கன்னத்தில் காதல் முத்தம் 4
காதல் 4
அன்று வெள்ளிக்கிழமை, காலை ஆறு மணிவரை இழுத்துப் போர்த்தித் தூங்கிக் கொண்டிருந்த ஆராத்யாவை அவள் கைப்பேசியின் ஓசை தட்டி எழுப்பியது.
தூக்கக் கலக்கத்தில் கைப்பேசியை எடுத்து காதில் வைத்த ஆராத்யா, "ஹலோ… யாரு?" என்று இழுக்க, எதிர் முனையில் அனல் தெறிக்க யாரோ பலமாக மூச்சு விடும் சத்தம் கேட்டு, ஆராத்யா சட்டென படுக்கையிலிருந்து எழுந்து கண்களை கைகளால் அழுத்தித் துடைத்துக் கொண்டு தொலைப்பேசியைப் பார்த்து விட்டு, கடிகாரத்தில் மணியைப் பார்த்து நாக்கை கடித்தபடி,
"ஏய்… ஏய் ஷிவி சாரிடி, சாரி கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்டி. பத்து நிமிஷம், ஜஸ்ட் டென் மினிட்ஸ் குடு, சட்டுன்னு குளிச்சிட்டு ஓடி வந்திடுறேன்… என் செல்லம் இல்ல… வெய்ட் பண்ணுடா" என்று எதிர்முனையில் இருந்த ஷிவானியை பேசக்கூட விடாமல் இவள் படபடவென்று பேசிவிட்டு கைப்பேசியை அணைத்து விட்டு குளியலறைக்கு ஓட, இங்கு ஆராத்யாவின் வீட்டு வாசலுக்கு வெளியே காரில் அமர்ந்திருந்த ஷிவானி, "இவள வச்சிட்டு முடியலடா சாமி…" என்று புலம்பியபடி தலையில் அடித்துக் கொண்டாள்.
வெகு நாள்களாக ஆராத்யா அவளுக்குப் பிரியமான அம்மன் கோவிலுக்குப் போக வேண்டும் என்று பல்லவியைக் கேட்க, அவளைத் தனியாகச் செல்லப் பல்லவி அனுமதிக்கவே இல்லை. பல்லவி ஆதியுடன் அவளைக் கோவிலுக்குப் போகச் சொல்ல, கல்யாண வேலையோடு, தொழில்முறை வேலைகள் ஆதியின் தலைக்கு மேல் இருந்ததால் ஆதியால் அவளுடன் செல்ல இயலவில்லை.
"அத்த… ப்ளீஸ் அத்த… ஆதிமாமா எப்பாரு வேல வேலன்னு சுத்திட்டு இருக்காரு அத்த… இவரு எப்ப ஃப்ரீ ஆகுறது? நான் எப்ப கோயில் போறது? நான் பேசாம நம்ம ஷிவி கூட கோவிலுக்கு போய்ட்டு வரேனே?" என்று பாவமாகக் கேட்க, பல்லவிக்கு ஷிவானியை அவ்வளவாகப் பிடிக்காத காரணத்தால் ஆராத்யாவை போக வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
"மாமா பாரு மாமா… நீயும் எப்பபாரு பிஸியாவே இருக்க, அத்தைக்கும் கல்யாணம் வேலை இருக்கு, அதான் நான் ஷிவி கூட போறேன்னு சொல்றேன். அதையும் அத்த வேணாம்னு சொல்றாங்க… பாரு மாமா…" என்று தன் குழந்தை குரலில் கொஞ்ச, அவள் மாமனுக்குத் தான் பாவமாக இருந்தது.
"அம்மா அவ கோயிலுக்குத் தானா போகணும்னு சொல்றா, போகட்டுமே. அவளும் எவ்ளோ நேரம் தான் இந்த வீட்டையே சுத்தி சுத்தி வருவா? பாவம்மா… என்னால முடிஞ்சா நான் கூட்டிப் போவேன். பட், எனக்கு நிறைய வேலை இருக்குமா. மேரேஜ் முன்ன எல்லாத்தையும் முடிச்சா தான், சரியா இருக்கும்.
இப்ப என்ன அவ தனியாவ போறேன்னு சொல்ற? ஷிவானி கூடத் தானே போறேன்னு சொல்றா, போய்ட்டு வரட்டுமே" என்றவனை பல்லவி அழுத்தமாக ஒரு பார்வை பார்க்க, ஆதி அன்னையைப் பார்த்து மெதுவாகக் கண்களை மூடித்திறந்தவன்,
"ஆரா நீ நாளைக்குக் கோயிலுக்கு போய்டு வா. அப்டியே ஷிவானிக்கு கஷ்டம் இல்லாட்டி கல்யாண ஷாப்பிங்க்கு உன்னோட வராளான்னு கேளு… அவ வரேன்னு சொன்னா, நீயும் அவளும் போய் உனக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கிடுங்க" என்றதும்,
தன் தோழியோடு ஆனந்தமாக ஊர் சுற்றலாம் என்பதை கேட்ட அடுத்த கணம், "தேங்க்யூ மாமா… யூ ஆர் சோ ஸ்வீட்" என்றபடியே திரும்பி பல்லவியைப் பார்த்தவள், "ஹிட்லர் அத்த…" என்றாள்.
அவளை அடிக்க வந்த பல்லவியின் கையில் சிக்காமல் துள்ளிக் குதித்தபடி அங்கிருந்து ஓடியவள், ஷிவானிக்கு அழைத்து 'நாளை காலையில் அம்மன் கோயில் போக வேண்டும். காலை சீக்கிரம் வா' என்று சொல்லி இருந்தாள்.
"ஆதி… இதெல்லாம் எனக்கு சரியா படல, நீ இப்டி எல்லா விஷயத்திலும் அவ பேச்சையே கேட்டுட்டு இருந்த, எதுவும் உருப்படிய நடக்காது. அவ ஒன்னும் இன்னும் சின்ன புள்ள இல்ல, பாவமா முகத்தை வச்சிட்டு உன்னைக் கெஞ்சிக் கெஞ்சி காரியத்தை சாதிக்க… அவதான் அப்டின்னா… நீ அவ முகம் கொஞ்சம் வாடினாலும் அப்டியே உருகிடுற… அதை அவ அவளுக்குச் சாதகமா யூஸ் பண்றா" என்று பொரிய, அவர் தோளில் கையைப் போட்ட ஆதி,
"ம்மா விடும்மா… அவளும் பாவம் தானா? எனக்கும் டைம் இல்ல. அத்தோட ஷிவானி என்ன தெரியாத ஆளா என்ன? சின்ன வயசிலிருந்து நமக்கு தெரிந்த பொண்ணு தானம்மா அவ… அவ கூட போனா என்ன?" என்ற மகனின் முகத்தைப் பார்த்த பல்லவி,
"அப்பவும் சரி இப்பவும் சரி, எனக்கு அந்த பொண்ணு ஷிவானிய சுத்தமா பிடிக்காது. எனக்கு என்னமோ அவளைப் பார்த்தாலே ஏதோ தப்பா தெரியுது ஆதி. எனக்கு என்னென்னு சொல்ல தெரியல. ஆனா, அவகிட்ட ஏதோ தப்ப தெரியுது. குறிப்பா இவ்ளோ நாள் அமெரிக்கால இருந்தவ, தீடிர்னு எதுக்கு இந்தியா வரணும்? அதுவும் ஆருவுக்கும் உனக்கும் கல்யாணம் வச்சிருக்க, இந்த டைம்ல கரெக்ட்டா அவ இங்க வந்திருக்கிறது எனக்கு என்னமோ உறுத்தலாவே இருக்கு ஆதி." என்றார் தவிப்பாக.
"ம்மா… நீ நினைக்குற மாதிரி எதுவும் இருக்காதும்மா. நீ தேவை இல்லாம கண்டதையும் நினைச்சு குழப்பிக்காம இரும்மா. அவ ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் இங்க வந்திருக்கா, அவ வந்த நேரம் எங்க கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு அவ்ளோதான். இட்ஸ் ஜஸ்ட் ஏ கோ இன்சிடென்ட், நீ தேவையில்லாதை எல்லாம் போட்டு யோசிக்காத…" என்றவன் வெளியே கிளம்ப, பல்லவிக்கு மட்டும் ஷிவானியிடம் ஏதோ ஒன்று நெருடியது.
ஷிவானியுடன் கோயிலுக்கு சென்ற ஆராத்யா கைகூப்பி நின்றபடி, அம்மன் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி. ஷிவானி சாமி கும்பிட்டு முடித்து திரும்பி ஆராவை பார்த்து மெதுவாக சிரித்தவள், "என்ன ஆரா? உங்க அம்மன்கிட்ட பேச வேண்டியதை எல்லாம் பேசிட்டியா? இப்ப போய் கோயில் பிரகாரத்தை சுத்திட்டு வரலாமா?" என்று புன்னகையுடன் கேட்க ஆரா, "ம்ம்ம்" என்று தலையாட்டியபடி ஷிவானியுடன் சென்றாள். இருவரும் கோயிலை மூன்று முறை வலம் வந்து முடித்து ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டனர்.
"என்ன ஆரா… நீ இப்ப ஹாப்பி தானா? என்று கேட்ட ஷிவானியை திரும்பி பார்த்து, "ரொம்ப… ரொம்ப ரொம்ப… ஹாப்பி…" என்ற ஆராத்யா முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
"உனக்கு தான் தெரியுமே எனக்கு இந்த அம்மன் எவ்ளோ ஸ்பெஷல்னு? அம்மா இறந்த அப்றம் நான் அம்மாவா நினைக்குறது, இந்த அம்மனை தான். அம்மா இருக்கும் போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாம என்னை இங்க கூட்டிட்டு வருவாங்க. நாங்க ரெண்டு பேரும் இதோ நம்ம இப்ப உக்காந்து இருக்க, இந்த மண்டலத்தில் உக்காந்துட்டு நிறைய பேசுவோம்.
இந்த இடம் எங்க ரெண்டு பேரோட ஃபேவரட் பிளேஸ் ஷிவி… ஒரு முறை நானும் அம்மாவும் இங்க வந்தப்போ, அம்மா ரொம்ப நேரம் சாமி முகத்தையே பாத்துட்டு இருந்தாங்க. அப்றம் தீடிர்னு என்ன நினைச்சாங்களோ? என்னைப் பார்த்து, என் நெத்தியில் குங்குமத்தை வச்சிட்டு, அம்மா உன்னோட இல்லாம போனாலும் இந்த அம்மன் என்னைக்கும் உனக்கு துணையா இருப்பா ஆரும்மா…
உனக்கு என்ன தேவைன்னாலும், இல்ல… எப்டி பட்ட பிரச்சனை வந்தாலும் இவளை நம்பு, நிச்சயம் என்னிடத்தில் இருந்து இந்த அம்மன் உன்னை காப்பாத்தும்னு சொன்னாங்க… என்ன நினைச்சு அவங்க அப்டி சொன்னாங்கன்னு எனக்கு தெரியல. ஆனா, அதுதான் நான் அம்மாவோட இந்த கோயிலுக்கு வந்தது. கடைசி… அம்மா… அதுக்கு அப்றம் இல்லாமையே" என்றவள் குரலில் தழுதழுக்க, அவள் கண்கள் கண்ணீரில் நிறைந்து விட்டது.
"ஏய் ஆரா… என்ன இது குழந்தை மாதிரி" என்று அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டு அவள் கண்களை துடைத்துவிட்ட ஷிவானி, "அம்மா நல்ல ஆத்மா ஆரா. அதான் அவங்க மனசுக்குள் என்னமோ தோனி இருக்கு, தனக்கு பிறகு தன் பொண்ணுக்கு இன்னொரு அம்மா வேணும்னு நினச்சு தான் உன் பொறுப்பை இந்த அம்மன் கையில் கொடுத்து போயிருக்காங்க.
நீ எப்பவும் பாதுகாப்பா தான் இருக்கேன்ற நிம்மதி அம்மாக்கு இருக்கும். நீ இப்டி அழுது, அவங்க ஆத்மாவை கஷ்டப்படுத்தாத" என்றதும் ஆரா சட்டென தன் அழுகையை நிறுத்தி கண்களை துடைத்துக் கொண்டாள்.
"நீ சொல்றது கரெக்ட் ஷிவி. எனக்கு மனசுக்கு கஷ்டமா இருந்தாலும் சரி, சந்தோஷமா இருந்தாலும் சரி, நான் இந்த அம்மன்கிட்ட வந்து அதை ஷேர் பண்ணிப்பேன். அந்த டைம் எனக்கு என்னோட அம்மாகிட்டையே பேசுறது போல அப்டி ஒரு நிம்மதி இருக்கும். அதான் வாரம் தவறாம இந்த கோயிலுக்கு வருவேன். ஆனா, இப்ப கொஞ்ச நாளா அத்தை என்னை தனியா வெளிய போகவிட மாட்றாங்க. கல்யாணம் நிச்சயமான பொண்ணு… சும்மா சும்மா வெளிய போகக்கூடாதுனு சொல்லி, என்னை வெளிய விடவே இல்ல ஷிவி. இன்னைக்கு கூட உன்னோட போறேன்னு சொன்னதும் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க தெரியுமா? அப்றம் ஆதிமாமா தான் பர்மிஷன் வாங்கிக் குடுத்தாரு.." என்றது தான் ஷிவானிக்கு மூக்கின் மேல் கோபம் வந்துவிட்டது.
"ஏய் நீ என்ன இன்னும் பால்குடிக்கிற பச்சபுள்ளையா? இல்ல இப்ப தான் தொட்டில்ல இருந்து ஏறங்கி நடக்க கத்துட்டு இருக்கீயா? ஒவ்வொன்னுக்கும் உங்க அந்த சொத்தை பர்மிஷன் குடுக்க… நீ என்ன அந்த அம்மாக்கு அடிமையா? உனக்கு வெளிய போகணும்னு தோணுச்சினா, நீ கிளம்பி போகவேண்டியது தான டி. எதுக்கு அந்த அம்மாகிட்ட கெஞ்சிட்டு இருக்க?" என்று பொரிந்தவள், "பர்மிஷன் குடுக்குறானாம்.. பர்மிஷன்… மை பூட்…" என்று பல்லை கடிக்க, ஆராத்யா தோழியை விசித்திரமாக பார்த்தாள்.
"ஏய் ஷிவி… என்னடி ஆச்சு? ஏன் உனக்கு இவ்ளோ கோவம் வருது. அத்தை என் நல்லதுக்கு தான்டி எல்லாமே செய்றாங்க… அது உனக்கும் தெரியும் தானா? தெரிஞ்சும் ஏன் இப்டி பேசுற நீ?" என்ற ஆராத்யாவின் முகத்தில் தெரிந்த பதட்டத்தை பார்த்து, சட்டென இயல்புக்கு வந்த ஷிவானி, "எனக்கு கோவம் எல்லாம் ஒன்னும் இல்ல ஆரா. அவங்க மேல எனக்கென்ன கோவம்? உன்னை இப்டி சும்மா அங்க போகாத, இங்க போகாதன்னு கன்ட்ரோல் பண்றது எனக்கு புடிக்கல… அதான் கத்திட்டேன். நத்திங் எல்ஸ். அதுசரி நீ உன் அம்மன் கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?" என்று பேச்சை மாற்ற, "எங்க நீயே சொல்லு பார்ப்போம்…" என்றாள் ஆராத்யா.
"ஆமா இது பெரிய சிதம்பர ரகசியம்… என்ன ஈஸ்வர் கூட உன்
கல்யாணம் நல்லபடி நடக்கணும்னு வேண்டி இருப்ப… சரிதானா?" என்ற
தோழியை சின்ன சிரிப்போடு பார்த்தவள், "நான் எதுவுமே வேண்டிக்கல ஷிவி. எனக்கு எது நல்லதுன்னு அந்த அம்மனுக்குத் தெரியும். அதை அவங்களே எனக்கு நல்லபடியா செஞ்சு வைப்பாங்க. சோ எனக்கு கேக்க ஒன்னுமே இல்லை." என்றவளை ஆழந்து பார்த்த ஷிவானி, "உனக்கு ஈஸ்வரோட கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு வேண்டிக்க தோணலயா ஆரா? என்று கேட்டாள்.
"இதுல கேக்க என்ன இருக்கு ஷிவி? ஆல்ரெடி வீ ஆர் மேரிட். சோ இதுல புதுசா வேண்டிக்க என்ன இருக்கு?" என்றாள்.
ஒருவேளை அவள் அன்னையாக நினைக்கும் அம்மனிடம் 'அப்டி ஒரு வேண்டுதலை வைத்திருக்க வேண்டுமோ?' என்று பின்னாளில் அவளை நினைக்கப் வைக்கப்போகிறது காலம் என்பது, பாவம் பாவைக்குத் தெரியவில்லை.
ஆராவை பார்த்து ஆழ்ந்து மூச்செடுத்த ஷிவானி, "சரி ஆரா டைமாச்சி, நீ நவக்கிரகங்களை சுத்திட்டு வா. நா இங்க உக்காந்து இருக்கேன். சுத்தி முடிச்சிட்டு சொல்லு. நான் போய் உனக்கு புடிச்ச சர்க்கரை பொங்கலை வாங்கிட்டு, அப்டியே காரை எடுத்துட்டு வரேன். நீ வாசலுக்கு வந்திடு" என்றதும் ஆரா நவக்கிரகங்களை சுற்ற ஆரம்பித்தாள்.
ஒன்பது சுற்று சுற்றி முடித்தவள், "இங்க பாருங்க சாமிஸ், காலையில அத்த சொன்னாங்க, எனக்கு கிரகநிலை சரியில்லையாம். அதுவும் குறிப்பாக சனீஸ்வர சாமி நீங்க என்னை டைரெக்ட்டா உத்து உத்து பாக்குறீங்கன்னு சொன்னாங்க. அதெல்லாம் தப்பு… நான் பாவம் இல்ல? சோ வெயிலுக்கு குளு குளுன்னு சன்கிளாஸ் போட்டு என்னை கொஞ்சம் குளுமையா அன்பா பாப்பீங்களாம்… நான் உங்களுக்கு நல்லெண்ணெய் விளக்கு போடுவேனாம்" என்று சனீஸ்வரனிடமே ஒப்பந்தம் பேச, அவர் உடனே கடுப்பாகி, 'யார்கிட்ட வந்து டீல் பேசுற நீ?' என்று சட்டென அவளைக் கண்திறந்து பார்த்துவிட்டார் போல, அங்கு கீழே கொட்டி இருந்த நல்லெண்ணெயில் தெரியாமல் கால் வைத்த ஆராத்யாவின் கால்கள் இடறிவிட, கீழே விழாமல் இருக்க அவள் சட்டென்று அருகில் இருந்த ஒருவனின் கையை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள, அந்த ஒருவனோ தன்னை பிடித்திருந்தவள் கையை இறுக்கமாகப் பிடித்தவன், பார்வை முழு
வதும் அவன் கைப்பிடியில் இருந்தவள் முகத்திலேயே ஆழமாகப் பதிந்தது.