நிஜம் 36
நிஜம் 36
த்வனி விக்ரமையே பார்த்திருக்க, அவன் குழந்தையை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
"நீ மயக்கம் போட்டு விழுந்ததை பார்த்து, ஒரு நிமிடம் எல்லாரும் பயந்துட்டாங்க, அதுலயும் நம்ம வருண்… சொல்லவே வேணாம். பாவம் மறுபடியும் ஹாஸ்பிடல்லயே பொழப்பு போய்டுமான்னு பொலம்பி தள்ளிட்டான்." என்று லேசாக சிரித்தவள்,
"அவனும் மத்தவங்களுக்கு பாவம் தான். ஒன்னு நீ ஹாஸ்பிடல்ல இருக்க, இல்ல நான் இருக்கேன். இல்லாட்டி ரெண்டு பேரும் வந்து படுத்துக்குறோம். அவங்க நம்மளுக்கு தேடுவு காக்க வேண்டி இருக்கு… நம்ம பாதி கதை ஹாஸ்பிடல்ல தான் நடந்திருக்கு" என்று குறும்பாக சொன்னவளை நிமிர்ந்து பார்த்த விக்ரம் முகத்தில் லேசாக சிரிப்பு எட்டிப் பார்க்க, த்வனி அதிசயமாக அவனை பார்த்து,
"ஏய் உனக்கு சிரிக்க கூட தெரியுமா? நான் இதுவரை நீ இப்டி சிரிச்சு பாத்ததே இல்ல" என்று கிண்டல் செய்ய, விக்ரம் நிமிர்ந்து அவள் விழிகளை பார்த்து, மெதுவாக "தேங்க்ஸ்" என்று சொல்ல, த்வனி திரும்பி அவனை பார்த்து, "அப்ப நானும் உனக்கு தேங்க்ஸ் சொல்லனுமா?" என்றாள்.
"நீ எதுக்கு எனக்கு தேங்க்ஸ் சொல்லணும்?" என்றவனுக்கு, கண்களால் குழந்தையை சுட்டிக்காட்டி, "நீ எதுக்து எனக்கு தேங்க்ஸ் சொன்னீயே அதுக்காகவும்" என்றவள் ஒரு நிமிடம் அவனை உற்று பார்த்து, "தேங்க்ஸ்… எல்லாத்துக்கும்" என்றாள் அடிமனதில் இருந்து.
அன்று த்வனி ஹாஸ்பிடலில் இருந்து வீடு திரும்பும் நாள். ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பும்போது கையில் தங்கிய த்வனியை வீட்டுக்கு வந்து அவர்கள் அரையில் படுக்க வைக்கும் போது தான் தன் கையில் இருந்து இறக்கினான் விக்ரம்.
கதிருக்கு த்வனி மேல் பாசம் இருந்தாலும், எதையும் தன்னிடம் சொல்லாமல் அவள் தனியாகவே கஷ்டப்பட்டு இருக்கிறாள் என்ற கவலை அவள் மேல் செல்வக் கோவமாக மாறியது.
அனைவருடனும் நன்றாக பேசுபவன், த்வனியை பார்த்தால் மட்டும் வேண்டுமென்றே முகத்தை கோவமாக வைத்துக்கொள்வான். த்வனியும் சின்ன சிரிப்புடன், "எங்க போனாலும் கடைசியில எங்ககிட்ட வந்துதான் ஆகணும்னு உன்னோட புது மச்சான்கிட்ட சொல்லு" என்று விக்ரமிடம் சொல்வது போல் கதிரை வம்புக்கு இழுத்து சண்டை போடுவாள்.
"விக்ரம் அவகிட்ட சொல்லு, நான் ஒன்னும் அவள பாக்க இங்க வர்ல. என் லயாகுட்டிக்காக அப்றம் உனக்காக தான் வந்தேன்" என்று கதிரும் பதிலுக்கு வாய் கொடுக்க,
இருவரின் செல்ல சண்டையில் விக்ரமும் மற்றவர்களுக்கு தான் பாவம்.
"டேய் வருண் இப்ப எனக்கு புரியுதுடா என் ரென்யா பட்ட கஷ்டம். இங்க நான் இவளுக்கும் கதிருக்கு நடுவுல நான் மாட்டி தவிக்கிற மாதிரி தானா, எனக்கும் இந்த ராட்சசிக்கும் நடுவுல மாட்டி ரென்யா தவிச்சிருப்பா" என்று விக்ரமையே புலம்ப வைத்தனர் இருவரும்.
கதிரை தன் வீட்டில் தங்கச் சொல்லி த்வனி சொல்ல, அதெல்லாம் முடியாது என்று மறுத்த கதிர், விக்ரம் அழைத்தும் உடனே வீட்டுக்கு வந்துவிட்டான். இதில் த்வனிக்கு கதிர் மேல செம்ம கோவம்.
"என்னவிட நேத்து வந்த இந்த லூசுபய இவனுக்கு பெருச போய்ட்டான் இல்ல. அப்ப நான் ஆரோதானா" என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கதிரை வறுத்தெடுக்க, பதிலுக்கு கதிரும் வாய் கொடுக்க, இவர்கள் சண்டையில் அனைவருக்கும் நாட்கள் நல்ல கலகலப்பாகவே சென்றது.
த்வனி ஹாஸ்பிடலில் இருந்து வந்த அடுத்த நாள் இரவு, அவளுக்கு உணவும் மருந்தும் கொடுத்து படுக்க வைத்த விக்ரம், த்வனியிடம் ஒரு பாக்ஸ்சை கொடுக்க, அதை பிரித்து பார்த்த த்வனி புருவம் உயர்த்தி கேள்வியாக விக்ரமை பார்த்தாள்.
"எதுக்கு இது?" என்று அவள் புருவம் உயர்த்தி கேட்க, விக்ரம் மெதுவாக த்வனி அருகில் இருந்த குழந்தை தூக்கி தான் மடியில் வைத்துக்கொண்டு, குழந்தை முகத்தை பார்த்தபடி,
"இல்ல உனக்கு இன்னும் முழுசா உடம்பு சரியாகல… டாக்டர் உன்னை நல்ல ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க… நீ நல்லா சாப்ட்டு, நல்லா தூக்கினாலே உனக்கு சீக்கிரம் சரியாகிடும்னு சொன்னாங்க" என்றவனை நிமிர்ந்து அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தாள் த்வனி.
"நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்ல" என்று சொல்ல,
"இல்ல… நீ நைட்ல நல்லா தூக்கணும் தானா... பாப்பா பகல்ல சமத்த இருக்க… ஆனா, நைட் டைம்ல ரொம்ப சேட்ட பண்ற… அதோட நைட்ல ரெண்டு, மூணு தடவ பாலுக்காக அழுகுற, அதனால உன் தூக்கம் கெட்டு போகுது… அதான் பிரெஸ்ட் பீடிங் பம்ப் (breastfeeding pump) வாங்கிட்டு வந்தேன். நீ தூக்கும் முன்ன இதுல பால் பம்ப் பண்ணி சேஃப்ப வச்சிட்ட, பாப்பா நைட்ல அழுத நானே அவளுக்கு பால் குடுத்துடுவேன். உன் தூக்கம் கெடாது இல்ல" என்றவனை பார்க்க பார்க்க த்வனிக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது.
நாட்கள் அதான் போக்கில் நகர, விக்ரமின் உலகம் த்வனி மற்றும் குட்டி லயா என்று சுறுங்கிப்போனது.
இரவில் தூக்கத்தில் த்வனி சின்னதாக அசைந்தால் கூட உடனே எழுந்து ஓடி வந்து என்ன என்று பார்ப்பான். அவளின் ஒவ்வொரு செயலும் அவனை வைத்தே நகர்ந்தது. இரவு முழுவதும் விழித்திருந்து அழும் குழந்தைகளுக்கு பால் கொடுத்து, தூக்கி வைத்துக்கொண்டு அந்த அறைக்குள்ளேயே பல மணிநேரம் நடப்பதை த்வனி பலமுறை பார்த்திருக்கிறாள். குழந்தையும் பகலில் த்வனியின் அரவணைப்பில் அமைதியாக இருப்பவள், இரவானால் தூங்க தந்தையின் அணைப்பை தேடுவாள். யார் தூங்கினாலும் நிறுத்தாமல் அழும் குழந்தை , விக்ரம் தொட்டல் போதும், முகம் மலர்ந்து சிரிக்க ஆரம்பித்து விடுவாள். இந்த பரந்த உலகில் விக்ரம், த்வனி, குழந்தை என்ற ஒரு சிறு கூட்டில் அழகாக சென்றது அவர்களின் நாட்கள்.
த்வனிக்கும் ஒரளவு உடம்ப தேறி இருக்க, விக்ரம் ஆபீஸ் செல்ல தொடங்கி இருந்தான்.
த்வனி குழந்தையை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருக்க, லாவண்யா, ஆருஷி, ஷாலினி அவளை பார்த்து, தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொள்ள,
"ஏன்ன என்னை பாத்து பாத்து ஏதோ பேசி சிரிக்றீங்க? என்ன மேட்டர்? சொன்ன நானும் சிரிப்பேன் இல்ல"
"இல்ல த்வனி சும்மா தான். உன்னையும் விக்ரமை பத்தி பேசிட்டு இருக்கோம்."
"எங்கள பத்தி பேச என்ன இருக்கு ஷாலு?"
"என்னடி இப்டி சொல்லிட்ட… ஆரம்பத்துல நீங்க ரெண்டு பேரும் போட்ட ஆட்டத்துல நாங்க எல்லாரும் உங்க வாழ்க்கை என்னகுமோ ஏதாகுமோன்னு பயந்து போய் இருந்தோம். ஆனா, இப்ப எல்லாம் தலைகீழாக மாறிடுச்சு… உங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்க, அன்பு, அக்கறை, லவ்வை பாக்கும்போது ம்ம்ம்ம்… அப்டியே புல்லரிக்குது தெரியுமா த்வனி" என்ற ஷாலினியை பார்த்து அசட்டையாக சிரித்தாள் த்வனி.
"என்ன த்வனி ஒரு மாதிரி சிரிக்கிற?, ஏன் நான் தப்ப எதும் சொல்டேனா?"
"நீ சொன்ன அன்பும், அக்கறையும் உண்மை ஷாலு. விக்ரம்கு என்மேல அது ரெண்டுமே இருக்கு தான்… பட், அது மட்டும் தான் இருக்கு… மத்தபடி எங்களுக்குள்ள எதுவும் மாறல… நீங்க எல்லாரும் நெனைக்கிற மாதிரி அவன் எம்மேல காட்றதுக்கு பேரு காதல் இல்ல ஷாலு. அவனுக்கு எம்மேல காதல் வரவும் வராது. அப்டி ஒன்னு நடக்குறதையும் நான் விரும்பவும் இல்ல" என்ற த்வனி அமைதியாக கண்மூடி படுத்துக் கொள்ள, தோழிகள் மூவரும் குழம்பி போக, அந்த அறைக்கு வெளியில் நின்ற விக்ரம் முகத்தில் லேசான புன்னகை மலர்ந்தது.
"என்ன உறவு இது எதுவும் புரியவில்லை, என்ற போதும் இது நீளுதே" என்ற பாடல் வரிகள் போல் த்வனி, விக்ரம் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் சலனம் இல்லாமல் நகர, குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஓடி இருந்தது. த்வனியும் முழுதாக உடல் தேறி இருந்தாள்.
இன்னும் ஒரு வாரத்தில் த்வனியின் பிறந்தநாள் வர இருக்க, விக்ரம் அவள் முன் ஒரு கவரை நீட்டினான்.
"என்ன இது?"
"இன்னு ஒரு வாரத்துல உன்னோட பர்த்டே வருது இல்ல, அதுக்கு என்னோட சின்ன கிஃப்ட். பிரிச்சு பாரு கண்டிப்பா உனக்கு இந்த கிஃப்ட் புடிக்கும்" என்ற விக்ரமின் கண்களில் ஏதோ ஒருவித வலியை உணர்ந்தாள் த்வனி.
மெதுவாக அந்த கவரை பிரிந்து அதில் இருந்து பேப்பரை படித்த த்வனியின் முகத்தில் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்பட, கடைசியாக இருந்த வரிகளை படித்து போது, அவள் கண்களாலேயே அதை நம்பமுடியாமல் போக, அதிர்ந்த முகத்துடன் விக்ரமை நிமிர்ந்து பார்த்தாள்.
"எனக்கு தெரியும், உனக்கு என்னை சுத்தமா புடிக்காது. அப்டி இருந்தும் நீ என்னோட இருக்க ஒரே காரணம் குட்டி பாப்பா தான். அன்னைக்கு நீ ஷாலினிகிட்ட பேசிட்டு இருந்ததை நானும் கேட்டேன். புடிக்காட்டி டிவோஸ் பண்ணுன்னு ஷாலி சொல்லும் போது, நீ ஒத்துக்கல. அதுக்கு நீ சொன்ன காரணம், நம்ம பிரிஞ்ச பாப்பா யார்கிட்ட இருக்குன்றது தான். நான் உனக்கு விட்டு குடுக்க மாட்டேன், நீ பாப்பா என்ன கூட இருக்க ஒத்துக்க மாட்ட, அப்பறம் எப்டி டிவோஸ் பண்றது, குழந்தைக்காகவாது நீ இங்க இருப்பன்னு சொன்ன" எனும்போதே விக்ரம் குரல் கரகர த்வனி அமைதியாக, அதே சமயம் அழுத்தமாக அவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.
"எனக்கு புரியுது. என்னை கூட வாழ இல்ல, என்னோட இருக்ககூட உனக்கு புடிக்காதுனு. ஆனா, பாப்பாகாக என்னை சகிச்சிட்டு இருக்கன்னு எனக்கு நல்லா புரியுது. நான் உனக்கு ஏற்கனவே குடுத்த கஷ்டம் எல்லாம் போதும், இனியும் அது வேணாம்னு தோனுச்சு. அதான் டிவோஸ் பேப்பர் ரெடி பண்ணேன். எனக்கு தெரியும் எந்த காலத்திலும் பாப்பாக்கு அப்பான்ற இடத்தை நீ என்கிட்ட இருந்து பறிக்க மாட்ட, அதோட எப்ப நெனச்சாலும் நான் பாப்பாவ பாக்க நீ அலோ பண்ணுவா. சோ… பாப்பா உன்கூடவே இருக்கட்டும். அதுவும் அந்த பேப்பர்ல எழுதி இருக்கு" என்றவன் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழி, அதை துடைக்க கூட தோன்றாமல், அப்டியே நின்றிருந்தான் விக்ரம்.
த்வனி எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, "எனக்கு தெரியும்… ரென்யா இருந்திருந்த கூட அவளும் நான் செய்றது சரின்னு தான் சொல்லுவா. அவளுக்கும் அவளோடு த்வனியோட சந்தோஷம் முக்கியம் தானா… அவளுக்கு உன்னோட இருக்க தான் புடிக்கும், அதோட ஒரு குழந்தைக்கு அம்மாவோட அரவணைப்பு ரொம்பவே முக்கியம். அது இல்லாம போனதால தானோ என்னவோ நான் இப்டி இருக்கேன். அந்த நெலம நம்ம பாப்பாக்கும் வரவேணாம். உன்கிட்ட வளர்ந்த பாப்பா கண்டிப்பா நல்ல குணத்தோட வளரும். எல்லாத்துக்கும் மேல, நான் அன்னைக்கு நைட் போதையில் உனக்கு செஞ்ச தப்புக்கும் பாவத்துக்கு என்னால செய்யமுடிஞ்ச ஒரே பிரசித்தம் இதுதான்." என்ற விக்ரம், த்வனி முன் மண்டியிட்டு உட்கார்ந்து விட, த்வனி அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு, தான் மடியில் இருக்கும் குழந்தைக்கும், தன் முன் மண்டி இட்டிருக்கும் இந்த பெரிய குழந்தைக்கும் சிறு வித்தியாசம் கூட தெரியவில்லை.
கொஞ்ச நேரம் அப்படியே இருந்த த்வனி, கண்களை இறுக்கி மூடி, ஆழ மூச்செடுத்து, "ஓகே விக்ரம். நான் இந்த டிவோஸ்க்கு சம்மதிக்குறேன்." என்று அந்த பேப்பரில் கையெழுத்து போட்டு அவனிடம் நீட்டி, "நாளைக்கு நான் இந்த வீட்டைவிட்டு போறேன்" என்று சொல்ல, விக்ரம் மொத்தமாக நொறுங்கிப் போனான்.
என்ன நடந்தது என்று யாருக்கும் எதுவும் புரியாமல் குழம்பி நிற்க, மறுநாள் காலை த்வனி குழந்தையை எடுத்துக்கொண்டு ஆஷா வீட்டுக் சென்று விட்டாள்.
த்வனி சென்று இரண்டு நாட்கள் ஆகி இருக்க, விக்ரம் கிட்டத்தட்ட உயிருள்ள இயந்திரமாகவே மாறி இருந்தான். அவனிடம் உயிர் இருந்தது ஆனால், அதில் உயிர்ப்பு இல்ல. அவனை பார்த்த சௌந்தர்யாவும், வருணும் உள்ளுக்குள் உடைந்து போயினார்.
விக்ரம் இப்படி இருக்க, த்வனியே யாருடனும் பேசாமல், குழந்தையே கதி என்று இருந்தாள். ஆஷா, ஷாலினி, ஆருஷி, லாவண்யா என்று யார் சென்று பேசியும் பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
ஒருகட்டத்தில் கடுப்பான கதிர், "இப்ப உனக்கு என்னதான்டி பிரச்சனை… எதுக்கு ரெண்டு பேரும் இப்டி எல்லாரையும் இம்ச பண்றீங்க? அந்த லூசு தான் உனக்கு நல்லது பண்றத நெனச்சு டிவோஸ் பேப்பர் குடுத்த, உனக்கு எங்க போச்சு புத்தி, அதெல்லாம் தரமுடியாதுனு சொல்லி அவன் செவுல்லயே நாலு விட வேண்டியது தானா… அதவிட்டு பெரிய இவளாட்டம் சைன் பண்ணி தந்துட்டு, இப்ப இப்டி வந்து உக்காந்துட்டு இருந்த என்னடி அர்த்தம்" என்று கதிர் கட்டு கத்து கத்த, அப்போதும் த்வனி அமைதியாகவே இருந்தாள்.
"இங்க பாரு த்வனி, நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றீங்கன்னு நான் சொல்ல மாட்டேன். பட், உங்க ரெண்டு பேருக்கும் உங்க ரெண்டு பேரோட அருகாமை பழகிப்போச்சு… இன்பேக்ட் நீங்க ரெண்டு பேருமே அதை வெளிய காட்டிக்காட்டியும் உள்ளுக்குள் அத விரும்புறீங்க, அதுக்காக ஏங்குறீங்க… அதனால தான் நீ ஹாஸ்பிடல்ல இருக்கும் போது, விக்ரம் உன் பக்கத்தில் யாரையும் வர விடல, நீயும் அவனை தவிர யாரை உன்ன பாத்துக்க விடல. உன்னோட எல்லாத்துக்கும் பதில் விக்ரம் தான். அதோ மாதிரி த்வனி இல்லாம விக்ரமும் இல்ல… இது ஏன் உங்க மரமண்டைக்கு புரியவே மாட்டேங்குது" என்று கத்தியவனை மெதுவாக திரும்பி பார்த்த த்வனி,
"இத அவனுக்கு புரியலயே கதிர்" என்றவள் மெதுவாக குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து செல்ல, கதிர் போகும் அவள் முதுகை வெறித்தவன், "அப்ப உனக்கு புரிஞ்சிருக்கு… ம்ம்ம் அப்ப நம்ம இந்த பிசாசுக்கு சொல்லவேண்டியது இல்ல, அந்த விக்ரம் பேய்க்கு தான் விபூதி போட்டு வேப்பிலை அடிக்கணும்" என்றவன் வருண், ஷாலி உட்பட அனைவரையும் அழைத்து ரகசியமாக சிலபல திட்டங்களை தீட்டி விட்டு,
"கைய்ஸ் இதுங்க ஆட்டத்துக்கு நம்ம ஆடினாது போதும், இனிமே இதுங்க ரெண்டையும் நம்ம ஆட்டி வைப்போம்."
"ஆமா கதிர் சார். இதுங்க ஆட்டம் தாங்கல… ரொம்ப ஓவரா போச்சு. இதை நம்ம அடக்கியே ஆகணும். இது சத்தியம்… சொல்லுங்க வெற்றிவேல் வீரவேல்" என்று கத்திய வருண் கையை நீட்ட, அனைவரும் அவன் கையில் தங்கள் கையை வைத்து… வெற்றிவேல் வீரவேள் என்று கத்த, சிரிப்புடன் அந்த திட்டக்குழு முடிவடைந்தது.
புரியாத பிரியம்…
பிரியும்போது புரியும்…
புரியுமா???
