விழி வழி காதல் நுழைந்ததடி 3

 விழி 3 


ஆதர்ஷ் அறையை விட்டு வெளியே வந்த தன்வி, உடனே வீரராகவனுக்கு அலைபேசியில் அழைத்தாள். ஆனால், அவள் அழைப்பை அவர் ஏற்கவே இல்லை. அலைபேசியின் திரையைக் கோபமாகப் பார்த்து உஷ்ண மூச்சு விட்டவள், ‘தாத்தாவும் பேரனும் சேர்ந்து கூட்டுக் களவானித்தனம் பண்றிங்க இல்ல… இருங்க இருங்க, நைட் வீட்டுக்கு வந்து உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு. நைட் ரெண்டு பேருக்கும் பாவக்காய் பாயசம் காய்ச்சி ஊத்துறேன் பாருங்க’ என்று கருவிக் கொண்டே தன் இருசக்கர வாகனத்தை நோக்கிச் செல்ல, "தன்விம்மா" என்று ஓடி வந்தார் ஆதர்ஷின் டிரைவர்.


"என்ன அண்ணா? எதுக்குக் கூப்பிட்டீங்க?" என்று கேட்க, "ஆதர்ஷ் தம்பி உன்னைக் கார்ல கூட்டிப் போகச் சொன்னாரு… வாம்மா" என்று அவர் காரை நோக்கிச் செல்ல, "ம்க்கும்… இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல" என்று முணுமுணுத்தவள், "நான் வரமாட்டேன்னு சொல்லுங்க உங்க தம்பிகிட்ட" என்று வீம்பாக சொன்னவள் அலைபேசி அடிக்கவும், அதை எடுத்துப் பார்த்தாள்.  


ஆதர்ஷ் தான் அழைத்திருந்தான்.


அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவள், "இப்ப என்ன?" என்று எரிந்து விழ, "ஒழுங்கா டிரைவர் அண்ணா கூடப் போடி" என்றான் கட்டளையாக.


"போக மாட்டேன்னு சொன்னா என்ன செய்வீங்களாம்? "


"பெருசா ஒண்ணும் செய்ய மாட்டேன். ஆனா, நீ மீட்டிங் போகணும்னா கார்ல தான் போகணும். பிகாஸ், இது உன் அன்புத் தாத்தாவோட, உன் அருமை பாஸோட கௌரவப் பிரச்சனை. மீட்டிங்க்கு நீ டூவீலர்ல அங்க போனா அது தாத்தாக்கும் எனக்கும் தான் அவமானம். அப்புறம் உன் இஷ்டம்" என்ற பின் மறுத்துப் பேசுவாளா அவள். உடனே காரில் ஏறி விட்டாள்.


ஏ.டி கன்ஸ்ட்ரக்சன்.

 

எம்.டி யின் அறையில் இன்டர்காம் ஃபோன் மணியடிக்க, அதை எடுத்துக் காதில் வைத்த அருணிடம், தன்வி வந்திருக்கும் தகவலைச் செல்ல, அவனும் அவளை உள்ளே வரச் சொல்லிவிட்டு தன் கணிணியில் பார்வையைப் பதித்திருந்தான்.


"மே ஐ கம் இன்" என்ற இனிமையான குரலில் தலையை உயர்த்திப் பார்த்த அருணின் கண்கள், ஒரு நிமிடம் அவள் அழகில் அப்படியே ஸ்தம்பித்து நின்றது.


அழகிய பன்னீர் ரோஜா நிற சில்க் காட்டன் புடவையை நேர்த்தியாய் உடுத்தியிருந்தவள், முகம் எந்த மேக்கப்பும் இல்லாமல் தெளிவாக இருக்க, நெற்றியில் மட்டும் சிறிய சிவப்புப் பொட்டு வைத்திருந்தவள் அழகில் முழ்கிதான் போனான் அருண்.


’வாவ்! செம்ம அழகா இருக்காளே இவ… செம்ம ஹாட் அண்ட் கியூட். நல்ல ஹோம்லி ஃபேஸ்… ஆதர்ஷ்க்கு இப்படி ஒரு பி.ஏ வா…? குடுத்து வச்சவன் அவன்’ என்று அவன் முனுமுனுக்க, அது தெளிவாகத் தன்வி காதில் விழுந்தது. அதுவரை ஒரு மெல்லிய புன்னகையோடு இருந்த தன்வியின் முகம் சட்டென இறுகிவிட, "மே ஐ கம் இன்" என்று மீண்டும் ஒருமுறை அழுத்தமான குரலில் கேட்டாள்.


"எஸ் எஸ்… யூ ஆர் மோஸ்ட் வெல்கம்" என்று வழிந்தவன், "ப்ளிஸ் சிட்" என்று அவளுக்கு இருக்கையைக் காட்ட, அவளும் வேண்டா வெறுப்பாக அவன் முன் அமர்ந்தாள்.


"ஐ அம் அருண்" என்று அவள் முன் தன் வலக்கையை நீட்டியவன், "யூ… மிஸ்…?" என்று இழுக்க, "ஐ ஆம் தன்வி" என்றவள், பட்டும் படாமல் அவன் கையை லேசாக உலுக்கிவிட்டு உடனே கையை இழுத்துக் கொண்டாள்.


அவளின் அந்த ஒரு நிமிடத் தொடுதலே அருணை அசைத்துப் பார்க்கப் போதுமானதாக இருக்க, 'ப்பா என்ன சாஃப்ட் ஹேண்ட்ஸ்டா இவளுக்கு? சும்மா தொட்டதுக்கே உள்ள என்னென்னமோ பண்ணுதே… எப்படி இவ்ளோ நாள் இவளை மிஸ் பண்ணேன். எப்படி நம்ம கண்ல இருந்து மிஸ் ஆனா…' என்று நினைத்தவன், "ஓகே மிஸ். தன்வி, வாட் யூ டூ லைக் டு ஹேவ்? ஹாட் ஆர் கோல்ட்?" என்றவன் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து வைக்க, தன்விக்கு உள்ளுக்குள் பற்றிக்கொண்டு வந்தது.


"நோ தேங்க்ஸ் சார்… ஐ அம் ஓகே. இந்தாங்க சார், இதுல எல்லா டீடைல்ஸ்சும் இருக்கு சார் பாருங்க." என்று அவன் முன் அவள் வந்த வேலைக்குச் சம்பந்தமான டாக்குமெண்ட்ஸை வைத்தாள்.


"ஏய் தன்வி… ப்ளீஸ் டோன்ட் கால் மீ சார், கால் மீ அருண்" என்று வழிய, தன்விக்கு எரிச்சலாக இருந்தது.


அருண் விரல்கள் அந்த டாக்குமெண்ட்ஸைப் புரட்டினாலும் அவன் பார்வை முழுவதும் தன்வி மேலேயே இருந்தது. அதை அவளும் உணர்ந்து தான் இருந்தாள்.


"மிஸ்டர். அருண் எல்லாம் ஓகே தான?" என்றவளைப் பார்வையாலேயே அளந்தவன், "ம்ம்ம் எல்லாம் ஓகே தான் மிஸ். தன்வி… பட், நீங்க உங்க லிப்ஸ்ல பிங்க் கலர்ல லிப்கிளாஸ், போட்டா இன்னும் செம்மயா இருப்பீங்க, ஐ திங்க் உங்களுக்கு மேக்கப் போடப் புடிக்காது போல, அது உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது. பட், லிப்கிளாஸ் மட்டும் போட்டீங்க… உங்க லிப்ஸ் பார்க்க இன்னும் அட்ராக்ட்டிவா இருக்கும்…" என்று ஒரு மாதிரிக் குரலில் சொல்ல, தன்விக்கு உள்ளுக்குள் அவனைக் கன்னம் கன்னமாக அறைய வேண்டும் போல் வெறியே கிளம்பியது.


ஆழமாக இழுத்து மூச்சுவிட்டு தன்னை நிலைப்படுத்தியவள், "சாரி சார் எனக்கு அதெல்லாம் புடிக்காது." என்றாள் அமைதியாக.


"நோ தன்வி, நீங்க லிப்கிளாஸ் போட்டா இன்னும் அழகா இருப்பீங்க… அதான் சொல்றேன், ட்ரை பண்ணிப் பாருங்க" என்றவனைக் கண்களில் எரிச்சலோடு பார்த்தவள், "உங்களை மாதிரி நிறையப் பேர், நீ ஹைஹீல்ஸ் செருப்புப் போடாத, அது நல்லது இல்லைன்னு கூடச் சொல்லி இருக்காங்க தான் மிஸ்டர். அருண். பட், அதுக்காக நான் ஹைஹீல்ஸ் செருப்புப் போடாம இருக்க முடியுமா…? எனக்கு இந்த ஸ்லிப்பர் தான் புடிச்சிருக்கு அண்ட் இது பாதுகாப்பும் கூட… எவனாவது அத்து மீறிப் பேசினா கழற்றி அடிக்க வசதியா இருக்கும் பாருங்க" என்றவள் முகம் வெகு இயல்பாக இருக்க, அதைக் கேட்ட அருண் முகம் தான் அவள் மறைமுகமாகச் சொன்ன செய்தியால் கோவத்தில் சிவந்து போனது.


"ஓகே சார்… உங்களுக்கு வேற எதுவும் டீடைல்ஸ் தெரியணுமா?" என்று கேட்க, அருணின் தலை அனிச்சையாக இல்லை என்று இடவலமாக ஆடியது.


"தென் ஓகே சார்… எங்க டீம் உங்களைக் காண்டாக்ட் பண்ணுவாங்க…" என்றவள் இருக்கையை விட்டு எழுந்து நின்று, "ஓகே அருண், ஹோப் யூ லைக் அவர் ப்ரபோசல்…" என்று அவனைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னவள் அங்கிருந்து புறப்பட்டுப் போக, போகும் அவளையே துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தான் அருண்.


அன்று இரவு, ஆதர்ஷ் வீட்டில்…


தன்வி டேபிளில் தட்டை வைத்த சத்தத்தில் தெரிந்தது அவளின் கோவத்தின் அளவு. அவள் முகத்தில் எப்போது வேண்டுமென்றாலும் திட்டுகள் எனும் வெடிகுண்டு வெடிக்கலாம் என்ற அறிகுறிகள் தெரிய, தாத்தாவும் பேரனும் வாயே திறக்கவில்லை. தன்வியும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள், "ரெண்டு பேரும் இப்படி வாய மூடிட்டு இருந்தா என்ன அர்த்தம்?" என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு கண்களை உருட்டிக் கேட்க, ஆதர்ஷ் பார்வையை மட்டும் திருப்பி பக்கவாட்டில் தாத்தாவைப் பார்க்க, அவரும் தலையைக் குனிந்தபடி ஆதர்ஷினைப் பார்த்துக் கண்ணைக் காட்டி, "ஏதாவது சொல்லி சமாளிடா" என்றார் ரகசியக் குரலில்.


அதற்கு அவனோ, "ஆபீஸ்லயே வேணுங்குற அளவுக்கு நான் வாங்கிக் கட்டிக்கிட்டேன். இப்ப உங்க டர்ன், வாங்கிக் கட்டிக்கோங்க" என்றான் அதே ரகசியக் குரலில்.


"ஹலோ, நான் இங்க ஒருத்தி கத்திட்டு இருக்கேன். அங்க என்ன, ரெண்டு பேரும் குசுகுசுன்னு பேசிட்டு இருக்கீங்க? எனக்குப் பதில் சொல்லுங்க… எதுக்குக் கம்பெனி ஷேர்ஸை என் பேர்ல எழுதி வச்சீங்க?" என்று கோவமாகக் கேட்க, ஆதர்ஷ் மெல்ல நிமிர்ந்து அவள் முகத்தை அழுத்தமாகப் பார்த்தான்.


"நீ இந்த வீட்டுப் பொண்ணு, அவரோட பேத்திங்குற உரிமையில், உறவில் அப்படிச் செஞ்சாரு, இல்ல… அது தப்பு, உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்ல, எந்த உரிமையும் இல்லைன்னு நீ நெனச்சா, நாளைக்கே அந்த ஷேர்ஸ் எல்லாத்தையும் தாத்தா நேம்க்கு டிரான்ஸ்ஃபர் பண்ணித் திருப்பிக் கொடுத்திடு" என்று அழுத்தமாகச் சொன்னவனை அதிர்ந்து பார்த்தாள் தன்வி.


"ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? தாத்தாக்கும் உங்களுக்கும் என்கிட்ட இல்லாத உரிமை வேற யாருக்கு இருக்கு… நீங்க ரெண்டு பேரும் தான எனக்குன்னு இருக்க ஒரே உறவு… அப்புறம் எதுக்கு இப்படி எல்லாம் பேசுறீங்க பாஸ்" என்றவள் இதழ் பிதுக்கி அழ ஆரம்பிக்க, "அது உண்மையா இருந்தா, அந்த நினைப்பு உனக்கு இருந்தால், கண்ணைத் தொடச்சிட்டு ஒழுங்கா உக்காந்து சாப்பிடு… அத ஏன் எழுதி வச்சீங்க, இதை ஏன் எம்பி வச்சீங்கன்னு கேள்வி எல்லாம் கேட்டுட்டு இருக்காத" என்றவன் உணவைச் சாப்பிடத் தொடங்கியதும், தன்விக்கு அதற்கு மேல் பேச வார்த்தைகள் இல்லாமல் போக, அமைதியாகச் சாப்பிட ஆரம்பித்தாள்.


"நீ காலையில் போன விஷயம் என்னாச்சு?" என்று கேட்டான் ஆதர்ஷ்.


  "ம்ம்ம், எல்லாம் ஓகே தான். ஆனா, இனிமே அந்த வாட்டர் பால்ஸ் வாயன்கிட்ட என்னைப் பேசச் சொல்லாதீங்க பாஸ்… எம்.டியா அவன், த்தூ… சரியான ஜொள்ளுக் கேஸ் அந்த லூஸ்…" என்று கடுப்பாகச் சொல்ல, "ஏன் என்னாச்சு தன்வி ?"என்று கேட்டார் வீரராகவன்.


இன்று காலையில் நடந்ததைச் சொன்ன தன்வி, "அந்த அருண் சரியான ஜொள்ளு தாத்தா… வேலையைப் பத்திப் பேசாம லிப்கிளாஸ் போடு, அது இதுன்னு கண்டதையும் பேசிட்டு இருந்தான்." என்றாள் எரிச்சலாக.


அதைக் கேட்ட ஆதர்ஷ் கை முஷ்டிகள் இறுக சட்டென எழுந்தவன்,  "அவனுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா உன்கிட்ட அப்படிப் பேசி இருப்பான்? அவனை…" என்று நகர, அவன் கையைப் பிடித்து நிறுத்திய தன்வி, "ஐய்யோ பாஸ், நீங்க இப்படிப் பொங்குற அளவுக்கு எல்லாம் அவன் ஒண்ணும் வொர்த் இல்ல… நான் கொடுத்த செருப்படியே போதும் அவனுக்கு. விடுங்க, நமக்கு அவனைவிட முக்கியமான வேலை நிறைய இருக்கு. அதைப்பத்தி யோசிப்போம்." என்றவளுக்கு அப்போது தெரியாது… அருண் மூலம் அவள் வாழ்க்கையில் ஏற்படப் போகும் மாற்றங்கள் என்னென்ன என்று தெரியாமல் இருக்க, இங்கு தன்வியைப் பற்றிய‌‌ அனைத்து தகவல்களையும் சேகரித்துக் கொண்டிருந்தான் அருண்.


அன்றைய மறுநாள் ஒரு அழகிய டிசைனர் அனார்கலிச் சுடிதாரை தன்வி கையில் கொடுத்தான் ஆதர்ஷ்.


தன் கையில் இருந்த வெள்ளை நிற உடையையும் ஆதர்ஷினையும் மாறிமாறிப் பார்த்த தன்வி, "என்ன பாஸ் இது? எதுக்கு இப்ப இந்த புது டிரஸ்?" என்று கேட்டாள் புரியாமல்.


"நாளைக்கு ஒரு பெரிய பிஸ்னஸ் பார்ட்டி இருக்கு, அதுக்கு நீயும் என்னோட வரணும்… அதுக்கு தான் இந்த டிரஸ்." என்றதும் அந்த உடையை அவன் கையிலேயே வேகமாகத் திரும்பிக் கொடுத்தவள், "எதே… நானும் வரணுமா? என்ன விளையாடுறீங்களா? நான் அங்கெல்லாம் வர மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும் இல்ல… அப்புறம் எதுக்குக் கூப்பிடுறீங்க? இதுல டிரஸ் வேற…" என்று உதட்டைச் சுழிக்க, 


"ப்ச்" என்று சலித்துக்கொண்ட ஆதர்ஷ், "ஏய்…! அங்க நம்ம எல்லா போர்ட் மெம்பர்ஸ் அண்ட் ஷேர் ஹோல்டர்ஸ் வராங்கடி… அதான் உன்னையும் கூப்பிடுறேன், எனக்காக வாடி… பாரு, உனக்காக நானே பொட்டிக் போய் உனக்குப் புடிச்ச மாதிரி டிர்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்… அதுக்காகவாவது வா தன்வி" என்றவனை முறைத்தவள், "ஏன் இப்படிப் பண்றீங்க… எனக்கு இதெல்லாம் செட் ஆகாதுன்னு தெரியுமில்ல" என்றவள் தோளில் கை போட்டு தன் தோளோடு அணைத்துக் கொண்டவன், "நான் கூப்பிட்டா வர மாட்டியா" என்று அவள் கண்ணைப் பார்த்துக் கேட்க, அவன் கையில் இருந்த உடையைப் பிடுங்கி எடுத்தவள்,  


"வரேன்… வந்து தொலையுறேன். இப்படி சென்டிமென்ட்டாப் பேசியே என்னை ஏமாத்துறீங்க இல்ல, எனக்கும் ஒரு நேரம் வரும்… அப்ப இதே சென்டிமென்ட் வச்சு உங்களைப் பழி வாங்குறேன் பாருங்க" என்று கடுப்பாகச் சொல்லி விட்டுச் செல்ல, "என் குட்டிப் பாப்பா ரொம்ப சமத்து" என்றவன் தலையைக் காற்றில் பறந்து வந்த தாக்கியது தன்வி தூக்கியடித்த ஆப்பிள் ஒன்று. "ஆஆஆ" என்று தலையைத் தடவியபடி திரும்பியவன், "பிசாசு பிசாசு… சமத்துன்னு சொல்லி வாய் மூடல… அதுக்குள்ள கொரங்கு சேட்டையைக் காட்டுது பாரு… இதைக் கட்டிக்கிட்டு எவன் அவஸ்தைபடப் போறானோ" என்று புலம்பியவன், கண்ணாடியை பார்த்தால் தெரிந்திருக்கும் அவளிடம் சிக்கப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி யாரென்று.


மறுநாள் மாலை பார்ட்டிக்குச் செல்வதற்குத் தயாராகி ஹாலில் தன்விக்காகக் காத்திருந்தான் ஆதர்ஷ்.


"ஏய் குட்டி பாப்பா! எவ்ளோ நேரம்டி… நீ வர்றதுக்குள்ள பார்ட்டியே முடிஞ்சிடும் போல" என்று குரல் கொடுக்க, "முடியட்டுமே, எனக்கு என்ன வந்துது?" என்றாள் சத்தமாக பதிலுக்கு அவளும்.


"நீ அதுக்கு தான் பிளான் பண்றேன்னு எனக்கு நல்லாப் புரியுது… எவ்ளோ டைம் ஆனாலும் நீ வராம நான் பார்ட்டிக்குப் போக மாட்டேன்" என்றவன் முன் வந்து நின்றாள் தன்வி.


அவன் கொடுத்த அனார்கலி உடையில் பார்ப்பதற்கு அப்படியே தேவதை போல் இருந்தவளைப் பார்த்தவன் கண்களில் ஒரு மெல்லிய வெளிச்சம். "ரொம்ப அழகா இருக்க தன்வி..‌. அப்படியே பிரேமா அம்மாவைப் பார்க்குற மாதிரி இருக்கு." என்றதும் அவள் முகம் வாடிவிட, இந்த நேரத்தில் அவள் தாயைப் பற்றி நினைவு படுத்திய தன் முட்டாள் தனத்தை நினைத்துத் தன்னைத் தானே நொந்து கொண்டவன், 


"ப்ச் தன்வி… இப்படி முகத்தை வைக்காதடி. எனக்குப் பார்க்க மனசுக்கு கஷ்டமா இருக்கு, ப்ளீஸ்" என்று கெஞ்ச தன்வி மென்மையாகச் சிரித்தவள், 


"நான் ஒண்ணும் சோகமா இல்ல, உங்களுக்கு தான் அப்படித் தெரியுது…" என்று சுவரில் இருந்த கடிகாரத்தைக் காட்டியவள், "இவ்ளோ நேரம் டைம் ஆகுது ஆகுதுன்னு குதிச்சிட்டு இருந்தீங்க, இப்ப என்ன? சும்மா நின்னு வெட்டிக்கதை பேசிட்டு இருக்கீங்க… வாங்க தாத்தாகிட்டச் சொல்லிட்டுக் கிளம்பலாம்" என்று அவள் திரும்ப, "நானே வந்துட்டேன் தன்வி" என்றபடி அவர்கள் முன்னால் வந்து நின்றார் வீரராகவன்.


கறுப்பு நிற முழு ஃபார்மல் சூட்டில் இருந்த தன் பேரனின் கம்பீரத்தைப் பார்த்து உள்ளுக்குள் கர்வம் கொண்டவர், அவன் அருகில் வெள்ளை நிற உடையில் அழகுப் பதுமை போல் இருந்த தன் பேத்தியைப் பார்த்ததும் கண்களோடு மனதும் மகிழ்ந்து போனது அவருக்கு.


"தாத்தா, நாங்க பார்ட்டிக்குப் போறோம், சீக்கிரம் வந்திடுறோம். நான் இல்லைன்னு சக்கரை போட்டுக் காஃபி குடிச்சிங்க..‌. ரெண்டு நாளைக்கு ஒரு வேளைக்கு தரும் சர்க்கரை போட்ட காஃபியையும் கட் பண்ணிடுவேன்." என்று இடுப்பில் கை வைத்து மிரட்ட அவளைப் பார்த்துச் சிரித்த தாத்தா, 


"நான் காஃபியே குடிக்கல போதுமா, நீ கெளம்பு" என்றதும், "ம்ம்ம் குட் பாய்… இப்படி தான் சொல்ப் பேச்சு கேட்டு ஒழுங்கா நடக்கணும்." என்றவள் தலையில் வலிக்காமல் கொட்டிய ஆதர்ஷ், 


"வாயாடி… வாயாடி… உனக்கு வாய் மட்டும் இல்ல, உன்னை எல்லாம் பேய் கவ்விட்டுப் போய்டும்..‌." என்றவனைக் கண்கள் சிமிட்டப் புரியாமல் பார்த்தவள், 


"அது நாய் தூக்கிட்டுப் போய்டும் தான?" என்று தன் நாடியில் விரல் வைத்துத் தட்டியபடி கேட்க, 


"அது மனுங்களுக்குத் தான்டி… உன்னை மாதிரிக் கொரங்குக்கு எல்லாம் பேய் தான் வரும்… ஒழுங்கா வாடி, டைம் ஆச்சு…" என்று தன்வியின் கையைப் பிடித்தவன், "போயிட்டு வரோம் தாத்தா" என்று விட்டுக் கிளம்ப, போகும் இருவரையும் ஒரு மனநிறைவோடு பார்த்துக் கொண்டிருந்தார் வீரராகவன்.