உன் விழியில் கைதானேன் 2
விழி 2
அன்றைக்கு வழக்கத்தை விட வெகு உற்சாகமாக இருந்தாள் நிலானி.
“என்ன மேடம், பழைய ஃப்ரெண்டை மீட் பண்ணப் போறதை நினைச்சு செம்ம ஹாப்பியா இருக்கீங்க போல” என்று அவளை வம்பிழுத்தான் அவள் கண்வன் சூர்யா.
“ம்ம்ம்…” என்று இடுப்பில் கை வைத்து அவனைச் செல்லமாக முறைத்தவள், “யுக்தாவை மீட் பண்ணற சந்தோஷம் மட்டும் இல்ல, அவ மூலமா சந்தியா வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழி கிடைக்கும்ன்ற சந்தோஷம்” என்று கண்ணடித்தாள்.
“அப்படி மட்டும் நடந்தால் நான் அவங்களுக்கு கோயில் கட்டிக் கும்பிடுவேன்டி… யாருக்கும் அடங்காத நம்ம சந்தியாவே ஒருத்தருக்கு அடங்கி, பயந்து நடக்குறான்னா அது அதிசயம் தான்.” என்றான் வியப்பாக.
“அது பயம் இல்லைங்க, மரியாதை! அவளுக்கு மட்டும் இல்ல. நானு, தேனு, தேவி கூட அவளை நினைச்சு பிரம்மிக்காத நாளே இல்ல… அவ வாழ்க்கையில் நடந்த மாதிரி வேற யாருக்கும் நடந்திருந்தால் கண்டிப்பா உடஞ்சு போய் ஒரு மூலையில் அடைஞ்சு இருப்பாங்க. ஆனா, அவ அதெல்லாத்தையும் ஒதுக்கித் தள்ளிட்டு, நடந்த எதுலயும் தன்னோட தப்பு ஒண்ணும் இல்லாதபோது நான் எதுக்குத் தலை குனியனும்னு நிமிர்ந்து நின்னா பாருங்க… ப்ச்ச்! அவளை மாதிரி ஒருத்திய நீங்க பாற்த்திருக்கவே மாட்டீங்க” என்றவளுக்குத் தோழியை நினைத்து முகம் பூரித்துப் போனது.
“ம்ம்ம், நீ அவங்க வாழ்க்கையில் நடந்ததைப் பத்தி சொன்னதைக் கேட்டதில் இருந்து அவங்க மேல ஒருவித மரியாதை வந்திடுச்சுடி…”
“ம்ம்ம்… ஆமா சூர்யா… நிறைய பேர் சொல்வாங்க, அவளுக்குக் கிடைக்கும் மரியாதை அவ வேலைக்காகத் தான்னு, பட் உண்மை அது இல்ல சூர்யா. எல்லாரும் மதிக்கிறது அவளோட குணத்தை, அவளோட தைரியத்தை, அவ ஆளுமையைத்தான். அதுதான், சந்தியாவை அவளுக்கு அடங்கிப் போக வச்சது. இல்லாட்டி இந்தப் பிடாரியாவது, யார் பேச்சையும் கேக்குறதாவது…” என்ற நிலானிக்கு மனதில் தங்கையின் வாழ்க்கையை நினைத்து லேசான பயம் மட்டும் இருந்து கொண்டு தான் இருந்தது.
“நீ சொல்றது கரெக்ட் நிலானி” என்ற சூர்யா, “ஆமா அவங்க இப்ப போலீஸ்ல என்னவா இருக்காங்க?” என்று கேட்டான்.
“அவ இப்ப ஏ.எஸ்.பி யா இருக்கா சூர்யா. பாஸ்ட் ஃபைவ் இயர்ஸா அவ தமிழ்நாடுல இல்ல. சவுத் சைட், நார்த் சைட்னு வேலை பார்த்துட்டு இருந்தா… நம்ம நல்ல நேரம் போல, இப்பதான் மறுபடியும் சென்னையில டூட்டில ஜாயின் பண்ணி இருக்கா. அவளுக்குக் கடந்த நாலு வருஷமா இங்க என்ன நடந்துச்சின்னு தெரியாது. அவளுக்கு மட்டும் முன்னயே இங்க நடந்ததெல்லாம் தெரிஞ்சிருந்தால் இந்தப் பிடாரியை லெஃப்ட் ரைட் வாங்கி இருப்பா” என்ற நிலானி கடிகாரத்தைப் பார்த்தாள்.
“அச்சோ! டைம் ஆச்சு சூர்யா… கிளம்பலாம். போகும்போது அர்விந்த், தேனு, தேவியையும் கூட்டிட்டுப் போகனும், வாங்க” என்றவள் குழந்தைகளை மாமியார் பொறுப்பில் விட்டுவிட்டு யுக்தாவைப் பார்க்கக் கிளம்பினாள்.
வெகு நாட்கள் கழித்துப் பார்த்த யுக்தாவை தோழிகள் மூவரும் தாங்கள் ரெஸ்டாரண்டில் இருப்பதைக் கூட மறந்து, “யுக்தா” என்று கத்தியபடி ஓடிப் போய் கட்டிக் கொள்ள, யுக்தா முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
கணவன்மார்கள் நால்வரும் அவர்களின் பாசப் படத்தின் குறுக்கே போகாமல் அமைதியாக நின்றனர்.
“எத்தனை வருஷம் ஆச்சுடி, உங்களைப் பாத்து?” என்று யுக்தா சொல்ல, “முழுசா நாலு வருஷம் ஓடிப் போச்சு போலிஸ் மேடம்” என்று விரைப்பாக நின்று சல்யூட் அடித்த தேவியைப் பார்த்துச் செல்லமாக முறைத்தாள் யுக்தா.
“கல்யாணம் ஆகி புள்ளைகுட்டி பெத்த பிறகும் கூட இவ குசும்பு இன்னும் அடங்கவே இல்ல பாரு” என்று தேவியின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளியவளுக்கு அப்போதுதான் தன் கணவனின் நினைவு வர திரும்பிப் பார்க்க, அங்கு ஒரு சன்னமான சிரிப்போடு நின்றிருந்தான் ஆதித்தன்.
கண்களால் ஆதியை அருகில் அழைக்க, அவள் அருகில் வந்து நின்றான் அவள் கணவன்.
“இவரு தான் ஆதித்தன். என்னோட ஹஸ்பெண்ட்” என்றவள் முகத்தில் அத்தனை பெருமிதம்.
“ஹாய் அண்ணா” என்று மூவரும் கோரஸாகச் சொல்ல, ஆதிக்கு சிரிப்பு வந்து விட்டது.
“ஹாய் மா” என்று சிரித்த முகத்துடன் சொன்னவன், “ப்ரண்டை பார்த்ததும் நாலு பேரும் புருஷங்களை அம்போன்னு விட்டுட்டீங்களே” என்று மூவருக்கும் பின்னால் இருந்த கணவன் மார்களை சுட்டிக் காட்டினான்.
அதில் நாக்கைக் கடித்துக் கொண்ட மூவரும் திரும்பி தங்கள் கணவனைப் பார்த்து, “சாரி” என்று கண்களால் கெஞ்ச, அதற்குமேல் அவர்களின் கோவம் நீடிக்குமா என்ன?
நிலா, சூர்யாவைக் தன் கண்வன் என்று அறிமுகம் செய்து வைக்க, தேவியும் தேனுவும் கூட தங்கள் கண்வன்மார்களை அறிமுகம் செய்து வைத்தனர்.
ஆதியுடன் கை குலுக்கிய சூர்யா, “நீங்களும் போலீஸ்னு நிலானி சொன்னா சார்” என்றவனை நிறுத்திய ஆதி, “ப்ளீஸ் சூர்யா, சார் எல்லாம் வேணாம். கால் மீ ஆதி.” என்று சொல்ல, சூர்யாவுக்கும் மற்றவருக்கு அவனின் இந்த இயல்பு பிடித்து விட்டது.
உடனே அர்விந்த், “ஓகே ஆதி… உங்க வேலை ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான வேலை இல்ல? எப்படி இருக்கு இந்த ப்ரொபஷன், இப்ப நீங்க எந்த ஊர்ல வேலையில் இருக்கீங்க?” என்று அவன் வேலையைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டான்.
“ம்ம்ம், ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான வேலைதான். தினமும் ஒரு புது எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்” என்றவன், “இப்ப நானும் சென்னையில் தான் டியூட்டில ஜாயின் பண்ணி இருக்கேன்” என்றான் யுக்தாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி.
அதைக் கவனித்த தேவி, “ஓஓஓஓஓ…. அண்ணாவால மேடத்தைப் பிரிஞ்சிருக்க முடியாமல் அவரும் சென்னைக்கு வந்துட்டாரு போல” என்று சொல்ல ஆதியும், அதை ஆமோதிப்பது போலச் சிரித்து வைத்தான்.
“அச்சோ! சோ ஸ்வீட் அண்ணா… பொண்டாட்டி மேல எவ்ளோ லவ் உங்களுக்கு…” என்றவள், “என் புருஷன் எல்லாம் எப்படா ஏதாவது சான்ஸ் கிடைக்கும், என் தொல்லை இல்லாமல் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம்னு தான் யோசிப்பாரு…” என்று தன் கணவன் பிரசாத் காலை வாரியவள், “உங்களுக்கு தான் உங்க பொண்டாட்டி மேல எவ்ளோ லவ், அவளைவிட்டு இருக்க முடியாம இங்க வந்துட்டீங்க” என்று சொல்ல அவள் கையில் அடித்த யுக்தா, “அதெல்லாம் ஒண்ணும் இல்ல, நீ சும்மா இருடி” என்று சொல்லும் போதே அவள் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து விட்டது.
அதைப் பார்த்த நிலா, “அடியேய் இங்க பாருங்கடி, இவளுக்கு வெட்கம் கூட வருது. இத்தனை வருஷம் இவ கூட ப்ரண்டா இருக்கோம். ஆனா, இவ வெட்கப்பட்டு ஒரு நாளும் பார்த்தது இல்லயே” என்று அவள் பங்கிற்கு யுக்தாவை வம்பிழுத்தாள்.
அதில் இன்னும் கன்னம் சிவந்த யுக்தா, “ஏய் சும்மா இருங்கடி… நான் வெட்கமெல்லாம் ஒண்ணும் படல” என்றவள் இதற்குக் காரணமான ஆதியை ஓரக் கண்ணால் பார்த்து முறைக்க, அவனோ வெட்கத்தில் சிவந்திருந்த அவள் முகத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சரி சரி, இப்படியே பேசிட்டு இருந்தால் எப்படி? நான் உங்களைப் பார்க்க வரும் சந்தோஷத்தில் காலையில டிபன் கூடச் சாப்பிடல, இப்ப ஏதாவது ஆர்டர் பண்லாமா? வேணாமா?” என்று யுக்தா பேச்சை மாற்றினாள்.
ஆர்டர் செய்த உணவுகள் வந்துவிட சாப்பிட்டபடியே, “சரிடி சொல்லுங்க? உங்களுக்கு எத்தனை குழந்தைங்க? உங்க லைஃப் எப்படி போகுது? மூணு பேர் முகத்தைப் பார்த்தாலே தெரியுது, ரொம்ப சந்தோஷமா இருக்கீங்கன்னு…” என்றவளின் பார்வை அவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணமான அவர்களின் கணவர் மீது மரியாதையோடு படிந்தது.
“எங்க மூணு பேருக்கும் முதல் குழந்தை பொண்ணுதான் யுக்தா. எனக்கும், தேவிக்கும் ரெண்டாவது பையன். தேனுக்கு ரெண்டும் பொண்ணு” என்றவள், “சரி உனக்கு எத்தனை பசங்க” என்றவள், “ம்ம்ம் உன் பையன் பேரு, ப்ரணவ் தானே?” என்று கேட்க, அதுவரை இயல்பாக இருந்த யுக்தாவின் முகம் லேசாக மாறிவிட, அதைப் பார்த்த ஆதி, அவள் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான்.
“ஆமா நிலா, எங்க பையன் பேரு ப்ரணவ்னு தான் இருந்துச்சு. பட், இப்ப அவன் பேரு விஜய் ஆதித்தன். அவனுக்கு சட்டப்படி நான்தான் அப்பான்னு ரிஜிஸ்டர் பண்ணும்போது அவன் பேரை மாத்திட்டோம்.” என்றவன் ஒரு கணம் பொறுத்து, “பின்னாடி எந்த விதமான கறையும் அவன் வாழ்க்கையில் இருக்கக் கூடாது. அவன் எங்க பையன். அதுதான் நிஜம். அதுதான் எல்லார் நினைவுலயும் இருக்கணும்.” என்றான் அழுத்தமாக.
யுக்தா, ஆதித்தனின் முன்கதை அங்கிருந்த அனைவருக்கும் தெரியும் என்பதால் ஆதி சொன்னதன் அர்த்தம் அவர்களுக்கு முழுதாகப் புரிந்தது.
“வீ ஆர் ப்ரவுட் ஆஃப் யு போத்” என்ற நிலா, “சரி இவ ப்ரெக்னென்டா இருக்கான்னு சந்தியா சொன்னாளே? என்ன குழந்தை? பேர் என்ன?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.
“அவ பேரு ஆதினி” என்றாள் யுக்தா.
“ஓஓஓ… மேடம் புருஷன் பேரைப் பொண்ணுக்கு வச்சிட்டாங்க போல” என்று தேனு கிண்டல் செய்ய யுக்தாவோ, ”நீயுமாடி” என்றவள், அப்போதுதான் நினைவு வந்தவளாக, “ஆமா, உங்களைப் பார்த்த சந்தோஷத்தில் எனக்கு எல்லாம் மறந்து போச்சு…” என்றவள், “நம்ம பிடாரி, உன் தொங்கச்சி சந்தியா எப்படி இருக்கா? வேலை எல்லாம் எப்படிப் போகுது. இப்ப எப்படி இருக்கா? நிச்சயதார்த்தம் நடந்த அப்போ பாத்தது அவளை, அதுக்கு பிறகு பாக்கவே முடியல, கல்யாணம் ஆகிடுச்சா அவளுக்கு?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனவள் கையை அழுத்தினான் ஆதி.
யுக்தா திரும்பி ஆதியைப் பார்க்க அவன் புருவம் உயர்த்தி, ‘அங்க பாரு’ என்பது போல் சைகை செய்தான்.
யுக்தா யோசனையுடன் திரும்பிப் பார்க்க, அங்கு அதுவரை சிரித்த முகத்துடன் இருந்த ஆறு பேரின் முகத்திலும் சொல்ல முடியாத கவலை சூழ்ந்திருந்தது.
அதைப் பார்த்த யுக்தா, “ஏய்… வாட் ஹாப்பென்? ஏன் எல்லார் முகமும் இப்படி மாறிடுச்சி?” என்றவள் ஒரு கணம் பொறுத்து, “சந்தியாக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள் தன் கணீர் குரலில்.
அவளுக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்த அனைவரையும் அழுத்தமாகப் பார்த்தவள், ‘டமார்’ என்று டேபிளில் தட்டியவள், “நான் உங்ககிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன். சந்துக்கு என்ன ஆச்சு?” என்றவளின் குரலில் இப்போதே எனக்கு பதில் தெரிந்தாக வேண்டும் என்ற தோரணை இருக்க, நிலா நிமிர்ந்து யுக்தா முகத்தைப் பார்த்தாள்.
“நிச்சயத்தோட கல்யாணம் நின்னுப்போச்சு யுகி.” என்ற நிலானியின் கண்கள் கலங்கிவிட, கண்களைத் துடைத்தபடி, “இப்ப அவ நம்ம பார்த்து வளர்த்த பழைய சந்தியா இல்லடி… மூணு வருஷம் முன்ன வேலை விஷயமா ஒரு ஊருக்குப் போனா… போன இடத்தில்…” என்று ஆரம்பித்தவள், நடந்த அனைத்தையும் கொட்டி முடித்தாள்.
அனைத்தையும் கேட்ட யுக்தாவுக்கு அடுத்து என்ன செய்வதென்று ஒரு நிமிடம் புரியாமல் திரும்பி ஆதியைப் பார்த்தாள்.
அவனுக்கும் அவளது நிலை சரியாகப் புரிந்தது. சந்தியா என்றால் யுக்தாவுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று ஆதிக்குத் தெரியும். அவள் என்னதான் சந்தியாவை அதட்டி, மிரட்டினாலும் அவளுக்குச் சந்தியா மீது பாசம் அதிகம். அவளைத் தன் சொந்தத் தங்கையாக தான் யுக்தா நினைக்கிறாள். அப்படி இருக்க, இப்போதைய அவளின் நிலையை நினைத்து ஒரு அக்காவாக அவளால் எதையும் தெளிவாக யோசிக்க முடியாமல் தவிக்க, ஆதி நிலமையைச் சரியாகப் புரிந்து கொண்டான்.
“இப்ப சந்தியா என்ன முடிவில் இருக்காங்க நிலா?” என்று கேட்டான் ஆதி.
“எந்த முடிவையும் எடுக்க மாட்டேங்குறா அண்ணா… அதுதான் பிரச்சனையே! நடந்ததை மறந்துட்டேன்னு சொல்றா… அப்ப கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னா முடியாதுன்னு சொல்றா… சரி, வேற என்ன பண்ணப் போறேன்னு கேட்டால், அதுக்குச் சரியான பதில் இல்ல. இவ மேல கோச்சிட்டு அம்மாவும் அப்பாவும் இவ எப்ப ஒரு முடிவுக்கு வராளோ அப்பதான் இவ முகத்துல முழிப்போம்னு சொல்லிட்டு காசிக்குப் போய் ஒரு வருஷம் ஆகுது. ஆனா, இவ இப்பவரை எந்த முடிவும் சொல்லாம வேல வேலைனு ஓடிட்டு இருக்கா…” என்றாள் நிலானி ஆற்றாமையுடன்.
“ஆமா அண்ணா… முதல்ல எல்லாம் எப்பவும் எங்க கூட வாயடிச்சுட்டு இருக்கறவ, இப்ப எங்க நாங்க எதுவும் கேட்டுடுவமோன்னு பயந்து எங்ககிட்ட எல்லாம் பேசறதே இல்ல தெரியுமா” என்றாள் தேன்மொழி.
“அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாதான்னு நாங்க எல்லாரும் ஏங்கிட்டு இருக்கோம் ஆதி.” என்ற சூர்யாவின் குரலில் அத்தனை ஆதங்கம்.
“அந்தப் பையன்...?” என்று ஆதி இழுக்க,
“ம்ம்ம், இங்கதான் இருக்கான் ஆதி. தினமும் இவ பின்னாடி சுத்துறது தான் அவனோட வேலையே… அவனும் என்னென்னமோ பண்ணிப் பார்த்துட்டான். பட், ரிசல்ட் தான் ஜீரோவா இருக்கு. அவன்னு இல்ல, வேற யாரையாவது அவளுக்குப் பிடிச்சிருந்தா கூட எங்களுக்கு ஓகே தான். அது அவளுக்கும் தெரியும். ஆனாலும், எந்த முடிவும் சொல்லாம இப்படியே இருந்து எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டு இருக்கா… அவ மனசுல என்னதான் இருக்குன்னு யாருக்கும் புரியல” என்றான் அர்விந்த்.
அனைத்தையும் கேட்ட யுக்தா, “கடைசியா இப்ப அவ என்னதான் சொல்றா?” என்று கோபமாகக் கேட்டாள்.
“எதுவும் இல்ல யுக்தா. அதுபத்திக் கேட்டா வீட்டை விட்டுப் போயிடுவேன்னு மிரட்டுறா… சரி, அவ கண்ணு முன்னாடி இருந்தாலே போதும்னு நாங்க அதுக்கு மேல எதுவும் பேசல” என்றாள் தேவி.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த யுக்தா, ஆழ்ந்து மூச்செடுத்தபடி, “ம்ம்ம் ஓகே… அந்தப் பையன் டீடைல்ஸ் எல்லாம் எனக்கு அனுப்பி வைங்க. நான் என்ன ஏதுன்னு பாக்குறேன். அவனைப்பத்தித் தெரிஞ்ச பிறகு இவளைக் கவனிக்குறேன். அவ கொஞ்ச வருஷமா என்னைக் கான்டாக்ட் பண்ணாம இருக்கும் போதே ஏதோ தப்பாப் பட்டுச்சு. ஆனா, இவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்கும்னு நினைக்கல… கொஞ்ச நாள் நான் ஊர்ல இல்ல, அந்தக் காளானுக்கு கை, கால் முளைச்சி ஆட ஆரம்பிடுச்சா? கை, காலோட வாயையும் சேர்ந்து உடைக்குறேன்.” என்ற யுக்தா, “நீங்க கவலைப்படாதீங்க, அவ விஷயத்தை நான் பார்த்துக்கறேன். அவளைப்பத்தி எனக்கு நல்லாவே தெரியும். கண்டிப்பா இன்னேரம் சந்தியா ஏதாவது முடிவை எடுத்திருப்பா. ஆனா, ஏதோ ஒரு காரணத்துக்காக அதை உங்ககிட்டச் சொல்லாம வச்சிருக்கா… மேபீ அதைச் சொல்றதுக்கான சரியான டைமை எதிர்பார்த்துட்டு இருக்கான்னுதான் தோணுது” என்ற யுக்தா, “ஐ வில் டேக் கேர் ஆஃப் ஹர்” என்று நிலானிக்கு உறுதி அளித்தாள்.