உன் விழியில் கைதானேன் 21

 விழி 21


மாலை வேளையில் காவல் நிலையத்தின் முன் அந்த ஊரே கூடி இருந்தது. தேவாவை விடுதலை செய்ய வேண்டும் என்று அங்குப் பிரச்சனை நடக்க, அந்த நேரம் அங்கு வந்த சந்தியாவை அங்கிருந்த மக்கள் வாய்க்கு வந்தபடி வசைபாடத் தொடங்கினார்.


“தாலி கட்டின புருஷன்னு கூடப் பார்க்காம கூட இருந்தே குழி வெட்டிட்டாளே…” என்று அவளைத் தப்பு தப்பாகப் பேச அதையும் கேட்டவள், எதுவும் பேசாமல் காவல் நிலையத்தின் உள்ளே சென்றாள்.


நேராக தேவா இருந்த அறைக்கு வந்தவள், “இந்தக் கேஸ் பத்தி எனக்கு சில டீடைல்ஸ் வேணும்.” என்று கேட்க அவளை நிமிர்ந்து பார்த்த தேவா, “எனக்கு உன்கிட்ட ஒன்னு கேக்கணும். கேக்கலாமா?” என்று கேட்க, அவன் என்ன கேட்கப் போகிறான் என்று கணித்தவள், “ம்ம்ம்” என்றாள் அமைதியாக.


“எல்லாமே பொய்தானா?” என்று அவன் கேட்ட அந்த ஒருவரி அவளை மொத்தமாக உலுக்கி இருந்தது.


“நான் இந்தக் கேஸுக்காகதான் இந்த ஊருக்கு வந்தேன். எம்.எல்.ஏ கேஸ்ல உங்க மேல சந்தேகம் இருக்குன்னு அவரோட வைஃப் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தாங்க. அதைப்பத்தி இன்வெஸ்டிகேட் பண்ணதான் இங்க வந்தேன். இந்த ஊருக்குள்ள வந்த உடனேயே உங்களைப் பார்த்தேன். சாதரணமாய் உங்க கூடப் பழகினேன். கொஞ்ச கொஞ்சமாக உங்களை நெருங்கி வந்து உண்மையைக் கண்டுபிடிக்க நினைச்சேன். ஆனா…” என்றவளின் பேச்சு நின்றுவிட, தேவாவுக்கு அவள் சொல்லாமல் விட்டது என்னவென்று புரிந்து போனது.


“சோ… நான் கட்டுன தாலிக்காக நீ என்னோட வரல… நீ வந்த வேலையை முடிக்க அந்தத் தாலியை யூஸ் பண்ணிகிட்ட, அப்படித்தானே? அப்ப இதுவரைக்கும் நமக்குள் நடந்தது எல்லாம் வெறும் ஆக்டிங் தான். நீ… நீ என்னை… நமக்குள்ள எதுவும் உண்மை இல்ல, இல்ல” என்று கேட்க, சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் லேசாகக் கலங்கி இருக்க, அதைப் பார்த்து மென்மையாகச் சிரித்த தேவா, “என் கேள்விக்கு உன் கண்ணு பதில் சொல்லிடுச்சுடி.” என்றவன் அமைதியாக அங்கிருந்து சென்று விட, சந்தியாவுக்குதான் தன்னை நிலைப்படுத்தச் சில நொடிகள் தேவைப்பட்டது.


அந்தக் காவல் நிலையத்தின் எஸ்.ஐயிடம் வந்த சந்தியா கேஸ் பற்றிய தகவல்களைக் கேட்க அவரோ, “மேடம், அக்யூஸ்ட்டை அரஸ்ட் பண்ணதோட உங்க வேலை முடிஞ்சு போச்சு. இது எங்க லிமிட்ல இருக்கற கேஸ். இதுக்கு மேல நாங்க பார்த்துக்குறோம்.” என்று திமிராகச் சொன்னவனை அலட்சியமாகப் பார்த்த சந்தியா, “நீ அந்தத் தயாளனோட எடுப்புன்னு எனக்கு நல்லாவே தெரியும். இந்தக் கேஸ்ல நீ என்னென்ன செய்யப் போறேன்னும் எனக்கு நல்லாத் தெரியும்.” 


“மேடம் அனாவசியமாய் பேசாதீங்க. எங்க வேலையைப் பார்க்க எங்களுக்குத் தெரியும். இனிமே இங்க உங்க ஹெல்ப் யாருக்கும் தேவை இல்ல. நீங்க போலாம். இந்தாங்க எஸ்.பி ஆஃபிஸ்ல இருந்து வந்த ஆர்டர்.” என்றவனைப்‌ பார்த்து நக்கலாகச் சிரித்தபடி தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவள், 


“ம்ம்ம் இன்னும் ஒரு நிமிஷம் இருக்கு” என்றுச் சொல்லி முடிக்கும் முன், அந்த எஸ்.ஐயின் அலைபேசி அடிக்க, சந்தியாவின் இதழ்கள் கோணலாக வளைந்தது.


கமிஷனர் பரதன் மூலம் காவல்துறை அமைச்சரிடம் பேசி, இந்தக் கேஸை மேற்கொண்டு தானே விசாரிக்க அனுமதி வாங்கி இருந்த சந்தியா, இந்த ஊரில் இருக்கும் எஸ்.ஐ மேல் நம்பிக்கை இல்லையென்று சொல்லி, அவளுக்குத் துணையாக அவளுக்கு நம்பிக்கையான காவல் துறையினரை விசாரணைக்கு உதவியாக வரவழைத்தும் இருந்தாள்.


இந்த வழக்கை உடனே முடிக்க வேண்டும் என்று மேலிடத்தில் சொல்லிவிட, சந்தியா தலைமையில் விசாரணை மிகவும் துரிதமாக நடந்தது. 


பிரேதப்பரிசோதனை அறிக்கையைப் பார்த்தவளின் புருவங்கள் யோசனையாக நெளிய, யாருக்கோ அலைபேசியில் அழைத்துச் சில விசயங்களைச் சொன்னவள், உடனே வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள். 


அன்று அந்தக் கொலை வழக்கு விசாரணைக்காக, நீதி மன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட தேவா சந்தியாவைப் பார்க்க, அவளும் இவனையே பார்த்தபடி நின்றாள்.


விசாரணை தொடங்கிய கொஞ்ச நேரத்தில் தேவாவுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும், அவன் பழனியைக் குத்திய கத்தியையும், அதில் இருப்பது அவனது கைரோகை தான் என்ற அறிக்கையையும் சமர்ப்பித்தாள் சந்தியா.


அந்த நேரத்தில் எழுந்து நின்ற தேவாவின் வக்கீல் ஜான்வி, “எனக்கு மிஸ். சந்தியாகிட்டச் சில கேள்விகள் கேட்கணும்.” என்று சொல்லச் சந்தியா சாட்சிக் கூண்டுக்கு வந்தாள்.


“மிஸ்.சந்தியா, நீங்க எத்தனை வருஷம் இந்த டிபார்ட்மெண்ட்ல இருக்கீங்க?” என்று கேட்க இவளும், “மூணு வருஷம்” என்றாள்.


“உங்களுக்கு கிரைம் மட்டும் இல்ல (Forensic) ஃபாரென்சிக் நாலெட்ஜ் கூட இருக்கு, ஆம் ஐ ரைட்?”


“எஸ்… எனக்கு ஃபாரென்சிக்ல இன்ட்ரெஸ்ட் உண்டு, எனக்கு பேசிக்ஸ் கொஞ்சம் தெரியும்.” என்றாள்.


“ஓகே, இறந்துபோன பழனியோட டெட்பாடியை நீங்க பார்த்திருக்கீங்க இல்ல?”


“எஸ், என் முன்னாடி தான் மண்ணுல இருந்து பாடியைத் தோண்டி எடுத்தாங்க.”


“ஓகே… அந்த பாடியைப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோணுச்சு? ஐ மீன் அவர் எப்படி இறந்திருப்பார்னு உங்களுக்கு எதாவது ஐடியா இருந்துச்சா?” என்றாள் ஜான்வி‌.


“பாடியைப் பார்க்கும்போது எனக்கு எதுவும் தோணல…”


“ஓகே… போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல அவர் வயித்துல இருக்கற கத்தியால குத்தின காயத்தினால் தான் அவர் இறந்ததாய் சொல்லி இருக்கு. அதைப்பத்தி என்ன நினைக்குறீங்க?” என்று கேட்க, அதற்கு சந்தியா சொன்ன பதிலில் தேவா உட்பட அனைவரும் அதிர்ந்து நின்றனர்.


“என்ன சொல்றீங்க மிஸ்.சந்தியா?” என்ற ஜான்வியை நேருக்கு நேர் பார்த்தவள், “எஸ்… இறந்துபோன பழனி உடம்பில் கத்தியால் குத்தின காயம் இருந்தது உண்மைதான். பட் அந்தக் காயம் அவ்ளோ ஒன்னும் பெரிய காயம் இல்ல. அதோட வயித்தோட பக்கவாட்டில் தான் அந்தக் காயம் இருக்கு. அந்தக் காயத்தால் கண்டிப்பா அவர் உயிர் போயிருக்க வாய்ப்பே இல்ல.” என்று சந்தியா உறுதியாகச் சொல்ல, தேவாவுக்கு இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.


“அப்ப பழனி அந்தக் காயத்தால் தான் இறந்தார்னு பி.எம் ரிப்போர்ட்ல இருக்கிறது?” 


“அது பொய்… அந்த டாக்டரை மிரட்டி அப்படி ஒரு ரிப்போர்ட் கொடுக்க வச்சிருக்காங்க” என்றுச் சொல்ல அங்குப் பேரமைதி.


“நீங்க என்ன சொல்றீங்க சந்தியா, இதுக்கெல்லாம் உங்ககிட்ட ஆதாரம் இருக்கா?” என்று கேட்ட அரசுதரப்பு வக்கீலைப் பார்த்தவள், “இருக்கு சார். தேவா இந்தக் கொலையைச் செய்யலன்றதுக்கும் எவிடன்ஸ் இருக்கு. தயாளனும், தீனாவும் தான் இதைச் செஞ்சாங்கன்னும் எவிடன்ஸ் இருக்கு” என்றவள் ஆதாரங்களை ஒவ்வொன்றாய் சொல்ல ஆரம்பித்தாள்.


“அந்த பாடியில் இருந்த காயத்தால் பழனி இறந்திருக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். அப்படி இருக்க, பி.எம் ரிப்போர்ட் எப்படி இப்படி வந்துச்சுன்னு சந்தேகம் வந்தது. சோ இவங்க யாருக்கும் தெரியாம கவர்மெண்ட் ஹாஸ்பிடல் டாக்டர்ஸ் ரெண்டு பேரை வச்சு மறுபடியும் போஸ்ட்மார்ட்டம் பண்ண பர்மிஷன் வாங்கி ரீ போஸ்ட்மார்ட்டம் செஞ்சோம். அப்பதான், இறந்துபோன பழனியோட உடம்புல டிஃபரண்டான பாய்சன் டிரேஸஸ் கலந்திருக்கிறதை டாக்டர்ஸ் சொன்னாங்க. நார்மல் போஸ்ட்மார்ட்டம் ப்ராசஸ்ல அந்தப் பாய்சனைக் கண்டு புடிக்க முடியாதுன்னும். அட்வான்ஸ் டெக்னாலஜி வச்சுதான் கண்டு புடிச்சோம்னும் சொன்னாங்க. அந்தப் பாய்சனை யாரோ தயாரிச்சு இருக்கணும்னும் சொன்னாங்க. உடனே ஏற்கனவே போஸ்ட்மார்ட்டம் பண்ண டாக்டரைக் கஸ்டடில எடுத்து விசாரிச்சோம். அப்பதான் தெரிஞ்சிது, அவர்தான் அந்தப் பாய்சனை ஒரு எக்ஸ்பிரிமெண்டரி பிராசஸ்ல கண்டுபுடிச்சி இருந்தார்னு. அதைப்பத்தித் தெரிஞ்சுகிட்ட தயாளன், பழனி குடிக்க வச்சிருந்த விஸ்கில அந்தப் பாய்சனைக் கலந்திருக்காரு. அந்தப் பாய்சன் உடம்புக்குள் போன அடுத்த ஒரு மணி நேரத்தில் அவங்க இறந்திடுவாங்க‌. அதோட அந்தப் பாய்சனோட ரேசஸைக் கண்டுபிடிக்கிறது ரொம்பக் கஷ்டம். அதைத் தனக்குச் சாதகமாக யூஸ் பண்ணிக்கிட்டாரு தயாளன். பழனியை விசம் கலந்த விஸ்கியைக் குடிக்க வச்சு, போதையில் இருந்தவரை தேவாவைப் போய் வெட்டச் சொல்லி இருக்காரு. அவர் தேவாவைக் கொல்லப்போக, அவர் தற்காப்புக்காகக் கத்தியில குத்தி இருக்காரு. அந்த டைம் அவர் குடிச்ச பாய்சன்னால அவர் இறந்துட்டாரு. அது தெரியாத தேவா அவர்தான் பழனியைக் கொன்னதாய் நினைச்சு, பாடியை மறச்சு இருக்காரு.” என்றவள் அனைத்தையும் ஆதாரத்தோடு நிரூபித்தாள். 


அதற்குப் பிறகு அனைத்து விசயங்களும் முடிய தயாளன், தீனாவைக் கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி, தேவாவுக்கும் அவன் ஆள்களுக்கும் பிணத்தை மறைக்க முயன்ற குற்றத்திற்காக ஒரு வருட சிறைத் தண்டனையை விதித்தார். 


தன்னால் ஒரு உயிர் போய்விட்டது என்ற குற்றவுணர்வில் இருந்த தேவாவின் மனது இப்போது நிம்மதி கொண்டது.


ஆர்த்தி, வக்கீல் ஜான்விக்கு நன்றி சொல்ல அவளோ, “இந்த நன்றியை என் தங்கச்சிக்குக் சொல்லுங்க, அவதான் என்னை இந்தக் கேஸுக்காக சென்னையில் இருந்து வரவச்சா” என்க, “யாரு உங்க தங்கச்சி?” என்று கேட்டாள் ஆர்த்தி புரியாமல்.


“வேற யாரு, உங்க தம்பியைக் குற்றவாளி இல்லன்னு நிரூபிக்க எல்லா வேலையும் செஞ்சாளே, அவதான் என் தங்கச்சி சந்தியா.” என்று சொல்ல, அனைவரும் திகைத்து நிற்க, தேவா மட்டும் சந்தியாவை நெகிழ்வாகப் பார்த்தபடி நின்றான்.


போலீஸ் தேவாவைக் கைது செய்து அழைத்துச் செல்ல, கண்கலங்கி நின்றாள் ஆர்த்தி.


ஜான்வியின் அருகில் வந்த சந்தியா, “ரொம்பத் தேங்க்ஸ்க்கா. உங்க பிஸி ஷெடியூல்ல, நான் கேட்டதுக்காக இங்க வந்தீங்க? ரொம்பத் தேங்க்ஸ்” என்று சொல்ல அவள் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளிய ஜான்வி, “தேங்க்ஸ் சொல்ற அளவுக்கு மேடம் பெரிய மனுஷி ஆகிட்டீங்களோ… நீ யுக்தாவுக்கு மட்டும் இல்லடி, எங்களுக்கும் தங்கச்சி தான். அக்கா, தங்கச்சிக்குள்ள தேங்க்ஸ் எல்லாம் சொல்லக் கூடாது.” என்ற‌ ஜான்வி அங்கிருந்து கிளம்ப, சந்தியாவின் முன்னால் வந்து நின்றாள் ஆர்த்தி.


எதுவும் பேசாமல் அவள் முன் நின்றவள், சட்டெனக் கையெடுத்து அவளைக் கும்பிட்டவள், “தேங்க்ஸ்… ரொம்பத் தேங்க்ஸ் சந்தியா… உன்னால தான் இன்னைக்கு என் தம்பி இந்தக் கொலைப் பழியில் இருந்து தப்பிச்சான். இந்த உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன்.” என்றவள் அங்கிருந்து சென்று விட சந்தியா காவல் நிலையத்திற்குச் சென்றாள்.


அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அவள் வெளியே வரும் போது, அவள் முன்னால் வந்து நின்ற பழனியின் மனைவி, “உன் போலீஸ் வேலையை வச்சு உன் புருஷனைக் காப்பாத்திட்ட இல்ல… நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட, என் புருஷனைக் கொன்னது அந்த தேவா தான். அவனோட வசதிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு அவனோட சேர்ந்து வாழ, நீ இன்னைக்கு அவனைக் காப்பாத்தி இருக்கலாம். ஆனா, நீங்க ரெண்டு பேரும் நிம்மதியா வாழவே முடியாது. நான் வயிறெரிஞ்சு சொல்றேன், நீங்க ரெண்டு பேரும் நல்லாவே இருக்க மாட்டீங்க” என்று சொல்ல, சந்தியாவுக்கு அவளின் நேர்மையைப் பற்றித் தப்பாகப் பேசியதில் அதுவரை கட்டி வைத்திருந்த பொறுமை பறந்தது.


“யார்கிட்ட வந்து என்ன பேசிட்டு இருக்க? ஒழுங்கா இங்க இருந்து கிளம்பிடு” என்று மிரட்ட அந்தப் பெண்ணிற்கு ஆதரவாக வந்த சிலர், “பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப இந்தம்மாவையே மிரட்டுறயாம்மா நீ… சும்மா கண் துடைப்புக்கு உன் புருஷனை அரஸ்ட் பண்ற மாதிரிப் பண்ணிட்டு, இப்ப அவனைக் காப்பாத்திட்ட இல்ல, இதெல்லாம் எதுக்கு? அவன் பெரிய பணக்காரன்றதுனால தானே… இன்னும் ஒரு வருஷத்தில் அவன் வெளிய வந்துருவான். நீயும் அவனும் இந்தப் பணம், காசை வச்சு சந்தோஷமா வாழலாம்னு திட்டம் போட்டு தான இப்படி எல்லாம் பண்ண” என்று சொல்ல, அங்கிருந்தவர்களும் அதுதான் உண்மை என்பது போல் பேசத் தொடங்கினர். அனைத்தையும் பொறுத்துப் போகும் சந்தியாவால் ஏனோ அவள் கடமையையும், நேர்மையையும் யாரும் தப்பாகப் பேசினால் அதை மட்டும் தாங்க ‌முடிவது இல்லை. பெற்றவர்கள், உடன் பிறந்தவள், கடவுள் அளவுக்கு மதிக்கும் தன் மாமன்களின் பேச்சைக்கூடக் கேட்காமல், அடம்பிடித்து இந்த வேலையில் சேர்ந்தவள், இன்று வரை யாருக்காகவும் எதற்காகவும் தன் கடமையில் இருந்து இம்மியளவும் தவறியது இல்லை. அப்படிபட்டவளை இன்று அனைவரும் தவறாகப் பேச அவள் மனது தொய்ந்து தான் போனது.


சூர்யாவும், அர்விந்தும் சென்னைக்குக் கிளம்புவதற்கு அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்டுச் சந்தியாவுக்காகக் காத்திருக்க, சந்தியாவே ஆர்த்தியைப் பார்க்கச் சென்றிருந்தாள்.


“உங்க தம்பி வரவரைக்கும் நீங்க தனியா இந்த ஊர்ல இருக்கிறது நல்லது இல்ல. உங்க ஹஸ்பெண்ட்னால இப்ப இங்க வரமுடியாத சூழ்நிலை. சோ வேற வழி இல்ல, நீங்க என்னோட சென்னைக்கு வந்து என்னோட இருங்க.” என்று சொல்ல ஆர்த்தி அவளைத் தயக்கமாகப் பார்த்தாள்.


“இதை நான் உங்கமேல இருக்கற அக்கறையில் மட்டும் இல்ல, ஒரு போலீஸா உங்களைப் பாதுகாக்குறது என்னோட கடமையும் கூட, அதனால்தான் சொல்றேன். மத்தபடி நமக்குள்ள இருக்க எந்த உறவையும் வச்சிட்டு நான் பேசல” என்றவளைக் கலக்கமாக ஏறிட்ட ஆர்த்தி, “நான் உங்க வீட்டுல எப்படி? உங்கம்மா அப்பா எல்லாம் என்னை எப்படி?” என்று அவள் தயங்க, “அதை நான் பார்த்துக்குறேன்.” என்றாள் சந்தியா.


அப்போது அங்கிருந்த ஊர்ப் பெரியவர்கள் சிலர், “அந்தப் பொண்ணு சொல்றது சரிதான். தேவா தம்பி இல்லாத நேரம் நீ இங்க தனிய இருக்கிறது நல்லா இல்லம்மா. தம்பி வரவரைக்கும் நீ பேசாம உன் நாத்தனார் கூடவே இரு” என்று சொல்ல அந்த நாத்தனார் என்ற வார்த்தை சந்தியாவைச் சுட்டது.


இங்கு சென்னைக்குக் கிளம்ப அனைவரும் தாயராகி இருக்க, கலைவாணி இன்னும் சந்தியாவைக் காணாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த நேரம், ஆர்த்தியுடன் வந்த சந்தியாவைப் புரியாமல் பார்த்தனர் அனைவரும்.


“அக்கா… ஆர்த்தியைத் தனியா இங்கவிட்டு வர்றது எனக்கு சரியாப்படல. அதான் அவங்களை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன். இதை உங்கம்மாகிட்டச் சொல்லி ஓகேவான்னு கேளு.” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.


கலைவாணி ஏதோ சொல்ல வந்தவர் ஆர்த்தியின் பாவமான முகத்தைப் பார்த்து, அவளை இந்தச் சூழ்நிலையில் இந்த ஊரில் தனியாய் விட மனமில்லாமல், “டைம் ஆச்சு, உன் தங்கச்சியை அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வண்டில ஏறச்சொல்லு.” என்க ஆர்த்திக்கு அதிர்ச்சி.


எப்படி இவர்களால் தன்னை அவர்கள் வீட்டில் தங்கவைக்க முடிகிறது என்று நினைத்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.


அன்றோடு சந்தியா சென்னைக்கு வந்து ஒரு வாரம் ஓடி இருந்தது. சென்னைக்கு வந்த அடுத்த நாள் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று வந்தவள், அதன் பிறகு யாரோடும் பேசாமல் தன் அறையிலேயே அடைந்து கிடந்தாள். கலைவாணி எவ்வளவு கேட்டும் எந்தப் பதிலும் சொல்லாமல் அவள் அமைதியாக இருக்க, அவர் உடனே மருமகனுக்கு அழைத்து விட்டார்.


அடுத்த பத்து நிமிடத்தில் அங்கு வந்துவிட்டான் சூர்யா.


“என்னாச்சு?” என்று சூர்யா கேட்டது தான், ஓடிவந்து கட்டிக் கொண்டவள், வாய்விட்டு அழ ஆரம்பிக்க, சூர்யா அவள் தலையை மெல்ல வருடி விட்டவன், “என்னடா?” என்றான் பரிவாக.


“கமி…கமிஷனர் ஆஃபிஸ்ல எல்லாரும் என்னைத் தப்பாப் பேசுறாங்க மாமா.” என்றாள் கலங்கிய குரலில்.


“தேவா தான் அந்தக் கொலையைப் பண்ணி இருப்பான். நான் என் பொசிஷனை யூஸ் பண்ணி அவனைக் காப்பாத்தி விட்டதாய் சொல்றாங்க. அவனோட பணத்துக்காக அவ…அவனோடு சேர்ந்து வாழணும்னு நான் வேணும்னே இந்தக் கேஸை தப்பான ஆங்கிள்ல கொண்டுபோய் அவனுக்கு ஃபேவரா கேஸை முடிச்சிட்டேன்னு சொல்றாங்க மாமா‌.” என்றவளின் கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது.


அவளுக்கு இந்தப் போலீஸ் வேலையின் மீது எவ்வளவு ஈடுபாடு என்று அறிந்திருந்தவனுக்கு, இந்த மாதிரி வார்த்தைகள் அவளை எந்தளவுக்கு உடைத்திருக்கும் என்று நன்கு புரிந்தது.


“சந்தியா… யாரோ புரியாதவங்க பேசுறதுக்கு எல்லாம் நீ ஏன் இவ்ளோ இம்பார்ட்டன்ஸ் கொடுக்குற?” என்ற மாமனை நிமிர்ந்து பார்த்தவள், “யாரோ இல்ல மாமா. என்னோட இந்தக் கேஸ்ல இருந்த அசிஸ்டன்ஸ், ஏற்கனவே என்னோட வேலை பார்த்தவங்க, என்னைப்பத்தி நல்லாத் தெரிஞ்சவங்ககூட, அந்தத் தேவா என்…என்னோட” என்றவளால் அந்த வார்த்தையை முடிக்க முடியாமல் போக, “அவனுக்காக தான், அவன் மேல இருக்க காதலில் தான் நான் இப்படி செஞ்சேன்னும், ஒரு வருஷத்தில் அவன் வெளிய வந்ததும் அவனோட நான் சேர்ந்து வாழ ப்ளான் போட்டு தான் இப்படிச் செஞ்சேன்னும் சொல்றாங்க…” என்றவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான் சூர்யா.


அடுத்த நாள் கமிஷனர் பரதன் தன் முன்னால் நின்ற சந்தியாவை அனல் பார்வை பார்த்தபடியே அவள் கொடுத்த ராஜினாமா கடிதத்தைப் படித்தவர், “சோ, இங்க சிலர் பேசினது உண்மைதான். நீ வேணும்னு தான் அந்தக் கேஸ்ல அந்த தேவாவைத் தப்பிக்க வச்சிருக்க?” என்று சொல்ல, சந்தியாவுக்கு இதயமே நின்றுவிட்டது.


“அங்கிள்…” என்றவளின் கண்களில் கண்ணீர் முட்டி நிற்க அவரோ, “நீ இப்படி வேலையை ரிசைன் பண்ணா நான் அப்படித்தான் நினைப்பேன். இல்ல அது பொய், நீ நியாயமா, நேர்மையாத்தான் அந்தக் கேஸை இன்வெஸ்டிகேட் பண்ணன்றது உண்மைனா…” என்றவர் அவள் முன் ஒரு வெள்ளைக் கவரைத் தூக்கிப் போட்டவர், “உன்னை டெல்லிக்கு ஒரு அண்டர்கவர் மிஷின்க்கு அசைன் பண்ணி இருக்கேன். அங்கப்போய் ஒழுங்கா வேலையை பாரு…” என்றவர் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட, சந்தியா அவரையும் அந்தக் கவரையும் மாறிமாறிப் பார்த்தாள். 


“யூ மே லீவ்…” என்றபடி பரதன் அந்தக் கவரை எடுக்கப் போகும் சமயம் சட்டென அதை எடுத்துக் கொண்ட சந்தியா, “நான் எப்ப சார் டெல்லிக்குக் கிளம்பனும்?” என்று கேட்க, “வித் இன் டூ டேஸ்” என்றார் கம்பீரக் குரலில்.


இந்த விஷயம் தெரிந்த கலைவாணி ஒரு ஆட்டம் ஆடித் தீர்க்க, சந்தியா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.


“எல்லாரும் அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? வேல வேலைன்னு போய்தான் இப்ப இந்த நிலையில வந்து நிக்கிது… இப்ப மறுபடியும் டெல்லிக்குப் போகணும்னு வந்து நிக்கிறா… இப்பவும் யாரும் எதுவும் சொல்ல மாட்டீங்க இல்ல?” என்று கலைவாணி கத்த அவர் அருகில் வந்த தனலட்சுமி, “அப்ப நம்ம புள்ளை இந்தக் கேஸ்ல தப்பான வழிதான் போயிருக்குன்னு மத்தவங்க சொல்றதை நீங்களும் நம்புறீங்களா அண்ணி?” என்று கேட்க நெஞ்சில் கைவைத்த கலைவாணி, “கடவுள் சத்தியமா அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல… எம் பொண்ணு எந்த நாளும் அந்த மாதிரி ஒரு தப்பைச் செய்யவே மாட்டா…” என்று அடித்துச் சொல்ல, சந்தியாவின் கண்களில் மெல்லியதாகக் கண்ணீர் கோடுகள்.


“இப்ப இவ வேலையை ரிசைன் பண்ணா அவங்க பேசினது உண்மைனு ஆகிடும் அண்ணி.” என்க,


“அதுக்காக இவ இப்ப உடனே டெல்லிக்குப் போயே ஆகணுமா என்ன? நடந்த பிரச்சனையில இருந்தே இன்னும் யாரும் வெளிய வரல… ஆகாஷ் வீட்ல நடந்ததை எப்படி எடுத்துப்பாங்கன்னு ஒன்னும் புரியல… அதுவேற ஒரு பக்கம் பயமா இருக்கு. இந்த லட்சணத்தில் இவ இப்ப டெல்லிக்குப் போகணுமா?” என்று கேட்கும் போது வீட்டுக்குள் நுழைந்தனர் ஆகாஷின் குடும்பத்தினர்.