விழி வழி காதல் நுழைந்ததடி 20
விழி 20
திருமணத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஆதர்ஷ், தன்வி இருவரும் சேர்ந்தே தேர்வு செய்தனர். உடுத்தும் உடையில் தொடங்கி அணியும் நகை வரை அவளுக்கான அனைத்தையும் ஆதர்ஷனே பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்தான்.
தன்வி எப்போதும் தன் உடைகள், மற்றும் நகை விஷயத்தில் கவனமாக இருப்பாள். அவள் தேர்வு செய்யும் அனைத்தும் எளிமையாக இருக்கும் அதே சமயம் மிகவும் அழகாக நேர்த்தியாக இருக்கும். அதை மனதில் வைத்து, தங்கள் பணவசதியை உடைகள், நகைகளில் காட்டாமல் அவள் விருப்பத்தைப் புரிந்து அனைத்தையும் எளிமையாக அதே சமயம் நேர்த்தியாகத் தேர்வு செய்தான்.
அந்த நாட்கள் இருவரின் இடையில் இருந்த அனைத்து இடைவெளிகளையும் குறைத்திருக்க, தன்விக்குக் கடந்த நாட்களில் அவன் மீதிருந்த மொத்தக் கோவமும் வருத்தமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது.
காலமும் நேரமும் யாருக்காகவும் காத்துக்கொண்டு நிற்காது என்பது போல் நாட்கள் வேகமாக நகர ஆதர்ஷ், தன்வி திருமண நாளும் வந்தது.
தங்கள் குலதெய்வம் கோயிலில் மிக எளிமையாகத் திருமண ஏற்பாடுகளைச் செய்திருந்தார் வீரராகவன்.
எளிமையாக அலங்காரம் செய்து ஆதர்ஷ் அவளுக்காகத் தேர்ந்தெடுத்த நகைகளைப் பூட்டி, இளம் சிவப்பு நிறக் கூரைப் பட்டில் அமைதியாக அமர்ந்திருந்த தன்வி தேவதையாக ஜொலிக்க, அவளுக்குச் சற்றும் குறையாத அழகில் கம்பீரமாக வெண்பட்டு வேட்டி சட்டையில் அவள் அருகில் அமர்ந்திருந்தான் ஆதர்ஷ்.
வெகு சில நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்களை மட்டும் தான் திருமணத்திற்கு அழைத்திருந்தார் வீரராகவன். அவர் அழைத்திருந்த அனைவரும் அங்கிருக்க, அவர் கண்களோ நொடிக்கொரு முறை வாசலைப் பார்த்தபடி இருந்தது. அதைக் கவனித்த ஆதர்ஷ் தன் கைபேசியில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட, அதைப் படித்த வீரராகவன் முகம் மலர்ந்தது. திரும்பி அவர் பேரன் முகத்தைப் பார்க்க, அவன் விழி காட்டிய திசையில் தன் பார்வையைச் செலுத்திய வீரராகவன் விழிகள் கலங்கிப் போனாலும் மனம் மகிழ்ச்சியின் நிறைவில் நிறைந்து போனது.
உடனே தன் கைபேசியில் ஆதர்ஷனுக்கு, "அவங்களைப் பத்தி தன்விக்கு இப்பவே சொல்லலாம் ஆதர்ஷ்" என்று அடக்க முடியாத ஆர்வத்தில் குறுஞ்செய்தி அனுப்பிவிட, அதைப் பார்த்த ஆதர்ஷனுக்கு அடியோடு பதறியது.
'இப்ப மட்டும் தன்வி அவங்களைப் பார்த்தா… கண்டிப்பா எல்லா உண்மைகளையும் தெரிஞ்சிக்குவா. அப்புறம் இந்தக் கல்யாணமே நடக்காது. இப்ப இந்தக் கல்யாணம் நடக்குறது தான் எனக்கு முக்கியம். எக்காரணம் கொண்டும் தன்விய என்னால மிஸ் பண்ண முடியாது.' என்று மனதில் நினைத்தவன்,
"நோ தாத்தா… நான் ஆல்ரெடி சொல்லிட்டேன், அவகிட்ட உண்மையை எப்பச் சொல்லனும்னு எனக்குத் தெரியும். ப்ளீஸ், நீங்க எதுவும் ஏடாகூடமாகப் பண்ணி வைக்காதீங்க… நீங்க என்ன ஆசைப்பட்டிங்க, அவங்க இந்தக் கல்யாணத்துக்கு வரணும்னு தானே? அதான் வந்துட்டாங்களே… அப்புறம் என்ன? இப்ப எந்தப் புதுப் பிரச்சனையும் வேணாம். ப்ளீஸ்" என்று அவன் பதில் அனுப்ப, தாத்தாவுக்கு அது கஷ்டமாக இருந்தாலும் அந்த நேரம் பேரன் செல்வதைக் கேட்பதைத் தவிர வேறு வழி இல்லை அவருக்கு. அதனால் அமைதியாக இருந்து விட்டார்.
மூகூர்த்த நேரம் நெருங்க, வீரராகவன் தாலியை எடுத்துக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்ட ஆதர்ஷன் திரும்பி தன்வி முகத்தைப் பார்த்தவன், "லாஸ்ட்டாக் கேக்குறேன், இந்த மேரேஜ்ல உனக்கு மனப் பூர்வமான சம்மதம் தானே?" என்று மெதுவாக அதே சமயம் ஒரு எதிர்பார்ப்போடு அவள் கண்ணைப் பார்த்து அழுத்தமாகக் கேட்க,
அவளும் அவன் விழிகளை ஆழ்ந்து பார்த்தவள் ஒரு கணம் கூட யோசிக்காமல், "நல்ல நேரம் போகுது பாஸ், சீக்கிரம் தாலியக் கட்டுங்க…" என்று சிரித்தபடி சொல்ல, அவள் முகத்தில் தெரிந்த அந்தப் புன்னகையே அவள் சம்மதத்தை அவனுக்குச் சொல்லாமல் சொல்லியது.
அவள் சிரிப்பை ரசித்தபடியே அவள் கழுத்தில் தாலியைக் கட்டி மூன்று முடிச்சுப் போட்டு அவளைத் தன் ஆயுள் முழுமைக்கும் சொந்தமாக்கிக் கொண்டான் ஆதர்ஷ்.
ஆதர்ஷ், தன்வியின் திருமணக் காட்சியைக் காணவேண்டும் என்று ஆசைப்பட்ட வீரராகவன் கண்களில் மகிழ்ச்சி என்றால், அந்தக் காட்சியைக் காண தவமிருந்த ஒரு ஜோடி விழிகளில் ஆனந்தக் கண்ணீர் அருவி போல் வடிந்தது. தன் ஆசை நிறைவேறியதில் நெஞ்சம் நிறைந்த அந்த ஜீவன் அந்த இடத்தைவிட்டு நகர, அதை மணமேடையில் இருந்து பார்த்தவன் இதழ்களில் புன்முறுவல் படர்ந்தது.
அனைத்தும் நல்லபடி முடிய அந்த ஊரில் இருந்த அவர்கள் பூர்வீக வீட்டில் அன்றைய இரவைக் கழித்துவிட்டு மறுநாள் சென்னைக்குச் செல்ல வீரராகவன் முடிவு செய்திருந்தார். அதன்படி ஆதர்ஷ், தன்வி இருவரும் மணக்கோலத்தில் அந்த அழகிய பரம்பரை வீட்டில் கணவன் மனைவியாக தங்கள் முதல் காலடியை எடுத்து வைத்தனர்.
திருமணத்திற்குப் பிறகான அனைத்துச் சடங்குகளையும் செய்து முடித்த இருவரின் உடலும் ஓய்வு கேட்டுக் கெஞ்ச, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருவரும் சென்று உறங்கி விட்டனர்.
தன்வி நல்ல உறக்கத்தில் இருக்க, ஆதர்ஷனுக்கு லேசாக விழுப்பு தட்டி இருந்தது. அந்த நேரம் அவன் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஓசை கேட்டு, அதை எடுத்துப் பார்த்தான்.
ஆலன் தான் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.
"விஷ் யூ ஹேப்பி மேரிட் லைஃப்" என்று வாசகத்தின் கீழ், பைனலி ஐ வின்…" என்று அதில் இருக்க, கண்களை அழுத்தி மூடித் திறந்த ஆதர்ஷன், "எஸ் ஆலன், யூ வின். பிகாஸ் ஆஃப் தன்வி" என்றவன் திரும்பி தன் கட்டிலுக்கு அருகில் இருந்த பெரிய திவானில் உடலைக் குறுக்கிக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்த தன்வியைப் பார்த்தான்.
"லைஃப்ல முதல் முறை தோத்துட்டேன்டி… அதுவும் ஆலன் கிட்ட, இதெல்லாம் உன்னால தான். இட்ஸ் ஆல் பிகாஸ் ஆஃப் யூ" என்றவன் உறங்கிக் கொண்டிருந்த தன்வியின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.
இன்றோடு ஆதர்ஷன், தன்வி திருமணம் முடிந்து பத்து நாட்கள் ஓடியிருந்ததது. இந்தப் பத்து நாட்களில் விருந்து, வேண்டுதல், கோயில் பூஜை என்று வீரராகவன் இருவரையும் ஒருவழி படுத்தியிருந்தார். இந்தப் பத்து நாட்களில் புதுமண மக்கள் இருவருக்கும் நின்று ஒரு நிமிடம் தனியாகப் பேசக்கூட நேரம் கிடைக்காமல் போனது.
அனைத்தும் முடிந்து இன்று தான் இருவருக்கும் ஒருவருடன் ஒருவர் பேச நேரமே கிடைத்தது.
"எத்தனை வேண்டுதல், எத்தனை பூஜை, ப்பா… தாத்தாக்கு இவ்ளோ கடவுள் பக்தி இருக்குன்னு எனக்கு இப்பத் தான்டி தெரிஞ்சுது" என்று சலிப்பாகச் சொன்னவனைப் பார்த்து அவன் மனையாள் குலுங்கிச் சிரிக்க, அவள் காதைப் பிடித்து திருகிய அவள் மன்னவன், "ஏன்டி… இங்க ஒருத்தன் என் கஷ்டத்தை எவ்ளோ ஃபீல் பண்ணிச் சொல்லிட்டு இருக்கேன்... நீ என்னடான்னா காமெடிப் படம் பார்க்குற மாதிரி சிரிச்சிட்டு இருக்க…” என்று கடுப்பாகக் கேட்க, அவனைப் பார்த்து மீண்டும் சிரித்தவள்,
"பாஸ், சும்மா பொய் சொல்லாதீங்க பாஸ். இப்ப வர்ற படத்தில் வரும் காமெடியைப் பார்த்தா எங்க சிரிப்பு வருது சொல்லுங்க? இதெல்லாம் ஒரு காமெடியான்னு சலிப்புதான் வருது" என்று சொன்னவள் தலையில் நறுக்கென்று கொட்டினான் ஆதர்ஷ்.
"ஆஆஆ" என்று தலையைத் தடவிக் கொண்டே, "இப்ப எதுக்கு என்னைக் கொட்டுனீங்க?" என்று அவனை முறைத்தவள், "இருங்க, தாத்தாகிட்டச் சொல்றேன்" என்று சொல்ல, ஆதர்ஷ் தன் தலையில் அடித்துக் கொண்டவன், "ஏன்டி உனக்கு என்ன? இன்னும் பிளே ஸ்கூல் போற பச்சப் பாப்பான்னு நினைப்பா? ஏழு கழுதை வயசாகுது, இன்னும் தாத்தாகிட்டச் சொல்றேன்னு சொல்றியே, இந்த லட்சணத்தில் உனக்குக் கல்யாணம் வேற ஆகிடுச்சு. இன்னும் இப்படிக் குட்டிப் பாப்பா மாதிரியே பண்ணிட்டு இருக்க" என்று அவளை வம்பிழுத்தான்.
"கல்யாணம் ஆனா என்னவாம். அவர் எப்பவும் என் தாத்தா தான்." என்று இவளும் வீம்பாகச் சொன்னவள், "இப்ப எதுக்காக பாஸ் என்னைக் கொட்டுனீங்க" என்று மூக்கைச் சுருக்கி அவனை முறைத்துப் பார்க்க, அந்த முகச்சுழிப்பில் மொத்தமாகத் தொலைந்தான் அவள் கணவன்.
"இப்ப நீ சொன்னியே, பாஸ்னு அதுக்காகத் தான் கொட்டினேன்" என்றான் அவன்.
"நான் எப்பவும் அப்படித் தானே கூப்பிடுவேன். அதுக்கு ஏன் கொட்டுனீங்க"
"கல்யாணத்துக்கு முன்ன அப்படிக் கூப்பிட்ட ஓகே. இப்பவும் அப்படியே கூப்பிட்டா என்னடி அர்த்தம்? பார்க்குறவங்க நம்மைப் புருஷன் பொண்டாட்டின்னு நினைப்பாங்களா? இல்ல பாஸ், பி.ஏ ன்னு நினைப்பாங்களா சொல்லு. நல்லவேளை இத இன்னும் தாத்தா கவனிக்கல…" என்று சொல்ல, தன்விக்கு அவன் சொல்வது சரிதான் என்று புரிந்தது.
"நீங்க சொல்றது கரெக்ட் தான். ஆனா, நான் என்ன பண்றது? அப்படியே கூப்பிட்டுப் பழகிப் போச்சு…" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டவள், "சரி, இனிமே ஆது பாஸ்னு கூப்பிடுறேன்." என்று பாவமாகச் சொன்னவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்குச் சலிக்கவில்லை.
"அடியேய் உன்ன…" என்று அவள் தலையில் மீண்டும் கொட்டியவன், "அந்தப் பாஸை விட மாட்டியா நீ" என்று கடுப்பாகச் சொன்னவன், "பாஸூம் வேணாம், ஆது பாஸூம் வேணாம். வேற ஏதாவது சொல்லிக் கூப்பிடு… அது எனக்கான உன்னோட ஸ்பெஷல் பேரா இருக்கனும்" என்று ஆசையாகக் கேட்க, அதைச் சொல்லும்போது அவன் முகத்தில் தெரிந்த ஆசையையும், ஆர்வத்தையும் பார்த்த தன்விக்கு இதழ்களில் குறுநகை பரவியது.
"ஏய்! என்னையே பார்த்துட்டு இருந்தா எப்படி? ஏதாவது யோசிடி…" என்றவன் குரலில் தன்னிலை மீண்டவள், விரலால் நாடியைத் தட்டித் தட்டி யோசித்துக் கொண்டே, "ஆதர்ஷன்… ஆது, ஆஷ்" என்று ஆலன் அவனை அழைக்கும் பெயரை முணுமுணுத்தபடி அவன் முகத்தைப் பார்க்க, அவன் கண்களைச் சுருக்கி முறைத்த முறைப்பில், "இல்ல இல்ல, ஆஷ் வேணாம். ஆஷ் வேணாம்…" என்றவள், மீண்டும் விரலால் காற்றில் கோலம் போட்டபடி யோசித்து, "ஆதர்ஷன்… தர்ஷன்… தர்ஷூ" என்று முணுமுணுத்துக் கொண்டு இருந்தவள் பேச்சு பட்டென்று நிற்க, கண்கள் மின்ன ஆதர்ஷனைத் திருப்பிப் பார்த்தவள், "தஷ்… எப்படி இருக்கு?" என்று கண்களில் ஆர்வம் பொங்கக் கேட்க, அவளைப் பார்த்துச் சிரித்தபடி "சூப்பர்டி" என்று கண்கள் மின்னச் சொன்னவனுக்கு, அவளின் அந்தப் பிரத்யேக அழைப்பு உள்ளுக்குள் அத்தனை இதத்தைக் கொடுத்தது.
வெளியுலகில் இருவரும் மனமொத்த தம்பதிகளாக அனைவருக்கும் தெரிந்தாலும் வீட்டில், இருவரும் நல்ல புரிதல் கொண்ட நண்பர்களாக மட்டுமே தங்கள் நாட்களை நகர்த்தினர்.
ஒரே அறையில் தங்கினாலும் தன்வி அவனுடன் ஒரே மெத்தையில் படுக்க சங்கடப்பட்டுக் கீழே படுக்கப் போக, "என் மேல நம்பிக்கை இருந்தால் மேல படு, இல்லாட்டி உன் இஷ்டம்" என்று மிரட்டி தன்னோடு கட்டிலில் படுக்க வைத்தான் ஆதர்ஷ்.
கணவன் மனைவியாக இருந்தாலும் தன்வி கல்யாணத்திற்கு முன் அவனின் சொந்த விஷயங்களில் தலையிட மாட்டேன் என்று கொடுத்த வாக்கைக் காப்பாற்றப் பல நேரங்களில் அவனைவிட்டு விலகி நின்றாள். ஆனால், ஆதர்ஷ், அவளின் எல்லாத் தடைகளையும் உடைத்து அவளை இன்னும் இன்னும் தன்னை நோக்கி நெருங்கி வர வைத்தான். சின்னச் சின்ன விஷயத்தில் கூட அவளின் மனமறிந்து நடந்து கொண்டான். அவளுக்குத் தெரியாதது எதுவும் தன்னிடம் இல்லை எனும் அளவு அவளுக்குத் தன்னைப் புரிய வைத்தவன், அவளைப்பற்றி அவளுக்கே இந்த அளவு தெரியாது என்று சொல்லும் அளவுக்கு அவளை அணு அணுவாகப் புரிந்து வைத்திருந்தான். ஒருவர் மனதில் ஒருவர் முழுவதும் நிறைந்திருக்க, உடல்கள் மட்டும் விலகி இருந்தது.
அவ்வப்போது அவன் அன்பாகத் தரும் நெற்றி முத்தம், எப்போதாவது ஆசையாகத் தரும் கன்னத்து முத்தத்தோடு இரவில் அவன் கையணைப்பில் இருந்தால் தான் உறக்கம் வரும் என்ற அளவுக்குத் தன்வியைத் தன்னோடு நெருங்க வைத்திருந்தான் ஆதர்ஷ்.
ஒரு மனைவி தன் கணவனிடம் எதிர்பார்ப்பது அன்பு, அரவணைப்பு, சக உயிராகத் தன்னை மதிக்கும் தன்மை, எந்த நேரத்திலும் தன்னை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதுதான். இது எதையும் இந்தத் திருமணத்தில் எதிர்பார்க்காத தன்விக்கு இந்த அனைத்தும் எந்தக் குறையும் இல்லாமல் கிடைத்திருந்தது.
ஆதர்ஷ் இப்படி என்றால் தன்வியும் அதற்கு இம்மியளவும் குறையாமல் அவனிடம் அன்பும் அக்கறையுமாக இருந்தாள். அவனுக்கு எல்லாமுமாக இருந்து அவனைத் தன் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டவள், கடந்த சில நாட்களாக அவனைத்தான் இதயத்திலும் சுமக்க ஆரம்பித்து இருந்தாள்.
ஆம்! அவள் அவனைக் காதலிக்கத் தொடங்கி விட்டாள். இல்லை, அவளை அவன் மீது காதல் கொள்ள வைத்து விட்டான் அவள் கணவன்.
எந்த நிலையிலும் உங்களைக் காதலிக்க மாட்டேன் என்று சொன்ன சொல்லையும் மீறி அவள் மனதில் காதல் ஆட்சி செய்ய ஆரம்பித்து விட்டது. எங்கு? எப்போது? எந்த கணம்? அவன் மேல் காதல் வந்ததென்று எல்லாம் அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், அவள் உயிருக்கும் மேலாக அவனை நேசிக்கத் தொடங்கி விட்டாள் பெண்ணவள். இந்தக் காதல் நிறைவேறாது என்று தெரிந்தும், இந்த எதிர்காலம் இல்லாத காதலின் நினைவுகளைத் தன் வருங்கால வாழ்க்கைக்குப் பொக்கிஷமாக தன் மனதில் சேமித்து வைத்தாள்.
'இந்த மாற்றங்கள் எல்லாம் தன்னிடம் மட்டும் தான். ஆதர்ஷ் எப்போதும் போல வெகு இயல்பாகவே இருக்கிறான்' என்று யோசித்தவளுக்கு, 'அப்புறம் நீ அவர்கிட்ட வேற என்ன எதிர்பார்க்கிற தன்வி… அவரைப்பத்தி முழுசாத் தெரிஞ்சும், நீதான் பிடிவாதம் புடிச்சு அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட… அவர் அப்பவும் இந்த மேரேஜ் வேணாம்னு தான் சொன்னாரு. ஏன் தாலி கட்டும் கடைசி நிமிஷம் கூட உன்கிட்ட இந்தக் கல்யாணம் அவசியம் வேணுமான்னு கேட்டாரு தானே... நீதானே பிடிவாதமா நின்ன. இப்ப எதுக்கு இப்படி யோசிக்கிற? அவர்கிட்ட இருந்து உனக்கு அன்பும் பாசமும் மரியாதையும் அளவில்லாமல் கிடைக்கும். ஆனா, காதல்? எப்பவுமே கிடைக்காது. என்னைக்கும் ஆலன் தான் அவரோட காதல். அதைப் புரிஞ்சுக்க' என்று அவள் மனசாட்சி சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கி விட்டது.
"ஆமா… இது நடக்காது… நடக்க வாய்ப்பு இல்ல, நான் சொன்ன மாதிரி கொஞ்ச நாள் கழிச்சு இங்கிருந்து போய்டுறேன். இவரு ஆலன் அண்ணாகூட நிம்மதியா இருக்கட்டும்" என்று சொன்னவளுக்கு அப்போது தான், "சாகும் வரை உங்களை விட்டுப் போக மாட்டேன்." என்று ஆதர்ஷனுக்குச் செய்து கொடுத்த சத்தியம் நினைவு வந்தது.
’ஏன் தஷ், என்கிட்ட இப்படி ஒரு சத்தியத்தை வாங்குனீங்க?’ என்றவள் மனசாட்சியோ, ‘நீ ஏன்டி அவன் கேட்டதும் சத்தியம் பண்ண?’ என்று பதிலுக்குக் கேட்க, ‘அப்ப என் மனசுல ஒண்ணும் இல்ல… ஆலனோட அவர் உறவு எனக்குக் கஷ்டமா இல்ல. ஆனா, இப்…இப்போ நான் பழைய தன்வி இல்லயே! நா…நானும் அவரை விரும்புறனே... நான் விரும்பும் ஒருத்தரை எப்படி என்னால இன்னொருவர் கூடப் பார்க்க முடியும்?’ என்று யோசித்தவளுக்கு அதை நினைக்கவே இதயம் பச்சை ரணமாக வலித்தது.
இப்போதெல்லாம் ஆதர்ஷின் கைபேசியில் ஆலனின் எண்ணைப் பார்த்தாலே தன்விக்கு உள்ளுக்குள் பயம் சூழ்ந்தது. ஆலனுடன், ஆதர்ஷ் பேசும் போதெல்லாம் தன்வியின் இதயம் அவள் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாகத் துடிக்கத் தொடங்கியது. எங்கு ஆலன் தன்னவனை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்துக் கொள்வானோ என்ற பயம் அவளை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தது. எப்போதும் ஆலனுடன் அன்பாகப் பேசும் தன்வி இப்போதெல்லாம் அவனுடன் பேசுவதையே நிறுத்தி இருந்தாள். அவனாக அழைத்தாலும் பட்டும் படாமல் ஒன்றிரண்டு வார்த்தைகள் தான் பேசுவாள். அவளின் மனநிலை ஆலனுக்குப் புரிந்ததோ என்னவோ அவனும் அதற்குப் பிறகு தன்வியுடன் பேச முயற்சிக்கவில்லை.
ஆலனின் மீதான அவளின் கோபமும் வெறுப்பும் அர்த்தமற்றது என்று அவளுக்கு நன்கு புரிந்தாலும் தன்னவன் மேல் அவள் கொண்ட காதல் அவளை ஆலனை எதிரியாகப் பார்க்க வைத்தது. அந்தக் கோவத்தின் விளைவு, ஆலனின் தொலைபேசி எண்ணைத் தன் ஃபோனில் எனிமி (எதிரி) என்று சேமித்து வைக்கும் அளவுக்குச் சென்றது. அப்படிப்பட்டவளால் எங்கணம் அவர்கள் இருவரையும் காலம் முழுமையும் அவர்கள் அருகிலேயே இருந்து பார்க்க முடியும்?
"நோ… என்னால அந்தக் காட்சியைப் பார்க்க முடியாது. அவர் ஆலன் கூட சந்தோஷமாக இருக்கட்டும். ஆனா, அதைப் பார்க்க நான் இருக்க மாட்டேன். என்னால முடியாது தஷ்... நீங்க என்னை விட்டுப் போறதைப் பார்க்க என்னால முடியாது. அந்த மனதைரியம் என்கிட்ட இல்ல" என்று வாய்விட்டு அழுதவளுக்கு அடுத்து என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை.
அவளை அணுஅணுவாகத் தெரிந்து வைத்திருக்கும் அவள் கணவனுக்கும் அவளிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் தெரியாமல் போகுமா என்ன?
இப்போதெல்லாம் ஆலனிடம் இருந்து அழைப்பு வந்தாலே, அதுவரை சிரித்துப் பேசிக் கொண்டிருப்பவள் முகம், அடுத்த நொடி வெயிலில் போட்ட மலர் போல் வாடி விடுகிறது எனும் வரை அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தவன் கூடிய சீக்கிரம் அவளின் மனக்கவலைகள் அனைத்தையும் துடைத்தெறிந்து, அனைத்து உண்மைகளையும் அவளுக்குத் தெரியப் படுத்திவிட்டுப் பின்னர் அவள் எடுக்கும் முடிவைப் பொறுத்து, தான் அடுத்து என்ன செய்வதென்று முடிவெடுக்கலாம் என்று நினைத்து அவன் அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான்.
நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் இங்கு விதிக்கு வேலை இல்லாமல் போகுமே…