கன்னத்தில் காதல் முத்தம் 3

 காதல் 3


ஷிவானி வந்ததை கூட உணராமல் 'கார் பார்க்கிங்' தூணில் சாய்ந்தபடி பயத்தில் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவள் தோளைத் தொட்ட ஷிவானி, "ஆரா… ஏய் ஆரா, ஏன் இங்க உக்காந்துட்டு இருக்க?" என்று அவளை உலுக்கிய பின்பு நிகழ்வுக்கு வந்த ஆராத்யா, "ஷிவி" என்ற விசும்பியபடி பாய்ந்து சென்று தோழியைக் கட்டிக்கொண்டாள்.


தன் தோளில் முகம் புதைந்திருக்கும் தோழியின் தலையை பொதுவாக தடவிக்கொண்டே ஷிவானி மெல்ல திரும்பிப் பார்க்க, அங்கு அக்னி நின்றிருந்தான்.


ஷிவானி மெல்ல தலையை தூக்கி என்ன? என்பது போல் கேட்க, அக்னி கண்களை மூடித்திறந்தவன் அவளை சமாதானம் செய்யவும்,‌ பின் வேறு எதுவோ செய்யச்‌ சொல்லி சமிக்ஞை செய்ய அதை புரிந்துகொண்டவள், "ஆரா… என்னாச்சு டா? இங்க பாரு நிமுந்து என்னை பாரு…" என்று அவள் கன்னத்தைப் பிடித்து அவள் முகத்தை உயர்த்தி பார்க்க, ஆராத்யாவின் கண்கள் இரண்டும் கலங்கி இருந்தது.


"ஏய் ஆரா… என்னாச்சு? எதுக்கு அழற?" என்றவளை ஆராத்யா எதுவும் பேசாமல் மீண்டும் கட்டிக்கொள்ள, ஷிவானி மெல்ல அவளை அழைத்து வந்து காரில் அமரவைத்து, காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மெதுவாக, அவளுக்கு தண்ணீர் புகட்டிவிட ஆராத்யா மெல்ல இயல்புக்கு வந்தாள்.


"ம்ம்ம்... இப்ப சொல்லு என்னாச்சு? எதுக்கு தூண்கிட்ட தரையில் உக்காந்துட்டு இருந்தா? எதுக்கு அழுத?" என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்க,


"ஏய்!‌‌ ஏன்டி நீ வேற? ஒவ்வொரு கேள்வியா தான் கேளேன்.‌ நானே ஏற்கனவே பயந்து போய் இருக்கேன். இதுல நீயும் இப்டி கேள்வி கேட்டுப் பயக்க வைக்குறீயே" என்று வாடிய முகத்துடன் கொஞ்சுபவளைப் பார்த்து ஷிவானிக்கு நெஞ்சம் கனத்தது.


"சரி ஒவ்வொரு கேள்வியாவே கேக்குறேன். என்னாச்சு?" என்று அனைத்துக் கேள்விகளையும் ஒரே வார்த்தையில் ஷிவானி கேட்டுவிட, மடை திறந்த வெள்ளம் போல் ஆராத்யா நடந்த அனைத்தையும் தோழியிடம் ஒப்பித்து விட்டாள். அனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்த ஷிவானி,


"அவர் உன்னை விரும்புறாரா?" என்று கேட்க, ஆராத்யா மெதுவாக தலையை ‘ஆமாம்’ என்பது போல் ஆட்டி,‌ "அப்டி தான் தெரியுது" என்க, ஷிவானி அடுத்துக் கேட்ட, "நீ?" என்ற கேள்வியில் ஆராத்யா அதிர்ந்து விட்டாள்.


"ஏய் லூசு… என்ன கேக்குற நீ? என்ன பேசுறன்னு புரிஞ்சு தான் பேசுறீயா? என்று ஆராத்யா கோவத்தில் பொறிய,‌


"இப்ப நான் என்ன தப்பா கேட்டேன்னு நீ இப்டி கத்துறா? அவர் உன்னை விரும்புறாரான்னு கேட்டேன், ஆமாம்னு சொன்னா. அதான் உனக்கும் அப்டி எதுவும் அவரை புடிச்சிருக்கான்னு கேட்டேன், அதுக்கு ஏன் இப்டி டென்ஷன் ஆகுறா நீயி? என்று சாதாரணமாக கேட்ட, ஷிவானியை இப்போது இன்னும் பலமாக முறைத்தாள் ஆராத்யா.


"ஏய் பைத்தியமே… எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுடி… அது தெரிஞ்சும், நீ இப்டி கேட்ட டென்ஷன் ஆகாம, வேற என்ன பண்ணுவாங்கலாம்?"


"லிசன் மை டியர் ஆரா… உனக்கு கல்யாணம் ஆகிடுச்சின்னு உனக்கும், உன் வீட்டுக்கும் மட்டும் தான் தெரியும். வேற யாருக்கும் இப்ப வரை தெரியாது.


அதுவும் உங்க அப்பா சாகுறதுக்குள்ள கல்யாணத்தை பாக்கணும்னு சொன்னதாலா நடந்த ஒரு இன்சிடென்ட் தான்‌ அது, தட்ஸ் ஆல்… இன்பேக்ட் நீ சொல்ற அந்த சோ கால்டு கல்யாணம் சட்டப்படி ரிஜிஸ்டர் கூட ஆகல.


சோ இப்பவும் நீ சிங்கில் தான். அதனால உனக்கு புடிச்ச மாதிரி உன் வாழ்க்கையை அமைச்சிக்க இப்பவும் உனக்கு சான்ஸ், சாய்ஸ் ரெண்டுமே இருக்கு" என்றவளை, என்ன சொல்லி திட்டுவது என்று ஆராத்யாவுக்கு புரியவில்லை.


"நீ உன் வாழ்க்கையை பாதி நாள் யூ.எஸ் லயே வாழ்ந்துட்ட ஷிவி, அதான் உனக்கு நான் சொல்றது புரியலை" என்று‌‌ ஆற்றாமையாகச் சொல்ல, அவளைத் திருப்பிப் பார்த்து இழுத்து மூச்சு விட்ட ஷிவானி,


"நீ ஈஸ்வர் கூட…" என்று‌ ஆரம்பித்தவள் சற்று பொறுத்து, "நீ உன் ஆதிமாமா கூட சேர்ந்து வாழணும்னு ஆசப்படுறீயா?"‌ என்று கேட்க, ஆராத்யாவுக்கு 'அய்யோ!' என்றிருந்தது.


"ஏய்... உனக்கு என்ன தான் டி ஆச்சு?" என்று கத்த, அவள் முகத்திற்கு முன் கையை நீட்டியவள், "கேட்ட கேள்விக்கு பதில்?" என்று வீம்பாக கேட்க, ஆராத்யா ஒரு வார்த்தையில் "ஆமாம்" என்ற அடுத்த நொடி, "ஏன்?" என்று ஷிவானி கேட்ட கேள்வியில் ஆராத்யா அதிர்ந்துவிட்டாள்.


"ஏன்னு கேட்ட என்னடி அர்த்தம்? வீ ஆர் மேரிட்,‌ ஹி இஸ் மை" எனும்போதே அவளை நிறுத்திய ஷிவானி, "எஸ் யூ ஆர் மேரிட், சோ அதுக்காக தான் ஈஸ்வர் கூட சேரந்து வாழணும்னு யோசிக்குற ரைட்…" என்ற ஷிவானியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று விளங்காமல் ஆராத்யா மேலும் கீழும் தலையை ஆட்டி வைக்க,


"சோ, கல்யாணம் ஆகிடுச்சு, அதனால சேர்ந்து வாழ்ந்தே ஆகணும்ன்ற காட்டாயம் உனக்கு, அப்டி தான ஆரா?" என்று அவளைத் தெளிவாகக் குழப்ப,‌ தோழியின் கேள்வி ஆராவுக்கு சத்தியமாகப் புரியவில்லை.


"ஷிவி சத்தியமா நீ என்ன கேக்குற? இல்ல… என்ன சொல்ல வரேன்னு எனக்கு சுத்தமா புரியல?‌" என்று அப்பாவியாகக் கேட்ட ஆராத்யாவை அழுத்தமாகப் பார்த்த ஷிவானி,‌ "உனக்கு உன் மாமாவை பிடிக்குமா? என்று‌ கேட்க, சட்டென்று எதையும் யோசிக்காமல், "ரொம்ப" என்றாள் ஆராத்யா.


"அவர் என்ன சொன்னாலும் கேப்பியா நீ? என்க, அதற்கும் பட்டென "ஆமாம், அவருக்கு சின்ன வயசிலிருந்து நான்னா அவளோ பிரியம். அப்பா,‌ அம்மாக்கு அடுத்து எனக்கு ஆதிமாமாவை தான் ரொம்ப புடிக்கும். என்னை அப்டி பாத்துப்பாரு, ஹீ இஸ் சோ ஸ்வீட். அவருக்கு எப்பவும் நான் தான் ஃபர்ஸ்ட் பிரையரிடி தெரியுமா? " என்று அவள் பெருமையாகச் சொல்ல, "அப்ப உனக்கு?" என்று அடுத்த கேள்வியை கேட்டாள் ஷிவானி.


"என்ன…?"


"இல்ல ஈஸ்வர் லைஃப்ல உனக்கு தான் ஃபர்ஸ்ட் பிரையரிடின்னு சொன்னீயே… அப்ப உனக்கு?‌ உன்னோட லைஃப்ல அவர் யாரு? அவருக்கு என்ன இடம்?"


"ஏய் என்னடி கேள்வி இது? இப்ப அவர் தான்டி என்னோட‌ லைஃப்பே" என்றவளை அழுத்தமாக பார்த்த ஷிவானி, "டூ யூ லவ் ஆதி?" என்று கேட்க ஆராத்யாவிடம் பதில் இல்லை.


"ம்ஹீம்…" என்று நக்கலாக சிரித்த ஷிவானி, "இத தான்டி‌… நான்‌ இவ்ளோ நேரம் உனக்கு புரிய வைக்க ட்ரை பணணிட்டு இருக்கேன். உன் மாமாவை புடிக்குமான்னு கேக்கும் போது சட்டுன்னு ரொம்பன்னு சொல்ல முடிஞ்ச உன்னால, அவரை லவ் பண்றீயான்னு கேக்கும் போது ஆமான்னு சொல்ல முடியலைப் பாத்தியா?… இதை தான் நான் சொல்ல வந்தேன்.


எனக்கு புரிஞ்ச வரை உனக்கு ஈஸ்வர் மேல நிறைய அன்பு இருக்கு, கண்மூடித்தனமான பாசம் இருக்கு, அவனுக்காக உயிரை கொடுக்க சொன்ன கூட ஏன்? எதுக்குன்னு கேக்காம குடுப்ப. பட், லவ்?! அது இல்லையே உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல…" என்ற ஷிவானியை மெதுவாக நிமிரந்து பார்த்த‌‌ ஆரா, "மாமா என்னை லவ் பண்றாரு ஷிவி.." என்று செல்ல,


"ம்ஹும்,‌ ஐ நோ ஆரா, பட் நான் கேக்குறது நீ ஈஸ்வரை லவ் பண்றீயான்னு தான்?"


"எனக்கு சொல்ல தெரியல ஷிவி. சின்ன பிள்ளையில் இருந்து ஒன்னாவே வளர்ந்தோம். ஒரே வீட்ல ஒன்னா விளையாடி இருக்கோம்‌. ஒரே தட்டில் சாப்டு இருக்கோம், ஒன்னா தூங்கி இருக்கோம். ஏன்‌ சின்ன வயசில் எத்தனையோ தடவை ஆதிமாமா என்னை குளிப்பாட்டி விட்டு டிரஸ் மாத்திவிடுவார்னு‌ அம்மா சொல்லுவாங்க…‌ சின்னதிலேயே அவருக்கு நான், எனக்கு அவர்னு முடிவு பண்ணிட்டாங்க. அதனாலயோ? இல்ல ஒன்னாவே வளர்ந்தாலயோ? என்னமோ… எனக்கு அவர் மேல எந்த சலனமும் வர்ல ஷிவி, இதுவரை அவர்கிட்ட எனக்கு வெக்கமோ கூச்சமோ கூட வந்தது இல்ல,‌ இவ்ளோ ஏன்‌ எனக்கு பீரியட்ஸ் இருக்கும் போது எந்த தயக்கமும் இல்லாம அவர்கிட்ட சானிடரி பேட் வேணும்னு வாங்கித்தரச் சொல்லி கூட கேட்டிருக்கேன் தெரியுமா? எனக்கு அவரை வேற ஆளா‌ பாக்க தோணல ஷிவி,‌ எல்லாத்துக்கும் மேல நவ் வீ ஆர் கப்பிள்ஸ்,‌ இதுக்கு மேல என்ன‌ வேணும்?" என்றவளை பார்த்துச் சிரித்த ஷிவானி,


"அஃப்கோர்ஸ் உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு… அதை நான் மறுக்கல, பட் அட் தீ சேம் டைம்…‌ நீ கல்யாணம் செய்துக்கிட்டவர் மேல உனக்கு ஸ்பெஷல் ஃபீலிங் இருக்கணும் இல்ல ஆரா? தட்ஸ் மேக்ஸ் லைஃப் மோர் மீனிங்ஃபுல்.‌ அப்டி ஒன்னு உன் மாமா மேல உனக்கு இருக்கான்னு தான் கேக்குறேன். அப்டி இல்லாத பட்சத்தில்,‌ உன்னை‌ புடிக்கிற‌,‌‌ உனக்கும் புடிக்கிற வேற ஒரு‌ ஆள்‌ மேல அந்த ஸ்பெஷல் ஃபீலிங் வர்லாம் இல்ல? அப்டி வரும் பட்சத்தில் நீ அவரையே…" எனும் போதே‌


"ஸ்டாப் இட் ஷிவி…" என்ற ஆராத்யாவின் கோபக் குரலில் ஷிவி பேச வந்தது தடைப்பட,‌ திரும்பி ஆராத்யா முகத்தைப் பார்க்க அவள் முகம், கோபத்தில் அக்னியாக ஜொலித்துக் கொண்டு இருந்தது.


"உன்னால எப்டி டி என்கிட்ட இந்த மாதிரி ஒரு வார்த்தை சொல்ல முடிஞ்சது ஷிவி? ச்சீ… நீ என்னை அவளோ சீப்பாவ நினைச்சிட்டு இருக்க? என்னை பொருத்தவரை என்‌ வாழ்க்கையில் ஒரே ஒருத்தருக்கு தான் இடம். அது என்‌ புருஷனுக்கு மட்டும் தான். காதலும் அவரோட தான்… கல்யாணமும் அவர் கூட தான்.‌ எல்லாரும் காதலிச்சு கல்யாணம் செய்வாங்க, ஆனா என்ன? எனக்கு முதல்லயே கல்யாணம் முடிஞ்சு போச்சு, சோ வாட்?


நான் என் புருஷனை காதலிச்சிட்டு போறேன். இப்ப வரை ஆதிமாமா மேல எனக்கு காதல் வர்ல… அவ்ளோ தானா? வரவே வராதுன்னு நான் சொன்னானா? இனிமே வரும்…" என்று ரோஷமாக சொன்னவள், கார் கதவை பார்த்தபடி முகத்தை திருப்பிக் கொள்ள, ஷிவானி குனிந்து தன் கைப்பேசியை பார்த்தாள்.


ஆராத்யாவும்‌ ஷிவானியும் பேசியதை ஆதி முதல் அந்தம் வரை கைபேசியில் கேட்டுக் கொண்டிருந்த அக்னி, ஆராத்யா கடைசியாகப் பேசிய வார்த்தைகளில் கடுப்பானவன் தொடர்பைத் துண்டித்து இருந்தான். அதை பார்த்து இழுத்து மூச்சு விட்ட ஷிவானி,


"எது எப்டி நடந்தாலும் எனக்கு கவலை இல்ல ஆரா, நான் நெனச்சது நடந்தே ஆகணும், அது போதும் எனக்கு" என்றவளை ஆராத்யா யோசனையாகப் பார்க்க, "எனக்கு நீ‌ எப்பவும் சந்தோஷமா‌‌ இருக்கணும், அதுதான் வேணும்" என்றவளின் அன்பில் கரைந்த ஆராத்யா,‌ "ஐ நோ ஷிவி…‌‌ யு ஆல்வேஸ் கேர் பார் மீ" என்றபடி அவளை அணைத்துக்கொள்ள, காரை கிளப்பிய ஷிவானி,


"இங்க நடந்தது, அந்த ஆள் உன் பின்னாடி சுத்துறது எதுவும் ஈஸ்வருக்கு தெரிய வேணாம் ஆரா… நீ இத அவன் கிட்ட சொன்ன ஈஸ்வர் கண்டிப்பா சும்மா இருக்க மாட்டான்… நீ சொல்றதை வச்சு பாத்தா அந்த ஆள்" என்றவள் நிறுத்தி அவர்‌ பேர் என்ன சொன்ன?" என்று கேட்க, ஆராத்யா பயத்தில் எச்சிலை விழுங்கியபடியே மெல்லிய குரலில், "அக்…‌ அக்னிதேவ்" என்று சொல்ல,


'ம்ம்ம்… இவ அவர் பேரச் சொல்லவே இப்டி பயந்து நடுங்குறா, இதுல அக்னி இவளை வச்சி போட்டிருக்க ப்ளான் எல்லாம் தெரிஞ்சா இவ அவ்ளோ தான் போல இருக்கே?' என்று உள்ளுக்குள் நினைத்தவள், "ம்ம்ம்… அந்த அக்னியும் லேசுபட்ட ஆள் மாதிரி தெரியல, ஈஸ்வர் பத்தி கேக்கவே வேணாம்… கல்யாணத்தைப் பக்கத்தில் வச்சிட்டு தேவையில்லாத பிரச்சனை எல்லாம், இப்ப வேணாம்"


"நீ சொல்றது கரெக்ட் தான் ஷிவி… அந்த ஆளுக்கு என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சு தான் இருக்கு… எனக்கு அடுத்த மாசம் நடக்கும் கல்யாணம் உட்பட… எல்லாம் தெரிஞ்சு தான் என் பின்னாடி வந்துட்டு இருக்கான்… இத மாமாகிட்ட சொன்னா, கண்டிப்பா பெரிய பிரச்சனை ஆகும். சோ, நீ சொன்ன மாதிரி இத மாமாகிட்ட சொல்லாம இருக்குறது தான் நல்லது." என்றவள் வார்த்தையில் திருப்தியுற்ற ஷிவானியின் கையில் கார் வேகம் எடுக்க,‌ "ஆனா, அந்த ஆள் எப்டி சொல்லி வச்ச மாதிரி, நான் போற இடத்துக்கு எல்லாம் கரெக்ட்டா வரான்னு தான் ஷிவி, எனக்கு புரிலய?" என்ற ஆராத்யாவின் கேள்வியில் அவள்‌ மொத்த உடலும் அதிர்ந்து அடங்கியது.


"ம்ம்ம் வேற எப்டி? உன்னை இந்த அளவு வெறித்தனமா லவ் பண்ற ஆளு, உன்னோட டெய்லி ஆக்டிவிட்டீஸ் எல்லாம் தெரிஞ்சிக்க ஆள் யாரையும் வச்சிருப்பாரு…" என்றதும், "ம்ம்ம்… அதுவும் சரிதான்." என்று ஆராத்யா அமைதியாகி விட, ஷிவானி உள்ளுக்குள், 'எஸ்கேப்டா சாமி' என்று கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டாள்.


தன் வீட்டு மொட்டை மாடியில் நின்று நிலாவை வெறித்துக் கொண்டிருந்த ஆராத்யா எண்ணம் முழுதும் அக்னியை சுற்றியே இருந்தது.


"ஏன் அந்த ஆள் என்னையே சுத்தி சுத்தி வராரு? அவருக்கு என்ன வேற பொண்ணா கிடைக்கல? பாக்க நல்லா தானா இருக்காரு, வேற அவருக்கு பொருந்துற மாதிரி பொண்ணு இந்த ஊர்ல இல்லயா என்ன? எல்லாத்தையும் விட்டுட்டு கல்யாணமான என் பின்னாடி லவ் லவ்வுன்னு வந்து உயிரை வாங்குறாரே…


என்ன லவ்வு இழவோ? சும்மா ஒரு முறை கோயில்ல அவர் கைய தெரியாம புடிச்சிட்டேன், அதுக்காக காலம் முழுக்க நீ தான் என் கையை புடிக்கணும்னு சினிமால வர்ர மாதிரி அடம்புடிக்குறாரே?" என்று மனதில் புலம்பியவளின் நினைவுகள், முதல் முறையாக அக்னியை கோயில் சந்தித்த நாளுக்கு பயணித்தது.