நிஜம் 2
த்வனி, மாதவனின் திருமணத்தைக் கிராமத்தில் இருக்கும் தங்கள் குலதெய்வம் கோவிலில் நடந்த ஏற்பாடு செய்திருந்தான் ஜெகன். அதோடு திருமணம் முடிந்தவுடனேயே சொத்தை பிரிக்க நினைத்து, அதற்குத் தேவையான பத்திரங்களைத் தாயர் செய்து, வக்கீலையும் கிராமத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருப்பதைச் சொல்ல, த்வனி தன் அவதர் அண்ணனின் திட்டத்தை நினைத்து உணர்ச்சியற்று சிரிக்க, ஜெகன் மனைவி ஆஷாவோ "ஓ மை காட் கருப்புசாமி… இதெல்லாம் என்ன மெட்டீரியல்னே தெரியலயேப்பா" என்று தலையில் அடித்துக்கொண்டே த்வனியை பார்க்க, "விடு ஆஷு... இதெல்லாம் நமக்குப் பழகுனது தானே, அப்டியே தொடச்சி தூக்கிப்போட்டுட்டு போய்டணும். நீ போய் ஊருக்கு கெளம்புற வழிய பாரு" என்றவள் தன் அறைக்குச் சென்றாள்.
த்வனி குடும்பமும், இன்னும் சில நெருங்கிய சொந்தங்கள், மற்றும் தோழிகள் அனைவரும் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கிராமத்திற்கு வந்து அங்குள்ள அவர்கள் வீட்டில் தங்கிவிட, மாதவன் குடும்பமும், இன்னும் சில உறவினர்களும் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு தான் ஊர் வந்து சேர்ந்தனர். அவர்களைக் கோவில் அருகில் இருந்த தங்கள் உறவினர் வீட்டில் தங்க வைத்த ஜெகன்.
வெகு நாட்களுக்குப் பிறகு தான் அம்மா வாழ்ந்த வீட்டிற்கு வந்த த்வனிக்கு சின்ன வயது நினைவுகள் எல்லாம் அவள் எண்ண அடுக்குகளில் ப்ரிவ்யூ போல் ஒன்றன்பின் ஒன்றாக அலைமோதியது. சில நிகழ்வுகள் அவள் உடலை சிலிர்க்க வைக்க, சில நிகழ்வுகள் அவள் மனதை சில்லு சில்லாக உடைத்து நொறுக்கியது. நாவிற்கு இனிப்பை தரும் அதே கரும்பு, அதைத் தின்று முடித்த பிறகு நாவை ரணமாக்குவது போல்... அந்த வீடும் ஒரே நேரத்தில் அவளை வாட்டவும், தாலாட்டவும் செய்தது. 'ம்ம்ம் அவளின் இறந்தகாலம் அவள் மனதில் ஏற்படுத்திய காயமே இன்னும் பச்சை புண்ணாக ஆறாமல் இருக்க... அந்தக் காயத்தில் இரும்பை காய்ச்சி ஊற்ற வருகிறான் ஒருவன். இனி த்வனியின் விதி அவன் சதி வழி செல்லுமா???
காலை நான்கு மணி போல் அனைவரும் எழுந்து, திருமண வேலைகளைப் பார்க்க, குளித்து முடித்து வந்த த்வனியை ஷாலுவும், ஆருவும் தாயர் செய்ய, இலகுவாகக் கண்ணை உருத்தாத பட்டுபுடவையில், அளவான நகை, மற்றும் மேக்கப்பில் திருத்தமாக வரைந்த ஓவியம் போல் வடிவாக இருந்த த்வனியை அழைத்துக்கொண்டு அனைவரும் கோவிலுக்குக் கிளம்பினார்.
ஷாலுவும், ஆருவும் கலங்கிய கண்களுடன் த்வனியின் தோளை அழுத்தி பிடித்தபடி இருக்க, த்வனி கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாகக் கண்மூடி அமர்ந்திருந்தாள்.
தீடிரென்று தன் கன்னத்தை யாரோ அழுத்தி பிடித்துத் திருப்புவதை உணர்ந்த த்வனி கண்விழித்துப் பார்க்க, அங்குப் பாலில் மிதக்கும் கருப்புத் திராட்சை போல் அழகாகக் கண்களை உருட்டி உருட்டி த்வனியையே உற்று பார்த்த அந்தக் குழந்தை "அத்த" என்று கத்தியபடி த்வனி கழுத்தைக் கட்டிக்கொள்ள. அதுவரை தீயில் விழுந்த மலராய் கறுக்கிக்கொண்டிருந்தவள் இதயம். அந்தப் பிஞ்சு கைகளில் அணைப்பில் சற்று நிம்மதியடைந்ததுது.
கல்லூரி காலத்திற்குப் பிறகு த்வனியின் வாழ்க்கையில் அவள் சிரித்தாள் என்றால் அதற்கு ஒரே காரணம் அவள் அண்ணன் "ச்சீ நோ" அவள் செல்ல ஆஷுவின் மகன் விஷ்ணு மட்டும் தான். விஷ்ணுவுக்கும் அத்தை என்றால் உயிர். தன் தந்தைக்கும் சேர்த்து விஷ்ணு த்வனி மீது பாசமாக இருந்தான்.
லேசாகக் கலங்கியிருந்த த்வனி கண்ணைத் துடைத்துவிட்ட குழந்தை, " அலத அத்த… நா போயி ஆங்கிள் இதுக்கப் பிளேஸ் சர்ச் பண்ணி கூட்டி வதேன்" என்று தன் மழலை மொழியில் சொல்ல, குழந்தையைத் தன் மார்போடு சேர்த்து அனைத்தவள் கண்களில் வரலாமா? வேண்டாமா? என்று கீழ் இமைகளில் தேங்கி இருந்த கண்ணீர் துளிகள் வெளியே வந்து விடக் குழந்தை பார்க்கும் முன் அதைத் துடைத்தவள்.
"என்னோட வினு செல்லம் என் கூட இருக்கும்போது அத்த ஏன் அழப்போறேன்?" என்றவள் கண்களைத் தன் விரல் கொண்டு தொட்டு பார்த்த குழந்தை, "அப்தம் ஏ அத்த ஐஸ் வெட்டா இதுக்கு?" என்று ஈரமாக இருந்த அவள் விழிகளைத் தொட, அந்தப் பிஞ்சு குழந்தையின் பாசத்தில் த்வனியோடு ஆருஷி, ஷாலினி கண்களும் கலங்விட, அந்த நேரம் அங்கு வந்த ஆஷாவை த்வனி 'என்னச்சு?' என்று கேட்க,
ஆஷா 'இல்லை' என்று இடவலமாகத் தலையாட்டியவள். "எங்க தேடியும் மாப்ளய காணும். அவரு அப்பா, அம்மாக்கு கூட அவர் எங்க போனார்னு தெரியல… காலையில ஐஞ்சு மணிவரை நல்லா தான் இருந்திருக்காரு, அப்றம் என்னச்சுனு தெரியல, உன்னைக் கல்யாணம் பண்ண புடிக்கலைனு, அவங்க அம்மாக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டு எங்கயோ போட்டாராம்" என்று கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி விம்மி விம்மி அழுதுகொண்டிருக்க… த்வனி மெதுவாகச் சேரில் இருந்து எழுந்து ஆஷாவின் தோளை அழுத்தி பிடித்தவள். "விடு ஆஷு. நீ அழுத மட்டும் எதுவும் மாறிட போகுத என்ன? விடு" என்று இழுத்து மூச்சு விட்டுத் தன்னை நிலைபாடுத்தியவள். "வீட்டுக்குப் போலாம் ஆஷு. ஐ வான்ட் டூ கேட் ஆவுட் ஆப் திஸ் பிளேஸ் ரைட் நவ். கெளம்பு" என்றவள் திரும்பி நடக்க, "த்வனி ஒரு நிமிஷம் உன்கிட்ட பேசணும்" என்ற ஜெகனின் குரலில் அவள் திரும்பி பார்க்க, அங்குக் கையைப் பிசைந்தபடி தயங்கி, தயங்கி நின்று கொண்டிருந்தான் அவள் அவதர் அண்ணன்.
"மாதவன் இப்டி பண்ணுவன்னு சத்தியமா நான் நெனைக்கல த்வனி. இது உனக்கு எவ்ளோ பெரிய ஷாக்குனு எனக்குத் தெரியுது, உனக்கு மனசுக்கு எவ்ளோ கஷ்டம இருக்கும்னு என்னால உணர முடியுது." என்றவனைப் போதும் என்பது போல் கைகாட்டி நிறுத்தியவள். "நோ செண்டிமெண்ட் ஜெகன். டோண்ட் வேஸ்ட் யூவர் டைம். நீ சொல்ல வந்ததைச் சொல்லு" என்க.
"மாப்ள ஓடிப்போனதப் பத்தி நம்ம சொந்தகாரங்க எல்லாம் ஒரு மாதிரி பேசுறாங்க த்வனி. உன்ன, என்ன நம்ம குடும்பத்த பத்தி தப்பு தப்ப பேசுறாங்க… என்ன பத்தி பேசின கூடப் பரவாயில்ல, உன்ன தப்ப பேசும்போது எனக்குக் கஷ்டம…" எனும்போதே, "நீ இன்னும் விஷயத்துக்கு வர்ல ஜெகன். கம் டூ தீ பாய்ண்ட்" என்று த்வனி கறாராகக் கேட்க, ஜெகனின் செண்டிமெண்ட் குண்டு புஸ்சென்று போக,
"ஓகே த்வனி நா நேரவே சொல்றேன். நம்ம சொந்தகாரங்க முன்னாடி நம்ம குடும்ப மானம் போய்ட கூடாது. அதுக்கு இப்பவே உன் மேரேஜ் நடந்தகணும். என்னோட ஃப்ரண்ஸ் இப்பவே உன்னை மேரேஜ் பண்ணிக்கச் சரினு சொல்றான். அதுவும் என்னோட கௌரவம் கெட்டுப்போகக் கூடாதுன்ற ஒரே காரணத்துக்காகத் தான். அவன் ரொம்ப நல்லா பையன். பெரிய பிஸ்னஸ்மேன். அவன் ரேஞ்ச்கு பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் பெண்ணு தர காத்திருக்காங்க. ஆனா, எனக்காக, எங்க பிரெண்ட்ஷிப்காக உன் முகத்தைக் கூடப் பாக்காம கல்யாணத்துக்கு ஓத்துக்கிட்டு இருக்கான். இனி எல்லாம் உன் கையில் தான் இருக்கு. நம்ம அப்பா, அம்மா கௌரவத்தைக் காப்பாத்த நெனச்ச நீ இந்த மேரேஜ்கு ஓகே சொல்லு" என்று தன் அஸ்திரத்தை சரியான இடம் பார்த்து அடிக்க, ஆஷுவுக்குக் கணவனை நினைக்க நினைக்கப் பத்திக்கொண்டு வந்தது. "என்ன சொன்னா த்வனிய கவுக்கலாம்னு தெரிஞ்சு. கரெக்டா அத்த, மாமா பேரை யூஸ் பண்றரே இந்த மனுஷன். சைய்... " என்று அவனைத் தீயாய் முறைத்தவள். " இங்க பாரு த்வனி இது உன் அண்ணன் சொல்ற மாதிரி எடுத்தோம் கவுத்தோம்னு முடிக்கிற காரியம் இல்ல. இது உன்னோட லைஃப். சோ ப்ளிஸ் யோச்சி முடிவு பண்ணு, ஒன்னு அவசரமில்ல, " என்க.
ஆருஷி, ஷாலினியும் கூட அதையே சொல்ல. ஜெகன் மனைவியைக் கண்ணாலேயே எரித்தவன். "நீ வாய மூடு ஆஷா. இவ என் தங்கச்சி, இவ வாழ்க்கை மேல எனக்கில்லாத அக்கறை உனக்கு வந்திடுச்ச?" என்றவனைப் பெண்கள் மூவரும் கேவலமாக ஒரு லுக்குவிட, த்வனி மட்டும் கைகளைக் கட்டியபடி சில நிமிடங்கள் ஜெகனை அழுத்தமாகப் பார்த்தவள். "ம்ஹும்…" என்று அலட்சியமாகச் சிரித்தவள். "தள்றதுன்னு முடிவு பண்ணிட்ட… அது ஆறா இருந்த என்ன? கடலா இருந்த என்ன? தள்ளிவிட்ற வேண்டியது தானா... போ… போய் ஆகவேண்டியத பாரு, நா வரேன்" என்றவளை கையை இறுக்கி பிடித்த ஆஷா. "அடியேய் உனக்கு என்ன மர கழண்டு போச்ச…" என்றவளை திரும்பி பார்த்த த்வனி அவள் உதட்டின் மீது தன் ஆள்காட்டி விரல் வைத்து இடவலமாகத் தலையை ஆட்டி "போ…" என்றவள் அதற்கு மேல் ஒரு வார்த்தை பேசவில்லை…
கழுத்தில் மலர்மாலை அணிந்திருந்தவள் முகத்தில் சற்றும் மலர்ச்சி இல்லை. அவளை உறுத்தியது எல்லாம் மாதவனைப் பற்றிய எண்ணங்கள் தான். "ஒருவேள அவருக்கு என்னைப் பிடிக்காம போயிருந்த அதை நேரடியாக என்கிட்டயே சொல்லி இருக்கலாமே?? ஏன் தாலி கட்டுற நேரம் இப்டி ஒரு இக்கட்டான நெலையில என்னை நிறுத்திட்டு போகணும்?" என்று நினைத்தபடியே மெதுவாக நடந்துவந்தவள். ரெண்டு பக்கமும் மூக்குத்தி ஜொலிக்க, கண்ணில் கருணை நிறைந்து வழிய, கணிவோடு தன்னைப் பார்க்கும் அம்மன் முகத்தையே உற்று பார்த்தபடி இருந்த த்வனி, தன் கழுத்தில் ஏதோ உரசுவது போல் இருக்க, தலைகுனிந்து பார்க்க, புது மஞ்சள் கயிற்றில் கோர்த்த தங்க தாலி அவள் கழுத்தை சுற்றிவந்து மார்பில் மையம் கொண்டிருந்தது. அவள் அந்தத் தாலியை கையில் எடுத்து பார்க்க, "வெல்கம் டூ ஹெல் மிஸஸ். விக்ரம் தேவ்" என்ற குரல் அவளை உயிர் வரை உறையவைக்க, சட்டெனத் திரும்பிப் பார்த்தவள் கண்கள், அப்படியே அவன் குரோதம் கொதிக்கும் கண்களில் நிலைக்குத்தி நின்றது.
திருமணக் கோலத்தில் தன் அறையில் அமர்ந்திருந்த த்வனிக்கு நடந்தது எதுவும் ஞாபகம் இல்லை. எப்டி அவள் வீடு வந்து சேர்ந்ததால் என்று கூட அவள் நினைவில் இல்லை. அவள் சிந்தனை எல்லாம் கடைசியாக விக்ரம் கண்களைப் பார்த்த நொடியோடு அப்டியே உறைந்து நின்று விட்டிருந்தது. தான் சாகும் கடைசி நிமிடம் வரை யாரை பார்க்கவே கூடாது என்றிருந்தாளோ அவன். அந்த விக்ரம் இன்று அவள் கண்முன்னே. அதுவும் அவள் கணவனாக.
"நா உயிரோட இருக்க வரை, இந்த ஜென்மத்துல உன்ன நிம்மதியா இருக்க விட்ருவேன்னு நீ எப்டிடி நெனச்ச?" என்ற அவனின் குரோதம் நிறைந்த குரல் த்வனியின் உறைந்த நிலையை உடைக்க, விழி இமையை மட்டும் உயர்த்தி அவள் எதிரில் நின்றிருந்தவன் முகத்தை நேராகப் பார்க்க,
"எவ்ளோ தைரியம் இருந்த நீ கல்யாணம் வரைக்கும் வந்திருப்ப, நீ ஓடி ஒளிஞ்ச...? என்னால உன்ன தேடி கண்டுபுடிக்க முடியாதுன்னு நெனச்சிய? பாருடி... உன்ன கண்டுபுடிச்சி வந்துட்டேன் பாருடி…" என்று நக்கலாகச் சிரித்தவன். "அதுவும்…" என்றவன் அவள் கழுத்தில் இருந்த தாலியை தன் கையில் எடுத்து அவள் முகத்திற்கு முன்பு காட்டி "இப்ப நா உனக்குப் புருஷன்டி" என்று சத்தமாகச் சிரித்தவன். "இனிமே வர்ர ஒவ்வொரு நாளும் உனக்கு மரணவலி தான்டி. நரகத்தைக் காட்றேன்டி உனக்கு" என்றவனை த்வனி சில நொடிகள் இமைக்காமல் பார்த்தவள்.
"ம்க்கும்" என்று இதழோரம் அலட்சியமாகச் சிரித்தவள், "நீ பெரிய தப்பு பண்ணிட்ட விக்ரம்…" என்றவள் சேரில் இருந்து எழுந்து அவன் முன் கம்பீரமாக நின்றவள். "நீ விக்ரம்தேவ்ன??, நா த்வனிடா… அத நீ மறந்துடாத?? எனக்கு நரகத்தைக் காட்றேன்னு சொல்லிட்டு, இப்ப நீதான் அதுக்குள்ள வந்து விழுந்திருக்க… த்வனி அவ இருந்த ஊரவிட்டு தான் வந்தாளே தவிர, அவளோட தைரியம், கோவம், திமிரு எல்லாம் இன்னும் அவளுக்குள்ள அப்டியே தான் இருக்கு. ம்ம்ம்…!! என்னைப் பத்தி உனக்கு நா சொல்லவேண்டியது இல்லயே விக்ரம். உனக்குத் தான் நெறய அனுபவம் இருக்கே" என்று திமிராகச் சொன்னவள். "போ… போய் அந்த மாதவனை ரிலீஸ் பண்ணு. நம்ம ரெண்டு பேர் பிரச்சனைக்கும் அவருக்கும் எந்த லிங்க்கும் இல்ல" என்றவள் அவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேற…
போகும் அவளையே கொலை வெறியோடு பார்த்த விக்ரம் யாருக்கே ஃபோன் செய்து "ப்ளான் சக்ஸஸ். அந்த மாதவனை விட்டு" என்றுவிட்டு ஃபோனை கட் செய்தான்.
