்தவன், “ரொம்ப அழகா இருக்க வினி…” என்றான் தன்னை மறந்து.
அவன் தன்னை ரசிக்கிறான் என்பதை அவன் கண்களைப் பார்த்தே புரிந்து கொண்டவள், அவன் வாய் வார்த்தையிலும் அதைக் கேட்ட பிறகு வெட்கத்தில் முகம் சிவந்து தலையைக் குனிந்து கொண்டாள்.
வெட்கத்தில் சிவந்துவிட்ட அவள் முகத்தை ஒரு கணம் ரசித்துப் பார்த்தவனின் மனதில், அவளின் கன்னத்தின் சிவப்பை ஸ்பரிசித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏழ, மெல்ல அவளை நோக்கித் தன் கையை உயர்த்திய நேரம், அவனின் எண்ணம் போகும் திசை உணர்ந்த தர்ஷினி, “தர்ஷன்…” என்று அழுத்தமாக அவன் பெயரைச் சொல்லி அழைக்க, அப்போதுதான் தான் என்ன செய்ய இருந்தோம் என்ற உணர்வே ஆதர்ஷனுக்கு வந்து, சட்டெனத் தன் கையை இறக்கிக் கொண்டவன், “சாரி… சாரி வினி…” என்றவனுக்குத் தான் எடுத்திருக்கும் முடிவை நினைத்து நெஞ்சம் நடுங்கியது. தன்னால் இது முடியுமா? என்று ஆயிரமாவது முறையாகத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டவன், பின் ஆழ்ந்த மூச்செடுத்தபடி, “இங்க ரூம் புக் பண்ணி இருக்கேன், அங்க போய் பேசலாம் வா…” என்றபடி அவளைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.
இனி நடக்கப் போகும் எல்லாம் அந்த விதியின் பிடியில் தான்.