விழி வழி காதல் நுழைந்ததடி 12

விழி 12


வீட்டுக்கு வந்த ஆதர்ஷன் மனமே இல்லாமல் பார்ட்டிக்க் கிளம்பிச் சென்றான்.


தன்வி இல்லாமல் ஆதர்ஷ் கலந்து கொள்ளும், முதல் தொழில் ரீதியான ஆட்கள் கலந்து கொள்ளும் பார்ட்டி அது. அதனாலேயே அவனைப் பற்றியும் தன்வியைப் பற்றியும் தெரிந்த சிலர், "என்ன ஆதர்ஷ் அதிசயமா இருக்கு! பிசினஸ் பார்ட்டிக்கு தன்வி இல்லாமல் நீ தனியா வந்திருக்க? எப்பவும் தன்வியையும் கூட்டிட்டு தானே வருவ? தன்வியும் வேண்டா வெறுப்பா ஒரு சேர்ல உக்கார்ந்து எங்க எல்லாரையும் உர்ருன்னு வெறுப்பாப் பார்த்துட்டு இருப்பாங்களே… இன்னைக்கு என்ன ஆச்சு? மேடம் மிஸ்ஸிங்?" என்று பிசினஸ் வட்டத்தில் அவனுக்கு நெருங்கிய ஒருவர் விளையாட்டாகக் கேட்க, ஆதர்ஷன் கடனே என்று அவரைப் பார்த்துச் சிரித்தவன், "அவளுக்குக் கொஞ்சம் ஹெல்த் இஸ்யூஸ், அதான் வரல" என்று சமாளித்தான்.


"ஓஓஓ… இஸ் இட்…! டேக் கேர் ஆஃப் ஹர் ஆதர்ஷ், நான் விசாரிச்சேன்னு சொல்லுங்க" என்றவர் அங்கிருந்து சென்றுவிட ஆதர்ஷனுக்கு அங்கு இருக்கவே முடியவில்லை. அவன் எண்ணம் முழுவதும் தன்வி மேலேயே இருந்தது. இன்று செல்வம் சொன்னதைக் கேட்ட பிறகு தான் தன்வியின் இப்போதைய நடவடிக்கைகளுக்கான காரணம் தெளிவாகப் புரிந்தது அவனுக்கு. 


சிறுவயது முதல் இன்று வரை நல்லது, கெட்டது, சிரிப்பு, அழுகை என்று அனைத்திற்கும் தன்விக்கு ஆதர்ஷ் அருகில் வேண்டும். அவன் வெளிநாட்டில் படிக்கும் சமயம் கூட வாரத்தில் ஒரு நாள் அவனுக்கு அழைத்து அந்த ஏழு நாட்களில் நடந்த அனைத்தையும் ஒப்பித்து விடுவாள். அப்படிப்பட்டவள் அன்றைய நாள் அவள் பாஸை எவ்வளவு தேடி இருப்பாள் என்று நினைக்கும் போதே அவனுக்கு அப்படி வலித்தது. சொல்லி அழ அவளுக்கென்று இருக்கும் ஒரே ஒருவன் அவன் தான். அப்படி இருக்க அன்றைய நாள் அவள் இருந்த சூழ்நிலையில் ஆதர்ஷ் அவள் அழைப்பை ஏற்காமல் போனது அவள் மனதை அடி ஆழம் வரை காயப்படுத்தி இருக்கும் என்று யோசித்தவனுக்கு அப்போது தான் அன்றைய நாளுக்குப் பிறகு தன்வி ஆலனை அழைப்பதையும் நிறுத்தி இருந்தாள் என்று புரிந்தது. மனதளவில் தனக்கு யாரும் இல்லை என்ற எண்ணம் அவள் மனதில் பதிந்து விட்டது, அதனால் தான் அவள் வீட்டை விட்டு அவுட் ஹவுஸ் சென்றதும், தன்னை விட்டு விலகிச் செல்வதும் என்று அவனுக்கு விளங்கியது. 


 'டேமிட்… எவ்ளோ பெரிய தப்பு நடந்து போச்சு. அவ கால் பண்ணும் போதே  எடுத்திருக்கனும். அட்லீஸ்ட் ஆலனையாச்சும் அவ கான்டாக்ட் பண்ணாம இருந்தப்ப, அவளுக்குக் கால் பண்ணிப் பேசி என்ன, ஏதுன்னு கேட்கச் சொல்லி இருக்கனும். கொஞ்ச நாள் அவளை விட்டுப் புடிக்கலாம்னு விலகி நின்னது எவ்ளோ பெரிய தப்பாப் போச்சு. இப்ப ஒரேயடியா அவ ஒதுங்கிப் போயிட்டாளே…' என்று உள்ளுக்குள் புலம்பியவன், ‘சாரி தன்வி… ரொம்ப சாரி! மன்னிச்சிடு பொம்முகுட்டி, ப்ளீஸ் மன்னிச்சிடு’ என்று மெதுவாக முனங்கியவனுக்குத் தலைவலியே வந்துவிட, அந்தத் தலைவலியை இன்னும் அதிகமாக்கும் செய்தியோடு, "ஹாய் மிஸ்டர்‌‌.ஆதர்ஷ்" என்றபடி அவன் முன் வந்து கையை நீட்டினான் பிரசன்னா.


அவனைப் புருவம் சுருங்கப் பார்த்தபடி, அவன் கையைப் பற்றிக் குலுக்கி விட்டு, "சாரி நீங்க யார்னு எனக்குத் தெரியல, இதுக்கு முன்ன மீட் பண்ணி இருக்கோமா?" என்று கேட்டான் ஆதர்ஷ்.


"எஸ் ஆதர்ஷ், ஒரு முறை மீட்‌ பண்ணி இருக்கோம். ஐ ஆம் பிரசன்னா, வி.வி குரூப் ஜனார்த்தனனோட பையன்." என்றபடி ஆதர்ஷ் அருகில் இந்த சேரில் அமர்ந்தான்.


"யா யா… ஐ ரிமம்பர். நம்ம மீட் பண்ணி ஒரு சிக்ஸ் மன்த்ஸ் இருக்கும் இல்ல…" என்ற ஆதர்ஷனனைப் பார்த்து ஆமாம் என்று சிரித்தபடி தலையாட்டினான் பிரசன்னா.


"நீங்க என்கிட்ட வந்து பேசுறீங்கன்னு என்னால நமப்வே முடியல பிரசன்னா… பிகாஸ் வீ ஆர் பிஸினஸ் ரைவல்ஸ், ரைட்… பலமுறை எனக்கு வர வேண்டிய ப்ராஜெக்டை நீங்க புடிச்சிருக்கீங்க… உங்களுக்கு வர வேண்டியதை நான் தட்டித் தூக்கி இருக்கேன். இன்பேக்ட் இப்ப எந்த ப்ராஜெக்ட்காக இந்தப் பார்ட்டி நடக்குதோ இந்த டீலைக் கூட நீங்க முடிக்க டிரை பண்ணீங்க, பட் இது எனக்குக் கிடைச்சிருக்கு. அப்படி இருக்கும் போது நீங்களே என்னைத் தேடி வந்து பேசுறது எனக்கு ரொம்ப சர்ப்ரைஸா இருக்கு." என்றான் வியப்பாக.


அவன் சொன்னதைக் கேட்டுச் சன்னமாகச் சிரித்த பிரசன்னா, "யூ ஆர் ரைட் ஆதர்ஷ். இந்த ப்ராஜெக்ட் மேல எனக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பட் ஐ நோ… கண்டிப்பா இது உங்களுக்கு தான் கிடைக்கும்னு" என்றவனைப் புருவம் சுருக்கிப் பார்த்த ஆதர்ஷ்‍, "ஹவ்?" என்றான்.


"பிகாஸ் ஆஃப் தன்வி" என்றவன் வார்த்தையில் ஆதர்ஷனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அந்த அதிர்ச்சி அவன் சொன்ன வார்த்தையால் அல்ல, தன்வி பேரைச் சொல்லும்போது அவன் கண்களில் தெரிந்த பாவத்தில் அவனுக்கு வேறு ஏதோ தோன்றியது.


"வாட் யூ மீன்? நீங்க சொல்றது எனக்குப் புரியல?" என்றான் அழுத்தமாக.


"தன்வி இந்தப் ப்ராஜெக்ட் உங்களுக்கு தான் கிடைக்கும்னு ரொம்ப உறுதியா இருந்தாங்க. இந்தப் ப்ராஜெக்ட் உங்க கனவுன்னு சொன்னாங்க" என்றவன் பேச்சைக் கேட்கக் கேட்க ஆதர்ஷனுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒருவிதத் தவிப்பு. பிரசன்னா, தன்வி பற்றிப் பேசும்போது எல்லாம் அவன் முகத்தில் ஒருவித பரவசத்தைக் கண்டான் ஆதர்ஷ்.


"தன்வி சொன்னாளா? அவளை நீங்க எப்பப் பார்த்தீங்க?” என்று கேட்டான்.


"என்ன மிஸ்டர்.ஆதர்ஷ், உங்க கிட்ட வேலை பார்க்கும் பொண்ணு அவங்க. கொஞ்சம் கூட மரியாதை இல்லாம இப்படி ஒருமைல பேசுறீங்க. இட்ஸ் வெரி பேட்" என்றவனைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் அளவு ஆத்திரம் வந்தது ஆதர்ஷனுக்கு, கஷ்டப்பட்டு அதை அடக்கிக் கொண்டவன், "குட்டிப் பாப்பாவை… ஓஓஓ சாரி! தன்வியை நான் எப்படி வேணும்னாலும் கூப்பிடுவேன், அது எனக்கும் அவளுக்கும் நடுவுல இருக்க விஷயம். அவளை வாடி போடின்னு கூப்பிட எனக்கு உரிமை இருக்கு…" என்றவன் ஒரு நொடி பொறுத்து, "எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு" என்று அழுத்தமாகச் சொன்னவன், "சோ, இது உங்களுக்குத் தேவையில்லாத ஆணி மிஸ்டர். பிரசன்னா. நீங்க அவளை எப்பப் பாத்தீங்க? அதைச் சொல்லுங்க" என்று அந்த அவளில் வேண்டுமென்றே ஒரு அழுத்தத்தைக் கொடுத்தான் ஆதர்ஷ்.


அவனுக்குத் தன்வி மேல் இருக்கும் உரிமையை நினைத்து உள்ளுக்குள் கடுப்பான பிரசன்னா அதை மறைத்துக் கொண்டு, "நீங்க சொன்ன மாதிரி நம்ம பிஸினஸ் ரைவல்ஸ் தான். பட், இப்ப இல்ல" என்றவனை ஆதர்ஷன் கூர்மையாகப் பார்த்தான்.


"எஸ் மிஸ்டர். ஆதர்ஷ், இப்ப உங்களுக்கு எதிரியா இருக்க எனக்கு விருப்பம் இல்ல. இன்பேக்ட் உங்க கூட ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் வச்சிக்க நான் விரும்புகிறேன்" என்றான் பிரசன்னா ஒரு எதிர்பார்ப்போடு.


கண்களைச் சுருக்கி அவனை ஆழ்ந்து பார்த்தவன், "வொய்?" என்று கேட்டவன் ஒரளவு அதற்கான விடையை யூகித்து இருந்தான்.


"பிகாஸ் ஆஃப் தன்வி" என்றான் அழகாய்ப் புன்னகைத்தபடி.


"வாட்?" என்ற ஆதர்ஷனைப் பார்த்து, "எஸ் மிஸ்டர்.ஆதர்ஷ்… எனக்கு தன்வியை ரொம்பப் புடிச்சிருக்கு, அவங்களை மேரேஜ் பண்ணிக்க விரும்புறேன்." என்றவனை அழுத்தமாகப் பார்த்த ஆதர்ஷ், "இது அவளுக்குத் தெரியுமா?" என்று கேட்டவன் குரலில் அத்தனை இறுக்கம்.


"ம்ம்ம் சொன்னேன். பட், ஷீ செட் நோ" என்ற பிறகு தான் ஆதர்ஷனுக்கு மூச்சே வந்தது.


"உங்களுக்கு எப்படி அவளைத் தெரியும்?" என்று மறுபடியும் கேட்டான் ஆதர்ஷ்.


அதைக் கேட்டு ஒரு மாதிரி சிரித்த பிரசன்னா, "அதை நான் சொன்னா கண்டிப்பா உங்களுக்குக் கோவம் வரும்… பட், சொல்லித்தான் ஆகணும். இப்ப இந்தப் பார்ட்டி எந்த டீல் கிடைச்சதுக்காக நடக்குதோ, இந்த டீல் எங்களுக்குக் கிடைக்கணும்னு நினைச்சோம். அப்ப தான் நீங்க இந்தியாவில் இல்லைன்னு தெரிஞ்சுது. சோ, உங்க கீழ வேலை செய்யும் யாரையாவது புடிச்சுப் பணம் கொடுத்து இந்த டீல் டென்டர் பத்தித் தெரிஞ்சுக்க நினச்சோம்" என்றவன் ஆதர்ஷனைப் பார்க்க, அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. தொழிலில் இதெல்லாம் சகஜம் தான் என்று தெரிந்து வைத்திருந்தவனுக்கு பிரசன்னா சொன்னது பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. அதனால் அவன் எதுவும் பேசவில்லை.


பிரசன்னா தொடந்து, "அப்படி டிரை பண்ணும் போது தான் உங்க இடத்தில் இருந்து இந்த டீல் பத்தின எல்லா வேலைகளையும் பார்க்குறது தன்வின்னு தெரிஞ்சது. சோ…" என்று அவன் இழுக்க, ஆதர்ஷனுக்குப் புரிந்தது விட்டது அவன் என்ன சொல்ல வருகிறான் என்று.


"ராங் சாய்ஸ்" என்றான் கர்வமாக.


"எஸ்." என்று சிரித்த பிரசன்னா, "யூ நோ ஆதர்ஷ்? நான் அவங்களுக்கு ஆஃபர் பண்ண அமௌண்ட் எவ்ளோ தெரியுமா?" என்று கேட்டான்.


ஆதர்ஷ் இல்லை என்று தலையை ஆட்டியவன், பிரசன்னா சொன்ன தொகையைக் கேட்டு அதிர்ந்தான்.


"எஸ் ஆதர்ஷ், நாலு கோடி…! வீ ஆர் ரெடி டூ கிவ் 4 குரோர்ஸ் டூ ஹர். பட், ஷீ செட் நோ… ஜஸ்ட் நோ! அவ்ளோதான், உயிரை விட்டாலும் விடுவேன். சாகுற வரை என் பாஸ்க்குத் துரோகம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு எழுந்து போயிட்டாங்க." என்றதைக் கேட்ட ஆதர்ஷனுக்கு அத்தனை அதிர்ச்சி. 


"வாட்! ஃபோர் குரோர்ஸா" என்றவனுக்கு அந்த நொடி நினைவு வந்தது, இன்று செல்வம் சொன்ன செய்தி தான். 


'பணமென்று வந்தால் சொந்தக் குடும்பத்தையே தூக்கிப் போடும் மனுஷங்க மத்தியில், வளர்ந்த குடும்பத்திற்காக அனைத்தையும் இழக்கத் தயாராக நிற்கும் ஒருத்தியை எப்படித் தவறாகப் பேச முடிகிறது' என்று தான் தோன்றியது அவனுக்கு. அதே நேரம் தன்வி மேல் இதுவரை இருந்ததை விட இப்போது மதிப்பு, மரியாதையோடு வேறு ஒரு உணர்வும் கூடத் தொடங்கியது.


ஆதர்ஷின் மனநிலை புரியாமல் பிரசன்னா தன் பேச்சைத் தொடந்தான். "அவங்க பணம் வேணாம்னு சொன்ன அடுத்த நிமிஷம், எனக்கு அவங்க மேல ஒரு மரியாதை வந்திடுச்சு. அவங்களைப் பார்க்கவே அவ்ளோ பிரம்மிப்பா இருந்தது. அந்த பிரம்மிப்பு அப்படியே வளர்ந்து வளர்ந்து… கல்யாணம்னு ஒண்ணு பண்ணா அது அவங்களைத் தான்னு முடிவே பண்ணிட்டேன். தயங்காமல் அடுத்த நாளே தன்வியைப் பார்த்து என் ஆசையைச் சொன்னேன். பட்…" என்றவனிடம் ஒரு விரக்திப் பெருமூச்சு.


அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஆதர்ஷனுக்குத் தன்வி அவனைத் திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை என்ற நினைப்பே நிம்மதியாக இருந்தது‌. முதலில் தன் எண்ணம் போகும் போக்கு புரியாமல் இருந்தவன், பின்பு அவன் நினைத்ததை எண்ணி அதிர்ந்தான்.


'ஒய்? நான் ஏன் இப்படி யோசிக்குறேன்? தன்வி இவனைக் கல்யாணம் பண்ணா எனக்கென்ன வந்தது?' என்று யோசிக்க, 'அதெப்படி? தன்வியை யாரோ ஒருத்தனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடியும்?' என்று நினைக்க, 'ஏன் கொடுக்க முடியாது?' என்று அவன் மனசாட்சி கேள்வி கேட்டது.


'அதெப்படி கொடுக்க முடியும்? அவ நல்ல பொண்ணு அதெல்லாம் யாருக்கும் அவளை அப்படி எல்லாம் கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடியாது' என்றான் மனசாட்சியிடம்.


'ஏன்? எதிர்ல இருக்கற இந்தப் பையன் நல்லவன் போல தான் இருக்கான்‌. விசாரிச்சுப் பார்த்து, தன்விக்கும் புடிச்சிருந்தா கல்யாணம் செய்ய வேண்டியது தானே?' என்றது மனசாட்சி.


'அதான் தன்வி முடியாதுன்னு சொல்லிட்டாளே, அப்புறம் என்ன?' 


'அவ சொல்லிட்டா அவ்ளோதானா? நீயும் காட்டிக்க மாட்ட, அப்ப அவ வாழ்க்கைக்கு என்ன வழி?' என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய ஆதர்ஷ் சட்டென எழுந்து கொண்டவன், "சாரி பிரசன்னா, ஐ ஆம் நாட் இன் மூட். ஐ ஹாவ் டூ கோ" என்றவன் வேகமாக அங்கிருந்து கிளம்பினான். நாளை காலையில் அவன் வாழ்க்கையே மாறப் போகிறது என்று தெரியாமல்.


வீட்டுக்கு வந்தவன் மனது ஒரு நிலையிலேயே இல்லை, ஒரே தடுமாற்றமாக இருந்தது. "ஷிட்" என்று தரையில் உதைத்தவன், “நீ எடுத்த முடிவு என்ன? இப்ப நீ பண்ணிட்டு இருக்குறது என்ன? அவன் தன்வியைக் கல்யாணம் பண்ணக் கேட்டா உனக்கு ஏன் டென்ஷன் ஆகுது? நீயும் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கத் தான நினச்ச‌… அதுதானே பிளான்‌‌. இப்ப ஏன் இப்படித் தடுமாறுற?" என்று வாய்விட்டுப் புலம்பியவன் அலைபேசி அடிக்க எடுத்துப் பார்த்தான். 


திரையில் தெரிந்த எண்ணைப் பார்த்து இழுத்து மூச்சு விட்டவன், அழைப்பை ஏற்றுக் காதில் வைத்து, "சொல்லு" என்றான் கடுப்பாக.


"எப்படி இருக்க?" என்ற கேள்விக்கு, "ம்ம்ம் கொதிச்சிட்டு இருக்கேன்." என்றான் சூடாக.


"என்ன? எதுவும் ப்ராப்ளமா?" என்றது தான், "ம்ம்ம் ப்ராப்ளம் தான்… அதுவும் சின்னப் பிராப்ளம் இல்ல, அஞ்சரை அடி உயரத்தில் பழைய பிரச்சனை ஒண்ணு, ஆறடி உயரத்தில் புதுசா ஒண்ணுன்னு ரெண்டு பிராப்ளம்" என்றவனின் வார்த்தையின் அர்த்தம் புரியாமல் எதிர் பக்கம் இருந்தவர்கள் குழம்பி, "வாட் ஹாப்பன்ட் மேன்? எனிதிங் சீரியஸ்" என்று பதட்டமாகக் குரல் வந்தது எதிர்முனையில் இருந்து.


"ஏய் ஏய், அப்படி ஒண்ணும் இல்ல… நான் தன்வி பத்தி தான் சொன்னேன். அவ ரொம்ப மாறிட்டா. ம்ஹும், மாறிட்டான்னு சொல்றதைவிட உடைஞ்சு போயிருக்கான்னு சொல்றது தான் கரெக்டா இருக்கும்." என்றவன் இங்கு நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க, எதிர் முனையில் அமைதி.


அந்த அமைதியின் அர்த்தம் என்னவென இவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. 


"இப்ப என்ன பண்ணலாம்?" என்றான் எதுவும் புரியாமல்.


"சோ, ஆபீஸ்ல சிலர் தப்பாப் பேசினது தான் தன்வி இந்த அளவுக்கு ரியாக்ட் பண்ணக் காரணம்… ம்ம்ம்" என்றவன், "சரி, அந்த ஆறடிப் பிராப்ளம் யாரு?" என்று கேட்க, அந்தக் கேள்விக்கு பதில் சொல்வதா வேண்டாமா என்று ஒரு நொடி யோசித்தவன், பின் பிரசன்னா இன்று அவனிடம் பேசியதைச் சொன்னான்.


"இது நல்ல விஷயம் தானடா, நம்ம வேலை இன்னும் ஈசியா முடிஞ்சிடும்" என்ற வார்த்தையில் கடுப்பானவன், "எது நல்ல விஷயம்? ஒரே ஒரு தடவை பார்த்த பொண்ணு மேல இவனுக்கு இன்ஸ்டன்ட் லவ் வந்திடுச்சாம், உடனே மேரேஜ் பண்ணிக்கக் கேட்டானாம்… இதெல்லாம் நம்பற போலவா இருக்கு" என்று கொந்தளித்தவனின், குரலில் தெரிந்த மாற்றத்தை உணர்ந்து எதிர் முனையில் இருந்தவன் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.


 "டேய், என்னடா எதுவும் சொல்லாம இருக்க? எதாவது சொல்லுடா" என்றான் கடுப்பாக.


"உனக்கு நம்ம செஞ்ச முடிவு மறந்து போச்சு போல? வேற மாதிரிப் பேசுற… நீ என்ன சொன்ன? தன்விக்கு ஒரு நல்ல பையனைப் பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கணும். ஒருவேளை அவ முடியாதுன்னு பிடிவாதம் புடிச்சு வேற எந்த வழியும் இல்லாமப் போன நீ அவளைக் கல்யாணம் பண்ணிட்டு, தாத்தாவோட அவளையும் இங்க கூட்டிட்டு வந்திடனும். அப்புறம் பொறுமையாத் தாத்தாக்கு எல்லாம் புரிய வச்சிட்டு அடுத்து நடக்க வேண்டியதைப் பிளான் பண்ணலாம்னு தான சொன்ன… இப்ப அந்தப் பையனே தன்வியைப் புடிச்சிருக்குன்னு வந்திருக்கான். பேசாம அவனுக்கு மேரேஜ் பண்ணி வச்சிட வேண்டியது தானே. எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு வந்திடும்" என்றதும் எங்கிருந்து அவனுக்கு அவ்வளவு கோவம் வந்ததோ தெரியவில்லை, "டேய் என்னடா லூசு மாதிரிப் பேசிட்டு இருக்க நீ… தன்வி தான் அவனைப் புடிக்கலன்னு சொல்லிட்டாளே, அப்புறம் அவனுக்கு மேரேஜ் பண்ணி வைன்னு சொல்றியே… அவ என்ன பொம்மையா? நம்ம இஷ்டத்துக்கு வச்சு விளையாட" என்று கத்திவிட, எதிர் முனையில் மீண்டும் அமைதி.


"நான் அப்புறம் பேசுறேன், நீ இப்ப நார்மலா இல்ல… நல்லாத் தூங்கு. காலையில பேசலாம்" என்று அழைப்பைத் துண்டித்தவன் தன் எதிரில் தன்னையே பார்த்துக்கொண்டு இருந்தவர்களை ஏறிட்டுப் பார்த்தவன், "நம்ம எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும்." என்றான் அழுத்தமாக.



"அந்தப் பிரசன்னா பத்தின டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணலாம்?" என்ற எதிரில் இருந்தவனைப் பார்த்து, இல்லை என்று தலையாட்டியவன், "கண்டிப்பா தன்வி இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கவே மாட்டா…" என்றவன் ஆழ்ந்து மூச்செடுத்து‍, 'இப்ப அதுக்கு அவனும் விடமாட்டான்' என்று நினைத்தவன் மனதில் பலவிதமான சிந்தனைகள்.