நிஜம் 12

 






இஷ்டமில்லா நிஜம் நீ 

               பகுதி 12


த்வனிக்கு தூங்க மருந்து கொடுத்து படுக்க வைத்த ஷாலினி அவள் நன்றாக உறங்குகிறாள், இனி மாலை போல் தான் அவள் மயக்கம் தெளியும் என்பதை உணர்ந்த பிறகு உடனே வருணை ஃபோனில் அழைத்தவள், "வருண் நா டாக்டர். ஷாலினி பேசுறேன்" என்று சொல்ல, வருணும், "ம்ம்ம் சொல்லு ஷாலு" என்று உரிமையோடு பேச, அவள் ஃபோனை கையால் முடியவள். "பாரு ஆரு இந்தக் கொரங்குக்குத் திமிர… என்னமோ அவன் பொண்டாட்டிய கூப்புற மாதிரி சொல்லு ஷாலுன்னு செல்லமா கேக்குறான்" என்று அவள் பல்லை கடித்தாள்.


"ஏய் ஷாலு விடுடி… இப்ப நமக்கு அவனோட ஹெல்ப் ரொம்ப முக்கியம். எதுவும் திட்டிகிட்டி வச்சிடாத, ப்ளீஸ் நமக்கு இருக்க ஒரே ஹோப் அவன் தான். பாத்து பேசுப்பா" என்க,


ஷாலினி எல்லாம் "என் தலையெழுத்து, இதெல்லாம் கேட்கவேண்டி இருக்கு" என்று தலையில் அடித்துக்கொண்டவள், "வருண் எனக்கு ஒரு எமர்ஜன்ஸி. ப்ளீஸ் ஹெல்ப் பண்ண முடியுமா?" என்று கெஞ்சலாகக் கேட்டாள்.


"என்னாச்சு ஷாலு? எதும் ப்ராப்ளமா? நா என்ன செய்யணும்" என்று அவன் கேட்க, "நா உங்களுக்கு ஒரு அட்ரஸ் மெசேஜ் பண்றேன். உடனே கொஞ்சம் அங்க வரமுடியுமா?" என்று கேட்க, "ஷோர் ஷாலு. நீ அட்ரஸ் அனுப்பு நா உடனே வரேன்" என்று சொல்ல ஷாலினி வீட்டு அட்ரஸ்சை அனுப்பிவைத்தவள், அது த்வனி வீடு என்பதை வருணிடம் சொல்லவில்லை. சொன்னால் அவன் கண்டிப்பாக வரமாட்டான் என்று அதை மறைந்துவிட்டாள்.


"எப்டி ஷாலு நீ கூப்டதும், என்ன, எதுன்னு கூடக் கேக்காம, உடனே வரேண்னு சொல்லிட்டான். எப்டி? எணி ஸ்பெஷல் கனெக்சன்" என்று ஆரு கண்ணடிக்க, "ஏய் இன்னொரு தடவை அவனையும் என்னையும் லிங்க் பண்ணி பேசினா, மகளே அடிக்கிற அந்தக் கண்ணபுடிங்கி அப்டியே திண்ணுடுவேன். பீ கேர் ஃபுல்" என்றவள் மனதில் வருணை வண்டவண்டையாகத் திட்டிக்கொண்டிருக்க, ஆஷா வருண் என்ன சொல்லப்போகிறானே? த்வனி, விக்ரம் வாழ்க்கை என்னாகுமோ என்ற பயத்தில் தவிப்போடு வருணை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.


வருண் ஷாலினியை முறைத்தபடி அமரந்திருக்க, பெண்கள் மூவரும் அவன் எதிரில் தவிப்போடு அமர்ந்திருந்தனர்.


ஷாலினி அழைத்தவுடன் என்ன, ஏதென்று கூடக் கேட்காமல் ஓடி வந்த வருண் அங்கு த்வனியும் லயாவும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களைப் பார்த்த அடுத்த நொடி அவனுக்குப் புரிந்து விட்டது அது யார் வீடென்று, "ஏய் ஷாலு என்ன வெளயாட்டு இது? எதுக்கு என்ன இங்க வரச்சொன்ன? எனக்கு இவளை சுத்தமா புடிக்காதுன்னு தெரிஞ்சும் எதுக்கு இவ வீட்டுக்கு என்ன வர வச்ச?" என்று அவன் கத்த… பெண்கள் மூவரும் அவனைச் சமாதானம் செய்ய எவ்வளவு முயன்றும் முடியாமல் போக, கடைசியாக ஆஷா அவனைக் கையெடுத்துக் கும்பிட்டவள், "ப்ளீஸ் வருண். ப்ளீஸ். உன்னால மட்டும் தான் எங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும். ப்ளீஸ் வருண். உன் கூடப் பொறந்த அக்காக்கு செய்ற உதவிய நெனச்சு எனக்கு உதவி பண்ணு வருண். த்வனி வாழ்க்கை அழிஞ்சு போய்டக்கூடாது. வேணும்னா நா உன் கால்ல கூட விழுறேன்" என்ற ஆஷா வருண் காலில் விழப்போக, "அண்ணி" என்று ஷாலினியும், ஆருவும் அவள் அருகில் வருவதற்குள், "அய்யோ சிஸ்டர் என்ன பண்றீங்க நீங்க?" என்று பதறிய வருண் ரெண்டடி பின்னால் செல்ல, ஷாலினியும் ஆருவும் ஆஷா தோளை பிடித்து எழுப்பி நிற்க வைத்தவர்கள், "உங்களுக்குப் பைத்தியம் புடிச்சிடுச்ச அண்ணி? என்ன காரியம் பண்ண பாத்தீங்க நீங்க?"


"என்ன வேற என்ன செய்யச் சொல்றீங்க? இவளும் எதுவும் சொல்லமாட்டேங்குற… விக்ரமும் எதுவும் சொல்லப்போறதில்ல, அப்புறம் நா என்ன தான்டி பண்றது.?" என்று அழுதுகொண்டு நிற்க, வருண் கண் கலங்கிப்போய் நின்றான்.


"இப்ப உங்களுக்கு என்ன தெரியணும் சிஸ்டர்?"


"த்வனி விக்ரம் நடுவுல அப்டி என்ன தான் பிரச்சனை வருண்? சௌந்தர்யா அம்மா பொலம்பிட்டு இருந்தாங்க, விக்ரம் அடிபட்டு மயக்கத்தில் இருக்கும்போது கூட ரென்யா… ரென்யான்னு உன்னை விட்டுப் போன அவ பேரையே சொல்லிட்டு இருக்கியேடான்னு..., யாரு அந்த ரென்யா? த்வனி இவ்ளோ நாள் கல்லு மாதிரி இருந்தவ, இந்தப் பொண்ணு ஃபோட்டோ பாத்ததும் கதறி அழுதிட்டா, ஏன்? யாரு இந்த லயா? உனக்கு த்வனி, விக்ரமை தெரியும்னா… அப்ப ரென்யா, லயா பத்தியும் கண்டிப்பா தெரிஞ்சிருக்கணும். யார் இவங்க. இவங்க நாலு பேருக்கும் என்ன சம்பந்தம்?" என்று மூவரும் தங்கள் கேள்விகளைக் கோர்வையாக ஒரே மூச்சில் கேட்டு முடித்தனர்.


வருண் மூவரையும் அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன்‌, "நீங்க கேட்ட கேள்விங்க எல்லாத்துக்கும் ஒரே ஒரு பதில் தான். த்வனியோட லயா, விக்ரமோட ரென்யா… " என்று விரக்தியாகச் சிரித்தவன், "லாரண்யா" என்றவனது நினைவுகள் அவன் கல்லூரி காலத்திற்குச் சென்றது.


(ஃப்ளாஷ்பேக் வருண் சொல்ற மாதிரி இருந்தாலும் இதுல த்வனி, லாரண்யா, விக்ரமோட பாயிண்ட் ஆஃப் வ்யூ வும் வர மாதிரி தான் இருக்கும்)



சில வருடங்களுக்கு முன்...


த்வனி நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்க, தீடிரென்று அவள் மீது ஏதோ வந்து தொப்பென்று விழ, "அய்யோ… அம்மா…!!" என்று கத்திக்கொண்டே விழுந்தடித்து எழுந்தவள், முன் கண்கெட்டி சிரித்தபடி நின்றுகொண்டிருந்தாள் லாரண்யா.


"ஏய் லயா…!!! குட்டி பிசாசு… லூசாடி நீ‌. தூங்கிட்டு இருக்கவ மேல காலேஜ் பேக்கை தூங்கிபோடுற… எருமமாடே" என்று கத்த,


"அடியேய் தூங்கு மூஞ்சு எவ்ளோ நேரம் தான்டி தூங்குவ நீ? நானும் அப்பபுடிச்சி நீ இப்ப எழுந்துப்ப, அப்ப எழுந்துப்பன்னு பாத்து பாத்து மணி ஏழகிடுச்சு, இன்னும் உன்ன தூங்கவிட்ட அப்புறம் முதல் நாளே காலேஜ்கு லேட்டா தான் போகணும். எழுந்துடி... எழுந்து போய்க் குளிடி…" என்று த்வனியை விரட்ட,


"போடி சர்தான். பெரிய‌ காலேஜ்...‌ ஒரு ஐஞ்சு நிமிஷம் லேட்ட போனாதான் என்னவாம்." என்று இன்னும் தூக்கம் தெளியாத கண்ணைக் கசக்கியவள், "இதுக்குத் தான் நா நேத்தே என் வீட்டுக்கு போறேன்னு சொன்னேன். அம்மா தான் பொழுது போய்டுச்சு நீ இந்த நேரத்துல போகவேணாம், இங்கயே இருன்னு சொல்லிட்டாங்க, என் வீட்டுக்கு போயிருந்தா இன்னும் கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கி இருப்பேன்" என்று அலுத்துக் கொண்டாள்.


"ஏய் பொய்கோழி. ஏன்டி இப்படி வாய் கூசாம பொய் சொல்ற, மம்மி சொன்னதுக்காகவ நீ இங்க இருந்த? நேத்து வீட்ல மம்மி மீன் குழம்பும், முட்டை பொறியலும் பண்ணியிருந்தாங்க, அதுக்காகத் தான் நீ இங்க இருந்த, சும்மா பொய் பேசாத" என்று த்வனியை ஓட்ட,


"அது..."


"அது வந்து…"


"ஆஹான்... அம்மா நா இங்க இப்பேன்னு நெனச்சு எனக்கும் சேத்து குக் பண்ணிட்டாங்க. நா சாப்டாம போய்ட்டா அம்மா மனசு கஷ்டப்பட்டும், அதோட புஃட் வேஸ்ட் ஆகிடுமில்ல. புஃட் வேஸ்ட் பண்ணக்கூடாதுன்ற ஒரே காரணத்துக்காகத் தான் நான் இங்க இருந்தேன் " என்று அவள் சமாளிக்க,


"ஏய் ஏய்… சும்மா கம்பிகட்ற கதையெல்லாம் சொல்லி நடிக்காதடி. உன்னைத் தெரியாத எனக்கு... மம்மி சமையலுக்கு உன் நாக்கு அடிமைன்னு எனக்கு நல்லா தெரியாத? சும்மா பேசிட்டிருக்காம போடி… டாடி, மம்மி உனக்காக டைனிங் டேபுள்ல வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க, சீக்கிரம் குளிச்சிட்டுவா" என்றவள் டவலை தூக்கி த்வனி முகத்தில் எறிந்து விட்டு சென்றாள்.


த்வனி குளித்து முடித்து டைனிங் டேபிள் வந்தவள், "குட் மார்னிங் பா" என்க, அங்கு லயாவின் தந்தை சங்கர் த்வனியை முறைத்தபடி அமர்ந்திருக்க, லயா த்வனிக்குக் கண் ஜாடை கட்ட, த்வனி அவர் கோவத்தின் காரணம் புரிந்துவிட்டது. அவர் பின்னால் சென்று அவர் இரு தோள்களில் கையைப் போட்டு, தோளில் தன் தாடையை வைத்து அழுத்தியவள், "இன்னும் என் மேல கோவம் போகலயா உங்களுக்கு. ப்ளீஸ் பா. எனக்காக" என்று கொஞ்சலாகக் கெஞ்ச,


"பிரியா இவள என்கிட்ட பேச வேணாம்னு சொல்லி வை. நான் இவ மேல ரொம்பக் கோவமா இருக்கேன்‌." என்றவர் வார்த்தையில் தான் கோபம் இருந்ததே தவிர முகத்தில் துளி கோவம் இல்லை.


"இங்க பாருங்க உங்க ரெண்டு பேர் சண்டையில என்ன இழுக்காதீங்க சொல்லிட்டேன். நான் எதும் சொல்லப்போக, அப்பறம் அப்பாவும் மகளும் ஒன்னு சேந்துக்கிட்டு, எங்களுக்குள் ஆயிரம் இருக்கும் ஐநூறு நடக்கும், நீ யாரு நடுவுல தலைய உடன்னு என்னையே திட்டுவீங்க. ஆளை விடுங்கடா சாமி" என்று அவர் கையெடுத்துக் கும்பிட, மூவரும் சிரிந்துவிட்டனர்.


"அப்பா சொல்றதும் சரிதானடி. இங்க இவ்ளோ பெரிய வீடு இருக்கும் போது, நீ ஏன் தனிய அந்த வீட்ல தங்கணும். நீயும் எங்க கூட இங்க இருக்கலாம் இல்ல. நீயும் எங்களுக்கு லயா மாதிரி தானாடி. உன்னைத் தனிய அங்க விட்டுட்டு நாங்க இங்க நிம்மதியா இருக்க முடியுமா சொல்லு?" என்ற பிரியாவின் கையைப் பிடித்து இழுத்து தன்னருகே உட்கார வைத்தாள் த்வனி.


"எனக்கு நல்லா தெரியும்மா. நீங்க லயா அளவுக்கு இல்ல, அவளைவிட உங்களுக்கு என்மேல தான் பிரியம் அதிகம். ஆனா, இந்த விஷயத்தில் எதுவும் சொல்லாதீங்கம்மா ப்ளீஸ். அது அம்மாவோட அம்மா வீடு. அம்மா பொறந்த வீடு, அவங்க கூடச் சேந்திருக்கத் தான் எனக்குக் குடுத்து வைக்கல, அட்லீஸ்ட் அவங்க இருந்த வீட்லயாது இருக்கணும்னு எனக்கு ஆசையா இருக்குமா." என்று த்வனி கண்கள் கலங்கிவிட, சங்கர் அவள் கண்களைத் துடைத்துவிட்டவர்,


"நீ சொல்றது எனக்குப் புரியுது த்வனிம்மா. ஆனா அந்த வீட்ல இப்ப உங்க சொந்தக்காரங்க யாரும் இல்லையே, நீ அங்க தனிய இருக்கணுமேன்னு தான் நான் யோசிக்கிறேன்."


"புரியுது பா. நான் அந்த வீட்ட ரெனவேட் பண்ணிட்டேன். அதோட அங்க வேலைக்கு ரெண்டு லேடிஸ், அப்பறம் ஒரு தோட்டக்காரர் இருக்காரு. சோ எனக்கு ஒரு பயமும் இல்ல. அதோட நான் அங்க இருக்கப்போறேன்னு தான் பேரு, ஆன, நாள் முழுக்க இங்க தான் விழுந்து கொடக்கப்போறேன். அப்பறம் என்னப்பா" என்றவள் தன் பேச்சிலேயே அவர் மனதை மாற்றிவிட்டாள்.


த்வனியும், லயாவும் தங்கள் இருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றப்போகும் ஒருவனை இன்று சந்திக்கப் போவது தெரியாமல் முகம் முழுவதும் சிரிப்போடு கல்லூரிக்கு சென்றனர்.


(அதற்கு முன் த்வனி, லாரண்யா பற்றிச் சின்னதா ஒரு இன்ட்ரோ.)


த்வனியின் பதிமூன்றாம் வயதிலேயே அவள் தாய், தந்தை ஒரு விபத்தில் இறந்துவிட, அதான் பின் அவளைக் கவனிக்க ஆள் இல்லாமல் போனது. வீட்டில் தனிமை அவளைப் பெரிதும் பயமுறுத்த, ஆஷாவின் தந்தை உதவியுன் ஒரு ஹாஸ்டலில் சேர்த்துக் தன் படிப்பைத் தொடர்ந்தாள். அங்குத் தான் லயாவை அவள் முதல் முதலில் பார்த்தது.


சங்கர் லயாவை ஹாஸ்டலில் சேர்க்க வந்திருக்க, லயா அப்பா, அம்மாவை பிரிந்திருக்க முடியாதென்று அழுது கொண்டிருந்தாள்.


அப்பொழுது த்வனி அங்கு வந்தவள், லயாவின் அருகில் அமர்ந்து அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து அழுத்தி பிடிக்க, லயா திரும்பி பார்த்தவள், சிநேகமாகத் தன்னைப் பார்த்து சிரித்தபடி இருந்த த்வனியிடம் இயல்பாக இனைந்து கொண்டது. அன்று ஆரம்பித்த இவர்கள் நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து இன்று பிரிக்கமுடியாதபடி வேர்விட்டு விருட்சமாக வளர்ந்திருக்கிறது.


த்வனி... இயல்பிலேயே தைரியம், தன்னம்பிக்கை கொண்டவள். தாய், தந்தை மறைவுக்குப் பின் தன்னைத் தானே தான் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதால், தன்னை உடலளவிலும், மனதளவிலும் இரும்பாக்கிக் கொண்டாள். அந்த இரும்பு உருகும் ஒரே இடம் லயா ஒருத்தி மட்டுமே.


லயா... மலரைவிட மென்மையான மனம் கொண்டவள். ஆனாலும் தைரியமனவள்‌. எல்லோரையும் நல்லவர்கள் என்று நம்பு குணம் கொண்டவள். தப்பு நடந்தால் எதிர்த்து நின்று கேள்வி கேட்பவள், தன் முன் கஷ்டம் என்று யார் வந்து நின்றாலும் அது உண்மையா? பொய்யா? என்று கூட யோசிக்காமல் தன் கையில் இருக்கும் பணத்தை அப்படியே தூக்கிக் கொடுத்துவிட்டு த்வனியிடம் நன்றாக வாங்கியும் கட்டிக் கொள்வாள். யார் என்ன சொன்னாலும் தலையாட்டும் அப்பாவி. அதுவம் த்வனி சொன்னால் அதற்கு அப்பிலே கிடையாது. த்வனி சொல்வதைக் கண்ணையும், கருத்தையும் மூடிக்கொண்டு செய்யும் கிளிப்பிள்ளை. நல்லது கெட்டது பிரித்துப் பார்க்க தெரியாதவளை த்வனி தன் கண்ணுக்குள்ளேயே வைத்து பார்த்துக்கொண்டாள். த்வனி இருக்கும் தைரியத்தில் தான் சங்கர், பிரியா இருவரும் மகளை ஹாஸ்டலில் விட்டு விட்டு நிம்மதியாக இருக்கின்றனர்.



த்வனி, பைக்கை ஓட்ட, லயா பின்னால் உட்க்கார்ந்து ஏதேதோ பேசிக்கொண்டே வர, இருவரும் கல்லூரிக்குள் வந்து விட்டனர்.


"லயா நீ போய்க் கிளாஸ் எங்க இருக்குன்னு பாரு, நான் பைக்கை பார்க் பண்ணிட்டு வரேன்" என்றதும், லயா சரியென்று காலேஜ் உள்ளே செல்ல, த்வனி பார்க்கிங் நோக்கி சென்றாள்.


த்வனி பைக்கை பார்க் செய்துவிட்டு உள்ளே வர, அங்குக் கொஞ்ச தூரத்தில் லயாவிடம் யாரோ சில மாணவர்கள் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தவள், அங்குச் செல்ல, அங்கிருந்த ஒருவன் லயா தோள் மேல் கைபோட வர, லயா அவன் கையைப் பிடித்துத் தடுக்கப் பார்க்கும் நேரம் அவனுடன் இருந்த இன்னொருவன் லயா அருகில் வர, அவன் தோளைப் பிடித்துத் திருப்பிய த்வனி, அவன் கன்னத்தில் அவள் கைகள் அழுத்தமாகப் பதித்தாள்.


என்ன நடந்ததென்று யோசிக்கும் முன் லயா தன் கையைப் பிடித்திருந்தவன், காலை தன் செருப்பு காலால் அழுத்தி மிக்க, அவன் அலறிக்கொண்டு அவள் கையை விட அடுத்த நொடி த்வனி அருகில் சென்று அவள் கையைப் பிடித்தபடி நின்று கொண்டாள்.


த்வனி லயா கையைப் பிடித்தவனை நோக்கி தன் கைகளை ஓங்க, அங்கிருந்த ஒருவன், "டேய் பிரின்சிபல் வராருடா" என்று சொல்ல, அந்த மாணவர்கள் த்வனியை முறைத்தபடி அங்கிருந்து நகர, த்வனி அவர்களை எரிக்கும் பார்வை பார்த்தவள், ஆள்காட்டி விரலை நிட்டி "கொன்னுடுவேன் ராஸ்கல்" என்று எச்சரித்தவள் லயா கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.