உன் விழியில் கைதானேன்

 



உன் விழியில் கைதானேன்


விழி 1


இந்தக் கதை என்னுடைய முதல் கதையான ‘கண்ட நாள் முதல்’ கதையில் வரும் சந்தியாவின் கதை. 


கலைவாணி, ராம்குமார் தம்பதிகளின் இரண்டாவது மகள் சந்தியா. இவளின் அக்கா நிலானி தான் ‘கண்ட நாள் முதல்’ கதையின் நாயகி. அவளுக்கு சூர்யாவுடன் திருமணமாகி கணவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கிறாள். அவளின் தோழிகள் தேன்மொழி, தேவி. சூர்யாவின் நண்பன் அரவிந்த், தேன்மொழியைக் காதலித்து திருமணம் செய்து கொள்ள, தேவி அவள் மாமன் மகன் பிரசாத்தை திருமணம் செய்து கொண்டாள். சூர்யாவின் தாய் தனலட்சுமி, தந்தை குமரேசன். இந்தக் கதையில் வரப்போகும் முக்கிய கதை மாந்தர்கள் இவர்கள் தான்‌. இனி இவர்களின் அதிரடி, சரவெடி கதையில் என்னோடு சேர்ந்து பயணியுங்கள். 


குறிப்பு : இதில் என் அழகிய தமிழ் மகள் கதையின் நாயகி சம்யுக்தா அடிக்கடி கெஸ்ட் ரோலில் வந்து செல்வார் என்பதைச் சுருக்கமாகச் சொல்லிக் கொண்டே கதைக்குள் செல்கிறேன். 




காலை வேளையில் அந்த வீடு முழுவதையும் நிறைத்திருந்தது, சாம்பிராணிப் புகையோடு நிலானியின் தேன் குரலில் மகிஷாசுரமர்த்தினி பாடலின் ஓசையும்.


மெல்லியதாகக் கொலுசு ஒலி கேட்கும்படி வீடு முழுவதும் நடந்து சாம்பிராணி போட்டபடியே வந்த நிலானி, சந்தியாவின் அறைக் கதவைத் திறக்க, அங்கு இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டு இருந்தாள் அவளது அருமைத் தங்கை சந்தியா.


"ம்ம்ம்" என்று சொல்லிக் கொண்ட நிலானி அறைக்குள்ளே சென்றவள், "நைட் முழுக்கக் கண் முழிச்சு வேலை பாக்குறது, காலையில லேட்டா எழுந்து வேலைக்கு டைம் ஆச்சுன்னு அரக்கப் பறக்க சாப்பிடாமக் கூட ஓடுறது." என்று புலம்பியபடியே அவள் போர்த்தி இருந்த போர்வையை விலக்கிப் பார்க்க, அங்கு சிறு குழந்தை போல் சந்தியா உறங்கிக் கொண்டிருக்க, அவளை இறுக்கி அணைத்தபடியே படுத்திருந்தனர் நிலானியின் மகளும், மகனும்.


மூவரையும் பார்த்து மெல்லச் சிரித்த நிலானிக்கு இதில் யார் குழந்தை என்று சந்தேகமே வந்துவிட்டது.


"நைட் என்கூட தான் படுத்திருந்துச்சுங்க… எப்ப இங்க வந்து படுத்ததுங்க ரெண்டும்" என்று யோசித்தபடியே சந்தியாவைத் தட்டி எழுப்பினாள் நிலானி.


"சந்து… ஏய் சந்து, எழுந்துருடி… மணி ஏழரை ஆச்சு பாரு. சீக்கிரம் எழுந்துருடி, வேலைக்குப் போகணும் இல்ல" என்றபடி எழுப்ப மெல்லக் கண் திறந்த சந்தியா, கண்களால் அறையை ஒரு முறை சுற்றிப் பார்த்தவள், மீண்டும் குழந்தைகளை அணைத்தபடி படுத்துக் கொள்ள, நிலானிக்கு கோபம் எகிறியது. 


"ஓழுங்கா எழுப்பினா நீ எழுந்திருக்க மாட்டடி" என்றபடி பட்டென்று அவள் முதுகில் ஒரு அடியைப் போட்டவள், “அடியே பிடாரி, எழுந்துருடி… நேரமாச்சு…" என்ற போதும் எழாமல் இருந்தவள், "கடைசியா சொல்றேன், ஒழுங்க எழுந்திரி… கீழ அத்தை பூரியும், சன்னாவும் பண்ணிட்டு இருக்காங்க… நீ இப்ப எழுந்திருக்கல" என்று சொல்லி முடிக்கும்முன் பாய்ந்து எழுந்தாள் சந்தியா.


"பூரியாஆஆஆ..‌. இதை ஏன் நீ முதல்லயே சொல்லல" என்று வேக வேகமாக எழுந்து குளியலறைக்குள் புகுந்தவள் லேசாக கதவைத் திறந்து, "ஏய் பிசாசு, அத்தைகிட்ட ஒரு ரெண்டு பூரியை எடுத்து அதுல சன்னாவை நல்லாப் போட்டு ஊற வைக்கச் சொன்னேன்னு சொல்லு" என்று சொல்ல,


"அடிங்கு… என்று" அவள் மேல் தலையணையைத் தூக்கி எறிந்தவள், "ஏன்டி, என் மாமியாரைப் பார்த்தா உனக்கு என்ன சமையல்காரங்க மாதிரி தெரியுதா?" என்ற நிலானி தங்கையை அடிக்கப் பாய பட்டென்று பாத்ரூம் கதவை மூடிக் கொண்டாள் சந்தியா.


"திங்க கீழ வந்து தானே ஆகணும், அப்ப வச்சிக்குறேன்." என்றவள், தன் குழந்தைகளை எழுப்பி அவர்கள் அறைக்குத் தூக்கிச் சென்றாள்.


அங்கு அவளின் கணவன் சூர்யா, குழந்தைகள் இருவரையும் அள்ளிக் கொண்டவன், "என்ன? வழக்கம் போல ரெண்டு பேரும் சித்தி ரூம்க்கு போயிட்டீங்களா?" என்று கேட்டபடி குழந்தைகள் இருவரின் கன்னத்திலும் முத்தம் பதித்தான்.


"ஆமாங்க… நைட் ரெண்டும் நம்ம கூட தானே தூங்கிட்டு இருந்துச்சுங்க… காலையில பாத்தா ரெண்டும் அங்க இருக்கு… அவளே நைட் பத்து மணிக்கு தான் வந்தா போல… நான் தலைவலின்னு நேத்து சீக்கிரம் தூங்கிட்டேன். இதுங்க பத்து மணிக்கு மேல அவ ரூம்க்கு ஓடி இருக்கு, பாருங்க" என்றவள் குரலில் சிறிதாகப் பொறாமை எட்டிப் பார்க்க, அவள் கன்னத்தைக் கிள்ளிய சூர்யா, "என்ன மேடம், ஸ்டமக் பர்னிங் ஆகுது போல" என்று சொல்லிச் சிரிக்க, அவனைக் கண்கள் சுருக்கிச் செல்லமாக முறைத்தாள் நிலானி‌.


"எனக்கு ஒண்ணும் ஸ்டமக் பர்னிங் இல்ல" என்று ஒழுங்கு காட்டியவளுக்கு உள்ளுக்குள் சந்தியா தன் குழந்தைகள் மேல் வைத்திருக்கும் அன்பை நினைத்து மனம் நெகிழ்ந்துதான் போனது.


"விடுடி… இன்னும் எத்தனை நாளைக்கு? நாளைக்கே அவ புருஷன் வீட்டுக்குப் போயிட்டா… அப்புறம் இதுங்க ரெண்டும் உன் கூடவே தான இருக்கும்" என்று மனைவியின் முகம் பார்க்காமல் சொல்லி விட்டவன், திரும்பி நிலாவின் முகம் பார்க்க அது வாடி இருந்தது.


அப்போதுதான் அவன் பேசியது அவனுக்கு உரைக்க குழந்தைகளைக் கீழே இறக்கி விட்டவன், நிலாவைத் தோளோடு அணைத்துக் கொண்டான். "ஏய் சாரிடி… ரொம்ப சாரி! நான் ஏதோ ஞாபகத்தில் சொல்லிட்டேன், சாரிம்மா" என்று சொல்ல, அவள் மார்பில் சாய்ந்து கொண்டவள், "நீங்க சொன்னது நடக்கணும் சூர்யா… சீக்கிரம் அவ மனசு மாறணும். அவளுக்கு நல்லபடியா ஒரு வாழ்க்கை வேணும் அமையணும் , அதுதான் என்னோட பிரார்த்தனை" என்றவளின் கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்ட‌ சூர்யா, "உன்னோட பிரார்த்தனை மட்டும் இல்லடி… உங்க அம்மா, அப்பால தொடங்கி, என்னோட அம்மா, அப்பா, அரவிந்த், தேனு, தேவி எல்லாரோட வேண்டுதலும் அதுதான். இவ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா அரவிந்த், பத்து ஏழைப் பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதா வேண்டிட்டு இருக்கான் தெரியுமா?" என்றவன்,


 "நம்ம எல்லார் வேண்டுதலும் வீணாப் போகாது நிலானி. சீக்கிரம் சந்தியா மனசு மாறும்" என்று நிலானி கஷ்டப்படுவாள் என்ற எண்ணத்தில் அவளைச் சமாதானம் செய்யும் விதமாகப் பேசியவனுக்கும், உள்ளுக்குள் சந்தியாவின் பிடிவாத குணத்தை நினைத்துக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. 


"நீங்க சொன்னது நடக்கணும் சூர்யா" என்றவள், "சரி சரி டைம் ஆச்சு, அத்தை தனியா கிச்சன்ல இருக்காங்க, நான் போறேன்." என்க, "ம்ம்ம் சரி நீ போ… நான் குழந்தைகளைக் குளிப்பாட்டி ரெடி பண்றேன்" என்றவன் குழந்தைகளுடன் குளியலறைக்குள் நுழைய நிலா கீழே சென்றாள்.


மாமியாரும் மருமகளும் சேர்ந்து காலை உணவு தயார் செய்துவிட்டு, டைனிங் டேபிளில் அதை அழகாக அடுக்கிக் கொண்டிருந்த வேளையில், "அம்மா, உங்க பூரி, சன்னா வாசனை தெருவே மணக்குது" என்றபடியே வந்தான் அரவிந்த்.


"வாடா… தேனு எங்க?” என்று கேட்டார் தனலட்சுமி.


"அவ குழந்தைகளை ரெடி பண்ணிட்டு இருக்கா மா" என்றான்.


"ஏன்டா அவளுக்கு ஹெல்ப் பண்ணாம, இங்க கொட்டிக்க வந்துட்டியா நீ… போடா, போய் ஒழுங்கா தேனுக்கு ஹெல்ப் பண்ணுடா… இல்லாட்டி உனக்குச் சோறு கிடையாது" என்று தனம் சொல்ல நிலா வாய்விட்டுச் சிரித்தவள், "அதான், அத்தை சொல்லிட்டாங்க இல்ல… போங்க போங்க சோறு கிடையாது" என்று அவளும் அவள் பங்கிற்கு அவன் காலை வாரிவிட, அரவிந்த் இருவரையும் முறைத்தவன்,


"ம்மா… நடந்தது தெரியாமல் பேசாதீங்கமா… குழந்தைங்க ரெண்டு பேரையும் எழுப்பிக் குளிப்பாட்டி விட்டது எல்லாம் நான்தான்… டிரஸ் போட்டுவிடும் வேலை மட்டும் தான் உங்க அருமை மருமகளுக்கு…" என்றவன் தட்டில் பூரியை எடுத்து வைத்து உண்ணத் தொடங்கிய நேரம், "ஹலோ… ஹலோ… அது என்னோட பூரி" என்றபடி ஓடிவந்த சந்தியா, அவன் கையில் எடுத்த உணவை அப்படியே தன் வாயில் வாங்கிக் கொண்டாள்.


"ஏய் பிடாரி… அதான் அவ்ளோ பூரி இருக்கில்ல, எதுக்குடி அரவிந்த் கையில இருக்குறது புடுங்கித் திங்குற? பாவம் அவரு, இப்பதான் ஆசையா சாப்பிட உக்கார்ந்தாரு" என்ற நிலானி தங்கையின் தலையில் கொட்டு வைக்கப்போக, "நிலா" என்று அதட்டியபடி அவள் கையைப் பிடித்துக் கொண்டான் அர்விந்த்.


"எதுக்கு இப்ப அவளை அடிக்க வர்ற நீ… அவ என் தட்டுல இருந்து தானே எடுத்தா, அதுல உனக்கென்ன வந்துச்சு…" என்று நிலாவை முறைக்க நிலா தலையில் அடித்துக் கொண்டே, "அதுசரி… போயும் போயும் உங்க ரெண்டு பேர் சண்டைக்கு நடுவுல வந்தேன் பாருங்க, என்னைச் சொல்லனும்… அவளை ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாது… உடனே மாமனுங்க ரெண்டு பேரும் வரிஞ்சு கட்டிட்டு வந்துடுவீங்களே…" என்றவளின் வார்த்தைகளில் தன் சொந்தங்களை நினைத்துப் பெருமைப் பொங்கியது.


"என்ன… என் தலை உருளுது" என்று கேட்டபடியே குழந்தைகளோடு கீழ் இறங்கி வந்தான் சூர்யா.


நிலானி நடந்ததைச் சொன்னவள், "நீங்க ரெண்டு பேரும் இவளுக்கு ரொம்பச் செல்லம் கொடுக்குறீங்க… அவ ஒண்ணும் இன்னும் சின்னக் குழந்தை இல்ல, சும்மா கொஞ்சிட்டே இருக்க…" என்று சொல்ல, அவள் சொல்வதின் அர்த்தம் அங்கு அனைவருக்கும் புரிந்தாலும் எதுவும் பேசமுடியாத நிலையில் அமைதியாக இருந்தனர்.


அந்தச் சூழ்நிலையை மாற்றும் பொருட்டு, "ஏன்டி நீ இவ்ளோ நேரம் தம் கட்டிப் பேசினது எல்லாம் வேஸ்ட்டுடி… அங்க பாரு, இங்க நடக்கும் சண்டைக்குக் காரணமே இவதான்… ஆனா, அந்தக் கவலை கொஞ்சம் கூட இல்லாம ரெண்டு பூரியை முடிச்சிட்டு அடுத்த பூரியை சாப்பிட்டுட்டு இருக்கா" என்று சொல்ல அனைவரும் சந்தியாவைப் பார்க்க, அவள் அங்கு நடப்பதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற ரீதியில் பூரியை ஒரு கை பார்த்துக் கொண்டு இருக்க, அனைவரும் சிரிப்பு வந்து விட்டது.


நிலானி அவள் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவள், "ஏன்டி, உன்னால இங்க இவ்ளோ பிரச்சனை நடக்குது… நீ என்னடான்னா எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லன்ற மாதிரி தின்னுட்டு இருக்க… என்ன ஜென்மம்டி" என்று தலையில் அடித்துக் கொள்ள, சந்தியா எழுந்து சென்று கையைக் கழுவிவிட்டு வந்தவள், "சோறுன்னு வந்துட்டா சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிக்க மாட்டா, இந்தச் சந்தியா" என்று தன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு, "நமக்குச் சோறுதான் முக்கியம்" என்று சொல்ல, நிலா அவளை அடிக்க ஓட தன் கைப்பையை எடுத்துக் கொண்டவள், "சந்து எஸ்கேப்" என்று வெளியே வந்தாள்.


அங்கு தேன்மொழியைப் பார்க்க, "குட் மார்னிங் தேனுக்கா" என்றபடி அவள் குழந்தைகள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சிட்டாகப் பறந்தாள் சந்தியா.


"ஒரு நிமிஷம் நின்னு பேசிட்டுப் போடி" என்ற தேனுக்கு, "டைம் ஆச்சுக்கா… நைட் உங்க வீட்லதான் டின்னர்" என்று கத்திக் கொண்டே சென்றாள்.


உள்ளே வந்த தேனு, "கால்ல சக்கரம் கட்டிவிட்ட மாதிரி ஓடிட்டு இருக்கா" என்று சொல்ல, "அந்த ஓட்டம் தானே அவளை இப்ப வரை உயிர்ப்போட இருக்க வச்சிட்டு இருக்கு…" என்ற தனலட்சுமியின் கண்கள் கலங்கிவிட, மாமியாரைத் தோளோடு அணைத்துக் கொண்டாள் நிலானி.


"கவலைப்படாதீங்க அத்தை. எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்" என்று அவருக்குச் சொல்வதுபோல் தனக்கும் சொல்லிக் கொண்டாள்.


சூர்யாவும், "சீக்கிரம் அவ வாழ்க்கையில் நல்லது நடக்கும்மா… அவளோ சீக்கிரம் மறந்து போற விஷயம் இல்லயே அவளுக்கு நடந்தது. அதுல இருந்து வெளிய வந்து யோசிக்க அவளுக்கும் கொஞ்சம் டைம் வேணும் இல்ல" என்ற சூர்யாவை முறைத்த தனலட்சுமி,


"எவ்ளோ நாள்டா? இன்னும் எவ்ளோ நாள்! விளையாட்டுப் போல மூணு வருஷம் ஓடிப் போச்சு… இன்னும் எத்தனை வருஷம் ஆகும் சொல்லு அவ மாற? அவ நமக்காக தான் எப்பவும் போல இருக்குறதா காட்டிக்குறா… இந்த வீட்டு வாசல் தாண்டின அடுத்த நிமிஷம் அவ முகத்தில் இருக்கற சிரிப்பு மறஞ்சு போயிடும் தெரியுமா? நம்மை விடுடா… கலை அண்ணி, குமார் அண்ணா பத்திக் கொஞ்சமாவது யோசிச்சா இவ இப்படி இருப்பாளா? இவ வாழ்க்கையில் ஒரு நல்லது நடக்கும் வரை அவ முகத்தைப் பார்க்க மாட்டோம்னு காசில போய் உக்கார்ந்துட்டு இருக்காங்க… அவங்களுக்காகவாவது இவ மனசு மாறக் கூடாதா?" என்று கோவத்தில் ஆரம்பித்தவர், "எப்படி இருக்க வேண்டிய‌ பொண்ணு… இன்னைக்கு இப்படி இருக்காளே" என்ற‌ ஆதங்கத்தில் முடிக்க, அங்கிருந்த அனைவருக்கும் அதே எண்ணம் தான்.


அந்த நேரம் அரவிந்த், "அவகிட்டப் பேசினயா சூர்யா?" என்று கேட்க, "ம்ம்ம்" என்றான் அவன்.


"என்ன சொன்னா?" என்று கேட்டான் பதில் தெரிந்து கொண்டே.


"அஸ் யூஸ்வல்… பேச்சை மாத்திட்டுப் போயிட்டா" என்றான் விரக்தியாக.


"அவ என்னதான் நினைச்சுட்டு இருக்கான்னே ஒண்ணும் புரியல அண்ணா" என்றாள் தேனு சூர்யாவைப் பார்த்து.


"ஆமா தேனு… அவ முன்ன மாதிரி இல்ல… அவ மனசைப் பூட்டுப் போட்டு அவ புத்திய அதுக்குக் காவலா வச்சிருக்கா… எதுவும் செய்ய முடியல" என்றான் இயலாமையோடு.


"ஆமா, சூர்யா… முன்ன எல்லாம் அவ என்கிட்ட எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணுவா… ஆனா, இப்ப எல்லாம் என்கிட்டப் பேசுறது ரொம்பக் குறஞ்சு போச்சி" என்க,


 "ஆமா நிலா நீ சொல்றது ரொம்பச் சரி… என்னோட, தேவியோட கூட சரியா பேச மாட்றா… பக்கத்து பக்கத்து வீடுன்னுதான் பேரு… ஆனா, அவளோட முகத்தைக் கூடச் சரியாப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு" என்று குறைப்பட்டுக் கொண்டாள் தேன்மொழி.


"யாரை வச்சு இவ மனசை மாத்துறது… இவளைக் கார்னர் பண்ற மாதிரி ஒரு ஆள் வேணும் நமக்கு" என்று அரவிந்த் சொல்ல, சட்டென்று நிலானி, தேன்மொழி முகத்தில் சுவிட்ச் போட்டது போல் பல்ப் எரிந்தது.


"அவகிட்டப் பேச இல்ல, அவளை அதட்டி உருட்டி மிரட்டவே எங்க கைவசம் ஒரு ஆள் இருக்கு என்றுச் சொல்ல ஆண்கள் இருவரும், "யார் அது?" என்றனர் பெரிய எதிர்பார்ப்போடு.


"வேற யாரு? எங்க ஸ்கூல் மேட் யுக்தா தான். ஸ்கூல் டைம்ல இருந்தே இவளுக்கு யுக்தான்னா கொஞ்சம் பயம்தான். இப்பச் சொல்லவே வேணாம்" என்றாள் நிலானி.


யார் சொல்லியும் கேட்காத சந்தியா, யுக்தா சொல்வதைக் கேட்பாளா? பொருத்திருந்து பார்ப்போம்…