கன்னத்தில் காதல் முத்தம் 1

 

காதல் 1

காலை வேளையில்‌ விடிந்தும் விடியாமல் இருந்த வானத்தில், சூரியன் இருக்கிறானா? இல்லையா? என்று தேடும் அளவுக்கு,‌ மார்கழி மாதத்தின் பனி மெல்லிய திரையாக படர்ந்து வெளிச்சத்தை மறைத்துக் கொண்டிருந்த நேரம், அந்த வீட்டின் பூஜை அறையில் ஒலித்துக் கொண்டிருந்த சுப்ரபாதத்தின் சத்தம் மெலிதாக மாடிப்படி ஏறி, தட்டாமல் கதவைக் கடந்து சென்று, அமைதியான சூழலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெண்ணவள் காதுகளில் செல்லமாகச் சிணுங்க, கண்களை மூடியபடியே மெல்லிதாக அவள் இதழ்கள் விரிந்தது. கைகளை நீட்டி சோம்பல் முறித்தபடி மெல்லப் புரண்டு படுத்தவள், மெதுவாகக் கண்களைத் திறந்தாள்.

அவள் ஆராத்யா பிரியதர்ஷினி.

கண்விழித்தவளின் பார்வையில் அங்குச் சுவரில் மாட்டி இருந்த கடிகாரம் விழுந்தது. அந்த கடிகாரம் இப்போது காலை மணி ஆறு என்று காட்டியது. சட்டென அதிர்ந்த படி போர்வையை விலக்கி விட்டு எழுந்து மெத்தையில் பொத்தென்று உட்கார்ந்தவள், "ச்சீ மணி ஆறு தான் ஆகுது அதுக்குள்ள முழிச்சிட்டேனே…" என்று தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்தாள்.

"எல்லா இந்த அத்தையால வருது. விடியக் காலையில் இப்டி சுப்ரபாதம் போடாதீங்க… போடாதீங்கன்னு ஆயிரம் முறை சொல்லிட்டேன். எம் பேச்சை கேக்குறதே இல்ல… இவங்க இப்டியே பண்ணட்டும், ஒரு நாள் அந்த பெருமாள்கிட்ட, திருப்பதி மலையில் இருந்து இறங்கி வந்து, அந்த பென்டிரைவ்ல எரர் வர வைங்க சாமின்னு சொல்றேன்… " என்றவள் மீண்டும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு குப்புறப் படுத்து விட்டாள்.

ஐந்தடி உயரம் அவள். நல்ல கோதுமை நிறத்தில், சிரித்தால் அவள் கூடவே சேர்ந்துச் சிரிக்கும் அழகிய குண்டு குண்டு கண்களுக்கு நிகராக,‌ அவள் வலதுபுற மூக்கில் இருந்த சின்ன ஒற்றைக்கல் வைர மூக்குத்தியும் மின்னும். இதழ் வளைத்துச் சிரித்தால் இடது கன்னத்தில் மட்டும் விழும் அழகிய கன்னக்குழியில் அவளைப் பார்ப்பவர்கள் மனமும் தடுக்கி விழும்.

இயற்கையாகவே பன்னீர் ரோஜா நிறத்தில் இருக்கும் உதடுகளில் எப்போதும் சின்ன புன்னகை குடியிருக்கும். தன் அன்பான குணத்தில் அனைவரையும் கட்டிப்போடும் அன்புக்காரி. குறும்பான குணம் கொண்டு சேட்டை செய்து குழந்தையாகக் கொஞ்சவும் செய்யும் குறும்புக்காரி.

மொத்தத்தில் பார்த்தவுடன் மனதில் ஒட்டிக்கொள்ளும் மதிமுகம் கொண்ட அன்பான இராட்சசியைத் தனக்கே தனக்காக அடைய, நாள் பார்த்துக் காத்திருக்கிறான் ஒரு ராட்சசன் என்பதை அறியாமல் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள் பாவை அவள்.

****

அந்த ஈஸ்வரன் அவன் இணைக்கு அவனில் சரிபாதி கொடுத்தான். இந்த ஈஸ்வரன் தன்னவளுக்காக தன்னையே முழுதாகக் கொடுத்துவிட்டவன். அவள்‌ விடும் மூச்சில் இவன் உயிர்மூச்சைச் சுவாசித்துக் கொண்டிருப்பவன் ஆராத்யாவின் அத்தை மகன். கண்களை மூடி, மனமுருகி ஆண்டவன் முன்பு கை குப்பி நின்று கொண்டிருந்தவன் மனம் முழுவதும் அவன் மனதை ஆள்பவளின் நலனுக்கான வேண்டுதல்கள் மட்டுமே நிறைந்து இருந்தது.

"கடவுளே எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து நான் உன்கிட்ட வேண்டுறது ஒன்னே ஒன்னு தான். என்னோட ஆரா எப்பவும் சந்தோஷமா இருக்கணும். அவளுக்கு வர எந்தக் கஷ்டமா இருந்தாலும் அதை எனக்கு கொடு, என்னோட‌ ஒட்டுமொத்தச் சந்தோஷத்தையும், நிம்மதியையும் அவளுக்கு கொடுத்துடு ஆண்டவா… அவ எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும். அவ மனசு ஆசைப்பட்டது எல்லாத்தையும் நடத்திவை கடவுளே." என்றவன்‌ அறியவில்லை, இனிவரும் காலத்தில் அவளுக்குச் சந்தோஷம், நிம்மதி என்ற வார்த்தையே மறந்து போகும் என்றும், அதற்கு முக்கிய காரணமாக அவனே இருப்பான் என்றும்.

அவன் ஆதிஷ்வரன்…

சிறு வயது முதல், தன் மாமன் மகளின் மகிழ்ச்சி மட்டுமே முக்கியம் என்று வாழ்பவன். அவள் இந்த பூமியில் வந்து பிறந்த நாளன்று அவள் பிஞ்சு கைகளைத் தன் கைகளுக்குள் வைத்து மூடிக்கொண்டு, "நீ என்னோட பாப்பா, நான் உன்னை பத்திரமா பாத்துப்பேன்" என்று சொன்னவன், இன்று வரை அவன் சொன்ன சொல்லில் இருந்து தவறியது இல்லை. ஆனால்… அவன் சொல்லைக் கடைசிவரை அவனால் காப்பற்ற முடிந்ததா?

****

"ம்மா… அம்மா" என்று தன் சட்டைக் கையின் பட்டனைப் போட்டபடி தன் அறையிலிருந்து வெளியே வந்த ஆதியின் குரல் அந்த பெரிய வரவேற்பு அறையில் மெதுவாகக் கேட்க, கையில் கற்பூரத் தட்டில் இருந்த விபூதியை எடுத்து, தன் நெற்றியில் இட்டபடி அவனை நோக்கி வந்துக் கொண்டிருந்தார், ஆதிஷ்வரனின் அன்னை பல்லவி.

"இதோ வரேன் ஆதி…" என்று சத்தமாக கத்திய தாயை பார்த்து, தன் உதட்டின் மேல் ஆள்காட்டி விரலை வைத்து, "ஷ்ஷ்ஷ்…" என்று சைகை செய்தவன், "மெதுவாம்மா… நான் இங்க தானா இருக்கேன். எதுக்கு இப்ப இப்டி கத்துறீங்க… மேல ஆரா தூங்கிட்டு இருக்கா இல்ல? நீங்க இப்டி கத்தின, அவ தூக்கம் கெடாது?" என்றவனை செல்லமாக முறைத்தார் அவன் அன்னை.

"டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர் டா… மணி என்ன ஆகுது? இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருந்த நல்லாவா இருக்கு? அவ என்ன இன்னும் சின்ன குழந்தையா? அடுத்த மாசம் இந்நேரம் அவளுக்கும் உனக்கும் கல்யாணமே முடிந்திருக்கும். அப்பறம் அவ தானாடா பொறுப்பா உன்னையும் இந்த வீட்டையும் கவனிக்கணும்?

இப்டி காலையில ஏழு மணிக்கு மேல தூங்கிட்டு இருந்த எப்டிடா? இன்னும் நீ அவளை இப்டியே செல்லம் கொஞ்சிட்டு இருந்த, அவ உன் தலைமேல ஏறி டான்ஸ் தான் ஆடுவ சொல்லிட்டேன் ஆமாம்" என்று முகத்தை திருப்பிக் கொண்ட அன்னையின் பின்னாடி வந்து, அவர் இரு தோளிலும் கை வைத்து, அவர் தோளில் தன் நாடியைப் பதித்துக் கொண்டான் ஆதி.

"நீங்க சொல்றது எனக்கு நல்லா புரியுதுமா, பட் அவளும் பாவம் தான… இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம். அதுவரை அவ இஷ்டம் போல இருக்கட்டும்… கல்யாணம் ஆனபிறகு, தன்னால் அவளுக்கு பொறுப்பு வந்திடும்… அவ ஒன்னும் அவ்ளோ லேசி எல்லாம் இல்ல, அது உங்களுக்கும் தெரியும் தான?" என்ற மகனின் வார்த்தைக்கு அவர் தலை தன்னால் ‘ஆமாம்’ என்று ஆட, "அப்றம் என்னாம்மா… விடுங்க பாத்துக்கலாம்." என்றான் ஆதி.

"நீ சொல்றது எனக்கு புரியுது ஆதி…" என்றவர் முகத்தில் சின்னதாக கலக்கம் தெரிய, "என்னம்மா? என்ன ஆச்சு? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு? எதுவும் பிரச்சனையா?" என்ற ஆதி, அன்னையின் கையில் இருந்த கற்பூரத் தட்டை வாங்கி பூஜை அறையில் வைத்து விட்டு, பல்லவியை அழைத்து வந்து அங்கிருந்த சோஃபாவில் அமர வைத்து, அவனும் அருகில் அமர்ந்துவிட்டான்.

"சொல்லுமா என்ன ஆச்சு?" என்ற ஆதியை நிமிர்ந்து பார்த்த பல்லவி, "இன்னைக்கு காலையில நம்ம‌ குடும்ப ஜோசியர் ஃபோன் பண்ணி இருந்தாரு ஆதி…" என்றார் வாடிய முகத்துடன்.

"அவர் எதுக்கு இப்ப ஃபோன் பண்ணாரு?" என்று புருவம் சுருக்கி யோசித்த ஆதி, "சரி என்ன சொன்னாரு அவரு?" என்று கேட்டான்.

"சொன்னாரு… சொன்னாரு… இருக்க பிரச்சனை போதாதுன்னு புதுசா ஒரு குண்டை தூக்கி போட்டாரு… உனக்கும், ஆருவுக்கும் நேரம் சரி இல்லையாம். இப்ப இந்த கல்யாணம் நடக்குறது அவ்ளோ நல்லது இல்லை. மீறி நீங்க கல்யாண ஏற்பாடு செஞ்சாலும் அது நடக்காது. நீங்க ஊர் முன்னாடி அவமானப்பட்டு நிக்கும் நிலை கூட வரும், உடனே இந்த கல்யாண ஏற்பாட்டை எல்லாம் நிறுத்துங்க. ஆருவுக்கு ஏதோ நடக்கப் போகுது, அதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது. இனி அவ வாழ்க்கை விதியோட கையில் தான். அப்டி, இப்டின்னு என்னென்னவோ சொல்றாரு!" என்று ஜோசியர் சொன்னதை முழுதாக சொல்லி முடித்தவர் கண்கள் கலங்கிவிட, அவர் கண்களைத் துடைத்து விட்டான் ஆதி.

"ம்மா… இதை அவர் சொல்றது என்ன புதுசா? ஏற்கனவே கல்யாணத்துக்கு நாள் குறிக்க, நீங்க அவர்கிட்ட போனப்பவும் கூட இது மாதிரி தான சொன்னாரு. அதனால் தான நம்ம வேற ஜோசியர் கிட்ட நாள் குறிச்சு வாங்கிட்டு வந்து, இந்த எல்லா ஏற்பாட்டையும் பாத்துட்டு இருக்கோம். எல்லாம் தெரிஞ்சும் ஏன் இப்டி கலக்கமா இருக்கீங்க?"

"வேற என்னை என்ன செய்ய சொல்ற ஆதி? இதுவரை அவர் சொல்லி எதுவும் நடக்காம போனது இல்ல… உங்க ரெண்டு பேர் நிச்சயத்துக்கு நாள் குறிக்கப் போகும் போதும் கூட இதே மாதிரி தான் சொன்னாரு. நீங்க நெனைச்ச மாதிரி நிச்சயம் நடக்கும்… ஆனா, கல்யாணம் நீங்க நெனச்ச மாதிரி நடக்காதுன்னு சொன்னாரு, அதே மாதிரி தான நடந்துச்சு? ஆரு அப்பா, எங்கண்ணன் உடம்பு முடியாம போய்… என்னென்னமோ நடந்து…" என்று ஆரம்பித்தவர் அடுத்து ஒன்றும் பேச முடியாமல் தன் அண்ணனை நினைத்து அழ ஆரம்பித்துவிட,‌ ஆதிக்கும் தன்னை மகன் போல் பாசம் கொட்டி வளர்த்த மாமனின் திடீர் மரணம், அவனை நிலைகுலைய வைத்தது என்றால் அது மிகையில்லை.

"என் அண்ணா மட்டும் உயிரோட இருந்திருந்தால் எவ்ளோ நல்லா இருந்திருக்கும் இல்ல ஆதி? அவர் இருந்திருந்தால் நமக்கு இந்த கஷ்டமே வந்திருக்காது."

"மாமா மட்டும் இப்ப இருந்திருந்தால் எவ்ளோ நல்லா இருந்திருக்கும்?" என்று இழுத்து மூச்சு விட்ட ஆதி, "எங்க கல்யாணத்தை எவ்ளோ பிரம்மாண்டமா செய்யணும்னு அவரு ஆச பட்டாரு, இப்ப அவர் நினைச்ச மாதிரி எங்க கல்யாணம் நடக்கப்போகுது… ஆனா, அதைப் பார்க்கத்தான் அவர் இல்லை…"‌ என்ற ஆதியின் கண்களும் கலங்கிவிட, அப்போது மாடிப்படியில் ஆரா இறங்கி வரும் காலடி சத்தம் கேட்க, சட்டென தன் கண்களைத் துடைத்துக் கொண்டான் ஆதி.

"ம்மா… ப்ளீஸ்மா அழாதீங்க, நீங்க அழறதை ஆரா பாத்த, அவளும் மாமாவை நினைச்சு இன்னைக்கு முழுக்க அழுதுட்டு இருப்பா. இப்ப தான் அவ கொஞ்சம் பெட்டராகிட்டு இருக்கா. இப்ப உங்களை இப்டி பார்த்த, மறுபடியும் அவளை தேத்துறது ரொம்ப கஷ்டம் ம்மா. ப்ளீஸ்மா கண்ணைத் துடைங்க." என்றதும், பல்லவி தன் புடவை முந்தானையை எடுத்து தன் கண்களை அழுத்தித் துடைத்துக் கொண்டு, எழுந்து பூஜை அறைக்குள் சென்றுவிட, ஆராத்யா கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாள்.

அழகிய வெள்ளை நிறத்தில் சிகப்பு நிறச் சின்ன சின்ன பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த அனார்கலி சுடிதார் அணிந்திருந்தாள். காதில் அழகிய முத்து கம்மலும், கழுத்தில் A என்ற எழுத்தில் இருந்த பெண்டன்ட் வைத்த செயினும் அணிந்து, ஒரு கையில் வாட்ச், ஒரு கையில் மெல்லிய தங்க பிரேஸ்லெட் அணிந்துகொண்டு அன்றலர்ந்த மலர் போல் அழகாக தன் முன் வந்து நின்றவளைப் பார்த்து ஆதி தன்னை மறந்து நின்றவன், சில நொடிக்கு பிறகு அவன் காதில் கேட்ட "ஆதி மாமா" என்று அவன் மாமன் மகள் கத்திய சத்தத்தில் தான் நிகழ்வுலகிற்கு வந்தான்.

தூக்கத்திலிருந்து சட்டென விழித்தவன் போல், "ஹான்… எ… என்ன ஆரா?" என்று தடுமாறியவனைப் பார்த்து அவள் குலுங்கிச் சிரிக்க, அவள் காதை பிடித்துத் திருகிய பல்லவி, "ஏன்டி காலையிலையே ஆரம்பிச்சிட்டியா உன் சேட்டையை?" என்றபடி தன் கையில் இருந்த கற்பூர தட்டில் இருந்த விபூதியை எடுத்து ஆதி நெற்றியில் வைத்துவிட்டவர், குங்குமத்தை எடுத்து ஆராத்யா நெற்றியில் வைத்து விட்டார்.

"நான் என்ன பண்ணட்டும் அத்தை? நான் மாமா மாமான்னு கூப்டுட்டே இருக்கேன். ஆனா, அவர் என்னமோ கண்ணை திறந்துட்டே தூங்குற மாதிரி நின்னுட்டு இருந்தாரு.‌ அதான் இப்டி ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் குடுத்தேன்." என்று‌ சிரித்தபடி,‌ தட்டில் இருந்து கொஞ்சமாக குங்குமத்தை எடுத்து தன் உச்சி வகிட்டில் வைத்துக் கொண்டாள்.

"ஆரு… உனக்கு எத்தனை முறை சொல்றது? உச்சியில் பொட்டு வைக்காதன்னு… ஊரறிய கல்யாணம் நடந்த பிறகு வச்சிக்கடா, இப்ப வைக்காத. வெளிய பாக்குறவங்க என்ன நினைப்பாங்க?" என்ற பல்லவிக்கு, கொஞ்ச நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்திருந்த பல்லவியின் தோழி ஒருவர் சொன்னது தான் நினைவுக்கு வந்தது.

ஆராவின் வகிட்டில் குங்குமத்தைப் பார்த்து விட்டு, உன் பையனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? ஏன் எனக்கு சொல்லல? என்னாச்சு? ஏதாச்சு தப்பு தண்டா ஏதாவது…" என்று கேட்டு துளைத்து எடுத்து விட, பல்லவிக்கு அவருக்கு விளக்கம் சொல்வதற்குள் முழி பிதுங்கிவிட்டது. அதற்குப் பின் ஆராவுக்கு எத்தனை முறை சொல்லியும், அவள் கேட்பதாக இல்லை.‌

இன்றும் அதே பல்லவியை திரும்பப் பல்லவி பாட ஆரம்பிக்க, அவர் இரு கன்னத்தையும் பிடித்து ஆட்டிய ஆராத்யா, "யார் என்ன நினைச்ச எனக்கு என்ன? எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, சோ நான் குங்குமம் வைப்பேன்." என்றவள்‌‌ மனதிற்குள், 'அப்பத்தான் சிலருக்கு இவ கல்யாணமான பொண்ணு, இன்னொருத்தனுக்கு சொந்தமானவன்னு புரியும்'‌ என்று நினைத்தவள்,

"சரி அத்த நான் என்‌ ப்ரண்டு கூட வெளிய போய்ட்டு வரேன்… பை அத்தை… பை ஆதிமாமா…" என்றவள் பல்லவி, "ஆரு… ஆரு நில்லுடி" என்று கத்தியதைக் காதில் வாங்காமல், அடுத்த நொடி அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.

"டேய் ஆதி அவளை நிறுத்துடா…" என்று மகனிடம் சொல்ல, "ம்மா விடும்மா, ப்ரண்ட்ஸ் கூட தான போகட்டும். பாவம் அவளும் எவ்ளோ நேரம் தான் வீட்லயே உக்காந்துட்டு இருப்பா?"‌ என்றான்.

"நீ அவளுக்கு ரொம்ப செல்லம் குடுக்குற ஆதி. இது சரியில்ல. இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணத்தை வச்சிட்டு அவ இப்டி வெளிய சுத்துறது எனக்கு சரியா படல… ஏற்கனவே இருக்க பிரச்சனையே சமாளிக்க முடியாம தவிச்சிட்டு இருக்கோம், இதுல புதுசா எதுவும் வந்தா நம்மால் தாங்கமுடியாது. நான் அவ்ளோதான் சொல்லுவேன்"

"விடும்மா… அவ சின்ன பொண்ணு தானா?" என்றவனை இப்போது நிஜமாகவே முறைத்த பல்லவி, "அவ ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல ஆதி…" என்று கோவமாக கத்திய அன்னையைத் திரும்பி ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்த ஆதி, "டைம் ஆச்சு, நான்‌ கிளம்புறேன்." என்றவன் அங்கிருந்து எதுவும் பேசாமல் கிளம்பினான்.