உன் விழியில் கைதானேன் 3
விழி 3
பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் மூன்று ஜோடிகளும் அமர்ந்திருக்க, அவர்களின் குழந்தைகள் அருகில் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
“யுக்தாவைப் பார்த்த பிறகு மனசுக்கு ரொம்ப நம்பிக்கையா இருக்கு சூர்யா” என்றான் அர்விந்த்.
“ஆமாடா… எனக்கும் கூட கூடிய சீக்கிரம் சந்தியா விஷயத்தில் ஒரு நல்லது நடக்கும்னு தோணுது” என்றவன், “நீ என்ன நினைக்கிற நிலானி?” என்று கேட்டான் சூர்யா.
“ஹூம்… எனக்கு யுக்தா, சந்தியா விஷயத்துக்குள்ள வந்ததுமே இனி எல்லாம் நல்லபடியா நடக்கும்ங்கற முடிவுக்கு வந்துட்டேன். எனக்கு இப்ப எந்தக் கவலையும் இல்லை” என்றவளைத் தொடர்ந்து, “ஆமா அண்ணா… யுக்தா ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தா அதை முடிக்காமல் விடமாட்டா… அதுலயும் சந்தியா மேல அவளுக்குப் பிரியம் அதிகம். சோ கண்டிப்பா ஏதாவது செஞ்சு சந்தியாவைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சிடுவா. ஆனா…” என்று தேன்மொழி இழுக்க,
“என்னடி இழுக்குற? சொல்ல வந்ததை முழுசாச் சொல்லி முடி” என்றான் அவள் கணவன் அர்விந்த்.
“இல்ல… சந்தியா மேரேஜ் நடக்கும். ஆனா, அது தேவா கூட நடக்குமான்னு தான் டவுட்… யுக்தா அவனைப் பத்தி நான் விசாரிக்குறேன், அதுக்குப் பிறகு அடுத்தது என்னன்னு சொல்றேன்னு சொல்லியிருக்கா, மறந்துட்டீங்களா? யுக்தாக்கு தேவா ஃப்ளாஷ்பேக் தெரிஞ்ச பிறகு அவ என்ன சொல்வாள்?” என்றாள்.
அதைக் கேட்ட சூர்யா ஆழ்ந்து மூச்செடுத்தவன், “யார் தலையெழுத்தில் யார் பேர் கூட எழுதியிருக்குன்னு நம்மால சொல்ல முடியாது தேனு… இதில் நமக்கு முக்கியம் சந்தியா கல்யாணம் தான். அது ஒரு நல்ல பையனோட நடந்தா நமக்கு அதுவே போதும்… வேற யாரைப் பத்தியும் யோசிக்கும் இடத்தில் நாம இல்லை” என்றான் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு.
“நீ சொல்றதும் சரிதான் சூர்யா… அந்தப் பையன் நல்லவன் தான். ஆனாலும்…” என்று பெருமூச்சு விட்ட அரவிந்த், “எதுவும் நம்ம கையில் இல்ல. சோ ஜஸ்ட் கோ வித் தி ப்லோ” என்றான்.
அப்போது நிலாவைக் கவனித்த தேவி, “என்னடி, அண்ணா சொன்னதுக்குப் பதில் எதுவும் சொல்லாம ஏதோ யோசனையில் இருக்க…” என்க,
தேன்மொழியும், “ஆமா, நானும் வந்ததில் இருந்து பாக்குறேன். நீ ஒரு மாதிரி யோசனையிலேயே இருக்க… என்னாச்சு?” என்று கேட்டாள்.
அதைக்கேட்ட நிலா ஆழ்ந்து மூச்செடுத்தபடி, “இன்னைக்கு யுக்தா ஒரு விஷயம் சொன்னா, கவனிச்சீங்களா?” என்று கேட்டாள்.
“நீ எதைச் சொல்றேன்னு புரியல நிலா” என்றாள் தேவி.
“சந்தியா அவ வாழ்க்கையைப் பத்தி ஏற்கனவே ஒரு முடிவெடுத்து இருப்பா… அதைச் சொல்றதுக்கான சரியான டைமை எதிர்பார்த்துட்டு இருக்கான்னு சொன்னா இல்ல” என்று கேட்டாள்.
“ம்ம்ம் ஆமா, சொன்னாங்க… அதுக்கு என்ன இப்ப?” என்று கேட்டான் அரவிந்த்.
“இல்ல அர்விந்த்… எனக்கும் இந்தச் சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு… அவ ஏற்கனவே ஒரு முடிவெடுத்துட்டா… ஆனா, அதைச் சொல்ல விடாம அவளை ஏதோ தடுக்குது.” என்றவள் இமைகளை உயர்த்தி அனைவரையும் பார்க்க, அவளின் பேச்சின் அர்த்தம் உணர்ந்தவர்கள் கோரஸ்ஸாக “யூ மீன்” என்று கேட்க, நிலானி மேலும் கீழும் ஆமாம் என்று தலையை ஆட்டினாள்.
“எஸ்… எனக்கென்னவோ அப்படிதான் தோணுது. அவளுக்கு தேவாவைப் பிடிச்சிருக்கு, ஆனா, அவ தேவாவை அக்செப்ட் பண்ண அதுனால் அவளோட கொரியரை இழக்க வேண்டி வருமோ அவ யோசிக்குறான்னு எனக்கு தோணுது. அதோட நமக்கும் தேவா விஷயத்தில் இன்னும் சின்ன உறுத்தல் இருக்கத்தானே செய்யது, அது கூட ஒரு காரணமா இருக்கலாம்” என்றாள் உறுதியான குரலில்.
“அவ கொரியர் பத்திய அவ யோசிச்சால் அதுக்கு நம்ம ஒன்னும் செய்யமுடியாது. பட் நீ நம்மைப் பத்தி சொன்னதைக் அவ யோச்சிசு இருந்தா, அதை அவ நம்பகிட்டச் சொல்லலாமே நிலா… நம்ம என்ன அவ ஆசைக்குக் குறுக்கவா நிக்கப் போறோம்” என்று கேட்ட தேவியைப் பார்த்து இடவலமாகத் தலையாட்டிய சூர்யா,
“அது அவ்ளோ ஈசி இல்ல தேவி… நடந்ததைக் கொஞ்சம் யோசிச்சுப் பாரு. அது ஒண்ணும் அவ்ளோ சின்ன விஷயம் இல்ல. என்னதான் அவ எல்லாத்தையும் மறந்துட்டேன்னு சொன்னாலும் அதெல்லாம் இன்னும் அவ மனசுல உறுத்திட்டுதான் இருக்கு… எத்தனை எத்தனை ஏச்சு பேச்சு… கூட வேலை செய்றவங்க கூட இவளை நம்பளையே, தப்ப தானா பேசினாங்க. அதெல்லாம் அவ மனசுல ஒரு ஓரம் இருக்கும் தானே. இப்ப அவ தேவாவை ஏத்துக்கிட்டால்… எங்க மத்தவங்க பேசினது எல்லாம் உண்மைனு ஆகிடுமோன்னு அவ பயப்படுறா போல. ஏன் நம்ம கூட அந்தப் பையனை அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ரெடி தான், இருந்தாலும் இப்பவும் நம்மாலும் கூட இன்னும் நடந்த எதையும் மறக்க முடியல தானே? அப்ப சந்தியாவுக்கு எப்படி இருக்கும்… அந்த உறுத்தல் தான் அவளை அவ முடிவைச் சொல்ல விடாமல் தடுக்குது” என்று பிரச்சனையின் ஆணிவேரைச் சரியாகக் கணித்தான் சூர்யா.
“யூ ஆர் ரைட் சூர்யா… அதுதான் அவளை அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க விடாமல் தடுக்குது. அதோடு அவளுக்கு சொசைட்டியை நினைச்சும் பயம் இருக்க வாய்ப்பிருக்கு” என்றான் அர்விந்த்.
“இருக்கலாம் அர்விந்த்… அவ சொசைட்டிக்கு எல்லாம் பயப்படும் ஆள் இல்லதான். ஆனா, இப்ப அவ மனசு எல்லாத்தையும் பத்தி யோசிக்கும் கட்டத்தில் இருக்கு. இப்ப பிரச்சனை இந்த சொசைட்டி மட்டும் இல்ல… அவளோட மனசும் தான். இது அவளுக்கு அவ மனசுக்கும் நடுவுல நடக்கும் பிரச்சனை. இதை அவதான் ஓவர் கம் பண்ணி வெளிய வரணும்.” என்ற நிலா ஆழ்ந்து மூச்செடுத்து, “லெட்ஸ் வெயிட் ஃபார் சம்டைம்… ஏதாவது ஒரு பக்கம் அவ மனசு நிக்கும். அப்ப அவ மனசு அவளுக்கே தெளிவாப் புரியும். எது வேணும், வேணாம்னு ஒரு தீர்மானத்துக்கு வருவா…” என்றவள்,
“நம்ம நினைக்குறது சரின்னா… கண்டிப்பா இன்னும் கொஞ்ச நாள்ல அவ முடிவை அவ சொல்லுவா…” என்று நிலானி அடித்துச் சொல்ல, அவள் சொல்வது போல் நடக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன் அனைவரும் உறங்கச் சென்றனர்.
மறுநாள் காலை உணவு மேடையில் அனைவரும் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டு இருக்க, சந்தியா வேலைக்குத் தயாராகி கீழே வந்தாள்.
அவள் வருவதைப் பார்த்ததும் அனைவரும் பேச்சை நிறுத்திவிட, சந்தியா புருவம் இடுக்கி அனைவரையும் பார்த்தபடியே வந்து அமர்ந்தவள், உணவை எடுத்துத் தட்டில் வைத்துக் கொண்டாள்.
“என்ன? இவ்ளோ நேரம் ஏதோ சீரியஸா பேசிட்டு இருந்தீங்க? நான் வந்ததைப் பார்த்ததும் கப்புன்னு எல்லாரும் சைலன்ட் மோடுக்குப் போயிட்டிங்க? என்னைப் பத்தி எதுவும் பேசிட்டு இருந்தீங்களா?” என்று கேட்டாள் புருவம் உயர்த்தி.
“உன்னைப்பத்திப் பேச எங்களுக்கு என்ன இருக்கு… நீதான் உன் வாழ்க்கையை நீயே தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்துட்டியே… யார் பேச்சையும் கேக்கக் கூடாதுன்னு முடிவும் பண்ணிட்ட… அப்புறம் நாங்க உன்னைப்பத்திப் பேசி இப்ப என்னாகப் போகுது” என்ற நிலானி, சூர்யாவின் அதட்டலில் வாயை மூடிக் கொண்டாள்.
“விடுங்க மாம்ஸ்… எனக்கு இதெல்லாம் பழகிப் போச்சு… அவ ஒண்ணும் என்மேல இருக்க கோவத்தில் இப்படிப் பேசலியே… என்மேல இருக்க அக்கறைத்தான் அவளை இந்த மாதிரிப் பேச வைக்குது… பேசுற இடத்தில் இப்ப அவ இருக்கா. கேக்கும் இடத்தில் நான் இருக்கேன். கேட்டுதானே ஆகணும்.” என்ற சந்தியாவின் குரலில் அவளது மனவலி தெளிவாகத் தெரிந்தது.
சட்டெனத் தங்கை அருகில் சென்ற நிலா, அவள் தலையை இழுத்துத் தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டவள், “சாரிடி… ரொம்ப சாரி… காலங்காத்தால உன்னை அழவச்சிட்டேன் சாரி” என்று அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்தவள், “நீ இப்படி இருக்குறதைப் பார்த்து தாங்க முடியாமல் தான் அப்படிப் பேசிட்டேன்.” என்றவள் கண்களும் கலங்கி விட்டது.
“ஏய் பிசாசு… இப்ப எதுக்கு கண்ணுல டாம் கட்ற… நான் ஒண்ணும் பீல் எல்லாம் பண்ணல… நீ சும்மா சீன் கிரியேட் பண்ணாத…” என்றவள் திரும்பி சூர்யாவைப் பார்த்து, “நாங்க அக்கா, தங்கச்சி ஏதோ பேசிட்டுப் போறோம். நீங்க எதுக்கு இப்ப அவளை அதட்டுனீங்க… பாருங்க நிலா எவ்ளோ பீல் பண்றா” என்று சொல்ல சூர்யாவோ, “அடி கழுத... உனக்கு சப்போர்ட் பண்ணதுக்கு எனக்கு இதுவும் வேணும், இதுக்கு மேலயும் வேணும்” என்று தலையில் அடித்துக் கொள்ள, கணவனைப் பார்த்து நிலானி சட்டெனச் சிரித்து விட்டாள்.
“அம்மா தாயே... உங்கொக்கா சிரிச்சிட்டா, போதுமா?” என்று கேட்க, “ம்ம்ம், இனிமே அவளைக் கண் கலங்காமப் பார்த்துக்கணும். இதேமாதிரி அவ எப்பவும் சிரிச்சிட்டு இருக்கனும். இல்ல…” என்று செல்லமாக மிரட்ட, “சரிங்க மேடம். இனிமே கிச்சு கிச்சு மூட்டியாவது உங்கக்காவைச் சிரிக்க வைக்கிறேன். போதுமா?” என்றான் கையெடுத்துக் கும்பிட்டபடி.
“ம்ம்ம் அதுசரி... மச்சினி மேல அவ்ளோ பயமா அண்ணா?” என்று தேனு கேட்க, “ம்ம்ம் பின்ன… இந்த மரவேதாளம் கிட்ட எல்லாம் வாயைக் கொடுத்து மீள முடியாதே தேனு.” என்றவனை அரவிந்த் முறைக்க, “வந்துட்டான், பாசமலர் சிவாஜி… இந்தச் சாவித்திரிக்கு முட்டுக் கொடுக்க” என்க, அங்கு சிரிப்பலை பரவியது.
“அப்படிச் சொல்லாதீங்க சூர்யா, இந்த மரவேதாளத்தை அசால்ட்டா தூக்கித் தோள்ல போட்டுப் போற ஆளும் நம்ம கைவசம் இருக்கு” என்று நிலா கண்ணடிக்க சந்தியா அவளைத் திமிராகப் பார்த்தவள், “அது யார்றாது? என்னையே தூக்கும் ஆளு… நாங்க எல்லாம் அப்பவே அப்டி… இப்ப சொல்லவா வேணும்” என்று சூரி வசனத்தை திமிராகச் சொன்னவள், “நான் யார்னு தெரியுமில்ல” என்று கெத்தாகச் சொல்லிவிட்டு இட்லியை எடுத்து வாயில் போடப் போனவளின் கை அந்தரத்தில் நின்றது, நிலானி சொன்ன பேரைக் கேட்டதும்.
“என்.. என்ன சொன்ன இப்ப?” என்ற சந்தியாவின் குரல் அவளுக்கே கேட்டதா என்று தெரியவில்லை.
“யுக்தா… சம்யுக்தான்னு சொன்னேன்டி” என்றாள் நிலானி நக்கலாக.
தன் காதில் கேட்ட பேரில் ஒரு கணம் நிலை தடுமாறிய சந்தியா, எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி, “இப்ப அவங்க பேரை ஏன் எடுக்குற நீ?” என்றாள் பதட்டமாக.
அவளுக்கு யுக்தா சென்னையில் பணியில் சேர்ந்த விவரம் ஏற்கனவே தெரியும் என்பதால், நிலானி திடீரென யுக்தாவின் பேரைச் சொன்னதும் தடுமாறிப் போனாள்.
“ஏன் அவ பேரை எடுத்தா என்ன?” என்றவள், “ஏன் பயமா இருக்கா?” என்று கேட்டாள் ஒற்றைப் புருவம் உயர்த்தியபடி.
“எ… எனக்கென்ன பயம்? நான் என்ன தப்பு பண்ணேன், பயப்பட… நானெல்லாம் யாருக்கும் பாய்ந்ததா சரித்திரமே இல்ல” என்று தன் உதறலை மறைத்துக்கொண்டு எழுந்தவள், “எனக்கு டைம் ஆச்சு, நான் கிளம்புறேன்” என்று கையைக் கழுவிவிட்டு நடந்தவள்,இரண்டடி சென்றவள், நிலானியிடம், “யுக்தா அக்கா இப்பச் சென்னையில் தான் இருக்காங்க… உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள் எச்சில் விழுங்கியபடியே.
“ம்ம்ம் தெரியும்” என்று நிலா சொல்ல, சட்டென்று திரும்பி நிலாவைப் பார்த்தவள், “நீ… நீ அவங்களைப் பார்த்தியா?” என்றவளுக்கு வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
“ம்ம்ம் பார்த்தோம்! பேசினோம்!” என்றாள்.
“அக்… அக்கா என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள் கண்கள் விரிய.
“எதுவும் சொல்லல… உன்னைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிடுச்சு. டைம் வரும்போது பார்க்குறேன்னு சொன்னா” என்று சொல்ல, சந்தியாவுக்கும் புரிந்து விட்டது தமக்கை தனக்காகப் பெரிய ஆப்பைத்தான் சீவி வைத்திருக்கிறாள் என்று. அக்காவை மனதில் அர்ச்சித்துக் கொண்டே சந்தியா கிளம்பிய அடுத்த கணம் சூர்யாவின் ஃபோன் அலறியது.
அனைவரும் ஒரே குரலில் “தேவா” என்று சொல்ல, “ம்ம்ம் அவனேதான். அவ கிளம்ப இன்னைக்கு அஞ்சு நிமிஷம் லேட் ஆகிடுச்சு இல்ல, அதான் ஃபோன் அடிச்சிட்டான்” என்ற சூர்யா அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவன், “சந்தியா இப்ப தான்டா கிளம்பினா” என்றான் அவன் கேட்பதற்கு முன்பே.
“என்ன? இப்பதான் கிளம்பினாளா?” என்றவன், “ஏன் இன்னைக்கு லேட்? வீட்ல எதுவும் பிரச்சனையா? அவளை எதுவும் சொன்னீங்களா? உங்க பொண்டாட்டி வழக்கம்போல எப்பக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு அவளை டார்ச்சர் பண்ணாங்களா?” என்று அடிக்குரலில் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, சூர்யா அவன் போட்ட சத்தத்தில் விரல் வைத்து காதைக் குடைந்தவன்,
“டேய்! டேய்! ஓவரா அலட்டாதடா… அவ உன்னையப் பைசாக்கு மதிக்காத அப்பவே நீ இவ்ளோ பேசுறியே… அவ மட்டும் முகம் கொடுத்து ரெண்டு வார்த்தை பேசிட்டா அவ்ளோதான் போலயே…” என்றவன், “முதல்ல அவ எங்க வீட்டுப் பொண்ணு, அவளைப்பத்தி எங்களை விட யாருக்குடா அக்கறை இருந்திடப் போகுது…” என்று கடுப்பாகச் சொன்னான்.
“சாரி! சாரி சூர்யா. எப்பவும் கரெக்ட் டைம்க்கு வர்றவ… இன்னைக்கு இன்னும் காணும்னு கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். எனக்குத் தெரியும் அவமேல நீங்க எல்லாரும் எந்தளவுக்குப் பாசம் வச்சிருக்கீங்கன்னு. ஐ ஆம் சாரி, ரியலி வெரி சாரி” என்றான் தேவா.
“இட்ஸ் ஓகே தேவா… நாங்க ஒண்ணும் அவளை எதுவும் சொல்லல…” என்றவன் நிறுத்தி, நேற்று யுக்தாவைப் பார்த்தது முதல் காலையில் நடந்தது வரை அனைத்தையும் சொல்லி முடித்தான்.
அனைத்தையும் கேட்ட தேவா, ”உங்களை மாதிரி தான் நானும். எனக்கும் அவ சந்தோஷமா இருந்தா மட்டும் போதும் சூர்யா… அதைத் தூரமா இருந்து பாத்துட்டு இருக்கற நிம்மதியே எனக்குப் போதும்” என்றவனின் குரல் கரகரக்க, சூர்யாவுக்கு அவனது மன உணர்வுகள் தெளிவாகப் புரிந்தது.
“தேவா!” என்று இவன் இழுக்க, “இட்ஸ் ஓகே சூர்யா… எந்த முடிவா இருந்தாலும் எனக்குச் சம்மதம் தான். ஆனா, அந்த முடிவு என் சந்தியாவுக்குச் சந்தோஷத்தையும், நிம்மதியையும் கொடுக்குறதா இருக்கணும்” என்றவன் சற்றுப் பொறுத்து, “இல்லாட்டி இந்த தேவாவோட வேற முகத்தை எல்லாரும் பார்க்க வேண்டி வரும். அது யுக்தாவா இருந்தாலும் சரி… அவங்க புருஷன் ஆதித்தனா இருந்தாலும் சரி” என்றவன் அழைப்பைத் துண்டிக்க, அவன் பேசியதைக் கேட்ட அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் கலக்கத்தோடு பார்த்துக் கொண்டனர்.
ஆட்கள் அதிகம் இல்லாத அந்தப் பேருந்து நிலையத்தில் தன் கம்பெனி வண்டிக்காகக் காத்திருந்த சந்தியாவின் நினைவு முழுமையும் இன்று காலையில் வீட்டில் நடந்ததே ஓடிக் கொண்டு இருந்தது.
’இதெல்லாம் இந்தப் பிசாசு நிலாவோட வேலைதான். நான் யாருக்கு பயப்படுவேன்னு தெரிஞ்சு யுக்தா அக்காவைப் பார்த்துப் பேசி, என்னைக் கோர்த்து விட்டிருக்கா… நம்ம கெட்ட நேரம் யுக்தா அக்கா இப்பன்னு பார்த்துச் சென்னையில் இருக்காங்க.’ என்று புலம்பியவள், ‘நமக்கு அதிகம் டைம் இல்ல… இந்நேரம் அவங்க எல்லாத்தையும் விசாரிக்க ஆரம்பிச்சு இருப்பாங்க… சீக்கிரம் ஏதாவது செய்யணும்.’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு இருந்தவள், அப்போது தான் தன்னை யாரோ நெடுநேரமாகப் பார்ப்பது போல் உள்ளுணர்வு தோன்ற, இழுத்துப் பெருமூச்சு விட்டாள். “நாட் அகைன்” என்று எரிச்சலாகச் சொன்னபடி நிமிர்ந்து பார்க்க, அவளின் எரிச்சலுக்குக் காரணமானவன், கோல்கேட் விளம்பர மாடல் போல் தன் முத்துப்பற்கள் தெரிய அவளைப் பார்த்துச் சிரித்தபடி நின்றான்.
’ம்ம்ம் இன்னைக்கும் வந்துட்டான். தினமும் இவனுக்கு இதே வேலையாப் போச்சு… ரெண்டு வருஷமா விடாம என் பின்னாலயே சுத்திட்டு இருக்கான். இவனுக்கு எல்லாம் வேற வேலையே இல்ல போல… அறிவு கெட்ட முண்டம்’ என்று தலையில் அடித்துக் கொண்டவள், அந்த நேரம் அங்கு வந்த தன் கம்பெனி காரில் ஏறிக் கொண்டாள்.
தேவாவும் உடனே தன் காரில் ஏறியமர்ந்தவன் அதனை உயிர்ப்பிக்க, தேவாவையே ஒரு சலிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் அவன் பி.ஏ பிரபு.