விழி வழி காதல் நுழைந்ததடி 4
விழி 4
தன்வி கையில் ஜூஸை வைத்துக் கொண்டு வேண்டா வெறுப்பாக அங்கிருந்தவர்களின் முகத்தைப் பார்த்தபடி, அங்கிருந்து எப்போது செல்லலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தவளின் முகத்திலேயே அவளுக்கு அங்கு இருப்பது பிடிக்கவில்லை என்று உணர்ந்து கொண்ட ஆதர்ஷ், தன் அலைபேசியை எடுத்தவன், "இன்னும் பத்து நிமிடத்தில் இங்கிருந்து கிளம்பலாம்" என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.
கையிலிருந்த அலைபேசித் திரையில் வெளிச்சம் தெரிய அதை எடுத்துப் பார்த்தவள், முகத்தில் பல்ப் எரிந்தது. நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் ஆதர்ஷினைத் தேட, மறுபடியும் குறுஞ்செய்தி வந்து அலைபேசி அதிர்ந்தது.
அதில், "உனக்கு ரைட் சைடுல இருக்கேன்டி" என்றிருந்தது. தன்வி உடனே அவன் சொன்ன திசையைத் திரும்பி அவனைப் பார்த்து, "சோ ஸ்வீட் பாஸ்" என்று இதழ்களை அசைக்க, மீண்டும் குறுஞ்செய்தி.
"இப்பவாவது சிரிடி… வந்ததிலிருந்து மூஞ்சை ஜிஞ்சர் தின்ன மங்கி மாதிரி வச்சுட்டு இருக்க" என்றிருக்க, தன்வி அவனைப் பார்த்து முறைத்தவள், "உங்க மூஞ்சியை முன்னப் பின்னக் கண்ணாடியில் பார்த்தது இல்லையா பாஸ்" என்று கண்ணடிக்கும் எமோஜியை அவள் பதிலாக அனுப்ப, அதைப் படித்து அவளை முறைத்தவன், கோவமாகச் சிவந்திருக்கும் எமோஜிவை அவளுக்கு அனுப்பி வைத்தான்.
அதைப் பார்த்து அவனுக்கு இதழ் சுழித்து ஒழுங்கு காட்டியவள், "நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன். அப்புறம் கிளம்பலாம்." என்று பதிலுடன் ஈயென்று இளிக்கும் எமோஜியை அனுப்பிவிட்டு ஹோட்டலின் குளியலறைப் பகுதியை நோக்கிச் சென்றாள்.
முகத்தைக் கழுவி, டிஷ்யூவினால் முகத்தைத் துடைத்துக் கொண்டவள், அந்தப் பெரிய ஹோட்டலின் நீண்ட காரிடாரில் நடந்து வந்து கொண்டிருக்க, திடுக்கென்று அவள் முன்னால் வந்து நின்றான் அருண்.
அவள் அவனை விட்டு ஓரடித் தள்ளி நின்ற போதும் அவனின் மீது வீசிய மதுவின் நெடி தன்வியின் நாசியைத் துளைக்க, அவன் குடித்திருக்கிறான் என்று உணர்ந்தவள், அருவருப்பாக முகத்தைச் சுளித்தபடி கைகொண்டு மூக்கை மூடிக் கொண்டாள்.
"என்ன தன்வி மேடம்… எப்படி இருக்கீங்க" என்றவன் குரல் தெளிவாக இல்லாமல் இருக்க ஆட்கள் யாரும் இல்லாமல் இருந்த அந்த இடத்தில், இதற்கு மேல் தனியாக நிற்பது நல்லதில்லை என்று உணர்ந்த தன்வி அங்கிருந்து நகரப் பார்க்க, அவள் கையைப் பிடித்து விட்டான் அருண்.
"ஏய்…! எங்கடி ஓடப் பார்க்குற…? அன்னைக்கு என்ன சொன்ன நீ… தப்பாப் பேசினா செருப்பால் அடிப்பேன்னு சொன்ன இல்ல, இப்ப நான் பேசுறது மட்டும் இல்லடி, அதுக்கு மேலயும் செய்யப் போறேன். எங்க, இப்ப அடி பார்க்கலாம்…" என்று அவள் கையை இன்னும் அழுத்தமாகப் பிடித்த அருண், "இப்ப என்னடி பண்ணப் போற நீ…" என்று போதையில் உளறியவனிடம் இருந்து தன் கையை உருவப் போராடியவள், "டேய், மரியாதையா என் கைய விடு, இல்ல நடக்குறதே வேற" என்று விரல் நீட்டி எச்சரித்தவள், அவன் கையிலிருந்த தன் கையை உருவப் பார்க்க, அது அவளால் முடியவில்லை. அவ்வளவு இறுக்கமாக அவள் கையைப் பிடித்திருந்தான் அவன்.
"என்னடி பண்ணுவ? உன்னால என்னை ஒண்ணும் பண்ண முடியாதுடி… இன்னைக்கு நான் தான் உன்னை என் இஷ்டப்படி எல்லாம் பண்ணப் போறேன்" என்று வக்கிரமாகச் சிரித்தவன் அவள் துப்பட்டாவில் கையை வைக்க, தன்வி சட்டெனத் தன் கால் முட்டியை மடக்கி, அவன் இரு கால்களுக்கு இடையில் எட்டி ஓங்கி ஒரு உதை உதைக்க, திடீரென்று அவள் அப்படிச் செய்வாள் என்று எதிர்பார்க்காத அருண், "அம்மா" என்று கத்தியபடி வலியில் அங்கேயே சுருண்டு விழுந்தான்.
அந்த சில நொடியைப் பயன்படுத்திக் கொண்ட தன்வி அங்கிருந்து ஓட ஆரம்பித்தாள்.
அருண் வலியோடு எழுந்தவன், "என்னை அடிச்சிட்ட இல்லடி… உன்னை விடவே மாட்டேன்" என்று அவளை விரட்டி வர, தன்வி வேகமாக ஓடியவள் யார் மீதோ மோதி நின்ற அடுத்த வினாடி தன் மீது மோதியவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
"ஆது… ஆது…! அந்த அருண் ராஸ்கல், என்…என்னை" என்று மூச்சு வாங்கியவள் முதுகைத் தடவிக் கொடுத்து அவளை நிதானமாக்கியவன், பார்வை அவள் பின்னால் அவளை விரட்டி வந்த அருண் மீது விழ, தன்வியைத் திருப்பி தன் வலப்பக்கத் தோளில் சாய்த்துக் கொண்டவன், தன் இடது காலால் அருண் நெஞ்சில் ஓங்கி ஒரு உதை விட அருண் நான்கடி தள்ளிப் போய் விழுந்தான்.
விழுந்து கிடந்த அருண் அருகில் சென்று அவன் நெஞ்சில் கால் வைத்து மிதித்தவன் கண்களில் அத்தனை ஆத்திரம்.
"உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா அவ மேல கையை வைப்ப… அன்னைக்கு அவகிட்ட நீ அத்து மீறிப் பேசினது தெரிஞ்ச அப்பவே உன்னைத் தூக்கிப் போட்டு மிதிச்சிருக்கணும்.அதைச் செய்யாம விட்டது தான்டா என் தப்பு… அதான் இன்னைக்கு அவமேல கை வைக்கும் அளவு உனக்குத் துணிச்சல் வந்திருக்கு" என்று மீண்டும் அவன் நெஞ்சில் ஓங்கி மிதிக்க, தன்வி ஓடிவந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டவள், "வேணாம் பாஸ்" என்று சொல்ல,
தன் கையைப் பிடித்தவளை தீப்பார்வை பார்த்த ஆதர்ஷ், "விடுடி கைய… அன்னைக்கே இவனை எல்லாம் பொளந்திருக்கணும். உன் பேச்சைக் கேட்டு சும்மா விட்டதுனால தான், இப்போ உன் கையைப் புடிக்கிற அளவுக்கு அவனுக்குத் தைரியம் வந்திருக்கு" என்று மீண்டும் அவனை அடிக்கப் போக, "ப்ளீஸ் பாஸ்… ப்ளீஸ் அவனை விட்ருங்க, இதுக்கு மேல அவனை அடிச்சா அவன் செத்துப் போயிடுவான். ப்ளீஸ் பாஸ்… ப்ளீஸ், எனக்காக…" என்று கெஞ்சியவளைப் பார்த்து இழுத்து மூச்சு விட்டுத் தன் கோவத்தைக் கட்டுப்படுத்தியவன், "இனி அவ இருக்கற திசைப் பக்கம் கூட உன் பார்வை படக்கூடாது… மீறி உன்னை நான் பார்த்தேன்னு வை… பார்த்த இடத்துலயே உன்னை அடிச்சே கொன்னுடுவேன்" என்று அருணை எச்சரித்து விட்டு தன்வியின் கையை இறுக்கிப் பிடித்தவன், "வாடி" என்று அங்கிருந்து அவளை வேகமாக இழுத்துச் சென்றான்.
தன்வி சென்ற கொஞ்ச நேரத்தில் ஆதர்ஷூக்கு என்னவோ போல் மனது அடித்துக் கொள்ள, உடனே தன்வியைப் பார்க்க வேண்டும் போல் தோன்றிய மறுநொடி அவளைத் தேடி வந்தவன் கண்ணில் தெரிந்தது அருண் விரட்டி வர, தன்வி வேகமாக ஓடிவந்த காட்சிதான். அதைப் பார்த்தவனுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ... அருணைக் கொல்லும் அளவுக்குச் சென்று விட்டான். தன்வி மட்டும் தடுக்காமல் இருந்திருந்தால் அன்று அருணுக்குக் கடைசி நாளாகத் தான் இருந்திருக்கும்.
தன் முகத்தைத் தொங்கப் போட்டபடி வீரராகவன் அருகில் தன்வி அமர்ந்திருக்க, ஆதர்ஷ் அந்த ஹாலில் குறுக்கும் நெடுக்குமாகக் கோவமாக நடந்து கொண்டிருந்தான்.
"அந்த நாய்க்கு எவ்ளோ தைரியம் இருந்தா இவ மேல கை வச்சிருப்பான். அவனை எல்லாம் அங்கயே ரெண்டா வெட்டிப் போட்டிருக்கணும். இவ வந்து என்னைப் புடிச்சி ஸ்டாப் பண்ணிட்டா… இல்ல, அவனுக்கு இன்னைக்குச் சங்கு தான்" என்று இன்னும் கோவம் அடங்காமல் ஆதர்ஷ் புகைந்து கொண்டிருக்க, தன்வி அவனை நிமிர்ந்து பார்த்தவள், "ம்ம்ம்… அந்தப் பொறுக்கியக் கொன்னுட்டு நீங்க ஜெயிலுக்குப் போவீங்க, நானும் தாத்தாவும் அதைப் பார்த்துட்டு வேதனையில் சாகணும், அதான் உங்களுக்கு வேணும் இல்ல…" என்று அவளும் கோவத்தில் கத்த,
"வாய மூடுடி… ஒரு வார்த்தை பேசின, மண்டைய உடைச்சிடுவேன் பார்த்துக்க. அன்னைக்கே அவனை ஏதாவது பண்ணி இருந்திருந்தா இப்ப இப்படி நடந்திருக்காது இல்ல, பெரிய இவளாட்டம் நீதான என்னைத் தடுத்த" என்று கொதிக்க, தன்வி எதுவும் சொல்ல முடியாது அமைதியாகி விட்டாள்.
"போதும்டா, சும்மா அவளைத் திட்டுட்டு. ஏற்கனவே அவளே பயந்து போயிருக்கா, இன்னும் பேசி அவளை டென்ஷன் பண்ணாத…" என்ற தாத்தா, தன்வியின் தலையைக் கோதியபடி, "நீ போய்த் தூங்குடா… எல்லாத்தையும் காலையில் பேசிக்கலாம். நீ ரெஸ்ட் எடுக்குறது தான் இப்ப முக்கியம், போடா" என்ற தாத்தாவுக்கு, "சரி" என்று தலையாட்டிய தன்வி அவுட் ஹவுஸ் செல்லப் போக, "ஏய், இன்னைக்கு நீ இங்கயே தூங்கு. இன்பேக்ட் இனிமே நீ இந்த வீட்ல தான் இருக்கணும். காலையில உன் திங்ஸ் எல்லாத்தையும் எடுத்து வந்து இங்க வச்சிடு" என்று அழுத்தமாகச் சொல்ல, தன்வி ஏதோ சொல்ல வாய் திறக்க, "ஏதாவது பேசினா, அவ்ளோதான் சொல்லிட்டேன். ஒழுங்கா நான் சொல்றதைக் கேக்குற வழியப் பாரு. இப்பப் போய்த் தூங்கு" என்று கட்டளையாகச் சொல்ல அவனை முறைத்தபடியே கெஸ்ட் ரூமிற்குச் சென்றாள் தன்வி.
"சீக்கிரம் ஒரு நல்ல பையனைப் பார்த்து இவ கல்யாணத்தை முடிக்கணும் தாத்தா." என்ற பேரனை ஏறிட்டுப் பார்த்த வீரராகவன்,
"அவளுக்குச் சொன்னது தான் உனக்கும். நாளைக்குக் காலையில இது பத்திப் பேசலாம், அப்ப என் முடிவை நான் சொல்றேன். அதுவரை நீ எதையும் யோசிக்க வேணாம், இப்பப் போய் நீயும் தூங்கு" என்ற வீரராகவன் அவர் அறையை நோக்கிச் செல்ல, ஆதர்ஷ் அவரைப் புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தான். ஏனோ அவரின் பேச்சு இன்று வினோதமாக இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. ஆனால் என்ன என்று அவனுக்குப் புரியவில்லை. அதை யோசித்தபடியே தன் அறைக்குச் சென்றவனுக்கு நாளை தாத்தா சொல்லப் போகும் அவர் முடிவு தெரிந்தால் அவன் நிலைமை என்ன ஆகுமோ?
இரவு முழுவதும் நடந்ததை நினைத்து உச்சக்கட்டக் கோவத்தில் இருந்தவனின் அலைபேசி அடித்து அடங்கி இருக்க, அதை எடுத்துப் பாரத்தவன் இதழ்கள் தன்னால் மலர்ந்தது. மெல்ல அறையை விட்டு வெளியே வந்தவன், தாத்தா இருந்த அறையை எட்டிப் பார்க்க அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்படியே தன்வி அறையையும் பார்க்க அவளும் தூங்கி இருக்க, மெல்லப் படியேறி மாடிக்குச் சென்ற ஆதர்ஷ் அந்த எண்ணிற்கு வீடியோ கால் செய்தான்.
நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தவன், இன்று ஹோட்டலில் நடந்ததையும் அதற்குப் பின் தன்வி திருமணத்தைப் பற்றி அவன் பேசியதையும் அதற்குத் தாத்தா சொன்னதையும் ஒன்று விடாமல் சொன்னவன், "நாளைக்குத் தாத்தா என்ன சொல்லப் போறார்னு தெரியல… பட், எனக்கு என்னமோ ஒரு மாதிரி இருக்கு" என்றவன் திரையில் தெரிந்த உருவத்திடம், "எது நடந்தாலும் நீ என் கூட இருக்கேன்ற நம்பிக்கையில் தான் நான் இருக்கேன். நீ மட்டும் இல்லாட்டி நான்" என்றவனின் குரல் தழுதழுக்க எதிர் முனையில் கேட்ட அதட்டல் குரலில் தன்னை அடக்கிக் கொண்டவன், "நான் நாளைக்குக் கால் பண்றேன்" என்று விட்டு இணைப்பைப் துண்டித்தான்.
அவன் உள்ளுணர்வு சொன்னது போல் அவனை மொத்தமாக அதிர்ச்சியில் ஆழ்த்த உள்ள முடிவை எடுத்திருந்தார் வீரராகவன்.
நாளைய பொழுது தனக்குள் வைத்திருக்கும் மாற்றத்தை உணராமல் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த தன்வியின் வாழ்க்கை நாளையில் இருந்து அடியோடு மாறப் போகிறது.
சிறுவயதில் இருந்து ஆதர்ஷின் அன்பை மட்டுமே பார்த்து வளர்ந்தவள், இனிமேல் அவனின் கோவத்தையும், வெறுப்பையும் பார்க்கப் போகிறாள். அந்தப் பேதை உள்ளம் அதைத் தாங்கிக் கொள்ளுமா? ஆதர்ஷ் பற்றிய முழு உண்மைகளும் தெரிய வரும் போது தன்வியின் நிலை என்னவாகும்.? அந்த வீட்டுப் பெண்போல் போல் வளர்ந்த தன்வியிடம் வீரராகவனும், ஆதர்ஷும் சொல்லாமல் விட்ட விஷயங்கள் அவள் வாழ்க்கையின் பாதையை மாற்றுமா?
மறுநாள் காலை கண் விழித்த தன்விக்கு நேற்றைய தினம் நடந்ததெல்லாம் ஞாபகம் வர அவள் முகம் சட்டென வாடி விட்டது. ‘நல்லவேளை கடவுளே! நேத்து அந்த அருணுக்கு ஒண்ணும் ஆகல… பாஸ் இருந்த கோவத்துக்கு எங்க அவனை அடிச்சே கொன்னுடுவாரோன்னு பயந்தே போயிட்டேன். நல்லவேளை, ஒண்ணும் தப்பா நடக்கல… ஆனாலும் பாஸ்க்கு ரொம்பக் கோவம் வருது. இனிமே சோத்துல உப்பு, காரம் கொறச்சுப் போடனும்." என்று மனதில் புலம்பியபடியே எழுந்து குளியலறைக்குச் சென்றவள், தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு சமையலறைக்குச் சென்று காஃபியைக் கலந்து கொண்டு வரவும் ஆதர்ஷன் மற்றும் வீரராகவன் வெளியே வரவும் சரியாக இருந்தது.
மூவரும் ஒன்றாக அமர்ந்தபடி காஃபி குடிக்க, ஆதர்ஷின் பார்வை முழுவதும் தாத்தாவின் மேலேயே இருந்தது. இன்று அவரின் முடிவைச் சொல்லுவதாக அவர் சொல்லியிருக்க, அவர் முடிவு என்னவாக இருக்கும் என்று இரவு முழுவதும் யோசித்துக் கொண்டே இருந்தவன் விழிகள் இப்போது தாத்தாவை ஆர்வமாகப் பார்த்தது.
தன்வி காலி டம்ளர்களை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட, "தாத்தா நேத்து நம்ம தன்வி கல்யாணம் பத்திச் சொன்னேன். நீங்களும் காலையில அது பத்திப் பேசலாம்னு சொன்னீங்க…" என்று சொல்ல, தாத்தா தலையை மட்டும் ஆட்டி, "ம்ம்ம்" என்க, ஆதர்ஷனின் பொறுமை பறந்தது.
"என்ன தாத்தா… நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்? ம்ம்ம் னு சொல்றீங்க? நம்ம தன்வி கல்யாணம் பத்திப் பேசிட்டு இருக்கேன் தாத்தா… நீங்க என்ன யோசிச்சு வச்சிருக்கீங்க? அவளுக்குத் தகுந்த மாதிரி மாப்பிள்ளை யாரும் உங்க மனசுல இருக்கானா?" என்று கேட்கும் போதே வாசலில் கார் ஒன்று வரும் சத்தம் கேட்டு ஆதர்ஷ் யாரென்று பார்க்க, அங்கு வீட்டுக்குள் வந்து கொண்டிருந்த அருணைப் பார்த்தவன் ரத்தம் கொதிக்க சட்டென எழுந்து சென்றவன், "பொறுக்கி ராஸ்கல், எவ்ளோ தைரியம் இருந்தா என் வீட்டுக்கே வருவ" என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்க, அருணுக்குப் பின்னால் வந்த அவனின் தாய் ஆதர்ஷின் முன் வந்து நின்று அவனைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டவர், "ப்ளீஸ் ஆதர்ஷ், அவனை ஒண்ணும் பண்ணிடாத… அவன் செஞ்ச தப்புக்கு மன்னிப்புக் கேட்க தான் நாங்க வந்திருக்கோம். குடி போதையில் தப்புப் பண்ணிட்டான், தயவு செய்து அவனை மன்னிச்சிடுப்பா" என்று அவன் முன் கண் கலங்க நின்ற அந்தத் தாயின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அருணின் சட்டையில் இருந்து கையை எடுத்த ஆதர்ஷ், "இந்த ஒரு தடவை உங்களுக்காக இவனைச் சும்மா விடுறேன். இனிமே இப்படி ஏதாச்சும் செஞ்சான்னு வைங்க, அப்புறம் இவன் பொணத்தைத் தான் பார்ப்பீங்க" என்றான் அருணை முறைத்தபடியே.
"ஆதர்ஷ் என்ன பழக்கம் இது… வீட்டுக்கு வந்தவங்களை வாசல்ல நிக்க வச்சுப் பேசுறது." என்று பேரனைக் கடிந்தவர், "நீங்க உள்ள வாங்கம்மா, நீயும் வாப்பா" என்று அருணையும் அழைத்து அமர வைத்தவர்,
"தன்வி ரெண்டு காஃபி கொண்டு வாம்மா" என்று குரல் கொடுக்க, "இப்ப தான தாத்தா கொடுத்தேன். இனிமே பதினோரு மணிக்கு தான் உங்களுக்கு அடுத்த காஃபி… நடுவுல நோ நோ" என்று அவள் சமையலறையில் இருந்து கத்த வீரராகவன் சிரித்தபடி, "காஃபி எனக்கில்லடா, ரெண்டு கெஸ்ட் வந்திருக்காங்க, அவங்களுக்கு தான். எடுத்திட்டு வாம்மா" என்றதும், "இதோ வரேன் தாத்தா" என்றவள் காஃபி டிரேயுடன் வந்தவள், அங்கிருந்த அருணைப் பார்த்துவிட்டு அப்படியே நின்று திரும்பி ஆதர்ஷனைப் பார்க்க, அவன் கண்களை மூடித் திறந்து, "நான் இருக்கிறேன், நீ தைரியமாப் போ" என்று உணர்த்த, தன்வி அவர்கள் இருவருக்கும் காஃபியைக் கொடுத்துவிட்டு நகரப் போக, "ஒரு நிமிஷம் மா" என்ற அருணின் அம்மாவின் வார்த்தையில் நின்று திரும்பி அவரைப் பார்த்தாள் தன்வி.
"நேத்து என் பையன் செஞ்சது பெரிய தப்பு தான். ஒரு பொண்ணா அந்த நேரம் உன்னோட மனசு எப்படி வலிச்சிருக்கும்னு என்னால உணர முடியுது" என்றவர் எழுந்து நின்று அவளைக் கையெடுத்துக் கும்பிட்டு, "இவனைப் பெத்த பாவத்துக்கு என்னை மன்னிச்சிடு மா" என்று உடைந்த குரலில் கேட்க, தன்விக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
"அச்சோ ப்ளீஸ்மா, இப்படி எல்லாம் பண்ணாதீங்க… நான் உங்களை விட வயசில் சின்னவ, என்கிட்டப் போய். ப்ளீஸ், கையைக் கீழ போடுங்கம்மா. நா…நான் அவரை மன்னிச்சிட்டேன். நீங்க இப்படி எல்லாம் பண்ணாதீங்க" என்றவளை வாஞ்சையாகப் பார்த்தவர் திரும்பி வீரராகவனைப் பார்த்து, "நான் மன்னிப்புக் கேக்க தான் இங்க வந்தேன். ஆனா, தன்வியைப் பார்த்த பிறகு என் மனசுல ஒரு ஆசை" என்றவரை அனைவரும் புரியாமல் பார்க்க, அடுத்து அவர் கேட்டதில் அனைவருக்கும் அதிர்ச்சி என்றால், ஆதர்ஷ் கோவத்தின் உச்ச நிலைக்கே சென்று விட்டான்.
"தன்வியை அருணுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பீங்களா?" என்று அவர் சட்டெனக் கேட்டுவிட,
அதற்கு ஆதர்ஷ், "வாட் நான்சென்ஸ்…! என்ன கேக்குறீங்கன்னு புரிஞ்சு தான் கேட்டீங்களா நீங்க. யாருக்கு யாரைப் பொண்ணு கேக்குறீங்க.? அவ எங்க வீட்டோட கௌரவம். அவளைப் போய் உங்க பையனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுப்போம்னு எப்படி நெனச்சீங்க நீங்க… ப்ளீஸ், நான் எதுவும் தப்பாப் பேசும் முன் தயவுசெஞ்சு இங்கிருந்து போயிடுங்க" என்று சொல்ல, "ஆதர்ஷ்" என்ற தாத்தாவின் கண்டனக் குரலில் அமைதியானான் ஆதர்ஷ்.
"வீட்டுக்கு வந்தவங்ககிட்ட இப்படித் தான் மரியாதை இல்லாமப் பேசுவியா ஆதர்ஷ்.? என்ன பழக்கம் இது. அவங்க மனசுல நினைச்சதைக் கேட்டாங்க, அதுல என்ன தப்பிருக்கு? இதுல முடிவு பண்ண வேண்டியது நீயோ நானோ இல்ல, அவ தான்" என்றவர் தன்வியைப் பார்க்க,
அவளோ, "என்னோட முடிவுன்னு தனியா எதுவும் இல்ல தாத்தா, உங்க இஷ்டம்" என்றவள் உள்ளே சென்றுவிட, அருணும் அவன் தாயும் ஒரு எதிர்பார்ப்போடு வீரராகவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
தன்வியின் வார்த்தையில் மனம் மகிழ்ந்த வீரராகவன், "மன்னிச்சிடுங்கம்மா… நீங்களே பார்த்தீங்க இல்ல, அவ எங்க மேல வச்சிருக்கற நம்பிக்கையை. இந்த அளவு என்னை நம்பும் பொண்ணுக்கு நான் எப்படிப்பட்ட பையனைப் பார்க்கணும்னு நீங்களே சொல்லுங்க…" என்றார் நிதானமாக.
அவர் வார்த்தையில் தலை குனிந்த அருணின் தாய், "அந்தப் பொண்ணை மருமகளாக அடையும் அதிஷ்டம் எங்களுக்கு இல்ல…" என்று பெருமூச்சு விட்டபடி எழுந்து கொண்டவர், "நாங்க கிளம்பறோம்" என்று புறப்பட்டனர்.