இறுதி அத்தியாயம்
இறுதி அத்தியாயம்
மாலைப்பொழுது வீடு திரும்பிய சந்தியாவுக்கு வீட்டுக்குள் யுக்தாவின் குரல் கேட்க, ‘அய்யோ கடவுளே! யுக்தா அக்கா குரல் கேக்குது… இந்நேரம் அவங்க மேட்டரைப் போட்டு உடைச்சிருப்பாங்க… எல்லாப் பிசாசும் சேர்ந்து என்னை ஓட்டு ஓட்டுன்னு ஓட்டப்போகுது. நீதான் காப்பாத்தனும்’ என்று வேண்டிய படியே உள்ளே சென்றாள்.
அமைதியாக நல்லபிள்ளை போல் முகத்தை வைத்துக்கொண்டு இருந்த சந்தியாவையே கூர்ந்து பார்த்த யுக்தா, “சோ… மேடம் வேலையை ரிசைன் பண்ணிட்டீங்க, ம்ம்ம்… அடுத்து என்ன செய்யப்போறதா உத்தேசம்?” என்று கேட்க, சந்தியா திருதிருவென விழித்தபடி இருந்தாள்.
அவள் அருகில் வந்த தேவி, “வேற என்ன? சீக்கிரம் தேவாவைக் கல்யாணம் பண்ணிட்டு புள்ளை குட்டின்னு செட்டில் ஆகிடுவா…” என்று சொல்ல, சந்தியாவின் கன்னங்கள் சிவந்த விட்டது.
“அக்கா ப்ளீஸ், சும்மா இருங்க…” என்றவளின் கன்னத்தைக் கிள்ளிய தேனு, “ஏய்… ஏய் இங்கப் பாருங்கடி, நம்ம பிடாரிக்குக் கூட வெக்கம் எல்லாம் வருது.” என்றுச் சொல்ல, “அக்கா…” என்று சிணுங்கிய சந்தியா, “மாமா, பாருங்க உங்க பொண்டாட்டிய?” என்று அர்விந்தைத் துணைக்கு அழைத்தாள்.
அவனோ, “சாரிடா… இது உங்க அக்காஸ் மூணு பேரோட பல வருஷப் பகை. அவங்க மூணு பேர் கல்யாணத்தில் நீ அவங்களுக்குப் பண்ணதைத் திருப்பிக் கொடுக்க அவ்ளோ ஆசையா எதிர்பார்த்திருந்த நேரம் இது… சோ இதுல எங்களால ஒன்னும் பண்ண முடியாது. வீ ஆர் கார்னர்டு” என்று கைவிரிக்க., “அது…” என்று hi-fi அடித்துக் கொண்டனர் மூவரும்.
“அத்தை நீங்களாவது இவங்களை என்னன்னு கேளுங்க.” என்று தனலட்சுமியிடம் செல்ல, “ஏய், எல்லாரும் சும்மா இருங்க… சும்மா புள்ளையைக் கிண்டல் பண்ணிட்டு…” என்று அனைவரையும் அதட்ட, சந்தியா நாக்கைத் துருத்தி ஒழுங்கு காட்டியவள், “இப்ப என்ன செய்வீங்க…” என்றாள் திமிராக.
“ஹலோ மேடம்… அத்தை சொல்லிட்டா விட்ருவோமா… உங்க கழுத்துல தாலியேறி இந்த வீட்ல இருந்து உன்னைத் துரத்தும் வரை எங்களை யாராலும் தடுக்க முடியாதுடி.” என்று தேவி சொல்ல,
“அப்ப இப்பவே இவளை வீட்டை விட்டுத் துரத்த வேண்டியது தான்.” என்ற யுக்தா, குறும்பாகப் புருவம் உயர்த்திச் சந்தியாவைக் பார்க்க அவளோ உள்ளுக்குள் அதிர்ந்தவள், ‘அச்சோ அக்கா, ப்ளீஸ் சொல்லாதீங்க.’ என்று கண்களால் கெஞ்சினாள்.
அதைக் கவனித்த நிலா, “ஏய் யுக்தா… என்ன ரெண்டு பேரும் கண்ணால பேசிக்குறீங்க… எங்களுக்குத் தெரியாம என்ன சீக்ரெட் ஓடுது?” என்று கேட்டாள் ஆர்வமாக.
மெதுவாகச் சந்தியாவின் அருகில் வந்து யுக்தா, “அது ஒன்னும் இல்ல நிலா… தேவி சொன்ன மாதிரி இவளைத் தேவா வீட்டுக்கு விரட்டி விட, புதுசா எதுக்குத் தாலி எல்லாம் கட்டனும். அதான் நம்ம மேடம் கழுத்துல ஆல்ரெடி நம்ம ஹீரோ கட்டுன தாலி இருக்கேன்ற சீக்ரெட்டைச் சொல்ல வந்தேன்.” என்றவள் சட்டெனச் சந்தியாவின் கழுத்தில் கை வைத்தவள், அவள் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து வெளியே போட, அனைவரும் அதிர்ச்சியில், “அடிப்பாவி…” என்றபடி வாயில் கை வைத்துக் கொண்டனர்.
யுக்தா தன் வேலை முடிந்தது என்று சாவகாசமாக அமர்ந்துவிட, அனைவரும் சந்தியாவை ரவுண்ட் கட்டியிருந்தனர்.
“இந்தப் பூனையும் பால் குடிக்குமான்ற மாதிரி முகத்தை வச்சிட்டு இத்தனை நாள் நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டு இருந்திருக்கா பாருங்க அண்ணி?” என்று கலைவாணி தொடங்க,
“ஆமா அண்ணி… நான் கூட உண்மையில் இவளுக்கு அந்தத் தேவா தம்பியைப் புடிக்கலயோ, நம்ம தான் ஃபோர்ஸ் பண்றமோன்னு கூட நினைச்சிருக்கேன். இப்ப தான் தெரியுது இவ வண்டவாளம் எல்லாம்.” என்றார் தனலட்சுமி.
“ப்ராடு ப்ராடு, சரியான ப்ராடு… இத்தனை நாளா எங்க எல்லார் காதுலயும் பூ சுத்திட்டு இருந்த இல்ல நீ?” என்று நிலா அவள் காதைப்பிடித்துத் திருக, “ஸ்ஸ்ஸ் அக்கா, வலிக்கிது வலிக்குது… விடுக்கா…” என்று துள்ள, “வலிக்கட்டும்டி… நல்லா வலிக்கட்டும்.” என்ற தேவி அவள் இன்னொரு காதையும் திருக, “மாமா, ப்ளீஸ் ஹெல்ப்” என்று கத்த அவளைக் காக்க ஓடி வந்துவிட்டனர் சூர்யாவும் அரவிந்தும்.
“பாவம் அவ, போதும் விடுங்க” என்று அவளைத் தங்கள் புறம் இழுத்துக் கொள்ள, “ஏன்டி இவ்ளோ நாளா இதை மறச்சு வச்ச… முன்னையே சொல்லி இருக்கலாம் இல்ல?” என்று அவள் தலையில் நங்கென்று கொட்டினார் கலைவாணி.
“ஆஆஆ…” என்று தலையைத் தடவிக் கொண்டவள், “நான் என்ன பண்றது? அந்த நேரத்துல நான் எப்படி ஃபீல் பண்ணேன்னு எனக்கே புரியல… ரெண்டு மாம்ஸ்க்கும் வேற அப்ப தேவாவைப் புடிக்கல… நான் வேற என்ன பண்றது? அவன் மேல எனக்கு லவ் இருக்கா? இல்லையான்னு எனக்கே புரியாம இருந்தேன். ஆனா, ஏனோ இந்தத் தாலியை மட்டும் கழற்ற என்னால முடியல. என்னமோ எனக்கு அப்படி ஒரு எண்ணமே வரல. அது ஏன் எதுக்குன்னு எல்லாம் எனக்குத் தெரியல. ஒருவேளை, அவனுக்கு நான் செஞ்சதை நினைச்சுக் குற்றவுணர்ச்சியில் கூட எனக்கு அப்படித் தோணி இருக்குமோ என்னமோ? ஆனா, ஏனோ அவன் கட்டுன தாலியைக் கழற்றக் கூடாதுன்னு மட்டும் மனசு சொல்லுச்சு. நீங்க யாரும் என் கழுத்துல இந்தத் தாலியைப் பார்த்தால் கழற்றச் சொல்லுவீங்களோன்னு பயந்துதான் மறச்சு வச்சேன்.” என்றாள் தலையைக் குனிந்தபடியே.
“எங்களுக்கு தேவாவைப் புடிக்காட்டி என்ன? உனக்கு அவனைப் புடிச்சிருந்தால் எங்ககிட்டச் சொல்லி இருக்கலாம் இல்ல.” என்ற சூர்யாவை நிமிர்ந்து பார்த்தவள், “எனக்கு என்னோட ரெண்டு மாமாவோட வார்த்தைதான் முக்கியம். உங்களுக்குத் தேவாவைப் பிடிக்காத பட்சத்தில், என்னைக்கும் அவனை நான் ஏத்துக்க மாட்டேன். என் காதல் ஒண்ணும் என் குடும்பத்தைவிட எனக்குப் பெருசு இல்ல” என்றவளை இருபுறமும் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டது அவள் குடும்பம்.
தேவா முழுதாகக் குணமாக இருக்க, சந்தியா தேவாவின் கல்யாணத்திற்கு நாள் குறித்தனர் பெரியவர்கள்.
தங்கள் வீட்டு இளவரசியின் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்த வேண்டும் என்று சூர்யாவும் அரவிந்தும் பலபல திட்டம் போட்டு வைத்திருக்க சந்தியாவோ, “எந்த ஆடம்பரமும் இல்லாமல் வெகு எளிமையாகத் தங்கள் திருமணம் நடக்கவேண்டும் என்று முடிவாகச் சொல்லி விட்டாள்.
அவள் ஆசைக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்யாணத்தை எளிமையாக அதே சமயம் நிறைவாக ஏற்பாடு செய்தனர் இரு மாமன்களும். அரவிந்த், சந்தியாவுக்காக வேண்டிக் கொண்டபடியே, இருபத்தைந்து ஏழைப் பொண்ணுகளுக்குத் தன் சொந்தச் செலவில் திருமணம் செய்து வைத்தவன், தாலியைச் சந்தியா, தேவாவின் கையாலேயே கொடுக்க வைத்தான்.
ஒரு பக்கம் கல்யாண வேலைகள் வேகமாக நடக்க சந்தியாவுக்கு மட்டும் மனதில் ஒரு சிறு வலி இருந்து கொண்டே இருந்தது. அது யார் கண்ணில் பட்டதோ இல்லயோ, தேவாவின் கண்ணில் பட்டுவிட்டது. அவள் சொல்லாமலே அவள் கவலைக்கான காரணத்தை அறிந்திருந்தான் அவளவன்.
அரக்கு வண்ணக் கூரைப்பட்டில் தன்னருகில் இருந்தவளைவிட்டு இம்மியளவும் கண்களை நகர்த்த முடியவில்லை தேவாவால். அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்த சந்தியாவின் கன்னங்கள் குறுகுறுக்க… “டேய்… எல்லாரும் பார்க்குறாங்க. என்னை சைட் அடிச்சதுபோதும். கொஞ்சம் அந்தப்பக்கம் பாருடா…” என்று சந்தியா ஹஸ்கி வாய்ஸில் சொல்ல, தேவா காதில் அது விழுந்தால் தானே…
“ஹலோ கோ-பிரதர், அவ எங்கேயும் ஓடிடமாட்டா… இனிமே உங்கக் குடுமி அவ கையில தான். முழுவாழ்க்கை இருக்கு, உங்க பொண்ட்டிய சைட் அடிக்க. இப்ப ப்ளீஸ் கொஞ்சம் திரும்பி உங்க கல்யாணத்துக்கு வந்த கெஸ்ட்டுகளையும் கொஞ்சம் பாருங்க.” என்று அரவிந்த் சொல்ல சந்தியா, “அய்யோ மானம் போகுதே…” என்றவள் அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளி விட்டாள்.
“ஸ்ஸ்ஸ்…” என்று நிதானத்துக்கு வந்த தேவா அப்போது தான் அனைவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவன், அசடு வழிய அவன் தோளில் தட்டிய சூர்யா, “விடு சகல. இதுக்கெல்லாம் வெக்கப்படாத… இங்க இருக்க நாங்க எல்லாரும் இதே மாதிரி பொண்டாட்டியை மணமேடையில் சைட் அடிச்சு பல்பு வாங்கினவங்க தான். சோ வீ ஆல் ஃப்ரம் சேம் குட்டை, சேம் மட்டை.” என்று சொல்ல அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.
அந்தச் சிரிப்பு சத்தத்தோடு கெட்டி மேளச் சத்தமும் கேட்க, சந்தியாவின் கழுத்தில் மங்களநாணை மறுபடி பூட்டி, அவளைத் தன் உயிரோடு இணைத்துக் கொண்டான் தேவா.
பலநாள்கள் தங்கள் காதல் நிறைவேறுமா என்று நினைத்து மனதில் மறுகிய இருவரின் காதல், இன்று அவர்கள் நேசிக்கும் சொந்தங்களுக்கு முன் திருமணத்தில் முடிந்ததை நினைத்து இருவருக்குமே கண்கள் நனைந்து விட்டது.
ரகு உட்பட தேவாவின் நண்பர்கள் அனைவரும் அவனையும் அவளையும் மனதார வாழ்த்திவிட்டுச் செல்ல, யுக்தாவும் ஆதியும் வந்து மணமக்களை வாழ்த்தி விட்டு நகர, அவர்கள் பின்னால் வந்த பரதன் மட்டும் சந்தியாவை முறைத்தபடியே, பரிசைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
“ஏன்டி கமிஷனர் சார், உன்னை அந்த முறை முறைச்சிட்டுப் போறாரு?” என்று கேட்ட தேவாவைத் திரும்பிப் பார்த்தவள், “அவருக்கு நான் வேலையை ரிசைன் பண்ணிட்டேன்னு கோவம் போல. அதான் இப்படிப் பார்த்துட்டுப் போறாரு. அவருக்கு எந்தளவு யுக்தா அக்கா மேல நம்பிக்கை இருக்கோ, அதே அளவுக்கு என் மேலயும் நம்பிக்கை இருந்துச்சு. பட்…” என்று தலையை உலுக்கியவள், “விடு… இனி அதைப்பத்திப் பேசி ஒன்னும் ஆகப்போறது இல்ல. ஆனா என்ன, நான் வேலை ரிசைன் பண்ணதுல கலைக்கு செம்ம ஹாப்பி… அவங்களுக்கு நான் இந்த வேலையில் சேர்ந்ததுல கொஞ்சம் கூட விருப்பம் இல்ல… வேலையை விட்ரு விட்ருன்னு சொல்லிட்டே இருந்தாங்க. அவங்க மட்டும் இல்ல, மாமாங்க, அக்காஸ்னு யாருக்கும் இதுல இஷ்டம் இல்ல. எனக்காக தான் நான் ஐ.பி.எஸ் படிக்க ஒத்துக்கிட்டாங்க. என்ன ஆசைக்கு கொஞ்ச வருஷம் நேர்மையான முறையில் என் கடமையை நிறைவேற்றிட்டேன். இப்ப என்னோட குடும்பத்தோட ஆசைக்காகக் கல்யாணம் பண்ணிட்டு நல்ல குடும்ப இஸ்திரியா ஆகிட்டேன்.” என்றாள் புன்னகையுடன்.
“உனக்குக் கஷ்டமா இல்லயா?” என்ற கணவனைப் பார்த்தவள், “இல்லன்னு சொல்ல மாட்டேன். அப்படிச் சொன்னா அது பொய். ஒரு வருத்தம் மனசுல இருந்துட்டுதான் இருக்கு.”
“என்னால தான் நீ வேலையை விட்ட இல்ல?” என்ற தேவாவின் குரலில் வருத்தமிருக்க அவன் கையைப் பிடித்து அழுத்தியவள், “உன்னால இல்ல… வேணும்னா உனக்காகன்னு வச்சிக்கலாம். அதுகூட பாதிதான் உண்மை. என்னோட இந்த முடிவில் என் பேமிலியோட சந்தோஷமும் இருக்கு. சோ, இதுக்கு நீ காரணம் இல்ல.” என்றாள் அவனைப் பார்த்து அழகாகச் சிரித்தபடி.
திருமணத்திற்கு வந்தவர்கள் விருந்து முடிந்து சென்றிருக்க, நெருங்கிய சொந்தங்கள் மட்டும் அந்த மண்டபத்தில் பேசிக்கொண்டு இருந்தனர்.
சந்தியா அருகில் வந்த பரதன், “கல்யாணம் ஆகிடுச்சின்னு ஜாலியா வீட்ல ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைக்காத… உனக்கு ஒருவாரம் தான் டைம், ஒழுங்கா கமிஷனர் ஆபீஸ்க்கு வந்து சேரு.” என்று கண்டிப்புக் குரலில் சொன்னவர் அவள் கையில் ஒரு வெள்ளைக்கவரைத் திணித்து விட்டுச் செல்ல, சந்தியா என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்துக் கொண்டு நின்றாள்.
அவள் அருகில் வந்த யுக்தா, “என்ன மேடம், ஒன்னும் புரியல இல்ல? அந்தக் கவரைப் புரிச்சுப்பாரு, புரியும்.” என்று குறும்பாகக் கண்ணடித்தாள்.
கவரைப் பிரித்துப் பார்த்த சந்தியாவின் கண்களில் அத்தனை மகிழ்ச்சி. “அக்…அக்கா இது… இது?” என்றவளுக்குச் சந்தோஷத்தில் வார்த்தைகள் வராமல் போனது.
“ஆமாடி… நீ வேலையை வேணாம்னு ரிசைன் பண்ணிட்ட. பட் அதுக்காக உன்னோட டேலண்ட் வேஸ்ட்டா போகக் கூடாதுன்னு உன் புருஷன் ரொம்ப வருத்தப்பட்டாரு. அதைப்பத்தி என்கிட்டப் பேசினாரு. என்ன செய்யலாம்னு யோசிக்கும்போது தான் ஆதி இந்த ஐடியா சொன்னாரு. சில நேரம் சில கேஸ்ல நம்ம அன்னபிஷியலா எக்ஸ்பர்ட்ஸ் ஹெல்ப் கேக்குறது வழக்கம் தானே. நீதான் சைபர் கிரைம் அன்ட் பாரன்சிக்ல கில்லாடி ஆச்சே. அந்த பேசிஸ்ல எங்க இன்வெஸ்டிகேசன் டீம்ல அன்னபிஷியலா உன்னை வச்சிக்க பரதன் அங்கிள் ஒத்துக்கிட்டாரு. சோ இனிமே நாங்க டீல் பண்ற கேஸ்ல எல்லாம் நீங்க எங்களுக்கு இன்வெஸ்டிகேசன் அண்ட் டெக்னிக்கல் சப்போர்ட்டா இருக்கப் போறிங்க.” என்றவள், “இதுக்காக நீ தேங்க்ஸ் சொல்லணும்னா உன் புருஷனுக்குச் சொல்லு. அவர்தான் இதுக்கெல்லாம் காரணம்.” என்றாள் தேவாவை மரியாதையாகப் பார்த்தபடி.
சந்தியா மெதுவாகத் திரும்பி தேவாவைக் கண்ணீரோடு பார்த்தவள், அனைவரும் பார்க்கின்றார்கள் என்ற எண்ணம் சிறிதும் இன்றி அவனைக் கன்னத்தில் முத்தமிட்டவள், அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அதைப்பார்த்து அனைவரும், “ஓஓஓ…” என்று கத்திக் கைதட்டிச் சிரிக்க கலைவாணி தலையில், “அய்யோ அய்யோ” என்று அடித்துக் கொண்டவர்,
“அடியே… என்னடி இது... கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம…” என்று அதட்ட, அவரைச் செல்லமாக முறைத்தவள், “என் புருஷன், நான் கட்டிப்புடிச்சு முத்தம் குடுத்தா உனக்கென்ன? உனக்கு வேணும்னா உன் புருஷன் பக்கத்துல தானா இருக்காரு… முத்தம் கொடுத்துக்கோயேன். யாரு வேணாம்னு சொன்னா?” என்றவளை, “அடிங்கு வாயாடி… என்ன பேச்சுப் பேசுறா?” என்றபடி கலைவாணி அடிக்கத் துரத்த, அவளும் வழக்கம் போல் தன் மாமன்களிடம் சென்று அவர்கள் பின்னால் மறைந்து கொள்ள, இவர்கள் சண்டையில் அந்த இடமே சிரிப்பலையில் மிதந்தது.
அதற்குப்பின் யுக்தா எடுக்கும் வழக்குகளில் அவளுக்குத் துணையாக இருந்தாள் சந்தியா. மீண்டும் அவளைப் பணியில் சேரச்சொல்லி யுக்தா பலமுறை கேட்டும். வேண்டாம் என்று மறுத்து விட்டாள் சந்தியா.
ஆர்த்திக்குப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறக்க அவளின் ஆசைப்படி, சந்தியாவும் தேவாவும் சேர்ந்து குழந்தைக்கு “அர்ஜுன்” என்று பெயர் வைத்தனர்.
சந்தியாவின் திருமணம் முடிந்த பிறகு கலைவாணி, ராம்குமாரை அவர்கள் தனியாக இருக்க வேண்டாம் என்று தங்களோடு அழைத்து வந்துவிட்டார் தனலட்சுமி.
சந்தியாவுக்கு அவள் குடும்பத்தின் மீதுள்ள பாசத்தை நன்கு உணர்ந்த தேவா, சூர்யாவின் வீட்டுக்கு அருகிலேயே, ஒரு வீட்டை வாங்கி அங்கேயே தன் குடும்பத்துடன் குடிபெயர்ந்து விட்டான். ஆர்த்திக்கும் இதில் பரம சந்தோஷம்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு,
அன்றுக் குலதெய்வம் கோயிலுக்குச் செல்ல அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்க, கலைவாணி மட்டும் வேர்க்க விறுவிறுக்க ஓடிக்கொண்டு இருந்தார்.
“அப்படியே அவ அம்மாவைக் கொண்டு பிறந்திருக்கா இந்தக் குட்டி வாண்டு.” என்று புலம்பியபடியே சந்தியாவின் இரண்டு வயது மகளின் பின்னால், உணவுக் கிண்ணத்துடன் ஓடிய கலைவாணி, “ஓடாத நில்லுடா குட்டி… ஒழுங்கா வந்து சாப்பிடு, டைம் ஆச்சு இல்ல... பாப்பாக்கு கார்ல போகணும் இல்ல, வந்து சாப்பிடுமா” என்று கொஞ்சிக் கொண்டிருக்க, குழந்தையோ திரும்பி பாட்டிக்கு நாக்கை நீட்டி ஒழுங்கு காட்டினாள்.
“அடி குட்டிக் கழுத… பாட்டிக்கே ஒழுங்கு காட்றயா?” என்று கலைவாணி மிரட்ட ஓடிச்சென்று, “பெரிப்பா… பாத்தீ… பாத்தீ…” என்று தன் மழலை மொழியில் சொன்னவள், சூர்யாவின் பின்னால் ஒளிந்து கொள்ள, குழந்தையைத் தூக்கிக் கொண்டான் சூர்யா.
“ம்க்கும்… அப்படியே அந்தப் பிடாரி மாதிரி தான். அவளும் எதாவது தப்புப் பண்ணிட்டு மாமாங்க பின்னாடி ஒளிஞ்சிப்பா… புள்ளையையும் அதேமாதிரி பெத்து வச்சிருக்கா… எல்லா விஷயத்திலும் அம்மா மாதிரி இருக்கா… ஆனா, சாப்பிடுறதுல மட்டும் அவள மாதிரி இல்ல. அவளுக்கு எல்லாம் சோறுன்னு பேப்பர்ல எழுதி இருந்தாலே போதும், சாப்பிட்டுதான் மறுவேலை பார்ப்பா. இவ என்னடான்னா சாப்பாடுன்னாலே ஓடுறா…” என்றுச் சொல்ல,
“என்ன மம்மி… காலைலயே என் பொண்ணுகிட்ட என்னைப் பத்தித் தப்பு தப்பாச் சொல்லி, எனக்கும் என் பொண்ணுக்கும் சண்டை மூட்டிவிடப் பாக்குறீங்களா?” என்று கேட்டபடியே தேவாவுடன் வீட்டுக்குள் வந்தாள் சந்தியா.
“ஆமா… எனக்கு வேற வேலை இல்ல பாரு…” என்று முறுக்கிக் கொண்ட கலை, “இந்தா உன் பொண்ணுக்கு நீயே சாப்பாடு ஊட்டிவிடு.” என்று குழந்தையைச் சந்தியாவிடம் கொடுத்தவர், “நான் போய் ரெடியாகிட்டு வரேன்.” என்றவர் அங்கிருந்து சென்றார்.
அனைவரும் கிளம்பிக் கோயிலுக்குச் சென்றவர்கள், பூஜை மனநிறைவுடன் முடிய, மாலைபோல் வீடு திரும்பினர்.
அன்று இரவு நிலா வெளிச்சத்தில் மொத்தக் குடும்பமும் மொட்டை மாடியில் அமர்ந்து ஒன்றாகப் பேசி, சிரித்து, விளையாடியபடியே இரவு உணவை முடிக்க, அனைவரையும் மொத்தமாக நிற்க வைத்து, கலைவாணியும் தனலட்சுமியும், அவர்களுக்குத் திருஷ்டி சுத்திப் போட்டவர்கள்,
“என்னைக்கும் நம்ம குடும்பம் இதுமாதிரி ஒண்ணா ஒத்துமையா சந்தோஷமா இருக்கணும்.” என்று கடவுளை வேண்டிக் கொள்ள, நாமும் அதையே வேண்டிக் கொண்டு விடை பெறுவோம்.
அன்புடன்
ரூபாவதி.
…………… சுபம் ………..…..