விழி வழி காதல் நுழைந்ததடி 1

விழி 1



அழகாய் விடிந்த காலைப் பொழுதில், வழியில் வண்ண வண்ணமாகப் பூத்திருந்த அழகிய மலர்களைக் கூட ரசிக்காமல், அந்த எட்டு மாடிக் கட்டிடத்தின் உள்ளே வேகமாக நுழைந்தான் ஆதர்ஷன் விஜயராகவன். 


இன்றைய தேதியில், இந்தியாவில் பல தொழில்களில் முதலிடத்தில் இருக்கும் வி.வி இண்டஸ்ட்ரீஸ் சேர்மன் வீரராகவனின் பேரன். தன் தாத்தா உருவாக்கிய தொழிலை, ஆதர்ஷின் தந்தை உச்சத்தில் நிறுத்தி இருந்தார். அதை இன்று வரை முதல் இடத்திலேயே வைத்திருக்கும் இளம் தொழிலதிபன் ஆதர்ஷ். 


ஐந்தடி ஒன்பது அங்குல உயரத்தில், வசீகரிக்கும் கோதுமை நிறத்தில் பார்க்கும் அனைவரையும் கவரும் ஆண்மகன். தினமும் செய்யும் உடற்பயிற்சியில் வடித்து வைத்த கற்சிலை போன்றிருக்கும் அவன் தேகத்தை அவன் அணிந்திருந்த கறுப்பு நிறச் சட்டை இன்னும் கம்பீரமாகக் காட்ட, காற்றில் அலைந்தாடிய கேசத்தைத் தன் இடது கைகொண்டு கோதியபடியே வந்த அந்த முப்பது வயது அழகனைப் பார்த்து மரியாதையாக அங்கிருந்தவர்கள் எழுந்து நின்று, "குட் மார்னிங் சார்" என்று சொல்லத் தலையாட்டி அவர்களின் காலை வணக்கத்தை ஏற்றவன், அவனைப் பார்த்து ஆசையாகப் புன்னகைத்த பெண்களைப் பார்த்ததும் கண்களில் அத்தனை இறுக்கம். அவனிடம் வேலை செய்பவர்களை அவன் மிரட்டவோ, திட்டவோ தேவையில்லை. அவனது அழுத்தமாக பார்வை ஒன்று போதும், அனைவரையும் அவனுக்கு அடிபணிந்து நடக்க வைக்க… அத்தனை ஆளுமை பொருந்திய கண்கள் அவனுடையது. என்னதான் ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் குடும்பத் தொழிலைத் தன் கையில் எடுத்திருந்தாலும், ஆதர்ஷ் பொறுப்பில் அந்தத் தொழில் வந்த பிறகு, அவனின் திறமை மற்றும் புத்திசாலித்தனத்தில் அந்தத் தொழில் அடுத்த கட்டத்திற்குச் சென்றது என்றால் அது மிகையாகாது. 


அன்று தொழில் நுட்பத் துறையில் ஆதர்ஷ் தொடங்க இருக்கும் புதிய முயற்சியைப் பற்றி முக்கியமான மீட்டிங் இருந்ததால், அதற்காகச் சீக்கிரமாக அலுவலகம் வந்திருந்தான் ஆதர்ஷ்.


அந்தக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் இருக்கும், மிகப்பெரிய மீட்டிங் ஹாலுக்குச் சென்று, எல்லா ஏற்பாடுகளையும் ஒருமுறை அலசிப் பார்த்தவனின் பார்வை, அனைத்து ஏற்பாடுகளும் கச்சிதமாகச் செய்திருப்பதைக் கண்டு அவனது இதழ்கள், அதைச் செய்து முடித்தவளை நினைத்து மெல்ல வளைந்தது. 


"ம்ம்ம் பெர்ஃபெக்ட்… எல்லாத்தையும் சூப்பரா ஆர்கனைஸ் பண்ணி இருக்கா…" என்று முணுமுணுத்தவன், அவளது கேபின் அறைக்குச் சென்று பார்க்க, அந்த இடம் காலியாக இருந்தது. 


"எங்க ஆளைக் காணும்" என்று யோசித்தவன் அவள் அலைப்பேசிக்கு அழைக்க, அழைப்பு ஏற்கப்படவில்லை. அதுவரை இயல்பாக இருந்தவனின் கண்களில் அனல் தெறிக்கும் அளவு கோபம் நிறைந்து வழிந்தது. 


அவன் இங்கு கோபத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் போது, அந்தக் கோபத்தின் காரணகர்த்தாவோ ஐஸ்கிரீமைக் கண்மூடி ரசித்து ருசித்துக் கொண்டு இருந்தாள்.


தன்வி… இருபத்து நான்கு வயதுக் குமாரி அவள், ஆனாலும் மனதளவில் அவள் இன்னும் குழந்தை தான். நாலே முக்காலடி உயரத்திற்கு ஏற்ற மெல்லிய பூசினாற் போன்ற உடல்வாகு, கன்னங்கள் ரெண்டும் கொழுகொழுவெனப் பார்ப்பவரை ஒரு முறை கிள்ளி வைக்கத் தோன்றும், அழகிய குட்டி பொம்மை அவள். எப்பொழுதும் அழகாய்ச் சிரித்தபடி இருக்கும் இதழ்கள், கண்களில் அத்தனை அமைதி, அனல் தெறிக்கும் கோபத்தில் இருப்பவர் கூட, ஒரு முறை அவள் கண்களைப் பார்த்தால் அடுத்த நொடி கோபம் மறந்து சாந்தமாகி விடுவர். தொழிலில் ஆதர்ஷுக்குத் துணையாக இருப்பவள், அவனின் அனைத்து வேலைகளையும் செய்பவள், சுருக்கமாகச் சொன்னால் அவனின் நிழல் இவள். 


அந்த ஆஃபீஸ் கேன்டீனில் அமர்ந்தபடி கையில் இருந்த ஐஸ்கிரீமைக் கண்களை மூடி ரசித்துத் தின்று கொண்டிருந்தவள் தன் அலைபேசி அடித்ததைக் கூடக் கவனிக்காமல் ஐஸ்கிரீமிலேயே குறியாக இருக்க, "ஷிட்" என்று ஃபோனைத் தூக்கியடித்த ஆதர்ஷ், "மீட்டிங் இருக்குன்னு தெரியும்… எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸயும் பண்ணிட்டு, மீட்டிங் ஆரம்பிக்கும் நேரம் எங்க போய்த் தொலைஞ்சா இந்தப் பிசாசு? நானே வந்துட்டேன், இன்னும் இவளைக் காணும்." என்று பல்லைக் கடித்தவன் மறுபடியும் அவளுக்கு அழைத்தபடி நகர்ந்து சென்று அங்கிருந்த சிசிடிவி திரையைப் பார்க்க, அதைப் பார்த்தவன் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.


"வாட் நான்சென்ஸ்… இங்க முக்கியமான மீட்டிங் இருக்குது, ஆனா, இவ என்னடான்னா ஹாயா உட்கார்ந்து ஐஸ்கிரீமைத் தின்னுட்டு  இருக்கா… இவளை எல்லாம்…" என்று பல்லைக் கடித்தபடி தன் அறையை விட்டு வேகமாக வெளியே வந்தவன், "சார், போர்டு மெம்பர்ஸ் எல்லாம் வராங்க சார்." என்று அவன் பி.ஏ சொல்லவும், கண்களை இறுக்கி மூடித் திறந்தவன், "ம்ம்ம் ஐ ஆம் கம்மிங்" என்றபடி அவர்களை வரவேற்கச் சென்றான்.


மீட்டிங் ஹாலுக்கு உள்ளே வந்தவனின் பார்வை ஒரு முறை அந்த இடத்தைச் சுற்றி வட்டமிட, அங்கு அனைவரும் அமர்ந்திருந்தனர். அவனது பார்வை அவளின் இடத்தை நோக்கிச் செல்ல அவள் இன்னும் வந்திருக்கவில்லை.


"வரட்டும், இன்னைக்கு இருக்கு அவளுக்கு… அவளை முதல்ல வேலைய விட்டு விரட்டி விடுறேன்." என்று கடுகடுத்தபடி, அவன் திட்டத்தைப் பற்றிப் பேச வாய் திறக்கும் நேரம், கதவு திறக்கும் ஓசை கேட்டு அனைவரும் திரும்ப, அங்கு ஒரு கையில் மடிக்கணினியும், மறுகையில் அந்த மீட்டிங் தொடர்பான ஃபைலையும் பிடித்துக் கொண்டு சிரித்த முகமாக வந்து நின்றிருந்தாள் தன்வி.


அவள் உள்ளே வரவும் கடிகாரம் மணி பத்து என்று அடிக்கவும் சரியாக இருந்தது. 'அது..! தன்வி எப்பவும், எங்கயும் லேட்டா வரமாட்டா‌.‌.. ஷார்ப்பா கரெக்ட் டைமுக்கு இருக்க வேண்டிய இடத்தில் இருப்பா…' என்று நினைத்தபடி ஆதர்ஷைப் பார்க்க, அவனோ அவளைத் தீப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.


'அய்யோ! என்ன ஆச்சு இந்த பாஸ்க்கு? இவரு சாதாரணமாப் பார்த்தாலே வண்டி வண்டியாத் திட்டு விழும். இப்ப ரொம்ப அன்பா வேற பார்க்குறாரு… லாரி லாரியாத் திட்டு விழுமோ?' என்று மனதிற்குள் புலம்பியவள் வெளியில், "ஈஈஈஈஈ" என்று அவனைப் பார்த்து இளித்தபடியே அவன் அருகில் இருந்த சேரில் வந்து அமர்ந்தவள், "குட் மார்னிங் பாஸ், இன்னைக்கு ரொம்ப ஹாண்ட்ஸமா இருக்கீங்க." என்று சொன்னது தான், அவன் மூச்சுக் காற்றின் வெப்பம் அவள் முகத்தில் அடிக்க, 'அய்யோ காத்துல அனல் அளவுக்கு அதிகமா இருக்கு… பேசாம வாயை இழுத்து மூடிக்கோ தன்வி' என்று அறிவு சொன்னதைக் கேட்டு அவள் அமைதியாகி விட்டாள்.


ஆதர்ஷ் எழுந்து தன் எண்ணங்களைத் தெளிவாகவும் கம்பீரமாகவும் சொல்ல, அனைவருக்கும் அவன் யோசனை பிடித்திருந்தது. அதன் அடுத்த கட்டமாக செயல்முறை விளக்கத்தைக் கொடுக்க எழுந்தாள் தன்வி‌.


ஆதர்ஷ் பேசும் போது அனைவரையும் அவன் கம்பீரத்தால் கட்டிப் போட்டான் என்றால், தன்வியோ தன் இனிய  குரலில், அழகாகவும் தெளிவாகவும், யாருக்குள்ளும் எந்தக் கேள்வி எழுந்தாலும் அவர்கள் அதைக் கேட்கும் முன்னே அதன் விளக்கத்தைச் சொல்லி அனைவரையும் தன் ஆளுமை நிறைந்த நேர்த்தியான பேச்சினால் கட்டி வைத்தாள்.


அவள் பேசப் பேச ஆதர்ஷின் முகத்தில் மெல்லிய புன்னகை. அவனுக்கு உள்ளுக்குள் அத்தனை கர்வமாக இருந்தது. அவளின் இந்தப் பரிமாணம் அவளிடம் அவன் மிகவும் பிரம்மிக்கும் ஒன்று. அவள் குழந்தைத்தனம் எல்லாம் அவனிடம் மட்டும் தான். வேலை என்று வந்து விட்டால் அவள் வேகத்திற்கு ஈடு கொடுக்க யாராலும் முடியாது. சில சமயங்களில் ஆதர்ஷைவிட ஒரு படி முன்னால் நிற்பவளைப் பார்க்கும் போது ஆதர்ஷ் உள்ளுக்குள் வியந்துதான் போவான்.


ஆதர்ஷ் மற்றும் தன்வி ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தால் அது நூறு சதவீதம் வெற்றி தான். அது இப்போதும் தப்பாமல் நடந்து ஆதர்ஷின் புதிய திட்டத்தைத் தொடங்குவதற்கு ஒப்புதல் கிடைத்தது.


அனைவரும் ஆதர்ஷினைப் பாராட்டி விட்டுச் செல்ல, தன்வி அனைவரையும் கவனித்து அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு, ஆதர்ஷ் கவனிக்கும் முன் இது தான் சமயம் என்று அங்கிருந்து நகரப் பார்க்க, "தன்வி மேடம், ஆதர்ஷ் சார் உங்களை அவர் ரூம்ல வெய்ட் பண்ணச் சொன்னாரு" என்று ஒருவன் வந்து சொல்ல தன்வி அவனைத் திரும்பிப் பார்த்தவள், "நீ ரொம்ப நல்லா இருக்கணும். போ நான் போறேன்" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவள், திரும்பி ஆதர்ஷினைப் பார்க்க, அவனோ ஒற்றைப் புருவத்தை உயர்த்தி, 'தப்பிச்சு ஓடிப் போகப் பார்க்குறியா நீ… ஒழுங்காப் போய் என் ரூம்ல வெய்ட் பண்ணு… உனக்கு வந்து இருக்கு’ என்று கண்களில் அவளை மிரட்ட, அவள் தலையைத் தொங்கப் போட்டபடி ஆதர்ஷ் ரூமிற்குள் சென்றாள்.


கதவு திறக்கும் சத்தம் கேட்டு சட்டென எழுந்து நின்ற தன்வி கைகளைக் கட்டிக் கொண்டு நல்ல பிள்ளை போல் எழுந்து நிற்க, அவளை அழுத்தமாகப் பார்த்தபடியே தன் இருக்கையில் வந்து அமர்ந்தான் ஆதர்ஷ்.


"இன்னைக்கு மீட்டிங் இருக்குன்னு உனக்குத் தெரியும் இல்ல?" என்று கேட்க, அவள் டிங்கு டிங்கென்று மண்டையை ஆட்டினாள்.


"மீட்டிங்ல நீதான் பிரசன்டேஷன் கொடுக்கணும்னு தெரியும் இல்ல" என்று கேட்க அதற்கும் டிங்கு டிங்கு தான்.


"இது எவ்ளோ பெரிய ப்ராஜெக்ட்னு உனக்குத் தெரியும் இல்ல?" என்க மறுபடியும் அதே டிங் டிங்.


"ஏய் என்னடி… எது கேட்டாலும் பூம் பூம் மாடு மாதிரித் தலையை ஆட்டிட்டு இருக்க, ஒழுங்கா வாயைத் திறந்து பதில் சொல்லுடி. மீட்டிங் இருக்குன்னு தெரிஞ்சும் ஏன்டி லேட்டா வந்த?" என்று கோபமாகக் கேட்க, 


அவள் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்து, "நான் எங்க லேட்டா வந்தேன் பாஸ்…? நான் ஷார்ப்பா டைம்க்கு வந்தேன், நான் கால் எடுத்து வைக்கும் போது தான் டைம் பத்தடிச்சுது. நீங்களும் தான் பார்த்தீங்க இல்ல" என்று பாவம் போல் சொல்ல, ஆதர்ஷ் அவளை முறைத்தபடி அவள் அருகில் வந்தவன் அவள் காதைப் பிடித்து நன்கு திருகியபடி, "அடிங்கு… நேத்தே மீட்டிங் இருக்குது சீக்கிரம் வான்னு சொன்னேன் தானே..‌. அப்புறம் எதுக்குடி லேட்டா வந்த? நான் காலையில ஆபீஸ் கிளம்பும்போது தான் நீயும் கிளம்பிப் போன, வழியில் கூட உன்னைப் பாத்தேனே நான். கார்ல வந்த நானே சீக்கிரம் வந்துட்டேன். எப்பவும் டூ வீலர்ல சந்து பொந்தெல்லாம் பூந்து எனக்கு முன்னே ஆபீஸ் வர்ற நீ,  இன்னைக்கு மட்டும் எப்படி‌ மீட்டிங்க்கு லேட்டா வந்த?" என்று காரணம் தெரிந்து கொண்டே அவன் கேட்க, அவ்வளவு நேரம் அவன் திருகியதில் காது வலி தாங்காமல் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தவள் சட்டென்று அசையாமல் நின்று, அவனது முகத்தைப் பார்த்து திருதிருவென முழித்தாள்.


"ஏய்! உன்னைத் தான்டி கேட்டுட்டு இருக்கேன், பதில் சொல்லு" என்று கத்த,


"அது… அதுவந்து பாஸ்…" என்று அவள் இழுக்க, டேபிளில் இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து அவளைப் பார்த்து ஓங்கிய ஆதர்ஷ், "இப்ப சொல்றியா இல்லியா?" என்று கர்ஜிக்க, "அது… அது நான் சீக்கிரம் வந்துட்டேன் தான். ஆனா, கீழே ஐஸ்… ஐஸ்கிரீம் பார்த்தேன், அதான்…" என்றவள் குரல் தாழ்ந்து விட, "ஐஸ்கிரீம் வாங்கித் தின்னுட்டு மேடம் உலகத்தையே மறந்துட்டீங்க இல்ல" என்று கேட்க அவள் கண்களைச் சிமிட்டியபடி, "ரொம்ப நாள் கழிச்சு" என்று தொடங்கும் போதே, "ஷட்-அப்" என்று கத்திய ஆதர்ஷ், 


"ஏற்கனவே உனக்குப் படிச்சுப் படிச்சு சொல்லி இருக்கேன் தன்வி. இந்த மாதிரிச் சின்னப் புள்ளத் தனமா நடந்துக்காதேன்னு, நீ ஒண்ணும் இன்னும் குழந்தை இல்லடி. அது உன் மரமண்டைக்குப் புரியுதா? இல்லையா?" என்று அவள் நெற்றிப் பொட்டில் தட்டிச் சொன்னவன், "மேல முக்கியமான மீட்டிங்கை வச்சுட்டு, கீழ நின்னு ஐஸ்கிரீமை முழுங்கிட்டு இருக்க, அது கூடப் பரவாயில்ல, உன் திமிரு, நான் உனக்கு ஃபோன் பண்றேன். அதைக் கூட கவனிக்காம ஐஸ்கிரீமைச் சப்புக் கொட்டி நக்கிட்டு இருக்க நீ… உன்னை எல்லாம் என்னடி பண்றது.? மீட்டிங் வந்த போர்டு மெம்பர்ஸ் உன்னைப் பார்த்திருந்தால் என்ன நினைப்பாங்க சொல்லு? சரி, இப்ப ஏன் லேட்டுன்னு நான் கேட்டேன் இல்ல… பொய்க்காவது வேற பொருத்தமான ரீசன் சொல்லக் கூடாது. என்கிட்டயே ஐஸ்கிரீம் தின்னுட்டு இருந்தேன்னு வெக்கமே இல்லாமச் சொல்ற… நீ எல்லாம் என்ன டிஸைன்டி" என்று அவன் திட்டிக் கொண்டே போக, அவள் இதழ்கள் பிதுங்கி முகம் சுருங்கி, கண்கள் கலங்கிவிட, லேசான விசும்பல் சத்தம் கேட்டு அவள் முகம் பார்த்த ஆதர்ஷ் பதறி விட்டான்.


"ஏய் ஏய் ஏன்டி அழற? அழாதடி…" என்று அவன் கைகுட்டையை எடுத்து அவள் கண்ணீரைத் துடைத்து விட்டவன், "இப்ப எதுக்குடி அழற?" என்று அவளை முறைத்துப் பார்க்க மீண்டும், "ஓஓஓஓ…" என்று அழ ஆரம்பித்தவள், "நீங்க திட்டிட்டே இருக்கீங்க… நான் ஒண்ணும் லேட்டா வரல, ஒரே‌ ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டது தப்பா…? நான் வேலையை விட்டுப் போறேன்" என்று மீண்டும் இதழ் பிதுக்கி அழ, குழந்தை போல் இதழ் பிதுக்கி அழும் அவளைப் பார்க்க அவனுக்குச் சிரிப்பு தான் வந்தது. 


"சரி சரி, இனிமே திட்ட மாட்டேன். கண்ணைத் தொட" என்று சொல்லியும் அவள் விசும்பிக் கொண்டே இருக்க, அவன் இதழ் பிரித்துச் சிரித்தபடி, "நீ சிரிச்சா ஒண்ணு தருவேன்" என்று சொல்ல, முகத்தைக் கோபமாக வைக்கிறேன் என்ற பெயரில் புருவத்தைச் சுருக்கி அவள் பார்க்க, அதைப் பார்த்தவனுக்கு மேலும் சிரிப்பு தான் வந்தது. 'இவளுக்கு ஒழுங்காக் கோவம் கூட வர மாட்டேங்குது.' என்று நினைத்தவன், "என்ன உனக்கு வேணுமா? வேணாமா?" என்றபடி அவன் கோட் பக்கெட்டுக்குள் இருந்து சாக்லேட்டை எடுக்க, அவள் கண்கள் சட்டென விரிந்து கொண்டது.


"ஐஐஐ எனக்குப் புடிச்ச சாக்லெட்" என்று குதித்தவள், "குடுங்க பாஸ், குடுங்க குடுங்க" என்று அவனை நச்சரிக்க, "பிராண்டி வைக்காதடி இந்தா" என்று அவளுக்குப் பிடித்த சாக்லேட்டைக் கொடுத்தான்.


அதை ஆசையாக வாங்கிக் கொண்டவள், "தேங்க்ஸ் பாஸ்" என்று வாய் கொள்ளாப் புன்னகையுடன் சொல்ல, ஆதர்ஷின் இதழ்களும் விரிந்து கொண்டது.


"சரி ஓகே, இதுதான் லாஸ்ட், இனிமே நீ ஐஸ்கிரீம் சாப்பிடக் கூடாது ஓகே." என்று அழுத்தமாகச் சொல்ல, "சரி, சாப்பிட மாட்டேன்" என்றாள் முகம் வாடியபடி. 


"அப்ப ப்ராமிஸ் பண்ணு" என்று அவன் கையை நீட்ட, அவள் கண்களை உருட்டி உருட்டி அவனைப் பார்த்தவள், "அதான் சாப்பிட மாட்டேன்னு சொல்றனே, அப்புறம் எதுக்குப் ப்ராமிஸ் எல்லாம்" என்று சிணுங்கினாள்.


"உன்னை எல்லாம் நம்ப முடியாது, அதான் ப்ராமிஸ் கேக்குறேன். எனக்குத் தெரியும், நீ ப்ராமிஸ் பண்ணா அதை மீற மாட்டேன்னு, சோ ப்ராமிஸ் பண்ணு" என்று கண்டிப்பாகச் சொல்ல, வேறு வழி இல்லாமல் அவளும் சத்தியம் செய்தாள்.


"இங்கப் பாருடி குட்டிப் பாப்பா… உனக்கு ஸ்வீட் ரொம்பப் புடிக்கும்னு எனக்குத் தெரியும். பட், என்ன பண்றது? ஐஸ்கிரீம், சாக்லேட் சாப்பிட்டா உனக்கு ஒத்துக்குறது இல்ல. சில சாக்லேட் தவிர வேற எதுவும் சாப்பிட்டா உனக்கு அலர்ஜி ஆகும். அதான் சொல்றேன்… கொஞ்சம் ஹெல்த்தையும் பாரு. நான் தான் உனக்கு அடிக்கடி சாக்லேட் வாங்கித் தரேன் இல்ல, சோ வாயைக் கட்டி வை" என்று சொன்னவன் வார்த்தையில் இருந்த அக்கறை அவளைச் சரி என்று தலையாட்ட வைத்தது.


ஊருக்குள் கோபக்காரன், சிடு மூஞ்சி, ரோபோ என்றெல்லாம் அழைக்கப்படும் ஆதர்ஷ், தன்விக்கு மட்டும் எப்போது ஒரு அன்பான அன்பன் தான். அவன் அதிகம் திட்டுவதும் கோபப்படுவதும் அவளிடம் தான், அதே சமயம் அவன் அதிகம் நம்புவதும் நேசிப்பதும் அவளைத்தான். அவனைப் பொறுத்தவரை அவள் அவனின் அன்பான குட்டிப் பாப்பா. 


தன்வியும் அவனைப் போல் தான், அவளின் இந்தக் குழந்தைத்தனம், குறும்பு, அதிகாரம் எல்லாம் ஆதர்ஷ் ஒருவனிடம் மட்டும் தான். மற்ற அனைவருக்கும் அவள் ஒரு திறமையான நிர்வாகி, நேர்த்தியானவள். எந்த அளவுக்கு அமைதியானவளோ, அதே அளவுக்கு ஆளுமை உடையவள் அவள். ஊரே நடுங்கும் ஆதர்ஷினைத் தன் தூய்மையான அன்பில் கட்டி வைத்திருக்கும் அன்பானவள் தன்வி.