கன்னத்தில் காதல் முத்தம் 2

 காதல் 2


'வீக் எண்ட்' என்று இளைஞர்களால் அழைக்கப்படும் வார விடுமுறை நாள் நாளை என்பதைக் கூட மறந்து அந்த வெள்ளிக்கிழமை நாளில், அலுவலகம் பரபரப்பாக இருக்க, அங்கு வேலை செய்யும் சில ஆட்கள் முகத்தில் ஒருவிதப் பீதியுடன் அந்த 'கான்பரன்ஸ்' அறையின் வாசலைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.


'கான்பரன்ஸ்' அறையின் கதவைத் திறந்து கொண்டு கௌதம் உள்ளே வர,‌ கௌதம் பின்னால் வேகமாக நடந்து வந்த அவன் கால் ‘ஷூ’ வின் சத்தமே அங்கிருந்தவர்களின் மனதில் பயத்தைக் கிளப்பியது.


ஆறடி உயரத்தில் மாநிறத்திக்கு சற்று கம்மியான நிறம் தான் என்றாலும், அதுவும் அவனுக்கு அழகாகத் தான் இருந்தது. தீர்க்கமான கருப்பு வைரம் போன்ற கண்கள், அதில் எப்போதும் ஒரு அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும்.


எந்தவித கெட்ட பழக்கம் இவனுக்கு இல்லை என்று சொல்லாமல் சொல்லும் இளஞ்சிவப்பு நிற உதடுகள், நுனியில் கோபத்தை சுமந்திருக்கும் கூர் மூக்கு, 'சிக்ஸ் பேக், எய்ட் பேக்' என்றெல்லாம் இல்லாமல், ஒழுங்காக உடற்பயிற்சி செய்து உடலை உறுதியாக ஆரோக்கியமாக வைத்திருந்தான்.


எப்போதாவது சிரித்தால் அத்தி பூத்தாற்போல், அவன் வலப்பக்கம் விழும் ஆளை இழுக்கும் கன்னக்குழி என்று பார்க்கும் அனைவரையும் தன் கம்பீரத்தால் அசரடிக்கும் ஆணழகன் அவன்.


கருப்புச் சட்டையும், கருப்பு நிற கால்சராயும் அணிந்து, இடது கையில் கடிகாரம் இருக்க, வெள்ளி காப்பு போட்டிருந்த தன் வலது கையால் ஜெல் போட்டு வாரியிருந்த தன் கேசத்தை அழுத்திக் கோதியவாறு கம்பீரமாக நடந்து வந்து, அங்கு நடுநாயகமாக இருந்த இருக்கையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு, தன் வலது கையை, வலது தொடை மீது வைத்து, இடது கையின் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் தன் தாடையை நீவியபடியே அங்கிருந்தவர்களை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான்.


அதில் ஆண்கள் பதறி நின்றார்கள் என்றால், பெண்கள் அவன் கம்பீரத் தோரணையில் மயங்கி நின்றனர்.


"அ…அது வந்து அக்…" என்று இழுத்த கௌதம், அவனது ஒரு நெருப்பு கக்கும் பார்வையில் கப்சிப் என்று வாயை இழுத்து மூடிக்கொள்ள, அதே அனல் தகிக்கும் பார்வையுடன் திரும்பி அங்கிருந்தவர்களை உஷ்ணப்பார்வை பார்த்தபடி, "எப்டி?" என்று ஒரு வார்த்தை தான் கேட்டான். ஆனால், அந்த ஒரு வார்த்தையே அங்கிருந்தவர்களை அலற வைத்தது.


"சார் அது வந்து…" என்று டீம் லீடர் இழுக்க, "கம் டூ தீ பாண்ட்" என்ற அவனது அழுத்த குரலில் உடல் நடுங்கியபடி, "சார் நியாயமா இது நமக்கு கிடைக்க வேண்டிய ப்ராஜெக்ட் தான் சார்… ஆனா, அந்த கம்பெனிக்காரன் ஒரு மினிஸ்டர் சப்போட்ல இந்த ப்ராஜெக்ட்டை டேக்ஓவர் பண்ணி இருக்கான் சார்… பணமும் கூட கைமாறி இருக்கு சார்" என்று தயங்கித் தயங்கி சொல்ல, அவன் "ஸ்டாப் இட்" என்று கத்திபடி எதிரில் இருந்த டேபிளில் கையூன்றி எழுந்து நிமிர்ந்து நின்றான்.


"இதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரிஞ்ச விஷயம் தான். தெரிஞ்சதையே மறுபடியும் நீங்க சொல்லி, நான் கேட்க இந்த மீட்டிங் இல்ல. இப்ப இருக்க கம்படேடிவ் வேர்ல்ட் ல இதெல்லாம் நார்மல். இதுல அவங்க மேல தப்பு இல்ல.


நம்ம எதிரி கம்பெனியோட மூவ்மெண்ட் பத்தி தெரிஞ்சுக்காம இருந்தது உங்க தப்பு, உங்களை எல்லாம் நம்பி பொறுப்பை கொடுத்த என்னோட தப்பு." என்று கர்ஜித்தவன், "யூவர் ஆல் ஃபயர்டு" என்று அசராமல் ஒரு குண்டை தூக்கிப் போட்டு விட்டு விறுவிறுவென்று அவன் அங்கிருந்து வெளியேற, வேலை போன அதிர்ச்சியில் உறைந்து நின்றவர்களைப் பாவமாகப் பார்த்த கௌதம், எப்படியும் பேசி அவனை சமாதானம் செய்ய அவன் பின்னோடு சென்றான்.


தன் அறையில் மடிக்கணினியில் பார்வை பதித்திருந்தவனுக்கு கௌதம் வந்தது தெரிந்தும், அவனைப் பார்க்காமல் மடிக்கணினியிலேயே கவனமாக இருக்க, பொறுத்துப் பொறுத்து பார்த்த கௌதம், "டேய் இப்ப எதுக்கு நீ இப்டி பண்ணிட்டு இருக்க? அதான் என்னென்னமோ பண்ணி அந்த ப்ராஜெக்ட் உனக்கு கிடைக்கிற மாதிரி செஞ்சிட்ட இல்ல. அப்றம் எதுக்கு எல்லாரையும் வேலையை விட்டு தூக்கணும்?" என்றவனை இமைகள் மட்டும் உயர்த்தி அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, தான் மடிக்கணினியை மூடி வைத்தவன்,


"ஹவ் டேர் யூ கௌதம்! என்னை பத்தி தெரிஞ்சும்… உன்னால எப்டி இப்டி என்கிட்ட கேக்க முடிஞ்சிது? இந்த ப்ராஜெக்ட்டை பணத்துக்காக நான் எடுக்கல, இது என்னோட பிரிஸ்டீஜ் இஷ்யூ… எனக்கு தான் அந்த ப்ராஜெக்ட்னு நான் இங்க ஃபிக்ஸ் பண்ணிட்டேன்" என்று தன் நெற்றிப் பொட்டை தொட்டுக் காட்டியவன், "நான் ஃபிக்ஸ் பண்ண ஒரு ப்ராஜெக்ட் என் கையை விட்டுப் போக அவங்களோட கேர்லெஸ்னஸ் தான் காரணம். அவங்களை வேலைய விட்டு தூக்கினதோட மட்டும் விட்டேனேன்னு சந்தோஷப்படு…"


"ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட், பட் அவங்க அத்தனை பேரையும், வேலைய விட்டு தூக்கினா அது நம்ம வேலைய தான் அஃபெக்ட் பண்ணும். அதான் சொல்றேன் கொஞ்சம் யோசி. ப்ளீஸ் கிவ் தெம் செகண்ட் சான்ஸ்…" என்ற கௌதமை போதும் என்பது போல் கையை காட்டியவன்,


"ஐ நெவர் டேக் செகண்ட் சான்ஸ் ஆர் சாய்ஸ்…" என்றவனது பிடிவாதம் கௌதமை கொஞ்சம் பயமுறுத்தத் தான் செய்தது. ஏனென்றால் பிடிவாதம் தொழில் முடிவுகளில் மட்டும் இல்லாது, அவன் வாழ்க்கைக்கான முடிவுகளில் பிரதிபலிக்க நல்ல நண்பனாக கௌதமுக்கு, அவன் வாழ்க்கையை நினைத்து கொஞ்சம் பயமாக தான் இருந்தது.


அவன்... என்ன நடந்தாலும் தான் நினைத்ததை சாதித்துக் காட்டும் பிடிவாதத்தின் மொத்த உருவம். அவனுக்கென்று தனி நியாயம், தனி சட்டம் என்று யாருக்கும் அடங்காமல் திரியும் காட்டாறு.


எந்த சூழ்நிலையிலும் சுயம் இழக்காமல் சூழலைத் தனக்குச் சாதகமாக மாற்றும் திறமைசாலி… ஆயிரம் பேர் எதிர்த்து நின்றாலும் துணிந்து, தனித்து மோதி ஜெயிக்கும் தைரியம் நிறைந்த பலம் வாய்ந்த ஆண்மகனின் திமிர் எல்லாம், ஒரு ஐந்தடி உயரப் பெண்ணிடம் அடிபணியப் போகிறது என்று அறிவானா இவன்?


இவன் தேவ்… அக்னிதேவ். அந்த அக்னி தேவனை போல் தன்னை எதிர்ப்பவர்களைத் தன் பார்வை எனும் அக்னியிலேயே பொசுக்கி விடும் தீ இவன்.


ஒரு அழகிய நிலவின் குளுமையில் குளிர்காய நாள் குறித்துக் காத்திருக்க, அந்த அழகு நிலவு வேறு ஒருவனுக்கு வாழ்க்கை துணையாகி, அவன் வானத்தில் ஒளி வீசும் நிலவாக மாறும் நாளை எதிர்பார்த்து நாட்களை கடந்து கொண்டிருக்கிறது. இதில் யார் நினைத்து நடக்கும்? அக்னிதேவ்வா? ஆராத்யாவா? ஆதிஷ்வரனா?


அக்னி முகம் முழுவதும் கோபத்தின் கனலில் தகித்துக் கொண்டிருக்க, அவன் கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி கேட்க, அதை எடுத்துப் பார்த்தவன் முகத்தில் இருந்த கோவம் அடுத்த நொடி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போக, அவன் இதழ்களில் ரசனையான புன்னகை மலர்ந்தது.


வெள்ளை நிற அனார்கலி சுடிதாரில் முத்து பற்கள் தெரிய சிரித்தபடி இருந்த ஆராத்யாவின் நிழற்படத்தை பார்த்தவுடன் அக்னியின் கனல் ஆழ்கடல் குளுமையாக மாறியிருக்க, கௌதமுக்கு புரிந்துவிட்டது அந்த செய்தியை யார் அனுப்பி இருப்பார்கள் என்று…


'ம்ம்ம் அந்த அஞ்சாம்படை மெசேஜ் அனுப்பிட்டாளா? போச்சு… இன்னைக்கு என்ன செய்யப்போறதா உத்தேசமோ இவனுக்கு?' என்று மனதில் புலம்பியபடியே, "ம்ம்ம் அதான் மெசேஜ் வந்திடுச்சே… அப்றம் எதுக்கு இன்னும் இங்க உக்காந்துட்டு இருக்க? கிளம்பு" என்ற கௌதமை சிறு முறைப்போடு பார்த்தவன்,


"அவங்க எல்லாருக்கும் நம்மோட டை-அப்ல இருக்க கம்பெனிஸ்ல வேலைக்கு ஏற்பாடு பண்ணு." என்றபடியே அக்னி அங்கிருந்து செல்ல, போகும் அவனையே சின்ன சிரிப்போடு பார்த்துக் கொண்டு இருந்தவன், சரியான நேரத்தில் வந்து அத்தனை பேருக்கும் வேலை வாங்கிக் கொடுத்த அந்த செய்திக்கு மனதில் நன்றி சொல்லிக்கொண்டான்.


ஆராத்யா வீட்டை விட்டு சிறிது தூரம் நடந்து வரவும், அங்கு ஷிவானி கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.


"ஏய் ஆரா, நான் தான் வீட்டுக்கு வந்து பிக் பண்றேன்னு‌‌ சொன்னேன் இல்ல, எதுக்கு நீ இந்த வேகாத வெய்யில்ல நடந்து வர?" என்றவள், வேகமாக இறங்கி வந்து கார் கதவை திறந்து விட, தோழியை செல்லமாக முறைத்தபடி காருக்குள்ளே உட்கார்ந்த ஆராத்யா,‌


"ஏன்டி வீட்ல இருந்து ஒரு ரெண்டு நிமிஷம் கூட நடந்து வந்திருக்க மாட்டேன். அதுக்கு இவ்ளோ சீனா? அதுவும் மார்கழி மாச குளிர்ல, சூரியனே சூட் ரூம் போட்டு தூங்கிட்டு இருக்காரு போல. காலைல ஒன்பது மணியாகியும் இன்னும் சரியா வெளிச்சம் கூட இல்ல… இது உனக்கு வேகாத வெயில்ல? இது உனக்கே கொஞ்சம் இல்ல… ரொம்ப ஓவரா தெர்ல?" என்றவள் வார்த்தைகளை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டவள்,


ஆராத்யா பக்கம் கதவை சரியாக மூடி இருக்கிறாதா? என்று பார்த்து விட்டு, ஓட்டுனர் இருக்கையில் வந்து அமரந்தவள் ஆராத்யாவுக்கு 'சீட் பெல்ட்டை' போட்டு விட்டு, தானும் போட்டுக்கொண்டவள், "உனக்கு தான் பனி காலத்தில் மூச்சு வாங்கும் இல்ல? அப்றம் எதுக்கு நடந்து வர்ர?" என்று திட்டியபடி ஷிவானி வண்டியை கிளப்ப,‌


"இல்ல ஷிவி வீட்லயே உக்காந்து உக்காந்து ரொம்ப ஒருமாதிரி ஆகிடுச்சு… சரின்னு வெளிய போனா நீ வீட்டு வாசலுக்கு வந்து பிக் பண்ற, மறுபடியும் வீட்டு வாசல்ல வந்து ட்ராப் பண்ணிட்டு போற… நீ இப்டின்னா, ஆதிமாமா கேக்கவே வேணாம்.


மேரேஜ் ஷாப்பிங் போனா, கோழி ரெக்கையில் குஞ்சுகளைப் பொத்தி வைக்கிற மாதிரி என்னை வெளிய கூட்டி போய்ட்டு, கூட்டி வராரு… எனக்கு ரொம்ப கடுப்பாகுது ஷிவி. ஐ ஜஸ்ட் வாண்ட் டு வாக். வெளிய கொஞ்ச தூரம் நடந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு, அதான் வந்தேன். புண்ணியவதி நீ வந்து அதுல மண்ணள்ளிப் போட்ட." என்று உதட்டை சுளித்து ஒழுங்கு காட்டியவளை பார்த்து, சிரித்த ஷிவானி காரை நிறுத்தினாள்.


"இப்ப எதுக்கு காரை நிறுத்தின? மாலுக்கு போலயா?" என்றவள் கன்னத்தைப் பிடித்து ஷிவானி திருப்பி எங்கிருக்கிறார்கள் என்று காட்ட, ஆராத்யா இதழ்கள் பெரிதாக விரிந்தது.


"ஏய்! என்னோட ஃபேவரைட் பார்க்" என்று சத்தமாக கத்தியவள், "தேங்க்ஸ் ஷிவி டார்லிங்" என்று தோழி கன்னத்தில் முத்தமிட்டு விட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவள் வேகமாக பூங்காவுள் செல்ல, "வயசு தான் கழுதைக்கு ஆகுற மாதிரி ஆகியிருக்கு ஆனா, இன்னும் சின்னபுள்ள மாதிரியே தான் இருக்க" என்றபடி காரை பூட்டி விட்டு ஷிவானியும் பூங்காவினுள்ளே சென்றவள், அங்கு வைத்து ஆராத்யாவை விதவிதமாக நிறைய புகைப்படம் எடுத்தாள்.


"ஆரா நீ நடந்தா நல்லா இருக்கும்னு சொன்ன, அதான் பார்க் கூட்டி வந்தேன். வந்து அரைமணி நேரம் ஆகுது. போதும் கிளம்பு மால் போகலாம்…"


"ப்ளீஸ் ஷிவி ஃபைவ் மினிட்ஸ்…" என்றவளை அழுத்தமாக பார்த்த ஷிவானி, 'ம்ம்ம் எவ்ளோ முடியுமோ அவ்ளோ என்ஜாய் பண்ணிக்கோ… ஏன்னா இனி வரப்போற ஒவ்வொரு நாளும் உன்னோட வாழ்க்கையை அப்டியே புரட்டி போடப் போகுது… அதுக்கு முன்ன எவ்ளோ சிரிக்க முடியுமோ சிரிச்சிக்கோ…' என்றவளின் சிந்தனையை, "போலாம் ஷிவி" என்ற‌ ஆராத்யாவின் குரல் கலைத்தது.


"என்ன ஷிவி ஏதோ சீரியஸ் திங்கிங் போல?" என்க, "ஹான்… இல்… இல்ல ஆரா, ஒன்னு இல்ல… வா போலாம்" என்க இருவரும் மாலுக்கு கிளம்பினார்.


ஒவ்வொரு ஆடையாக எடுத்து எடுத்துப் பார்த்து, "ஏய் இந்த கலர் எனக்கு நல்லா இருக்கா? இல்ல இந்த கலர் எனக்கு சூட் ஆகுதா?" என்று ஆடைகளை தன் மீது வைத்து காட்டிய ஆராத்யாவை உதட்டை சுளித்து கண்களை சுருக்கி பார்த்த ஷிவானி,


"டிரஸ் நல்லாதான் இருக்கு…" என்று இழுத்தவள், "ஆனா நீ நல்லா இல்லயே" என்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓட, "ஏய் உன்ன… என்ன பண்றேன் பாருடி! ஏய் ஷிவி நில்லுடி" என்று பல்லை கடித்தபடி, தோழியை துரத்திய ஆராத்யா, எதிரே வந்தவனை கவனிக்காமல் அவன் மீது மோதி, கீழே விழ பார்த்தவள்‌ இடையை தன் ஒரு கரத்தில் வளைத்துப் பிடித்து நிமிர்த்தி தன் முகத்துக்கு நேராக நிறுத்தினான் அவன்.


கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தில் கண்களை மூடியிருந்த ஆராத்யா, தான் விழவில்லை என்பது தெரிந்ததும், யாரோ தன்னை அணைத்துப் பிடித்திருப்பது உணர்ந்து, சட்டென அவன் பிடியிலிருந்து விலகி வந்தவள், "சாரி… சாரி" என்றபடி அப்போது தான் தன் எதிரில் இருந்தவன் முகம் பார்த்தவள் கண்கள், ஒரு நொடி அதிர்ச்சியில் விரிந்து அடுத்த நொடி உள்ளுக்குள் எரிச்சல் மண்டியது.


'இவனா…? இங்க எப்டி வந்தான்? நான் எங்க போனாலும் பின்னாடியே வந்து டார்ச்சர் பண்றானே!' என்று மனதிற்குள் அவனை கரித்து கொட்டியவள், மெல்லிய குரலில் "பொறுக்கி" என்று விட்டு அங்கிருந்து வேகமாக செல்ல, போகும் அவளையே புன்னகை கலந்த முறைப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் அக்னிதேவ்.


ஆராத்யா ஷிவானியிடம் வந்தவள்,‌ "ஷிவி இன்னைக்கு இது போதும், வீட்டுக்கு போலாம்"


"ஏய் இன்னும் பாதி ஷாப்பிங் கூட முடியலடி!‌ அதுக்குள்ள போலாம்னு சொல்ற?"


"ப்ளீஸ் ஷிவி எனக்கு தலைவலிக்கு, மீதி ஷாப்பிங்க இன்னொரு நாள் பாத்துக்கலாம். கல்யாணத்துக்கு தான் இன்னும் நிறைய நாள் இருக்கே…" என்க,


'ம்க்கும் இவ ஒருத்தி…‌ இவ ஆதிமாமா கல்யாணத்துக்கு தான் நாங்க மாஞ்சி மாஞ்சி ஷாப்பிங் பண்றோம்மாக்கு… அவன் கல்யாணத்தை நிறுத்த தான், நானே இவ்ளோ வேலையும் பாத்துட்டு இருக்கேன், இதுல இவ வேற… எனக்கு வேற வேலை இல்ல பாரு' என்று உள்ளுக்குள் கறுவியவள்,


'இதுவும் நல்லதுக்குத் தான். இத சாக்கா வச்சி இன்னொரு நாள் இவளை கூட்டிட்டு வெளிய வரலாம்'‌ என்று நினைத்தவள், "சரிடா நீ கார் பார்க்கிங் போய் வண்டில வெய்ட் பண்ணு, நான் இந்த ஷாப்ல சில திங்ஸ் வாங்கி இருக்கேன், பில் பே பண்ணிட்டு வந்திடுறேன்." என்றவள் கார் சாவியை அவளிடம் கொடுக்க, ஆராத்யா அங்கிருந்து கிளம்பினாள். அவள் போவதைப் பார்த்த ஷிவானி திரும்பி பார்க்க, அங்கு அக்னி நின்றிருந்தான். அவனை பார்த்து ஷிவானி தலையாட்ட, அக்னி கண்களை மூடித்திறந்தவன், அங்கிருந்து சென்றான்.


ஆராத்யா தான் வாங்கிய பொருட்களை எல்லாம் கார் பின்னிருக்கையில் வைத்து கதவைச் சாற்றிவிட்டுத் திரும்ப, ஒரு வலியகரம் அங்கிருந்த தூணின் பின்னால் அவளை இழுத்துக் கொண்டது.


என்ன நடந்தது? என்று புரியாமல் அவள் கத்த வாய்த் திறக்கும் முன், தன் இரும்புக் கரம் கொண்டு அவள் வாயை அடைத்திருந்தான் அக்னி.


ஆத்திரத்தில் கண்கள் சிவக்க அவனை முறைத்தவள், திமிறிக் கொண்டு அவனது பிடியிலிருந்து விலகப் பார்க்க, பாவம் அவன் இரும்புப் பிடியிலிருந்து அவளால் இம்மியும் அசைய முடியாமல் போனது.


"டேய் விடுடா, விடுடா என்னை‌" என்று‌ அவள் திமிற, அவள் இரு கரத்தையும் தன் ஒரு கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டு, அவள் முகத்தை வெகுவாக நெருங்கியவன், "மேல என்னை பார்த்து என்னடி சொன்ன...? பொறுக்கியா? பொறுக்கி என்ன செய்வான்னு, சும்மா ஒரு டெமோ காட்டவா?" என்று ஒரு மாதிரி குரலில் அவன் கேட்க, பாவைக்குப் பயத்தில் நெஞ்சில் நீர்வற்றிப் போனது.


பயத்தில் அவள் தேகம் நடுங்குவதை உணர்ந்த அக்னி அவன் பிடியை கொஞ்சம் தளர்த்தி, அவள் முகத்தை பார்த்தவனின் பார்வை அவள் உச்சி வகிட்டில் இருந்த குங்குமத்தில் நிலைத்தது.


அந்த நேரம் ஆராத்யாவும் அதை கவனித்தாள். தன் முழு பலத்தையும் பிரயோகித்து அவனை தன்னை விட்டுப் பிரித்துத் தள்ளிவிட்டு, "இப்பவாது புரியுதா? எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு… நான் இன்னொருத்தனுக்குச் சொந்தமானவ. ஒழுங்கா என் வழிய விட்டு விலகி நில்லு… அதான் உனக்கு நல்லது. இல்ல இந்த விஷயம் மட்டும் எம் மாமாவுக்கு தெரிஞ்சிது… அவர் உன்னை உயிரோடு விடமாட்டாரு" என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தவள் முகத்தில் தெரிந்த கோபத்தை ரசனையாக பார்த்தவன்,


"நீ அந்த ஆதிஷ்வரன் கிட்ட இல்ல, கடவுள் ஈஸ்வரன் கிட்ட சொன்னாலும் எனக்கு கவலை இல்ல… உன் அந்த மாமானால என்னை ஒன்னும் புடுங்க முடியாது" என்றவனை தீயாக முறைத்தவள்,


"பைத்தியமாடா நீ? உனக்கு என்ன வேற பொண்ணே கிடைக்கலியா…? இப்பிடி அடுத்தவன் பொண்டாட்டி பின்னாடி சுத்திட்டு இருக்க?" என்றவள் காதருகில் கேட்ட சத்தத்தில் அதிர்ந்து திரும்பி பார்க்க, அங்கு அக்னி குத்தியதில் தூண் சுவரின் ஓரம் உடைந்து கீழே விழுந்திருந்தது.


எச்சிலை விழுங்கியபடி ஆராத்யா அவனை நிமிர்ந்து பார்க்க, அவள் முகத்திற்கு நேராக குனிந்தவன், உனக்கு ஏற்கனவே கல்யாணமாகி இருந்தாலும் எனக்கு கவலை இல்ல… அடுத்த மாசம் உனக்கு நடக்கப்போற கல்யாணத்தைப் பத்தியும் எனக்கு அக்கறை இல்ல… நீ எனக்கு தான்.


எனக்கு மட்டும் தான்… இதை தடுக்க யார் வந்ததாலும், அவங்களை கொன்னுட்டு, உன்னை தூக்கிட்டு போய்ட்டே இருப்பேன்" என்றவன் வார்த்தையில் அவள் கதிகலங்க நிற்க, மெதுவாக அவள் கன்னத்தில் தட்டியவன், "டேக் கேர்" என்று விட்டுச் செல்ல, ஆராத்யா அப்படியே தளர்ந்து தரையில் அமர்ந்து விட்டாள்.