விழி வழி காதல் நுழைந்ததடி 22

விழி 22 


அன்று மாலை வேளையில் தான் பார்ட்டி நடைபெற இருந்தது. காலையில் இருந்து மாலை வரை அறையில் அடைந்து கிடக்க வேண்டாம் என்று, அந்த ரிசார்ட்டைச் சுற்றி இருந்த இடங்களை ஒரு சுற்று சுற்றிவிட்டு வரலாம் என்று நினைத்து ஒரு காரை வரவழைத்திருந்தான் ஆதர்ஷ்.


அந்தக் காரில் தான் இருவரும் பயணித்துக் கொண்டிருந்தனர். அந்த ரிசார்ட்டைச் சுற்றி இருந்த இடங்கள் அனைத்தையும் முடிந்த வரை சுற்றிப் பார்த்தனர். சில இடங்களில் காரை ஒதுக்கி விட்டு, கைகோர்த்தபடி பேசிக் கொண்டு நடந்தனர். அவள் கேட்டது மட்டும் இல்லாது அவள் நினைத்ததைக் கூட அவளுக்காக வாங்கிக் குவித்தான் அவள் ஆசைக் கண்வன்.


மதியம் போல் அங்கிருந்த சிறிய உணவு விடுதியில் இருவரும் அரட்டை அடித்தபடி உண்டு முடித்து மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். ஒருவர் அருகாமையை ஒருவர் உணர்ந்து உள்ளுக்குள் ரசித்து அந்த நேரத்தின் நிமிடங்கள் ஒவ்வொன்றையும் உள்ளத்துள் பொக்கிஷமாகச் சேர்த்து வைத்தனர் இருவரும்.


ஒரு வழியாக அவர்களின் நகர்வலம் அழகாக முடிய நேரத்தோடு ரிசார்ட்டுக்கு வந்து பார்ட்டிக்குத் தயாராகி வெளியே வந்தவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் மயங்கி நின்றனர்.


கறுப்பு நிற டிஸைனர் சேலை அவளின் கோதுமை நிறத்திற்கும், அவள் உடலின் ஏற்ற இறக்கங்களுக்கும் ஏற்ற வகையில் அழகாகப் பொருந்தியிருந்தது. பின்னாமல் விரித்து விட்டிருந்த அவள் கூந்தல் காற்றில் மெதுவாகப் பறந்து அவள் கன்னத்தில் விளையாடிக் கொண்டிருக்க, தேவதையாகத் தன் முன் நின்றவளை விட்டுப் பார்வையை நகர்த்த முடியாமல் ஆதர்ஷ் உறைந்து நின்றான் என்றால் பெண்ணவளோ, கறுப்பு நிறப் பேண்ட், சட்டையில் கம்பீரமாக நின்றவனைப் பார்த்து உருகி நின்றாள்.


அவர்களுக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் ஒருவரை ஒருவர் பார்வையாலேயே விழுங்கி விட்டிருப்பர் என்னும் அளவு ஒருவரை ஒருவர் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருக்க, அவர்களின் அந்த மோன நிலையைக் கலைத்தது அந்தக் கைபேசியின் சத்தம்.


சட்டெனக் கண்களைச் சிமிட்டி உணர்வுக்கு வந்த ஆதர்ஷன் தன்வியைப் பார்க்க, அவளோ இன்னும் அவள் கணவனைக் கண்களால் கட்டி அணைத்தபடியே இருந்தாள்.


அவளின் ஆழ்ந்த பார்வையைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் கர்வமும், காதலும் சம அளவில் உண்டானது.


'உன்னோட காதலை நீ வார்த்தையில் சொல்லத் தேவையே இல்லடி, இந்தக் கண்ணு ரெண்டுமே போதும். வார்த்தைகள் கூட எனக்குப் புரியாமல் போகலாம். ஆனா, உன் கண்ணுல தெரியும் இந்தக் காதல் என் உயிர் வரைக்கும் துளைச்சுப் போகுதுடி… ஆயிரம் காதல் வார்த்தைகள் சொல்லாத காதலை உன்னோட இந்த ஒரு ஆழ்ந்த பார்வை சொல்லுதுடி… இந்தப் பார்வை எனக்கானது, எனக்கு மட்டுமே சொந்தமானது' என்றவன் உள்ளம் மகிழ்ச்சிக் கூத்தாட மெல்ல அவள் அருகில் சென்றவன், "தன்வி" என்றபடி அவள் தோளில் கைவைத்து உலுக்கினான்‌.


"ஹான்…" என்றபடி நிகழ்வுக்கு வந்திருந்தவள் அவன் முகம் பார்க்க, அதில் அத்தனைக் குறும்பு.


இத்தனை நேரமும் லஜ்ஜையே இல்லாமல் அவனைப் அடித்துப் பார்த்துக் கொண்டிருந்ததை நினைத்தவளுக்கு வெட்கத்தில் கன்னங்கள் சிவந்து போக அதைப் பார்த்து ஆதர்ஷ், "என்ன தன்வி மேடம், இன்னைக்கு மேக்கப் கொஞ்சம் ஓவர் போல, கன்னம் ரெண்டும் சும்மா செக்கச் செவேல்னு இருக்கு, பிளஷ் (blush) கொஞ்சம் அதிகம் ஆகிடுச்சு போல…” என்று ஒற்றை விரலால் அவள் கன்னத்தை வருடியபடி விஷமமாகக் கேட்டுக் கண்ணடிக்க, அதில் இன்னும் அவள் கன்னங்கள் சிவப்பேறிப் போனது.


சட்டெனத் தலையைக் குனிந்து கொண்டவள், "அதெல்லாம் ஒண்ணும் இல்ல, கிளைமேட் கொஞ்சம் சில்லுன்னு இருக்கும் போல, அதான் கன்னம் சிவந்திருக்கும்." என்றாள் அவசரமாக.


ஒற்றை விரலால் அவள் நாடியைப் பிடித்து அவள் முகத்தை நிமிர்த்தியவன், "அப்படி ஒண்ணும் சில்லுன்னு எல்லாம் இல்லயே…" என்றவன், "இது சில்னஸ்னால வந்த சிவப்பா? இல்ல, உனக்குள்ள நடந்த சில்மிஷத்தால வந்த சிவப்பா?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி விஷமச் சிரிப்போடு கேட்க, அவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது.


'அய்யோ இவரு விடமாட்டாரு போலயே… எனக்கு ஒரு மாதிரி வெக்க வெக்கமா வருதே' என்று மனதிற்குள் புலம்பியவள், 'கடவுளே என்னைக் காப்பாத்து' என்று முணுமுணுக்க, அது கடவுளுக்குக் கேட்டு விட்டது போலும். மீண்டும் ஆதர்ஷின் அலைபேசி அடித்தது.


அதை ஏற்றுக் காதில் வைத்தவன், "நாங்க ரெடி தான், டூ மினிட்ஸ்ல பார்ட்டி ஹால்ல இருப்போம்" என்று அழைப்பைத் துண்டித்தவன் தன்வியை பார்த்து, "வா போகலாம்" என்று சொல்ல அப்போதுதான் அவளுக்கு உயிரே வந்தது.


'தப்பிச்சேன்டா சாமி' என்று நெஞ்சில் கை வைத்தவள், வேக வேகமாக அறையை விட்டு வெளியேற, அவளைப் பார்த்துச் சத்தமாக சிரித்தபடியே ஆதர்ஷனும் அவள் பின்னால் சென்றான். 


பார்ட்டி நல்ல முறையில் நடந்து கொண்டிருக்க, எப்போதும் இந்த மாதிரிப் பார்ட்டிகள் என்றால் ஒதுங்கி நிற்கும் தன்வி, முதல் முறையாய் ஆதர்ஷின் மனைவி என்ற ஸ்தானத்தில் அங்கிருப்பதை வெகுவாக ரசித்தாள்.


நேரம் ஆக ஆக வயதில் மூத்தவர்கள் தங்கள் அறைகளுக்குச் சென்றுவிட, எஞ்சி இருந்த இளையவர்கள் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடினர். சிலர் ஆதர்ஷ், தன்வியை ஆடும்படி சொல்ல தன்வியோ, "எது டான்ஸ்ஸா" என்று கண்களை விரித்தவள், "என்னால முடியாது, எனக்கு வெக்கமா இருக்கு" என்று சொல்ல, ஆதர்ஷன் அவள் முன் வந்து ஒற்றைக் காலை மடக்கி, தரையில் முட்டி போட்டபடியே அவள் முன் தன் இடக்கையை நீட்டி, "ஷால் வீ டான்ஸ்?" என்று வசீகரிக்கும் சிரிப்பை உதிர்த்தபடி கேட்க, பின் எங்கிருந்து அவனவள் மறுப்பாள். 


ஆதர்ஷின் செய்கையைப் பார்த்து அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்ய, தன்வி அவளது வலக்கையை அவன் இடக்கையில் வைத்தாள். அவள் கையைப் பிடித்தபடி எழுந்த ஆதர்ஷன், அவள் இடையைத் தன் கைகளால் வளைத்துக்கொண்டு ஆடத் தொடங்கினான். 


ஒருவர் விழியை ஒருவர் பார்த்தபடி உலகை மறந்து, ஒருவரில் ஒருவரை இழந்து, உணர்வுகள் கலந்து ஆடிக் களைத்து, இருவரும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.


தன்வி அவன் தோளில் சாய்ந்து கொண்டவள், அவன் கையில் தன் கையைக் கோர்த்துக் கொண்டாள். அந்த அழகிய நிமிடங்கள் அவர்கள் இருவர் நெஞ்சையும் சில்லென்று சிலிர்க்க வைத்த கணம், அந்த நிமிடத்தை அடித்து நொறுக்கத் தவறான நேரத்தில் சரியாக அடித்தது ஆதர்ஷனின் கைபேசி. 


அந்தச் சத்தத்தில் கடுப்பான ஆதர்ஷன், "ஹூ இஸ் தி டாக் வாய்ஸ்" என்று எரிச்சலாகக் கைப்பேசியின் திரையைப் பார்த்தவன், அடுத்த நொடி சட்டெனத் திரும்பித் தன்வியின் முகத்தைப் பார்க்க, அவளும் அந்தத் திரையில் தெரிந்த பெயரைத்தான் கலங்கிய விழிகளோடு பார்த்துக் கொண்டு இருந்தாள். 


சட்டென ஆதர்ஷின் கையில் இருந்த தன் கையை வெடுக்கென்று உருவிக் கொண்டவள் முகத்தில் அதுவரை இருந்த மகிழ்ச்சி வெய்யிலில் வைத்த பனிக்கட்டியாக உருத்தெரியாமல் தொலைந்திருக்க, "நீ..நீங்க பேசுங்க… நா..நான் போறேன்" என்றவள் அங்கிருந்து நகர, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நின்றான் ஆதர்ஷன்.


அழைப்பை ஏற்றுக் காதில் வைத்து, "எஸ் ஆலன்" என்றவனின் பார்வை முழுவதும் அங்கிருந்து போகும் தன்னவள் மேலேயே இருக்க, தன்வி கண்ணீர் வழியும் தன் கண்களைத் துடைத்தபடி சென்றவள், அங்கிருந்த டேபிளின் மேல் இருந்த கண்ணாடி டம்ளரில் இருந்த திரவத்தைத் தண்ணீர் என்று நினைத்து எடுத்து மடமடவெனக் குடிக்க, அதைப் பார்த்த ஆதர்ஷனுக்கு மொத்த உடலும் பதறியது.


"ஆலன், ஐ கால் யூ லேட்டர்" என்று அழைப்பைத் துண்டித்தவன், வேகமாக தன்வியின் அருகில் வந்து அவள் கையில் இருந்த டம்ளரைப் பிடுங்குவதற்கு முன்னமே அவள் மொத்தத்தையும் குடித்து முடித்திருந்தாள்.


"அடியேய், ஏன்டி இதைக் குடிச்ச" என்று அவன் அடிக்குரலில் சீற, அவனைக் கண்கள் சுருக்கி முறைத்த தன்வி, "ஏன் குடிச்சா என்னவாம்? தாகம் எடுத்தா தண்ணி குடிக்கக் கூட எனக்கு உரிமை இல்லயா?" என்று அவளும் பதிலுக்குக் கத்த, ஆதர்ஷ் தலையில் அடித்துக் கொண்டவன், "அடியேய், நீ குடிச்சது தண்ணி இல்லடி, அது தண்ணி மாதிரி இருக்கற சரக்கு" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே தன்விக்குக் கண்கள் சுழல ஆரம்பிக்க, கால்கள் தடுமாறத் தொடங்கியது.


"அய்யோ! என்ன இது? அதுக்குள்ள இவளுக்குப் போதை ஏறிடுச்சு… சரக்கு கொஞ்சம் ஹெவி போலயே" என்று புலம்பியவன், "வாடி, ரூம்க்குப் போகலாம்" என்று அவள் கையைப் பிடித்திழுக்க அவன் கையை உதறியவள், "நான் வரமாட்டேன் போடா" என்றவளுக்கு நாக்கு பிரண்டு வார்தைகள் குளறியது. 


"எது டேய்யா..?" என்று அதிர்ந்தவன், "எல்லாம் நேரம்டி..‌‌" என்று தலையில் அடித்துக் கொண்டு, "சொன்னாக் கேளு தன்வி, ஒழுங்கா வாயை மூடிட்டு வா… நீ மட்டும் தண்ணியப் போட்டு இப்படித் தகராறு பண்ற மேட்டர் தாத்தாவுக்குத் தெரிஞ்சுது, ரெண்டு பேரும் அவ்ளோதான். யாரும் பார்க்கும் முன்ன அமைதியா ரூம்க்குப் போகனும், வாடி" என்றவன் அவளை அப்படியே அலுங்காமல் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு, யார் கண்ணிலும் படாமல் அவர்கள் அறைக்கு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.


தன்வியை அறைக்குள் தூக்கி வந்தவன் மெத்தையில் அவளை இறக்கிவிட அவளோ, "யாரைக் கேட்டுடா என்னைத் தூங்கிட்டு வந்த? இரு இரு, என் தாத்தாகிட்டச் சொல்றேன், எங்க என் ஃபோன்" என்று கட்டிலை விட்டு எழுந்திருக்கப் பார்க்க, அவளைப் பிடித்து இழுத்து மீண்டும் மெத்தையில் தள்ளியவன், "அய்யோ! தண்ணியப் போட்டுட்டு இப்படி இம்சை பண்றாளே" என்று புலம்பியபடி, "பேசாம ஒழுங்காப் படுத்துத் தூங்கு தன்வி, தாத்தாகிட்ட மார்னிங் என்னைப் பத்திக் கம்ப்ளைன்ட் பண்ணலாம். அமைதியாப் படு" என்றவன் தன் அருகில் அவளை இழுத்துப் படுக்க வைக்க, அவனைத் தள்ளிவிட்டு நகர்ந்தவள், தலையணை எடுத்து அவன் மீது அடித்தாள்.


 "ஏய் என்னடி பண்ற?" என்றவன் அவள் கைகளைப் பிடித்துக்கொள்ள, அவள் அவனிடம் இருந்து தன் கைகளை இழுக்கப் பார்த்து அது முடியாமல் போக‌, "டேய், என் கையை விடுடா, நான் உன் கூட இருக்க மாட்டேன். நான் வீட்டுக்குப் போறேன், நீ எனக்கு வேணாம்… நீ போய் என் சக்களத்தானையே கட்டிட்டுப் படு" என்று போதையில் உளற, ஆதர்ஷன் அவள் சொன்னதின் அர்த்தம் தெரியாமல் புருவத்தை நெளித்தவன், அவளைப் பார்த்து, 


"ஏய் லூசு, என்னடி உளறிட்டு இருக்க? நீதானடி என் பொண்டாட்டி, உன்னைவிட்டு நான் வேற யாரைக் கட்டிக்கிட்டுப் படுக்குறது?" என்று கேட்டவன், "அதுசரி, அது என்னடி சக்களத்தான்? என்ன மீனிங் அதுக்கு?" என்று புரியாமல் கேட்க, முகத்தைச் சுருக்கி அவனை முறைத்த தன்வி, "ம்ம்ம், சக்களத்தியோட மேல் வர்ஷன் (ஆண்பால்) சக்களத்தான்." என்றாள் குரல் குளறியபடி.


அவள் சொன்னது புரியாமல், "சக்களத்தியா? அப்படின்னா என்னடி?" என்று கேட்டான்.


"ம்ம்ம், கல்லுகுண்டு மாதிரிப் பொண்டாட்டி இருக்கும் போது அவளுக்குத் தெரியாம சைட்ல இன்னொரு ஸ்டெப்னி வச்சிக்கிறது… இன் ஷாட், கீப்" என்று சொல்லி முடிக்கும் முன், "ஏய்" என்று கத்திய ஆதர்ஷன் அவள் தோள்களைப் பிடித்து உலுக்கியவன், "ஹவ் டேர் யூ… யாரைப் பார்த்து என்ன சொல்றேன்னு புரிஞ்சு தான் சொல்றியா நீ? உனக்குத் தெரியாம நான் எவ கூடப் பழகுறதைடி நீ பார்த்த?" என்று கோவமாகக் கத்த, கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டு இயலாமையோடு பார்த்தாள் தன்வி.


"எனக்குத் தெரியாம எந்தப் பொண்ணு கூடவும் நீங்க பழகல, எனக்குத் தெரியாம நீங்க எதுவும் பண்ணல… எனக்குத் தெரிஞ்சு தான் நீங்க ஆலன் அண்ணாவை லவ் பண்றீங்க தஷ்… எனக்குத் தெரிஞ்சு தான் நீங்க எல்லாம் பண்றீங்க…" என்றவள் குரல் உடைந்துவிட, அவன் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டவள் வாய்விட்டுக் கதறி அழ, அவள் வார்த்தையில் ஆதர்ஷ் உறைந்து நின்றான். 


எவ்வளவு நேரம் அப்படியே நின்றான் என்று அவனுக்கே தெரியவில்லை, தன்வி அழுத கண்ணீர்த் துளிகள் அவன் சட்டையைத் தாண்டி அவன் இதயத்தை நனைக்க, அந்த ஈரத்தில் உணர்வு வந்தவன் மெல்ல அவளை அணைத்தபடி அவள் தலையை வருடிக் கொடுத்தவன், "ப்ளீஸ் டா அழாத… எனக்கு மனசுக்கு ஒரு மாதிரி இருக்குடா, அழாத ப்ளீஸ்" என்று கெஞ்சியவன், "உனக்கு எல்லா விஷயமும்" என்று ஆரம்பிக்கும் போதே சட்டென அவன் அணைப்பில் இருந்து விலகி வந்தவள்,


"ஆமா… எனக்குத் தெரியும் தான், எல்லாம் எனக்குத் தெரியும் தான். நீங்க ஆலனை லவ் பண்றீங்கன்னு எனக்குத் தெரியும்… அவரும் உங்களை லவ் பண்றாருன்னும் எனக்குத் தெரியும். தெரிஞ்சு தான் உங்க ரிலேஷன்ஷிப் பத்தித் தெரிஞ்சு, புரிஞ்சி, ஏத்துக்கிட்டு தான் நான் உங்களைக் கல்யாணம் பண்ணேன்" என்று சத்தமாகக் கத்தியவள் நிமிர்ந்து ஆதர்ஷன் முகம் பாத்து, 


"ஆனா, இப்ப என்னால அதை ஏத்துக்க முடியலப்பா, சத்தியமா முடியல… அப்ப இருந்த தன்வியால் உங்களை விட்டுக் கொடுக்க முடியும். ஆனா, இப்ப இருக்க இந்தத் தன்வி உங்களை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டா... விட்டுக் கொடுக்கிறது பத்தி யோசிக்கக் கூட என்னால முடியாது" என்று நடுங்கும் குரலில் சொன்னவளைப் பார்த்து, "தன்வி" என்றான் தவிப்பான குரலில் ஆதர்ஷன். 


"ப்ளீஸ், எதுவும் சொல்லாதீங்க, எ…எனக்குத் தெரியும். நான் பண்றது தப்புன்னு எனக்கு நல்லாத் தெரியும்… இல்ல, இது தப்பு கூட இல்ல, துரோகம்… உங்க ரெண்டு பேருக்கும் நான் செய்யற நம்பிக்கைத் துரோகம்னு எனக்கு நல்லாப் புரியுது." என்றவள் அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்டு, "ஆ..ஆனா நான் என்ன பண்றது தஷ்? நா..நான் சொன்னதை மீறி, உ..உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேனே, தஷ். சாரி… சாரி… சாரி" என்று கத்தியவள் முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதவளைப் பார்க்கவே அவளவனுக்கு இதயம் கலங்கியது.


ஒரு அழகிய தருணத்தில் தன் காதோரம் வெட்கப்பட்டுக் கொண்டே அவள் காதலைச் சொல்ல, அதை தான் ஆசையாகக் கேட்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்ட நிகழ்வு, இப்படி ஒரு சூழ்நிலையில், கண்ணீர் வழியும் கண்களோடு அவள் சொல்வாள் என்று அவன் கிஞ்சித்தும் எதிர் பார்க்கவில்லை. 


அவளை எப்படித் தோற்றுவது என்று தடுமாறி நின்றவன், அவள் அழுகையைக் காணப் பொறுக்காது அவளை இழுத்துத் தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.


அவன் நெஞ்சில் சாய்ந்தபடி, "எ.‌..எனக்கு எப்ப? எப்படி உங்க மேல லவ் வந்திச்சுன்னு சத்தியமாத் தெரியல. நீங்க என் கூட இருக்கும்போது சத்தியமா எனக்கு உங்க மேல் லவ் வர்ல தஷ்… அப்ப என் பாஸ் மேல எனக்கு இருந்ததெல்லாம் அன்பு, நம்பிக்கை, நிறைய மரியாதை மட்டும் தான். ஆனா, என்கிட்டக் கோச்சிட்டுக் கொஞ்ச நாள் நீங்க என்னைவிட்டுப் பிரிஞ்சு போய் திரும்பி வந்தப்போ தான் முதல் முறை எனக்கு உள்ளுக்குள் ஒரு மாதிரியா இருந்துச்சு. அப்ப நான் அதை உங்களை இத்தனை நாள் பார்க்காம இருந்ததனால அப்படி இருக்குன்னு நினைச்சேன். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் எனக்குள்ள நிறைய சேஞ்ச்… உங்களைப் பாக்கும் என்னோட பார்வை வேற மாதிரி மாறிப் போச்சு தஷ். மேரேஜ் முன்னாடி சத்தியமா என்  மனசுல எதுவும் இல்ல… ஆனா, மேரேஜ்க்கு அப்புறம் என்னோட ஆது பாஸ் எனக்கு மட்டும் தஷ்ஷா மாறினதுக்குப் பிறகு நீங்க எனக்கு தான், எனக்கு மட்டும் தான்ற எண்ணம் எனக்குள் ஆழமாத் தோண ஆரம்பிச்சிடுச்சு தஷ்… நீங்க ஆலன்கிட்ட பேசும் போதெல்லாம் எனக்கு நெருப்புக்குள்ள நிக்குற மாதிரி இருக்கும் தெரியுமா? அவ்ளோ பயமா இருக்கும்‌. எங்…எங்க அவர் உங்களை என்கிட்ட இருந்து கூட்டிட்டுப் போய்டுவாரோன்னு அவ்ளோ பயமா இருக்கும்… என்னால நீங்க இல்லாம இருக்க முடியாது. நீ…நீங்க  இல்லாட்டி என்னால வாழவே முடியாதுன்ற ஸ்டேஜ்க்கு நான் வந்துட்டேன் தஷ். நீங்க இல்லாமப் போனா நிஜமா சொல்றேன், இந்தத் தன்வி இருக்க மாட்டா… செத்துப் போய்டுவா" என்று ஆரம்பித்தவளின் மீதி வார்த்தைகளை அவன் இதழுக்குள் இழுத்துக் கொண்டான் அவள் கணவன்.