விழி வழி காதல் நுழைந்ததடி 2

விழி 2


அன்று இரவு வீடு திரும்பிய ஆதர்ஷ், குளித்து முடித்து உணவு மேசைக்கு வந்தவன், அங்கு அமர்ந்திருந்த அவன் தாத்தா வீரராகவனைப் பார்த்து, "ஹாய் தாத்தா… இன்னைக்கு என்ன டின்னர், செம்ம பசி?" என்றவன் மூடியிருந்த பாத்திரங்களைத் திறந்து பார்க்க, அங்கு எல்லாப் பாத்திரமும் காலியாக இருந்தது. 


ஆதர்ஷ் பாத்திரங்களைப் பார்த்தவன், நிமிர்ந்து தன் தாத்தாவின் முகம் பார்க்க அவர் முகமோ உர்ரென்று இருந்தது. "ம்ம்ம்… வழக்கம் போல வத்தி வச்சிட்டாளா, அந்தக் குட்டிப் பிசாசு" என்று முணுமுணுத்தவன், "தாத்தா அவ" என்று ஆரம்பிக்கும் முன், 


"போதும்டா, நீ எதுவும் சொல்ல வேணாம். தன்வி எல்லாத்தையும் சொல்லிட்டா… ஏன்டா எப்பப் பாரு, அந்தக் குழந்தையைத் திட்டிட்டே இருக்க, பாவம், அவ எப்படி அழுதா தெரியுமா? உனக்கு அவளை வேலைக்கு வச்சிக்க இஷ்டம் இல்லாட்டி வெளிப்படையாச் சொல்லிடு, நான் அவளுக்கு வேற வேலை வாங்கித் தரேன், இல்லாட்டி புது பிசினஸ் கூட ஸ்டார்ட் பண்ணித் தரேன்" என்றவரை முறைத்த ஆதர்ஷ், 


"அச்சோ தாத்தா, என்ன நடந்துச்சின்னு என்கிட்ட ஒரு வார்த்தை கூடக் கேக்காம, அவ சொன்னதை மட்டும் வச்சி என்னைத் திட்டிட்டு இருக்கீங்க. அவளை வேலைக்கு வைக்கப் புடிக்கலன்னு நான் எப்பச் சொன்னேன்? இன்பேக்ட் அவ என் ஆபீஸ் வந்த பிறகு தான் நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன். அது புரியாம வேற வேலை பார்க்குறாராம் இவரு. எங்க என்னை மீறி அவளை எங்கயும் அனுப்பித் தான் பாருங்களேன்." என்று கத்தியவனை முறைத்துப் பார்த்த தாத்தா, "அப்புறம் எதுக்குடா கண்ல தண்ணி வர அளவுக்கு புள்ளையத் திட்டின?" என்று கேட்க,


"நான் திட்டுனேன்னு சொன்ன அந்த வாலு, ஏன் திட்டுனேன்னு சொல்லலையா?" என்றவன், வீட்டின் நாலாபுறமும் அவளைத் தேடியவன்,  "ஏய் வாலு எங்கடி இருக்க, தாத்தா கிட்ட என்னைப் போட்டுக் கொடுத்திட்டு, நான் திட்டு வாங்குறதை ஒளிஞ்சு நின்னு வேடிக்கைப் பார்க்குறியா? எங்கடி இருக்க?" என்று சத்தமாக அவளை அழைக்க, தாத்தா பார்வையைத் தாழ்த்தி, உணவு மேசைக்குக் கீழே பார்த்தார்.


அங்கு ஆப்பிளைக் கடித்துத் தின்றபடி, "உஷ்…" என்று வாயில் விரல் வைத்து, "இங்க தான் இருக்கேன்னு சொல்லாதீங்க தாத்தா" என்று தாத்தாவுக்கு சிக்னல் செய்தாள் அந்தச் செல்லப் பிசாசு.


"ஏய் எங்கடி இருக்க நீ? இப்ப நீயா இங்க வரியா, இல்ல நான் வரட்டுமா? நீயா வந்தா உனக்கு நல்லது, நான் கண்டு புடிச்சேன் அவ்ளோதான்" என்று மிரட்டும் தொனியில் சொல்ல ஆப்பிளை வாயில் கவ்வியபடி திருதிருவென முழித்தவள், 'பாஸ் ரொம்ப டென்ஷன் ஆகிட்டாரு போல, மாட்டுனோம் சங்கு தான்… நைசா ஓடிடுவோம்' என்று நினைத்தவள், மெல்ல மண்டியிட்டுத் தவழ்ந்து அங்கிருந்து நகரப் பார்க்க, அவள் காதைப் பிடித்து திருகியபடி அவளைப் பிடித்து வெளியில் இழுத்தான் ஆதர்ஷ்.


"ஏன்டி… செய்யறதெல்லாம் செஞ்சிட்டு, இங்க வந்து என்னைப் போட்டுக் கொடுத்துட்டியா நீ?" என்று அவள் தலையில் நறுக்கென்று கொட்டிவிட,


அவளோ, "பாருங்க தாத்தா, உங்க முன்னாடியே எப்படி அடிக்கிறாரு. அப்ப ஆபீஸ்ல வச்சு என்னை எப்படித் திட்டி இருப்பாரு, நீங்களே யோசிச்சுப் பாருங்க" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, "இது உலக நடிப்புடா சாமி" என்று வாயில் கை வைத்துக் கொண்டான் ஆதர்ஷ்.


"டேய்… என் முன்னாடியே அவளை அடிக்கறயா நீ…" என்று அதட்ட, "அய்யோ தாத்தா, நான் சும்மா லைட்டா தான் கொட்டினேன். அவ நடிக்கிறா" என்று சொன்னதும், "பாருங்க தாத்தா, என்னைப் போய் நடிக்கிறேன்னு சொல்றாரு… போங்க நான் சோகமாப் போறேன்" என்று வராத கண்ணீரைத் துடைத்தபடி அங்கிருந்து ஓட, "ஏய் பிசாசு, பசிக்குதுடி… சாப்பாடு எடுத்து வந்து வச்சிட்டுப் போ" என்று ஆதர்ஷ் சொல்லி முடிக்கும் முன் உணவோடு அவன் முன் வந்து நின்றாள் தன்வி.


"உங்களுக்குப் புடிச்ச டிபன் தான் பண்ணி இருக்கேன். நல்லா ஃபுல்லா சாப்பிடுங்க, நான் போறேன்" என்று நாக்கைத் துருத்தி ஒழுங்கு காட்டிவிட்டு அங்கிருந்து ஓட, "ஏய் குட்டிப் பிசாசு… இன்னைக்கு கமலா அம்மா நைட் வீட்டுக்குப் போகணும்னு சொன்னாங்க, நீ இன்னைக்கு அவுட் ஹவுஸ்ல தங்க வேண்டாம், இங்கயே கெஸ்ட் ரூம்ல தூங்கு" என்றவனை முறைத்துப் பார்த்து, "ம்க்கும்" என்று முகவாயைத் தோளில் இடித்துக் காட்டிவிட்டு கெஸ்ட் ரூமிற்குச் சென்று விட்டாள்.


தாத்தாவும் பேரனும் அவளின் செய்கையைச் சிரித்தபடி பார்த்தவர்கள், "டாக்டர் சொல்லியும் கேட்காம அவ இன்னைக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட்டா தாத்தா, அதான் திட்டினேன்" 


"ம்ம்ம் நெனச்சேன்… அவ இப்படி ஏதாவது பண்ணி இருப்பான்னு அப்பவே நெனச்சேன்" என்று சிரிக்க, "ம்ம்ம் இப்ப சிரிங்க… எப்பப் பாரு, என்னையே ஏதாவது சொல்லிட்டு இருக்கீங்க. அவளை ஒரு வார்த்தை சொல்ல மாட்டீங்க இல்ல நீங்க? என்ன இருந்தாலும் அவதான் உங்களுக்கு ஸ்பெஷல்…" என்றவன் முகத்தைப் பார்த்த தாத்தா, 


"ரெண்டு பேரும் திட்டினால் பாவம் அவ எங்கடா போவா…? நம்மளை விட்டா அவளுக்கு வேற யார் இருக்கா சொல்லு? அந்த ஆக்சிடென்ட்ல என்னைக் காப்பாத்த வந்து அவ அப்பா உயிரை விட்டுட்டான், அவன் போன கொஞ்ச நாள்ல, அஞ்சு வயசுப் பிள்ளையைத் தனியா விட்டுட்டு அவ அம்மாவும் போய்ச் சேர்ந்துட்டா…" என்று இழுத்து ஒரு பெருமூச்சு விட்டவர், "அவளுக்கு நீயும் நானும் தான் உலகம், நம்ம ரெண்டு பேர் தவிர அவளுக்கு வேற எதுவும் தெரியாது" என்றார் அமைதியாக.


"ம்ம்ம்…" என்று பெருமூச்சு விட்ட ஆதர்ஷ், "அவ ரொம்ப நல்ல பொண்ணு தாத்தா… சீக்கிரம் அவளுக்குப் பொருத்தமா ஒரு நல்லவனைப் பார்த்து அவ கல்யாணத்தை முடிச்சிடனும். வர்ற பையன் நம்மை மாதிரி அவளை நல்லாப் புரிஞ்சு அன்பாப் பார்த்துக்கணும். இப்போ என்னோட ஒரு பெரிய கவலையே அதுதான். இவ மனசு புரிஞ்சு இவமேல அன்பா இருக்கிற மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளையைத் தேடிக் கண்டு பிடிக்கனும்" என்றான் மனதில் இருந்து.


"ஆதர்ஷ்… அவ ஏற்கனவே சொல்லிட்டா. அவ கல்யாண முடிவு முழுக்க முழுக்க உன் கையில் தான்னு. நீ யாரை மாப்பிள்ளைனு சொன்னாலும் அவ கண்ணை மூடிட்டுக் கல்யாணம் பண்ணிக்குவா… பட், அதுக்கு அவ போடும் ஒரே கண்டிஷன் உனக்குக் கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் அவ கல்யாணம் நடக்கணும்ங்குறது தான். அவ கல்யாணம் நல்லபடியா நடந்தால் தான் அவ அம்மா, அப்பா ஆத்மா சாந்தி அடையும். அதுக்கு நீ மனசு வச்சு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்." என்றார் ஒரு எதிர்பார்ப்போடு.


"தாத்தா ப்ளீஸ், அந்த டாப்பிக் வேணாம். எனக்குக் கல்யாணத்தில் விருப்பம் இல்ல… தயவு செய்து அது பத்திப் பேசாதீங்க" என்றான் கடுப்பாக.

 

"அப்பத் தன்விக்கும் கல்யாணம் ஆகாது ஆதர்ஷ், பரவாயில்லையா…? அவ அம்மாவும் அப்பாவும் மேல நிம்மதி இல்லாம அலைந்து திரிஞ்சா உனக்கு ஒண்ணும் கவலை இல்லயா?" என்று அவர் சொன்னதைக் கேட்ட ஆதர்ஷ் மனதில் அந்த நேரம் தன்வியின் பெற்றோர் பிரேமா, சேகரின் முகங்கள் தான்  வந்த நின்றது. சின்ன வயதில் இருந்து தன்னைப் பெற்ற பிள்ளை போல் தூக்கி வளர்த்த அவர்கள் இருவரின் மரணம் அவனை ரொம்பவே பாதித்து இருந்தது. 


தன்வி பிறந்தது முதல் எந்நேரமும் ஆதர்ஷ் கையில் தான் இருப்பாள். குட்டி பொம்மை போல், வாயில் விரலை வைத்துக்கொண்டு கண்களைச் சிமிட்டிச் சிமிட்டி அவனைப் பார்க்கும் அந்தக் குழந்தையை அவனுக்கு ரொம்பவே பிடித்துப் போனது. அவளுக்குப் பெயர் வைத்தது கூட ஆதர்ஷ் தான். தன்வியின் அன்னை இறக்கும் தருவாயில் கூட குழந்தையை வீரராகவன் கையில் கொடுக்காமல் ஆதர்ஷ் கையில் தான் கொடுத்தார். இனி என் குழந்தையை நீதான் தம்பி பார்த்துக்கணும் என்று அவன் கையைப் பிடித்துச் சொன்னவர் உயிர் அவன் கண்களைப் பார்த்தபடியே பிரிந்திருந்தது. அன்று முதல் தன்வியின் முழுப் பொறுப்பையும் ஆதர்ஷ் ஏற்றுக் கொண்டான். அவளுக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வான். ஆதர்ஷ் படிக்கும் பள்ளியிலேயே தன்வியையும் படிக்க வைத்தார் வீரராகவன். பணக்காரப் பிள்ளைகள் மட்டும் படிக்கும் அந்தப் பள்ளியில் ஆதர்ஷ் வீட்டு டிரைவரின் மகள் தன்வியை மற்றப் பிள்ளைகள் தோழியாக ஏற்காமல் போக, அவளுக்காக இருந்தது ஆதர்ஷ் ஒருவன் மட்டும் தான். அவளும் ஆதர்ஷையே உலகம் என்று சுற்றி வரத் தொடங்கி விட்டாள். கொஞ்சம் வளர்ந்தபின் ஆதர்ஷ் மேல் படிப்புக்காக வெளிநாடு செல்ல, வீரராகவன் இவளையும் மேல் படிப்பிற்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க நினைக்க, தாத்தாவைத் தனியாக விட்டு எங்கேயும் போக மாட்டேன் என்று அழுது அடம் பிடித்துச் சென்னையிலேயே தன் பள்ளிப் படிப்பை முடித்து, இங்கேயே ஒரு கல்லூரியில் தன் படிப்பைத் தொடர்ந்தாள். அவள் என்ன படிக்க வேண்டும் என்பதில் இருந்து எங்கு படிக்க வேண்டும் என்பது வரை அனைத்தும் ஆதர்ஷின் தேர்வு தான். 


என்ன தான் ஆதர்ஷ்சும் அவனுடைய தாத்தாவும் அவளை அந்த வீட்டுப் பெண் போல் பார்த்துக் கொண்டாலும், தன்வி அவர்கள் தந்த பாசத்தை முழுதாக ஏற்றுக் கொண்டாளே தவிர அவர்களின் பண உதவியைக் கொஞ்சமும் ஏற்கவில்லை. பள்ளிப் படிப்பு முடியும் வரை வீரராகவன் உதவியில் வளர்ந்தவள், கல்லூரியில் சேர்ந்தவுடனேயே தனக்கென ஒரு பகுதி நேர வேலையைத் தேடிக்கொண்டு அவள் தேவைகளை அவளே பார்த்துக் கொண்டாள். கல்லூரியின் படிப்புச் செலவை அவளே பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னவள், ஆதர்ஷ் முறைத்த முறைப்பில் அடங்கி விட்டாள். அவளுக்குக் கொஞ்சம் விவரம் தெரியும் பருவத்தில் தாத்தா அந்த பங்களாவிலேயே தங்களுடன் தங்கச் சொல்லி எவ்வளவு சொல்லியும் கேட்காமல், பிடிவாதமாக அவள் தாய் தந்தை தங்கியிருந்த ஆதர்ஷ் வீட்டின் அவுட் ஹவுஸுக்குச் சென்று விட்டாள். அவளுக்குத் துணையாக இரவில் மட்டும் கமலா அம்மாவை அவளுடன் தங்கிக் கொள்ளச் சொல்லி விட்டார் வீரராகவன். அவள் இருப்பது அவுட் ஹவுஸ் என்றாலும் காலை முதல் மாலை வரை அந்த பங்களாவில் தான் இருப்பாள். அந்த வீட்டில் இவள் இல்லாமல் சிறு துரும்பு கூட அசையாது. அந்த வீட்டின் முழுப்பொறுப்பும் தன்வியிடம் தான் இருந்தது. 


அவள் கேட்டால் தாத்தாவும் பேரனும் எதுவும் செய்யக் காத்திருக்க, அன்பையும் பாதுகாப்பையும் தவிர வேறு எதையும் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை தன்வி. அந்தக் குணமே அவளைத் தனித்துக் காட்டியது. அவள் படிப்பு முடிந்ததும், ஆதர்ஷ் விடாப் பிடியாக அவளைத் தன் அலுவலகத்திலேயே வேலைக்கு வைத்துக் கொண்டான்.


அவனுக்குத் தன்வி அவன் வளர்த்த குழந்தை என்றால் தன்விக்கு அவன் ஒரு கார்டியன் ஏஞ்சல். 


கண்மூடி அனைத்தையும் நினைத்துப் பார்த்த ஆதர்ஷ்,

"அவ ஏதோ புரியாமப் பேசிட்டு இருக்கா தாத்தா, நான் பேசிப் புரிய வைக்கிறேன். நான் சொன்னா அவ கேப்பா"


"இந்த விஷயத்தில் அது நடக்காது ஆதர்ஷ். உன் கல்யாணம் முடிஞ்சு, இந்த வீட்டுப் பொறுப்பை எல்லாம் வரப் போகும் பொண்ணுகிட்ட ஒப்படைச்ச பிறகு தான் நான் இந்த வீட்டை விட்டுக் கல்யாணம் பண்ணிப் போவேன்னு தீர்மானமாச் சொல்லிட்டா. இனி முடிவு உன் கையில் தான்…" என்றவர் அங்கிருந்து சென்றுவிட ஆதர்ஷ் போகும் தன் தாத்தாவின் முதுகையே பார்த்தவன், 


"கடவுளே! எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலைமை. என்னால என் மனசுல இருக்கிறதை யார் கிட்டேயும் சொல்ல முடியல, ஒவ்வொரு தடவையும் தாத்தாகிட்ட உண்மையைச் சொல்லலாம்னு போறேன். ஆனா, சொல்ல முடியாமத் திரும்பிடுறேன்… தன்விக்கு இது தெரிஞ்சா, அவ என்னைப் பத்தி என்ன நினைப்பா? என்னை வெறுத்து ஒதுக்கிடுவாளா? அப்படி ஒண்ணு நடந்தா அதைத் தாங்கும் சக்தி எனக்கில்ல கடவுளே… தன்வி மட்டும் ஒரு நாளும் என்னைத் தப்பா நெனச்சிடவே கூடாது…" என்று வாய் விட்டுப் புலம்பியபடி, 'நான் இப்ப என்ன தான் செய்யறது?' என்று மனதிற்குள் புழுங்கியவன், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போனான்.


நாட்கள் நகர அன்று தன்வியைத் தன் அறைக்கு அழைத்திருந்தான் ஆதர்ஷ்.


"வேலை பார்க்கும் போது இப்படிக் கூப்பிட்டு டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்" என்றுச் சலித்துக் கொண்டபடி அவன் முன்னே வந்து அமர்ந்தவளைப் பார்த்து முறைத்த ஆதர்ஷ், "ஹலோ மேடம், ஃபார் யுவர் இன்பர்மேஷன் இந்தக் கம்பெனியோட எம்.டி நான்தான்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?" என்று கேட்க, அவனை நக்கலாகப் பார்த்த தன்வி, "இருக்கு இருக்கு, இப்ப அதுக்கு என்னவாம்?" என்று தெனாவட்டாகக் கேட்க, "அடிங்கு…" என்று அவள் மீது ஃபைலைத் தூக்கி அடித்தவன், "கொஞ்சமாவது எம்.டி ன்னு மதிக்கிறயாடி என்னை… பாஸ் பாஸ்னு கூப்பிடுறதுல மட்டும் ஒண்ணும் கொறச்சல் இல்ல. ஆனா, சுத்தமா என்னை மதிக்கிறது இல்ல. எல்லாம் தாத்தா கொடுக்குற செல்லம், அவரைச் சொல்லனும்" என்றவன் அவள் கையில் ஒரு ஃபைலைக் கொடுத்து "இன்னைக்கு அந்த ஏ.டி கன்ஸ்டிரக்ஷன் எம்.டி கூட எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. ஆனா, என்னால அட்டென்ட் பண்ண முடியாது… நீ போய் டீடெயில்ஸ் எல்லாம் தெளிவா எக்ஸ்பிளைன் பண்ணிட்டு வா" என்றவனை, "ஹான்" என்று வாயைப் பிளந்து பார்த்தவள், "இல்ல, எனக்குப் புரியல" என்றாள் குழப்பமாக.


"என்னடி புரியல? மீட்டிங் இருக்கு போய் அட்டென்ட் பண்ணிட்டு வான்னு சொல்றேன், இதுல உனக்கு என்ன புரியல?" என்று கேட்டான்.


"பாஸ்…" என்று கத்தியவள், "நீங்க பாஸா இல்ல லூசா" என்று கேட்டதும், "எதே லூசா" என்று அவளை முறைக்க, "லூசு இல்லாமப் பின்ன என்ன? இது நீங்க போக வேண்டிய மீட்டிங், ஒண்ணு நீங்க போகணும். இல்ல, தாத்தா போகணும், அட்லீஸ்ட் போர்டு மெம்பர்ஸ் இல்ல ஷேர் ஹோல்டர் யாராவது போகணும்… அதைவிட்டு என்னைப் போய் போகச் சொல்றீங்க" என்று புரியாமல் கேட்க,


அவள் கையில் இன்னொரு ஃபைலைக் கொடுத்தான் ஆதர்ஷ்.


அதைப் பிரித்துப் படித்தவள் கண்கள் கோபத்தில் சிவந்துவிட, "என்ன இது?" என்று கத்தியே விட்டாள்.


சுட்டு விரலைக் கொண்டு தன் காதைக் குடைத்த ஆதர்ஷ், "இந்தக் கம்பெனியோட இருபத்தி அஞ்சு சதவித ஷேர்ஸ் உன் பேர்ல இருக்கு, அதுக்கான டாக்குமெண்ட்ஸ் இது. அதோட இந்தப் ப்ராஜெக்ட் சம்பந்தமான எந்த முடிவையும் நீ எடுக்க உனக்குப் பவர் இருக்குன்னு மென்ஷன் பண்ணி ஒரு டாக்குமெண்ட் கூட அதுல வச்சிருக்கேன். சோ நீ இந்த மீட்டிங் தாராளமா எனக்குப் பதில் அட்டென்ட் பண்ணலாம்" என்றதும் அந்த ஃபைலைத் தூக்கித் தூர விட்டெரிந்த தன்வி, "யாரைக் கேட்டு இதெல்லாம் பண்ணிங்க" என்றவள் மூக்கு சிவந்து கண்கள் கலங்கி இருந்தது.


"ஏய் தன்வி, இப்ப எதுக்கு அழற நீ?" என்று கேட்ட ஆதர்ஷ் அவள் அருகில் வந்து அவள் கண்களைத் துடைக்க, அவன் கையைத் தட்டிவிட்ட தன்வி, "எனக்கு இதெல்லாம் ஒண்ணும் வேணாம்…" என்று விம்பும் குரலில் சொல்ல, 


"இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இது தாத்தா எடுத்த முடிவு… அதுவும் மூணு வருஷம் முன்ன எப்ப உன் கல்யாண பேச்சு எடுத்தோமோ அப்பவே தாத்தா இதைப் பண்ணிட்டாரு." என்று சொல்ல, பக்கவாட்டில் திரும்பி அவன் முகத்தைப் பார்த்த தன்வி, "ஓஓஓ…! அப்ப இது நீங்க எனக்காகக் கொடுக்கும் வரதட்சணை… இல்ல இல்ல, நான் பார்க்கும் வேலைக்கு இது நீங்க எனக்குக் கொடுக்கும் சம்பளம் அப்படித் தான பாஸ்?" என்று அவள் அந்த பாஸ்சை அழுத்திச் சொல்ல ஆதர்ஷ் பதறி விட்டான்.


"ஏய்! என்ன பேசிட்டு இருக்க நீ" என்று அதட்டியவன், அவள் கண்ணீர் வழியும் கண்களைப் பார்த்துக் கண்களை மூடி இழுத்து மூச்சு விட்டவன், 


"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லடி… நீ எங்க வீட்டுப் பொண்ணு… எப்ப இருந்தாலும் இது உனக்கு நாங்க செய்ய வேண்டியது தான…" என்றவனை விட்டு ஓரடி பின்னால் வந்தவள், 


"நான் உங்ககிட்ட இருந்து அன்பையும் பாசத்தையும் தான் எதிர்பார்க்குறேன், உங்க ஷேரையும் சீரையும் இல்ல…  எனக்கு வரப் போறவன் என் மனசைப் பார்த்து வரணும். அப்படி ஒரு மாப்பிள்ளையைத் தான் என் ஆது பாஸ் எனக்காகப் பாப்பாருன்னு எனக்குத் தெரியும். சோ இதெல்லாம் எனக்கு வேணாம்" என்று அவள் முடிவாகச் சொல்ல, அவளுக்கு தன் மீது இருக்கும் நம்பிக்கையை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்த ஆதர்ஷ், 


"சரி சரி, இப்ப இந்த டாப்பிக் வேணாம். முதல்ல நீ இந்த மீட்டிங்கை சக்ஸஸ் ஃபுல்லா முடிச்சிட்டு வா, மீதிக் கதையை உன் தாத்தாகிட்டப் பேசிக்கோ" என்றவனைப் பார்த்து ஒழுங்கு காட்டிவிட்டு மீட்டிங் சம்பந்தப்பட்ட ஃபைலை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் தன்வி.