உன் விழியில் கைதானேன் 20

 விழி 20


சந்தியா, தேவாவின் இடையே கணவன், மனைவி என்ற உறவு இல்லாமல் இருந்தாலும், இருவருக்கும் ஒருவரின் மீது ஒருவருக்கு அன்பும், அக்கறையும் அதிகமாகவே இருந்தது. சந்தியா எவ்வளவு முயன்றும் அவன்பால் ஈர்க்கப்படும் தன் மனதை அவளால் தடுக்க முடியாமல் போக, பாவம் பெண்ணவள் தனக்குள் மருகித்தான் போனாள்.


அன்று சந்தியா, தேவாவைத் தங்கள் குலதெய்வக் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருந்தாள் ஆர்த்தி. பூஜைகள் அனைத்தும் நிறைவாக முடிந்து வீட்டுக்குத் திரும்பும் வேளை, எங்கிருந்தோ வேகமாக வந்த நடுத்தர வயதுப் பெண் ஒருத்தி தேவாவின் சட்டையைப் பிடித்தவர், “எம் புருஷன் எங்கடா? அவரை என்ன செஞ்ச நீ? எங்கடா அவரு?” என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்க, அந்த இடமே கலவரம் ஆனது. 


வேகமாக ஓடிவந்த ரகு, அந்தப் பெண்ணைப் பிடித்து இழுத்துத் தள்ளி நிறுத்த, அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்ற சந்தியா அந்தப் பெண்ணின் அருகில் வந்தவள், “அவங்களை முதல்ல விடுங்க” என்று சொல்ல, அந்தப் பெண்ணின் கையை விட்டான் ரகு.


“யாரு நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்க, அந்தப் பெண்ணோ “எனக்கு என் புருஷன் வேணும்” என்றார் கோவமாக தேவாவைப் பார்த்தபடி.


“நீங்க சொல்றது எனக்குப் புரியல?” என்றாள் சந்தியா.


“என் புருஷன் காணாமல் போய் ஆறு மாசம் ஆகுது. இன்னைக்கு வரை அவர் எங்க போனாரு? என்ன ஆனாருன்னு ஒரு தகவலும் இல்ல” என்றார் கண்ணீரைத் துணைக்கொண்டு.


“உங்கப் புருஷனைக் காணும்னா நீங்க போலீஸ்ல போய் கம்ப்ளைன்ட் பண்ணுங்க… அதைவிட்டு ஏன் இங்க வந்து பிரச்சனை பண்றீங்க?” என்றவளை எரித்து விடுவது போல் பார்த்த அந்தப்பெண், “ஏன்னா என் புருஷனுக்கு என்ன ஆச்சுன்னு உன் புருஷனுக்குத் தான் தெரியும். அவர் கடைசியா இவனைத்தான் பார்க்கப் போனாரு. போனவரு திரும்பி வரவே இல்ல… இவன் தான் அவரை ஏதோ செஞ்சிருக்கணும்.” என்று சொல்ல, சந்தியாவுக்கு அந்த எக்ஸ் எம்எல்ஏ பழனியைப் பற்றிக் கீர்த்தி சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே திரும்பி அவள் தேவாவின் முகத்தைப் பார்க்க, அவன் முகமோ குற்றவுணர்வில் தாழ்ந்திருந்தது.


சந்தியா வானத்தை வெறித்துப் பார்த்தபடி இருக்க, தேவா அவள் முகத்தைப் பார்க்கத் தயங்கியபடியே நின்றான்.


“இன்னைக்கு அந்தம்மா கோவில்ல சொன்னது உண்மையா?” என்று கேட்டாள் இறுகிய குரலில்.


அதற்கு அவனிடம் பதில் இல்லாமல் போக, திரும்பி அவன் சட்டையைப் பிடித்தவள், “வாயைத் திறந்து சொல்லுடா… அவங்க சொன்னது உண்மையா? எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். சொல்லுடா‌… அந்த எம்எல்ஏ எங்கே… உயிரோட இருக்காரா இல்லயா?” என்று கத்தியவள் கண்களில் இருந்து துளித் துளியாகக் கண்ணீர் வழிய, அப்படியே தரையில் சரிந்து உட்கார்ந்து விட்டாள் அவள்.


“சொல்லுடா… நீ எந்தத் தப்பும் பண்ணலன்னு சொல்லு. அந்த ஆளை நீ கொலை பண்ணலன்னு சொல்லு” என்றவளின் குரலில் அத்தனை எதிர்பார்ப்பு, அவன் இல்லை என்று சொல்லிவிட வேண்டுமென்று.


அவள் முன் மண்டியிட்டு அமர்ந்த தேவா தலையைக் குனிந்தபடியே, “அவங்க சொன்னது உண்மைதான்” என்று வலி நிறைந்த குரலில் சொல்ல, சந்தியாவுக்குத் தலையில் இடி இறங்கியது போல் இருந்தது.


“இல்ல… நீ பொய் சொல்ற… நீ பொய் தான சொல்ற… நீ அப்படி எல்லாம் செஞ்சிருக்க மாட்ட… நீ அப்படிச் செய்ய மாட்ட.” என்று அவள் கிளிப்பிள்ளை போல் சொல்ல இடவலமாகத் தலையாட்டிய தேவா, “இதுதான் உண்மை. ஆனா, நான் தெரிஞ்சு எதையும் செய்யல சந்தியா… என்னைக் காப்பாத்திக்க நான் ட்ரை பண்ணும் போது என்னையும் அறியாம…” என்றவனுக்கு அதற்கு மேல் பேச்சு வராமல் போக, சந்தியா அவனையே உயிரற்ற பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள்.


“ஆறு மாசத்துக்கு முன்ன அந்த எம்எல்ஏ என் தோட்டத்தில் என்னைப் பார்க்க வந்திருந்தாரு… நல்ல குடிபோதையில் வந்தவரு, அவர் தான் எங்கப்பாவைத் தயாளனை வச்சுக் கொன்னதாவும், இப்ப உன்னையும் கொல்லப் போறேன்னு சொல்லிட்டு, அறுவாளை எடுத்து என்னை வெட்ட ட்ரை பண்ணாரு. நான் அவர்கிட்ட இருந்து தப்பிக்க, அவர் கையைப் புடிச்சு மடக்கி அருவாளை வாங்கினேன். ஆனா, அப்பவும் அவரு அடங்கவே இல்ல. ரெண்டு பேருக்கும் பயங்கர சண்டை நடந்தது. அப்ப தான்…” என்றவன் அமைதியாகிவிட, சந்தியா அவனையே வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்.


“நான் வேணும்னு அவரைக் கொல்லல சந்தியா, சண்டையில் அவரு என்னை வெட்ட வந்தாரு, என்னைக் காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியல. வேகமாக அவர் கையைப்பிடிச்சித் தள்ளி விட்டேன். அப்ப அவர் இடுப்புல மறச்சு வச்சிருந்த கத்தியை எடுத்து என்னைக் குத்த வந்தாரு. நான் அவர் கையைப்பிடிச்சு முறுக்கின சமயம் அந்…அந்தக் கத்தி… அவ..அவர் வயித்துல குத்திடுச்சு. அப்..அப்பவே அவர் உயிர் போயிடுச்சு” என்றவனின் குரலில் தன்னால் ஒரு உயிர் போய் விட்டது என்று குற்றவுணர்வு அப்பட்டமாகத் தெரிந்தது. 


“அந்தாளு செத்துக் கிடந்ததைப் பார்த்த நிமிஷம், உள்ளுக்குள் எனக்கு எதுவும் ஓடல. அப்படியே உறஞ்சு நின்னுட்டேன். அடிதடி, வெட்டு, குத்து எல்லாம் நான் செஞ்சிருக்கேன் தான். ஆனா, ஒரு உயிரைக் கொல்ற அளவுக்கு நான் கெட்டவன் இல்ல. நான் இதுவரை செஞ்சது கூட இந்த‌ ஊரைக் காப்பாத்த தான் செஞ்சிருக்கேனே தவிர, என் சுயநலத்திற்காக நான் இதுவரை ஒரு சின்னத் தப்பு கூடச் செஞ்சது இல்ல.” என்றவன் திரும்பி சந்தியாவின் முகத்தைப் பார்த்தவன், “உன்னைக் கல்யாணம் பண்ணதைத் தவிர.” என்று சொல்ல அவள் கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள்.


“அந்த நிமிஷம் என்னால எதுவும் யோசிக்க முடியல. அப்படியே அந்தாளு பெட்பாடி பக்கத்திலேயே நின்னுட்டு இருந்தேன். உடனே போலீஸ்ல போய் சரண்டர் ஆகணும்னு மட்டும் தான் அப்பத் தோணுச்சு. அப்பதான் ரகுவும் மத்த ஆளுங்களும் அங்க வந்தாங்க. இந்தக் கொலை வெளிய தெரிஞ்சா கண்டிப்பா பழைய பகையை மனசுல வச்சுக்கிட்டு, வேணும்னு தான் நான் அந்தாளைக் கொன்னேன்னு இந்த ஊரே சொல்லும்னு சொல்லி அந்தக் கொலையை மறைக்கச் சொன்னாங்க. ஆனா, என்னால அதை ஏத்துக்க முடியல. செஞ்ச தப்புக்கு கண்டிப்பாய் தண்டனையை ஏத்துகிட்டே ஆகணும்னு தான் நான் நினைச்சேன். அப்பதான் ரகு, இந்த விஷயம் வெளிய வந்தால் அமைதியா இருக்கற ரெண்டு ஊருக்கு நடுவுல மறுபடியும் வெட்டு குத்துன்னு கலவரம் வரும். தேவையில்லாம நிறைய உயிர் போகும்னு சொன்னான். என்னால மறுபடியும் ரெண்டு ஊருக்கு நடுவுல பிரச்சனை வரவேண்டாம்னு நினைச்சு அவங்க சொன்னதைக் கேட்டேன். ரகுவும் மத்தவங்களும் அந்தாள் டெட் பாடியை நம்ம தோட்டத்துலயே ஒரு இடத்தில் புதைச்சிட்டாங்க” என்று நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லி முடித்தவன், சந்தியாவின் முகம் பார்க்க அதுவோ வெளிறிப் போயிருந்தது.


“சந்தியா… சந்தியா…” என்று அவள் தோளைப் பிடித்து அவன் உலுக்க, அவன் கைகளிலேயே‌ மயங்கிச் சரிந்தாள் அவன் மனைவி.


அமைதியாகக் கண்மூடி உறங்கும் மனைவியின் முகத்தை வாஞ்சையாகப் பார்த்தவன், “இதுக்காகத் தான்டி கல்யாணமே வேணாம்னு இருந்தேன். எப்படி இருந்தாலும் நான் ஒரு குற்றவாளி தான். அதுக்கான தண்டனை இப்ப இல்லாமல் போனாலும் என்னைக்காவது எனக்குக் கிடைக்கும்னு எனக்குத் தெரியும்‌. அதான் உன்னைப் பிடிச்சிருந்தும் ஒதுங்கிப் போனேன். ஆனா, அந்தக் கடவுள் என்ன நினைச்சாரோ, உன்னை என்னோட இணைச்சு வச்சு உன் வாழ்க்கையில் விளையாடிட்டாரு.” என்றவன் அந்த அறையை விட்டு வெளியேற, மயக்கத்தில் இருந்த சந்தியாவின் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் வழிந்தது.


இரவு முழுவதும் சந்தியாவுக்குத் துணையாக இருந்தவனுக்கு, மனச்சோர்வுடன் உடல் சோர்வும் சேர்ந்து கொள்ள, அவள் அருகில் அமர்ந்தபடி உறங்கி இருந்தான் தேவா. 


நேரம் கடந்து தூங்கி இருந்தவன் மதியம் போல்தான் கண் விழித்தான். தூக்கம் கலைந்ததும் முதல் வேலையாகச் சந்தியாவைப் பார்க்கச் சென்றவன் காலியாக இருந்த அறையைத்தான் கண்டான். ஒரு வேளை ஆர்த்தியுடன் இருப்பாளோ என்று நினைத்தவன், ஆர்த்தியிடம் விசாரிக்க பாவம் அவளுக்கும் எதுவும் தெரியவில்லை. காலையில இருந்து அவளைப் பார்க்கவில்லை என்று சொல்லிவிட, தேவாவுக்கு உள்ளுக்குள் பதட்டம் தொற்றிக் கொண்டது.


வீட்டில் இருந்த அனைவரும் சந்தியாவை வீடு முழுவதும் தேடிப் பார்த்தும் அவள் எங்கேயும் இல்லாமல் போக, தேவாவுக்கும் ஆர்த்திக்கும் மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றி பயமுறுத்தியது.


“நேத்து அவகிட்ட நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன் ஆர்த்தி. அதைக் கேட்டவ அப்படியே மயங்கிட்டா… இப்ப அவளை எங்கயும் காணும். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அவ…அவளுக்கு எதுவும் தப்பா?” என்றவனுக்கு அந்த வார்த்தையை முடிக்கக் கூட மனதில் தைரியம் இல்லை‌.


“அண்ணா, ஒருவேள அண்ணி, அவங்க ப்ரண்ட் வீட்டுக்குப் போயிருக்கலாம். நான் உடனே அங்கபோய் பார்க்குறேன்.” என்று கிளம்பியவனின் கால்கள் பிரேக் அடித்தது போல் சட்டென நின்றது. வீட்டுக்குள் நுழைந்த போலீஸ் படையைப் பார்த்து‌.


நேராக தேவாவிடம் வந்த போலீஸ், “எக்ஸ் எம்எல்ஏ பழனியைக் கொலை பண்ண குற்றத்துக்காக உங்களையும், அதை மறைக்க உதவிய ரகு, அவர் கூட இருந்தவர்களையும் அரஸ்ட் பண்றோம்.” என்று சொல்ல, அதைக்கேட்ட அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.


உடனே ரகு அவர்கள் முன்னால் வந்து நின்றவன், “எங்க வந்து என்ன உளறிட்டு இருக்கீங்க. எங்கண்ணா கொலை பண்ணதா யார் சொன்னது? என்ன எவிடன்ஸ் வச்சிருக்கீங்க. அட்லீஸ்ட் செத்தவன் டெட் பாடியாச்சும் எவிடன்ஸா இருக்கா உங்ககிட்ட?” என்று கேட்க, “என்கிட்ட எல்லா எவிடன்ஸ்சும் பக்காவா இருக்கு ரகு” என்ற குரலில் அனைவரும் குரல் வந்த திசையில் பார்க்க, அங்கு வெள்ளைச் சட்டை, கறுப்பு பேண்ட் அணிந்து மிடுக்காக நெஞ்சம் நிமிர்ந்தி நடந்து வந்தாள் அவள்.


அவளைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து நிற்க, தேவாவின் முன்னால் வந்து அவனை நேருக்கு நேர் பார்த்தபடி நின்றவளை தேவா இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, ஆர்த்தி அவள் முன்னால் வந்து நின்றவள், “இங்க என்ன நடக்குது? நீ… நீ இவங்க கூட எப்படி? யார் நீ?” என்று கேட்க, அவளைப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தவள், 


“ஐ அம் சந்தியா ராம்குமார்! க்ரைம் பிராஞ்ச் ப்ரம் டெல்லி. எம்.எல்.ஏ பழனி காணாமல் போன கேஸை இன்வஸ்டிகேட் பண்ண வந்த ஸ்பெஷல் ஆபிசர்” என்று சொல்ல அங்குப் பேரமைதி.


எந்தச் சலனமும் இல்லாமல் தேவாவைத் தீர்க்கமாகப் பார்த்தவள், “உங்க தோட்டத்தில் இருந்து பழனியோட டெட்பாடியை எடுத்திருக்கோம். அதோட உங்களுக்கு எதிராய் சில எவிடன்ஸூம் கிடைச்சிருக்கு.” என்றவள் திரும்பி ரகுவைப் பார்த்தபடி, “அரஸ்ட் தெம்” என்று சொல்ல, அவளுடன் வந்திருந்த போலீஸ் தேவா மாற்றம் அவனுடன் இருந்த ஆட்களைக் கைது செய்தனர். 


“இல்ல… இல்ல, என் தம்பி எந்தத் தப்பும் பண்ணல… அவனை விடு” என்று ஆர்த்தி சந்தியாவிடம் கொஞ்ச, “ஐ அம் சாரி ஆர்த்தி.” என்று இறுகிய குரலில் சொன்னவள் அங்கிருந்து சென்றாள்.


அங்கு நடந்த விஷயம் காட்டுத்தீ போல் மளமளவென அனைத்து ஊர்களுக்கும் பரவிவிட, இதனால் சந்தியாவுக்கு எதுவும் ஆகி விடுமோ என்ற பயத்தில், சூர்யாவுக்கு அழைத்து இங்கு நடந்த அனைத்தையும் சொல்லி விட்டார் கீர்த்தியின் தந்தை. அதைக்கேட்ட அடுத்த கணம், தனி விமானம் எடுத்து அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த ஊருக்கு வந்தி இறங்கி இருந்தனர் அனைவரும். 


தேவாவுடன் மற்றவர்களையும் காவல் நிலையத்தில் விட்டுவிட்டுக் கீர்த்தியின் வீட்டுக்குள் நுழைந்தவளின் கன்னத்தில் இடியென இறங்கியது கலைவாணியின் கரம்.


“என்னடி பண்ணி வச்சிருக்க… என்ன பண்ணி வச்சிருக்க நீ… இவ்ளோ நடந்திருக்கு, ஒரு வார்த்தை எங்ககிட்டச் சொல்லனும்னு உனக்குத் தோணல இல்ல..‌. அவளோ நெஞ்சு தைரியம் எங்க இருந்துடி வந்தது உனக்கு…” என்று அவள் தலை முடியைக் கொத்தாகப் பிடித்தவர் மீண்டும் மீண்டும் அவள் கன்னத்தில் அறைய, சூர்யா ஓடிவந்து மாமியாரின் கையைப் பிடித்துக் கொள்ள, சந்தியாவைத் தன் கையணைப்பில் பத்திரப் படுத்திக்கொண்டான் அர்விந்த்.


“அம்மா ப்ளீஸ்… கொஞ்சம் அமைதியா இருங்க.‌‌.‌.” என்ற சூர்யாவை முறைத்த கலை, “இன்னும் எதுக்கு அமைதியா இருக்கணும். அமைதியா இருந்தா இங்க நடந்தது எல்லாம் இல்லன்னு ஆகிடுமா… இவளுக்கு நடந்த கல்யாணம் இல்லாமல் போயிடுமா” என்று தலையில் அடித்துக்கொண்டு கதறியவர், “இதுக்குத்தான் அப்பவே இந்தப் போலீஸ் வேலை வேணாம் வேணாம்னு தலபாடா அடிச்சிக்கிட்டேன். யாராச்சும் எம்பேச்சைக் கேட்டீங்களா? அழுது, அடம் புடிச்சு, பட்டினி கிடந்து எல்லார் மனசையும் மாத்தி இந்த வேலையில சேர்ந்தாளே… இப்ப அதுக்கான பலன் கைமேல கிடைச்சிடுச்சு இல்ல… வேலைக்காக இப்படி வாழ்க்கையை மொத்தமாகத் தொலைச்சிட்டு வந்து நிக்கிறாளே” என்றவர் மீண்டும் சந்தியாவை அடிக்க வர, சூர்யாவின் அம்மா வந்து அவரைத் தடுத்து விட்டார்.


“என்ன பேசுறீங்க அண்ணி… ராமசாமி அண்ணா சொன்னதைக் கேட்டீங்க இல்ல. இதுல இவ மேல என்ன தப்பு இருக்கு? நடந்தது எதுக்கும் இவ பொறுப்பு இல்ல.” என்றவர் சூர்யாவிடம், “டேய், அவளை வெளிய கூட்டிப் போங்க.” என்று சொல்லச் சூர்யாவும் அரவிந்தும் அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தனர்.


நிலா, தேன்மொழி, தேவி மூவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நிற்க, சந்தியா எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.


“இப்ப என்ன பண்றதா இருக்க சந்தியா?” என்று கேட்ட சூர்யாவை நிமிர்ந்து பார்த்தவள், “தெரியல மாமா” என்றாள் அமைதியாக.


“அவகிட்ட என்ன பேசிட்டு? இந்த ஊர்ல அவ இருந்தது போதும். முதல்ல சென்னைக்கு கிளம்பச் சொல்லுங்க அவளை.” என்றாள் நிலானி கோவமாக.


“இது என்னோட கேஸ். நான் எடுத்த எந்தக் கேஸையும் இதுவரை பாதில விட்டு எனக்குப் பழக்கம் இல்ல. இந்தக் கேஸை முடிக்காம இந்த ஊரைவிட்டு நான் எங்கேயும் வரமாட்டேன்.” என்று உறுதியாகச் சொன்னவளை அடிக்கப் பாய்ந்த நிலாவைத் தடுத்த அரவிந்த், “இப்ப எதுக்கு அவளை அடிக்கப் போற?” என்று கோவமாகக் கேட்க அவனை முறைத்த நிலா, “இவளோ நடந்த பிறகும் நீங்க இவளுக்கு தான் சப்போர்ட் இல்ல.” 


“அவ முகத்தைப் பார்த்தால் தெரியல உனக்கு.‌‌.. அவ ஏற்கனவே உள்ளுக்குள் உடஞ்சு போயிருக்கா… அதைப் புரிஞ்சிக்காம நீயும் அவளை அடிக்கப்போனா என்ன அர்த்தம் நிலா. அவளுக்கு யோசிக்க கொஞ்சம் டைம் குடு” என்றவன், “நீ சொல்லு சந்தியா… இப்ப நீ என்ன செய்யப்போற?” என்று கேட்டான் அர்விந்த்.


“இந்தக் கேஸை முடிக்காம இந்த ஊரைவிட்டு நான் வரமாட்டேன். எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க. அதுக்குள்ள இந்தக் கேஸை நான் முடிச்சிடுவேன்.” என்றவளைக் கூர்மையாகப் பார்த்த சூர்யா, “அதுக்கு அப்புறம்?” என்று கேட்டான் அழுத்தமாக.


அவன் கேள்வியில் உள்ள உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்ட சந்தியா, “நடந்தது ஒரு விபத்து. என்னை அந்த தீனாகிட்ட இருந்து காப்பாத்துறதாய் நினைச்சு தான் தேவா தாலி கட்டினாரு. இந்தக் கேஸுக்காக தேவாவை எப்படி நெருங்குறதுன்னு யோசிச்சிட்டு இருந்த எனக்கு அவர் வீட்டுக்குள் மட்டும் இல்லாம அவர் வாழ்கைக்குள்ளயும் போய் உண்மையைக் கண்டுபிடிக்க ஒரு வாய்ப்புக் கிடைச்சது. யூஸ் பண்ணிட்டேன். மத்தபடி நடந்தது, கல்…கல்யாணமும் இல்ல. அவ..அவனுக்கும் எனக்கும் நடுவுல எதுவும் இல்ல‌.” என்று சொல்லும் போதே தேவாவின் முகம் அவள் மனக்கண்ணில் வந்துபோக, அவளின் இதயம் நின்று துடித்தது. 


அவள் சொன்னதைக் கேட்டவர்களுக்கு, அவள் சொல்வதில் பாதி உண்மை, பாதி பொய் என்று நன்றாகவே புரிந்தது. ஆனால், இப்போது அதைப்பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்தவர்கள், அந்தக் கேஸ் முடியும் வரை அவள் அங்கு இருந்துதான் ஆகவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு, பெரியவர்களிடம் பேசிச் சமாதானம் செய்து அவர்களை எல்லாம் ஊருக்கு அனுப்பி வைத்த சூர்யாவும், அர்விந்தும் சந்தியாவுக்குத் துணையாக அந்த ஊரிலேயே இருப்பதாகச் சொல்லிவிட, நிலாவும் தேன்மொழியும் தங்கைக்குத் துணையாக அங்கேயே தங்கினர்.